“எளிய வாசிப்புத்தளத்தைத் திருப்திப்படுத்த நகர்த்தப்படும் எழுத்து நீர்த்துப்போவதை தவிர்க்கவியலாது” – சீ.முத்துசாமி

03 siசீ.முத்துசாமி 1949-ஆம் ஆண்டு மலேசியாவின் கெடா மாநிலத்தில் அமரர்களான சீரங்கன் முத்தம்மாள் தம்பதிகளின் மூத்தமகனாகப் பிறந்தார். 1973 முதல் இலக்கிய ஈடுபாடு கொண்டு சிறுகதைகளும், குறுநாவல்களும், நாவல்களும் எழுதி வருகிறார். இவர் படைப்புகள் மலேசியாவில் தனித்துவமான எழுத்து பாணியைக்கொண்டவை என்பதோடு பல்வேறு விருதுகளையும் பாராட்டுகளையும் பெற்றிருக்கின்றன. குறிப்பாக இவரது ’இரைகள்’ சிறுகதை, தமிழகத்தின் குமுதம் இதழின் சிறுகதைப் போட்டியில் (1977) முதல்பரிசு பெற்றதோடு தமிழகத்தின் இலக்கியச் சிந்தனையின் மாதாந்திரச் சிறந்த சிறுகதையாகவும் (நவம்பர் 1977) தேர்வு பெற்றது. மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் மாதாந்திரச் சிறுகதைத் தேர்வில் பல முறை பவுன்பரிசுகளும் செம்பருத்தி இதழின் குறுநாவல் போட்டியில் முதல் பரிசும் (2002) பெற்றது. 2005-இல் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம், அஸ்ட்ரோ தொலைக்காட்சி, மலேசியத் தோட்டத் தொழிலாளர் சங்கம் ஆகியவை இணைந்து நடத்திய நாவல்போட்டியில் இவரது ‘மண்புழுக்கள்’ நாவல் முதல் பரிசு பெற்றது. இவர் இதுவரை இரைகள் (சிறுகதை தொகுப்பு – 1978), மண்புழுக்கள் (நாவல் – 2006), அம்மாவின் கொடிக்கயிறும் எனது காளிங்க நர்த்தனமும் (சிறுகதை தொகுப்பு – 2012) மற்றும் இருளுள் அலையும் குரல்கள் (குறுநாவல் தொகுப்பு – 2014) ஆகிய நான்கு நூல்களை வெளியிட்டுள்ளார். இவ்வருடத்திற்கான விஷ்ணுபுரம் விருது பெறப்போகும் சீ.முத்துசாமியை அவரது வீட்டில் சந்தித்தோம்.

 

கேள்வி: சீ.முத்துசாமி எழுத்தாளராக எப்போது எங்கிருந்து புறப்பட்டவர்?

சீ.முத்துசாமி: எங்கிருந்து என்பது இடத்தைக் குறிப்பதாக இருந்தால், சுங்கை பட்டாணியிலிருந்து 20 கி.மீ தொலைவிலுள்ள யு.பி சிலம்போ டிவிஷன் அல்லது ‘பதனாலு’ என்று சுருக்கமாக குறிக்கப்படும் எனது பூர்வீக இடம்.

எப்போ என்பதை எனது வயதாக கொண்டால், இருபது முதல் இருபத்தைந்துக்குள் என்று சொல்லலாம். ஆனால், இவை இரண்டும் புற அடையாளங்கள் என்பதால், எழுத்து போன்ற அகவய வெளிப்பாட்டுக்கு அதனை சரியானதொரு அளவுகோலாகப் பயன்படுத்துவது பொருந்தாது.

இலக்கியத்துக்கு அத்தகையதொரு தொடக்கப்புள்ளி ஒன்று உண்டா என்கிற கேள்வியும் எழுகிறது. படைப்பு என்பது ஒரு பன்முக இழைகளின் முரணியக்கம் என்றே பரவலாக அறியப்படுகிறது. கண்களுக்குப் புலப்படாத மிக ஆழத்துள்.  பிரக்ஞை வெளியின் ஏதோவொரு மறைவிடத்தில், என்றோ விழுந்த ஒரு விதையின் கண் விழிப்பு. அது நிகழும் தருணம் நமது அறிதல் வட்டத்துக்குள் வருவதற்கான சாத்தியக்கூறுகள் மிக அரிது.

நிச்சயமாக அது எனது முதல் கதையோ கவிதையோ நிகழ்ந்த தருணம் அல்ல.

கட்புலன்களுக்கு அற்பாற்பட்ட ஓரிடத்திலிருந்து, தொடர்ச்சியான உள்ளியக்கத்தின் ஒரு புள்ளியில், நிகழ்ந்த உச்சக்கட்ட வெடிப்பில், புறப்பட்ட ஒரு வாழ்க்கைப் பயணம்.

ஜக்கி வாசுதேவ் சொல்வது போல, இதுவும் ஒரு process. மாமரத்தின் பூக்களிலோ, கிளைகளிலோ, தண்டுகளிலோ, வேர்களிலோ இல்லாத இனிப்பு அதன் பழத்துள் வந்து சேர்ந்த, ஒரு நீண்ட process. மாய கணம்.

கேள்வி: தொடர்ந்து எழுதுவதற்கான மனநிலையைத் தக்க வைத்துள்ளீர்கள். எவ்வாறு அதை சாத்தியப்படுத்துகிறீர்கள்?

சீ.முத்துசாமி: எழுதுவதின் மேல் உள்ள ஈர்ப்பு இன்னும் வற்றி வறண்டு போகாமல் இருப்பதுதான், முதன்மைக் காரணம்.

மேலும் எனது எதிர்ப்பார்ப்புக்கு ஏற்ப, என் படைப்புலகம் இன்னமும் விரிவடைந்து, ஒரு கணிசமான அளவைத் தொடவில்லை என்கிற மனநிறைவின்மையும் ஒரு காரணம்.

அதன் தொடர்ச்சியாக, எனது படைப்புலகத்தின் தரம் தொட்டிருக்கும் எல்லை குறித்த கேள்வியும் எழுகிறது. அதன் போதாமை குறித்த அதிருப்தி உணர்வும் கூட, அதன் பின்னணியில் இயக்கம் கொண்டிருக்கும் ஒரு உந்துவிசையாக இருக்கும் சாத்தியக் கூறு உண்டு.

எந்தவொரு புதியதான படைப்பைக் கடந்துவிட்ட நிலையில், நின்று, திரும்பிப் பார்க்குந்தோறும், அதில் தூக்கலாய் எட்டிப் பார்த்து கண்ணை உறுத்தும், அதன் போதாமையை ஏதோவொரு வகையில் உணருந்தோறும் அடுத்த படைப்பு குறித்த தேடல் அலைகழிக்கத் தொடங்கிவிடுகிறது.

இத்தகைய போதாமைகளை, இட்டு நிரப்பும் ஒரு தொடர் செயல்பாடாகவே, இந்த ‘தக்கவைத்துக் கொள்ளல்’ என்னுடன் விடாப்பிடியாக தொடர்ந்து பயணித்த வண்ணம் உள்ளது என்பதாகப் புரிந்துகொள்கிறேன்.

நாளையே இதன் அடிநாதமாக விளங்கும் படைப்பூக்கம் என்னைக் கைவிடலாம். ‘Writer Block’ குறுக்கே ஒரு பெரும் பாறையை உருட்டிவிட்டு, பயணத்தை ரத்துச் செய்துவிடலாம். அது என் கையில் இல்லை. பார்ப்போம்.

கேள்வி: இலக்கியம் அல்லாத வேறு கலை துறைகளில் உங்களது ஆர்வம் எப்படி?

சீ.முத்துசாமி: இயல்பிலேயே நான் ஒரு நாய் பிரியன். விபரம் தெரிந்த நாள் முதலே05 si என்னோடு தொடர்ந்து வரும் குணம் இது. பத்து வயதில் நோயுற்றிருந்த ஒரு நாய்க்குட்டியை சாக்கில் போட்டு தூக்கிக் கொண்டு பஸ் ஏறி, சுங்கை பட்டாணியிலிருந்த கால்நடை மருத்துவமனைக்குப் போய் வந்தது இப்போதும் நினைவுண்டு. குட்டியைச் சோதித்த ஒரு கால்நடை மருத்துவர்  அது குணப்படுத்த முடியாத Distemper என்கிற வைரஸ் தாக்கிய நோய் என்று கூறி, கைவிரிக்க, குட்டியோடு மீண்டும் பஸ் ஏறி, தோட்டத்திற்கு போனதும், சில நாட்களில் குட்டி இறந்து போனதும், அவ்வப்போது நினைவில் வந்து போகிற அந்த உலகின் மங்கலான நிழலாட்டம்.

அன்று தொடங்கி இன்றுவரை வீட்டில் நாய்களின் நடமாட்டம் இல்லாமல் இருந்த காலம் ஏதுமில்லை. இன்றும் நான்கு பேர் இருந்த இடத்தில், ஒரே வருடத்தில் இருவர் அகால மரணமடைய, இப்போது இருவர் மட்டுமே.

