ஜின்ஜாஹோ என்பது அவனது பெயரல்ல. கூப்பிடும் பெயர். அவனது உண்மையான பெயர் யாருக்கும் தெரியாது. அவனை நிற்கவைத்து உண்மையான பெயரைக் கேட்டால்கூட ஜின்ஜாஹோ என்றுதான் பதில் வரும். அடையாளக் கார்டு இல்லை. அது அவனுக்கு எந்தவிதத்திலும் தேவைப்படவில்லை.
ஜின்ஜாஹோ தலைநகர் குடிவாசி அல்ல. எப்போது இங்கு வந்து சேர்ந்தான் என்றுகூட துல்லியமாய்ச் சொல்ல இயலாது. ஆனால் இப்போது தலைநகர் சந்துபொந்துகளிலும் நகர் மையங்களிலும் வசிக்கும் குடிவாசிகளுக்கும் வியாபாரிகளுக்கும் ஜின்ஜாஹோ மிகவும் பரிச்சயம்.
சொட்டையான முன்மண்டை, வேண்மையும் கருமையும் கலந்த, தோள்வரை தொடும் முடி. புருவங்களும் கண்களும் சிறியவை. சப்பை மூக்கு. கன்னத்தில் ஓர் அறை அறைந்தால் சட்டென சிவப்பைக் காட்டும் மஞ்சள் நிறத்தோல். தொப்பையில்லாத வயிறு. முடிகளே இல்லாத கைகள், கால்கள். வெடிப்புற்றுச் சாம்பல் நிறத்திற்கு மாறின குதிகால்கள். இப்பவோ எப்பவோ அறும் நிலையிலுள்ள செருப்பு. குண்டுபோட்டுச் சிதிலமடைந்த மாதிரி சட்டை. இடதுகால் தொடையைக் காட்டும் கால்சட்டை. உட்காரும் விதம் பொறுத்து குண்டிகளும் தெரிய வரும். வளர்ந்த கைகால் நகங்களுக்குள் கருமைகள், வலது கரத்தின் ஐந்து விரல்களிலும் தடிமனான மோதிரங்கள். கருஞ்சிவப்பு, கரும்பச்சை, வெளீர் வெண்மை, கருநீலம் மற்றும் கருங்கருப்பு. கழுத்தில் விதவிதமான வர்ணங்களில் மந்திர மாலைகள் ஒன்றன்பின் ஒன்றாகக் காட்சியளிக்கும்.
இதுமட்டுமல்ல ஜின்ஜாஹோ . அவனோடு என்றும் விட்டுப்பிரியாத ஒன்றுண்டு. இழுவை வண்டி. சின்னஞ்சிறிய நெகிழிப்பூக்களால் கோர்வையாய் அதன் இரும்புத் தண்டுகளிலெங்கும் ஒட்டப்பட்ட மாதிரி இருந்தன. பூக்கள் யாவும் பல வண்ணங்களில் இருந்ததால் காண்போரை ஈர்த்தன. வண்டியின் முற்பகுதியில் ஒரு பெரிய கருப்பு நெகிழியும் பிற்பகுதியில் ஒரு பெரிய கருப்பு நெகிழியும் ஒரு முனை மாத்திரம் வண்டியின் கைப்பிடியோடு கட்டப்பட்டிருந்தன. வண்டியின் அடிப்பாகத்தில் சுமைதாங்கி போன்ற நான்கு இரும்புகளாலான பகுதி. ஒவ்வொரு இரும்புச் சட்டத்திலும் சிவப்பு நெகிழிகளால் பலமுறை சுற்றி இறுக்கிக் கட்டப்பட்டிருந்தது. வெண்நூலைக் கொண்டு மீன் வடிவத்தில் நான்கு சட்டத்திலும் பின்னப்பட்டிருந்தது. வண்டியை இழுத்துச் செல்லும்போது உற்றுப்பார்த்தால் மட்டுமே அதனழகுத் தோற்றம் தெரியும்.
