உலைவின்றித் தாழாது உஞற்றுபவர்.

%e0%ae%a4%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a9%e0%af%8dதத்துவ நூல்கள் எனக்கு போதை தரக்கூடியவை. தத்துவக் கருத்துகள் மிக எளிமையாக புரிவது போல் ஆரம்பித்து  சற்றைக்கெல்லாம் எதுவுமே புரியாத நிலையில் என்னை விட்டுவிடக்கூடியவை. இருப்பவை இல்லாதவைகளாகி விடும்; இல்லாதவை இருப்பவைகளாகிவிடும். ஆயினும் அந்தப் புரிதலும் புரியாமையும் கலவையாகி ஒரு போதையாக மனதில் வியாபித்து நிற்கும். மாலை நேரத்து வெயிலில் மினுமினுக்கும் மழைத்துளி போல அவை பல்வேறு வெளிச்சக் கீற்றுகளைக் காட்டி நம்மை எங்கோ இழுத்துக் கொண்டு செல்லும். நான் பல வருடங்களுக்கு முன் ஜெ.கிருஷ்ணமூர்த்தியின் தத்துவச் சிந்தனைகளைப் புரிந்தும் புரியாமலும்தான் படித்தேன். அவரின் தத்துவ நோக்கும் தெறிப்புகளும் தந்த போதையால் உந்தப்பட்டு  தொடர்ந்து படித்தேன். அவரது தத்துவ விசாரங்களைத் தொடரும்போது ஓர் இடத்தில் மனம்  சட்டென அத்துவான வெளியில் நின்றுவிடும். மனம் என்பதே இல்லாமல் ஆகும் நிலையை அவர் விவரிப்பார். ஆயினும் ஜே.கேயின் தத்துவக் கருத்துகளை முன்வைத்து என்னால் மேல் சென்று விவாதிக்க முடிந்ததில்லை. இது என்னுடைய போதாமையினாலேயே என்று இன்றும் நம்புகிறேன்.

ஆனால் அண்மையில் வெளியீடு கண்ட சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி தனது  ‘தனியன்’ நூலில் விளக்கிச்செல்லும் தத்துவங்கள் போதை மிகுந்தவையாக இல்லை. அவை கறாராக உலக வாழ்க்கை இயல்புகளை முன்வைத்துப் பேசுகின்றன. ஆகவே அவற்றின் உள்சென்று உரையாட முடிவது வாசகனாக எனக்கு மகிழ்ச்சி. எனினும், இப்பதிவு, தனியன் நூலுக்கான விமர்சனமோ, திறனாய்வோ அல்ல. அந்தச்சிறிய நூலில் அடர்ந்துள்ள தத்துவ விசாரணைகளையும் சமயக் கருத்துகளையும் உள்வாங்கி விமர்சிக்க என் சிற்றறிவு போதாது என்பதை பொதுவில் அறிவித்துக் கொள்வதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை.

எனினும் இத்தொகுப்பின் இரண்டாவது கட்டுரையான ‘மெய் உணர்தல்’ எனக்குள் மிக நீண்ட விவாதங்களை முன்வைத்துச் சென்றதால் அக்கட்டுரையின் வழி பெற்ற மனவோட்டங்களே இக்கட்டுரையாகிறது.

வள்ளுவர் ஊழின் மீது ஆழ்ந்த பிடிப்புக் கொண்டவர். ‘ஊழிற் பெருவலி யாவுள என்பது அவர் முடிவு. ஊழ் என்பது என்ன என்பதை வள்ளுவர் மிகத் தெளிவாக விளக்கியுள்ளார். ‘வகுத்தான் வகுத்த வகை என்று சுட்டுவதன் வழி, ஊழ் என்பதை இயற்கையின் மாபெரும் இயற்பியல் கோட்பாடாகக் காட்டுகிறார்.  மேலும் ஊழ் என்பதை  இருவகை உலக விதிகள் என்னும் பொருள்பட விளக்குகிறார். ஒன்று ஆக்கத்துக்கான ஊழ் மற்றது அழிவிற்கான ஊழ் என்பன. முதலாவது நல்லூழ் மற்றது தீயூழ் என விளக்குகிறார். வாழ்க்கையில் நல்லதும் தீயதும் நிகழ்வது தவிர்க்க இயலாத, கோட்பாட்டுக்கு உட்பட்ட விதி என்பது அவர் கருத்து. அந்த விதியை அமைத்த ஆற்றலை அவர் ‘வகுத்தான்’ என்று குறிக்கிறார்.