அது முற்றிலும் ஒரு தனித்துவமான உலகம். ஏதோவொரு தளத்தில் அந்த ஜீவன்களின் அக உலகை நமது மனக் கண்ணால் ஊடுருவ, அவற்றுடனான மெளன உரையாடல் சாத்தியப்பட்டுவிடுகிறது. மிக நுண்ணிய உணர்வுத் தளமும், பேசும் கண்களும் கொண்ட, மானுடம் தனது தோழமைக்கு கண்டடைந்த உன்னத ஜீவன்கள் அவை.

இதுவரை எனது புனைவுலகில் ஓரளவே தொட்டுக் கடந்த அவ்வுலகம், எனது வரவிருக்கும் அடுத்த நாவலில் சற்றே விரிந்த தளத்தில் வரவிருக்கிறது.

எனது நண்பர்கள் பலரின் பிரக்ஞையில், அவ்வுலகம் மேலோட்டமாகவேனும் காணக் கிடைக்காத ஏமாற்றம் எப்போதும் உண்டு. அதிலும் நுண்ணிய உணர்வுகளின் ஒட்டுமொத்த குத்தகையாளர்களான எழுத்தாள இனக்குழுவின் அங்கத்தினர்களிடம், அதன் வாடை ரொம்பவும் கம்மி.

எனது எழுத்துலக வழிபாட்டு தெய்வங்களில் ஒருவராக விளங்கிய ஜெயகாந்தன், ஒருமுறை தெருநாய்க் குட்டியைப் பார்த்து முகம் சுழித்தார் என்பதை அறிய நேர்ந்தபோது சரிந்து உட்கார்ந்துவிட்டேன்.

சமுதாயத்தால் வஞ்சிக்கப்பட்டு ஒடுக்கப்பட்ட அடித்தட்டு மக்களின் குரலாய் ஒலித்த அந்த மாபெரும் மனிதாபிமானியிடம் அதனை நான் சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை. தெருநாய்கள் என்பவையும் ஓரங்கட்டப்பட்ட அந்தக் கீழ்த்தள மனிதர்களைப் போலவே இந்தச் சமூகத்தின் பொறுப்பற்ற இரக்கமற்ற முகத்தின் விளைபொருளே   என்பதை நேசத்துடன் அவரால் அணுக இயலாமல் போனது ஆச்சரியமே.

சமூக வெளியில் புறக்கணிகப்பட்ட துயருற்று ஜீவனாய் அலைக்கழியும் உயிர், இன்னொரு மனித உயிராய்தான் இருக்க வேண்டும் என்பது என்ன வகை அறம்?

நமது லெளகீக சுயநல வேட்கையை, ஒரு நாளின் ஒரு துளிப்பொழுதை நகர்த்தி வைத்து, வெளி நடந்து தம் வாசலுக்கு அப்பால், இவ்வுலகின் ஏதோவொரு மூலையில், துயறுற்று அல்லலுரும் ஏதேனுமொரு சிற்றுயிரின் கண்ணீர்துளிகளில் – ஒற்றைத் துளியையேனும் நம்   உள்ளங்கையில் ஏந்தி நிற்பது ஒரு மகத்தான அனுபவம்

கேள்வி: உங்கள் மொழி அபாரமான கவித்துவ தருணங்களைத் தர வல்லது. ஆனால், நீங்கள் கவிதையில் இயங்கவில்லை. ஏன்?

சீ.முத்துசாமி: 70களில் நவீன இலக்கியச் சிந்தனையைச் சார்ந்திருந்த ஒரு காலகட்டத்தில் இளஞ்செல்வன், நண்பர் நீலவண்ணன் ஆகியோருடன் சேர்ந்து, அத்தகைய முயற்சியைச் செய்து பார்த்ததுண்டு. ஆனால், காலப்போக்கில் உரைநடை புனைவிலக்கியத்தின்பால் கவன ஈர்ப்பு கூடுதலாகக் கவிதையின்பால் இருந்த நாட்டம் மெல்ல கழன்று கொண்டு ஒதுங்கியும் கொண்டது. எனது புனைவிலக்கியத்தில் நீங்கள் காண்பது அபாரம் என்கிற அடைமொழிக்குள் அது வருவது சந்தேகமென்றாலும் ஒருவேளை அதன் தெறிப்புகளாக இருக்கலாம். அவை முற்றிலும் சுதந்திரமாகப் பாய்ந்தோடுகிற வெள்ளத்தின் மேற்பரப்பில் அவ்வப்போது நுரைத்தெழுகிற குமிழ்கள் மட்டுமே.

கேள்வி: முத்துசாமி என்பவர் தன்னை என்னவாக அடையாளப்படுத்த நினைக்கிறார்?

சீ.முத்துசாமி: ஒவ்வொரு மனிதனும் தனது அந்திம காலத்தின் வாசலில் காலடி வைத்து, திரும்பிப் பார்க்க, எதிர்பாராத ஒரு சுய அவதானிப்பில் தனக்குள் எதிர்கொள்ளும் சுவாரஸ்யமான கேள்வி. எல்லோருக்கும் பொதுவாக இருப்பதுபோல பொதுவெளியில் வெளிப்படாத எனக்கேயான ஒரு மிக அந்தரங்க உலகம் எனக்குள் உண்டு. என் மனதுக்கு மிக நெருக்கமான பிரியமான நெகிழ்வான ஓரிடம் அது. ஓர் இலக்கியவாதி என்கிற எனது பொது அடையாளத்தை விடவும் அது மேலதிக ஆன்ம திருப்தியை தருவதுண்டு.

அரை நிர்வாண கோலத்தில் கூடவே வாலைப் பிடித்து கொண்டு தொடரும் நாய்க்குட்டியோடு மட்டும் பேசி சிரித்தபடி, திசையறியா திசை நோக்கி பயணிக்கும் யாராவது ஒரு கிறுக்கனை எங்கோ போகிற வழியில் எதிர்கொண்டதுண்டா? ஒரு வேளை அதுவே எனது நிஜ அடையாளமாக நிலைத்தின் நிச்சயம் மகிழ்வேன்

கேள்வி: எம்.ஏ.இளஞ்செல்வன் மலேசியா முழுவதும் அறியப்பட்ட காலத்தில் புனைவிலக்கியத்தில் இன்னும் நுட்பமான மொழிநடையும் வீச்சும் உள்ள நீங்கள் அடையாளம் காட்டப்படவில்லை என்ற ஏமாற்றம் உண்டா? நீங்கள் அவரது சமகாலத்தவர் என்கிற நிலையில் அவரின் படைப்புகள் குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

04 siசீ.முத்துசாமி: ஏமாற்றம் என்று குறிப்பிட்டுச் சொல்ல இயலாவிடினும், வருத்தம் உண்டு. மீண்டும் மீண்டும் அங்கேதான் செல்ல வேண்டி இருக்கிறது. சூழல். மாசடைந்த சூழல். ஒட்டுமொத்த இலக்கியச் சூழல் குறித்த ஒரு மிகப் பெரிய அதிருப்தியைக் கிளர்த்தி கொந்தளிக்கச் செய்த ஓர் அவதானிப்பே அன்றி, தனிப்பட்ட முறையிலான வருத்தமோ ஏமாற்றமோ அல்ல என்பதை என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். 70-களில் இந்நாட்டு நவீன இலக்கியத்தின் வளர்ச்சியில் பெரும் பங்காற்றியவை நமது தமிழ் நாளிதழ்கள். தமிழ் நேசன், தன் ஆசிரியர் முருகு.சுப்ரமணியம் வழிகாட்டலில் நடத்திய பவுன் பரிசுத் திட்டம் அதற்கொரு சிறந்த சான்று.

இது ஒரு புறமிருக்க, அடுத்த முனையில், வணிக நோக்கத்தை மட்டுமே முன்னிறுத்திய பத்திரிகை ஆசிரிய முதலாளிகளும் அச்சூழலில் முனைப்புடனும் பொருளாதார வலிமையுடனும் இயக்கம் கொண்டிருந்தனர்.

சார்பு நிலை கொண்டு, தங்கள் சுயநல நோக்குக்கு ஏற்புடையவர்களை கவனமுடன் தெரிவு செய்து, அவர்கள் முகத்தில் மட்டும், கூடுதல் வால்டேஜ் வெளிச்சத்தைப் பாய்ச்சியபோது, அந்தச் சூழலின் சமன் குலைவுற்று முற்றிலும் அரசியலானது.

அந்த நலிவுற்றச் சூழலின் முதன்மை பயனாளி அமரர் எம்.ஏ.இளஞ்செல்வன்.

ஆதி.குமணன் என்கிற எழுத்து பத்திரிகை வணிக ஆளுமை, இளஞ்செல்வன் என்கிற மேலதிக தன்முனைப்பு எழுத்து ஆளுமையுடன், சகோதர பாசத்துடன் கைகோர்த்தபோது, தினம் தினம் வலிய ஊதி ஊதி பெருக்கவைக்கப்பட்ட, வீக்கம் கண்ட ஒரு ஊடக பிம்பமாக அவர் மாறினார். அதற்கான இலக்கிய மதிப்பேதும் குறிப்பிடும்படியாக எதுவும் என்னிடமில்லை.

