பலி

பலி2செல்வி வெளியில் வராமலிருந்தது நளினிக்கு ஆச்சரியத்தைத் தந்தது. வழக்கமாக தூரத்தில் கார் வரும் சத்தம் கேட்டதுமே பரபரக்க வெளியில் வந்துவிடுவாள். காரிலிந்து வெடுக்கென கைப்பையை இழுத்து, அனைவரையும் முந்திக்கொண்டு அவள் வீட்டுக்குள் நுழைவது ஒரு வழிகாட்டியின் தோரணையை ஒத்திருக்கும். செல்விக்கு பதிலாக இன்று பணிப்பெண் அவசரகதியில் வெளிபட்டு நின்றாள், முகத்தில் கவலை ஊசலாடியது.

 “என்னாச்சி? ஏதும் பிரச்சனையா?”

“செல்.. தானுங்கம்மா,” பணிப்பெண் பேச்சினிடையே இடைவெளியை அதிகரித்து மீண்டும் பேசத் தொடங்கினாள். “ஸ்கூல் முடிந்து வந்ததிலிருந்து சோபாவிலேயே படுத்திருக்கிறாள். ஏதுவும் சாப்பிடவுமில்லை.”

செல்வி அங்குதான் இருந்தால், பள்ளி சீருடையைக்கூட மாற்றவில்லை, கைகளிரண்டையும் தோள்பட்டையை இறுகப்பற்றி தனக்குள் ஒரு பாதுகாப்பு அரணை உருவாக்கிக் கொண்டு ஆழ்துயிலுக்குள் சென்றுவிட்டிருந்தாள். சட்டென ஒரு முடிவுக்கு வந்தவளாய், நளினி எதிர்விசையில் செல்வியைக் கடந்து சென்று, மதிய உணவை சாப்பிட்டாள். மதிய நேரத்தில் கண்ணயறும் அன்றாட வழக்கத்திற்கு மாறாய் சாப்பிட்டபின் நாற்காலியை இழுத்துப் போட்டு செல்வியின் முன் உட்கார்ந்து கொண்டாள்.

பிற்பகலானதும் பக்கத்துவீட்டு குழந்தைகள் முன்தாழ்வாராத்தில் ஆரவாரத்துடன் பந்து வீசி விளையாட ஆரம்பிக்க, சத்தத்தில் தூக்கம் கலைந்து செல்வி கொஞ்சமாய் கண் விழித்துப் பார்த்தாள். நளினி இருவருக்குமிருந்த இடைவெளியைச் சுறுக்கி, நெருக்கத்தை அடர்த்தியாக்கினாள். முதல் சில கணங்கள் அவளால் நளினையை அடையாளம் காண முடியவில்லை. பின் ஒருவாறாய் சுதாரித்துக் கொண்டு, தன்னை மொத்தமாய் நளினியின் உடலுக்குள் திணித்துக் கொண்டாள்.

 “மம்மி!”

“நீ நல்லாதான இருக்க செல்?” பதற்றமாய் கேட்டு வைத்தாள். ஐஸ்வர்யமானது எனும் பொருள் சுட்டும் ‘செல்வி’ என்ற பெயரைத்தான் அவளுக்குச் சூட்டியிருந்தார்கள். ஆனால் அழைப்பதென்னவோ ‘செல்’ என்று மட்டும்தான்.

“நான் இனிமேல் ஸ்கூலுக்கு போக மாட்டேன் மம்மி!”

“ஏன்?”

“நான் நல்ல பிள்ளையில்ல, அவங்க என்னை கடைசி வகுப்பில போட்டுட்டாங்க!”

சட்டையில் முகத்தை இறுகப் புதைத்துக் கொண்டாள். தேம்பியதில் உடல் குலுங்கத் தொடங்கியது.

 “அதெல்லாம் ஒன்னுமில்ல செல். மம்மி பார்த்துக்கிறேன்,” தலைமுடியை கோதிவிட்டு முதுகில் தட்டிக் கொடுத்தாள். சிந்தனை கோப வெள்ளத்தில் கரைபுரண்டோடத் தொடங்கி, பின் அதிருப்தியாய் வெடித்தது. இரண்டுமுறை நடந்த கருசிதைவுக்குப் பின் உருவானவள் செல்வி. திருமணமாகி இரண்டு வருடமாகியும் கருதரிக்காதச் சூழலில் குமாரும் நளினியும் கணக்குப் போட்டு பார்க்க முடியாத அளவுக்கு மருத்துவ பரிசோதனைகளைச் செய்து கொண்டார்கள். அவர்களைப் பரிசோதித்த மருத்துவ நிபுணர்களில் ஒருவர்  இருவரிடத்திலும் எவ்வித சிக்கலும் இல்லை என்றதோடு, நையாண்டி சிரிப்புடன் தொடர்ந்து முயற்சிக்கும்படி சொன்னார்.

