நீயின்றி அமையாது உலகு -10

tayag 3அன்று காலை அலுவலகத்தில் ஓர் அதிசயம் நடந்தது. அழகியொருத்தி வேலை கேட்டு வந்திருந்தாள். பொருட்களின் தரத்தைப் பரிசோதிக்கும் வேலை என்பதால் ஓரிடத்தில் நிற்காமல் சுற்றிக்கொண்டிருந்தேன். ஒவ்வொரு முறையும் சுற்றை முடிக்கும்போது அலுவலக வாசல் நாற்காலியில் அமர்ந்திருக்கும் அந்த யுவதியைப் பார்க்க நேர்ந்தது.

யுவதியைக் கண்டதும் யுவன் சங்கர் ராஜாவின் பாடல் போல ஏதோ ஒன்று காதில் கேட்டது. சட்டென சுதாரித்துக்கொண்டு, திரும்பினேன். இரண்டாவது வரிசையில் அமர்ந்திருந்த வேலையாள் கைபேசியை லாக்கரில் வைக்காமல் கொண்டு வந்திருக்கிறார். போதாதென்று கைபேசியை முடக்காமல் வேறு வைத்திருக்கிறார். முன்பு கேட்ட யுவனின் பாட்டு எனக்கு மட்டுமல்ல அவ்வரிசையில் அமர்ந்திருக்கும் எல்லோருக்கும் கேட்டிருக்கிறது.

எங்களின் அறைக்கு நுழைந்ததும் யுவதி குறித்த விடயத்தை நண்பரிடம் பகிர்ந்தேன். துள்ளிக்குதித்தார். ஆயிரமிருந்தாலும் முதலில் பார்த்தவனுக்குத்தான் சைட் அடிக்க உரிமை என பேசிவிட்டு நகர்ந்தேன்.

எழுந்து சென்று வாசல் நாற்காலியில் யுவதியை பார்த்த நண்பர் சந்திரன் கொஞ்சம் அதிர்ச்சியில்தான் திரும்பி வந்தார்.

“என்ன பாஸ்… தம்பிக்கு ஒரு ஜோடி வந்திருக்கு எப்பூடி..?” என்றேன்.

அதிர்ச்சியை முழுமையாகக் காட்டிக்கொள்ளாமல்.

“தம்பி அந்தப்பொண்ணை எனக்குத் தெரியும் உனக்கு சரிவராது பார்த்துக்கோயேன்..” அவரிடம் இருக்கும் கெட்ட பழக்கம். எதையுமே முழுமையாக சொல்லித்தொலைக்க மாட்டார். யுவதி குறித்து தெளிவாக சொல்லியிருந்தால் அப்போதே சுதாரித்துக் கொண்டிருப்பேன்.

நமது வேலையிடத்தில் அழகி ஒருத்தி வந்துவிட்டால், அதன் பிறகான மாற்றங்களை நாம் கூடக் கணித்துவிட முடியாது. அது காதலா என்றெல்லாம் சந்தேகிக்க அவசியமில்லை. அதற்கு முந்தைய உள்ளப்பூரிப்பு என்று எடுத்துக்கொள்ளலாம்.

அந்த பெண் லட்சுமி.  இரண்டு வாரத்தில் அவள் வேலைக்குத் தேர்வானாள். தேர்வானாள் என்பதை விட நானும் நண்பர் சந்திரனும்தான் அந்த பெண்ணுக்கு ஏற்ற மாதிரியான வேலை இருப்பதாக மேலதிகாரியை நம்ப வைத்தோம்.

லட்சுமிக்கு முதல் நாள் வேலை. பொறுப்பு என்னிடமே வந்தது. ஆக எனக்கு உதவியாளர்  கிடைத்துவிட்டார். தொழிற்சாலை கண்கள் என் மீது திரும்பியது. ஆனால் அக்கா மட்டும் எதனையும் கண்டு கொள்ளவேயில்லை. அதற்கான உள்ளர்த்தம் ஏதாகிலும் இருக்கலாம் என என் மனம்  எச்சரித்தது.

