சிற்றிதழ் என்ற இலக்கிய வடிவம் இன்னும் ஐம்பதாண்டுகள் கழித்தும் தொடரும் – ந. முருகேசபாண்டியன்

mu pa. முருகேசபாண்டியன், சொந்த ஊர் மதுரை. கல்லூரி ஒன்றில் நூலகராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். நாடக எழுத்தாளர், புனைவெழுத்தாளர், கவிஞர், விமர்சகர். இவர் எழுதிய ராஜபார்ட் நாடகம் 1995- ஆம் ஆண்டு புதுதில்லி, சங்கீத நாடக அகாதெமியினால் தேர்ந்தெடுக்கப்பட்டுப் பரிசு பெற்றது. இவருடைய முதல் நூலான முதல் நூலான பிரதிகளின் ஊடே பயணம் 2003- ஆம் ஆண்டின் சிறந்த ஆய்வு நூலாகச் சுடர் ஆய்வுப் பரிசு பெற்றது. மேலும் இவரது திறனாய்வுக் கட்டுரைகள் அடங்கிய சொற்கள்   ஒளிரும் உலகம் புத்தகம் 2007-ஆம் ஆண்டின் சிறந்த விமர்சன நூலாகத் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தினால் தேர்ந்தெடுக்கப்பட்டது. மேலும் பல விருதுகளையும் பெற்றுள்ளார். கிராமத்துத் தெருக்களின் வழியே, ஒப்பனையில் ஒளிர்ந்திடும் தமிழகம் ஆகிய மானுடவியல் ஆய்வுப் புத்தகங்கள், குடுகுடுப்பைக்காரர் வாழ்வியல், மொழிபெயர்ப்பியல் ஆகியவை இவரது ஆக்கங்களில் குறிப்பிடத்தகுந்தவை. ‘இருவேறு உலகம்’ இவரது சிறுகதைத் தொகுதி. சங்கப்பாடல்கள் குறித்தும் பல்வேறு நூல்கள் எழுதியுள்ளார். 30க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியிருந்தாலும் தமிழில் நாவல்கள் குறித்து மிக விரிவான பார்வை உடைய ந.முருகேச பாண்டியன், பலநூறு விமர்சனக்கட்டுரைகளை எழுதியுள்ளதால் விமர்சகராக அறியப்படுகிறார்.

எண்பதுகள் தொடங்கி இன்று வரை தமிழ் இலக்கியச் சூழலில் இயங்கி வருபவர் நீங்கள். தொழில்நுட்பப் புரட்சிக்குப் பின்பான காலகட்டத்தை, தமிழ் இலக்கியத்தின் மீதான வலைத்தளங்கள், பேஸ்புக்கின் தாக்கத்தை, எப்படிப் பார்க்கிறீர்கள்?