இரட்டைக் கோபுரத்தைத் தாண்டினால் அதன்பக்கமே சீனக்கோவில் ஒன்றிருக்கும். இரு கரங்களையும் கோர்த்து மேலும் கீழுமாக அசைத்தசைத்து கும்பிடு போட்டு அதனோரமாய் நடந்து உட்செல்லும்போது உணவருந்தும் இடம் வரும். நீள்மேசைகளும் நீள் இருக்கைகளும் இருக்கும். ஜின்ஜாஹோ தன் இழுவை வண்டியைத் தன் பார்வைக்குத் தப்பாதிருக்கும் ஒரு மூலையில் இருத்தினான். அதன் மேற்சுவர்க் கடிகாரம் ஏழு பத்து எனக்காட்டியது. காலைப்பொழுது. அவனுக்கு முன்பாகவே பத்துப்பன்னிரெண்டு பேர் ஆணும் பெண்ணுமாக உணவை எடுப்பதற்கு வரிசை பிடித்து நின்றுகொண்டிருந்தனர். இவன்முறை வந்ததும் தட்டை எடுத்து பெரட்டல் சோற்றை அள்ளிப்போட்டு நகர்ந்து இரண்டு சாப்பாட்டுக் குச்சிகளை எடுத்துக்கொண்டு ஒரு மேசையின்மீது வைத்தான். மீண்டும் திரும்பி தயார் நிலையில் இருந்த மொச்சைப்பயிறு கஞ்சியின் வட்ட மங்கையெடுத்து தன் இருக்கையில் அமர்ந்துகொண்டான். உணவுத்தட்டை வாயருகே ஏந்தியபடி இருகுச்சிகளை விரல்களில் பிடித்துக்கொண்டு சோற்றை வாய்க்குள் லாவகமாகத் தள்ளினான். ஒருபக்க வாய் சோற்றால் நிரம்பியதும் தள்ளுவதை நிறுத்திவிட்டு மென்று விழுங்கினான். நேரம் போகிறதே என்றெண்ணி தான் உண்ணுவதில் அவசரம் காட்டினான். அதே அவசரம் கஞ்சி குடிக்கும்போதும் இருந்தது. உணவுத்தட்டையும் மங்கையும் கழுவி கவிழ்த்து வைத்து இழுவை வண்டியோடு வெளியேறினான்.
கோவிலின் பின்வாசலுக்குச் சென்று குப்பைத் தொட்டியைத் திறந்து கிளறினான். மூன்று கலன்கள் கிடைத்தன. ஒன்றன்பின் ஒன்றாக காலின்கீழ் போட்டு ஓங்கி மிதித்து, அதைத் தன் வண்டியில் கட்டியிருந்த பையில் போட்டான். அப்படியே ஒவ்வொரு குறுக்குத் தெருவிற்கும் சென்றான். நடையில் ஒரு வேகம். குப்பைத்தொட்டிகளைக் கிளறுவதில் ஒரு பொறுமை. மறுபடியும் குப்பைத் தொட்டியை மூடுவதில் ஓர் அக்கறை. ஒரு காலை இழுத்திழுத்து நடந்தான்.
புக்கிட் பிந்தாங் ஜாலான் ஈனாய் சமிக்ஞை விளக்குப் பகுதிக்கு வந்தடைந்ததுமே செருப்பு பிய்ந்து விட்டது. செருப்பைக் கையில் எடுத்து கெட்ட வார்த்தைகளைச் சொல்லி தரையில் அடித்து அடித்து குப்பைட் தொட்டியில் வீசினான். வெறுங்காலோடு அங்குள்ள தெருவையெல்லாம் ஒரு சுற்று சுற்றிவிட்டு ‘கென்ச்சாரா சூப் கிட்ச்சன்’ இலவச உணவு வழங்கும் இடத்திற்கு வந்துசேர்ந்தான். ஓர் உணவுப்பொட்டலம், ஒரு பழம் மற்றும் கனிம நீரின் நெகிழிக்குப்பி.
எதிர்புறமாய் இருந்த பலகைகளாலான இருக்கைகளில் ஒன்றின் மேலமர்ந்து பொட்டலத்தைப் பிரித்துச் சாப்பிட்டான். எல்லாவற்றையும் உண்டபின் நீரையும் குடித்து முடித்தான். பலகை இருக்கையில் மல்லாக்கப் படுத்துக்கொண்டான். இழுவை வண்டியின் பிடி அவன் கால்களின் இடுக்கிலிருந்தது. வெய்யிலும் அடித்தது. காற்றும் அடித்தது. அங்கிருந்த மரங்களின் சிறுசிறு மஞ்சள் பூக்கள் அவன் மீது உதிர்ந்தன. மஞ்சள்நிற சின்னஞ்சிறிய வண்ணத்துப் பூச்சிகளும் அவனை வட்டமடித்தன. எங்கிருந்தோ வந்த அணில் ஒன்று அவன் கீழே போட்ட பழத்தின் மீதியை உருட்டிப்பார்த்து ஓடியது. மீண்டும் வந்து அவன் வண்டியின் மீது ஏறி அவனை மேலும் கீழுமாகப் பார்த்து ஓடி மறைந்தது.