இப்படிச் சொல்லலாம் மு.வ, நா.பா, அகிலன் என்கிற மும்மூர்த்திகளின் ஆளுகையில் அப்போது மலேசியத் தமிழ் இலக்கிய வாசகப் பரப்பு இருந்தது. குறிப்பாக, ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளில் தமிழ் இலக்கியம் போதித்த போதனாசிரியர்களின் வழிகாட்டலில் வாசிப்புக்குள் வந்திருந்த தமிழாசிரியர்களைச் சொல்லலாம். இளஞ்செல்வன், அவர்களை கடந்துவிட்ட ஒரு நவீன வாசிப்பு தளத்திற்கு தன்னளவில் நகர்ந்துவிட்டிருந்தாலும் எழுதப்பட்ட சராசரிக்குச் சற்றே மேலதிக தரத்திலான புனைவெழுத்துக்குச் சொந்தக்காரர். அந்த வகையில், அதே காலகட்டத்தைச் சேர்ந்த அரு.சு.ஜீவானந்தன் மேம்பட்ட நவீன படைப்பாளி என்பது எனது கருத்து.

எளிய வாசிப்புத் தளத்தைத் திருப்திபடுத்த நகர்த்தப்படும் எழுத்து நீர்த்துப்போவது தவிர்க்கவியலாதது.  தனது விளம்பர ஏஜென்டின் துணையோடு அவர் இயங்கினாலும், ஒரு தன்முனைப்பான இலக்கிய ஆளுமையாக அவர் இந்நாட்டு நவீன இலக்கியப் பரப்பில் அவ்வப்போது ஏற்படுத்திய, முரண்பட்ட துணிச்சலான சலசலப்புகள் பல. குறிப்பாக அமரர் சீனி நைனாவுடன் புதுக்கவிதை சார்ந்து நிகழ்த்திய மோதல்கள். அதற்கு நிகராக, வேறெவரும் இந்நாள்வரை நிகழ்த்தவில்லை என்ற ஒன்றே, அவரை இந்நாட்டு இலக்கிய வரலாற்றில் தனித்துவத்துடன் பேச வைக்கும் என்பதில் சந்தேகமில்லை.

கேள்வி: உங்களின் ஆரம்ப கட்ட சிறுகதைகளில் தீவிரமாக காணப்படும் சமூக அறம் குறித்த சீண்டல் பின்னர் வந்த சிறுகதைகளில் குறைந்து, உள்முக அக அலசலாக மாறியிருப்பதை கவனிக்க முடிகிறது. இது பற்றிய உங்கள் கருத்து என்ன?

சீ.முத்துசாமி: எனது தொடக்ககால சிறுகதைகளில் காணும் அறச் சீண்டல்கள் புறவயமாகவும் சற்றே உரத்த தொனியில் வெளிப்படையாக முன்வைக்கப்பட்டவை என்றே சொல்ல வேண்டும்.

சமூகத் தளங்களில் நிலவும் பன்முக அநீதிகளுக்கும் எதிரான சற்றே உரத்த குரல். நீர்நிலைகளின் மேற்பரப்பில் புயற்காற்றுக்கு எம்பிக்குதித்து பாய்ந்தோடும் அலைகள் போல. சும்மா கரையில் உட்கார்ந்து வெறுமனே பார்த்துக் கொண்டிருந்தாலே, தெரியும்.

இது, 60-70 களில், தமிழகத்தில் அடித்த ஒரு பேரலையின் தெறிப்பு. முற்போக்கு எழுத்து வகைமையின் காலகட்டம். இடதுசாரி சிந்தனையாளரும், அதனை தனது பேச்சிலும் எழுத்திலும் தீவிரத்துடன் முன்னெடுத்த காந்திரமான இலக்கிய ஆளுமை, ஜெயகாந்தனின் பங்களிப்பு.

அதன் ஆதர்சத்தில் இங்கேயும் ஒரு முற்போக்கு எழுத்து இலக்கியப் பரப்பில் காலூன்றிய ஒரு எழுத்தாளர் பரம்பரையைத் தோற்றுவித்தது. எம். ஏ. இளஞ்செல்வன் தொட்டு, மு.அன்புச்செல்வன், சை.பீர்முகமது, ஆர்.சண்முகம், மா.இராமையா, சி.வடிவேலு, சாமி மூர்த்தி, சா.அ.அன்பானந்தன், க.பாக்கியம், ந.மகேஸ்வரி, பாவை என்கிற ஒரு நீண்ட பட்டியல் அது. எம். ஏ. இளஞ்செல்வனை இங்கே அவரது அபிமானிகள் மலேசிய ஜெயகாந்தன் என்றே குறிப்பிட்டதை நினைவுகூர்கிறேன்.

அந்த அலையில் அடித்துச் செல்லப்பட்டவர்களுள் நானும் ஒருவன். இந்த அலைக்கு முற்றிலுமாய் தன்னை ஒப்புக் கொடுக்காமல், சற்றே எதிர்நீச்சல் போட்டவர் என்று அரு.சு.ஜீவானந்தனைச் சொல்லலாம்.

மேலே சொன்ன எனது பட்டியலில் அமரர் ரெ.கார்த்திகேசு அவர்களின் பெயரைக் காணோமே என்று எவரேனும் எண்ணக் கூடும்.

மலேசியத் தமிழ்ச் சிறுகதை இலக்கியத்திற்கு மிகச் சிறந்த சிறுகதைகளை (நாவல்களை அல்ல) வழங்கி வளம் சேர்த்துள்ள ஒரு படைப்பாளிக்கு அப்பட்டியலில் இடமில்லாமல் போனது வியப்பளிக்கலாம்.

அவரது படைப்புலகம், ஒட்டு மொத்தமான ஒரு கழுகுப் பார்வையில் மலேசியத் தமிழ்ச்சமூகத்தின் மைய நீரோட்டத்திலிருந்து தங்களைத் துண்டித்து தனிமைப் படுத்திக் கொண்டு, ஒருவித மேட்டிமை மனோநிலையோடு உலவிய பாவனை மனிதர்களின் உலகை மையமாக கொண்டது. விமர்சன நோக்கில் அல்லாமல் கிறங்கிய கண்களோடு அதனை ஒரு சினிமா ரசிகனின் கண்களோடு romanticise செய்து எழுதிய ஒரு படைப்பாளி என்பதால் அந்த பட்டியலிலிருந்து  ஒரு சுய விலகலை அவரே முன்வந்து நிகழ்த்திவிடுகிறார்.

80-களுக்கு பிறகான தமிழக அலை மேலைநாட்டு புதிய சிந்தனையின் வழி வந்த, தனி மனிதனை முன்னிறுத்தி சமூக விழுமியங்களை நோக்கிப் பேசும் போக்கை முன்னெடுத்தது.

90-களுக்குப் பிறகான எனது இரண்டாம் காலகட்டச் சிறுகதைகள் அந்த அலையை உள்வாங்கி மேலெழுந்து வந்தவை.

அவை அறச் சீண்டலுடன் உள்முகம் திரும்பியவை. பூடகத்தன்மை மிகுந்து கைகளுக்குள் சிக்க மறுப்பவை. நிலத்தடி நீரோட்டம்.

கேள்வி: தமிழில் வண்ணநிலவன் வண்ணதாசன் உங்களின் விருப்பமான எழுத்தாளர்கள் என அறிகிறேன். ஆனால், உங்கள் மொழிநடை அவர்களின் கச்சிதமான மொழியிலிருந்து மாறுபட்டு சிக்கலான இன்னொரு தளத்திற்கு வந்துள்ளது. எங்கிருந்து கிடைத்தது இந்த மொழி?

சீ.முத்துசாமி: உண்மையில் ஜெயகாந்தனே எனது முதல் வாசிப்பு எழுத்து ஆதர்சம். ஆனந்த விகடனில் முத்திரைக் கதைகளாகத் தொடர்ந்து வந்து கொண்டிருந்த அவரது சிறுகதைகளை வாசிக்க நாட்களை எண்ணி காத்திருந்ததை இப்போதும் அசைபோட்டு மனம் நெகிழ்வதுண்டு. 60களில் சுங்கைப்பட்டாணி பழைய மார்க்கெட் அருகிலிருந்த பஸ் ஸ்டான்ட் பக்கமிருந்த காதர் புக் ஸ்டாலில், தொங்கிக் கொண்டிருக்கும் ஆனந்த விகடனை பணத்தைக் கொடுத்து உருவியெடுத்த கையோடு, ஒரு காலைப் பொழுதில், புரட்டி ஜெயகாந்தனைத் தேட ‘அக்கினிப் பிரவேசம்’ என்கிற முத்திரைக் கதை தென்பட்டது.

அப்படியே மூலையில் கிடந்த ஒரு ஸ்டூலில் உட்கார்ந்து, அந்தக் காலை சூரியனின் கதகதப்பான கிரணங்கள் உடம்பில் படர, கண்கள் விரிய அக்கினிப் பிரவேசத்தை ஒவ்வொரு சொல்லாய் கடந்து, இறுதி புள்ளியில் கண்கள் நிலைகுத்த, மேலதிக உணர்வுக் கொந்தளிப்பில் உடல் தத்தளிக்க, விளிம்பில் தொக்கி திரண்டிருந்த இரு சொட்டுக் கண்ணீர் உடைந்து வழிவது இப்போதும் துள்ளியத்துடன் தெரிகிறது.

