நீயின்றி அமையாது உலகு – 4

10728338-Vintage-cartoon-little-girl-with-flower-Stock-Vectorபுத்தக அலமாரியை சரிப்படுத்த எத்தனிக்கும்போது சில சமயங்களில் இது நடக்கலாம்.  பழைய நினைவுகள்.  மறக்க முடியாத தருணங்கள்.   கொடுத்ததும் கிடைத்ததும்.   வலிகள்.   இன்ப அதிர்ச்சி என அடுக்கிக்கொண்டே போகலாம் கிடைத்தது நமது நாட்குறிப்பாக இருக்கும்போது. . .

நாட்குறிப்பு என்பதைவிட குறிப்புகள் எழுதுவதில் இருந்துதான் என் எழுத்து இயங்க ஆரம்பித்திருக்க வேண்டும்.  எனக்கு எதையும் மனனம் செய்வதில் சிக்கல் இருந்தது.  வகுப்பில் எல்லோருக்கும் போல எனக்கும் பாடம் செய்வதில் , மீண்டும் படித்துக்காட்டுவதில் சிக்கல் ஏற்பட்டால் பரவாயில்லை.   ஆனால்  எனக்கோ ஆசிரியரின் பெயர் கூட சில வாரங்கள் ஆன பின்னர்தான் மண்டையில் இறங்கி மனதில் பதியும்.  என் பெயரையே அப்பா தாளில் எழுதிக் கொடுக்க ஒவ்வொரு முறையும் அதைப் பார்த்துப்பார்த்து புத்தக ஏடுகளில் எழுதியிருக்கிறேன்.

இதைத் தவிர்ப்பதற்காக முக்கியமாக நான் நினைப்பதை  அவ்வபோது 555  எனக் குறிப்பிடப்பட்டிருக்கும் குட்டிப்புத்தகம் ஒன்றில் எழுதிவைப்பேன்.  எங்கள் தோட்டத்தில்  பெரும்பாலும் எல்லோரிடமும் இந்த 555 என்ற புத்தகம் இருக்கும். கடைகளில் கடனுக்கு வாங்கி இதில்தான் குறித்துக் கொள்வார்கள்.  பின்னர் மாதத் தொடக்கத்தில் கடனைக் கட்டியபின்  கடைக்காரர் தன்னிடம் இருக்கும் இன்னொரு  555  புத்தகத்தில் கணக்கைச் சரி செய்வார்.

என் 555 புத்தகத்தில் எழுதி எழுதி ஒரு கட்டத்தில் அதுவே நோயாக மாறிப்போனது எதற்கெடுத்தாலும் குறிப்புப்புத்தகத்தில் தேடிப்பார்த்துச் சொல்வதும் , என்ன நடந்தாலும் குறிப்பு புத்தகத்தில் எழுதுவதும் என்னை சிந்திக்கவிடாது என வீட்டுக்கு வந்திருந்த படித்த சொந்தக்காரர் சொன்னதால்,  அதுவரை இருந்த உள்ளங்கையளவுப் புத்தகங்கள் குப்பைக்குப் போயின.

அதையடுத்து பள்ளியில் படிக்க வேண்டியதை மட்டும் குறித்து அதைத் தொடர்ந்து மனனம் செய்யும் பயிற்சியும் எடுத்துவந்தேன்.  இப்போது, என்னைக் கடந்த, என் வாழ்வில் எப்போதும் தனக்கென ஓரிடம் பெற்றிருக்கும் பெண்கள் பற்றிய நினைவுகூரலுக்கும் அதுதான்  உதவியாக இருக்கிறது.

இன்று புத்தக அலமாரியை சுத்தம் செய்யும்போது எப்போதோ எழுதிய குறிப்புப்புத்தகம் ஒன்றிலிருந்து நுழைவுச்சீட்டு வந்து விழுந்தது.  சர்கஸ்க்கான நுழைவுச்சீட்டு அது.

