வல்லினம் விமர்சன அரங்கு 2016 பதிவுகள் – பாகம் 2

15அமர்வு இறுக்கமாக இல்லாமல் சுமுகமான நிலையிலேயே சென்றது. நண்பர்கள் எழுந்து நீர் அருந்த, கைகால்களை உதறிக்கொள்ள, கழிப்பறைக்குச் செல்ல என, தேவையான பொழுதுகளில் வெளியேறி வந்ததால் நீண்ட உரையாடல்களில் சிக்கல் இல்லாமல் மற்ற அனைத்து நேரங்களிலும் ஈடுபாட்டுடன் ஒன்றியிருக்க முடிந்தது. மூன்றாவது அமர்வும் குறித்த நேரத்தில் முடிய, அடுத்த அமர்விற்கான நேரத்தை மீண்டும் மறு உறுதிப்படுத்திக் கொண்டு அனைவரும் இரவு உணவு உண்டு, ஓய்வெடுக்க ஏறக்குறைய இரண்டு மணிநேரங்கள் இருந்தன. கலந்துரையாடல் ரவாங் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நடைபெற்றது. சைவ உணவுக்காரர்களுக்கு வீட்டிலும் அசைவ உணவுக்காரர்களுக்கு அவ்வீட்டின் முன்னெதிரே உள்ள முஸ்லிம் கடையிலும் உணவு என்பதாகத் திட்டமிருந்தது. அந்த இரண்டுமணி நேரத்தில் சிலர் குளித்துப் புத்துணர்வுடன் அடுத்த அமர்விற்குத் தயாரானார்கள்.

கலந்துரையாடலின்போது கொடுக்கப்பட்ட தலைப்புகளைமீறி வேறெதுவும் பேசிவிட 0முடியாத நிலையில் இப்படியான வாய்ப்புகளைப் பயன்படுத்திதான் அரு.சு.ஜீவானந்தன் மற்றும் மஹாத்மனுடன் அவர்களின் ஆக்கங்கள், தற்போதைய இலக்கிய முயற்சிகள் குறித்து பேச நினைத்திருந்தேன். அன்று அரு.சு.ஜீவானந்தனுடன் சில நிமிடங்கள் மட்டுமே பேச முடிந்தாலும் அவர் தனது சேமிப்பில் ‘இலக்கிய வட்டம்’ மற்றும் 70களில் தமிழ்நாட்டில் வெளியான சில சிற்றிதழ்கள் வைத்திருப்பதை கேட்டறிந்துகொள்ள முடிந்தது. பெரும்பாலும் எம்.கருணாகரன் அவரிடம் கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருந்தார். அதில் எனக்கானவையும் இருந்ததில் மகிழ்ச்சி. கருணாகரன் தொடர்ச்சியாக அரு.சு. ஜீவானந்தத்தின் படைப்புகள் குறித்தே பேசிக்கொண்டு இருந்தார். அதில் பாத்திரவார்ப்பு, கதாபாத்திரங்களின் பெயர்வரை நினைவில் வைத்துப்பேசியது எனக்கு மட்டுமல்ல ஜீவானந்தத்துக்கும் அதிர்ச்சியாக இருந்திருக்கும். ஜீவானந்தன் அவ்வாறான கணங்களிலெல்லாம் மிக மேம்போக்காக தலையாட்டிக் கொண்டும், ‘இப்ப எதுக்கு அதெல்லாம் பேசறிங்க?’ என்பதாகப் பார்வையை அங்குமிங்கும் திருப்பிக் கொண்டிருந்தார். அதிர்ச்சியை புருவம் உயர்த்தி விழியைப் பிதுக்கிதான் காட்ட வேண்டுமா என்ன? பின்னாளில் அவரது விமர்சனக் கட்டுரையைத் தட்டச்சு செய்ய வீட்டிற்குச் சென்றிருந்தபோது எம்.கருணாகரன் பற்றி குறிப்பிட்டு ‘இவ்வளவு நாள் கழிச்சி எப்படி என் கதையையெல்லாம் ஞாபகம் வைத்திருக்கிறார்கள்?’ என்று தனது ஆச்சரியத்துக்கு வேறொரு உருவம் கொடுத்து பேசினார் ஜீவானந்தன்.

இலக்கியச் சந்திப்புகள், மாநாடுகள் போன்றவற்றில் பங்கெடுக்கும்போது அரங்குகளில் மேற்கொள்ளப்படும் படைப்பு, விவாதங்களைக் கடந்து அதன் பின்பான இம்மாதிரியான திறந்தவெளிக் கதையாடல்கள் சக பங்கேற்பாளருடன் அறிமுகத்தை ஏற்படுத்தி மேலும் பல தலைப்புகள் சார்ந்து விரிவாகப் பேசவும் வழிவிடும். ஆனால், பெரும்பாலும் இம்மாதிரியான நேரங்களில் அரட்டை அடிக்கும், தனிமனித வசைகள் பேசும் ஆட்களிடமிருந்து சாதுரியமாகக் கழன்றுக் கொள்வது அத்தனை சுலபத்தில் நடக்காது. நிகழ்வின் நான்காவது அமர்வு சரியாக 8 மணிக்குத் தொடங்கியது.