அவரைத் தொடர்ந்து, சில கால இடைவெளியில் வண்ணநிலவனும் வண்ணதாசனும் எனக்குள் வந்தார்கள். இவர்கள் இருவரும் என் முன் நிறுத்திய உலகம், அதுவரை எனக்குள் இருந்த இலக்கிய ரசனையைத் தலைக்கீழாகத் திருப்பிப் போட்டது.

ஜெயகாந்தன் விழுமியங்களை கோட்பாடுகளை முன்னிறுத்தும் புறவயமான படைப்புலகத்தைச் சார்ந்தவர். இவர்கள் மனித மனங்களின் இண்டு இடுக்குகளில் இருளும் ஒளியும் முயங்கிய ஒருவித மங்கிய நுட்பமும் நெகிழ்வும் கூடிய புதியதொரு உலகை எனக்கு அறிமுகம் செய்தார்கள். எனது உலகியல் பார்வையை வாழ்வியல் நோக்கை இவர்கள் கட்டுடைப்பு செய்தார்கள். இவர்கள் காட்டிய உலகம் எனது இயல்புக்கும் ரசனைக்கும் மிக அண்மையில் உணர்ந்த தருணத்தில் எனது எழுத்துள் அவர்களின் நிழல் மெல்ல படரத் தொடங்கியது. எனது தொடக்கக் கால படைப்புக்களை இப்போது வாசிக்கும் எவரும் அதை உணர இயலும்.

ஒரு கட்டத்தில், இவர்களைக் கடந்து, பின்னோக்கி நடந்து, நான் போய்ச் சேர்ந்த இடம் லா.ச.ரா. அவரின் ‘அபிதா’ கைக்கு வந்த நாள் தொடங்கி, மந்திரித்து விட்ட அடை கோழியைப் போல், அதை விரித்து வைத்து பேந்த பேந்த பார்த்தபடி பலநாள் உட்கார்ந்திருக்கிறேன். இந்தத் தலைமுறையில் பல இலக்கிய வாசக எழுத்தாளர்கள் ஜெயமோகனின் ‘விஷ்ணுபுரம்’ நாவலை விரித்து வைத்து ‘பார்த்துக் கொன்டிருப்பதுபோல்’ என்றால் புரியும்.

ஒருவகையாக, அதை அறைகுரையாக மேய்ந்து முடிக்கும் தருவாயில். ஒரு சுபநாளில், மார்பில் அபிதா துயில் கொள்ள, அப்படியே தூங்கிப் போனேன்.

பொழுது விடிகிற நேரம். கோழி கூவும் சத்தம் தொலைதூரத்தில் கேட்கிறது. கனவில் ஒரு சாது. கலைத்துவிட்ட முடியும், விஷமச் சிரிப்புமாய் லா.ச.ரா பவ்யமாய் குனிந்து காதில் ஏதோ ஓதினார். ஆழ்மனம் அதிர்ந்து குழுங்கியது. அன்று தொடங்கியது, இந்த சிக்கலான மொழிநடை. இத்தனைக்கும் அந்தச் செளந்தர லகரி உபாசகர், என்னுள் செலுத்தியது, தனது கிறுக்குத்தனத்தின் ஒரு சின்னஞ்சிறு துளியை மட்டுமே!

சரி, இதுதான் என்ற தெளிவோடு சந்தோஷமாக இயங்கிக் கொண்டிருந்த சமயத்தில், சில ஆண்டுகளுக்கு முன்னால், ‘அம்மாவின் கொடிக்கயிறும் எனது காளிங்க நர்த்தனமும்’ என்கிற எனது சிறுகதைத் தொகுப்பு நூல் வெளியீட்டில், அதனை அறிமுகம் செய்து பேசிய டாக்டர் சண்முக சிவா அவர்கள், புதிதாக ஒரு அணுகுண்டை தூக்கித் தலையில் போட்டார்.

நூல் வெளியீடு முடிந்து, தனியாக நின்று பேசிக் கொண்டிருந்தபோது, சுற்றும் முற்றும் பார்த்து, காதருகே வந்து “முத்துசாமி ஒரு ரகசியம். வெளிய சொல்லிடாதிங்க. ஒங்க மொழிநட எதுக்கு அப்படி பண்ணி பண்ணி (கவனிக்கவும் – அமரர் கார்த்திகேசு சொன்னது போல, பின்னி பின்னி அல்ல) போவுது தெரியுங்களா? அது வேற ஒன்னும் இல்ல முத்துசாமி. அது ஒரு தினுசான நோயி,” என்றபடி நிறுத்தி என் முகத்தில் நெளிந்த கலவரத்தைக் கண்டு தொடர்ந்தார்.

“பயப்படாதிங்க. பெருசா ஒன்னுமில்ல. சின்ன விஷயந்தான். இந்த ஓ.சி.டின்னு ஒரு நோய பத்தி கேள்விபட்டிருக்கீங்களா முத்துசாமி?” என்னிடம் எந்த சலனமும் இல்லாததை வைத்து, ஊகித்தபடி புன்சிரிப்புடன் தொடர்ந்தார். “Obsessive Compulsive Disorderனு சொல்றத ஆங்கிலத்தில் ஓ.சி.டின்னு சுருக்கி சொல்லுவாங்க. இது உள்ளவன் கைய கழுவுனான்னா திரும்ப திரும்ப கழுவிகிட்டே இருப்பான், எழுதுனா திரும்ப திரும்ப எழுதிகிட்டே இருப்பான். அதா அவன்மேல பாவப்பட்டு நின்னாதான் முத்துசாமி. உங்க எழுத்துல நடக்குறதும் அதுதான்.. Now you understand your problem Muthusamy”, என்றார்.

கேள்வி: உங்கள் படைப்புகளில் களமும் காட்சிபடுத்துதலும் முன்னுரிமை பெற்று கதாமாந்தர்களை பின்னணியில் வைப்பதை ஒரு உத்தியாகவே பயன்படுத்துகிறீர்கள். ஒரு வகையில் உங்கள் படைப்புகள் மனிதர்களைப்பற்றிய கதை என்பதை கடந்து மண்ணைப் பற்றிய படைப்பு என்றே தோன்றுகின்றது. ஒரு இலக்கியப்படைப்பில் களம் எவ்வகையான முக்கியத்துவம் பெருகிறது என்பதை ‘மண்புழுக்கள்’ நாவலை முன்வைத்து கருத்தை கூறுங்கள்.

சீ.முத்துசாமி: இதில் எனக்கு முரண்பட்ட கருத்து உண்டு. கதை நிலைகொள்ளும் களத்தினூடாய் விரவிப் படரும் காட்சிபடுத்துதல் எனும் உத்தி, மனிதர்கள் எதிர்கொள்ளும் வாழ்வுத் தருணங்களை முன்னிறுத்தி அவர்கள் வாழ்வின் ஏதேனுமொரு புள்ளியைத் தொட்டபடி நகருவதுதான்.

எனவே, எனது நோக்கில், களமும் காட்சிபடுத்துதலும் ஒருங்கிணைந்து பயணித்து சென்று சேரும் இடம் மனித வாழ்வின் தருணங்களைத்தான். அதனூடாய் அவை பின்னகர்ந்து, முன்னிலைப்படுவது கதைமாந்தர்கள்தான்.

கதைத் தருணத்துக்குள் நுழைவதற்கான கூடியபட்ச கற்பனை விரிவை வாசகனுள் சாத்தியப்படுத்துவதற்கான ஒரு மேலதிக உத்தி என்று வேண்டுமானால் அதனை வகுத்துக் கொள்ளலாம்.

அத்தருணத்துள் ஊடாடும் நுட்பமான பிற அலகுகளையும் தன்னுள் ஈர்த்துக்கொண்டு  அதன் உள் அடுக்குகளை அவன் முன் திறந்து வைக்க செய்யப்படும் ஒரு யத்தனம். எனது படைப்புலகம் சார்ந்த எனது பொதுவானதொரு நிலைபாடு இது.

ஆனால், மண்புழுக்கள் நாவலைப் பொறுத்தவரை உங்கள் அவதானிப்பை கருத்தில் கொண்டு அதனை அணுகி அளவிட அதன் தனித் தன்மையை கருத்தில் கொண்டே பேசவேண்டியுள்ளது.

மண்புழுக்கள் நாவலின் அடிப்படை இயல்பு அல்லது அதன் நோக்கு நிலை என்பது  அதுவொரு வட்டார வாழ்வியல் வரலாற்று ஆவணம்.

கதை நகர்வை மட்டுமே பிரதான இலக்காய்க் கொண்டு வளர்ந்து விரியும் பிற மரபான நாவல்களின் குணபாவங்களில் சிலவற்றை விட்டு விலகி முற்றிலும் வேறொரு தளத்தை தனது இயங்கு வெளியாக தெரிவு செய்து கொண்ட ஒரு படைப்பு.

