இலக்கிய வட்டம் : ஒரு பார்வை

1பேராசிரியர் இரா. தண்டாயுதம் அவர்களின் ஆலோசனையில் ரெ.கார்த்திகேசு அவர்கள் முன்னின்று உருவாக்கிய ‘இலக்கிய வட்டம்’ குழுவும் அதன் மூலம் உருவான ‘இலக்கிய வட்டம்’ எனும் காலாண்டு இதழ்களும் அண்மையில் பார்வைக்குக் கிடைத்தன. இதழ்கள் தட்டச்சின் மூலம் நேர்த்தியாக உருவாகியிருந்தன. 70களில் முனைவர் ரெ.கார்த்திகேசு வானொலியில் பணிபுரிந்ததால் எழுத்தாளர்களிடம் கேட்டுப்பெறப்படும் படைப்புகளை வானொலியில் தட்டச்சாளராகப் பணியாற்றியவரிடம் கொடுத்து, தட்டச்சு செய்யப்பட்டதை நகல் எடுத்து அடுத்த கூட்டத்தில் வழங்கி விவாதித்துள்ளனர்.

முதல் இதழ் பிப்ரவரி 1973ல் வெளியிடப்பட்டுள்ளது. முதல் இதழ் அரசாங்க பதிவு எண் இல்லாமல் தனிச்சுற்றாகவே வந்துள்ளது. பின்னர் இவ்விதழ் முறையான அரசாங்க பதிவு எண்ணைப்பெற்று குறிப்பிட்ட வட்டத்தில் மட்டுமே வாசிப்புக்குச் சென்றுள்ளது. அரசுப் பதிவு எண்ணுக்காக எழுத்தாளர் எம்.குமரன் (மலபார் குமார்) முகவரி வழங்கப்பட்டிருந்த சூழலில் உள்ளடக்கச் சாரத்தை ரெ.கார்த்திகேசுவே தீர்மானித்துள்ளார். மே 1974ல் ரெ.கா வானொலி பணியில் இருந்து விலகி பினாங்கு மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தில் இணைந்தபோது இலக்கிய வட்டம் தன் ஆயுளை முடித்துக்கொண்டுள்ளது.

கிடைக்கப்பெற்ற இதழ்களைப் பார்க்கையில் பைரோஜி நாராயணன், மெ.அறிவானந்தன், இரா.தண்டாயுதம், வீ.செல்வராஜ், க.கிருஷ்ணசாமி, சி. வடிவேலு, சி. வேலுசாமி, அரு.சு.ஜீவானந்தன், சு.கமலநாதன், சா.அ.அன்பானந்தன், மலபார் குமார், ரெ.கார்த்திகேசு, மை.தி.சுல்தான் எனப் பலரும் பங்களித்துள்ளனர்.

ஜனவரி 1974இல் வெளிவந்த இதழில் இலக்கிய வட்டத்தினரால் எழுதப்பட்டுள்ள முன்னுரை1 ஓரளவு அவ்விதழின் நோக்கத்தைக் கூறுவதாய் உள்ளது. ‘ஆயிரம் பிரதிகளா, ஐம்பது பிரதிகளா என்பதெல்லாம் முக்கியமான விஷயங்கள் என இந்த வட்டம் கருதவில்லை. சோதனைக்கென தன்னை அர்ப்பணித்துக்கொண்டுள்ள இப்பத்திரிகையை எழுத்தாளர்கள் இருதய சுத்தியோடு பயன்படுத்திக்கொள்வார்களா என்பதைத்தான் வட்டம் கவனித்துக்கொண்டு வருகிறது’ என்கின்றனர். தொடங்கிய நோக்கம் கலந்துரையாடல்களைப் பதிவு செய்வதாக இருந்து ஓராண்டுகளுக்குள் இலக்கிய வட்டத்தினர் தமிழ்ச் சிற்றிதழ் மனநிலைக்கு வந்துள்ளதை இவ்வாசகங்களால் ஓரளவு கணிக்க முடிகின்றது.

இலக்கிய வட்டம் திட்டவட்டமான பக்க எண்ணிக்கைகளையும் அமைப்பையும் கொண்டிருக்காமல் சூழலுக்கும் வாய்ப்புக்கும் ஏற்ப உருவாகியுள்ளது. படைப்புகளில் கட்டுரைகளின் எண்ணிக்கை அதிகம். அவை பெரும்பாலும் வரலாற்றை மீள்பதிவு செய்வதாக உள்ளன.

