எழுத்தாளர்களுக்கு ஒரு சவால்!

அ.பாண்டியன் படம்மலேசிய மலாய் இலக்கிய வெளி மலாய் எழுத்தாளர்களால் மட்டுமே நிரப்பப்பட்டதல்ல. மலாய்க்காரர் அல்லாத பல எழுத்தாளர்களும் மலாய் மொழியில் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு என்றாலும் கவனிக்கத்தக்க படைப்புகளை கொடுத்திருக்கிறார்கள்.

மலேசிய வாழ் இந்தியர்களும் மலாய் இலக்கிய ஈடுபாடு கொண்டு செயல் பட்டு வருகின்றனர். ஜோசப் செல்வம், என்.எஸ். மணியம், ஆ.நாகப்பன், பி.பழனியப்பன், இங்நதுஸ் டேவ் மற்றும் ஜி.சூசை போன்ற மூத்த எழுத்தாளர்கள் சிலரும் ராஜ ராஜேஸ்வரி, சரோஜா தேவி, சி.கமலா, மகேந்திரன், உதயசங்கர் SB போன்ற இளம் தலைமுறை எழுத்தாளர்கள் சிலரும் மலாய் சிறுகதை உலகில் பெயரை பதித்துள்ளனர்.

உதயசங்கர் SB தைப்பிங்கில் பிறந்து வளர்ந்தவர். மலாயா பல்கலைக்கழகத்தில் மலாய் இலக்கியத் துறையில் பட்டம் பெற்றவர். இவர் 1991 முதல் மலாய் சிறுகதைத் துறையில் மிகுந்த ஈடுபாடும் பல்வேறு பரிசோதனை முயற்சிகளையும் தொடர்ந்து செய்து வருகிறார். அதோடு மலாய் மொழியில் எழுத ஆர்வம் காட்டும் இளஞர்களுக்கு தனது ‘காவியன்’ அமைப்பின் வழி வழிகாட்டுதல்களையும் செய்து வருகிறார்.

‘எழுத்தாளனின் பணி வாசகன் சிந்திக்க புதிய திரப்புகளை உருவாக்கி தருவதுதானே அன்றி முடிவுகளைக் கூறுவது அல்ல’ என்னும் கொள்கையை தனது படைப்புலக கோட்பாடாக கொண்டு தான் செயல் படுவதாக அவர் கூறுகிறார். உதயசங்கரின் அனைத்து படைப்புகளும் மலேசிய இந்தியர்களையே முதன்மை பாத்திரங்களாகக் கொண்டவை. அதே போன்று கதைக்களமும் பெரும்பாலும் இந்தியக் குடும்பங்களையும் தோட்டபுற அல்லது இந்திய கம்பங்களையும் அடிப்படையாகக் கொண்டவை. மலேசிய இந்தியர்களின் உணர்வுகளையும் வாழ்க்கை முறையையும் பிற இனத்தவர் அறிந்து கொள்ள வேண்டும் என்னும் நோக்கோடு இவர் கதைகள் படைக்கப்படுகின்றன.

இவரது சிறுகதைகள் நாட்டின் பல மலாய் அச்சு ஊடகங்களிலும் சிறுகதை தொகுப்புகளிலும் இடம் பிடித்துள்ளன. பல்வேறு இலக்கிய போட்டிகளில் பரிசுகளை வென்றிருக்கின்றன. தனி தொகுப்பாக, Orang Dimensi(பன்முக மனிதன்) (1994), Siru Kambam (சிறு கம்பம்) (1996), Yang aneh- aneh (வித்தியாசமானவை)( 1997), Surat Dari Madras (மெட்ராசில் இருந்து வந்த கடிதம்) (1999), Nayagi (நாயகி) (2000) Rudra Avatara (ரூத்ர அவதாரம்) (2008), Kathakali (கதக்களி) (2009) போன்றவை வெளிவந்துள்ளன. Hanuman (ஹனுமான்),  Panjayat (பஞ்ஜாயத்து) போன்ற நாவல்களையும் இவர் படைத்துள்ளார்.