நான்காவது அமர்வு : நிகழ்தலும் நிகழ்தல் நிமித்தமும்
நூலாசிரியர் : பூங்குழலி வீரன்
நூல் விமர்சனம் :தயாஜி, கருணாகரன்
நேரம்: இரவு 8.00 – 9.30 வரை

மஹாத்மன் இரவு சந்திப்பில் பங்கேற்காததால் அப்போதைய அமர்வு பூங்குழலி வீரனின்13 கவிதை நூல் குறித்துச் சென்றது. தயாஜி மற்றும் எம்.கருணாகரன் இருவரும் தங்களது விமர்சனக் கட்டுரையின் சாரமான அனைத்தையும் தொட்டுப் பேசி கலந்துரையாடலுக்கான நேரத்தை அதிகமாக்கித் தந்தனர். ‘பொதுவெளியில் சமூகவாதியாக இயங்கும் பூங்குழலி கவிதைகளில் ஏன் தன்னைப்பற்றி மட்டும் பேசுகிறீர்கள்?’ என எம்.கருணாகரன் கேட்ட கேள்வி எழுத்தாளனுக்கும் படைப்புக்கும் உள்ள இடைவெளி / நெருக்கத்தை நோக்கி விரிவான விவாதத்திற்கு வழிகொணர்ந்தது.

0படைப்பானது வெளிநோக்கியதாகவோ அல்லது அகம் நோக்கியதாகவோ எப்படி வேண்டுமானாலும் வேறுபடலாம் என விளக்கிய ஸ்ரீதர் படைக்கும் தருணத்தில் அவன் என்னவாக இருந்து படைக்கிறான் என்பதைக் கேள்வியெழுப்ப வேண்டியதில்லை என்றார். குழந்தைகளின் உலகத்தையும், காதலையும், துக்கம்-இழப்பு-மரணம் போன்ற உணர்வெழுச்சிகளையும், தத்துவார்த்தப் பார்வையும் பல்வேறு முரண்களுடனும், படிமக் காட்சிகளுடனும் சொல்லியிருக்கும் பூங்குழலியின் கவிதைகளை முனைவர் ஸ்ரீலட்சுமி சில கவிதை வரிகளை உதாரணம் காட்டி வர்ணித்துச் சொன்னார். இவற்றைக் கடந்து பூங்குழலியின் கவிதைகள் சமூகத்தை நோக்கியதாக விரிய வேண்டுமென தனது எதிர்பார்ப்பையும் முன்வைத்தார்.

எழுத்தாளரை மிக நெருக்கத்தில் அறிந்திருப்பதும், அவரது அன்றாட வாழ்வை அருகிலிருந்து பார்ப்பதும்தான் ஒரு படைப்பை குறிப்பிட்ட எல்லைக்கு மீறி சிந்தித்துப் பார்க்க தடையாக இருக்கிறது என அ.பாண்டியன் தனது பார்வையை முன்வைத்தார். பூங்குழலியின் கவிதைகளை அவரது தனிப்பட்ட உணர்வாகப் பார்க்க வேண்டியதில்லை என்று நிறுவிய அ.பாண்டியன், தொடர்ந்து இவ்வாறு தனக்குள்ளிருந்து வெளிப்படும்போதுதான் அது தத்துவார்த்தப் பார்வையாகும் எனவும் தனது நிலைபாட்டைக் கூறினார். சமூகப்பார்வைக்கு உட்பட்டு எழுத முனையும்போது அம்மாதிரியான தத்துவார்த்தக் கவிதை வார்ப்பு சாத்தியமில்லை என்பதும் அவரது கருத்தாக இருந்தது. இதுதான் கருப்பொருள் என முடிவு செய்து எழுதுவதானால் அதைக் கவிதை வடிவில் எழுத வேண்டிய தேவையில்லை என்றும் அதற்கு ஏற்பான கட்டுரை, ஆய்வு என வேறு வடிவங்களில் எழுதிவிடலாம் என பூங்குழலி தனது நிலைபாட்டை நிறுவினார்.

கவிதையில் புலம்பல்கள் குறித்து விரிந்த கருத்தாடலில் சங்கப்பாடல்களை உதாரணம் 0காட்டிய ம.நவீன் அவற்றிலும் தத்துவங்கள் இல்லை என்றும் பெருங்கோபமும், பேரழுகைகளே அதிகம் இருந்துள்ளதை இரு சங்கப்பாடல்களுடன் விளக்கினார். ‘கலஞ்செய் கோவே’ என்பதாகத் தொடங்கும் புறநானூற்றுப் பாடலானது ஒரு பெண்கவியினது பிரிவின் ஆற்றாமையைச் சொல்வதாக இருப்பதை விளக்கினார். ‘சக்கரம் சுழலும்ஊர் முழுக்க ஓடும்அந்தச் சக்கரத்துடன் பல்லியும் பயணம் செய்கிறது. ஆனால் பல்லிக்கு பயணக்களைப்பே இருப்பதில்லை. அது சக்கரத்தைச் சார்ந்துள்ளது. அதுபோல அவனைச் சார்ந்திருந்த அவளும் தனக்கும் சேர்த்துப் பெரிதாக இறந்த காதலனுடன் இணைய தாழி செய்யச் சொல்கிறாள்’. எந்தப் பிரச்சாரத் தொனியுமற்ற இப்பாடலில் தத்துவங்கள் இல்லை; மிக அந்தரங்கமான தொனியில் சோகம் மறைந்துள்ளது. அது வாசக நுழைவுக்கு வழிவிடுகிறது என விளக்கினார்.