இலக்கிய வட்டக் கட்டுரைகள்

பிப்ரவரி 1973 ல் வெளிவந்த முதல் இதழில் டாக்டர் இரா.தண்டாயுதம் ‘இலக்கியமும் வாசகர்களும்’ எனும் தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். வாசிப்பு குறித்தும் வாசகன் குறித்தும் பொதுவான சில கருத்துகளைக் கூறும் அவர், ‘இலக்கிய வட்டம், தலைவர், துணைத்தலைவர் எனப் பதவிகள் இன்றிச் செயல்படுவதால் நோக்கம் விலகாமல் தரமான அமைப்பாக உருவாகும்’ என்பது கவனிக்கத் தக்கது.

14 பக்கங்களே உள்ள இவ்விதழில் எழுத்தாளர் சி.வேலுசாமி ‘உள் நாட்டு எழுத்தாளர்கள் தோற்றமும் அவர்களின் சாதனையும்’ என்ற தலைப்பில் தமிழ் நேசன் வகுப்பு, கு.அழகிரிசாமியின் கதை வகுப்பு, மாணவர் மணிமன்ற இதழ், உள்நாட்டு எழுத்தாளர்களின் நூல் வெளியீடு என விரிவாகவே விவரிக்கிறார்.

ஜீன் 1973ல் வெளிவந்துள்ள ‘வாசகர் வட்டம்’ இதழில் பெருங்காப்பியன் எனும் புனைபெயரில் எஸ்.ஆர்.எம் பழனியப்பன் ‘இலக்கியப் பின்னணி’ எனும் கட்டுரையை எழுதியுள்ளார். பாரதியார் மற்றும் பாரதிதாசன் கவிதை உலகம் குறித்துப் பேசும் சுருக்கமான கட்டுரை அது.

‘பரிசுத்திட்டங்களும் இலக்கிய வட்டங்களும்’ என்ற தலைப்பில் அக்டோபர் 1973 இதழில் சி.வேலுசாமியின் கட்டுரை முக்கியமான பதிவு. அக்காலகட்டத்தில் பரிசுத்திட்டங்கள் எவ்வாறான ஊக்கத்தை எழுத்தாளர்களுக்கு வழங்கின என்று எழுதப்பட்ட விரிவான கட்டுரை இது. கட்டுரையில் ‘இலக்கிய வட்டம்’, எழுத்தாளர் சங்கத்தின் எதிரி அல்ல என்று திட்டவட்டமாகக் கூறும் அவர், இலக்கிய வட்டத்தில் உள்ளவர்கள் அனைவருமே சங்கத்தின் உறுப்பினர்கள் என்றும் எழுத்தாளர்கள் சந்தித்து உரையாடவே இந்த ஏற்பாடு எனவும் அழுத்தமாகக் கூறுகிறார். மேலும் எழுத்தாளர் சங்கம் இதுபோன்ற குழுக்களைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் பரிந்துரைக்கிறார். சி.வேலுசாமியின் இக்கட்டுரையில் இன்றைய தலைமுறை அறிந்துகொள்ள சிலவற்றைக் குறிப்பிட வேண்டியுள்ளது.

 • முருகு சுப்ரமணியன் தமிழ் நேசனில் ஆசிரியராக இருந்த காலத்தில் சிறுகதைகளுக்குப் பணம் வழங்கப்பட்டுள்ளது.
 • அரசாங்கத்தால் ‘ஜனோபகாரி’, ‘வெற்றி’ போன்ற இதழ்கள் நடத்தப்பட்டு எழுத்தாளர்களுக்குப் பணமும் வழங்கப்பட்டுள்ளது.
 • கு.அழகிரிசாமி மலாயாவில் சிறுகதைகளுக்கென பரிசு கொடுக்கும் திட்டத்தைத் ‘மலாயா தமிழ்ப்பண்ணை’ அமைப்பின் மூலம் முதலில் தொடங்கினார்.
 • இலக்கிய வட்டம் போல அதன் பாதிப்பால் நாட்டின் வெவ்வேறு இடங்களில் இலக்கிய வட்டங்கள் தொடங்கப்பட்டன. சுங்கைவே இலக்கிய வட்டம், பட்டாங் பாடாங் எழுத்தாளர் வட்டம், பத்துகாஜா இலக்கிய வட்டம், பத்தாங் பெர்ஜூந்தாய் இலக்கிய வட்டம் என அவற்றில் சில. (ஆனால் அவை இதழ்கள் நடத்தினவா என்ற பதிவு இல்லை).