ஆரம்பப்பள்ளியில் , வழக்கமான ஞாயிறு சபைகூடலில் வெள்ளைக்காரர் ஒருவர் வந்திருந்தார்.  இனி அவர்தான் எங்கள் பள்ளிக்கு ஆங்கில ஆசிரியர் என நண்பர்கள் பேசிக்கொண்டார்கள்.  எனக்கும் இன்னும் சிலருக்கும் வயிற்றில் புளியைக்கரைத்தது. எனக்குத் தெரிந்து வெள்ளைக்காரர்களை வீடியோ படங்களில்தான் பார்த்திருந்தேன். எல்லோரும் கையில் துப்பாக்கி வைத்திருப்பார்கள்.  அரைகுறையாக ஆடை அணிந்திருப்பார்கள்,  வெடிகுண்டு எல்லாம் போடுவார்கள்.  இப்படி எங்களுக்கு வந்து பாடம் நடத்துவார்கள் என சத்தியமாக கனவில் கூட நினைக்கவில்லை. நல்லவேளையாக அப்படி அல்ல என்பதை ஆசிரியர் பேசித் தெளிய வைத்தார்.

கோட்டு சூட்டு அணிந்திருந்த வெள்ளைக்காரனின் அரைமணி நேரப்பேச்சை எங்கள் ஆசிரியர் ஐந்து நிமிடத்தில் புரியவைத்தார் .  அடுத்தவாரம் நடக்கவிருக்கும் சர்க்கஸ்சுக்கு பள்ளி மாணவர்களுக்கு சிறப்புக்கழிவு அட்டை கொடுக்கப் போகிறார்களாம்.  தேவையானவர்கள் வரிசையில் நிற்கலாம் என்றதும், சபைகூடல் கழிவு அட்டைக்கு அப்படியே இடதுபக்கமாக தானாக மாறியது.

எங்கள் தோட்டத்திலும் அந்தப் பரபரப்பு பரவியது.  எங்கள் தோட்டத்திலிருந்து கொஞ்ச தூரத்தில் அமைந்திருக்கும் பெரிய திடலில்தான் அந்த சர்க்கஸ் நடக்கவிருக்கிறதாம்.  பெரிய லாரிகளில் இருந்த இயந்திரங்களையும் இரும்பு ராட்டிணங்களையும் பல பேர் ஒன்றின் பின் ஒன்றாக அவ்விடத்தில் வைத்துக் கொண்டிருந்தார்கள்.

எங்களுக்கு வெள்ளைக்காரர்களை நேரில் சென்று காண ஆசை.  நண்பர்களுடன் அங்கு சென்றேன். உண்மையிலேயே அவர்கள் வெள்ளையாகத்தான் இருந்தார்கள்.  அரைகுறை ஆடையில் ஆண்கள் யார் பெண்கள் யாரென யூகிக்க முடியாத தூரத்தில் நின்றிருந்தோம்.  அடுத்த வாரம் ஆரம்பிக்கும் சர்க்கஸ்சுக்கு இப்போதே நாங்கள் தயாரானோம்.  ஆனால் கழிவுக்குப் பிந்திய விலையைகூட கொடுக்கும் சூழலில் என் குடும்பம் இல்லை.  ஒரு மாதகாலம் அந்த சர்க்கஸ் இருக்குமென்பதால் எப்படியும் வீட்டில் பணம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தேன். பள்ளியில் சர்க்கஸ்சுக்கு சென்றவர்களிடம் நாளுக்கு ஒரு அனுபவம் சொல்லக் கிடைத்தது.  ஒவ்வொரு முறையும் ; ‘அன்னிக்கு சொல்ல மறந்துட்டேன்… அதான் அந்த சர்க்கஸ்ல…. ’ என ஆரம்பிப்பது வழக்கமானது.

