வல்லினம் போட்டி சிறுகதைகள்- ஒரு பார்வை

cropped-vallinam.jpgஎட்டாவது வல்லினம் கலை இலக்கிய விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட சிறுகதைப் போட்டிக்கு மொத்தம் 137 கதைகள் வந்திருந்தன. பழையவர்கள், புதியவர்கள் என்று பலரும் இப்போட்டியில் முனைப்புடன் கலந்து கொண்டிருந்தனர். கதைகளை அஞ்சலிலும் மின்னஞ்சலிலும் அனுப்பியிருந்தனர்.  எல்லா கதைகளையும் தொகுத்து  படைப்பாளர் பெயரினை நீக்கி எண்ணென்று பேரிட்டு வாசிக்கத் தொடங்கினோம்.

முதல் சுற்று வாசிப்பில் கதையாக இருந்த எல்லா படைப்புகளையும் தனியே தொகுத்துக் கொண்டு மறுவாசிப்புக்கு கொண்டு சென்றோம். மறுவாசிப்புக்குத் தேறிய கதைகளின் எண்ணிக்கை ஐம்பதை தொட்டது. அவற்றிலிருந்து பத்து கதைகள் மட்டும் பல்வேறு காரணங்களின் அடிப்படையில் தேர்வுசெய்யப்பட்டன. நீண்ட விவாதங்களும் இருந்தன. அந்தp பத்து கதைகளில் டாக்டர் சண்முக சிவாவிடம் ஆறு கதைகள் கொடுக்கப்பட்டு அவர் அதில் மூன்று கதைகளை மட்டும் தேர்வு செய்தார். அந்த மூன்று கதைகளை நாஞ்சில் நாடன் வாசித்து முதல் மூன்று கதைகளை வரிசைப்படுத்திக் கொடுத்தார்.

இதில் குறிப்பிடத்தக்க விடயம் இரண்டாம் வாசிப்பில் எங்களின் தேர்வில் அதிகம் பேசப்பட்ட கதைகளே டாக்டர் சண்முக சிவாவின் தேர்வாகவும் பின்னர் நாஞ்சில் நாடன் தேர்வாகவும் இருந்ததுதான்.  ஆகவே பரிசு பெற்ற கதைகள் எல்லாருடைய வாசிப்பிலும் ஒரே தகுதியை பெற்றிருந்தது மகிழ்ச்சியளித்தது.

பொதுவாக பல சிறுகதைகள் தங்களின் சொந்த அனுபவத்தை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டிருந்தன. வெகுசில மட்டுமே முற்றிலும் கற்பனை உலகம் சார்ந்ததாக இருந்தன. குடும்பம் அல்லது சமூகம் சார்ந்த கதைகளே மிக அதிகம். வரலாறு அறிவியல் சார்ந்த புனைவுகள் மிக அரிதாக இருந்தன. குடும்பச் சிக்கல்கள், நட்பு பிரச்சனைகள், தன்முனைப்பு கருத்துகள் அடங்கிய படைப்புகள் என்று பல இருந்தன. புதியவர்கள் (மாணவர்கள்) எழுதிய படைப்புகளில் பெற்றோரின் தியாகங்களையும் அன்பையும் பேசும் படைப்புகள் அதிகம் இருந்தன. சில கதைகள் ஒரே சிறுகதையில் பல்வேறு கிளைக் கதைகளையும் இணைத்துக் கொண்டு சென்றதால் ஓர்மை இல்லாமலிருந்தன. நல்ல தொடக்கத்தோடும் மொழித் திறத்தோடும் இருந்த சில படைப்புகள் அனுபவப்பகிர்வாக மட்டுமே இருந்ததால் அவற்றில் சிறுகதைக்குறிய அடிப்படை வடிவம் கைகூடவில்லை.

இவற்றின் ஊடே வாசிப்புச் சுவையும் சிறுகதை வடிவமும் நல்ல கதைசொல்லலுடன் கூடிய பத்து கதைகளே போட்டியில் வெற்றி பெற்றன. பத்து கதைகளும் பல்வேறு பிரச்சனைகளை மையமாகக் கொண்டவை. சராசரி கதைப்போக்கில் இருந்து சற்று வேறுபட்டவை. அவற்றில் முதல் மூன்று கதைகள் தரமான படைப்புகளாக இருந்தது நிறைவாக இருந்தது. புதிய படைப்பாளிகளின் படைப்புகளாக இருந்தாலும் அவை முதிர்ந்த எழுத்து நடையையும் கதை உத்திகளையும் கொண்டிருந்தன.