சி.வேலுசாமி அவர்களின் இக்கட்டுரை அக்கால இலக்கிய ஊக்கியாகச் செயல்பட்ட பத்திரிகைகள் அதை முன்னெடுத்தவர்கள் முதல் சிறு சிறு அமைப்புகள் வரை விரிவாகவே விவரிக்கின்றன. கட்டுரை முழுவதும் ‘இலக்கிய வட்டம்’ எதற்கும் யாருக்கும் போட்டியில்லை என்றும் நாட்டில் இயங்கும் பல்வேறு இலக்கிய வட்டங்களுடனான பிணைப்பும் பகிர்வும் அவசியம் என்றும் தனது விருப்பத்தைக் கூறுகிறார்.

1இதே இதழில் க.கிருஷ்ணசாமியின் கட்டுரையும் முக்கியமானது. ‘மலேசியத் தமிழ் நாளிதழ்களைப் பற்றி ஒரு கண்ணோட்டம்’ என்ற தலைப்பில் எழுதப்பட்ட இக்கட்டுரை தமிழ் முரசு, தமிழ் நேசன், தமிழ் மலர் போன்ற அக்காலத்துப் பத்திரிகைகள் எவ்வாறு இந்நாட்டில் இலக்கியத்தை வளர்த்தன என விவரிக்கிறது. செய்திகளை வெளியிடும் ஊடகம் என்ற பிறமொழி நாளிதழ்களின் நிலைப்பாட்டைத்தாண்டி தமிழ் நாளிதழ்கள் இந்நாட்டில் மொழியையும் இலக்கியத்தையும் வளர்க்கச்செய்த பணியை இக்கட்டுரை விவரிக்கிறது. அதோடு மலைநாடு, திருமுகம், நவரசம், தாமரை, மாதவி, மலைமகள் போன்ற இதழ்களின் பங்களிப்பையும் கூறுகிறார். ஆச்சரியமாக, ஞாயிறு மலர்கள் தரமான படைப்புகள் வராத நிலையில் இருப்பதில் பரவாயில்லை என்ற ரகங்களைப் போட்டு நிரப்புவதையும் இக்கட்டுரையில் நாசூக்காகச் சாடுகிறார். கு.அழகிரிசாமியின் வருகை குறித்து எழுத்தாளர் க.கிருஷ்ணசாமியும் சொல்லத் தவறவில்லை. அவர் காலத்திலேயே நல்ல பல எழுத்தாளர்கள் கண்டுப்பிடிக்கப்பட்டார்கள் என கட்டுரையாளர் கூறுகிறார்.

ஜனவரி 1974இல் ‘இலக்கிய வட்டம்’ மூன்று கட்டுரைகளை உள்ளடக்கி வந்துள்ளது. இலக்கியவாதிகளுக்கும் மணிமன்ற இயக்கத்தினருக்கும் நன்கு அறிமுகமான சா.அ.அன்பானந்தன் அவர்கள் இவ்விதழில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். இலக்கியம் என்பது சமூகத்துக்குப் பயன்பட வேண்டும் என்ற அடிப்படையில் எழுதப்பட்ட இக்கட்டுரை அக்காலகட்டத்தில் வாசிக்கப்பட்ட சில படைப்பாளிகளை முன்வைக்கிறார். புதுமைப்பித்தன், ஜெயகாந்தன் என நவீன படைப்பாளிகளைக் குறிப்பிட்டு மு.வ வையும் அதே வரிசையில் வைப்பது அவர் விமர்சன ரீதியில் இலக்கியத்தை அணுகாமல் பொத்தாம்பொதுவாக வாசிப்புக்கு உகந்தவைகளை முன்வைப்பது புரிகிறது. சமுதாயத்துக்கு உதவும் எனில் நல்லனவற்றை வாசிக்கலாம் என்பதே அவர் எண்ணமாக இருப்பதை அறிய முடிகிறது.