ஆனால் எல்லாவற்றுக்கும் மேலாக, ஏற்பட்டிருந்த உள்ளப்பூரிப்புக்கு ஈடாக ஏதுமில்லை.  லட்சுமிக்கு வேலை கற்றுக்கொடுக்கத் தொடங்கியதும், அங்குள்ள பெண் பணியாளர்கள் என்னிடம் அதிகமாக பேசவும் கவனிக்கவும் தொடங்கினார்கள்.

இதுவரையில் என்னைக் கவனிக்காத பெண்கள் கூட வேண்டுமென்றே என்னிடம் பேச ஆரம்பித்தாரகள். ஒவ்வொரு வரிசையாக செய்யவேண்டிய வேலைகளை பட்டியல் போட்டுக்கொண்டிருந்தேன். அடுத்த வரிசைக்குச் செல்வதற்கு முன்பாக லட்சுமியிடம் ஏதும் சந்தேகமுள்ளதா என கேட்டேன். பின்னர் மேலாளர் ஏதும் கேட்டால் அவள் பதில் சொல்லவேண்டுமே.

அவளது முதல் கேள்வி, “ஆமா எல்லா பொண்ணுங்களும் உங்ககிட்ட சிரிச்சி சிரிச்சி பேசறாங்களே, மன்மதன்தான் போல நீங்க..?”

இதுவரை தானாகவே வந்து பேசியவர்கள் லட்சுமியின் இந்த கேள்வியில் வென்றுவிட்டார்கள். எனக்கும் அப்போதுதான் புரிந்தது. நான் தனியாக ஒவ்வொருtaya g 2 வரிசையாகச் சுற்றி வந்தபோதெல்லாம் கண்டுகொள்ளாதவர்கள், எனக்கென ஜோடியொன்று கிடைத்திடலாமோ என்ற அச்சத்தில் அவர்களின் இயல்பில் இருந்து மாறியிருக்கிறார்கள் அல்லது என் மீது இருந்த கவனம் இப்போதுதான் தன்னை வெளிக்காட்டியிருக்கலாம்.

எப்படியும் நம் வழிக்கு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளதைவிட நமக்கு இனி கிடைக்காதோ என்கிற பயம்தான் நம்மைச் செயல்பட வைக்கிறதோ என்னவோ. எல்லாவற்றுக்கும் மேலாக அக்கா, லட்சுமி வந்ததில் இருந்து ஒதுங்கிக்கொண்டார். இதுவும் கூட எனக்குப் புரியாமல் இருந்தது. பேசாதவர்கள் பேசுகிறார்கள் பேசியவர் ஒதுங்கிக்கொள்கிறார்.

அப்படியாக லட்சுமி மீது ஈர்ப்பு உண்டானது. என் உயரத்திற்கு ஏற்றார் போல ஒரு பெண்ணை இத்தனை  அருகில் பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது இல்லை. மஞ்சள் நிறம்  கொண்டிருந்தாள். ஒட்டிய கன்னங்கள். கூர் மூக்கு. வலது காது மட்டும் உச்சியில் வடிவம் இன்றி வளைந்திருக்கும். தோள் அளவு மட்டுமே வளர விட்ட கேசம். நன்றாக இருந்திருக்க வேண்டும் ஆனால் பொறுக்காமல் பிடிங்கி விட்டாள் என குறை வாங்கும் புருவம்   எதைச்   சொன்னாலும் ஒரு குலுக்கு குலுக்கி சிரித்த பின்னர்தான்  சொன்னதை முழுமையாகக் கேட்பாள். அதுதான் அவள் மீதான ஈர்ப்புக்கு காரணமாக இருக்கலாமோ என நினைக்கத் தோன்றும்.

ஒரு  முறை பொருட்களின், தரம் பார்த்து குறிப்பெடுத்துக் கொண்டு  ஒவ்வொரு வரிசையாக வந்துகொண்டிருந்தோம். லட்சுமியின் சந்தேகங்கள் அன்று கொஞ்சம் அதிகமாகவே இருந்தன. ஒவ்வொரு இடத்திலும் குறைந்தது இரண்டு கேள்விகளாவது கேட்டுக் கொண்டே இருந்தாள். நானும் பதில் சொல்லிக்கொண்டே வந்தேன். எதையோ நகைச்சுவையாகச் சொல்லிவிட்டேன். குலுங்கிச் சிரித்தவள் சட்டென என் இடுப்பைக் கிள்ளினாள். சட்டென மின்சாரம் மண்டைக்கு ஏறி இறங்கியது.  அந்நியப் பெண்ணின் கைவிரல் இதுவரை என் இடுப்பில் தொட்டதாக நினைவில் இல்லை.

