ரகசிய மனிதர்கள்

novah2நாங்கள் இன்னும் நத்தை மாதிரி நகர்ந்து மேலே ஏறி கொண்டிருந்தோம். மெல்ல அடி வைத்து சென்று கொண்டிருந்த போது எங்களை தாண்டி சிறு கூட்டம் செனறது. ஒரு ஆண், ஒரு பெண், 7 வயது என அணுமானிக்க கூடிய சிறுமி, பெண்ணின் இடுப்பில் 3 வயது மதிக்கதக்க சிறுக்குழந்தை. இது தான் அந்த சின்ன குடும்பம். எல்லாருமே எலும்பும் தோலுமாக காட்சியளித்தனர். தொல தொல சட்டை, குட்டை காற்சட்டை, காலணியற்ற கால். இவைதான் அவர்கள் தரித்திருந்த உடைகள். கல்லிலும் முள்ளிலும் தினமும் கடப்பதால் கால் பாதம் காப்பு காய்ச்சி அதுவே காலணியாகிவிடுகிறது. நான் மலையேறுவதாக இருந்தால் முதலில் அதிக முக்கியதுவம் கொடுப்பது காலணிக்கு தான். மலை எனக்கு புதிதல்ல. அப்போதெல்லாம் நான் சிறுவயதாக இருக்கும் போது அம்மாவுடன் ரப்பர் மரம் வெட்ட செல்லும்போது அதற்காக பிரத்தியேக காலணியெல்லாம் அணிந்து சென்றதில்லை.

ஜப்பான் சிலிப்பர் தான் என் காலை அலங்கரிக்கும். என் கால் அளவுக்கு தோதான பூட்ஸ் கூட அப்போது விற்றதாக எனக்கு ஞாபகம் இல்லை. சில நேரங்களில் சிலிப்பரை கழற்றி வைத்து விட்டு தான் மங்கு துடைப்பேன், ரப்பர் பால் எடுப்பேன். (இப்போது தான் பால் சேகரிப்பது என சொல்கிறோம்; அப்போதேல்லாம் பாலை எடுப்பதாக தான் சொல்லுவார்கள்) கால் எவ்வளவு லேசாக உணர்கிறோமோ அவ்வளவு வேகமாக நடக்கலாம். அப்படி நடக்கும் போது கண்ணாடி மங்கு வெட்டி என் கால் விரல் முக்கால் பாகம் துண்டிக்கப்பட்டு பின்னர் தைக்கப்பட்டு அதை கவனிக்காமல் விட்டதால் புழு பிடித்து நடக்க முடியாமல் தவித்த அனுபவங்கள் இன்னுமும் பசுமையாக இருக்கிறது. எனவே இவர்கள் அப்படி நடந்து செல்லும் போது நான் உணர்ந்த கூரிய கற்களின் பதிப்பையும் வலியையும் வேகத்தையும் மீண்டும் மீண்டும் என்னால் நினைவுகூர முடிந்தது.

அப்போது என்னோடு வந்தவர்களிடம் இவர்கள் எல்லாரும் பிறந்தததிலிருந்து இங்கேயே உள்ளவர்களா என கேட்டேன். அதற்கு ஆம், இவர்களின் நல்லது சரி கெட்டது சரி அனைத்துமே இங்கே தான். ஆனாலும் இவர்களில் பெண்கள் கருவுற்றால் மாதம் ஒரு முறை மருத்துவ பரிசோதனைக்கு செல்வதுண்டு. இது இவர்களுக்கு ஒரு பிரச்சனை இல்லை. கருவுறாமல் இருப்பின் பொருட்களை தூக்கி செல்வார்கள். கருவுற்றப்பின் வயிற்றை தூக்கி செல்கிறார்கள். இவ்வளவு தான் வித்தியாசம். இது அவர்களுக்கு பழக்கமான ஒன்று. என் அம்மா கூட, என் உடன்பிறப்புகளை கருவுற்றிருந்த போது நிறைமாத கர்பிணியாய் ஏணி கோடு மரம் வெட்டுவாராம். அக்கால சூழலில் இது அத்தியாவசியம். கருவுற்றிருக்கும் காரணத்தை காட்டி பிறரை வேலை வாங்க முடியுமா அல்லது பிறர் நிழலில் தான் வாழ முடியுமா? ஆனாலும் அதில் முக்கியதுவம் உண்டு. இப்படி வேலையோ அல்லது அதிக நடைபயிற்சி உள்ள பெண்களுக்கு சுலபமாக சுகபிரசவம் நடக்கும் என மருத்துவ ஆராய்ச்சி சொல்கிறது. இன்னும் சொல்லப்போனால் இப்படி பட்ட வாழ்க்கை பாணி உடல் ஆரோக்கியமாக இருக்க வழி செய்கிறது.