பின் நவீனத்துவ சிறுகதைகளையும்  நான்லீனியர் கதைகளையும் மிக திறமையாக எழுதும் இவரின் ‘கதக்களி’ என்னும் சிறுகதை தொகுப்பை அண்மையில் வாசித்தேன். 16 கதைகளைக் கொண்ட இத்தொகுப்பு 2009-ல் வெளியீடு கண்டுள்ளது. பதின்ம வயது வாசகர்களுக்காக தொகுக்கப்பட்ட  இக்கதைகள் அனைத்தும் பதின்ம வயது கதைமாந்தர்களையும் அவர்களின் மன, அறிவாற்றலையும் வெளிக்காட்டுவதாகவுமே அமைந்திருக்கிறன.

இளையோர் இலக்கியமாக காணப்படும் இத்தொகுப்பில் கதைகள் அனைத்தும் தேசிய நல்லிணக்கம், தேசிய மொழி மாண்பு, பல்லின பண்பாட்டு பகிர்வு போன்ற கதை கருவை கொண்டவையாகும். மிக எளிய கதைப் பின்னல்களோடு நேரடி கதை சொல்லும் பாணியுமே அதிகம் பின்பற்றப்பட்டுள்ளன. இந்திய கதை மாந்தர்களும் இந்திய பண்பாட்டு தாக்கமும் அதிகமாகவே கையாளப்பட்டுள்ளது.

‘Catatan Sipahi Muda’(இளம் சிப்பாயின் குறிப்புகள்) என்னும் கதை சற்று வித்தியாசமானது. மலாய் அரசியல் வரலாற்றில் மிக முக்கிய நிகழ்வாக கருதப்படுவனவற்றில் ஒன்று, J.W.W. பேர்ச்சு கொலையாகும். பல்வேறு அரசியல் காரணங்களால் பேராக் மாநில ரெசிடண்டாக பதவிவகித்த அவன் பாசீர் சாலாக் என்னும் இடத்தில் 1875-ல் கொலை செய்யப்பட்டான். கொலையை திட்டமிட்டு நடத்தியவர் மஹாராஜா லேலா என்னும் சிற்றரசராவார். இவருக்கு ஊக்கமூட்டியவரும் பாதுகாப்பு அளித்தவரும் பேராக் மாநில சுல்தான் ராஜா அப்துல்லாவாகும்.

இந்நிகழ்வுக்கு முன்புவரை ஒரு பிரிட்டீஷ் உயர்பதவி அதிகாரியை எந்த மலாய் ஆட்சியாளரும் பகைத்துக் கொண்டதோ பழி தீர்த்ததோ கிடையாது. ஆகவே இச்சம்பவம் ஆங்கிலேயர்களுக்கு எதிரான மலாய்க்காரர்களின் எதிர்ப்பு புரட்சியின் துவக்கம் என்று சில வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். மஹாராஜா லேலாவை மலாய் புரட்சி வீரன் என்று புகழ்வோரும் உள்ளனர். மாறாக மஹாராஜா லேலா தனது வரி வசூல் உரிமை பரிக்கப்பட்டதனாலேயே ஆத்திரமுற்று J.W.W. பேர்ச்சை கொலை செய்தார் ; சமுதாய பற்றால் அல்ல, என்றும் சில தரப்பினர் வாதிட்டு வருகின்றனர். ஆயினும் இக்கொலைச் சம்பவமே மலாய் அரசாட்சியில் ஆங்கிலேயர்கள் நேரடியாக தலையிட வழிவகுத்து விட்டது குறிப்பிட தக்கது.

