கவிதை என்பது…
கவிதை என்பது
தற்கொலைக்கு முன்பான
ஓர் அந்தரங்கக் கடிதம்
கவிதை என்பது
யாருக்கும் புரியாத
கண்ணியமான கண்ணீர்
கவிதை என்பது
தோல்விகளை மூடிமறைக்கும்
தற்காலிக மேகமூட்டம்
கவிதை என்பது
ரத்தம் வடியாதிருக்க
தோலில் இட்டுக்கொள்ளும் ரணமான தையல்
கவிதை என்பது
மௌனம் போல இருக்கும் பேரிரைச்சல்
புன்னகை போல இருக்கும் பேரழுகை
***
அதிசயக் கல்
மாயா புவியீர்ப்புக்கு எதிரான
கல் ஒன்றை வைத்திருந்தாள்
வியர்வை, மலம், மூத்திரம்
அனைத்தும் இனி
மேல் நோக்கியே நகருமென
குதூகலத்துடன் பரிசளித்தாள்
சட்டைப்பையில் வைத்துக்கொண்ட நான்
அன்றிரவு அழத்தொடங்கினேன்
ஆச்சரியமாக கீழே சிந்தும் கண்ணீரைப் பார்த்தபடி
அவள் கண்ணீர் என்பது கழிவல்ல என்றாள்.
***
இந்த இரவு
விளித்திருந்த அந்த இரவில்
யாரோ இருவர் கோபத்தை மென்றுகொண்டு
மூச்சையடக்கி உரையாடுவது கேட்டது
மூன்று வினாடிக்கு ஒருதரம் எழும்
இரவுப்பறவை
பசியில் ஓலமிடுவது கேட்டது
இறப்பதற்கு முன்பாக யாருக்கோ தகவல் சொல்லும்
ஒரு பூச்சியின் ஓலம்
பல்லியின் வாயிலிருந்து கேட்டது
கூடுதிரும்பாத துணையை எண்ணிக்கொண்டு
விழித்திருக்கும்
புறாவின் அதிர்வு கேட்டது
புணர்ச்சியில் தீவிரமாகியிருக்கும்
இரு நாய்களின் வாய்வழி சுவாசச் சத்தம் கேட்டது
நிமிடத்திற்கொருதரம்
என்னை உச்சரிக்கும்
உன் பிடிவாதமான
மௌனத்தின் ஒலி கேட்டது
கவிதை சொல்லும் யுக்தி அருமை வாழ்த்துக்கள் நவீன்
அருமை