“எனது பணி முழுக்க, எனது வாழ்வு முழுக்க அனைத்தும் இருத்தல் தொடர்பானவை. எனது எழுத்து முழுக்க, “ நீங்கள் பல தோல்விகளை எதிர்கொள்ள நேரிடலாம். ஆனால் தோற்றுவிடக் கூடாது”, என்பதைத்தான் எனது எழுத்துகள் சொல்கிறது.
-மாயா ஏஞ்சலோ-
மே 28, 2014 அன்று -மாயா ஏஞ்சலோவின் மரணம் நிகழ்ந்தது. அவரது மரணம்தான் மாயா ஏஞ்சலோவை எனக்கு அறிமுகம் செய்தது. அவரின் மரணத்திற்குப் பிறகு உலகம் அவரைத் தொடர்ந்து பல நாட்களுக்குப் போற்றியபடியே இருந்தது.
உனது சொற்களால் என்னைச் சுட்டு வீழ்த்தலாம்
உனது கண்களால் என்னை வெட்டிவிடலாம்
உனது வெறுப்பால் என்னைக் கொன்றுபோடலாம்
ஆனால் இருந்தும், காற்றைப்போல், நான் எழுவேன்
கருப்பினக் கவிதைகளுக்கே உரிய வீரியத்தன்மை சற்று அதிகமாகவே உள்ள கவிதைகள் மாயா ஏஞ்சலோவிற்குத் தனித்த அடையாளத்தைக் தருகின்றது. மறைப்பதற்கு ஏதுமின்றி மிக வெளிப்படையாகப் பேசும் கவிதைகள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் ஒடுக்கப்படும் மக்களின் மீட்சிக்கான உத்வேகத்தைத் தந்து கொண்டே இருக்கும்.
இளம்வயதிலேயே பெற்றோரால் கைவிடப்பட்ட இவர், தனது எட்டு வயதில் தாயாரின் காதலனால் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட அதிர்ச்சியில் பேசும் திறனிழந்து எண்ணிப்பார்க்க முடியாத துன்பங்களை அனுபவித்தவர். மிக இளம்வயதிலேயே தன் சொந்தவாழ்வில் எல்லாவிதமான கொடுமைகளையும் அனுபவித்த இவர் தன்னை, தன் சுயத்தை, தனது சொற்களால் மீட்டெடுத்தார். இனவெறிக்கு எதிராகத் தனது வாழ்நாள் முழுக்கப் போராடியுள்ள இவர், அமெரிக்காவின் பெண்கள் உரிமைகள் மற்றும் மனித உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்துள்ளார்.
புயலே, ஊதித் தள்ளிவிடு என்னை இங்கிருந்து
உன் மூர்க்கமான காற்றினால்
மிதக்கவிடு என்னை வானத்தில்
மீண்டும் எனக்கு ஓய்வு கிடைக்கும் வரை…
வாழ்தலுக்காக வாழ்நாள் முழுக்கப் போராடுதல் என்பது எவ்வளவு கொடுமையானது. மாயா ஏஞ்சலோவின் கவிதைகள் பஞ்சத்தில், பசியில், வேதனையில், கண்ணீரில் எழுதப்பட்டது. ஒவ்வொரு சொல்லும், ஒவ்வொரு வரியும், அவர் வாழ்ந்து அனுபவித்த வாழ்வின் வலியை, வேதனையைப் பேசுவதாக இருக்கிறது. அந்த வலி அவரை அந்த வலியிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு வெளிவரத் தூண்டிக் கொண்டே இருக்கிறது. அந்த வலி இயற்கையையும் தன்னைத் துணைக்கழைக்கத் தூண்டுகிறது.