உதயசங்கர்SB தனது ‘Catatan Sipahi Muda’(இளம் சிப்பாயின் குறிப்புகள்) என்னும் தனது சிறுகதையில் மேற்கண்ட வரலாற்று நிகழ்வை புதிய கோணத்தில் படைத்திருக்கிறார். இக்கதை நிகழ்வுகள் J.W.W. பேர்ச்சுடன் பாசீர் சாலாவுக்கு, பாதுகாப்புக்குச் சென்ற ஒரு இளம் இந்திய சிப்பாயின் நோக்கில் இருந்து சொல்லப்படுகிறது. பாசீர் சாலாவிற்கு சென்ற J.W.W. பேர்ச்சுடன் 10 இந்திய சிப்பாய்களும் 12 மலாய் படகோட்டிகளும் இருக்கின்றனர். அவர்கள் J.W.W. பேர்ச்சுக்கு விசுவாசமானவர்கள். மலாய் அரசர்களுக்கு எதிராக செயல்படும் J.W.W. பேர்ச்சை மலாய் படகோட்டிகள் பாதுகாப்பதற்கு, அவர்களை அந்த ஆங்கில ரெசிடெண்டு அடிமை வாழ்க்கையில் இருந்து மீட்டது காரணமாகிறது. அதே போல் இந்திய சிப்பாய் J.W.W. பேர்ச்சுக்கு விசுவாசமாய் இருப்பதற்கும் நன்றி கடனே காரணமாகிறது. (அவன் ஒரு ஜமிந்தாரின் –இந்தியாவில்- அடிமையாக இருந்து ஆங்கிலேயரால் மீட்கப்பட்டவன்). ஆயினும் மக்கள் கூட்டம் திரண்டு வந்து தாக்கும் போது அந்த சிப்பாகளும் படகோட்டிகளும் செய்வதரியாது சிலையாக நிற்க, J.W.W. பேர்ச்சு சிரீஸால் குத்தப்பட்டு ஆற்றில் வீழ்ந்து சாகிறான்.

இதே போல் ‘பிதாரா ராமா’ என்னும் கதையும் குறிப்பிட தக்க கதையாகும். ராமாயண கதையை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ள இக்கதையில் எதிர்பாராத மாற்றம் செய்யப்பட்டு ஒரு புனைவாக படைக்கப்பட்டுள்ளது. பொன்மானை கண்ட சீதை அதனால் கவரப்பட்டு அதைப் பிடித்து வர ராமனை வேண்டுகிறாள். இலக்குமணன் இது ஏதோ சூழ்ச்சி என்று கூறி தடுக்க முனைகிறான். ராமனும் சீதையும் அவனை பொருட்படுத்தவில்லை. ராமன் பொன்மான் பிடிக்க காட்டுக்குச் செல்கிறான். மாரீசன் சதி செய்து ராமனின் குரலில் உதவி கேட்டு கத்துகிறான். சீதை மீண்டும் பிழை செய்கிறாள். தன் கணவன் ராமன் தான் உதவி கேட்பதாக நம்பி, இலக்குமணை காட்டுக்குப் போகச் சொல்கிறாள். இலக்குமணன் மறுக்கவே, அவனை மோசமாக தூற்றி பேசுகிறாள். தன்னை அடையும் பொருட்டே தன் அண்ணனுக்கு உதவ இலக்குமணன் மறுப்பதாக ஆத்திரத்தில் அவதூறு பேசுகிறாள்.

இத்தாக்குதலால் மனமுடைந்த இலக்குமணன் சீதையை தனியே விட்டு விட்டு காட்டுக்குச் செல்கிறான். அங்கே மாரீசனின் உடலைக் காண்கிறான். அண்ணன் உயிரோடு இருப்பது உறுதியாகிறது. ஆனால் திடீர் என்று அங்கு தோன்றிய ராவணன் இலக்குமணனை தாக்கி அசோகவனத்திற்கு கடத்திச் செல்கிறான்.(கவனிக்கவும் சீதையை அல்ல!!)

அசோகவனத்தில் சூர்ப்பணகையும் விபீஷணனும் மிகுந்த குழப்பத்தில் உள்ளனர். ராவணனின் செயல் அவர்களுக்கு வியப்பைத் தருகிறது. சூர்ப்பணகை (சீதையைக் கடத்துவதன் வழி) ராமனை அடையும் தனது திட்டம் நிறைவேறாமல் போய்விட்டதால் சோகமாகிறாள். பிறகு, சரி இலக்குமணனையாவது திருமணம் செய்து கொள்ளலாம் என்று சமாதானப் படுத்திக் கொள்கிறாள். விபீஷணன் தன் அண்ணனிடம் அவன் செயல்களுக்கு காரணம் கேட்கிறான். அதற்கு ராவணன் “ என்னை முன்பு போல எப்போதும் பெண் பித்தனாக இருப்பேன் என்று நினைத்தாயா? இப்போது நான் ராமனை முழுமையாக செயலிலக்கச் செய்ய அவனின் நிழலாக இருந்து செயல் படும் அவன் தம்பியை கடத்தி விட்டேன். ராமன் இனி என்னைத் தேடி வரட்டும். நான் போடும் நிபந்தனைகளுக்கு அவன் பணிந்தே ஆகவேண்டும்!”, என்று கூறுகிறான். ராவணனின் இந்த விபரீத பேச்சால் விபீஷணன் மனக்கலக்கம் அடைகிறான். அப்போது, விபீஷணன் ராவணனையும் இலங்கையையும் சூழ்ந்து வரும் அபத்துகளை மனக்கண்ணில் காணுகிறான்.