அரைமணி நேரம்தான் அவனுடைய தூக்கம். எழுந்து கொன்டான். கைகளையும் கால்களையும் உதறி ஒரு குதி குதித்துவிட்டு இழுவை வண்டியை இழுத்துக்கொண்டு நடந்தான். ஜாலான் லோக் யூ பகுதிக்குள் நுழைந்தான்.
சீன மரத்தடி உணவுக்கடைகளும் பெரிய காற்றாடிகளைச் சுழலவிட்டபடியிருக்கும் உணவகங்களும் இங்கு மூலைக்கு மூலை இருந்தன. இவனைப் பார்க்கும் கடைக்காரர்கள், “ஜின்ஜாஹோ… லாய் லாய் லாய்” எனக்கூப்பிட்டு ஒரு பக்கமாய் கட்டப்பட்ட குளிர்ந்திருந்த தேநீர் நெகிழிப்பையைக் கொடுத்தனர். அவன் கொஞ்சமாய் குடித்துவிட்டு இழுவை வண்டியின் பிடியில் மாட்டிக்கொண்டான். சீன மளிகைக்கடைக்காரி இவனை அழைத்துக் கூப்பிட்டு அட்டைப்பெட்டிகளைக் கைகாட்டினாள். அவை அடுக்கடுக்காகவும் அங்குமிங்கும் சிதறிக்கிடந்தன. இவனுக்கு உற்சாகம். “ஜின்ஜாஹோ, ஜின்ஜாஹோ” என்றபடி சுறுசுறுப்பானான். அட்டைப்பெட்டிகளை ஒவ்வொன்றாகப் பிரித்தெடுத்துத் தட்டையாக்கினான். தன் வண்டியின் முன்புற நெகிழிப்பையை எடுத்துக் கீழேவைத்து அட்டைகளை அடுக்கினான். அவை வண்டியின் பிடி உயரத்துக்கு வந்தன. தடிமனான கொக்கிக் கயிறைக்கொண்டு கட்டினான். கீழே வைத்த நெகிழிப்பையைப் பின்புறப் பிடியில் இடது மூலையில் கட்டினான். தேநீரைக் குடித்து முடித்து ‘ஜின்ஜாஹோ, ஜின்ஜாஹோ’ என அரற்றிக்கொண்டே வேகமாக நடந்தான்.
எதிரில் தென்பட்டவர்கள் அவன் பெயரைச் சொல்லிக் கூப்பிட பதிலுக்கு இவன் “ஹூவா, ஹூவா” என்றபடி கடந்துபோனான். நெருக்கடி கொண்ட கட்டிடங்களுக்குக் கீழே வாகனங்களும் மிகுந்து நெருக்கடியை உருவாக்கின. அவரவர் பொறுமையின்றி சகிப்புத்தன்மையின்றி சைகைகளாலும் வார்த்தைகளாலும் ஒருவருக்கொருவர் தூஷித்துக்கொண்டனர். தெருநாய்கள் கழுத்தில் பட்டையின்றி கேட்பாரற்று கவனிப்பாரின்றி சொறிசிரங்குகளாலும் காயங்களாலும் அவதியோடு அலைந்து திரிந்தன. கால்வாய்கள் புழுத்த வாடையை வெளியேற்றின. எலிகலும் கரப்பான்பூச்சிகளும் கால்களைத் தொட்டுப்போன இடத்தில்தான் ஒட்டுக்கடை உணவைச் சுவைத்துக் கொண்டிருந்தனர்.
பழைய இரும்புக்கடைக்கு வந்தடைந்ததும் தன்னிடமுள்ள எல்லாவிதமான பொருட்களையும் தனித்தனியாய் வகையைப் பொறுத்து பிரித்து வைத்தான். கடைவேலையாள் நிறுவைத்தராசில் வைத்து தரம் பிரித்து ஒவ்வொன்றுக்கும் கணக்கு எழுதினான். கணக்கை மொத்தமாய் கூட்டி வந்த தொகையை பணமாய் கொடுத்தான். பணத்தை வாங்கும்போது ‘ஜின்ஜாஹோ’ என்றான். பதிலுக்கு வேலையாளும் சிரித்துக்கொண்டே ‘ஜின்ஜாஹோ’ என்றான்.