பைரோஜி நாராயணன் எழுதியுள்ள ‘நியூவேவ் கதைகள்’ என்ற கட்டுரை இவ்விதழில் என்னை அதிகம் கவர்ந்தது. ‘நியூவேவ் கதைகள்’ இலக்கியச்சூழலில் புதிய அலை எனத் தொடங்கப்பட்டு ஆபாசங்களும் காமக்கவர்ச்சிகளுமே எஞ்சியதை இக்கட்டுரையில் அவர் குறிப்பிடுகிறார். இதுபோன்ற கதைகளுக்கு ஆனந்த விகடன் இதழ் முக்கியத்துவம் கொடுத்ததைச் சுட்டிக்காட்டும் பைரோஜி நாராயணன் சுஜாதா, புஷ்பா தங்கதுரை போன்றவர்கள் இவ்வகை எழுத்துகளில் முதன்மையானவர்கள் எனவும் கூறுகிறார். பைரோஜி நாராயணன் எந்தக்கருத்தையும் தனது கருத்தாகப் பதிவிடாமல் ‘கூறுகின்றனர்’, ‘கூறப்படுகிறது’ என்றே கட்டுரை நெடுகிலும் எழுதிச்செல்கிறார். அப்படிக் கூறிச்செல்கையில், நா.பார்த்தசாரதி ‘நியூவேவ் கதைகள்’ குறித்து கூறும்போது புதுமைப்பித்தனும், கு.ப.ராவும் இதுபோன்ற பாலுணர்வுக் கதைகளை எழுதியுள்ளதையும் ஆனால் ‘நியூவேவ் கதைகள்’ கலாபூர்வமாக எழுதப்படாத அரைவேக்காட்டுப் பாலுணர்வுக் கதைகள் என்றதையும் குறிப்பிடுகிறார். கட்டுரையின்   இறுதியில் ‘நியூவேவ் கதைகள்’ புதிய உத்திகளோடு வெளிப்பட்டால் அதை வரவேற்பதில் தவறில்லை என பைரோஜி நாராயணன் கூறுவதை கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

இவ்விதழில் ‘தமிழ் எழுத்தாளர் சங்கம் தோன்றிய வரலாறு’ எனும் தலைப்பில் எழுத்தாளர் சி. வேலுசாமி எழுதியுள்ள கட்டுரை பல புதிய தகவல்களை எனக்கு வழங்கியது. ஏற்கனவே இதில் உள்ள தகவல்களைப் பலரும் எழுதியிருந்தாலும் நேரடியாக அச்சூழலில் இயங்கிய ஒருவர் சுய அனுபவத்தின் அடிப்படையில் தானே ஆதாரமாக இருந்து எழுதுவது வாசிப்புக்கு நெருக்கமாக உள்ளது. கவனத்தில் வைக்க வேண்டிய சிலவற்றை கீழ்க்கண்டவாறு தொகுக்கலாம்.

 • கோலாலம்பூரில் 1955ல் இயங்கிவந்த தமிழ்க்கலை மன்றம்10.1955ல் சீன அசெம்பிளி மண்டபத்தில் முதல் எழுத்தாளர் மாநாட்டைக் கூட்டியது. வெளியூர் உள்ளூர் எழுத்தாளர்கள் கலந்துகொண்ட முதல் நிகழ்ச்சி அது.
 • 7.1958ல் பங்சார் தமிழ்ப்பள்ளியில் எழுத்தாளர் சங்க அமைப்புக்கூட்டம் முதன் முதலாக நடைபெற்று அதில், சி.வீ.குப்புசாமி தலைவராகவும் திரு. சு.சண்முகம் துணைத்தலைவராகவும் செயலாளராக கட்டுரையாளர் சி.வேலுசாமி அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
 • அக்காலத்தில் சிறுகதை வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றிய சு.நாராயணன் கூட்டத்துக்கு வரவில்லை. ஆனால் 25 பேர் கூடி தலைவரைத் தேர்ந்தெடுத்துவிட்டார்கள் என ‘மலாயா நண்பன்’ சாடியுள்ளார்.
 • 2.1959ல் மலாயா தமிழ் எழுத்தாளர் சங்கம் பதிவு செய்யப்பட்டுள்ளது. சங்கத்தின் இயக்கத்தில் சுணக்கம் இருந்ததால் 26.3.1963 இல் மறுபதிவு செய்யப்பட்டுள்ளது.

ஏப்ரல் 1974 இல் எழுத்தாளர் ரெ.கார்த்திகேசு அவர்களின் கட்டுரையுடன் இதழ் தொடங்குகிறது. இதுதான் ‘இலக்கிய வட்டத்தின்’ கடைசி இதழாகவும் இருக்கிறது. ‘சமுதாயக் குமுறல்களும் எழுத்தாளர்களும்’ என்ற தலைப்பிட்ட அக்கட்டுரையில் ரெ.காவின் சில வரிகள் முக்கியமாக கவனிக்கக் கூடியவை.