பள்ளி முடிந்து வீட்டுக்கு வரும் வழியில் தினமும் அந்த சர்க்கஸ் நடக்கும் திடலுக்குப் போவேன். வெள்ளைக்காரர்களை அவ்விடம் தவிர வேறெங்கும் பார்க்க முடியாது.  வேலிக்கு அருகிலேயே நின்று அங்குமிங்கும் அவர்கள் ஓடியாடிப் பயிற்சி எடுப்பதை ரசித்துவந்தேன்.  வெளியிலேயே இப்படியென்றால் சர்க்கஸின் போது எப்படியெல்லாம் பிரமிக்க வைப்பார்கள் என நினைத்திருந் சமயம், ஏதோ ஒன்று கொஞ்சம் கொஞ்சமாக என் அருகில் வந்து நின்றது எம்மாடி!!! ஒட்டகம்.  பாலைவன படங்களில் மட்டுமே பார்த்திருந்த ஒட்டகம். அதைவிட ஆச்சர்யம்.  அந்த ஒட்டகத்தின் காலளவு உயரத்தில்  ஒருபெண் நின்றிருந்தாள்.  என்னைவிட ஒன்று அல்லது இரண்டு வயது குறைவானவளாகத் தெரிந்தாள்.

வெண்மை கலந்த ஊதாநிற கவுன் அணிந்திருந்தாள். அந்த ஆடையின் பெயர் கவுன் என்றே பின்னர்தான் தெரிந்துகொண்டேன்.  எங்கோ பார்த்துப் பழகிய எண்ணம் கொடுக்கும்படியான சாயல். வட்ட முகம் அதற்கேற்ற புலனமைப்பு.  காதோரங்களில் சுருண்டிருக்கும் கூந்தலில் ஒரு பகுதி.  எல்லாம் சேர்ந்து தேவதையாகவே நின்றிருந்தாள்.  கையில் மந்திரக்கோலுக்குப் பதிலாக ஒட்டகத்தின் கடிவாளத்தை வைத்திருந்தாள். என்னையே வைத்த கண் வாங்காமல் பார்த்தாள்.  நானும்  என்னை அறியாமலேயே அந்தத்தேவதையை அருகிலிருந்த மரத்தில் சாய்ந்த வண்ணம் பார்த்துக் கொண்டிருந்தேன். ஒட்டகத்தைக் காட்டி என்னிடம் எதையோ சொன்னாள்.  ஆங்கிலத்தில் எனக்கு தெரிந்தது ஏ. பி. சி மட்டும்தான். ஆனால் அந்த நேரத்தில் நானும் எதையோ சொல்ல அவளும் எதையோ சொன்னாள். நான் சொல்வதை அவள் புரிந்துகொள்கிறாள். ஆனால் என்னால் அவள் சொல்வதைப் புரிந்துகொள்ள முடியவில்லை. திணறினேன். அதெப்படி அமெரிக்காவில் தமிழைக்கூடப் புரிந்துகொள்ளக் கற்றுக்கொடுக்கிறார்கள்.  எங்களுக்கு இங்கே தமிழே குழப்பமாக இருக்கிறது.

எனக்குச் சிரிப்பு வந்தது.  இருவரும் கொஞ்சநேரம் சிரித்தோம்.  இருவர் கண்களிலும் கண்ணீர்.

“என் பேரு மணி, உன் பேரு என்ன…?”

மேலே சுட்டிக்காட்டி, இரண்டு கைகளையும் பறப்பதுபோலக் காட்டினாள்.  ஒருவேளை ஆங்கிலத்தில் ஏதேனும் பறவையின் பெயராக இருக்கலாம் என யூகித்துக்கொண்டேன். குயில், மயில், புறா இதற்கெல்லாம் ஆங்கிலத்தில் பெயர் தெரியாதது அப்போதுதான் உறைத்தது. யாரோ அழைப்பது போலிருக்க ஏதோ சொல்லிவிட்டு ஒட்டகத்துடன் நடக்க ஆரம்பித்தாள். போகும்போது அவ்வப்போது திரும்பி என்னைப் பார்த்துச்  சிரித்தாள்.

