தொழில்

ganga 3வகுப்பறையில் மாணவர்கள் எனக்காகக் காத்திருந்தனர். அவர்களுக்கும் எனக்கும் ஏற்கனவே ஓர் உடன்பாடு ஒப்பந்தமாகியிருந்தது. மாணவர்களாகட்டும் நானாகட்டும் பத்து நிமிடத்திற்குள் வகுப்பில் இருக்க வேண்டும். அடுத்த பதினோறாவது நிமிடத்தில் பாடம் ஆரம்பமாகும். ஐந்தாவது நிமிடத்தில் வகுப்பில் நுழைந்தேன். அவர்கள் முகத்தில் சின்னதாய் ஏமாற்றத்திற்கான ஓர் அறிகுறி.

பாடம் தொடங்கியது.

சீன மாணவர்களுக்குத் தமிழ்மொழி வேற்றுமொழிப் பாடம். எட்டு ஆண்டுகளாக இது தொடர்கிறது. எந்தத் தனியார் பல்கலைக்கழகங்களிலும் இல்லாத ஒன்று நான் வேலை செய்யும் பல்கலைக்கழகத்தில் உள்ளது. ஆக, தனியார் பல்கலைக்கழகத்தில் தமிழ் போதிக்கும் ஒரே ஒரு விரிவுரையாளன் என்பதில் பெருமை மட்டுமே கொள்ளமுடியும்.

மாணவர்களிடம் ஒருவரை ஒருவர் தமிழில் எப்படி அறிமுகப்படுத்துவது என்பது குறித்து ஆங்கிலத்தில் தமிழ் பாடம் நடத்தினேன். தமிழ்மொழியை மூன்றாம் நிலை மாணவர்களாகப் பயில்பவர்களிடம் அவசரமாகவோ அல்லது வேக வேகமாகவோ மொழியைப் போதிக்கக்கூடாது. அவர்கள் புரிந்துகொள்ளும் விதம் மிதமான ஓட்டத்தில் பாடம் போதிக்க வேண்டியிருக்கும். அப்படியாக, மாணவர்கள் தங்களை எப்படி அறிமுகம் செய்துகொள்ள வேண்டுமென கேள்வி வாயிலாக பதிலைக் கண்டடைந்தனர். அடுத்தபடியாக தங்களது குடும்ப உறுப்பினர்களையோ அல்லது நண்பர்களையோ எப்படி அறிமுகம் செய்வதென ஆர்வத்துடன் கற்றுக்கொண்டிருந்தனர். பொதுவாக புதுச் சங்கதிகளைக் கற்றுக்கொள்ளும்போது மாணவர்கள் தாம் கற்றவற்றை பிற மாணவர்களிடம் பேசிக்காட்டி சிரித்துக் கொள்வார்கள். சீன மாணவர்கள் தமிழில் பேசுவதை விடுத்து தமிழர்களைப்போல் பேச முயற்சிப்பார்கள்.

அது வேடிக்கையான ஒன்று.

போதனையில் தந்தையை அறிமுகம் செய்வது குறித்து போதித்தேன். அவரது தொழில்ganga குறித்துக் கேள்வி கேட்டேன். ஒவ்வொரு மாணவரும் அதற்குப் பதில் சொல்ல வேண்டும். தொன்னூறு விழுக்காடு மாணவர்கள் பிசினஸ்மேன் என ஆங்கிலத்தில் பதில் கொடுப்பார்கள். பிசினஸ்மேன் என்ற வார்த்தை எனக்குள் ஆர்வத்தை உண்டு பண்ணும். சீனர்கள் இந்நாட்டு பொருளாதாரத்தைத் தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்கு முதன்மைக் காரணம் வியாபாரம். தங்களது தந்தை பிசினஸ்மேன் என சொல்வதில் அவர்களிடத்திலும் பெருமை இருந்தது. பிசினஸ் என்றால் என்ன பிசினஸ்? என கேள்வி கேட்கும்போதுதான் மாணவர்களுக்குச் சிக்கல். சில மாணவர்கள் குழப்பம் அடைவார்கள். பிசினஸ் என்றால் பிசினஸ் என்பார்கள். அதுதான் என்ன பிசினஸ் என்பேன். எல்லாமே வியாபாரம் அல்லவே. வியாபாரம் என்பதும் வணிகம் என்பதும் கூட வேறு அல்லவா. மாணவர்கள் எதையெல்லாம் அவர்களது பட்டியலில் பிசினஸ் எனச் சேர்த்திருக்கிறார்கள் என அறிவதற்காகவே இந்தக் கேள்வி. அவர்களிடமிருந்து அவர்களது தந்தையின் குறிப்பிட்ட தொழிற்பெயரை அறிந்திட எனக்கும் அவர்களுக்குமான விளையாட்டு அது.