இவை தவிற இத்தொகுப்பில் சில விமர்சனத்துக்குறிய கதைகளும் உள்ளன. ‘மெங்கூபா அல்பா’ என்னும் ஒரு கதையில் மலேசிய தமிழ் எழுத்தாளர்கள் கடுமையாக விமர்சிக்கப்படுகிறார்கள். எம்.பாலச்சந்திரன் என்னும் மலாய் எழுத்தாளர் எழுதிய ‘அல்பா’ என்னும் மலாய் நாவலை 10-12 வயது மாணவர்கள் குழு ஒன்று கடுமையாக விவாதிப்பதாக இக்கதை அமைந்துள்ளது. சிவா என்னும் தமிழ்ப்பள்ளி ஆசிரியரை தலைமை கதைமாந்தராக கொண்ட அந்நாவல் ஒரு தோட்ட புற தமிழ்ப்பள்ளியையும் அத்தோட்டத்தில் வாழும் மக்களையும் கதைக் களமாக கொண்டுள்ளது. இந்நாவலை வாசித்த மாணவர்கள், வழக்கம் போல தாங்கள் (தமிழ்ப்பள்ளி மாணவர்கள்)   ஒதுக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாற்றுகின்றனர். பிற தமிழ் இலக்கிய படைப்புகளில் தாங்கள் மறைக்கப்படுவதையும் சாடுகின்றனர். தமிழ்ப்பள்ளிகள், தோட்டபுறம் போன்ற களத்தை கொண்டு பல நூறு படைப்புகள் தமிழில் வந்தாலும் அவை தமிழ்ப்பள்ளி மாணவர்களாகிய தங்களை உலகுக்கு அறிமுகப்படுத்துவதில்லை என்று குமுறுகின்றனர். தமிழ்ப்பள்ளி பற்றி எழுதினால் அதன் மாணவர்களாகிய நாங்களே முதன்மை கதைமாந்தராக இருக்க வேண்டும் என்றும் ஆனால், தமிழ் படைப்புகளில், ஆசிரியர், தலைமையாசிரியர், கிராணிகள், தோட்ட முதலாளிகள், அரசியல் கட்சி தலைவர்கள் என்று யார் யாரையோ முதன்மை படுத்தி விட்டு தங்களை ஒதுக்கி விடுகின்றனர் என்றும் விமர்சிக்கின்றனர். இதன் காரணமாகவே தோட்ட தமிழ்ப்பள்ளிகளுக்கு பணியாற்றவரும் ஆசிரியர்களும் ‘ஆசிரியர் சிவா’ வைப் போன்று அடிப்படை வேலையான ‘தங்களை’ மறந்து விட்டு மற்ற அலுவல்களில் ஈடுபடுகின்றனர் என்றும் வருந்துகின்றனர். “முடிந்தால் இந்த குறைபாடுகளை மாற்றுங்கள், இல்லை இது வழக்கமானதுதான் என்று நினைத்தால் இதை எல்லாம் ஒதுக்கிவிடுங்கள்” என்று கதையை முடிப்பதன் வழி ஆசிரியர் எழுத்தாளர்களுக்கு ஒரு சவாலை முன்வைக்கிறார் என்பது தெளிவாகிறது.