அடுத்ததாக வெண்கொற்றனாரின் ‘தானுளம் புலம்புதொறும் உளம்பும் நாநவில் கொடுமணி நல்கூர் குரலே’ எனும் சங்கப் பாடலை உதாரணம் காட்டி விளக்கி ‘தாளமுடியாத துயருடன் புரண்டு படுத்தபடி இரவெல்லாம் நான் கேட்டுக்கொண்டிருக்கும் தொழுவத்து எருமையின் கழுத்து மணி ஓசை வேறு யாருக்கும் கேட்டுக்கொண்டிருக்குமா’ எனப் பொருள்படும் இக்கவிதை வலிமிகுந்த இரவின் கண்ணீரை வாசக நுழைவின்வழி அடைய முடியும் சாத்தியம் கொண்டுள்ளதை விளக்கினார். பூங்குழலியின் கவிதைகளில் அப்படியானதொரு வாசக நுழைவுக்கான இடைவெளி தேவை என ம.நவீன் தனது பார்வையை முன்வைத்தார். புலம்பல்களினூடாக வாசக இடைவெளி தேவைப்படுகிறது என்பதாக அமைந்த அவரது கருத்து அதன் நேரெதிராகச் சென்று உணர்வு வெளிப்பாட்டின் மத்தியில் வாசக இடைவெளியை எதிர்பார்க்க முடியாது எனவும் கூறியிருந்தார்.

18அந்நூலிலுள்ள சில கவிதை வரிகளை வாசித்துக் காட்டிய கோ.புண்ணியவான் அப்படியான சிறிய வடிவங்களில் கவிதைகள் இருப்பது; மிக எளிமையாகச் சொல்லிச் செல்லும் பாங்கு பல கவிதைகளை கவித்துவம் மிக்கதாக ஆக்கியுள்ளதாகக் கூறினார். சில கவிதைகள் நேரடியான கூறுமுறையில் இருப்பதையும் மேலும் சில கவிதைகள் சிறுகதைகளாக்கக் கூடியதாக உள்ளதாகவும் கூறினார். சரவணதீர்த்தா ‘நிர்வாணம்’ என்ற தலைப்பிலான கவிதையைச் சுட்டிக்காட்டி குழந்தைப் பருவம் என்பது எல்லாவற்றுக்கும் சுதந்திரமானதாக இருந்தது என்றும் சமூகமனதை அறியவரும்போது மனிதன் இயற்கையிடமிருந்து தன்னை விலக்கிக்கொள்கிறான் என்றார். எம்.கருணாகரன் பூங்குழலியின் கவிதைகள் நேரடியாகக் கூறும்முறையில் அமைந்திருப்பதாகவும் ஆனால் ம.நவீன் கவிதைகள் ‘சாவியைத் தேடி நீயே கண்டுகொள்’ என்பதுபோல் இருப்பதாக தனது பார்வையை அரங்கில் பதிவு செய்தார்.

நேரடியாகச் சொல்வது கவிதையாகாது, statement போல் ஆகிவிடும் எனக்கூறிய ஸ்ரீதர் கவிதையில் சொல் தேர்வு முக்கியம் என்றும் ஓர் இரக்கமற்ற editor-ஆக இருந்து எந்தச் சொல்லை நீக்கினால் கவிதை அதே அர்த்ததைக் கொடுக்கிறதோ அதனை நீக்கிவிடலாம் எனவும் தெளிவுபடுத்தினார். ‘பொம்மை’ எனும் கவிதை குழந்தைப் பருவம் மற்றும் மரணம் குறித்து எழுதி, பூங்குழலி ஒரே கயிற்றின் வெவ்வேறு முனைகளைத் தொட முயற்சித்திருப்பதாக வர்ணித்தார்.

பூங்குழலியின் கவிதைகள் எளிதில் புரிந்துகொள்ள முடிவதை ஒட்டிப்பேசிய தயாஜி எளிமையான சொற்களில் உருவாகும் ஓர் அபாரமான சம்பவத்தை வாசகனால் கடந்துவிட முடியுமா என்ற கேள்வியை முன்வைத்தார். பூங்குழலியின் கவிதைகள் சிலவற்றில் வரிகளுக்கிடையில் முரண் இருப்பது அழகியலுக்காக திட்டமிட்டு செய்யப்பட்டதா? அல்லது வாசகனைக் குழப்பும் முயற்சியா என எம்.கருணாகரன் கேட்ட கேள்வி கவிதையில் அழகியல் குறித்த விவாதத்திற்கு இட்டுச் சென்றது. கவிதைகளில் அழகியல் குறித்து தன் புரிதலை ம.நவீன் முகுந்த் நாகராஜனின் ‘நீர் தெளித்து விளையாடுதல்’ எனும் கவிதையின் வழியாக விளக்கினார்.

குள்ள வாஷ்பேசின் முன்
இல்லாத குழந்தையின் மேல்
செல்லமாக தண்ணீர் தெளித்து
விளையாடி விட்டு
விரைவாக வெளியே வந்து விட்டேன்

புறவயம்போல தோற்றம் இருந்தாலும் சட்டென ஒருநிமிடத்தில் இக்கவிதை அகவயம் நோக்கி பாய்வதை அவர் சுட்டிக்காட்டினார். மேலும் வேறொரு முறை வாசிக்கும்போது அதில் தத்துவார்த்தப் பார்வை தென்படலாம் எனக் கூறினார்.

தொடர்ந்து முரண் குறித்துப்பேசிய அ.பாண்டியன் எழுத்தாளர்கள் வாழ்க்கையை முரணியக்கமாகப் பார்க்கும்போது கவிதைகளிலும் அவை வெளிப்படும் என்றும் புலம்பல் என்பது வாழ்வனுபவமாக இருக்கும்போது அதுவே படைப்புமாகும் என்ற கருத்தைப் பதிவு செய்தார். மேலும் படைப்பாளியை மறந்துவிட்டு படைப்பை மட்டுமே பார்ப்பது சரியாக இருக்குமெனவும் கூறினார்.