முதல் பரிசு பெற்ற செல்வன் காசிலிங்கம் எழுதிய ‘வலி அறிதல்’ பெண்ணிய உடல் மனச் சிக்கல்களைக் காட்டும் கதையாகும். ஆயினும் ஆணாதிக்க சமூகத்தின் திமிரையும் அது உட்கொண்டு வந்துள்ளது. நாஞ்சில் நாடன் குறிப்பிட்டது போல இக்கதைத் தலைப்பில் வரும் ‘வலி’ என்ற சொல்லை வலிமை அல்லது வேதனை என்ற இருபொருளிலும் எடுத்துக்கொள்ளலாம்.

‘வலி அறிதல்’ கதை ஒரு சிறுவனின் கண்ணோட்டத்தில் சொல்லப்பட்ட கதையாகும். மனிதர்களின்ன் இயல்புகளையும் அவலங்களையும் தனது கண்ணோட்டத்தின் வழி புறவயமாகப் புரிந்துகொள்ளும் சிறுவனின் பார்வையில் கதை சொல்லப்பட்டுள்ளது. சிறுவனின் பார்வையில் தன்னைச் சுற்றியுள்ளவர்களின் தனிச்சிறப்புகள் மட்டுமே பதிவாகியுள்ளன. ஆயினும் அச்சிறப்புப் பண்புகளின் நிழலாய் மறைந்திருக்கும் மனித மன சலனங்களின் கூத்தாட்டத்தை நாம் கதையை வாசித்துப் புரிந்து கொள்ள முடிகிறது. இதனூடே எழுபதாம் (அல்லது எண்பதாம்) ஆண்டுகளின் வாழ்வியலும் பதிவாகியுள்ளது.  ஆகவே இப்புனைவுக்குள் ஒரு வரலாற்று பதிவையும் நம்மால் காணமுடிகிறது

தன் கணவனின் உடல் இயலாமையை அம்பலப்படுத்தி அவமானப்படுத்தத் துணியாத ஒரு பெண் குறுக்கு வழியில் தன் பாலியல் தேவைகளை தீர்த்துக் கொள்கிறாள்.  அவளுக்கும்  பக்கத்து வீட்டு காசிக்கும் ஏற்படும் தொடர்பால் பாதிக்கப்பட்டவள் இன்னொரு பெண்ணான காசியின் மனைவியாகும். லெச்சுமி ஆண்டியின் கணவன் முனியாண்டி தன் இயலாமையை நினைத்து நொந்துகொண்டு வாழ்க்கையின் உதிரியாக வாழ்கிறான். ஆயினும் அவன் தனது குடும்பத்தை உடைத்தெறியாமல் தன்னைமட்டுமே சிதைத்துக் கொள்ளும் நிலையில் இருக்கிறான். கதையின் திருப்பத்தில் பாதிப்பை உருவாக்கும் பெண்ணும் பாதிக்கப்படும் பெண்ணும் ஒரு புரிதலுக்கு வருகின்றனர். அது ஒரு பெண்ணின் வலியை இன்னொரு பெண் உணரும் தருணமாக அமைகிறது. அல்லது வலிமையின் இன்னொரு பரிணாமம் மன்னித்தல் என்ற திறப்பைக் கொடுக்கிறது.

இக்கதையில் வரும் காசி (அப்பா) பல தனித்திறன்களை உடையவராவார். அவர் அறிவும் கலை ரசனையும் மிக்கவராக இருக்கிறார். அதேபோல் லெட்சுமியும் அழகும் ரசனையும் அறிவும் உள்ள பெண்ணாக உள்ளார். இவர்களின் துணையாக இருக்கும் ‘அம்மா’வும் முனியாண்டியும் சராசரி மனிதர்களாகவே இருக்கின்றனர். ஆனால் அறிவும் திறமையும் உள்ள மனிதர்கள் தனிமனித ஒழுக்கம் தவறும்போது அதை சகித்துக்கொண்டு உச்சமான புரிதலோடு வாழும் பெருந்தன்மை உள்ளவர்களாக சாமானியர்கள் உள்ளனர்.  தன்னைவிட அழகும் அறிவும் உள்ள பெண் என்பதோடு தன் வாழ்க்கையில் குறுக்கிட்ட பெண் என்றாலும் அவளையும் மன்னித்து ஏற்றுக்கொள்ளும் பக்குவம் அந்தச் சராசரிப் பெண்ணுக்கு வாய்த்திருக்கிறது. இது இக்கதையில் உள்ள மிக முக்கிய முரணாக அமைந்துள்ளது. அந்த முரணே இக்கதையின் பலமாகவும் உள்ளது.