ஒரு மரபான நாவல் வகைமையின் இலக்கணத்துள் வைத்து பரிசீலிக்க இடமளிக்காத அதன் nonlinear தன்மையைக் கருத்தில் நிறுத்தியே அதனை அணுக வேண்டியுள்ளது

மைய கதைக் கட்டமைப்போ மைய கதைமாந்தரோ முன்னிருத்தப்பட்டு இயல்பாய் வளர்ந்து செல்லும் மரபான நாவலுக்குறிய அடிப்படை அம்சம் இதில் இல்லை

ஒருவகையில் முதன்மை கதாமாந்தர் படைப்பின் பகைப்புலத்தில் எங்கும் எழுந்துவந்து நம் கவனத்தை உள்ளிழுத்து நிறுத்தாமல் பல்வேறு சிறு பாத்திரங்கள் மின்னலாய் தோன்றி பின்னகர்ந்து மறைவது கதாபாத்திரங்கள் பின்னிறுத்தப்படுவதான தோற்றத்தை அளிக்கலாம்

நாவலின்   இந்த nonlinear தன்மைகான தேவை எங்கிருந்து வந்தது என்கிற கேள்வி எழலாம். தோட்டப்புற மக்களின், ஒரு காலகட்டத்தில் நின்று, அவர்கள் கடந்து சென்ற வாழ்வியல் தருணங்களோடு ஒன்றிய ஒரு வாழ்வியல் பண்பாட்டு ஆவணமாகவும் இதனை மனதில் கற்பனை செய்த கணத்தில் நாவல் அதன் பழக்கப்பட்ட தடத்தை விட்டு விலகி தாவி எதிர்த்திசை நோக்கித் திரும்பிவிட்டது என்பதுதான் அதனோடு முழுமையாய் பயணித்த எனது சுய அனுபவம்.

எனவே, மண்புழுக்கள் தன்னளவில் பிரதானமாய் பேசுவது மனித வாழ்வைத்தான்; அது வழிநடத்தும் அதன் தருணங்களைதான். பிற அனைத்தும் அணிவகுத்து நிற்பது அதன் பின்னேதான். அவை முன்னே நிற்பதான தோற்றம், அது தேர்வு செய்து கொண்ட வடிவ உருவாக்கம் ஒரு grey area.

மேலும், ‘மண்ணின் படைப்புகள்’ என்கிற அவதானிப்பில் nostalgia அதாவது a wistful desire to return in thought or in fact to a former time in one’s life, to one’s home or homeland என்கிற கருதுகோளும் மறைமுகமாக முன்னெடுக்கப்படுவதாகவே எண்ணத் தோன்றுகிறது.

வாழ்ந்த மண், அதிலும், திட்டமிட்ட சதிக்கு உட்பட்டு அழிந்தொழிந்த, தன் குருதி மண் குறித்த ஆழ்ந்த துக்கமும் ஏக்கமும் என்பதாக இதனைப் புரிந்துகொள்ள, எனது படைப்புகள் அதன் நிழல் வெளிப்பாடுதான் என்கிற பொருளும் அதனோடு தொக்கி எழுவதை தவிர்க்க இயலவில்லை.

உலகமெங்கும் திணை, காலம் சார்ந்த படைப்புகள், அந்த மண்ணோடு உணர்வுபூர்வமான இணைப்பு கொண்ட பல படைப்பாளிகளால் படைக்கப்பட்டுள்ளன. படைக்கப்பட்டுக் கொண்டும் இருக்கின்றன.

ஆனால், nostalgia என்கிற எளிமைப்படுத்தப்பட்ட ஒற்றை கூடைக்குள், அப்படைப்புகளைத் திணித்து விமர்சிக்கும் போக்கும் அங்கில்லை. படைப்பூக்கத்திற்குத் தேவையான ஒரு உந்து விசையாக அது இருக்கலாம். மறுப்பதற்கில்லை. அந்தளவே அதன் முக்கியத்துவம்.

Nostalgia என்கிற உணர்வு நிலையைக் கடந்து வேறு சில தளங்களையும் ஒரு படைப்பு தொட்டு விரியும்போதே அது செறிவுற்ற படைப்பாக மேலெழ இயலும்.

எனது படைப்புகள் ப்ரக்ஞைபூர்வமாகவே அந்த இலக்கை நோக்கி பயணிக்க முயலுபவை என்பதே எனது கருத்து.

கேள்வி: மலேசிய தமிழ்ப் படைப்பாளிகள் நவீன இலக்கியக் கோட்பாடுகள் குறித்த அக்கறை அற்றவர்களாக உள்ளனர். இலக்கிய பரப்பில் இதை ஒரு குறையாகக் கூற முடியுமா? ஒரு படைப்பாளனுக்கோ வாசகனுக்கோ இந்தக் கோட்பாட்டு புரிதல் தேவைதானா?

சீ.முத்துசாமி: நிச்சயம் தேவை. ஒரு படைப்புலகுக்குள் நுழைந்து பயணிக்க, அதனை ஜீரணிக்க, அதன் பின்புலத்தில் மனித வர்க்கத்தின் வரலாற்றுப் பொறிகளை உள்வாங்கியிருப்பது தவிர்க்க இயலாத ஒன்று. காம்யூவின் அந்நியனுக்குள் ‘காலடி வைக்க, ஓர் இருண்மை எதிர் மனநிலையிலிருந்து எதிர்கொள்ளும் அவரது அணுகுமுறையை உணர, ‘இருத்தலியம்’ என்கிற கோட்பாட்டை ஒருவர் அறிந்திருப்பது அவசியம். இரண்டாம் உலகப் போரின் கசப்பான அனுபவங்கள் மீண்டும் ஒரு சுய பரிசோதனைக்குள் ஐரோப்பிய சமூகங்களை உந்தித் தள்ள, அந்த சமூகச் சிந்தனையாளர்கள் நவீன மனித சமூகங்களின் சகல ஊடுபாவுகளிலும், பாலின் நெய் போல, கலந்து மறைந்து கிடக்கும் அதிகாரம் என்கிற மையத்தைக் கண்டடைந்தனர்.

அதனைக் கட்டுடைக்கவும், தகர்த்து சீரமைத்து, புதிய உலகை சமைக்கவும் தேவையான கோட்பாடாக பின்நவீனத்துவம் முன்னிறுத்தப்பட்டது. அதனையொட்டிய மையமற்ற புதுவகை இலக்கியப் படைப்புகள் உருவாயின. அத்தகையதொரு படைப்பை உருவாக்கவோ அல்லது வாசிப்பில் உள்வாங்கவோ ஒருவனுக்கு அந்தக் கோட்பாட்டின் அடிப்படை புரிந்திருக்க வேண்டும். மாற்றுவழி கிடையாது.

கேள்வி: கொஞ்ச காலம் கெடா மாநில எழுத்தாளர் சங்கத்தின் தலைவராக இருந்தீர்கள். நவீன இலக்கியவாதிக்கு உள்ள பெரும் சவால் அது. உங்களது அடையாளத்தை சங்கத்தின் தலைவராக இருந்து தற்காக்க முடிந்ததா?

சீ.முத்துசாமி: அது முற்றிலும், அன்று நிலவிய ஒரு அசாதாரண எதிர்மறை சூழலின் விளைச்சல். ஒரு நிர்பந்தம் என்றும் சொல்லலாம். கெடா மாநில எழுத்தாளர் சங்கத்தின் ஆட்சிக் கட்டிலில் உட்கார்ந்து, ஒரு பத்தாண்டுக் காலத்தைக் கடத்திவிட்டிருந்த ஒரு நவீன இலக்கியவாதி அது போதாதென்று மேலும் ஓரிரு ஆண்டுகள் பதவி நீட்டிப்புக் கேட்டு, சிறு பாலகன் மிட்டாய்க்கு மண்ணில் புரண்டழுவதுபோல் அழுது யாசித்து நின்றபோது – வலிந்து அந்தச் சூழலுக்குள் திணிக்கப்பட நேர்ந்தது.

அது, முற்றிலும் ஒரு விபத்தே. அமைப்பு ரீதியான சட்டத்திற்குள் புழங்கும் அதிகார கட்டமைப்பும் பொறுப்புகளின் பகிர்ந்தளிப்பும் அது தரும் ஏமாற்றமும்  சூழலில் தினப்படி எதிர்கொள்ள நேரும் முரண்படும் மனிதர்களுடனான உரசலும் இயல்பாக உள்முகப் பார்வை வயப்பட்ட நவீன இலக்கியவாதியினுள், மேலதிக கொந்தளிப்புடன் இருக்கும் நுண்ணுணர்வுகளோடு அவை மோதும் தருணங்களில் விளையும் வலி அதீதமானது.

ஒன்றை உறுதியாகச் சொல்ல முடியும். அப்பொறுப்பில் இருந்த 2 ஆண்டுகளில் எனது மனசாட்சிக்கு விரோதமில்லாமல், இயன்றவரை சங்கத்தின் இலக்கியச் செயல்பாடுகளில் என்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளேன்.