0தொடர்ந்து படைப்பும் படைப்பாளனும் எனும் நோக்கில் விவாதம் வளர்ந்தது. படைப்பை படைப்பாளனோடு ஒப்புநோக்கும் வழக்கம் எல்லா காலங்களிலும் இருந்துள்ளதை ம.நவீன் சில உதாரணங்களுடன் விளக்கினார். அவற்றில் (1)மனுஷ்யபுத்திரன் கவிதைகள் சுயபுலம்பல் கவிதைகள் என ஜெயமோகன் விமர்சனம் எழுதியது; (2)வ. கீதா ஜோடி குருஸீன் அரசியல் நிலைபாட்டால் அவரது நாவலை மொழிபெயர்க்க ஒவ்வாமல் போனது; (3)சுந்தர ராமசாமியை பிராமணராக முன்னிலைப்படுத்தி அவரது படைப்பை அணுகுவது; (4) பெருமாள் முருகன் நாவல் குறித்து எழுந்த சர்ச்சை; (5) ஜெயமோகனின் 100 நாற்காலிகள் கதையை நாயாடிகள் (சிறுபான்மை சமூகம்) சமூகத்தை இழிவுபடுத்தியிருப்பதாகக் கூறி சர்ச்சைகள் உருவானது என அனைத்தும் படைப்பாளன் எப்படியோ அருவமாக படைப்பில் வந்துவிடுவதை தடுக்க முடியாது என்பதாகக் கூறினார். மேலும் நகுலன் கவிதைகளை நகுலன் அல்லாமல் வேறு யார் எழுதினாலும் அவை கவிதைகளாக ஏற்க முடியாது என்பதாகவும் தனது விமர்சனத்தை முன்வைத்தார்.

படைப்பைப் பார்க்கும்போதும் வர்க்கத்தைப் பார்க்கும்போதும் அதற்குரியவன் யார் என்பதை வைத்தே எதையும் கணிக்க வேண்டிய நிர்பந்தம் இருப்பதையும் அரு.சு.ஜீவானந்தன் தனது பார்வையிலிருந்து கூறினார். மலாய்காரர்களின் சந்தையில் நடக்கும்போது தமிழர்களுக்கு மாட்டின் வீச்சம் வீசுவதாக கூறப்படுமானால் அதே தமிழர்கள் தலித்துகளாகவோ தமிழ் முஸ்லிம்களாகவோ இருக்கும் பட்சத்தில் அதனை வீச்சம் எனக் குறிப்பிடுவதில்லை என நடைமுறை உதாரணத்தை ம.நவீன் கூறினார். மேலும் சுந்தர ராமசாமியின் ‘பிள்ளை கொடுத்தால் விளை’யில் கதாபாத்திர வார்ப்பைக் குறிப்பிட்டு ம.நவீன் தலித் பெண் ஆசிரியராக இருந்தாலும்கூட அவள் கற்பழிக்கப்படலாம் என்பதாக அமைக்கப்பட்டிருப்பதை கோடி காட்டினார்.

மேலும் விவரித்த அரு.சு.ஜீவானந்தன் இலக்கியம் அரசியலாக்கப்படும்போது இத்தகைய பார்வை அவசியம் என்றும் வர்க்கப்பார்வையும், அனைத்தையும் கட்டுடைத்துப் பார்க்கும் தேவையும் இருப்பதை ஒப்பீட்டளவில் இலக்கியச் சூழலில் பிராமணர்கள் அதிகமும் இலக்கியம் படைத்துள்ளதை உதாரணம் காட்டி விளக்கினார். உதாரணமாக, க.நா.சு. வின் சாம்பசிவம் முதலியார் கதையில் முதலியார் சமூகத்தை கஷ்டப்பட்டு உழைக்கும் சமூகமாகக் காட்டும் நிலையில் இலக்கியத்தில் எப்படி அரசியல்; வர்க்க பார்வையை வைத்து அணுகாமல் இருக்க முடியும் என்ற கேள்வியை எழுப்பினார்.

வர்க்க வேறுபாடு மிகக் கோரமான முறையில் படைப்புகளில் வெளிப்படுத்தப்படுவதை தசாவதாரம் படைத்தில் முஸ்லிம்களுக்கு அதிகக் குழந்தைகள் இருப்பதாகக் காட்டி கிண்டலடித்திருப்பதை வைத்தும் ஒரு தலித், உயிரைக் கொடுத்தாவது உயர் சாதிக்கார சிறுவனை காப்பாற்றுவதாகக் காட்டுவதை வைத்தும் புரிந்துகொள்ள முடியும் என நவீன் விளக்கினார்.

இதுகுறித்து மேலும் விரிந்த இக்கலந்துரையாடலில் அ. பாண்டியன், ரோலன் பார்த்தைக் கோடி காட்டி ‘எழுதி முடித்துவிட்ட கணம் எழுத்தாளன் இறந்து விடுகிறான்’, என்பதான கருத்தும் இருப்பதைக் நினைவுகூர்ந்தார். இதனை தனது பார்வையிலிருந்து விளக்க முற்பட்ட அ.பாண்டியன் மேலைநாடுகளில் இன ஒடுக்குமுறையே அதிகம் ஆனால் மலேசியா போன்ற நாட்டில் வாழும் இந்துக்களிடையே இன்னும் நிலைத்திருக்கிறது என்றும் கூறினார். மறுநிலையில் ம.நவீன் படைப்பின் அரசியல் என்ன என்பதை கூர்ந்து அணுகுவதே முக்கியம் என தனது பார்வையை முன்வைத்தார்.