அன்று அவளின் நினைவாகவே இருந்தேன். அவள் பெண்ணல்ல.  குட்டித் தேவதை. நடமாடும் தேவதை.  எனக்கு ஏற்ற ஜோடியாகவே கற்பனை செய்துகொண்டேன்.  நாளையும் அவளைச் சந்திக்கவேண்டும். எப்படியும் அடுத்தமுறை புரியும்படி நாலு வார்த்தைகளையாவது ஆங்கிலத்தில் பேசுவது என மனதில் உறுதிகொண்டேன்.  அகராதியில் பறவைகளின் பெயர்களை ஒவ்வொன்றாகப் பார்த்தேன்.  எதையும் சரியாக உச்சரிக்கத் தெரியவில்லை.  எந்தப் பெயரை அவளுக்கு வைத்திருப்பார்கள்.  (ஆனால் வெகுவருடங்களுக்குப் பிறகு, அவர்களிடையே பறவையின் பெயரை வைத்துக்கொள்ளும் வழக்கமில்லை என்று தெரிந்து கொண்டேன்.) அதெப்படி மிகச்சரியாக வானில் வட்டமிடும் பறவையின் பெயரை வைத்துவிட்டார்கள் என்று சிந்திக்கலானேன். யார் கண்டது ஒருவேளை பிறக்கும்போது சிறகுகள் இருந்திருக்கலாம். அவர்கள் அமெரிக்கர்கள்.  அகராதியை பார்த்தது போதும் இப்போது  ஆர்வத்தில் ஆங்கிலப் பாடநூலை எடுத்துத் திறந்து,  வழக்கம்போல படங்களை ஒன்றன் பின் ஒன்றாகப் பார்க்க ஆரம்பித்து தூங்கிவிட்டேன்.

மறுநாள் பள்ளியில், சர்க்கஸ்சுக்குச் சென்றிருந்தவர்களிடம் அந்தப்பெண் குறித்து விசாரித்தேன்.  யாருக்கும் அப்படி ஒருத்தி சர்க்கஸில் இருந்தது தெரியவில்லை.  ஒருவேளை சர்க்கஸ்காரரின் மகளாக இருக்கலாம்.  அவள் குறித்து வேறு யாருக்கும் தெரிந்திருக்கவில்லை.  நான் மிகையாக வர்ணித்ததால் கூட நண்பர்களால் அவளை அடையாளம் காண முடியாமல் இருக்கலாம் எனப் புரிந்தது.  அது கூட நல்லதுதான், எனக்குப் போட்டியாக யாரும் இருக்க போறதில்லை.

மறுநாள் அதே இடத்துக்கு பள்ளிச்சீருடையுடன் சென்றேன்.  ஒட்டகத்துடன் அவள் வந்தாள். முதல் நாள் பார்த்தது போலவே கவுன் அணிந்திருந்தாள்.  ஒரே சாயலில் எத்தனை கவுன்கள் வைத்திருக்கிறார்கள் இந்த வெள்ளைக்காரர்கள்.  மெல்ல மிதந்தாளா இல்லை நடக்கிறாளா என்றே தெரியவில்லை.  ஒட்டகத்துக்கு எதையோ தின்னக் கொடுத்துக்கொண்டே என்னிடம் சிரிக்க சிரிக்கப் பேசினாள்.  பேசினாள் என்றால் நான் பேசப்பேச அவள் சைகைகளால் பதில் சொல்லிக் கொண்டிருந்தாள்.   அவளோடு இருப்பது  இயல்பாகவே எனக்குச் சிரிப்பை வரவழைத்தது. சிரிப்புகளுக்கு இடையில்  நாங்கள் பேசியும் கைகளை அசைத்தும்,  சர்க்கஸ்சில் இருந்து எல்லாவற்றையுமே பேசிக்கொண்டோம்.

அவளிடம் ஏதோ இருந்தது.  அழகாக இருந்தாள்.  எப்போதும் ஒட்டகத்துடன் இருந்தாள். பேசிகொண்டிருக்கும்போது யாராவது அழைப்பார்கள்,  திரும்பித்திரும்பிப் பார்த்துக்கொண்டே போவாள்.  எதைப் பேசினாலும் புரிந்துகொள்கிறாள்.  அவளின் சைகைகளும்  எனக்கு ஓரளவு புரியும்படி இருந்தது.