இயக்கம் என்பதே ஒரு கூட்டு முயற்சி என்பதால் அதன் சுமூகமான செயல்பாட்டைக் கருதி விட்டுக் கொடுத்தலும் சமரசங்களும் ஓரளவேனும் தவிர்க்க இயலாது. ஆனாலும், எனது தனிப்பட்ட நிலைப்பாடு சார்ந்த எல்லைகளுக்குள் அது பிரவேகிக்க முயன்றபோது அதனைத் தடுத்து நிறுத்தியுள்ளேன். வற்புறுத்தப்பட்டபோதும் பொது அமைப்புகளுக்கு அரசாங்கம் ஒதுக்கும் பட்டங்களில் ஒன்றை வேண்டாமென்று மறுத்துள்ளேன். திருமதி பாக்கியம் அவர்களின் தலைமைத்துவத்தின்போது அவர்கள் வீடு தேடிவந்து, அதனை வற்புறுத்தியபோதும் மறுத்துள்ளேன்.

கேள்வி: இன்றுகடந்த காலத்தைத் திரும்பிப் பார்க்கும்போது இலக்கிய வாழ்வில் ஏதாவது ஒன்றை சகித்துக் கொண்டிருக்கலாம் என்றோ சமரசம் செய்துகொண்டிருக்கலாம் என்றோ தோன்றியதுண்டா?

சீ.முத்துசாமி: வாழ்க்கை என்கிற காட்டாற்றுப் பெருக்கில், எத்தருணத்திலும் உடைந்து மறைந்துபோக நேரலாம் என்கிற விதி கொண்ட, காற்றடைத்த ஓர் அற்ப குமிழான இந்த மனித வாழ்வில், கடந்துவிட்டால், எந்த தெய்வத்தாலும் ஈடுசெய்ய இயலாத மிகப் பிரமாண்ட வஸ்து, அதனைக் கொண்டு செல்லும் காலம் எனும் மாயக் கண்ணாடி

எனது இலக்கிய வாழ்வில், நான் மிகத் தீவிரத்துடனும் உற்சாகத்துடனும் இயங்கியிருக்க வாய்த்த, எனது முப்பதாகவது வயதில் தொடங்கி ஒரு இருபதாண்டுக் காலத்தை எதிர்பாராமல் குறுக்கிட்ட ஒரு மடை மாற்றத்தில் தொலைத்தும், தொலைந்தும் போனேன்.

ஒருவேளை, அக்காலக்கட்டத்தில் இந்நாட்டு நவீன இலக்கியப் பரப்பில் – இளமைக்கே உரிய தனித்துவமான வீரியத்தின் முழு ஆற்றலுடனும் படைப்பூக்கத்துடனும் இயங்கியிருப்பேனானால், இப்போது நீங்கள் பேசிக்கொண்டிருப்பது முற்றிலும் வேறொரு முத்துசாமியாகவே இருப்பான்.

திரும்பிப் பார்க்க, அசலான இழப்பு என்று நான் உணர்வுப்பூர்வமான கொந்தளிக்கும் துயரத்தோடு எப்போதும் நினைவுகொள்வது, அந்தக் காலதேவனின் என்றும் மாறாத விதியை அறியாமையால் அலட்சியம் செய்ததைத்தான்

கேள்வி: சமரசம் செய்து கொள்ளாத படைப்பாளியாகவும் அதிக உணர்ச்சிவயப்படுபவராகவும் மலேசிய இலக்கியச் சூழலில் நீங்கள் அறியப்படுகிறீர்கள். அது குறித்து நீங்களே முன்பு பதிவிட்டுள்ளீர்கள். இதனால் உங்களுக்கு இழப்புகள் இல்லையா?

சீ.முத்துசாமி: இழப்பு என்பதை ஒருவர் எந்தக் கோணத்திலிருந்து அணுகுகிறார் என்பதைப்01 si பொறுத்து அதன் நிஜ அர்த்தப்பாடு வேறுபடலாம். பொது புத்தியிலிருக்கும் இழப்பு என்பதன் பொருளை முன்னிறுத்தி இக்கேள்வியை அணுகினால்கூட, ஒரு ஆரோக்கியமான கலை இலக்கியச் சூழலில் ஒர் இழப்பாகவே அதனைக் கருதுவதும்; அது குறித்து கவலைக் கொள்வதும் நியாயமானதொன்றே. ஆனால், இலக்கியம் சார்ந்த அணுகுமுறையில் நமது ஒட்டுமொத்த சமூகமும் வெளிச்சப்படுத்தும் அலட்சிய மனோபாவமும், இலக்கிய செயல்பாட்டு மையங்களில் நிலைகொண்டுவிட்ட வெற்று பாவனைகளும் ஒருசேர கைகோர்த்து, சூழலை முற்றிலும் மாசுபடுத்தி அழித்தொழிந்த பின், அது குறித்து கவலைப்பட என்ன இருக்கிறது? செல்லரித்து உளுத்துப்போன ஒன்றோடு சமரசம் செய்துகொண்டு, லாபமடைய இங்கே நடப்பது பண்டமாற்று வியாபாரமல்லவே? இதுவொரு வேள்விக் களம்! அந்த வேள்வித் தீயில் அவியாகி, அந்தப் பெருங்கருணையின் மடியில் எரிந்து பஸ்பமாகிக் கொண்டிருப்பது அந்த இழப்புதான்.

மேலும் இலக்கியச் சூழலில் அதிக உணர்ச்சி வசப்படுவதாகவும் அறியப்படுவதாக குறிப்பிடுகிறீர்கள். உணர்ச்சி கொந்தளிப்பு என்பது படைப்பாளனின் பூர்வீக சொத்து. படைப்பூக்கத்தின் ஊற்றுக்கண் அந்த அலைகழிப்பு மிகுந்த கொந்தளிப்புதான். அது அற்றவன் படைப்பாளியாக இருக்க வாய்பில்லை. ஒரு வேளை கதை எழுதுபவனாக இருக்கலாம்.

ஆனால், ஒரு சிக்கல். இந்த கொந்தளிப்பு மனநிலை சில சூழல்களில் தீண்டப்பட்டு வடிகால் தேடி திசைமாறி பாய்வதுண்டு. அத்தகு தருணங்களிலே அதிக உணர்ச்சி வசப்படுதல் என்கிற கண்ணோட்டத்தில் ஒரு சாமானியன் புரிந்துகொள்வதுண்டு. ஆனால் நிஜத்தில் அது அதுவல்ல. அதனுள்ளும் ஒரு படைப்பில் வெளிப்படும் அறச்சீற்றம் ஒளிந்திருப்பதை நுண்ணுணர்வு உள்ள ஒரு வர் கண்டுகொள்ள முடியும்.

சின்ன உதாரணம், மலேசிய எழுத்தாளர் சங்க தலைவராக தமிழக இன்பச் சுற்றுலாவுக்கான ஒரு பிரபல டூரிஸ் ஏஜன், பல காலம் இருந்தார். பின் சகுனியின் கூர்த்த மதியோடு சில அல்லக்கைகளின் துணையோடு ஒரு திட்டமிட்ட காய் நகர்த்தலில் ஒரு கொலுபொம்மையை தனது பினாமியாக உட்காரவைத்து பின்னால் இருந்து ஊருக்கு wayang காட்டிக் கொண்டிருந்தார்.

இப்போது இந்த நடப்பு ஆண்டில் (2017) முன்பே திட்டமிட்டிருந்தபடி காய்களை நகர்த்தி பினாமியை தட்டிவிட்டு, அவரே மீண்டும் தங்க அரியாசனத்தில் வந்து அமர்ந்து கொண்டார்.

இத்தருணத்தில், அவரை என் முன் கொண்டு வந்து நிறுத்துகிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். என்ன நடக்கும்?

எனக்கு அருள் வந்துவிடும். முனியாட்டம் போடுவேன். கூக்குரலிட்டு கொக்கரிப்பேன். அப்போது அதை என்னவென்பீர்கள்? அதிக உணர்ச்சிவசப்படுதல் என்பீர்களா?

நான் அதிக உணர்ச்சிவசப்படும் தருணங்கள் என்பது அது அதனை என்னிடம் கோரும் தருணங்களே. சற்றுமுன் குறிப்பிட்ட உணர்ச்சிகரமான நாடகத்தருணம் போல.

கேள்வி: பேசும் போது ஏற்படும் தடுமாற்றம் தொடர்பாக ஒரு கட்டுரையில் நீங்கள் பகிர்ந்துள்ளீர்கள். பல எழுத்தாளர்களின் படைப்பிலக்கியத்தின் தொடக்கத்திற்கு இவ்வாறான நுண்ணிய தன்மைகள் காரணமாக இருந்துள்ளன என அவர்கள் நேர்காணால் வழி அறிய முடிகிறது. உங்களுக்கு எப்படி?