படைப்பு ரீதியாகப் பார்க்கும்போது மெளனி, ஜானகிராமன் போன்ற எழுத்தாளர்கள் அக்கிரகாரத்தைவிட்டு வெளியே எதையுமே பேசிவிடவில்லை என்பதாகக் கருத்துப் பதிவு செய்தார் அரு.சு.ஜீவானந்தன். பெருமாள் முருகன் சொன்னது மாதிரியான விடயங்களை இதற்கு முன்பே பலரும் பேசியிருப்பதாகவும் ஆனால் அவர்களுக்கு மத்தியில் பெருமாள் முருகனின் படைப்பு மட்டும் கடும் எதிர்ப்புக்குட்பட்டுள்ளதை உள் அரசியல் சார்ந்து அணுக வேண்டியதாக வகைப்படுத்தினார்.

பாலசந்தரின் ‘அரங்கேற்றம்’ திரைப்படத்தில் பிராமணப் பெண் விலைமாதராக 16காட்டப்படுவதைச் சுட்டிக்காட்டிய அரு.சு.ஜீவா இதனை வேறு யாராவது செய்திருந்தால் துவம்சம் செய்யப்பட்டிருக்கலாம் என கூறினார். மேலும் மேலை இலக்கியங்களில் சாதிய மனநிலை இல்லாவிட்டாலும் அங்கு வேறுவகையிலான பிளவுகள் இருப்பதை அந்நியன் நாவலை முன்வைத்து ம.நவீன் மேலும் விளக்கினார். அந்நாவலில் அரபுக்காரன் பிரஞ்சுக்காரன் ஒருவனால் கொல்லப்படுவதாகப் புனையப்பட்டிருப்பதைக் கொண்டு இனப் பிரிவினைகள் மேலை இலக்கியங்களிலும் இருந்துள்ளத்தை இதன்மூலம் ஓரளவு புரிந்துக் கொள்ள முடிந்தது. கவிதையில் கருப்பொருள் – முரண் – அழகியல் – அரசியல், வர்க்கப் பார்வை என்பதாக விரிந்த அன்றைய இறுதி அமர்வு சரியாக ஒன்பது முப்பதுக்கு நிறைவுற்றது. அரு.சு.ஜீவானந்தன், கங்காதுரை, முனைவர் முனீஸ்வரன் குமார் ஆகியோர் மறுநாள் அமர்வுகளில் பங்கேற்கப் போவதில்லை என்பதால் அனைவரும் இணைந்து குழுப்படம் ஒன்றை பிடித்துக் கொண்டோம். மறுநாள் அமர்வில் பங்கேற்காத நண்பர்கள் அன்றிரவே புறப்பட்டுவிட இதர சில நண்பர்கள் அவ்வீட்டிலும் மற்றவர்கள் அவரவர் வீடுகளுக்கும் பயணமானோம்.

 

பிப்ரவரி 7, 2016 ஞாயிற்றுக்கிழமை – [இரண்டாம் நாள்]

ஐந்தாவது அமர்வு : ஒளிபுகா இடங்களின் ஒலி
நூலாசிரியர் : தயாஜி
நூல் விமர்சனம் :மஹாத்மன், சரவணதீர்த்தா
நேரம்: காலை 8.00 – 9.30 வரை

மலேசியத் தமிழ் நூல்பதிப்புச் சூழலில் அருகி வரும் பத்தி எழுத்து முறையில் தயாஜியின் ‘ஒளிபுகா இடங்களின் ஒலி’ நூலானது அதன் வகை சார்ந்தும் உள்ளடக்கம் சார்ந்தும் முக்கியமானதாகும். அதிகமும் பத்தி எழுத்துகளில் விழிப்புணர்வு, எழுச்சி, அறிவுரை விளக்கங்களென ஒரே துறை சார்ந்த (Subject area) எழுத்து முறையின் ஆக்கிரமிப்புக்கும் சந்தைக்கும் மத்தியில் தயாஜியின் நூல் மனிதர்களையும், வாழ்வையும் அதற்குள் நடக்கும் ஊடாட்டங்களையும் விரிவாக பேசுவதன்வழி தனித்துவம் பெற்று நிற்கிறது.

மறுநாள் காலை எட்டுக்குத் தொடங்கிய ஐந்தாவது விமர்சன அமர்வில் தயாஜியின் நூல் குறித்த விமர்சனமும் விவாதமும் பொழுதை மிக உத்வேகத்துடன் தொடக்கி வைத்திருந்தது. இந்நூல் குறித்த முதல் விமர்சனப் பார்வையை மஹாத்மன் முன்வைத்தார். தனது விமர்சனக் கட்டுரையில் இடம்பெறாமலிருந்த சிலவற்றை மஹாத்மன் விமர்சன அமர்வில் படு உற்சாகமாகவே பதிவு செய்தார். மகாதீரின் ஆட்சிமுறையில் நிகழ்ந்த பலவற்றை கேலிச்சித்திரங்களாக்கிய மலேசியக் கலை உலகம் குறித்து தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டதுடன் அம்மாதிரியான அறச்சீற்றம் தயாஜியின் படைப்புகளில் வெளிப்படுவதையும் குறிப்பிட்டார். ஆனால் அவை முழுமையாக வெளிப்படாமல் இருப்பது பல பத்திகளில் காணமுடிகிறதெனவும் கூறினார். மலேசியச் சூழலில் சூனார் (Zunar) போன்ற மலாய் கேலிச்சித்திர ஓவியர்கள் சமூக, சமகால விழிப்புடன் கேலிச்சித்திரங்கள் வரைவதையும் அவ்வாறான சமூக, அரசியல் தெளிவு கொண்ட கேலிச்சித்திரங்கள் தமிழில் வருவதில்லை என்றும் தயாஜி அனுபத்திலிருந்து கருத்துப் பதிவு செய்தார்.