மின்னணு ஊடகம், ஆளுகை செலுத்துகின்ற இன்றைய சூழலில், அதற்குரிய பலமும் பலவீனங்களும் இருப்பது தவிர்க்க இயலாதது. தொழில்நுட்பமும் நுகர்பொருள் பண்பாடும் மேலாதிக்கம் வகிக்கையில், ஏற்கனவே வலுவாக இருந்த சமூக மதிப்பீடுகள் ஆட்டங்கண்டுள்ளன. இந்நிலையில். இரண்டாயிரமாண்டு வரலாறும் பராம்பரியமும் மிக்க தமிழ் மொழியானது, நாணல் போல வளைந்து கொடுத்துத் தாக்குப் பிடித்துவிடுமா என்ற கேள்வி தோன்றுகிறது. நவீன ஊடகமான சமூக வலைத்தளம் என்பது தமிழர் வாழ்க்கையில் இன்று அடிப்படை அம்சமாகி விட்டது. எல்.கே.ஜி. வகுப்பில் இருந்து ஆங்கிலவழியில் கல்வி பயிலும் தமிழர்களின் குழந்தைகளுக்குத் தமிழ் இலக்கியத்தை அறிமுகம் செய்திட, வலைத்தளங்களை விட்டால், வேறு வழியில்லை. சேதன் பகத் போன்றோர் எழுதியுள்ள பல்ப் நாவல்களை ஆங்கிலத்தில் வாசித்துக்கொண்டிருந்த இளைய தலைமுறையினர், கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை வாசிப்பவர்களாக மாறியது, வலைத்தளத்தினால்தான். எஸ். ராமகிருஷ்ணன், சாரு நிவேதா போன்ற இலக்கிய ஆளுமைகளின் எழுத்துகள், வலைத்தளத்தின் மூலமாகவே உலகமெங்கும் பிரபலமாகி வருகின்றன. மொரிஷியஸ், மலேசியா, சிங்கப்பூர், கனடா என உலகமெங்கும் தமிழர்கள் பரவியிருந்தாலும், சர்வதேச மொழியாக தமிழ் மொழி அறியப்பட்டாலும், யதார்த்ததில் தமிழின் வேர்கள் பலவீனமடைந்திருந்தன. இந்நிலையில், வலைத்தளங்கள் விழுதுகளாகத் தமிழைத் தாங்கிப் பிடிக்கின்றன. தொண்ணூறுகளில்கூட நூலகங்களுக்குப் போய் சிரமப்பட்டுத் தேடிக் கண்டறிந்த உலக இலக்கியத்தின் நுனிக்கொழுந்துகள், வலையின்மூலம் எளிதாகக் கிடைப்பது நேர்மறையான அம்சம் அல்லவா? இத்தகைய எழுத்துகள், தமிழிலக்கியப் போக்கினை உலக இலக்கியத்துடன் இயையுடையதாக மாற்றமடையச் செய்கின்றன

தமிழில் தீவிர இலக்கியம் என்கிற வகைமாதிரி அருகி வருகிறதா?

கேளிக்கைக்கானதாக இன்றைய உலகம் மாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஸ்ரீதர், நீங்கள் பிரமாண்டமான ஷாப்பிங் மால்களுக்குள் நடந்து சென்று கொண்டிருக்கும்போது, உங்களுக்குள் ஏற்படும் விநோத உணர்ச்சியை எப்படி உள்வாங்கிக் கொள்கிறீர்கள்? பொருளை வாங்கு, பயன்படுத்து, ரசனையை மாற்று, தூக்கி எறி என்ற பண்பாடு , வெறுமனே வணிகம் சம்பந்தப்பட்டது மட்டுமல்ல. ஒவ்வொருவருக்குள்ளும் கொண்டாட்டம் என்ற பெயரில் உருவாக்கப்படும் மனநிலையில் நுண்ணரசியல் பொதிந்துள்ளது. இந்நிலைக்கு கலை, இலக்கியம் விதிவிலக்காக இருக்க முடியாது. தீவிரமான எழுத்து, கேளிக்கை எழுத்து என்பதற்கு இடையிலான இடைவெளி சிதிலமடைந்தாலும், தனிமனித நுகர்வில் தீவிரமான வாசகன் தனித்திருக்கிறான். இன்னொரு விஷயம் எல்லாக் காலகட்டங்களிலும் தீவிரமான இலக்கியத்தை வாசிக்கிறவர்களின் எண்ணிக்கை வரம்பிற்குட்பட்டதுதான். தீவிர இலக்கியம் ஒருபோதும் அருகி வரும் உயிரினமாக மாறாது. நம்புவோம்.

தமிழில் இன்னும் சிற்றிதழ்களுக்கான தேவை இருக்கிறதா?