எனக்குக் குழந்தைகள் இருக்கிறார்கள்; பராமரிக்க…
துணிகள் இருக்கின்றன; தைக்க…
தரை கிடக்கிறது; துடைக்க…
தோட்டம் அழைக்கிறது; குப்பைகளை அகற்ற…
உடைகள் காத்திருக்கின்றன; இஸ்திரி போட…
ஒரு கவிஞராகவும் எழுத்தாளராகவும் தனக்கான அங்கீகாரத்தையும் அடையாளத்தையும் பெறும்முன் சமையல்காரர், பாலியல் தொழிலாளி, இரவு விடுதிகளில் நடனம் ஆடுதல் போன்ற பல வேலைகளை பார்த்திருக்கிறார் மாயா. இப்படியான வேலைகள் பார்த்த ஒருவர் எப்படி உலகம் போற்றும் ஓர் இலக்கிய படைப்பாளர் ஆனார் என்பதே நாம் இங்கு கருத்தில் கொள்ள வேண்டிய விடயமாகும். எண்ணிலடங்கா வேலைகளுக்கு நடுவே அவர் படைத்த படைப்புகள் எந்தவோர் ஒளிவு மறைவுமின்றி உண்மையைப் பேசின. அந்த உண்மைதான் மாயா ஏஞ்சலோவைப் பார் போற்றும் படைப்பாளி ஆக்கியது.
எங்கே இருக்கிறது எனது ரகசியம் என்று
கவர்ச்சிகரமான பெண்கள் அதிசயிக்கிறார்கள்
ஆனால் அவர்களிடம் சொல்லத் துவங்கும்போது
பொய்களைச் சொல்வதாக நினைக்கிறார்கள்
நான் சொல்கிறேன்,
அது எனது கைக்கெட்டும் தூரத்தில் உள்ளது
’கூண்டுப் பறவை ஏன் பாடுகிறது’ என்ற தனது சுயசரிதையின் மூலம் மாயா ஏஞ்சலோ ஒடுக்கப்பட்ட கருப்பினப் பெண்களின் அடையாளமாக உருவெடுத்தார். தனது தனித்துவத்தை, தனது இரகசியத்தை தனது வலிகளால் கண்டெடுத்தார். “கூண்டுப் பறவை ஏன் பாடுகிறது என்று எனக்குத் தெரியும்” என்ற நூலின் முதல் பாகம் அமெரிக்க-ஆப்பிரிக்க பெண்ணின் தனிப்பட்ட வாழ்க்கையை, அதன் குரூரங்களைப் பேசிய முதல் புத்தகமாகச் சித்தரிக்கப்படுகிறது. இனவெறியால் ஒடுக்கப்பட்ட ஒரு வாழ்க்கையை இலக்கியமும் மன உறுதியும் எப்படி மீட்டெடுத்தன என்பதை இந்நூல் பேசுகிறது.
என்மேல் மிளிர்வாய் பிரகாச சூரியனே!
என்மேல் விழுவாய் மென்மையின் பனித்துளியே…
என்னை உன் வெண்குளிர் முத்தங்களால் மூடு…
இன்றிரவு மட்டும் என்னை ஓய்வெடுக்க விடு…
கறுப்பின இலக்கியத்தின் எழுச்சியாகவும் கறுப்பினப் பெண்ணிய இலக்கியத்தின் முன்னோடியாகவும் மாயா ஏஞ்சலோவின் படைப்புகள் திகழ்ந்தன. மாயா ஏஞ்சலோவின் படைப்புகள் அவர்மீது பிரகாச சூரியனை மிளிரச் செய்தது. அந்த பிரகாசம் அவரை நிரந்தரமாக ஓய்வெடுக்கவும் செய்திருக்கிறது. ஆனால், யாரையும் ஓய்வெடுக்கவிடாமல் ஏஞ்சலோவின் வாழ்க்கையும் படைப்புகளும் உலகெங்கும் ஒடுக்கப்படும் மனிதர்களின் வாழ்விற்கான வெளிச்சத்திற்கு ஓர் உத்வேகத்தைத் தந்துக் கொண்டே இருக்கும்.