அதற்கு முன்புவரை நளினி தன்னளவில் மிக உறுதியானவளாகவே இருந்தாள். பள்ளிப்பருவம் தொடங்கிய நாளிலிருந்தே அவளுக்கான வழி என்று ஒன்று எப்போதும் இருந்தது. அப்பாவின் விருப்பப்படி அறிவியல் துறை அல்லாமல் தனக்குப் பிடித்த கலைத் துறையைத் தேர்ந்தெடுத்துப் படித்தாள். கலைப்பிரிவில் படித்து நீயும் கடைசியில் என்னை மாதிரி அரச்சாங்க ஊழியம் செய்யவோ அல்லது வாத்தியார் வேலை பார்க்கவோதான் முடியும். அப்புறம் காலம் முழுக்க அவங்க சொல்ற்துக்கெல்லாம் தாளம்போட்டுக்கிட்டு இருக்க வேண்டியதுதான். அவருக்கு தன் பிள்ளைகள்ளும் தன்னைப் போன்று ஆவது சுத்தமாக பிடிக்கவில்லை.

மகன் பொறியியல் பட்டப்படிப்பு முடித்ததில் பெருமைபட்டவர் நளினியிடம் உயர்க்கல்வியில் அப்படியான ஆர்வமேதுமின்றி சடங்குக்காய் ஆதரித்தார். குறைந்தபட்சம் வழக்கறிஞர் ஆவாள் என பெரிதும் எதிர்பார்த்தார். ஆனால் விரிவுரையாளராகி அப்பாவுக்கு சளிக்காமல் மேலும் மேலும் அதிருப்தியையே தந்துகொண்டிருந்தாள். “சீவி சிங்காரிச்ச கொஞ்சம் வேறமாதிரி டீச்சர் வேலைதான!” அப்பா சீறினார். குமாரை வாழ்க்கைத் துணையாக தேடிக்கொண்டபோது, “வணிக நிர்வாகியா? நாசி லெம்மாக் விற்பவன்கூடத்தான் வணிக நிர்வாகி!” அப்பா ஏன் இப்படி கசப்பை உமிழ்கிறார் என அவளால் ஒருபோதும் புரிந்துகொள்ள முடியவில்லை.

குமார் பட்டதாரியா, வேலை செய்கிறானா என்பதோடு அதிமுக்கியமாக அவன் ஒரு இந்துவா என்பதை மறுஉறுதி செய்துக் கொண்டாள் அம்மா. மகன்வழி பேரப்பிள்ளைகளை இருமுறைக்கு மேல் பார்த்துவிட்டாலும் மகள்வழி வாரிசுக்காய் ஆவல் பூத்து காத்திருந்தாள்.

குழந்தையின் இறுப்பற்றிருந்த திருமண வாழ்வு முதலில் கொஞ்சகாலம் இருவருக்குமிடையில் பெரிதான விருப்பு வெறுப்புகளின்றி நகர்ந்தது. ஒன்றாக இருக்கவும், பயணங்கள் போகவும் தொழில்சார்ந்த கனவுகளை துரத்திச் சென்றும் நாட்களை கடத்தினார்கள். செய்துகொண்டிருந்த வேலையும் விருப்பத் தேர்வாக இருந்ததால் வேறெதுவும் அவர்களை ஆழமாய் பாதித்திருக்கவில்லை. அறிவார்ந்த சூழலில் பணிபுரிவதும் நெகிழ்வான வேலை நேரமும் தொய்வில்லா போட்டித் தன்மையை ஊட்டிக்கொண்டிருக்கும் நெருக்கடிகளும் அவளை மொழியியல் புலத்தில் மகிழ்ந்திருக்க வைத்தது. வணிக உலகின் சவால்களை நேசிக்கும் குமாரும் ஏற்றுமதி இறக்குமதி சார்ந்த நிறுவனமொன்றில் வேலைக்குச் சேர்ந்திருந்தான்.