சீ.முத்துசாமி: ‘தடுமாற்றம்’ என்கிற மிக மென்மையான சொல்லுக்குள் அதனை நுழைப்பது, அதன் கடுமையான தன்மையை நீக்கச் செய்துவிடும். உண்மையில், அவ்வாறான தன்மை கொண்ட ஒருவன், ஒரு நாள் பொழுதில் பலமுறை நடுக்கத்துடன் கடந்து போகும் கொடுங் கனவு அது. ஒரு ஆங்கில நாவலாசிரியைக் குறிப்பிட்டது போல – A monster in my mouth

ஒவ்வொரு எழுத்துக்கும் சொல்லுக்கும் வாக்கியத்துக்கும் உயிரொலி ஏற்ற மேற்கொள்ளும் பகீரதப் பிரயத்தனம் தோற்று சரிந்து விழ – நீரில் மூழ்கியபடி உயிர்மூச்சுக்கு போராடி துடித்துக் கதறும், மனித உயிரின் உச்ச வதை.

அதன் நீட்சியாய், மிகச் சிறு வயதிலேயே, வாழ்வின் ஒரு பக்க குரூர முகத்தை எதிர்கொள்ள நேர்ந்து தவித்து பயந்து நடுங்கியபடி சந்தித்த எண்ணற்ற எள்ளல்கள் அவமதிப்புகள் என அனைத்தும், ஆற்றின் படுகையில் படிந்து கிடக்கும் வண்டலாய், இன்னும் என்னோடு.

எனது இலக்கிய முகம் நிலைகொண்ட முதற்புள்ளிக்கும் அதற்கும் உள்ள தொப்புள்கொடி உறவு குறித்து என்னால் எதுவும் அறுதியிட்டுச் சொல்ல இயலவில்லை.

ஆனால், எனது அங்கங்களில் ஒன்றாகிவிட்ட உட்பக்கம் திரும்பிய பார்வையின் தொடக்கப்புள்ளி அதுவாக இருந்திருக்கலாம் என்பதை மட்டும் ஓரளவு உறுதியாகச் சொல்ல முடியும்.

புகழ்பெற்ற ஆங்கில நாடக நாவல் சிறுகதையாசிரியர், somerset Mougham அவர்களின் படைப்புலகத்தின் பின்னணியில் நிழல்போல அவரது stuttering இருந்துள்ளதாக விமர்சகர்கள் தீவிரத்துடன் முன்வைக்கும் கருத்து ஒன்று உண்டு. அவரது ஆகச் சிறத்த படைப்பாக கொண்டாடப்படும் அவரது சுயசரிதம் கலந்த நாவலான of Human Bondage, என்பதன் அடிநாதமான சுழற்சியே, அவரது stuttering அவருள் விளைத்திட்ட துயர அனுபவங்களின் மீட்டெடுப்பே என்பது விமர்சகர்களின் கருத்து.

வாய்மொழி சொற்களின் தங்குதடையற்ற பிரவாகம் குரூரமாக தடுத்து நிறுத்தப்பட்ட- ஒரு மடைமாற்றமாக மூளை தனக்கான மாற்று வழியைக் கண்டடைய – மேசை மேலிருக்கும் வெள்ளைத் தாளில் எழுத்துருக்களாய் சொற்களாய், வரிகளாய்- ஆற்றுப் பிரவாகமாய் உயிர்த்தெழுந்து வருவதைத் திகைப்புடன் பார்த்து – அதன் பொருட்டு அதுநாள்வரை எதிர்கொண்டிருந்த அனைத்து துயரங்களும் கணப் பொழுதில் பின்னகர – வானத்திலேறி சிறகடித்து சுழன்றாடி, ஆனந்த லாகிரியில் மூழ்கித் திளைத்த அற்புதத் தருணம்.

இதுதான் அது எனின், எனக்கும் அது பொருந்தலாம். இயற்கையின் விதியைத் தகர்த்தெறிந்து, மனித மனம் நிமிர்வு கொண்ட நம்பிக்கை தருணம்.

கேள்வி: நாம் சார்ந்திருக்கும் பதிப்பகம், நம் நூலை விநியோகிக்கும் முறை என அனைத்துமே அதனுள் நுண்ணிய அரசியலைக் கொண்டது. நீங்கள் சக்தி அறவாரியம் மூலம் நூலை வெளியிட்டது குறித்து உங்களுக்கு சுயவிமர்சனம் உண்டா?

சீ.முத்துசாமி: ஒட்டுமொத்த விமர்சனமும் தங்கள் மேல் வைக்கப்படுவதாக இருக்க வேண்டும் என்று அவர்கள் பெருமனது கொண்டு ஏற்பாடு செய்த ஒரு நிகழ்வில், இப்போது ‘சுயவிமர்சனம்’ ஏதும் உண்டா என்கிறீர்கள்? என்ன நியாயம்? நான் பங்குகொண்டது அவர்களின் முதல் நூல் வெளியீட்டுத் திட்டம். திட்டம் அறிந்து என்னைத் தொடர்பு கொண்டவர் மலாயாப் பல்கலைக் கழக தமிழ்ப் பிரிவு பேராசிரியர் ராஜேந்திரன்.

முன்னெச்சரிக்கையுடன் வாரியத்தின் பிண்ணனியிலுள்ள முக்கிய நபர்களின் விபரம் கேட்கப்பட்டபோது, ‘நல்லவருங்க. வல்லவருங்க. மொழிக்கும் இலக்கியத்துக்கும் தொண்டு செய்ய நெனக்கிறவரு’ என்பதற்கு அப்பால் வேறெந்த தகவலையும் தரவில்லை. அந்த நல்லவர் தனேந்திரன். அவர்தான் மக்கள் சக்தி கட்சியின் தலைவர் என்பது மலாயாப் பல்கலைக் கழக மண்டபத்தில் நடந்த நூல் வெளியீட்டு விழாவில் அவர் அறிமுகப்படுத்தப் பட்டபோதுதான் தெரிய வந்தது. Too late!

சுய லாபத்துக்காக ஒரு பக்கா அரசியல்வாதி மொழி, இலக்கியம் என்கிற இனிப்புத் தடவி முன்னெடுத்த கபட நாடகத்தில் துணை நடிகர்களாக நமது உயர்கல்வி நிலையங்களின் கல்விமான்கள். போதாக்குறைக்கு, எனக்கு மிகப் பெரிய மன உளைச்சலைத் தரும்படியாக எனது நூலை எல்லா வகையிலும் சிதைத்து சின்னாபின்னமாக்கி குரங்காட்டம் போட்டிருந்தார்கள். ஒரு நான்காம் வகுப்பு கடைநிலை மாணவனிடம் பொறுப்பை கொடுத்திருந்தால்கூட இதைவிட சிறப்பாக நூலை கொண்டு வந்திருப்பான்.

அவர்கள் அன்று கையோடு ஒரு பை நிறைய கொடுத்தனுப்பிய எனது புத்தகங்களை மறுநாள் வீடு வழி போன Old newspaper சீனரை நிறுத்தி அத்தனை புத்தகங்களையும் தூக்கி அவரிடம் இனாமாக கொடுத்துவிட்டேன்.

கேள்வி: சமகால மலேசிய கட்சி அரசியல் குறித்து உங்கள் பார்வை என்ன?

சீ.முத்துசாமி: ஒரு படைப்பாளனுக்குக் கடந்த கால வரலாற்றுப் புரிதல் எத்தனை அத்தியாவசியமோ அதே அளவில் அவன் வாழும் காலத்தின் அரசியல் நகர்வுகளும் அவனது அவதானிப்பு வட்டத்துள் இருக்க வேண்டியது முக்கியம் என எண்ணுகிறேன். இந்நாட்டு ஒட்டுமொத்த சமூகங்களின் அனைத்து தளங்களிலும் சுமூகமாக நிகழ்ந்திருக்க வேண்டிய முன்னகர்வுக்கு மிகப் பெரிய முட்டுக்கட்டையாகக் குறுக்கே நிற்பது இன, மொழி, மத பேதங்களை முன்னிறுத்தி குளிர் காய்ந்து சுய லாபம் காண விழையும் கட்சி அரசியலின் சுரண்டல் போக்கே என்பது என் கணிப்பு.

நம் நாட்டில் காணப்படும் இந்த பன்முக சமூக அமைப்பின் மிகப் பெரிய பலவீனமே பிற பல ஜனநாயக அரசியலமைப்பு கொண்ட நாடுகளில் இருப்பது போன்ற ஒற்றைப்படை சமூகங்களில் அதன் அரசியல் கலை பண்பாட்டு பொருளாதார தளங்களில் இயக்கம் கொண்டிருக்கும் சமன்பாடு குலைந்துவிடுவது. அதன் வலிமைமிக்க தரப்பு, கடந்தகால மன்னராட்சி காலத்துக்கு நிகராக தன்னை அதிகார கட்டமைப்பில் நிரந்தமாக நிலைநிறுத்திக் கொள்ளும் நோக்கில், திட்டமிட்டே அதனை சீர்குலைக்கிறது எனலாம்.

வெள்ளைக்கார துரை ஒரு காலத்தில் கையாண்டு வெற்றி கண்ட, அதே பிரித்தாழும் சூழ்ச்சி பன்முக ஊடக வலிமையுடன், நமது பன்முக சமூகத்தில் மிகச் சுலபத்தில் அரங்கேறிவிடுகிறது. இன, மொழி மேலதிகமாக மத பேதங்களை ஊதிப் பெருக்கி உருவாக்கிய அதிபயங்கர ஆயுதங்கள் அக்கட்சிகளின் கைவசம் எத்தருணத்திலும் உண்டு. தேவைக்கேற்ப அதனை மக்கள் மத்தியில் ஏவி அவர்களை நிலைகுலைய வைக்கவும் அவர்களால் இயலுகிறது.