ஆயினும் இக்கதையில் காணப்படும் ஒரு பலகீனம் அதன் கூறல்மொழியில் உள்ள சிக்கலாகும். ஒரு சிறுகதை யாராக இருந்து சொல்லப்படுகிறது என்பது முக்கியம்.  80-களின் மத்தியில் நடந்த நிகழ்வை  நினைவு கூறும் ஒரு கதையில் கதைசொல்லி (கதை நிகழ்ந்த காலத்தில்) ஒரு அப்பாவி சிறுவனாக இருக்கிறான். அவனுக்கு தன்னைப் பற்றியோ தன்னைச் சுற்றி நடப்பன பற்றியோ முழுமையான தெளிவு இல்லை. சில காட்சிகளை தன் அனுபவங்களாகத் திரட்டிக் கொள்ளும் வயதில் அவன் இருக்கிறான். ஆகவே அவனது விவரணைமொழி எளிமையாகவும் பாமர/குழந்தைத் தன்மையோடும்தான் இருக்க முடியும். அதுவே இயல்பானது.  எழுத்தாளர் கதையின் தொடக்கம் முதல் உலகம் அறியா சிறுவனுக்கு ஏற்ற மொழியையே பயன்படுத்தி இருந்தாலும் கதை முடிவில் அவரையும் மீறி முதிர்ந்த மொழி உலகுக்குள் புகுந்து விடுகிறார்.  எடுத்துக்காட்டாக,

//வீட்டு ஹாலில் நடு நாயகமாக மகாராஜாபோல் அது உட்கார்ந்திருக்கும்.  பால்வீதி போல அதை மையமாக வைத்தே அந்த வீடு சுற்றிக்கொண்டு இருப்பது போன்றதொரு பிரமை எனக்குண்டு//

என்ற வரிகள் ஒரு சிறுவனின் கற்பனை எல்லைக்கு உட்பட்டதாயில்லை.  அதே போல்

//அம்மா திடீரென்று வீட்டிலிருந்து  வெளியே வந்தாள். மகாராணி ஒருத்தி தன் பிரஜைகளுக்கு தரிசனம் கொடுப்பது போலவும், உறைந்து சில்லிட்டுப் போனதொரு கணத்தை சிலிர்ப்பூட்டி உயிர்ப்பிக்க வந்த தேவதை போன்றதொரு பார்வையோடும், உலகனைத்தையும் தன் ஒற்றைப் பார்வையால் பரிகசித்துச் சிரிப்பது போன்ற நடையோடும் அம்மா ஆண்டியை நோக்கி நெருங்கி நடந்தாள்//

என்ற வரிகளில் படைப்பாளர் ஒரு சிறுவனின் பார்வையில் இருந்து விலகி தனது இன்றைய உச்சத்திற்கு வந்து விடுகிறார்.  அவர் அம்மாவின் தோற்றத்தைப் பார்ப்பது சிறுவனின் கண்கொண்டு அல்ல, மாறாக உலக அனுபவங்கள்  நிறைந்த இன்றைய முதிர்ந்த கண்களால்.  ஆகவே கதை சொல்லலின் மொழிப் பயன்பாட்டில் நுணுக்கமான குழப்பம் ஏற்பட்டு விடுகிறது.

ஆயினும் ‘வலி அறிதல்’ மலேசியச் சூழலில் எழுதப்பட்ட சிறந்த கதைகளின் வரிசையில் இடம் பெறும் எல்லாத் தகுதியும் உள்ள படைப்பு என்பது நமக்குப் பெருமைதான்.

அடுத்து, ஐஸ்வரியா கணபதி எழுதி இரண்டாம் பரிசு பெற்ற ‘உப்பு’ இளம் படைப்பாளியால் எழுதப்பட்ட சமகால நவீன படைப்பாக அமைந்துள்ளது. இக்கதையின் கருவும் கதை கூறும் முறையும் இந்த இளம் படைப்பாளரால் பல சிறந்த எழுத்துக்களை கொடுக்க முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

‘உப்பு’ எளிய கரு ஒன்று மிக அழகிய கலை நயத்துடன் கதையாக்குவதில் வெற்றி பெற்றிருக்கிறது. சமையல் கலையில் இயல்பாகவே ஆர்வம் உடைய இரு சகோதரிகளின் மன உணர்வுகளும் அவர்களின் ஆர்வத்திற்கு முரணாகச் செயல்படும் குடும்பமும் சமூகமும் இக்கதையின் மைய சாரமாகின்றன.