ஒரு செயலைச் செய்தால் அதனால் ஒரு விளைவு ஏற்படுகிறது. அதுவே விதி. அது செயலுக்கான எதிர்வினை. உலகம் மட்டுமின்றி முழுப் பிரபஞ்ச இயக்கத்தையும் இயக்க – எதிர்வினைக் கோட்பாடுகளின் வழி இயற்பியல் அடிப்படையில் தெளிவாக விளக்க முடிகிறது. ஆனால் மனித வாழ்க்கையின் வெற்றி தோல்விகளுக்கு எப்படிப் பொருள் காண்பது. ஆகவே ஊழ் அல்லது ஊழ்வினை என்ற விதியை முன்வைக்க வேண்டியுள்ளது. அந்த விதியை மனிதன் முறியடிக்க முடியாது. மேலே வீசி எறியப்படும் பந்து எப்படிக் கீழே விழ வேண்டும் என்பது புவீயீர்ப்பு விதிக்கு உட்பட்டதோ அப்படி இயல்பானது ஊழ் என்கின்றனர்.

ஆயினும் உலகவாழ்க்கை அளவோடு மட்டும் விதி அல்லது ஊழ் பேசப்படுவதில்லை. மனிதப் பிறப்புக்கு முன்னும் இறப்புக்குப் பின்பும் ஊழின் செயல்பாட்டை நமது முன்னோர்கள் சிந்தித்துள்ளனர். அந்தச் சிந்தனைப் பதிவுகளை நாம் திருக்குறளிலும் சிலப்பதிகாரத்திலும்  முக்கியமாகக் காணமுடிகிறது. ஊழ் குறித்து கோட்பாட்டு விளக்கங்களை மட்டும் திருக்குறள் விளக்குகிறது. ஊழின் செயல்பாட்டையும் வலிமையையும் சிலப்பதிகாரம் கதையாக விளக்குகிறது. ‘ஊழிற் பெருவலி யாவுள’ என்று வள்ளுவர் கேட்ட வினாவுக்கு ‘ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்’ என்று விளக்கம் சொல்கிறார் இளங்கோவடிகள்.

திருக்குறளுக்கும் சிலப்பதிகாரத்திற்கும் இடைப்பட்ட கால அளவு சுமார் முன்னூறு ஆண்டுகள் (வள்ளுவர் காலம் கி.மு 30 என்றும் இளங்கோவடிகள் 2-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் என்னும் பொதுவான கணக்குப்படி) என்று வைத்துக் கொண்டாலும் ஊழ் குறித்த மிகத் தீவிரமான கருத்தாடல்களும் ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்ட தொன்மை மிக்க ஆய்வு வரலாறு தமிழ்ச் சூழலில் நிகழ்ந்துள்ளது தெளிவாகிறது. அதோடு ஊழ் குறித்த தீவிர சிந்தனைகளை மேல்கொண்டு சென்றோர் சமணர் என்பதும் குறிப்பிடத்தக்கது. பின்னர் அது சைவ சமய கருத்தாக்கங்களிலும் விரிவாக்கம் கண்டுள்ளது.

ஆகவே ஊழைப் பற்றிய ஆய்வுகளும் விவாதங்களும் சமய, ஆன்மீக, தத்துவ தளங்களில் மிகத் துடிப்புடன் இன்றளவும் தொடர்கின்றன. அந்த விவாதங்களின் முடிவின்மையும் மனித ஆற்றலுக்கு அப்பாற்பட்ட சக்தியின் தலையீடுகள் குறித்த மனித அச்சமும் ஒருவகையில் மதங்கள் நிறுவனமாகச் செழித்து வளர உரமாவதோடு மூடவழக்கங்கள் பெருகவும் அதன் கீழ் வணிகம் நடக்கவும் காரணமாகிவிடுகின்றன. ஆகவே ஊழ் குறித்த தத்துவார்த்தத் தேடல் அவசியமாகிறது.