அப்பா இல்லாதபோதெல்லாம் அழைத்து, எதிர்பட்ட ஓரிரண்டு விசயங்களைப் பேசிவிட்டு கடைசியில் பேரக்குழந்தை வரவை பற்றி பேசுவது அவளது அம்மாவின் வழக்கமாகியிருந்தது. இடைவிடாது தொடர்ந்த இந்த உரையாடல்களினால் நளினி விரக்தியானாள். இந்தப் பேச்சு வளரும்போதெல்லாம் தான் வேலைப்பளு, எழுதி முடிக்க வேண்டிய ஆய்வுக் கட்டுரைகள், எம்.ஏ. பட்டக் கல்வி ஆய்வுவேலை என கடும் நெருக்கடியில் உழன்றுக் கொண்டிருப்பதாகச் சொல்லி சமாளித்து வைத்தாள். (பல்கலைக் கழக வேலை முன்புபோல் நெகிழ்வு தன்மையுடன் இல்லை என்பதை இடைப்பட்ட சில காலங்களிலேயே புரிந்து போனது. இதுவரை பதிப்பித்த ஆய்வுக் கட்டுரைகளின் பட்டியல், எம்.ஏ. படிப்புக்கான ஆய்வு வேலையின் அவ்வப்போதைய நிலவரம், அன்றாட வேலைகளின் ஆதாரங்கள் என செரிவான பட்டியலைக் காட்டியே சம்பள உயர்வை உறுதிசெய்ய வேண்டிய சூழல் உருவாகியிருந்தது. தொடர்ந்து வேலையில் நீடித்திருக்கவும் இவை உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு வந்தன. ஆனால், மற்ற சில நண்பர்கள் ஆண்டுக்கு இரண்டு ஆய்வுக் கட்டுரைகளை பதிப்பிக்க வேண்டும் என்ற நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யாவிட்டாலும்கூட சம்பள உயர்வு பெருவதில் சிக்கலேதும் இருந்ததாய் தெரியவில்லை. தரமற்ற ஆய்விதழ்களில் கட்டுரைகள் இடம்பெற்றிருந்தால் அதுவும் அவர்களது வேலைக்கு உலைவைப்பதில்லை என்ற சூழலே நிழவி வந்தது. ஆனால், இந்தக் காரணங்களுக்காகவெல்லாம் மகப்பேறு காத்திருக்காது என்று ஒற்றைப் புள்ளியில் இறுகி நின்றாள் அம்மா. அந்தத் தொலைபேசி அழைப்புக்குப் பிறகு நாற்காலியில் சரிந்தவள் பலவாறாய் சிந்திக்கத் தொடங்கினாள். ஒருவேளை அப்பாவின் விருப்பங்களுக்கு எதிராய் செயல்பட்டதால்தான் இப்படியெல்லாம் நடக்கிறதா? அல்லது மேலோட்டமான உணர்வுநிலைக்கு அப்பால் சென்று ஆழ்மனதில் படிந்திருக்கும் குற்றவுணர்ச்சிகள் கருத்தரிப்புக்குத் தடையாக இருக்கறதா? என்றெல்லாம் யோசித்துப் பார்த்தாள்.

சில சந்தர்ப்பங்களில் வேலையிட சகாக்கள் அவரவர் குழந்தைகளைப் பற்றி பேசுவதுண்டு. அப்படியான தருணங்களில் சட்டென பரிதாப பார்வையைத் தன்னை நோக்கி தூவும்போது தொலைவில் எங்கோ தூக்கியெறியப்படுவதாய் உணர்ந்தாள். சில ஆண் நண்பர்கள் அவளிடம் தனிப்பட்ட உரிமை பாராட்டத் தொடங்கியிருந்தனர்; தவறான துணையைத் தேர்ந்தெடுத்து விட்டதாகவும் கணவனின் உணர்வுகளை உசுப்பிவிடும் வேளைகளைச் செய்யப் பழக வேண்டும் என்றும் காமவெறி தெரிக்கும் வார்த்தைகளையும் சில்மிஷப் புன்னகையையும் அயறாது பாய்ச்சிக் கொண்டிருந்தார்கள். வயதாகியும் திருமணமாகாமல், மேலுதடை மறைத்து வளர்ந்திருந்த அடர்ந்த மீசைகளுடன் நடமாடி கொண்டிருக்கும் விரிவுரையாளர்களை அவள் கலவரத்துடனேயே எப்போதும் எதிர்கொண்டாள்.