காலியான நெகிழிப்பையை பழையபடி வண்டியில் கட்டி அவ்விடத்தை விட்டு அகன்றான். மேம்பாலத்தின் கீழ் பாதையைக் கடந்துபோய் மலிவுவிலை அடுக்குமாடிக் குடியிருப்பை அடைந்தான். ஒத்தையடிப்பாதையின் நடுவே சிறிய சீனக்கோவில். எல்லாவிதமான தெய்வ்வங்களும் தேவதைகளும் சிலைகளாய் வீற்றிருந்தன. அதன் வாசலுக்கு வந்து மூன்று ஊதுபத்திகளைக் கொளுத்தி மேலும் கீழுமாக, கீழும் மேலுமாக அசைத்து ‘ஜின்ஜாஹோ, ஜின்ஜாஹோ’ எனச்சொல்லி வலதுபுறம் இருந்த உயரமான ஜாடியில் செருகினான். தன்னிடமிருந்த பணத்தில் ஒற்றைத் தாளை உருவி முன்னாலிருந்த உண்டியலில் போட்டான். திரும்பி கொஞ்சம் தள்ளியிருந்த பாறாங்கல் போன்ற கல்லின் மேல் உட்கார்ந்து பணத்தை ஒவ்வொன்றாய் நிதானமாய் இரண்டாய் நாலாய் மடித்துச் சுருட்டினான். இழுவை வண்டியின் அடிப்பாக மேற்புறத்திலிருந்து சிவப்பு நெகிழியை எடுத்து இரண்டாகக் கிழித்தான். சுருட்டப்பட்ட பணத்தை அதில் வைத்து சுருட்டி சுருட்டி மேலும் இறுக்கினான். வண்டியின் பிடியிலிருந்து இரப்பர் வளையம் ஒன்றை எடுத்துக் கட்டியபிறகு வண்டியின் அடிப்பாக மேற்புற மூலையில் திணித்துச் செருகினான். திணித்ஹ்டுச் செருகப்பட்ட பகுதி சின்னதொரு சதுரப் பந்துபோல உப்பிக்கிடந்தது. இழுவை வண்டிக்கு அதுவொரு திருஷ்டிப் பொட்டுபோலக் காட்சியளித்தது.
சன் பெங் வட்டாரத்திற்குள் குப்பைத் தொட்டிகளை கண்ணோட்டமிட்டான். அதன் மூடிகள் திறந்திருந்தன. புரிந்துகொண்டான். திரும்பி புடுராயாவை நோக்கி நடைபோட்டான். அங்கு சேரும்வரை குப்பைத் தொட்டிகளை அசட்டை செய்தான். புடுராயா பேருந்து நிலையத்தின் பின்வாசல் படிகளில் ஏறி கீழ் தளத்திற்கு இறங்கினான். பேருந்துகளின் கரும்புகையும் வெண்புகையும் பெருஞ்சத்தமும் அனற்தகிப்பாய் வெக்கையை உண்டாக்கின. புறப்பட ஆயத்தமாய் இருக்கும் பேருந்துகள். உள்நுழைய வாசலில் வரிசையாய் காத்திருக்கும் பேருந்துகள். எங்கு காணினும் மனித முகங்கள். சந்தோஷ முகங்கள். வாடின முகங்கள். ஆத்திர முகங்கள். வேஷ முகங்கள். பேயறைந்த முகங்கள், திருதிருவென விழிக்கும் முகங்கள்.