சகோதரிகள் இருவரும், நகரத்தில் உள்ள சமையல் கலைப் பள்ளி ஒன்றை முன்மாதிரியாகக் கொண்டு தனது சமையல் கலை மீதான ஆர்வத்தை வளர்த்துக் கொள்கின்றனர். சகோதரிகளின் ஆர்வத்திற்கு அவர்களின் அம்மாவும் துணையாக இருக்கிறார். ஆனால் குடும்பத்தைக் கவனித்து வந்த அப்பா அம்மாவுடன் ஏற்பட்ட மனக்கசப்பால் பிரிந்து சென்றபின் குடும்பச் சூழல் மாறுகிறது. அம்மா குடும்பத்தை கவனிக்க சமையல்காரியாக வேலைக்குப் போகிறார். சமையல் வேலைகளுடன் பண்டு பாத்திரம் தேய்க்கும் வேலையும் செய்ய வேண்டிய சூழல். எச்சில் தட்டுகளைக் கழுவுவதும் சமையல் வேலைகளை இரவுவரை செய்வதுமாக இருக்கும் அம்மாவுக்கு சமையல் மீதே வெறுப்பு ஏற்படுகிறது. அதைவிட தன்னை விட்டுச் சென்ற கணவன் மீதுள்ள வெறுப்பு பலவகையிலும் படர்கிறது. ஆகவே, தன் பிள்ளைகளும் சமையல் செய்வதை அவர் வெறுக்கிறார். இந்த திடீர் மாற்றங்களால் மூத்தவள் அம்மாவுடன் சண்டையிடுக்கொண்டு வீட்டைவிட்டு வெளியேறி விடுகிறாள். அவள் தனக்குப் பிடித்தவாறு மாநகரில் ஒரு நவீன உணவகத்தில் உதவியாளராக பணியில் சேர்ந்து விடுகிறாள்.

இளையவள், சமையல் மீதான தனது ஆசைகளையும் தன் அக்காளின் மீதான நினைவுகளையும் ஒரு சேர ரகசியமாக வைத்துக் கொள்கிறாள். சமையல் குறிப்புகளையும் ரகசியமாக எழுதிவைக்கிறாள். தன் கைக்குக் கிடைக்கும் காய்கறிகளைக் கொண்டே அம்மாவுக்குத் தெரியாமல் புதிய புதிய உணவுகளைத் தயாரித்து தனக்குத் தானே மகிழ்ந்து கொள்கிறாள்.  அவள் செய்வது மிக எளிய சமையலாக இருந்தாலும் அதைச் சமைக்கும் நேரம் அவள் தன்னை மிக உயர்ந்த சமையல் கலைஞனாக நினைத்துக்கொள்கிறாள் என்பதை வாசகர்களால் ஊகிக்க முடிந்த அளவு மிக நுட்பமான வர்ணனைகளையும் விவரணைகளையும் சேர்த்து எழுத்தாளர் இக்கதையை எழுதியிருப்பது இக்கதையினை சிறந்த படைப்பாக ஆக்கியுள்ளது.  எழுத்தாளர் அச்சிறுமியின் சமையல் ஆர்வத்தையும் குடும்பச்சூழல் பற்றியும் மட்டுமே விவரித்துக் கொண்டு சென்றாலும், அச்சிறுமியின் மனதில் மிதந்துகொண்டிருக்கும் எதிர்காலக் கனவுகளும் லட்சியங்களும் நுட்பமான உணர்வுகளின் வழி வாசகனோடு தொடர்பு கொண்டு விடுகின்றன.  அச்சிறுமியின் கனவுகள் நிறைவேற வேண்டும் என்று நம்மை அறியாமலே நாம் நினைக்கத் தொடங்கிவிடுவது இக்கதையின் வெற்றியைக் காட்டுகிறது. ‘உப்பு’ சமையலுக்குத் தேவையான அடிப்படைப் பொருள்  என்பதோடு கட்டுப்படுத்த முடியாத பேரலைகளுடன் பொங்கி ஆர்ப்பரிக்கும் கடலும் துன்பத்தின் அடையாளமான கண்ணீரும் ‘உப்பு’ தான் என்பதால் இக்கதையில் சொல்லப்படாத சிறுமியின் மனஎழுச்சியும் துன்பமுமே இக்கதையின் கருவாகிறது. அதுவே இக்கதையை வெற்றி பெறச் செய்துள்ளது.