சர்க்கஸை இதுவரை நான் பார்த்ததில்லை என்று அவளுக்குத் தெரிந்தது.  உடனே கூடாரத்துக்குச் சென்று ஒரு நுழைவுச்சீட்டைக் கொண்டுவந்து கொடுத்தாள்.  அடுத்தவாரம் வருவதற்கான ஏற்பாடுகளை செய்துவிட்டு வருகிறேன் என்று  சொல்லிச் சிரித்தேன். வகுப்பில் நண்பர்களிடம் அதை காட்டிப் பெருமைப்பட்டுக்கொண்டேன்.  இம்மாதிரி டிக்கட்டுகள் அவர்களுக்கு கிடைக்கவில்லை என்றார்கள்.  இது ஏதோ முன் வரிசைக்கான அழைப்பிதழ் மாதிரி இருப்பதைச் சொல்லி ஏன் தனக்கு வாங்கிவரவில்லை என்று சிலர் என்னிடம் சண்டை போட்டுக்கொண்டார்கள்.  அவர்களுக்கும் முன் வரிசைக்கான அழைப்பிதழை வாங்கி வந்தால் மட்டுமே நட்பு தொடரும் எனச் சொல்லிவிட்டார்கள்.  முதலில் வருத்தமாக இருந்தது.  ஆனால் பிறகு அவளோடு அமெரிக்கா சென்றுவிடலாம் என முடிவெடுத்த பிறகு, நானும் அவர்களுடன் பேசுவதைத் தவிர்த்தேன்

சிலநாட்களுக்குப் பிறகு, இன்னும் ஒருவாரம் மட்டுமே அந்த சர்க்கஸ் இருக்கும் என்று பள்ளியில் பேசிக்கொண்டார்கள். தனியே செல்ல வீட்டில் அனுமதி கிடைக்காததால் எனக்கு என்ன செய்வது என தெரியவில்லை .  சர்க்கஸ்சுக்குச் செல்ல முடியாவிட்டாலும் சரி அவளையாவது பார்க்கலாம் என சிலநாட்கள் முயற்சித்தும் பார்க்க முடியவில்லை. ஒட்டகம் மட்டும் தூரத்தில் தெரிந்தது.  கூடாரத்தில் இருந்து நிழல்களின் அசைவு தெரிந்தாலும் ஆட்கள் யாரும் தெரியவில்லை.  என்னை அமெரிக்கா கூட்டிப்போகும் தேவதையையும் காணவில்லை.

ஒருவாரம் ஆன பின்னால், சர்க்கஸ் முடிந்துவிட்ட நிலையிலும் வெள்ளைக்காரர்கள் அந்தத் திடலிலேயே இருந்தார்கள். நானும் விடாது எப்படியாவது அவளைப்பார்க்க முயன்றுகொண்டே இருந்தேன்.  ஒருநாள் அந்த வெள்ளைக்காரர்களிடையே ஏதோ சச்சரவு. ஆளுக்கு ஆள் கத்திகொண்டு ஒருவரையொருவர் தள்ளிவிட்டுக்கொண்டு அடித்துக்கொண்டார்கள். காவல்துறையினர் வந்து நிலைமையை சரி செய்தார்கள்.

பின்னர்தான் எங்களுக்கு விபரம் தெரிந்தது.  சர்க்கஸ்சில் தகுந்த லாபம் கிடைக்காத காரணத்தாலும் வேறு ஏதோ பிரச்சனையாலும் சர்க்கஸ்சை ஏற்பாடு செய்த நிர்வாகம் முக்கிய மிருகங்களையும் சிலரையும் மட்டுமே அழைத்துச்சென்று விட்டார்களாம்.  இப்போது இருப்பவர்களிடம் பணமும் இல்லை பாஸ்போர்ட்டும் இல்லை.  என்ன செய்வதென்று பேச்சு ஆரம்பித்த பிறகுதான் அவர்களுக்குள்ளாக சண்டை வந்திருக்கிறது.

அடுத்த வாரத்தில், எங்கள் வீடுகள் இருக்கும் வட்டாரத்தில் அந்த வெள்ளைக்காரர்கள் வந்தார்கள்.  அவர்களுடன் இரண்டு ஒட்டகங்கள்.  மூன்று கழுதைகள் மற்றும் சில பெரிய இனக் கிளிகள் இருந்தன.