 • எழுத்தாளன் என்பவன் எழுதத்தெரிந்தவனாக இருந்தால் மட்டும் போதாது; அவனுக்குத் தன்னைச் சுற்றி உள்ள சமுதாயத்தைக் கூர்ந்து பார்க்கவும் தெரிந்திருக்க வேண்டும்.
 • சமுதாய உணர்வோடு எழுத்துத் தொழிலை மேற்கொள்ளும் எந்த எழுத்தாளனும் இந்தச் சமுதாயக் குமுறல்களை அறிந்து அதனை எழுத்தில் வடிக்கும் பொறுப்பைத் தனதாக்கிக்கொள்ள வேண்டும்.
 • எழுத்தாளன் இம்மாதிரி பிரச்னைகளை வைத்துக்கொண்டு பொதுமேடையில் வாதிடுகின்ற பேச்சாளனோ தொண்டனோ அல்ல. சமுதாய குமுறல்களுக்கு தீர்வுகளைச் சொல்வது எழுத்தாளனின் பொறுப்பு அல்ல.
 • எழுத்தாளன் செய்ய வேண்டியதெல்லாம் இந்தக் குமுறல்களையெல்லாம் அடையாளம் காட்டி மக்களின் சிந்தனையைத் தூண்டுவதே.
 • கதைகளில் அளவான பிரச்சாரம் இருப்பது சிந்தனையைத் தூண்டத் தேவையாகிறது.

எழுத்தாளர் ரெ.கார்த்திகேசு அவர்கள் 1974ல் கூறிய இக்கருத்துகளில் இன்று அவருக்கு மாற்றம் இருக்குமா என்பது தெரியவில்லை. ஆனால் அக்காலத்தில் இக்கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கக் கூடியவை என எண்ணத் தோன்றுகிறது. இவை விவாதிக்கக்கூடிய கருத்துகளாக இருந்தாலும் 70களில் கார்த்திகேசு புதிய கருத்தாக்கங்களை மலேசியச் சூழலில் உருவாக்கியுள்ளார் என்பதற்கு இக்கட்டுரை சாட்சியாக உள்ளது. ஒருவேளை ‘இலக்கிய வட்டம்’ தொடர்ந்திருந்தால் படைப்பிலக்கியத்தின் தேவை குறித்தும் எழுத்தாளனின் கடப்பாடுகள் குறித்தும் விரிவான விவாதங்கள் நிகழ்ந்திருக்கும்.

எழுதப்பட்ட கட்டுரைகள் வழி 2016ல் உள்ள ஒரு வாசகனாக என்னால் சில விடயங்களை உள்வாங்க முடிகிறது. இந்நாட்டில் இலக்கியம் வளர தனிநபர்கள் மற்றும் நாளிதழ்கள் பெரும் பங்காற்றியுள்ளன. குறிப்பாக, ஞாயிறு பத்திரிகை ஆசிரியர்கள் முக்கிய இலக்கிய ஆளுமைகளாக இருந்துள்ளனர். ‘இலக்கிய வட்ட’ குழுவினர் அதுவரை இருந்த எந்த இலக்கியப்போக்குக்கும் மாற்றாக இயங்க உருவானவர்கள் அல்ல. அக்காலகட்டத்தில் இலக்கியத்தில் தீவிரமாகவும், தமிழகத்தின் சமகாலத்திய இலக்கியத்தை உள்வாங்கியும் இருந்த ஒரு குழுவினரின் சேர்க்கை. எழுதப்பட்ட பெரும்பாலான கட்டுரைகளிலும் எழுத்தாளர் சி.வடிவேலுவுடனான சந்திப்பிலும் கு.அழகிரிசாமியின் வருகை, அவர் ஓர் இயக்கமாக இருந்ததைத் தெளிவாக விளக்குகின்றன. ‘தமிழாசிரியர்களுக்கு சரியாகத் தமிழே எழுதத்தெரியாது’ என மலேசியா வந்த புதிதில் நாளிதழில் எழுதிய கு.அழகிரிசாமி பின்னாளில் நல்ல எழுத்தாளர்களை அடையாளம் காண்பதிலும் அவர்கள் மத்தியில் படைப்பாளுமையை வளர்ப்பதில் அக்கறை காட்டினார் எனத் தெரிகிறது. எவ்விதப் பொருளியல் லாபமும் இல்லாத சூழலிலும், கலை அல்லது மொழி என்ற ஏதோ ஒரு காரணத்திற்காக ஒருவர் மாற்றி ஒருவர் மலேசியத் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்குச் செயல்பட்டது ஒரு கருப்பு வெள்ளைப் படமாக மனதில் பதிகிறது.