மூன்றாவது பரிசு பெற்ற ‘குளத்தில் முதலைகள்’ கதையும் மதியழகன் முனியாண்டி எனும் புதிய எழுத்தாளரால் எழுதப்பட்டதுதான். இக்கதை, மலேசிய சாமானிய மக்கள் தினம் தினம் எதிர்நோக்கும் ‘ஆலோங்’ எனப்படும் கந்துவட்டி சிக்கலில் மாட்டிக் கொண்ட இரு நண்பர்களைப் பற்றியது. இக்கதையின் முக்கியத்துவங்களில் இது மலேசியாவில் மட்டுமே நடக்கக் கூடிய கதை என்பதும் ஒன்று.

வாடகைக்கார் ஓட்டும் குமார் ஆலோங்கிடம் நாள் வட்டிக்குக் கடன் வாங்க அவன் நண்பன் மணியின் உதவியை நாடுகிறான். ஆனால் அவனால் கடனை குறிப்பிட்ட தினத்துக்குள் திருப்பி கொடுக்க முடியாததால் தலைமறைவாகி விடுகிறான். ஆகவே குமார் கடன் வாங்க சிபாரிசு செய்த மணி வட்டி வசூல் செய்யும் முரடர்களிடம் மாட்டிக் கொள்கிறான். வேறு வழி இல்லாமல் தன் நண்பனையும் காட்டிக் கொடுத்து விடுகிறான். இறுதியில் ஒரு சாகசப் படத்திற்குரிய திருப்பங்களுடன் கதை முடிகிறது.

இக்கதை, தமிழ்ச் சூழலுக்குப் புதிய களங்களை அறிமுகம் செய்துள்ளது. ‘கேம் கடை’ எனப்படும் கணிணி சூதாட்ட மையங்கள், வட்டி முதலைகள், டாக்சி ஓட்டிகளின் வாழ்க்கை என்று இக்கதை புதிய களங்களில் நகர்கின்றது. ஒரு சாகசக்கதை போன்று இக்கதை சொல்லப்பட்டாலும் தரமான சிறுகதைக்குரிய நுட்பமான மொழியும் கதை சொல்லும் உத்தியும் அமைந்துள்ளது.

ஆயினும் வாடகைக் கார் ஓட்டிகளின் வாழ்க்கைச் சுமைகளையும் பிரச்சனைகளையும் இக்கதை அவர்கள் சார்பாக சொன்னாலும் அவர்கள் ஏன் சூதாட்டத்தில் அதிகம் ஈடுபடுகிறார்கள் என்பதற்கான விளக்கம் இல்லை.  மேலும்   .

//இனி வாழ்கையில் இரண்டு தப்பு செய்ய கூடாது என தீர்க்கமான முடிவு எடுத்தான். ஒன்று சூதாடுவதில்லை. அது எந்த ரூபத்தில் எந்த டெக்னோலோஜியில் இருந்தாலும் சரி. இரண்டாவது வட்டிக்கு கடன் வாங்குவது கூடாது. அதைவிட முக்கியம் யாருக்கும் வட்டிக்கு கடன் வாங்கி தர உதவி செய்ய கூடாது. உழைப்பவன் உயர்வான். இனி உழைப்பது மட்டும் தான் குறிகோள்.  டாக்சி ஓட்டி முடித்ததும் நேரே வீட்டுக்கு போய் குடுப்பத்தோடு கலந்துவிடுவது//

போன்ற நேரடிக் கருத்துக்களைத் தவிர்த்திருக்கலாம். ஒரு திரைப்படக் காட்சி போல் விரியும் சுறுசுறுப்பான சிறுகதையில் இது போன்ற குறுக்கீடுகள் வாசிப்புக்கு இடையூறாக இருக்கும்.