தனக்கு வேண்டியதை குப்பைத் தொட்டிகளிலிருந்தும் தரையிலிருந்தும் பொறுக்கி பையில் போட்டுக்கொண்டான். முதல் மாடி, இரண்டாம் மாடி என ஏறி சுற்றித் திரிந்தான். அவனுக்கு வியர்த்தொழுகி அது சட்டையை நனைத்தது. முதுகு நோவெடுத்தது. வலது கரத்தினால் தன் முதுகுப்பக்கத்தைத் தட்டிக்கொண்டான். பயணிகள் காத்திருக்கும் தளத்திற்கு இறங்கி நீள் கல்லிருக்கையில் அமர்ந்துகொண்டான். இழுவை வண்டியைத் தன்முன்னால் இருத்திக்கொண்டு இருகைகளையும் அதன் பிடியில் வைத்து கண்களை மூடினான். கண்கள் சொருகி உறக்கம் பிடித்தது. தலை கொஞ்சம் கொஞ்சமாகக் கீழே சாய்ந்தது. பாதி கீழே சாய்ந்து வலது பக்கமாய் போனது. இன்னும் கீழே சாய்ந்து இடது பக்கமாய் நகர்ந்து ஆடியது இலேசாய். எந்த விநாடியிலும் பொத்தென்று விழக்கூடிய நிலை. கிழிந்த கால்சட்டையிலிருந்து துருத்திக்கொண்டு தெரிந்தது ஆண்குறியும் விதைப்பையும். அவனுக்கு எதிர்புறம் உட்கார்ந்திருந்த சீனச் சிறுவன் தன் தாயிடம் அந்தக் காட்சியைக் காட்டித் தன் ஆள்காட்டி விரலைக் கன்னத்தில் வைத்து “மாலு, மாலு” என்றான். அவன் தாயும் சத்தமில்லாத சிரிப்பை உதிர்த்து அவன் முகத்தைத் தன் மடியில் புதைத்துக் கொண்டாள். ஜின்ஜாஹோவின் பக்கத்திலிருந்த மலாய் முதியவர் ‘விழுந்துவிடப் போகிறான், தட்டி எழுப்பலாமா வேண்டாமா’ என்றெண்ணியபடியே தன் கரத்தை நீட்டியும் எடுத்தும் பெரும் தயக்கத்துடன் அவனைப் பரிதாபமாகப் பார்த்துக் கொண்டிருந்தார். திடுமென அவனுடல் நிமிர்ந்தது. கண்விழித்தான். யாருக்கும் எந்தவொரு தொந்தரவும் கொடுக்காதது போலத் தன் வண்டியை இழுத்துக்கொண்டு சென்றான். அவன் செல்வதைப் பார்த்துக்கொண்டிருந்த மலாய் முதியவர் தன் பொக்கைவாய் திறந்து வாய்விட்டுச் சிரித்தார்.
பெட்டாலிங் ஸ்ட்ரீட் வழியாக பாலியல் தொழிலாளர்களுக்கான விடுதியின் பின்பக்கச் சந்தில் நடந்தான். சீன, மியன்மார், இந்தோனேசியப் பெண்கள் அரைகுறை உடைகளில் கதவருகே நின்றுகொண்டிருந்தனர். ஒருத்தி இவனைக் கூப்பிட்டு பறக்கும் முத்தத்தை சைகையால் செய்து அனுப்பினாள். இவன் தன்னுடைய காவிப்பற்களைக் காட்டி வெட்கப்பட்டுச் சிரித்துக்கொண்டான். உர்பான் சந்திப்புக்கூடல் மையத்திற்குள் நுழைந்தபோது சபா சரவாக் ஆணும் பெண்களுமாக நிறைந்திருந்தனர். எல்லோரும் இளைஞர்கள். அவர்களுக்குள் எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லை. எந்த ஒழுக்க நியதிகளும் இல்லை. அவர்களிடையே உள்ள ஒரே ஒற்றுமை, காலணிக்குப் போடும் பசையை நெகிழியிலிட்டு வாயில் வைத்து இழுப்பது. இதில் எப்போது வேண்டுமானாலும் குழந்தையைப் பெற்றெடுக்கும் தருவாயிலுள்ள ஒரு கர்ப்பிணிப்பெண்ணும் அடக்கம். இவர்களைப் பார்த்ததும் ஜின்ஜாஹோவிற்கு முகச்சுளிப்பு உண்டானது. சந்தடியில்லாமல் வெளியேறினான்.