இலக்கிய வட்டச் சிறுகதைகள்

ஐந்து இதழ்களிலும் சுமார் 5 சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன.

 • பிப்ரவரி, 1973 – வட்டத்துக்கு வெளியே
 • ஜூன், 1973 – அவளுக்காக – மைதீ சுல்தான்
 • அக்டோபர், 1973 – முனுசாமி தலைகுனிந்து நிற்கிறான் – ரெ.கார்த்திகேசு
 • ஏப்ரல் , 1974 – நதிகள் கடலில் கலக்கட்டும் – அரு.சு.ஜீவானந்தன்
 • ஜனவரி, 1974 – பத்துரோட்டில் ஒரு கடை இருந்தது – எம்.குமாரன்

 

வட்டத்துக்கு வெளியே (பிப்ரவரி, 1973) – தன் நண்பனை விமானத்தில் வழியனுப்பித் திரும்பும்போது, யாரோ ஒருவனால் பாலியல் வல்லுறவுக்கு ஆளான பெண் தன் நண்பனிடம் அடைக்கலம் கேட்கிறாள். அந்தரங்க உரையாடல்கள்வரை அவர்கள் நட்பு வளர்கிறது. ஒருசமயம் அடைக்கலம் கொடுத்த நண்பனிடம் 300 ரிங்கிட் பெற்றுக்கொண்ட அவள் கொஞ்சநாள் காணாமல் போகிறாள். பின்னர் சில நாட்களில் திரும்பியவள் வல்லுறவில் பாதிக்கப்பட்டதால் ஏற்பட்ட கர்ப்பத்தைக் கலைத்ததைச் சொல்கிறாள். நாடு திரும்பும் நண்பனைப்பார்க்கச் செல்கிறாள்.

1976ல் ‘அட இருளின் பிள்ளைகளே’ போன்ற சிறந்த சிறுகதைகளை எழுதியவர் அரு.சு.ஜீவானந்தன். இது அவரது மிகச்சுமாரான சிறுகதைதான். கதையின் இறுதியில் வாசகனுக்கு தான் சொல்ல வருவது புரியுமா என்ற சந்தேகம் தோன்றியிருக்கலாம். போலிஸ், சட்டம் , நீதிமன்றம் என்ற சராசரி வட்டத்திலிருந்து அவள் மாறுபட்டுள்ளாள் எனக் கதாசிரியர் நண்பனின் எண்ணத்திலிருந்து கூறுவது இறுதியில் சொல்லவரும் தகவலை குறிப்பிடுவதாகிறது. அடைக்கலம் தருபவனிடம் அந்தரங்க உரையாடல்கள் மட்டுமே நடக்கின்றன. அதை மீறி அவர்கள் செல்லவில்லை. அரு.சு.ஜீவாவுக்கும் மனித மனம் அதை மீறியும் செல்லும் என்று எண்ணுவதில் தடை உள்ளது.

அவளுக்காக (ஜூன், 1973) – மைதீ சுல்தானின் மொழிநடை எனக்குப் பிடித்தமானது. அவரது மிகச்சில கதைகளையே வாசித்திருந்தாலும் கச்சிதமான வாக்கியங்களில் கதை சொல்லிச் செல்பவர் என மனப்பதிவில் உண்டு. இந்தச் சிறுகதையும் அவ்வாறானதுதான்.

பாருக்கு அடிக்கடி போகும் ஒருவன் அங்கு சேவையில் இருக்கும் பெண் ஒருவளிடம் காதல் வயப்படுகிறான். அவள் மற்றப்பெண்களைப் போல இல்லாமல் தனது ‘கற்பை’ காத்துக்கொள்வதில் உஷாராக இருக்கிறாள். அவளுக்கும் அவன் காதல் புரிகிறது. ஆனால் நாசூக்காகத் தவிர்க்கிறாள். இறுதியில் அதன் காரணம் புரிகிறது. அவள் அவனை திரைப்படம் பார்க்க அழைக்கிறாள். அவள் தன் இரு குழந்தைகளுடன் வருகிறாள். படத்தில் உள்ள கதையும் அவள் வாழ்வை ஒத்தது என அவனுக்குப் புரிகிறது. அவள் கணவனை விபத்தில் இழந்தவள் . அவள் மாறப்போவதில்லை என விலகி விடுகிறான்.