0தயாஜியின் கட்டுரைகளில் ஆங்காங்கு விரவியிருந்த திருநங்கையர் சார்ந்த பத்திகளைக் கோடிட்டுக் காட்டி அவர்களுடைய வாழ்வு குறித்தும் அவர்களுக்குத் தங்களின் எதிர்காலம் பற்றிய சிந்தனை குறித்தும் மஹாத்மன் கேள்வி எழுப்பி தன் பார்வையைப் பதிவு செய்தார். திருநங்கையரின் நோக்கம் எப்போதும் கடுமையாக உழைப்பது, தங்கம் வாங்கிச் சேர்ப்பது என இருப்பதாக மஹாத்மன் குறிப்பிட்டார். கல்வியறிவில் பெரிய அளவில் சாதனைகள் எல்லாம் இருக்காது என்றும் உழைக்கும் பணம் மொத்தத்தையும் தங்க நகைகளாக வாங்கி அணியும் மோகம் கொண்டவர்களாக தமிழ் திருநங்கைகளைப் பற்றிக்கூறினார். மறுநிலையில் இவ்வுலகம் திருநங்கைகளுக்காக ஒதுக்கி வைத்திருக்கும் சிவப்பு விளக்குப் பகுதிகளையும் கடந்து பல மலாய், சீன திருநங்கைகள் கல்வி, வணிகம், ஒப்பனைத் துறைகளில் முன்னேறி வருவதைச் சுட்டிக்காட்டி தமிழ் திருநங்கைகளிடத்தில் தூரநோக்குப்பார்வை குறிப்பிட்டு சொல்லும் அளவுக்கு இல்லை என்பதாக அவரது விமர்சனம் அமைந்தது. குறிப்பாக அடையாள அட்டை எடுப்பது, திருமணம் குறித்து முடிவெடுப்பது போன்ற விடயங்களில் போராடும் குணம் குன்றியவர்களாக அல்லது அலட்சியம் பாராட்டுபவர்களாக இவர்கள் இருப்பதாகவும் சில உதாரணங்களை மஹாத்மன் முன்வைத்து பேசினார்.

தொடர்ந்து சரவணதீர்த்தா, தன்னை மிகவும் கவர்ந்த பத்திகள் குறித்து எழுதிய விமர்சனக் கட்டுரையை அமர்வில் வாசித்து கூடுதலாக சில அம்சங்கள் தொட்டும் பேசினார். திருநங்கைகளை ஆண் உடலில் வாழும் பெண் ஆத்மா என்பதாக வர்ணித்து, மலாய் சமூகத்தினர் திருநங்கைகளை மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்பவர்களாக இருக்கும் சூழலில் தமிழர்களின் மத்தியில் அவ்வாறு இல்லை என்றார்.

சமூகத்தின் கண்களுக்கு அஞ்சும் தமிழர்களின் போக்கைச் சாடி பாலியல் தொழிலாளியை வீட்டு மணப்பெண்ணாக ஏற்கும் போக்கு இன்றளவில் எந்தளவுக்கு மாறியுள்ளது எனவும் கேள்வி எழுப்பினார் சரவணதீர்த்தா. பொதுபுத்தியில் திருநங்கைகள் என்னவாக கவனிக்கப்படுகிறார்களோ அதை அச்சு அசலாக தயாஜி தனது பத்தி எழுத்தில் பதிவு செய்திருப்பதாகவும் அவரது பார்வை அமைந்தது.

17திருநங்கைகள், பாலியல் தொழிலாளர்கள், குற்றவாளிகள் என தனது விமர்சனப் பார்வையை விரிவாக்கிப் பேசிய சரவணதீர்த்தா தமிழர்களைக் கூலிப் பொருளாக்கி, பெரும் பொருள் ஈட்டும் சில சீனர்களின் முதலாளியக் குணத்தையும் சாடினார். தமிழர்களை சக்கையாகப் பிழிந்துதெடுக்கும் சில சீன முதலைகள் பொதுவில் நல்லவனைப் போலவே காட்சி கொடுப்பதை இயக்குனர் சஞ்சை குமார் பெருமாளின் ‘ஜகாட்’ திரைப்படத்தின்வழி உதாரணம் காட்டினார். மேலும், தீண்டாமை தமிழர்களுக்குள் இருப்பது ஒருபுறமிருக்க சீனர்களும் மலாய்க்காரர்களும் தமிழர்கள்மீது காட்டும் தீண்டாமையில் அருவெறுப்பான முகத்தைப்பற்றியும் சரவணதீர்த்தா விமர்சனத்தில் பதிவிட்டார். கடைகளில் பொருட்களின் விலையைச் சொல்லும்போது “நீயெல்லாம் எங்க இத வாங்கப் போற” என்ற தொனியில் தமிழர்களிடம் பேசுவதும், குடியிருப்புப் பகுதிகளில் உள்ள திடல்களை மலாய்க்காரர்களே பெரும்பாலும் ஆக்கிரமித்து தமிழ்ச் சிறுவர்களை அண்டவிடாமல் செய்வதையும் உதாரணம் காட்டி விளக்கினார்.