அந்தத் தொடுதல் அன்றைய இரவை நீளமாக்கியது. அவள் தொட்ட இடத்தை தடவிக்கொண்டே மீண்டும் மீண்டும் அந்த மின்சாரத்தை தலையில் ஏற்றி கொண்டிருந்தேன். உறங்கவில்லை என்பது உறுதியாய் தெரிந்தும் கூட கனவு போலவே அவள் அருகில் இருப்பதாய் தெரிந்தது.

taya g 1சக பணியாளார் வரவில்லை. அவர் வேலையை நான் செய்யும்படி ஆனது. மற்ற தொழிற்சாலைகளில் இருந்து இங்கு வரும் பொருட்களின் தரத்தைக் கவனித்து பயன்பாட்டுக்குக் கொடுக்க வேண்டும். மெல்லிய கம்பிகள் அடங்கிய சில பொட்டலங்கள் அதில் இருக்கும். அதில் இருந்து, இத்தனை  பொட்டலத்திற்கு இத்தனை கம்பிகள் என்ற வரையறையில் பிரிக்க வேண்டும். குறிப்பிட்ட  எண்ணிக்கைக்கு அதிகமாக தரமற்ற கம்பிகள் இருந்தால் மொத்தப் பொட்டலத்தையும் திரும்ப அனுப்பி விடுவோம். இதேதான் எங்களுக்கும் நடக்கும். நாங்கள் அனுப்பிய ‘பிளக்குகள்’ (மின்னூட்டிகள்) பெட்டியில் தரமற்றவை இருந்து திரும்ப வந்தால் எங்கள் பாடு அதோ கதிதான்.

மிகக்கவனமாக செய்ய வேண்டிய வேலை என்பதால் அந்தப் பொறுப்பை எனக்குக் கொடுத்தார்கள். கூடவே லட்சுமியை அனுப்பினார்கள். இந்தப் பரிசோதனைக்கூடம் எங்கள் அறைக்கு பக்கத்துக்கு அறையில் இருந்தது. உள்ளே அதிகபட்சம் நான்கு பேர் மட்டுமே அமர்ந்து வேலை பார்க்க முடியும். ஆள் பற்றாக்குறையால் நானும் அவளும் மட்டுமே இருந்தோம்.

பக்கத்துப் பக்கத்து நாற்காலியில் அமர்ந்து கொண்டோம். சொல்லிக் கொடுத்தது போலவே வேலை நடந்து கொண்டிருந்தது. அதிகக் குளிருள்ள இடமென்பதால் அவ்வப்போது பேசும்போது வாய் தானாக வாத்தியம் வாசித்தது. வேலைக்கு இடையிடையில் எதேதோ பேசினோம். ஏதோ நினைவு வந்தவளாய் “ஆமா ராத்திரி தூக்கம் வந்துருக்காதே…” என்று சிரிக்க ஆரம்பித்தாள். ஆனால் இது அவளின் இயல்பான சிரிப்பாக இருக்கவில்லை. புதிதாக இருந்தது. ஏன் இந்தச் சிரிப்பை இத்தனை நாள் காட்டாமல் இருந்தாள் யோசித்து கொண்டே மறுத்தேன்.

“பொய் சொல்லாதீங்க , எனக்கே தூக்கம் வரல” என்று மீண்டும் இடுப்பில் கிள்ளினாள்.      இம்முறை என்னை அறியாமல் அவளின் மெல்லிய கரத்தை பிடித்துக்கொண்டேன். ஒரு  நொடிதான் என் கைபேசி அதிர்ந்தது. இருவரும் சுதாரித்துக் கொண்டோம். அக்காதான் குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார். சட்டென மேலாளர் கதவைத் திறந்து உள்ளே வந்தார். அவர் சிலநொடிக்கு முன்னால் வந்திருந்தால்? என் கரம் பற்றிய அவள் கரம் என் இடுப்பில் இருந்திருக்கும். அதைவிட பீதி  அக்காவின் குறுஞ்செய்தி, அதில் இருந்தது  “வேலையைப் பாருடா “.

தொடரும்…

 

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...