ஊழ் என்பதை சுவாமி பிரம்மானந்தா ‘தர்மநியதி’ என்ற வேதாந்த சொல்லாடலின் வழி குறிக்கிறார். ஊழ் என்பதை இளங்கோவடிகள் முற்பிறவிப் பயன் என்று விளக்குவார். ஆகவே ஊழும் தர்மநியதியும் ஒன்றே என்பதை அவற்றின் தன்மையால் உணரமுடிகிறது. அவை மாயக்கரமாக இருந்து மனிதனின் வாழ்க்கைப் போக்கை அமைக்கின்றன என்கிறார் சுவாமி. அதுவும் மனிதனின் விருப்ப நோக்கத்திற்கு ஏற்ப இல்லாமல் அதன் நிர்ணயிக்கப்பட்ட சூத்திரத்திற்கு ஏற்ப பலன்களை அளிக்கிறது. அப்படி அமைக்கப்படும் பலன்கள் ஏற்புடையவையா? நீதியானவையா? என்று என் போன்றவர்களின் மனித சிந்தனை பதறுகிறது. மனிதனின் இந்தத் தடுமாற்றத்திற்கு கீதை தத்துவார்தமாகப் பதில் சொல்கிறது. ‘நடந்தன யாவும் நன்மைக்கே; நடப்பன யாவும் நன்மைக்கே; நடக்கவிருப்பனவும் நன்மைக்கே’ என்பது அந்தப் பதில். ஆகவே ‘கடமையைச் செய், பலனை எதிர்பாராதே’ என்னும் ஆப்த வாக்கியம் மிக உயர்வான இடத்தைப் பெருகிறது. இதையே சுவாமி தனது மெய் உணர்தல் கட்டுரையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆயினும், என்னை மிகப்பெரிய குழப்பம் ஒன்று துரத்துகிறது. வள்ளுவர் முயற்சி செய் என்பதை மிக அழுத்தமாகச் சொல்கிறார். ஊழின் மீது நம்பிக்கை உள்ள அவர் முயற்சியை தீவிரப்படுத்து என்று துணிந்து கூறுகிறார். முயற்சி ஊழையும் உடைக்கும் என்பது அவரின் உத்வேகக் கருத்து. ஆனால் தர்மநியதி என்பது தனக்கான நியதியின்படி அதாவது வரையறைகள் உள்ள மனித உயிர் அறிந்து கொள்ள முடியாத நியதிகளின்படி செயல்படுகிறது என்பதோடு அது சரியாக, நீதியாகத்தான் செயல்படுகிறது என்னும் முடிவையும் கீதை தெளிவுபடுத்துகிறது.

எல்லாம் அதனதன்படி நடக்கும் பட்சத்தில் முயற்சிகள் எதற்கு? போராட்டம் எதற்கு? வாழ்கையில் நம் உழைப்புக்குத்தான் அர்த்தம் என்ன? வாழ்க்கையை முழு நிறைவோடு ஏற்றுக் கொள்ளும் பிரசாத புத்தி என்பது தன்னூக்கத்துடன் போராடி வாழ்க்கையை நிறுவ முயலும் மனநிலைக்கு எதிரானதாகாதா? நடந்தவையும் நடப்பவையும் நல்லதுக்கே என்பதோடு அதன் போக்கை மனித ஆற்றலால் மாற்றி அமைக்க முடியாது என்னும் நிலையில் ‘முயற்சி’ என்பது வீண் அலம்பல் ஆகிவிடாதா? என்ற கேள்வி மட்டுமே இந்தக் கூற்றுகளால் விரவி வளர்கிறது.

வள்ளுவர் முயல்வோரை ‘ஊழையும் உப்பக்கம் காண்பர்’ என்கிறார். அவர், மனிதன் அறியாத மாயக்கரங்களின் மேல் நம்பிக்கை வைத்தவர் என்றாலும் அந்தக் கரங்களின் செயல்பாட்டை மனித எத்தனம் மாற்றி அமைக்கும் வல்லமை கொண்டது என்னும் அழுத்தமான கருத்து கொண்டுள்ளார். அதாவது மனித முயற்சியின் தன்மைக்கு ஏற்பவே இயற்கை எதிர்வினைகள் அமையும் என்னும் நிலைப்பாட்டை அவர் எடுக்கிறார்.