பேருந்தில் ஏறும்போது சில அம்மாக்கள் குழந்தைகளின் கைகளை பற்றிக் கொள்வதையும், நெடுஞ்சாலைகளில் எதிர்படும் பெண் காரோட்டிகள் மகளின் தலை முடியை கோதி கலைத்துவிடுவதையும் நளினி பொறாமையோடு பார்ப்பதுண்டு.  சனிக்கிழமை பொழுதொன்றில் பல்கலைக்கழகத் தோழி ஒருத்தி தன் குழந்தைகளை அலுவலக தேனீர் அறைக்கு அழைந்து வந்திருந்தாள். சூழலுக்கு ஏற்ப அவ்விடமும் ஒருவித குடும்பத் தன்மையை உடுத்திக்கொண்டது. அன்றும் நளினியின் பார்வையில் ஏக்கச் சுமை கவிழ்ந்திருந்தது.

இந்தத் தொடர் மனவிரக்தி அவளுக்குள் மூடநம்பிக்கைகளை துளிர்விடச் செய்தது. இப்போதுபலி4 குடியிருக்கும் வீடு எவ்விதத்திலும் குடும்பச்சூழலைக் கொண்டிருக்கவில்லையென்றும் இவ்வீட்டுக்கு எந்தக் குழந்தையும் வர விரும்பாது என்றும் குமாரிடம் ஓயாமல் புலம்பத் தொடங்கினாள். “எப்படியாவது ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கனும்னு நீ எதையும் செய்ய தயாராகிட்ட போல?” வெறுமனே வாய்ச்சவடால் விட்டாலும் உள்ளுக்குள் அவனும் குமைந்துக்கொண்டிருந்தான். சமையலறை, மாடி படிகட்டுகள் என வீட்டின் இண்டு இடுக்குகளிலெல்லாம் உறவு கொள்ள, அது குளியலறைவரை நீண்டது. கிருஷ்ணனின் குழந்தை உருவப் படத்தை வைத்துக் கொள்வது நல்லதென காய்கறி விற்பவள் அவளது துயரத்தில் பங்கெடுத்துக் கொண்டவளாய் தளர்ந்த குரலில் அறிவுறுத்தியிருந்தாள். கொழுத்த, சாந்தசொரூப வடிவ குழந்தை கிருஷ்ணனை தலைமாட்டில் வைத்துக் கொண்டு கூடினர். அம்முறைதான் அது நிகழ்ந்தது; புதிதாய் அவளுக்குள் உணர்வுகள் மின்னலிட்டன; கருவை தேக்கியிருந்தாள்; ஆனால் மூன்று மாதங்களில் கலைந்துபோய்விட, இரண்டு வருடம் கழித்து மீண்டும் அதேபோலொரு சம்பவம் நிகழ்ந்தது.

கடைசியாக செல்வியைக் கருவுற்றிருக்கும்போது, நளினியின் கருப்பையில் வீக்கம் இருப்பதாக கூறிய மகப்பேறு மருத்துவ நிபுணர் அவளை கடுமையான வேலைகளைச் செய்யக் கூடாது என்றும் முடிந்தவரை அதிக ஓய்வு எடுத்துக்கொள்ளும் படியும் கால்களுக்கடியில் உயரமான தலையணைகளை வைத்துக் கொள்ளும்படியும் அறிவுறுத்தினார். டாக்டர் சொன்ன அனைத்தையும் தவறாமல் செய்துக் கொண்டு பல்கலைக்கழக வளாகத்துக்குச் செல்லும் முன் சில தனிப்பட்ட சடங்குகளையும் செய்து வந்தாள். அடிவயிற்று வலியோ உதிரக் கசிவோ வந்துவிடக்கூடாதென பீதியும் கலக்கமுமாய் முதல் மூன்று மாதங்கள் கடந்துபோக காத்திருந்தாள். பிரசவிக்க ஏறக்குறைய ஒரு மாத காலமே எஞ்சியிருந்த நிலையில் புதிதாய் ஒருத்தியை வீட்டுவேலைக்கு வைத்து கொண்டாள். வேலைமுடிந்து வந்ததும் வீட்டு வேலைகளில் கைவைக்காமல் ஓய்வெடுத்தாள். குமாரும் தன் பங்குக்கு அதிக அக்கறைக் காட்டினான். தனியாக காரோட்ட விடாமல் காலையில் பல்கலைக் கழகத்தில் கொண்டு சேர்ப்பதுடன், வேலை முடிந்ததென்று அழைப்பு வந்தால் மறுகணம் வீட்டுக்கு கொண்டு வந்துவிடுவதென அவனது அக்கறை வலுத்திருந்தது. (அப்போது குமார் நிர்வாக இயக்குனர் பதிவியிலிருந்து மேல்மட்ட பதவிக்கு உயர்ந்ததோடு நிருவனத்தில் பங்குகளையும் வாங்கியிந்தான். கூடவே அன்றாட வேலை நேரத்தை வசதிக்கேற்ப திட்டமிடும் சுதந்திரமும் அதிகாரமும் பெற்றிருந்தான்.) அவனது கவனிப்பில் தோய்ந்திருக்கும் பதற்றத்தையும் பயத்தையும் பார்த்து சமயங்களில் வாய்விட்டு சிரித்துவிடும் நளினி ஒருபடி மேலே போய் பிரசவத்திற்குக் குறிக்கப்பட்ட தேதிக்கு இரண்டு நாட்களுக்கு முன்னமே தனியார் மருத்துவமனைக்குச் சென்று படுத்துக் கொண்டாள்.