இறுதியாக, சில சலிப்புதட்டும் கதைகளும் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. இந்தியப் பண்பாட்டில் வாழைமரம் கொண்ட சிறப்புகளை விளக்கும் ஒரு கதை, இந்திய பண்பாட்டில் வேப்பமரம் கொண்ட சிறப்புகளை விளக்கும் ஒரு கதை, பல்லின ஒற்றுமையை நிலை நாட்ட (தனிப்பட்ட இனப்பெருமை பேசாமல்) சமயங்களுக்கிடையிலான கலந்துரையாடல் நிகழ்த்தப்படவேண்டும் என்பதை விளக்கி ஒரு கதை, கதக்களி நாட்டியத்தையும் அதன் சிறப்புகளையும் விளக்கி ஒரு கதை என்று சில கதைகள் மிகவும் செயற்கையாக நாடக பாணியில் அமைந்துள்ளன. பிற இன இளம் வாசகர்களுக்கு இந்திய பண்பாட்டை அறிமுகம் செய்ய வேண்டும் என்கிற ஒரே நோக்கத்தில் இக்கதைகள் எழுதப்பட்டிருக்கலாம் என்னும் முடிவை மட்டுமே நாம் கொள்ள முடிகிறது. இதன் காரணமாகவே உதயசங்கர்SB நடப்பு இந்திய பண்பாட்டையும் அதன் இருப்பையும் எந்த விமர்சனமும் இன்றி அப்படியே ஏற்றுக் கொள்கிறார். தான் அறிந்த அதே கண்ணோட்டத்தோடு பிற இனங்களுக்கும் அறிமுகப்படுத்த தொடர்ந்து முயன்று கொண்டிருக்கிறார்.

3 கருத்துகள் for “எழுத்தாளர்களுக்கு ஒரு சவால்!

 1. ஸ்ரீவிஜி
  July 11, 2013 at 2:42 pm

  தமிழில் வந்துள்ள சில நல்ல சிறுகதைகளை மலாய் மொழியில் மொழிபெயர்த்தால் நமது அற்புத இலக்கியங்கள் மலாய் இலக்கிய அரங்கில் பேசப்படலாம். குறிப்பாக அ. பாண்டியன், நீங்கள் எழுதிய பல கட்டுரைகள் சிறுகதைகள் மொழிபெயர்க்கப்பட்டால் மலாய் இலக்கிய உலகில் நீங்கள் அடையாளங்காணப்பட்டு பேசப்படுவீர்கள். உங்களைப்பேன்றவர்களின் அருமை நமது தமிழ் இலக்கியச் சூழலில் கண்டுகொள்ளப்படுமா என்பது விடை காணமுடியா வினா.! – கண்டுகொள்ளவும் மாட்டார்கள். அவர்களாகவே (எழுத்தாளர் சங்கம்)ஒரு இலக்கிய கூட்டத்தை வைத்துக்கொண்டு மாரடிருக்கின்றார்களே, அவர்களில் யாவருக்கும் இலக்கியப்புரிதல் இருக்கின்றதா என்பது சந்தேகமே.! அங்கிருப்பவர் எவரும் எழுத்தாளர்களே இல்லை என்பது எனது பார்வை. மைக் பிடித்து மேடை முழக்கம் செய்துவிட்டால் இலக்கியவாதி என்கிற அங்கீகாரம் கிடைத்துவிடுமென்கிற சிந்தனைப்போக்கு முதலில் மாறவேண்டும். மாறுமா தெரியவில்லை.!?
  உங்களின் எழுத்துகள் அருமை. இந்தக் கட்டுரையும் என் கவனத்தை ஈர்த்தது. உதயசங்கர்SB பணி சிறக்க வாழ்த்துகள்.

 2. அ.பாண்டியன்
  July 15, 2013 at 3:15 am

  ஶ்ரீவிஜி,உங்கள் கருத்துகளுக்கு நன்றி. சிவா பெரியண்ணன் இக்கட்டுரையை உதயசங்கர்SB யின் கவனத்திற்கு கொடுத்திருக்கிறார். அவர் இக்கட்டுரையை முழுமையாக மலாயில் மொழிபெயர்த்து தனது வலைப்பக்கத்தில் பதிவேற்றி இருக்கிறார்…. சிவாவுக்கும் உதயசங்கர்SBகும் நன்றி.

 3. July 17, 2013 at 8:25 am

  http://uthayasb.blogspot.com/2013/07/blog-post.html
  அ. பாண்டியன், சிவா பெரியண்ணன்: நன்றி

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...