சிற்றிதழ் என்ற இலக்கிய வடிவம் இன்னும் ஐம்பதாண்டுகள் கழித்தும் தொடரும். என்ன அப்பொழுது அது அச்சு வடிவில் வராது. பொதுப்புத்தி உருவாக்கும் மையநீரோட்டம், எப்பொழுதும் ஒற்றைத்தன்மையை வலியுறுத்துகிறது. ஆனால் மனிதன், சமூக உயிரினமாக இருந்தாலும் தனக்கான உலகைக் கட்டமைத்து, புதிய உலகில் மிதக்கிறான். ஆயிரம் பூக்கள் மலர வேண்டியது, இயற்கையின் நியதியாக இருக்கும்போது, படைப்பாளரின் உணர்வுகள் வெளிப்பட, சிறுபத்திரிகை தேவையானதாக உள்ளது.

இன்றைய சூழலில் இடைநிலை இதழ்களின் நிலை என்ன?

இடைநிலை இதழ்கள் இன்றைக்கு இலக்கியத்தின் போக்கைத் தீர்மானிக்கின்றனவாக உள்ளனவா? யோசிக்க வேண்டியுள்ளது. பெரும்பாலான இடைநிலைப் பத்திரிகைகள், கட்டுரைகளுக்குத் தரும் முக்கியத்துவத்தைப் படைப்புகளுக்குத் தருவதில்லை என்பது அவற்றைப் புரட்டினாலே தெரிந்துவிடும். பொதுவாக இடைநிலை இதழ்கள், வணிகரீதியில் வெற்றி அடைந்ததாகத் தெரியவில்லை. பத்திரிகை விற்பனைமூலம் பெரிய அளவில் லாபமும் சம்பாதிக்கவில்லை. என்றாலும் பதிப்பகம் மூலம் புத்தக விற்பனை தொடங்கி ஏதோ ஒரு கணக்குவழக்கு இருக்கிறது. அதிகபட்சம் பத்தாயிரம் பிரதிகள் விற்கின்ற இடைநிலை இதழ்கள்கூட தமிழக அரசின் நூலக ஆணைக்குழுவின் ஆணையைப்பெற்று, சுமார் 3,000 பிரதிகளைக் கிளை நூலகங்களுக்கு அனுப்புகின்றன. இலக்கிய சேவைக்காக வெளியிடுகிறோம் என வெளியாகும் சில இடைநிலை இதழ்களின் படைப்புகளின் தேர்விலும் வெளியீட்டிலும் எவ்விதமான தர வேறுபாடும் இல்லை. அதிலும் மின்னஞ்சல்மூலம் பத்திரிகை அலுவலக மின்முகவரிக்கு வரும் எழுத்துகளைத் தொகுத்து வெளியிடுவதுதான், சில பத்திரிகைகளில் நடைபெறுகிறது. கூரியர் சர்வீஸ் நடத்துவது போலத்தான் பத்திரிகை ஆசிரியரின் பணி இருக்கிறது என நண்பர் செல்மா ப்ரியதர்ஷன் வேடிக்கையாகச் சொன்னது, இப்போது நினைவுக்கு வருகிறது. இலக்கியத்தின் பெயரால் பல்வேறு சம்பவங்கள் நிகழ்ந்திடுவதற்கு இடைநிலை இதழ்கள் உதவுகின்றன. அவ்வளவுதான்.

நவீனத் தமிழ் இலக்கியத்தின் போக்கைத் தீர்மானிப்பவையாக மேற்குலக இலக்கியங்களே இருந்து வந்துள்ளன. உதாரணத்துக்கு ஐரோப்பா, லத்தீன் அமெரிக்கா . ஏன் நம்முடைய கவனம், ஆசிய நாடுகளின் மீது படியவில்லை?