எல்லா மாணவர்களும் அவர்களது அடையாளத்தை வெளிப்படுத்தத் தயாராக இல்லை. பல ஆயிரம் மாணவர்கள் பயிலும் இடத்தில் அவர்கள் தங்களது அடையாளத்தை மெழுகு பூசி மெருகேற்றவோ அல்லது மறைக்கவோ போராடுகிறார்கள். அங்கு யார் ஏழை வீட்டுப் பிள்ளைகள், யார் பணக்கார வீட்டுப் பிள்ளைகள் என அறிவது கடினம். இன்றைய நவநாகரிகத்திற்கு ஏற்ப தங்களைத் தயார்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். மாணவன் ஒருவன் ஏழ்மையில் இருந்தாலும் அவனது வெளித்தோற்றம் அதனை முழுமையாக மறைத்திருக்கும். அது ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி. விலையுயர்ந்த காலணிகள் அல்லது போலிமுத்திரை கொண்ட காலணிகளாகக் கூட இருக்கலாம். மோடர்ன் பெயரில் ஸ்டைலான ஷேர்ட்டுகளும் பேண்ட்டுகளும் அணிந்திருப்பார்கள். குறிப்பாக கையில் சாம்சங் அல்லது ஐபோன் இருக்கும். அவர்களைப் பார்க்கும்போதுதான் நமக்கு வயதாகி விட்டதோ என்ற எண்ணம் அவ்வப்போது எழும்.

சில மாணவர்கள் இதனையெல்லாம் வாங்கிடவே பகுதி நேர வேலைக்குச் செல்வது உண்டு. தாங்கள் வாங்க வேண்டிய பொருளுக்கு வேண்டிய தொகை கிடைத்தவுடன் வேலையை விடுவது அவர்களது வழக்கம். அப்படியாக ஒரு மாணவன் இல்லாமலிருந்தால் அவன் அநேகமாகத் தனியனாக அலைந்து கொண்டிருப்பான். அவனை எல்லோரும் அவர்களது வட்டத்தில் சேர்த்துக்கொள்ள மாட்டார்கள்.

தனது தந்தை பிசினஸ்மேன் எனச் சொல்வதிலிருந்து மாணவர்கள் சாமர்த்தியமாக தங்களின் அடையாளத்தைக் கட்டமைத்துக் கொள்கிறார்கள். பிசினஸ்மேன் என்றவுடன் உங்கள் மனதில் எம்மாதிரியான எண்ணங்கள் உருவாகும்? பிசினஸ்மேன் என்றால் மிகப் பெரிய வியாபாரத்தை செய்யக்கூடியவர்; அவரிடம் ஒரு கம்பெனி இருக்கலாம்; அதன் கீழ் பலர் வேலை செய்யலாம்; பெரும் பணக்காரராக இருக்கலாம் என இப்படியாக நமக்குள் உருவாகும் எண்ணங்கள். ஆம், பிசினஸ்மேன் என்ற வார்த்தையின் ஜாலம் அதுதான். ஆக, நாம் தொடர்ந்து அவர்களது பின்புலத்தை ஆராய்வதைத் தவிர்த்து விடுவோம். மாணவர்கள் மத்தியில் தங்களது தந்தை பிசினஸ்மேன் என்று சொல்வதிலிருந்து சக மாணவர்களிடம் பழகுவதில் அவர்களுக்கு இனி எந்தச் சிக்கலும் கிடையாது. இதுதான் மாணவர்களின் சாமர்த்தியம்.

வழக்கமாக தந்தையின் தொழில் குறித்துக் கேள்வி கேட்க ஆரம்பித்தேன். எதிர்பார்த்தது போலவே, பல மாணவர்களிடத்திலிருந்து பிஸினஸ்மேன் என்று பதில் வந்தது. மாணவர்களில் குறிப்பிட்டு ஒருவனை தேர்ந்தெடுத்து பிசினஸ் என்றால் என்ன பிசினஸ் என்றேன். ‘விற்பனை செய்கிறார்’ என்றான். விற்பனை என்றால் எதை விற்பனை செய்கிறார்? என கேட்டேன். சாப்பாடு என்றான். உணவகமா? என்றேன். இல்லை என்றான். பின்ன ஹோக்கரா? (Hawker) என்றேன். ஆமாம் என்றான். அதை ஆரம்பத்திலேயே ஹோக்கர் என்றிருக்கலாமே என்றேன். ஹோக்கர் என்று சொல்வதில் அவனிடம் ஒரு தயக்கம் இருந்ததை உணர முடிந்தது. அவன் இறுகிய முகத்தில் லேசான ஓர் அசட்டுச் சிரிப்பு.

மாணவர்களிடத்தில் ஒன்றை மட்டும் சொல்ல வேண்டும் என்றிருந்தது.

‘எந்தத் தொழிலைச் சொல்வதற்குத் தயக்கம் காட்டுகிறீர்களோ அந்தத் தொழில்தான் உங்களை இங்கு படிக்க வைத்து பட்டதாரியாக்கத் தீவிரம் காட்டிக் கொண்டிருக்கிறது’.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...