ஓர் மௌன அழைப்பு

மூன்றாவது மாடியிலிருக்கும் என் பணிமனையின்
அகண்ட சாளரக்கண்ணாடி  வழியாகத் தென்படும்
ஒரு மரத்தின் முகடு
உச்சி முகரும் உயரத்தில்
தலைகாட்டி நின்றிருக்கும் வாஞ்சையோடு

அரூபக் கரங்கள் அந்தரங்கமாயத்  தீண்ட
நிரவமாய் அது குலுங்கிச் சிரிக்கும்

விஸ்தாரமாய்க் கவைத்த கொம்புகள்
அந்தரத்தில் எம்பிக் குதிக்கையில்
பதின்மக் கிளைகளில் ஊஞ்சலாடும்
பால்ய நினைவுகள்

சின்னஞ்சிறு இலைகள்மீது
ஒருதுளி வெயில் ஒளிரும்
மாய விரல்கள் அசைத்தும்
கவிழ்த்தும் வழியாது ஈரம்

விரித்த கரங்களுக்குள் அடங்காத விசாலம்
விழிகளை நிறைக்க
பனிமலர்கள் நெஞ்சை வருடிப் போகும்

வெயில் மங்கிய வேளையில்
சில்மிஷச் சிணுங்கல்கள் ஓய்ந்து
கிறங்கிக் கிடக்கும் கிளைகள்

அவற்றின் நுனியில்
நீளும் காம்புகளின் இலைகள்
நிசப்த வெளியில் எழுந்து அமிழ்ந்து
எனை நோக்கி மிதந்து அலைகையில்

ஓர் மௌன அழைப்பு
என் செவிகளில் விழும்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...