நான் உயர்கல்வி கற்க ஆசைப்படுகிறேன். உயர்கல்வியால் என் வருமானம் உயர்வதோடு பதவி உயர்வும் வரும் என்பது என் கனவு. ஆகவே அதற்கான முயற்சியில் இறங்குகிறேன். நான் கடுமைமையாக உழைத்துப் படிக்கிறேன். சுய போதாமைகள், பலகீனங்கள், குடும்பம், பணியிடம்,  என்று பல்முனையிலும் போராட்டம் நடத்தி முன்நகர வேண்டியுள்ளது. பல தடைகள் இடையூறுகளையும் தாண்டி நான் கல்வியில் தேர்ச்சி பெறுகிறேன். ஆனால் எதிர்பாராவிதமாக என் சம்பள உயர்வோ பதவி உயர்வோ தடைப்படுகிறது. அல்லது அப்படியான வாய்ப்பே இல்லாமல் ஆகிறது. ஆகவே நான் தடுமாறிப்போய் நொந்து கொள்கிறேன். அரசாங்கம் முதல் பலரையும் தூற்றுகிறேன். ஒரு பலனை நோக்கமாக வைத்து நான் செய்த முயற்சி தோல்வி கண்டுள்ளது. இந்தத் தோல்விக்கு காரணம் எது என்பதை ஆராய்வது என் அறிவின் செயலாக இருக்கின்ற பட்சத்தில் சுவாமி பிரம்மானந்தா கூறும் ‘தர்மநியதி’ என்னும் தத்துவார்த்த விளக்கம் என்னை ஆற்றுப்படுத்தும் ஒரு தத்துவமாகிறது. செயல்களின் பலன் என்பது மரணம் போன்றே மிக ரகசியமானது. நாமறியாதது. ஆயினும் அந்த ரகசியத்தை முன்வைத்து நாம் செயல்படாமல் இருக்க முடியாது அல்லவா? உச்சிக் கிளையில் கனிந்த பழமிருக்கும் என்ற நம்பிக்கையில் கடுமையாக முயன்று மரம் ஏறி உச்சாணியை அடைந்த பின்னே அங்கு நிகழப்போவதை யார் அறிவார். ஆசைப்பட்டபடி பழம் இருக்கலாம். அல்லது அது இல்லாமலும் போகலாம். கனி கையில் கிடைத்தும் உண்ண முடியாத நிலையும் வரலாம். அது நம் ஊழ்வினை சார்ந்தது என்று வேதாந்தம் சொல்கிறது. இதையே சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி வெற்றி தோல்வியை முடிவு செய்வது மாயக்கரத்தின் வேலை என்கிறார். ஆகவே, வாழ்க்கையின் ஒரு உச்சத்தில் அல்லது திருப்பத்தில் ஏற்படும் நிறைவுக்கும் ஏமாற்றத்துக்கும் காரணம் தேடித் தவிக்கும் மனதுக்கு சமாதானமாக மட்டுமே ‘தர்மநியதி’ அமையலாம். கட்டுரையின் சாரமும் அதுவே என்பதை வாசித்து முடித்ததும் புரிகிறது.

ஆயினும் மனித வாழ்க்கை அப்படி  எளிதில் சமாதானம் அடைந்து விடுகிறதா என கட்டுரையை வாசித்து முடித்ததும் கேட்டுக்கொண்டேன். மனிதன் ‘எல்லாம் என் தலை எழுத்து’ என்று சுணங்கிப் படுத்துவிட முடியுமா? உலகம் தொடர்ந்து இயங்கிக் கொண்டுதானே இருக்கிறது. உலக இயக்கத்தில் மனிதன் ஒரு பகுதியல்லவா? விழுவதும் எழுவதுமாக மனிதன் ஓடிக் கொண்டுதானே இருக்கிறான். ஆகவேதான் வள்ளுவர், வாழ்க்கை திருப்பங்கள் நிறைந்ததுதான்; எனினும் திருப்பங்கள் வரும் என்று தயங்கி இயங்காமலே இருந்துவிடக்கூடாது என்று உலக இயல்பை விளக்குகிறார். வள்ளுவர் மனித எத்தனங்களுக்கு அப்பாற்பட்ட ‘மாயக்கரத்தை’ பற்றி பெரிதும் பொருட்படுத்தினார் இல்லை. மனிதன், தம் ஆற்றலுக்கு உட்பட்டதைச் செம்மையாக செய்ய வேண்டும் என்று மட்டுமே போதிக்கிறார். ‘கடமையை செய் பலனை எதிர்பாராதே’ என்பதையே குறளும் சொல்லுவதாக நாம் புரிந்து கொள்ளலாம். ஆனால் ‘பலனை எதிர்பாராதே’ என்னும் ஏகாந்தத் தொனி வள்ளுவரிடம் இல்லை. ‘உன் உழைப்புக்கேற்ற பலன் உனக்கு கிடைக்கும் என்பதால் தொடர்ந்து போராடு’ என்பதே அவரது வாக்கு.