முதலாம், இரண்டாம் பரிசுபெற்ற இரு கதைகளும் சுயவரலாற்றுத் தன்மை கொண்டவை. படைப்பாளர்களே (அவர்கள் பெயரிலேயே) இரண்டு கதைகளிலும் மையப் பாத்திரமாக வருகிறார்கள். ’குளத்திலே முதலைகள்’ மட்டுமே படர்க்கையாக எழுதப்பட்டுள்ளது. ‘வலி அறிதல்’ முற்றிலும் நனவோடையாக எழுதப்பட்டுள்ளது. ‘உப்பு’, குளத்திலே முதலைகள்’ சிறுகதைகளும் நிகழ்காலத்தில் நின்ற படி பின்னோக்கு உத்தியை கலந்து எழுதப்பட்டவை. ‘குளத்திலே முதலைகள்’ கதையில் இந்த அமைப்பு தெளிவாகத் தெரிகிறது. ஆனால் உப்பில் எது நிகழ்காலம் எது பின்னோக்கு உத்தியால் தொடர்பு படுத்தப்படும் இறந்தகாலம் என்பது தெளிவாக சுட்டப்படவில்லை. வாசகன் கவனமாக வாசித்தே அதை அறிய முடியும். முதல் இரண்டு கதைகளிலும் பெண் கதைமாந்தர் முக்கியத்துவம் பெருகின்றனர். ‘குளத்திலே முதலைகள்’ கதையில் ஆண் கதை மாந்தர்கள் முதன்மை பெருகின்றனர். மேலும் மூன்று கதைகளும் வெவ்வேறு களங்களைப் பின்னணியாகக் கொண்டுள்ளன. ‘வலி அறிதல்’ எழுபதாம் ஆண்டு தோட்டப் புறத்தை பின்னணியாகக் கொண்ட கதை. ‘உப்பு’ நகரமும் புறநகர் பகுதியும் சார்ந்த இடத்தை கதைக் களமாக கொண்டுள்ளது. ‘குளத்திலே முதலைகள்’ பெருநகரத்தை களமாகக் கொண்ட கதையாகும். ஆகவே இக்கதைகள் தனித்தன்மையுடனும் புதிய தேடல்கள் கொண்டனவாகவும் உள்ளன என்று கூறலாம்.

முடிவாக, இச்சிறுகதைப் போட்டி மலேசியாவில் சில நல்ல படைப்பாளிகளை நமக்கு அடையாளம் காட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. அவர்களில் புதியவர்களும் பழையவர்களும் அடங்குவர். இந்தப் போட்டியை முன்னெடுப்பாகக் கொண்டு அவர்கள் இனி தொடர்ந்து எழுதவேண்டும் என்பதே நமது கோரிக்கை. அதேபோன்று மாணவர்கள் பலரும் இப்போட்டியில் பங்கெடுத்தது அவர்களின் எதிர்கால இலக்கிய செயல்பாட்டுக்கு அச்சாரமாக அமையவேண்டும் என்பது நமது அவா.

1 கருத்து for “வல்லினம் போட்டி சிறுகதைகள்- ஒரு பார்வை

  1. December 2, 2016 at 5:26 pm

    கதைகள்பற்றிய தன் தொகுப்புரையில் அ.பாண்டியன் கூறியிருப்பதைப்போல கதையின் மொழித்தேர்வில் பலவீனமிருந்தாலும் செல்வன் காசிலிங்கத்தின் ‘வலி அறிதல்’ நிராகரிக்கமுடியாத ஒரு படைப்பாகும். கதை நடந்திருக்கக்கூடிய காலம் 80ம் ஆண்டல்ல, 1970 களின் நடுப்பகுதியாக இருக்கவே சந்தர்ப்பமுண்டு. யூனியன் ஆபீஸில் ‘வானம்பாடி’ பத்திரிகைகளையெல்லாம் செல்வன் கண்டிருக்கிறான். 1972 இலேயே ‘வானம்பாடி’ நின்றுபோய் விடுகிறது. ஒரு சிறுவனுக்குரிய மொழியில் கதையைச் சொல்லிக்கொண்டுவரும் செல்வன் கடைசிக்கட்டங்களில் பால்வீதி, மற்றும் தேவதைகளைப் பற்றிப்பிரலாபிப்பது கொஞ்சம் பொருத்தமாக இல்லைத்தான்.
    செல்வன் காசிலிங்கம் இன்னும் நிறைய வாசிக்கவும் எழுதவும் முயன்றாரானால் இதைவிடவும் உயர்ந்த படைப்புக்களை தருவதற்கு சாத்தியங்களுண்டு, அவருக்கு எனது பாராட்டுக்கள்!

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...