கோர்ட்டுமலைப் பிள்ளையார் கோவிலை எட்டிப்பார்த்தான். மரத்தடியில் சீனர் கூட்டம். ‘ஜின்ஜாஹோ’ என்று சொல்லிக்கொண்டே போய் சேரவும் கூட்டம் வரிசை பிடிக்க முனையவும் சரியாக இருந்தது. நடுத்தர வயதுடைய சீனரின் தோற்றத்தில் செல்வச்செழிப்பு தெரிந்தது. வெள்ளை ஜிப்பா அணிந்திருந்தார். நெற்றியில் திருநீற்றுப் பட்டை. உணவுப் பொட்டலத்தில் கரண்டியால் சோற்றை அள்ளி வைத்தார். அடுத்து அவர் மனைவி. கூந்தலில்லாத கட்டை முடியில் ஒரு முழம் மல்லிகைப் பூச்சரம் மூன்றாக பின்னப்பட்டு நடுவே ஒரு சிவப்பு ரோஜா குத்தப்பட்டிருந்தது. நெற்றியில் ஒருகீற்று முடி தொங்கலாக. திருநீறு, மஞ்சள், சந்தனம், குங்குமமாக கச்சிதமான நேர்த்தியுடன் இடப்பட்டிருந்தது. கழுத்தையும் முதுகு மற்றும் கைகள் முழுக்க மறைத்திருந்தது வெள்ளை ரவிக்கை. அடிவயிற்றையும் தொப்புளையும் மறைத்திருந்தது சேலை. சீனதேவதை போலவும் இல்லை. தமிழ் தேவதை போலவும் இல்லை. இரண்டையும் கலவை செய்து வெளிப்பட்ட தனித்துவமான மங்களகரத் தோற்றம். அவளைப் பார்த்து “ஜின்ஜாஹோ” என்றதும் புன்னகை பூத்து அவனுக்கு சைவ வகைகளை கூடுதலாகவே வைத்தாள்.
அடுத்து இரு பதின்ம வயதினர். ஒரு ஆண். ஒரு பெண். ஒருவரிடமிருந்து ஆரஞ்சுப்பழம் கிடைத்தது. இன்னொருவரிடமிருந்து சூடான தேநீர் கிடைத்தது. இவர்களுக்கு எடுபிடி வேலை செய்து கொண்டிருந்தவள் ஒரு தமிழ்ப்பெண். கழுத்துக்கு மேல் வெட்டப்பட்ட சுருள்முடி. முட்டைக்கண்கள். அடர்த்தியான புருவங்கள். தொளதொளப்பான சட்டை. அரைக்காற்சட்டை. முடிகளில்லாத மாநிறக்கால்கள். அடிக்கடி குனிந்தாள். குனியும் போதெல்லாம் நெஞ்சுக்குழியும் முலைமேடுகளும் தெளிவாய்த் தெரிந்தன. அதனைப் பார்க்க நேரிட்டவர்கள் முணுமுணுத்தனர். பெண்கள் முறைத்தனர். பெரியோர் “சிவ சிவ” என்று நெற்றியில் கைவைத்தனர். சிலர் காமப்பார்வையில் கண்களால் அழைப்பு விடுத்தனர். அவள் யாரையும் பொருட்படுத்தவில்லை.
ஜின்ஜாஹோ மரத்தடியில் அமர்ந்து சாப்பிட்டு முடித்தான். தேநீரை அருந்திவிட்டு பொட்டலங்களை குப்பைப்பையில் போட்டுவிட்டுக் கிளம்பினான். மேபேங்க் பாதை வழியாக தன் வேலையைத் தொடங்கினான். செகி கோலேட்ஜ் பகுதிக்கு வந்ததும் சுமார் நூறு நூற்றைம்பது பேர் வீடற்றவர்களாய் தெருவெங்கும் கதைபேசியபடி படுத்துக் கிடந்தனர். தன் வயிற்றுக் குழந்தைக்கு தகப்பன் யாராக இருக்கும் என்ற தீவிர யோசனையில் இருக்கும் சபா மாநிலத்துப் பெண். மகளின் கள்ள உறவால் பெற்றெடுக்கப்பட்ட பெண்குழந்தையை வளர்த்துப் படிக்க