இப்போது மேலும் மலை மேல் முன்னேறலாம். நாங்கள் இவர்களையெல்லாம் தாண்டி இன்னும் மேலே வந்து விட்டோம். என்னிடம் இருந்த சாக்லேட்டை சாப்பிட்டு கொண்டே மெல்ல ஏறி கொண்டிருந்தேன். ஓரிடம் வந்ததும் அப்படியே ஆடி போய் விட்டேன். மலைப்பாம்பு போன்ற பெரிய அளவுள்ள மரக்கட்டைகள் தானாக கீழே வந்து கொண்டிருந்தன. அதெப்படி மரக்கட்டைகள் தானாக கீழே இறங்கும்? உங்களுக்கு ஏற்படும் அதே சந்தேகம் படபடப்பு அதிர்ச்சி எல்லாமே என்னை பற்றி கொண்டது. என்னை சுற்றி வேறு யாருமே காணவில்லை. நான் என் வேகத்துக்கு ஏற்ப தனித்து விடப்பட்டிருந்தேன். ஒரு பெரிய மரத்தின் பின்னாடி ஒளிந்து கொண்டு என்னதான் நடக்கிறது என பார்க்க காத்திருந்தேன். அந்த மரக்கட்டை தானாக எல்லாம் இறங்கவில்லை. அதை தோளின் மேல் வைத்து கொண்டு இறக்குவது சாதாரண மனிதர்கள் தாம். ஆண்களும் சரி பெண்களும் சரி. ஒரு குட்டி தலையணையை தோளிலோ அல்லது தலையிலோ வைத்துக்கொண்டு தேக்கு மரக்கட்டைகளை சர்வ சாதாரணமாக இறங்குகிறார்கள்.

அப்படியே பிரமித்து நின்று விட்டேன். என் வாழ்நாளில் அப்படி ஒரு பராக்கிரமம் நிறைந்தவர்களை கண்கூடாக பார்த்து கிடையாது. ஆச்சர்யத்தில் திறந்த வாய் மீண்டும் மூடுவதற்கு கொஞ்சம் நேரம் ஆனது. அதிலும் பெண்கள் மெலிந்த உடல்வாகுடைய பெண்களும் ஆண்களுக்கு நிகராக…ஆச்சர்யம்…ஆயினும் ஆண்களை விட வேகமாக மரக்கட்டைகளை தூக்கி கொண்டு இறங்குவதை பார்த்தப்போது என் உடலில் மேலும் வலு கூடிவிட்டது. ஒரு கட்டத்தில் இவர்கள் மனிதர்கள் தானா என அவர்கள் காலை கூட நோட்டமிட்டேன். மனிதர்கள் தான்…நிருபமாகிவிட்டது. அவர்களை பார்த்ததும் எனக்கு சிரிக்க கூட தோன்றவில்லை. ஆனால் அவர்களோ எங்களை பார்த்தௌ சிரித்துவிட்டு சென்றனர். அவர்கள் என் பார்வையிலிருந்து அவர்கள் மறையும் வரை நான் கண் சிமிட்டாமல் பார்த்து கொண்டே இருந்தேன்.

மலையுச்சியை அடைய இன்னும் கொஞ்ச தூரம் தான் இருந்தது. ஆரம்பத்தில் உடலில் இருந்த வேகம் உச்சியை அடைய போகும் அந்த குறுகிய நேரத்தில் காணாமல் போய் விட்டது. இருந்தும் மனத்தின் உத்வேகம் உடலை மேலே மேலே தள்ளி ஏற்றி என்னை உச்சிக்கு கொண்டு போய் சேர்த்து விட்டது. அங்கே கையாலே மேகத்தை தொட்டு பார்க்க முடிந்தது. ஆனால் அங்கே எனக்கு இன்னொரு ஆச்சர்யம் காத்திருந்தது. அந்த மலையுச்சியில் ஒரு பெரிய பீரங்கியும் பக்கத்தில் ஒரு கல்லறையும் இருந்தது. அந்த மலையுச்சி ஈபானிய மாவீரன் ரெந்தாப்பின் கோட்டையாக இருந்திருக்கிறது. அந்த மலையுச்சியிலிருந்து கீழே பார்த்தால் பெரும்பான்மையான காடு பகுதிகளும் நகரப்பகுதிகளும் தெள்ளத்தெளிவாக தெரிந்தது.

தெளிவான தேர்ந்தெடுப்பு தான் இந்த மலையுச்சி. அப்படியென்றால் அந்த கல்லறை யாருடையது என போய் பார்க்கையில் அது ஒரு கிறிஸ்துவ குருவினுடயது. வேத வசனத்துடன் கூடிய கல்லறையில் அவரின் பெயர் பொறிக்கப்பட்டிருந்தது. மேலே மலையுச்சியில் வந்து மரித்திருக்கிறார் மனுஷன். அவரின் பெயர் எனக்கு ஞாபகமில்லை. ஆனாலும் கல்லறை கனகச்சிதமாக பளிங்குகற்களால் கட்டபட்டிருந்தது. கட்டைகளை சர்வசாதாரணமாக தூக்கி செல்லும் ஈபானியர்களால் கற்களை அவ்வளவு உயரத்துக்கு கொண்டு செல்வது என்பது இன்னும் சாதாரணம். எது எப்படியோ என்னுடைய ஒரு குறிகோள் நிறைவேறி விட்டது.

அங்கேயே ஒரு மணி நேரம் ஓய்வு எடுத்தபின் மேரி அனுப்பிய வெள்ளைசோற்றையும் கட்டக்கருவாடையும் சாப்பிட்டு விட்டு மலையுச்சியிலிருந்து கீழே இறங்க ஆரம்பித்தோம். மலையேறும்போது இருந்த அதே அசதி இறங்கும் போதும் இருந்தது. அளவுக்கு அதிகமாக வழுக்கியது. மழை வேறு நிலைமையை இன்னும் மோசமாக்கி கொண்டிருந்தது. பல முறை வழுக்கி விழுந்து தான் அடிவாரம் வந்து சேர்ந்தேன். அங்கிருந்து புறப்பட்டு மீண்டும் மழையிலேயே நனைந்து கொண்டு சென்றோம்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...