கழுதைகள் மீதும் ஒட்டகங்கள் மீதும் ஏறி சில சுற்றுகள் வந்து அதற்கேற்ற கட்டணம் கட்ட வேண்டும்.  கடந்த மாதம் சர்க்கஸ் கூடாரத்தில் கம்பீர உடையுடன் இருந்தவர்களில் சிலர் இப்போது பனியன் மற்றும் அரைக்கால் சட்டையுடன் நொந்தும் வெந்தும் கழுதையுடன் சுற்றிக்கொண்டிருந்தார்கள். இதன் மூலம் கிடைத்த பணத்தில்தான் சாப்பிட்டு வந்தார்கள்.  ஒரு நாள் வழக்கத்துக்கு மாறாகக் காவல் நிலையத்தினர் வந்திருந்தார்கள்.

கொலைச்சம்பவம் நடந்திருப்பதாக வீட்டுக்கு வந்திருந்த வாயாடி அக்கா சொல்லிகொண்டிருந்தாள்.  அப்பாதான் சிலருடன் சென்று பார்த்து வந்திருந்தார்.  எனக்கு என்ன நடக்கிறது என தெரிந்துகொள்ள ஆவலாக இருந்தது. ஆனால், வீட்டில் அது குறித்து பேசக்கூடாதென்று சொல்லிவிட்டார்கள்.  அதோடு அந்த சர்க்கஸ் நடந்த இடத்துக்கு இனியும் நான் போகக்கூடாதென்று கட்டளையிட்டார்கள்.

பள்ளியில் உண்மைக்கதையைப் பேசினார்கள்.  சர்க்கஸ் நல்லபடியாக நடக்கவேண்டும் என்பதற்காக ஏதோ சிறுமியை பலி கொடுத்தார்களாம்.  எதிர்பார்த்தபடி லாபமும் கிடைத்ததாம்.  ஆனால் எப்படியோ விசயம் கொஞ்சம் கொஞ்சமாக யார் மூலமாகவே வெளிவர ஆரம்பித்ததும், சம்பந்தபட்டவர்கள் கிளம்பிவிட்டார்கள்.  அப்பாவி வேலையாட்கள் மாட்டிகொண்டார்களாம்.

பலி கொடுக்கப்பட்ட பெண்ணின் அடையாளத்தை பள்ளியில் சில மாணவர்கள் சொல்லச்சொல்ல, அது அவளாகவே எனக்கு தெரிந்தது.  ஆனால் சர்க்கஸ் தொடங்கும் முன்னமே பலி கொடுத்ததாக சொல்கிறார்கள். எனவே  அது அவளாக இருக்காது என்றே இன்னமும் நம்பிக்கொண்டிருக்கிறேன்.   இவளைப் பலி கொடுத்திருந்தால் எப்படி இத்தனை நாட்களாக என்னிடம் பேசியிருக்க முடியும்.  நுழைவுச்சீட்டு என் கைக்கு எப்படி வந்திருக்க முடியும்.  அதன்பின் பார்க்கும்  வெள்ளைக்காரப் பெண்களில் எல்லாம் அவள் தெரிந்தாள்.  ஆனால் அவள் மீது வந்திருந்த ஈர்ப்பு அப்படியே உறைந்துவிட்டதாய் உணர்ந்தேன்.

ஏனோ காலப்போக்கில் அவளின் நினைவுகளே இல்லாமல் போனது.  இப்போது கையில் வைத்திருக்கும் இந்த நுழைவுச்சீட்டு வெகுநாட்களுக்குப் பாதுகாப்பாக இருக்கப்போவதில்லை என்றாலும் அவளைப்பற்றி  எழுதிவிட்டதால் இனி என்னாளும் அவளை நான் மறக்க முடியாது.  கையில் வைத்திருந்த நுழைவுச்சீட்டை இன்னொருமுறை உன்னிப்பாகப் பார்த்துவிட்டு கசக்கி வீச மனமின்றி  மீண்டும் குறிப்புப் புத்தகத்திலேயே வைத்தேன்.

 

1 comment for “நீயின்றி அமையாது உலகு – 4

  1. Rajam
    May 4, 2016 at 4:55 pm

    தயாஜி அவர்களே..
    பொம்மி ஒரு புறமிருக்க…..
    இதுவும் அருமைதான்..

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...