பிரிட்டிஷ் காலனியாதிக்கத்தின் ஆட்சி காரணமாகத் தமிழகத்தில் ஆங்கில இலக்கியம், 1850 ஆண்டு முதலாகச் செல்வாக்குப் பெற்றுள்ளது. பிரெஞ்சு இலக்கியப் படைப்புகள் நூற்றாண்டுகளாகத் தமிழாக்கப்படுகின்றன. மேலைநாடுகள் எல்லாவற்றிலும் மேன்மையானவை என்ற காலனியாதிக்கப் புனைவு, இன்றுவரை தொடர்கின்றது. மேலைநாடுகளைப் போல நகலெடுப்பது என்ற பின் காலனியாதிக்க அரசியல், இலக்கியத்தில் ஆழமாக ஊடுருவியுள்ளது. இதனால்தான் தமிழர்களில் சிலர், நவீனத் தமிழிலக்கியத்தில் வாசிப்பதற்கு ஒன்றுமில்லை. எல்லாம் ஐரோப்பிய அமெரிக்க மொழிகளில் இருக்கின்றன என்று சொல்கின்றனர். விதிவிலக்காக ருஷிய இலக்கியம் டால்ஸ்டாய் வழியாகத் தமிழில் அறிமுகமாகியுள்ளது. சோவியத் ருஷிய புரட்சிக்குப் பின்னர் ருஷிய இலக்கிய மேதைகளின் படைப்புகள், தமிழாக்கப்பட்டது, அரசியல்தான். சீனா, ஜப்பான் போன்ற மொழிகளில் இருந்து தமிழாக்கப்பட்ட படைப்புகள் அண்மைக்காலத்தில்தான் வெளி வருகின்றன. ஆசிய நாடுகளுக்குரிய தனிப்பட்ட குணாம்சங்கள் மிக்க படைப்புகள், தமிழில் வெளியாகும்போது, ஒப்பீட்டு நிலையில் பண்பாட்டு அம்சங்களைக் கண்டறியலாம்.

அண்மைக் காலமாகப் பிரசுரமாகும் தமிழ் நாவல்கள் குறித்து

அண்மையில் வெளியாகியுள்ள தமிழ் நாவல்கள், உற்சாகம் அளிக்கின்றன; மனதுக்குmuru pa மகிழ்ச்சி அளிக்கின்றன. உலகம் முழுக்க நாவல்கள்தான் விரும்பி வாசிக்கப்படுகின்றன. சர்வதேச அளவில் இலக்கிய விருதுகள் பெரிதும் நாவலுக்குத்தான் வழங்கப்படுகின்றன. இரண்டாயிரமாண்டு வரலாற்றுச் சிறப்புடைய தமிழ் மொழியின் தொடர்ச்சி என்பது நாவல் இலக்கிய வடிவத்தின்மூலம் தொடர்கின்றது. தமிழ் நிலவெளி சார்ந்து புனையப்படும் கதைகள், மரபின் நீட்சி என்ற நிலையில் நாவலாக வெளிப்படுகின்றன. ஒப்பீட்டளவில் இன்று தமிழில் நாவல்கள்தான் பலராலும் விரும்பி வாசிக்கப்படும் வடிவமாக விளங்குகிறது. ஆங்கில இலக்கியப் பரிச்சயமுள்ள இளைய தலைமுறையினர், தமிழில் எழுதும் தங்களுடைய முதல் நாவலைச் சிறப்பானமுறையில் வெளியிடுகின்றனர். நக்கீரனின் காடோடி, சைலபதியின் தேவன் மனிதன் லூசிபஃர், சரவணன் சந்திரனின் ஐந்து முதலைகளின் கதை, விநாயக முருகனின் ராஜீவ் காந்தி சாலை, இரா.முருகவேளின் மிளிர்கல், ஏக்நாத்தின் கிடைகாடு, கலைச்செல்வியின் சக்கை, செல்லமுத்து குப்புசாமியின் இரவல் காதலி, எஸ்.அர்ஸியாவின் ஏழரைப் பங்காளி வகையறா, லட்சுமி சரவணக்குமாரின் உப்பு நாய்கள், வீரபாண்டியனின் பருக்கை, ஆர்.அபிலாஷின் கால்கள், குமாரசெல்வாவின் குன்னிமுத்து, ராம்சுரேஷின் கரும்புனல், கே.என்.சிவராமனின் சகுனியின் தாயம், ம.தவசியின் சேவல்கட்டு என்ற பட்டியல் இன்னும் நீளும். ஈழத்தில் இருந்து வெளிவந்துள்ள விமல் குழந்தைவேலின் கசகரணம், சயந்தனின் ஆறாவடு, குணா கவியழகனின் நஞ்சுண்டகாடு, ஸர்மிளா ஸெய்யித்தின் உம்மத் போன்ற நாவல்கள் போர், போருக்குப் பிந்திய வாழ்க்கையை வலியுடன் சித்திரிக்கின்றன. கோணங்கி, எஸ். ராமகிருஷ்ணன், ஷோபா சக்தி, கீரனூர் ஜாகீர்ராஜா, சு.தமிழ்ச்செல்வி, தமிழ்மகன், போன்ற அனுபவம்மிக்க நாவலாசிரியர்கள் தொடர்ந்து நாவல்தளத்தில் காத்திரமாக இயங்குகின்றனர். மரபுவழிப்பட்ட கதைசொல்லல் ஒருபுறம் எனில், அநேர்கோட்டுக் கதைசொல்லலும் இன்னொருபுறம் பரவலாகியுள்ளது. தமிழர் வாழ்க்கையின் பல்வேறுபட்ட போக்குகளுக்கு முக்கியத்துவம்தந்து எழுதப்படுகின்ற நாவல்கள், வாசிப்பினில் நம்பிக்கை அளிக்கின்றன.