வைக்கும் அஞ்சலைக் கிழவி. கோயில் கோயிலாகப் பிச்சையெடுக்கும் கட்டைக் கிழவி. இப்படிப் பலர் பல காரணங்களால் அல்லது காரணங்களே இல்லாமல் இங்கே இருக்கின்றனர். “பாரீஸ்” என்ற பெருஞ்சத்தம் கேட்டதும் திமுதிமுவென எழுந்த கூட்டம் முண்டியடித்துக்கொண்டு வரிசை பிடித்தனர். அவ்வரிசை பாம்பென வளைந்து நெளிந்தது. ‘துர்போ’ வாகனத்திலிருந்து உணவுப்பொட்டலங்கள் வழங்கப்பட்டன. ஜின்ஜாஹோ அதனை வாங்கி வண்டியில் கட்டிக்கொண்டு லெபோ அம்பாங்கைக் கடந்து சவ்கிட் பகுதிக்கு வந்து சேர்ந்தான். அங்கு வாகன நிறுத்துமிடத்தில் பலகைகளால் மேடை போடப்பட்டு அலங்கரிக்கப்பட்டிருந்தது. சிவப்பு வண்ணத் துணிகளின் தொங்கல். சீன ஊதுபத்திகளின் வாசம். சீனப்பாரம்பரிய உடைகளில் ஆணும் பெண்ணுமாக வேடமணிந்து அடிக்குரலிலும் கீச்சுக்குரலிலும் கதாகீத நிகழ்வை நடத்திக் கொண்டிருந்தனர். முகத்தில் ஒட்டப்பட்ட வளைந்த நீள் மீசையும் நீள் தாடியும் எப்படி அசைந்து குதித்தாலும் விழவேயில்லை. அதேபோல் பெண் கொண்டையில் செருகி நீட்டப்பட்ட கத்தி போன்ற ஊசியும் அகன்று விழவேயில்லை.
வேடதாரிகளில் எல்லோர் புருவங்களும் இயற்கையாய் இல்லாமல் மேற்புறம் நோக்கி அமைந்த்தாய் காட்சி தந்தன. இரு இசைக்கருவிகளே பயன்படுத்தப்பட்டன. ஒன்று, நிற்கவைத்து இசைக்கப்பட்ட சீன வயலின். இன்னொன்று, இரு கேடயங்கள் போன்ற வட்ட வடிவிலான இசைக்கருவிகள். இரு கேடயங்களின் சத்தம் செவிகளைப் பதம் பார்க்கும் பேரிரைச்சல் கொண்டது. வாசிப்பவரின் மென்மையான கை ஆடலே இரசிக்கும் தன்மையைத் தந்தது.
இசையின் இயங்குதன்மை சடீர் சடீரென மாற்றமெடுத்தது. அதற்கேற்றவாறு வேடதாரிகளின் அங்க அசைவுமிருந்தன. வயலின் இசைப்போனின் கைமிடுக்கு ஓர் ஒழுங்கமைதியை உண்டாக்கி மனக்கிளர்ச்சியை ஏற்படுத்தியது. ஒரு பிடிக்குள் அகப்படாத இசைலயம் அதன் ஆதார இழைகளால் மனத்திளைப்பைக் கொடுத்தன. ஜின்ஜாஹோ கண்களை மூடி இலயித்திருந்தான்.
தீனமாகவும் உச்சாதானத்திலும் குரலொலி கேட்டதும் இசைக்கருவிகளின் துரித இயக்கம் எழுப்பப்பட்டது. மேடையின் மையத்தில் வேடதாரிகள் குனிந்து நிமிர்ந்தபோது அரங்கேற்றுகையின் வெற்றி அவர்களின் முகத்தில் தெரிந்தது. கைதட்டலோடு மேடை நிகழ்வு முடிந்தது.
பொழுது நடுநிசியைத் தாண்டியது. வானத்தைப் பார்த்தான். மழைக்கான மேகங்களின் அறிகுறி எதுவுமில்லை. ராஜா லாவுட் வழியாக டயா பூமியை நோக்கி நடந்தான். ஆள் அரவம் அங்கொன்றும் இங்கொன்றுமாய் இருந்தது. காற்றில் குளிர்ச்சி இருந்தபோதிலும் வாகனங்கள் விட்டுப்போன புகைமிகுதி கண்களுக்கு எரிச்சலைத் தந்தது.