சாதியம், தீண்டாமை குறித்து விரிவாகப்பேசிய ம.நவீன் இந்தியாவில் சாதி ரீதியில் தாழ்ந்தவர்கள் உயர்பதவிகள் வகிப்பதில் காட்டப்படும் பாராபட்சம் மலேசியச் சூழலில் இன ரீதியான ஒடுக்குமுறையில் அல்லது ஆக்கிரமிப்பில் இருப்பதை விளக்கினார். இங்கு மலாய்க்காரர்கள் அதிகார மையத்தில் இருப்பதையும் மலாய்க்காரர் அல்லாதவர்கள் அதிகாரமற்று இருப்பதையும் ம.நவீன் ஒப்புநோக்கி விளக்கினார். ஜெயமோகன் அகப்பக்கத்தில் பதிவிடப்பட்டிருந்த ஆவணப்படம் வட இந்தியாவிலும் தென்னிந்தியாவில் குறிப்பாகக் கேரளாவில் சாதிய மனம் மிக ஆழமாக வேர்விட்டிருப்பதை குறிப்பிடுகையில் அங்கு இன்றளவிலும் பேணப்பட்டுவரும் இரட்டை குவளை முறையையும் ஸ்ரீதர் உதாரணம் காட்டினார்.

ராஜ முருகுபாண்டியனின் கவிதையினூடாக இச்சூழலை விளக்கிய ம.நவீன் ஒரு தலித்து வாழ்வின் எதார்த்தத்தை இம்மாதிரியான கவிதைகளின்வழி காணமுடிவதை விளக்கினார்.

முதலாளியம்மாவின்
பழம் புடவை
அம்மாவிற்குப் புதுப்புடவை

அம்மாவின்
பழம்புடவை
அக்காவிற்குப் புதுப்பாவாடை

அக்காவின்
கிழிந்த பாவாடை
தங்கைக்குப் புதுத்தாவணி

தங்கையின்
கிழிந்த தாவணி
தம்பிக்குப் புதுக்கோவணம்

என்பதாக அமைந்த அக்கவிதை வரி தலித்துகளின் வறுமையை மட்டும் காட்டாமல் முதலாளி அம்மாவின் பழைய புடவை தம்பியின் கோவணம்வரை ஒரு நீண்ட பயணம் செய்யும் தகுதி கொண்டுள்ளதையும் ஒரு கோவணத்துக்கு ஒரு முதலாளியின் புடவை பழமையாக வேண்டியுள்ளதாகவும் புரிந்துகொள்ள முடியும் என விளக்கினார். அடுத்து, மீனவர் சமூகத்துக்குள்ளேயே குடும்பப் பாரம்பரிய வரிசையில் சாதியம் அனுசரிக்கப்படுவதைக் குறிப்பிட்டு, ஒடுக்குமுறைக்கு உட்படுத்தப்படும் ஒரு சமூகம் தன்னளவிலும் இன்னொரு பகுதியினரை ஒடுக்கிப் பார்க்கும் மூர்க்கம் கொண்டிருப்பதை சுட்டிக்காட்டி ஸ்ரீதர் தனது விரிவான விமர்சனப் பார்வையை முன்வைத்தார்.

சமூகக் கட்டமைப்பால் ஒதுக்கப்பட்டவர்களுடன் உரையாடும் வாய்ப்பை ஏற்படுத்திக்கொண்டு அதனூடாகப் பெற்ற அனுபவங்களைக் கொண்டு எழுதப்பட்டிருக்கும் இந்நூல் சார்ந்து மேலும் சில விடயங்களை தயாஜி கூற விவாதம் அதை நோக்கி நகர்ந்தது. அவற்றுள் தமிழ் அரவாணிகளிடம் காணப்படும் பொருளாதார, தூரநோக்குச் சிந்தனை குறித்து மஹாத்மன் கூறிய கருத்துகளுக்கு எதிர்வினையாக அமைந்த சில பதிவுகள் முக்கியமானவை. அரவாணிகளை உடல் தேவைக்காகவும் பொருள் தேவைக்காகவும் ‘touch n go’வாக பயன்படுத்திக் கைகழுவிவிடும் ஆண்களுக்கு மத்தியில் தங்களுடைய இறந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் முதலீடாக்கி எதிர்காலத்திற்கு அடித்தளமிடுபவர்களும் இருப்பதை தயாஜி நிறுவினார். அவர்கள் நகைகள் அணிவது உடனடி கவனத்தைப் பெறுவதற்காகத்தான் என்பதையும் அதையெல்லாம் கிண்டலுக்குள்ளாக்குவது அறிவிலிகளின் செயல்பாடாக தான் கருதுவதாகவும் “customerக்கு எது தேவையோ அதை தராங்க. அப்பறம் என்னங்க? இந்த ஆண்களின் egoதான் அரவாணிகளை வளரவிடாமல் தடுக்கிறது” என்றும் தன் கருத்தை அதிருப்தி நிரம்பிய குரலில் பதிவு செய்தார்.

பொதுவாகவே அரவாணிகள் தங்களை அதிகம் வெளிபடுத்திக் கொள்ள அலங்காரங்கள் செய்துகொள்வதும், நகைகள் அதிகமாக அணிவதும், கவன ஈர்ப்பை அதிகமாக்கும் நடவடிக்கைகளைச் செய்வதும் அவர்களை கேலிப்பொருளாக்குகிறது என்பது ஒரு புறமிருக்க எல்லா அரவாணிகளும் அப்படித்தான் என பொத்தாம் பொதுவாக பேசுவது தவறானதாகும். தயாஜி தனது நூல் குறித்து எழுந்த விமர்சனங்களில் தொடர்ந்து இதனை பல்வேறான சொல்லும் முறையில் மீண்டும் மீண்டும் நிறுவிக்கொண்டே இருந்தார். பெண்ணினுடைய நளினத்தோடு இருக்கும் அவர்கள் தங்களைத் தற்காக்கும் தருணங்களில் ஆணின் அத்தனை வீரங்களையும் பெற்றுவிடுகிறார்கள் எனக் குறிப்பிட்ட சரவணதீர்த்தா திருநங்கைகள் ஆணுக்கு ஆணாகவும் பெண்ணுக்குப் பெண்ணாகவும் இருப்பவர்கள் என்பதை உணர்வுபூர்வமாக பதிவிட்டார்.