நாவல் வடிவங்களில் பரிசோதனைகள் நடந்து வருகின்றனவா?

நிச்சயமாக. யதார்த்தமான கதைசொல்லலுக்கு மாற்றாக மொழியில் பரிசோதனை முயற்சிகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. ஜெயமோகனின் வெள்ளை யானை, எஸ். ராமகிருஷ்ணனின் யாமம், விநாயக முருகனின் வலம் ஆகிய மூன்று நாவல்களும் காலனியாதிக்கக் காலகட்டத்தில் சென்னை நகரமும் அங்கிருந்த மக்களும் எப்படி இருந்தனர் என்ற புனைவைக் கட்டமைத்துள்ளன. வரலாறு என்பது பன்முகப்பட்டது என்ற நிலையில் தமிழின் அடையாளத்தை மீட்டுருவாக்கம் செய்துள்ள நாவல்கள் சுவராசியமானவை. க.சுதாகரின் 6147 போன்ற அறிவியல் நாவல்கள், எம்.ஜி.சுரேஷின் சிலந்தி உள்ளிட்ட நாவல்கள், ரமேஷ்-பிரேமின் சொல் என்றொரு சொல், தமிழவனின் நாவல்கள் போன்றவற்றில் புதிய வகைப்பட்ட சோதனை முயற்சிகள் இடம் பெற்றுள்ளன. நாவலாக்கத்தில் பரிசோதனையைப் பொறுத்தவரையில், இன்னும் செல்ல வேண்டிய தொலைவு நிரம்ப உள்ளது

தொண்ணூறுகளுக்குப் பிறகு ஏன் தமிழில் ஆளுமைகள் எனச் சொல்லும்படியாக யாரும் உருவாகி வரவில்லை?

அது ஒரு கனாக்காலம் இல்லையா ஸ்ரீதர்? பின் நவீனத்துவக் காலகட்டத்திய வாசிப்புமுறை, பீடங்களைத் தகர்த்து விட்டது. அச்சு ஊடகப் பெருக்கம் ஒருபுறம் என்றால், இன்னொருபுறம் டிஜிட்டல் ஊடகம் என இலக்கியத்தின் முகம் மாறிவிட்டது. இடைநிலை இதழ்களின் ஆதிக்கம் காரணமாகக் குறிப்பிட்ட ஆளுமையை ஊதிப் பெருக்கிக் காட்டினாலும், பலரும் நம்பத் தயாராக இல்லை. அதிலும் முகநூலில் நான்கு வரிகள் எதையாவது எழுதிவிட்டுத் தன்னைக் கவிஞன் என நம்புகிறவர்கள் பெருகிக் கொண்டிருக்கின்றனர். அப்புறம் 125 ஆண்டுகளில் வெளியாகியுள்ள முக்கியமான நவீன இலக்கியப் படைப்புகளைத் தேடி வாசிப்பதற்குப் பொறுமையும் நேரமும் பலருக்கும் இல்லை. புதுமைப்பித்தன், ஜெயகாந்தன் எழுதியுள்ளவற்றை வாசிக்கக்கூட விருப்பம் இல்லாத சூழலில், இன்றைக்கு வெளியாவதைப் பற்றி மட்டும் பேசு என்ற குரல் ஒலிக்கிறது. இன்று மின்னணு ஊடகத்தினால் ஏகப்பட்ட வாசகர்களுடன் வலம் வருகின்ற சாரு, ஜெயமோகன், எஸ்.ராவை ஆளுமைகள் என்று சொல்லலாம்தானே?