டயாபூமி அருகாமையில் ஆறொன்று ஓடுகிறது. பாலத்தின் ஓரத்திலிருந்து இறங்குவது கடினம். வண்டியை பத்திரமாக இறக்க இயலாது. ஜின்ஜாஹோ சாலையைக் கடந்து ஆற்றோரமாய் நடந்தான். அவனது பதினைந்து நிமிட நடையில் ஆற்றுக்கு இறங்கும் பாதை வந்தது. வண்டியோடு இறங்கி இடதுபக்கமாய் திரும்பி மேம்பாலத்தின் கீழ் நின்றான். அவன் ஒளித்து வைத்திருந்த கெட்டியான அட்டைகள் மேம்பாலத்தின் கீழ்சந்தில் இருந்தன. ஓரிழுப்பில் வெளிவந்த அதனை கீழே விரித்தான். சுவர்க்குழாயருகே வண்டியைச் சாய்த்து வைத்து அட்டைமீது படுத்துக்கொண்டான். திக்கித் திக்கி உறுமும் புலிபோல அவனது குறட்டையொலி பக்கத்தில் யார் படுக்கவந்தாலும் விரட்டிவிடும்.
எங்கிருந்தோ உருண்டோடி வந்த கருமேகங்கள் ஸ்தம்பித்ததால் வானம் இருண்டது. சொட்டுச்சொட்டாகத் தொடங்கிய மழை அடுத்த நொடியிலேயே பானை உடைந்து கொட்டியது போன்று பெய்தது. ஜின்ஜாஹோ விருட்டென எழுந்து அட்டைகளை மடிக்க எத்தனித்த வேளையில் எதேச்சையாக பார்வை முன்னோக்கிப் போனது. ஆற்றுக்கு இறங்கும் பாதையின் மேல் ஓருருவம் நிற்பதைக்கண்டான். அவ்வுருவத்தைச் சுலபமாக இறங்கவிடாமல் தடுப்பது போல மழை விளாசித்தள்ளியது. ஜின்ஜாஹோ உற்றுப்பார்த்தான். அடர்த்தியான சாரல் உருவத்தை அடியோடு மறைத்தது. அவ்வுருவம் அடியெடுத்து இறங்க ஜின்ஜாஹோவும் முன்னடியெடுத்து வைத்து முன்னேறினான். குதிகால்களின் வெடிப்பில் நீர் பட்டு எரிச்சலைத் தந்தது.
நெருங்க நெருங்க உருவம் மங்கலாகத் தெரிந்தது. பெண். துணியால் சுற்றப்பட்ட சுமையை நெஞ்சில் சுமந்திருந்தாள். ஜின்ஜாஹோவைப் பார்த்ததும் அவள் நடையில் அவசரம் தெரிந்தது. அவசரத்தோடு பதற்றம். பதற்றத்தோடு பீதி. தான் முடிக்கவேண்டிய காரியம் முடியாமற் போய்விடுமோ என்ற பயத்தினால் வந்த கோபவெக்கை.
ஜின்ஜாஹோவிற்கு சூழ்நிலை புரிந்தது. குழந்தையின் அழுகைச்சத்தம் காற்றையும் மழைச்சாரலையும் கிழித்தது. அவள் குழந்தையை வலது கரத்திற்கு மாற்றி ஏந்த முற்பட்டதுமே ஜின்ஜாஹோ பாய்ந்தோட, சரேலென வழுக்கி அவள்மேல் விழ, அவளின் கரம் குழந்தையைக் கைவிட்டது. குழந்தை அந்தரத்திலிருந்து கீழே விழும்போது ஜின்ஜாஹோ சட்டென முழந்தாளிட்டு தன் இருகரங்களால் ஏந்திக்கொண்டான். மழைநீர் குழந்தையின் முகத்தில் விழுந்தது. அவள் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள மணற்புற்களையும் சுவரையும் பிடித்துப் போராடினாள். வெள்ளப்போக்கு அவள் கால்களை இழுத்துச் சென்றது. கணகளை இறுக்கமாய் மூடிக்கொண்டாள்.
குழந்தையை வண்டியின் இருப்பிடத்திற்குக் கொண்டுபோய் அட்டைமீது கிடத்தி துணிகளை அகற்றிப் பிழிந்தபின் குழந்தை மீதிருந்த ஈரத்தை நீக்கினான். மறுபடியும் பிழிந்து குழந்தையின் உடலைச் சுற்றிவிட்டான். குழந்தை மௌனமாய் அவனைப்பார்த்துக் கைகளை உதறி சிரிப்பொலி உதிர்த்தது.
’ஜின்ஜாஹோ! ஜின்ஜாஹோ! ஜின்ஜாஹோ!…’ எனக் கத்திக்கொண்டே குழந்தையின் முன்னால் கண்களை மூடிக்கொண்டு ஆனந்தக் கூத்தாடினான்.
Chin Chia Ho = Very Good.