சொல்லப்போனால், இன்றைய குழப்பமான சூழலில் நாளுக்குநாள் இந்நாட்டு கட்சி அரசியலின் இன, மொழி மேலதிகமாக மத அடிப்படையிலான பிரிவினை வாதம், வெறுப்பு அரசியலாக முன்னெடுக்கப்படுவதைக் காண சிறுபான்மை சமூகங்களின் மத்தியில் ஒருவனாக அச்சம் ஏற்படுத்துவதைக் காண முடிகிறது. எதிர்காலம் குறித்த மிகுந்த நம்பிக்கை இழப்பையும் மிகுந்த மனச்சோர்வையும் ஒருசேர அளிக்கும் ஒரு அபாயகரமான காலகட்டத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்பதை எதிர்கொள்ளும் ஒவ்வொரு நொடிப்பொழுதிலும் உணர முடிகிறது.

கேள்வி: சமூக, அரசியல் விமர்சனங்களைச் செய்துள்ள நீங்கள் இலக்கிய விமர்சனங்களில் ஈடுபடாமல் இருக்கக் காரணம் என்ன?

05 siசீ.முத்துசாமி: நீங்கள் குறிப்பிடும் சமூக அரசியல் விமர்சனங்களில் எனது ஈடுபாடு என்பது கூட, எத்தருணத்திலும் பொருட்படுத்தத்தக்க அளவில் காத்திரமானதொரு முன்னெடுப்பாக இருந்ததாக இல்லை. என்பதே எனது எண்ணம்.

ஒரு வேளை எனது புனைவு வெளிக்குள் பின்னிவிடும் சிற்சில கண்ணிகளை முன்னிறுத்தி, உங்களுள் நிகழ்ந்த ஒரு கண்டடைவாக அது இருப்பின் அந்த ‘அளவில்’ அதனை ஏற்கலாம்.

ஆனால், தீவிரமான சமூக அரசியல் அல்லது அதன் பண்பாட்டுச் சூழல் குறித்த காத்திரமான விமர்சனம் என்பது புனைவாளனை, அத்தளத்திலிருந்து முற்றிலும் அகற்றி, தர்க்க ரீதியான பிரதிவாதங்களை, தயைதாட்சண்யமின்றி, சமூகத்தின் நேர்நின்று நேரடியான சொற்களில், முன்வைப்பதாக இருக்க வேண்டும்.

அதற்கான அறிகுறிகள் எனது எழுத்துக்களில் மிக அரிதாகவே காணப்படும்.

காரணம் மிக எளிதான ஒன்றுதான். இங்கே அதற்கான வாசல்கள் அனைத்தும் முற்றிலும் அடைக்கப்பட்டு சீல் வைத்து பூட்டப்பட்டுவிட்டன. அந்தக் கதவுகளை உடைத்து உள் செல்வது, தனியனாய் இயங்கும் எழுத்தாளனுக்குச் சாத்தியமற்ற ஒன்று.

இலக்கிய விமர்சனம் வேறு விசயம். எந்தக் கதவும் பூட்டி சீல் வைக்கப்படவில்லை. தாராளமாகச் செய்யலாம். ஆனாலும் செய்யவில்லை.

நமது இலக்கியச் சூழலின் மேல் கவிந்திருக்கும் இருள். விமர்சனம் குறித்த அதன் பிற்போக்குத்தனமான புரிதல். அறியாமையின் மூர்க்கம். அந்த குருட்டுத்தனமான மூர்க்கத்தோடு போராடும் மனநிலை எனக்கில்லை.

இதையொரு ஆரோக்கியமற்ற மனநிலையாக அர்த்தம் கொள்ள வாய்ப்புள்ளது. எத்துறையிலும் எதிர்மறை சக்திகளின் இயக்கம் என்பது தவிர்க்க இயலாத அதன் ஒரு கூறுதான். அந்த இரு எதிர்முனைகளின் முரணியக்கமே, அத்துறையை மேல் நோக்கிச் செலுத்தும் என்பதும் உண்மையே.

ஆனால், அதனை முன்னெடுப்பனின் மனநிலை, அச்செயல்பாட்டின் ஊடே தவிர்க்க இயலாமல், எதிர்படும் பன்முக தாக்குதல்களை, ஒரு துறவிக்குரிய சமன்பாட்டுடன் அணுகவும், புரிந்துணர்வின் அடிப்படையில், நிலைகுலையாமல் அதனைக் கடந்தபடி, தொடர்ந்து பயணிக்கவும் தேவையான மன வலுவும், அறிவுத் தெளிவும், முதிர்ச்சியுற்ற பார்வையும் கொண்டிருத்தல் அவசியம். தமிழகத்தில் க.நா.சு என்கிற மகத்தான விமர்சன ஆளுமை இருந்ததற்கு ஒப்ப, சமகாலத்தில் ஜெயமோகன். நம் நாட்டில் ம.நவீனிடம் அதன் தெறிப்பு உண்டு. தாக்குப் பிடிக்க வேண்டும்.

அது முற்றிலும் வேறொரு தளம். எனது இடம் அதுவல்ல.

கேள்வி: சமகால மலேசிய இலக்கியம் குறித்த உங்கள் பார்வை என்ன?

சீ.முத்துசாமி: சமகால மலேசிய இலக்கியம் என்பதை சமகாலத்தில் தமிழில் எழுதப்படும் தீவிர நவீன இலக்கியம் என்பதாகவே பொருள் கொள்கிறேன். அந்தக் கோணத்திலிருந்தே இதனை அணுகவும் செய்கிறேன். பொது வெளியில் நாளிதழ்களின் ஞாயிறு பிரதிகளிலும் பிற வார, மாத இதழ்களிலும் இலக்கியப் பக்கம் என்கிற முத்திரையோடு, கடை விரிக்கப்படும் சரக்குகள் எளிய வாசகனின் பொழுதுபோக்கை நிறைவு செய்யும் ஒன்றைக் குறிக்கோளில் தங்களை இருத்திக் கொள்வதால் அவற்றில் இலக்கிய வாசிப்புக்கான இடைவெளி இல்லாமலாகிறது.

இங்கே, நவீன இலக்கியம் என்பதை ஒரு சிறு வட்டத்துக்குள் ஒரு உட்குழு இயக்கமாக தன்னைக் குறுக்கிக்கொண்டு இலக்கிய வாசிப்புத் தேர்ச்சி பெற்ற, அதே வகைமையானதொரு சிறுபான்மை வாசகரை மனதில் கொண்டு இயங்குகிற ஒரு இயக்கமாக தன்னை தக்கவைத்துக் கொண்டுள்ளது. அத்தகைய பண்புகளை முன்னிறுத்தி செயல்படும் இலக்கியக் குழுவாக வல்லினத்தைக் குறிப்பிடலாம். உலக வாசகப் பரப்பில் இணையம் வழி நம் நாட்டு நவீன இலக்கியத்தின் பன்முகங்களைக் கொண்டு சென்று, தமிழின் அதி முக்கிய இலக்கிய ஆளுமைகள் சிலரின் கவனத்தையும் பாராட்டையும் அது கவர்ந்துள்ளது என்பதே அது முன்னிறுத்தும் படைப்புலகின் இலக்கியத் தரத்துக்கு மிகச் சிறந்த சான்று. இப்படிச் சொல்லலாம், ஏதோவொரு வகையில், நம் நாட்டு தீவிர நவீன இலக்கியம் ஒரு பாய்ச்சலுக்குத் தன்னை தயார்படுத்திக் கொண்டிருக்கிறது.

இந்த வட்டத்திற்கு வெளியிலும் இத்தகைய தீவிரத்துடன் சு.யுவராஜன், கே. பாலமுருகன் என மேலும் ஒன்றிரண்டு குதிரைகள் பாய்ச்சலுக்குத் தயார் நிலையில் கனைத்துக் கொண்டும் பின்னங்கால்களைப் பிராண்டிக் கொண்டும் நிற்பது தெரிகிறது. பார்ப்போம். எந்தக் குதிரை பாய்கிறது, எந்தக் குதிரை ‘போங்கடா…! நீங்களும் ஒங்க எலக்கியமும்?’ என்று பாதியில் கழண்டு ஓடி ஒளிகிறது என்பதை நிர்ணயம் செய்யும் தகுதி காலத்தின் கைகளுக்கு மட்டுமே உண்டு.

ஒரு வேளை பந்தயமே தொடங்காமலும் போகலாம். யார் கண்டது?

நேர்காணல்/ படங்கள் : அ.பாண்டியன்

1 comment for ““எளிய வாசிப்புத்தளத்தைத் திருப்திப்படுத்த நகர்த்தப்படும் எழுத்து நீர்த்துப்போவதை தவிர்க்கவியலாது” – சீ.முத்துசாமி

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...