தமிழில் ஏன் கோட்பாட்டு ரீதியான விமர்சனங்கள் வருவதில்லை?

தமிழில் தொல்காப்பியரின் தொல்காப்பியம் காத்திரமான விமர்சனத்தை உள்ளடக்கியுள்ளது. கிரேக்கத்தில் அரிஸ்டாட்டில் போல தொல்காப்பியர். ஆனால் அந்த விமர்சன மரபு வளர்க்கப்படவில்லை. வைதிக சமயத்தின் ஆதிக்கம் காரணமாகப் புத்தகம் என்றால், அது கேள்விகளுக்கு அப்பால்பட்ட நிலையில் புனிதமாகக் கருதப்பட்டது. புத்தகத்தைப் பற்றி ரசனை முறையில் நலம் பாராட்டுதல்தான் தமிழில் வழக்காகி விட்டது. கல்வித்துறை சார்ந்த விமர்சன மரபு, தமிழுக்குப் பெரிய அளவில் பங்களிப்பு செய்யவில்லை. எழுபதுகளில் சிறுபத்திரிகை சார்ந்த மரபில் அறிமுகமான மேலைக் கோட்பாடுகள், புதிய போக்கினை அறிமுகப்படுத்தின. தமிழவன், நாகர்ஜுனன் போன்றோர் புதிய கோட்பாடுகளை முன்வைத்தாலும், அவை படைப்புகளுடன் ஒருங்கிணையவில்லை. பிரேம் ரமேஷ், ஜமாலன் போன்ற விமர்சகர்களின் பேச்சுகள், ஒருவகையில் மேலைக்கோட்பாடுகளைத் தமிழுக்குப் பொருத்திட முயன்றன. என்றாலும் அவை நகல்களே. தமிழ் மண்ணுக்கேற்ற விமர்சன மரபு என அசலான கோட்பாடுகள் உருவாகவில்லை என்பதுதான் உண்மை. கடந்த எழுபதாண்டு கால இலக்கிய உலகினைக் கூர்ந்து அவதானித்தால் ஒரு விஷயம் உங்களுக்குப் பிடிபடும். மேலைநாடுகளில் ஏதாவது ஒரு கோட்பாட்டை அவ்வப்போது விமர்சகர்கள் முன்வைக்கின்றனர். உடன் எல்லோரும் அந்தக் கோட்பாட்டின் பின்னால் செல்கின்றனர். பின்னர் வேறு புதிய கோட்பாடு உருவாக்கப்படுகின்றது. மீண்டும் அதே நிலை. படைப்பு முக்கியமா? விமர்சனம் முக்கியமா? என்றால், கோட்பாடுதான் முக்கியம் என்ற பிரேமை முன் வைக்கப்படுகிறது. இது இலக்கியத்தைப் பொறுத்தவரையில் சவலைப் பிள்ளைத்தனம். எல்லாவற்றுக்கும் மேலைநாடுகளைச் சார்ந்திருப்பது போல கோட்பாடுகளுக்கும் காத்திருக்கும் நிலை நுண்ணரசியலானது.


நேர்காணல்: ஶ்ரீதர்ரங்கராஜ், கார்த்திகைப்பாண்டியன்

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...