வாழும் காலத்தில் Marylin Manroeவை நுகர்பொருளாகவும் இறந்தபின் அவரது சாவில் மட்டும் பிரமாண்டத்தைக் காண்பவர்களாவும் இருக்கும் ஆண்களின் செயல்பாடுகளை கண்டிப்பதாய் தயாஜியின் விமர்சனங்கள் அமைந்தன.

‘தமிழ்நாட்டில் திருநங்கைகள்’ என்பதாக விரிந்த விவாதத்தில் மதுரையில் ‘தாய்’ எனும் அமைப்பு பாரதி கண்ணம்மா என்பவரை தலைவராகக் கொண்டு இயங்குவதாகவும் குறிப்பிட்டுப் பேசிய ஸ்ரீதர், அவ்வமைப்பு அரவாணிகள்/திருநங்கைகள் பிச்சை எடுப்பதைத் தவிர்க்கும் பிரச்சாரங்கள் செய்வது, தொழில் செய்ய விரும்பும் அரவாணிகளுக்கு உதவுவது போன்றவற்றை மேற்கொண்டிந்தாலும் அவை வெற்றிகரமாக மேற்கொள்ளப்படவில்லை என்றார். அரவாணிகளுக்கு உளவியல் சார்ந்த விழிப்புணர்வும் தெளிவும் அடிப்படையாக இருக்கும் பட்சத்தில் அதைப் பொருட்படுத்தாமல் வேறெந்தப் பெரும் முயற்சிகள் செய்தாலும் பயனளிக்காது என்பதாக அவர் தனது பார்வையிலிருந்து அணுகி பேசினார்.

திருநங்கைகள் 90 விழுக்காட்டிற்கும் அதிகமானோர் பாலியல் தொழிலாளியாக இருப்பதற்கு தெளிவில்லா நிலைமையும் உளவியல் சார்ந்த நெருக்கடி நிலையும் இருப்பதை விளக்கிப் பேசிய ஸ்ரீதர், வட இந்தியா போன்ற பகுதிகளில் அரவாணிகள் தெருக்களில் நின்று வலுக்கட்டாயமாக மற்றவர்களிடம் பணம் பறிக்கும் செயல்களில் ஈடுபடுவதை சுட்டிக் காட்டினார். சமூகம் புறக்கணிப்பையும் ஏளனத்தையும் அவர்களிடம் வீசும்போது அவர்கள் வன்முறையினைக் கையில் ஏந்துவதை இதன்வழி புரிந்துகொள்ள முடிந்தது.

லிவிங் ஸ்மைல் வித்யா போன்ற சமூகத்தில் செயல்பாட்டாளராகவும் அல்லது குறைந்தபட்சம் பொதுவெளியில் அறிமுகமானவர்களுக்கும்கூட வீடு வாடகைக்குக் கிடைப்பதில் சிக்கல்கள் இருப்பதைச் சுட்டிக்காட்டிய ம.நவீன் திருநங்கைகள் மீதான சமூகத்தின் கொடுங்கரங்களையும், சமூக மாற்றம் அவசியமாயுள்ளதையும் பதிவு செய்தார். சமூகத்தையே விரல்நீட்டி குறைசொல்லிக் கொண்டிருக்காமல் கல்வி, பொருளாதாரம் என முன்னேறிய திருநங்கைகள் பிற திருநங்கைகளுக்கு என்ன செய்கிறார்கள் என்ற கேள்வியும் கேட்க வேண்டியுள்ளதாக ஸ்ரீதர் கருத்துப் பதிவு செய்தார்.

அவர்களும்கூட இச்சமூகக் குரலுக்குத் தப்பாமல் இருப்பதாக கூறி ஊடகங்களும் திரைப்படங்களும் இச்சமூக மதிப்பீடு நிலைத்திருக்க எல்லா நிலைகளிலும் செயல்படுவதாகக் கூறினார். பெண்களுக்கு இழைக்கப்படும் வன்புணர்ச்சி கொடுமை ஒரு திருநங்கைக்கு ஏற்படும்போது ஊடகங்கள் அதனை கவனப்படுத்தாமல் மெளனிப்பது, ‘ஆண்கள் அழமாட்டார்கள். பொட்டைகள்தான் அழும்’ போன்ற மொழிப் பிரயோகங்கள் குறித்து தயாஜி இன்னும் விரிவாகவே பேசினார். ஆட்சியிலிருந்த காலத்தில் கனிமொழி செய்த சில மாற்றங்களான திருநங்கைகளுக்கு ration card வழங்கியது போன்றவற்றையும் ஸ்ரீதர் அமர்வில் பதிவு செய்தார்.

இவ்வாறு ஒரு கருத்துக்கு முகஸ்துதிக்காகச் சப்பைக்கட்டல்கள் இல்லாமல் மறுப்புக்கருத்துகளை அவ்வப்போது வெளிப்படுத்திய அதே வேளை ஆழமான புரிந்துணர்வை வலுப்படுத்தியபடியே நிகழ்வு அடுத்தக்கட்டத்தை நோக்கி நகர்ந்தது.

தொடரும்

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...