மைதீ சுல்தான் அவர்களால் இவ்வளவு சம்பவங்களையும் மிக எளிதாகச் சொற்கள் மூலம் அலுப்படையாமல் வாசகனை அழைத்துச்செல்ல முடிகிறது. ஆனால் கதை மிகையுணர்ச்சியை உள்வாங்கிய ஒரு சீரியலாக மட்டுமே இன்றைய வாசிப்பிற்கு உள்ளதைக் குறிப்பிட்டாக வேண்டியுள்ளது.

முனுசாமி தலைகுனிந்து நிற்கிறான் (அக்டோபர், 1973) – மிகச்சிறந்த சிறுகதைகளை1 மலேசியச் சூழலில் எழுதிய ரெ.கார்த்திகேசுவின் சிறுகதை. மருத்துவராக மட்டும் இல்லாமல் நாடாளுமன்ற உறுப்பினராகவும் உள்ள தியாகராஜனின் கதை. தன் தந்தை எப்போதுமே மருத்துவம் மூலம் சேவை செய்யத் தயாராக இருந்ததை அடிக்கடி நினைக்கிறார். மருத்துவம் அல்லாத பிற சமூகப் பணிகள் தன் நேரத்தைத் தின்பதை எண்ணி வருந்துகிறார். அப்போதுதான் முனுசாமி என்பவர் கிளினிக் வருகிறார். தனக்குக் குடியுரிமை கிடைக்கத் தியாகராஜனே காரணம் எனவும் அவரே தனக்குக் கடவுள் எனவும் கூறி, தனது குடியுரிமை சான்றிதழை தைப்பூசத்தில் வைத்து வணங்கப்போவதாகக் கூறுகிறார். சென்றவர் சான்றிதழைத் தொலைத்துவிட்டு வருவதும் மீண்டும் தியாகராஜனின் உதவியை நாடுவதும் என கதை முடிகிறது.

கொஞ்சம் ஆழமாகப்பார்க்க வேண்டிய கதைதான். தொழிலைச் சேவையாக்கி முழுமையில் இருப்பவருக்கும் தனியாகச் சேவைசெய்ய முனைந்து நொந்து போகிறவருக்கும் உள்ள வேறுபாட்டைக் கதை காட்டுகிறது. முனுசாமிக்குக் குடியுரிமை பெற எல்லாதகுதியும் இருந்தும் சில பாரங்களை இணைக்காததால் தவிர்க்கப்பட்டுள்ளதும் அதைத் தியாகராஜன் பூர்த்தி செய்து உதவியதால் குடியுரிமை கிடைப்பதும் உண்மையில் பெரிதாக தான் ஒன்றும் செய்துவிடவில்லை என தியாகராஜனுக்கே புரிவதும் கதையில் சொல்லப்பட்டுள்ளது. விழிப்புணர்வற்ற மக்களுக்கு எளிதான உதவிகள் செய்வோர் கடவுளாகிவிடுவதையும் அது அரசியலுக்குத் தேவையாக இருப்பதையும் இன்னொரு கோணத்தில் இருந்தும் பார்க்கலாம்.

ஆனால், எளிய மக்கள் மீது கரிசனை கொள்ளும் எழுத்தாளர் தியாகராஜனுக்கு ‘ர்’ இட்டு மரியாதையாகக் கதை முழுவதும் விளிப்பதும் முனுசாமியைக் கதையின் தலைப்பில் தொடங்கியே ‘ன்’ இட்டு ஒருமையில் அழைப்பதும்தான் ஏன் எனப்புரியவில்லை.

நதிகள் கடலில் கலக்கட்டும் (ஏப்ரல், 1974) அரு.சு.ஜீவானந்தம் அவர்களின் இக்கதையும் சமூகக் கட்டமைப்பில் நம்பப்படும் ஒழுக்க நெறிகளை கொஞ்சம் கடந்து பார்ப்பதைப் பேசுகிறது. சமூக மதிப்புக்காகத் தன்னை தன் எண்ணங்களைச் சுருக்கிக்கொள்ளும் ஒருவன், பின்னர் அதை எதிர்கொள்வதையும் மீறிச்செல்வதையும் எழுதியுள்ளார். அக்காலக்கட்டத்தில் இக்கதைக்கு எவ்வாறான வரவேற்பு இருந்தது எனத் தெரியவில்லை. என் வாசிப்பில் முழுமை பெறாமல் உள்ளது.