‘பலனை எதிர்பாராதே’ என்பது முதிர்ந்த கர்மவீரனுக்கான கட்டளை. வையத்துள் வாழ்வாங்கு வாழ முயல்பவனுக்கானது அல்ல. அவனுக்கு வள்ளுவரே தெம்பூட்டி வழி காட்டுகிறார். முயற்சி திருவினையாக்கும் என்று ‘உன் முயற்சிக்கு நல்ல பலன் கிடைக்கும்’ என்னும் அருள்வாக்கு அவரது. இங்கு அவர் மனிதனது ஊழ் எவ்வாறு வேலை செய்யக் கூடும் என்னும் சாத்தியங்களை கிஞ்சித்தும் வெளிப்படுத்தவில்லை. ஊழ் பற்றிய தயக்கங்கள் உள்ளவன் எப்படி வாழ்க்கையில் இயங்க முடியும்? ஆகவே அவனை இயங்க மட்டுமே அவர் ஊக்குவிக்கிறார். “தயங்காதே. நல்லதுதான் நடக்கும். துணிந்து காரியம் ஆற்று” என்று சொல்கிறார்

மனிதனை ஊக்குவித்து முன்னோக்கி நகர்த்துவது முக்கியமா அல்லது வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் அதன் சுழிப்புகள் புரியாமல் திண்டாடி நிற்கும் மனிதனுக்கு புதிய வெளிச்சங்களைக் காட்டி ஆசுவாசப்படுத்துவது முக்கியமா என்னும் வினாவுக்கு நாம் என்ன விடை கூற முடியும்?

‘புயலிலே ஒரு தோணி’ நாவலில் மரணம் நிலையெனத் தெரிந்தும் போரில் சாகசம் தேடி ஓடும் பாண்டியனாகட்டும், ‘கிழவனும் கடலும்’ நாவலில் சாகசம் புரிய கடலுக்குச் செல்லும் கிழவன் வாழ்வின் இரக்கமற்ற தன்மையை அனுபவிக்கும் கணமாகட்டும் அல்லது வரலாறு முழுவதும் நடந்துமுடிந்த பலபோர்கள் குறித்து இன்று ஒற்றைவரி செய்தியாக படிக்கும்போது செயல்களின் தீவிரத்தில் உள்ள அபத்தம் குறித்த கேள்வி நம் முகத்தின் அறைவதாகட்டும் அனைத்துமே மாயக்கரத்தின் வன்மத்தின் முன் நாம் மண்டியிடும் அற்பர்களாகக் காட்டி பலவீனப்படுத்திவிடுகிறது.

மாயக்கரங்கள் பற்றிய எந்தப் புகாரும் எடுபடப்போவதில்லை. நாளைய தினத்தை முடிவு செய்யும் அதிகாரம் அற்றவன் மனிதன். நாளைக்கான எந்த உறுதிமொழியும் அவனிடம் இல்லை.  ஆகவே ‘மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்’ என்ற ‘பேராசை’ மட்டுமே போதுமானது. தன் வெற்றி தோல்விகளுக்கு தன் மனமும் சுற்றுச்சூழலும் மிகப்பெரிய பொறுப்பு வகிக்கின்றன என்று நம்பி உலைவின்றித் தாழாது உஞற்றும் மனிதனே உலகை முன்னெடுத்துச் செல்கிறான். அவனையே வள்ளுவர் ‘ஊழையும் உப்பக்கம் காண்பர்’  எனப் போற்றுகிறார்.

1 கருத்து for “உலைவின்றித் தாழாது உஞற்றுபவர்.

  1. VIJAYALATCHUMY
    November 7, 2016 at 12:13 am

    பாண்டியன் சார் கட்டுரையை வாசித்தேன். கவர்கிறது. தடைகள் வரும்போதெல்லாம் தெய்வத்தால் ஆகாதெனினும் என வள்ளுவர் வந்து உத்வேகம் கொடுப்பவர். தவறுகள் செய்யத் துணியும் தருணம் வினைப்பயன் குறித்த பயம் வினைக்கு பொறுப்பேற்க தயாராகு என சொல்கிறது. இவற்றை கடந்து ஊழ்வினை பாண்டியன் சார் சொல்வதுபோல வாழ்வில் முயற்சி குறித்து அபத்த மனநிலைக்கு ஈட்டுச் செல்வதாகிறது.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...