பத்துரோட்டில் ஒரு கடை இருந்தது (ஜனவரி, 1974) – எம். குமாரன் மலேசியாவில் குறிப்பிடப்பட வேண்டிய எழுத்தாளர். ஆனால் அவர் எழுதியதில் இது குறிப்பிடப்பட வேண்டிய சிறுகதை அல்ல. வணிகத்தில் வளர்ந்து பின்னர் நொடித்துப்போகும் ஒருவனின் கதை. செம்மண்ணும் நீல மலர்களும் நாவலைப்போலவே வாழ்வின் ஏமாற்றங்களைச் சொல்கிறது. நாவலாக வேண்டியதைச் சிறுகதையாக எழுதியுள்ளார்.

இலக்கியவட்ட இதழில் எழுதியுள்ள சிறுகதை எழுத்தாளர்கள் மலேசியச் சிறுகதை உலகுக்கு மிக நல்ல கதைகளைக் கொடுத்துள்ளனர் எனினும் இது அவர்களின் சிறந்த கதைகள் அல்ல எனக்குறிப்பிட்டாக வேண்டும். கடும் தணிக்கை சூழல் இருந்திருக்கும் அக்கால நாளிதழ்களில், சோதனை முயற்சிக்கான ஒரு தளமாகவே அரு.சு.ஜீவானந்தன் , மைதீ. சுல்தான் போன்றோர் இவ்விதழைப் பயன்படுத்தியுள்ளனர் எனப் புரிந்துகொள்ள முடிகிறது. மேலும் இரா.தண்டாயுதம் அவர்கள் அரு.சு.ஜீவானந்தனின் ‘வட்டத்துக்கு வெளியே’ எனும் சிறுகதை குறித்து எழுதிய விமர்சனமும் அடுத்த இதழில் இடம்பெறுவது அக்காலக்கட்டத்து வாசிப்பு நிலையையும் உள்வாங்க ஏதுவாகிறது.

பிற ஆக்கங்கள்

மைதீ. சுல்தான், வி.இக்குவனம், கம்போஜா சூரியா, சி.கமலநாதன் போன்றோர் புதுக்கவிதை, மரபுக்கவிதை என சமுதாயத்திற்குக் கருத்துச் சொல்லியுள்ளனர். இலக்கிய வட்ட இதழ்கள் கவிதைக்கோ அது குறித்த உரையாடல்களுக்கோ முக்கியத்துவம் தரவில்லை. அவர்கள் கவனம் சிறுகதை நோக்கியே இருந்துள்ளது. அதேபோல உருவகக்கதை போன்ற முதிர்ச்சியற்ற ஆக்கங்களும் இவ்விதழில் உள்ளது. எழுத்தாளர் சி.வடிவேலு அவர்களின் நேர்காணல் ஓரளவு அக்கால இலக்கியச்சூழலை அறிய உதவுகிறது.

இறுதியாக

மலேசியாவில் இதழியல் மூலம் ஓர் இயக்கமாகச் செயல்பட்டது ‘செம்பருத்தி’ அதை தொடர்ந்து ‘வல்லினம்’ என சில கட்டுரைகளில் எழுதியிருந்தாலும் இன்று கிடைக்கும் தரவுகளின் அடிப்படையில் அதை மீட்டுக்கொள்ள வேண்டியுள்ளது. ‘இலக்கிய வட்டம்’ மலேசிய நவீன இலக்கிய வளர்ச்சிக்கு ஒரு தொடக்கமாகவே இருந்துள்ளது. உரையாடலும் கருத்துப்பரிமாற்றமும் இல்லாத இலக்கிய முயற்சிகள் வளர்ச்சியடையாது என நன்கு அறிந்த அறிவார்ந்த குழுவினரால் முன்னெடுக்கப்பட்ட இம்முயற்சி இன்னும் சிறிதுகாலம் தொடர்ந்திருந்தால் மலேசியாவில் தீவிர இலக்கியத்திற்கான மையமாக ‘இலக்கிய வட்டம்’ இருந்திருக்கும்.

(இலக்கிய வட்டம் இதழ் உருவான வரலாறு ரெ.கார்த்திகேசு விமர்சன அரங்கம் நூலில் எழுத்தாளர் அரு.சு.ஜீவானந்தம் எழுதியிருந்த கட்டுரையில் இருந்தும் அவர் நேர்காணல் வழியும் கூடுதல் தகவல்கள் 5 இதழ்களையும் ஆராய்ந்ததின் மூலமும் கிடைக்கப்பெற்றவை.)

1 கருத்து for “இலக்கிய வட்டம் : ஒரு பார்வை

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...