குழந்தையைப் பிரசவிக்க நிறைய சிக்கல்கள் வரும் என எதிர்பார்த்தார்கள். அறுவை சிகிச்சை செய்ய வேண்டிவரலாம் என்றும் நினைத்திருந்தார்கள். ஆனால் எதுவுமே இல்லாமல் சுகபிரசவத்தில் குழந்தைப் பிறந்தது. வாழ்வின்மீது பேராசை கொண்டிருக்கும் தோரணையில் குழந்தை தாய்ப்பாலை உறிஞ்ச, பதிலுக்கு நளினியோ சிணுங்கும் குழந்தையை வருடியபடி அணைத்து அலுக்காமல் பால் கொடுத்துக் கொண்டே இருந்தாள். இதுநாள்வரை மறுக்கப்பட்ட தாய்மையை அன்றுமுதல் செறுக்குடன் அரங்கேற்றத் தொடங்கியிருந்தாள்.

அவளது பெற்றோர்கள் வந்திருந்தனர். அப்பா வீட்டை பெருமிதத்துடன் பார்த்தார். இருமுறை நிகழ்ந்த கருசிதைவுக்குப் பின்பான இடைவெளியில் வாங்கிய வீடது. குழந்தை பெற செய்த முயற்சிகளில் அதுவும் ஒன்று. புதியதொரு குடும்பச் சூழலை உருவாக்கிவிடும் பொருட்டு வாங்கப்பட்டது. வீட்டின் நாலாபுறமும் சுற்றிப் பார்த்துவிட்டு அப்பா குமாருடன் ஒன்றாய் அமர்ந்து மதுவும் அருந்தினார். பாரட்டும் விதமாகவும் அவர்களது மகிழ்ச்சியில் பங்கேற்பதன் பொருட்டும் அது நிகழ்ந்தது. நளினி எதிர்பார்த்தபடியே அவளது  அம்மா குழந்தையை மடியில் படுக்க வைத்து தாலாட்டுகளை வரிசை பிடித்து பாடிக்கொண்டிருந்தாள். குழந்தை தாய்ப்பால் குடிப்பதை மறக்கச்செய்ய சில நூதன வழிமுறைகளையும் நளினிக்குச் சொல்லிக் கொடுத்தாள். ஆனால், நளினியிடம் வேறு சில திட்டங்கள் இருந்தன.

மகப்பேறு விடுமுறை முடிந்திருந்தது. வேலைக்குப் போகத் தொடங்கிய நளினி முலைப்பாலை சுரந்து குளிர்சாதனப் பெட்டிக்குள் வைத்து, குழந்தைக்குப் பசிக்கும்போதெல்லாம் சூடு காட்டி கொடுக்கும்படி செய்தாள். குழந்தையிடம் தென்படும் சிறுசிறு மாற்றங்களையும் அணுக்கமாக கண்காணித்தாள். பிறந்த முதல் சில மாதங்கள் மட்டுமே குழந்தை அவளிடம் அலைந்துகொண்டு பால்குடித்தது. தவழும் குழந்தையைத் தொற்றிக்கொண்டு வரவேற்பரை எங்கும் நளினி கூடவே அலைந்தாள். நோய் எதிர்ப்பு சக்தி குன்றி அவ்வப்போது இலேசான குளிரும் காய்ச்சலும் வந்து போனது. ஏறக்குறைய நான்காவது மாதத்தில் ஒருமுறை கடும் காய்ச்சலும் தாக்கியது. மருத்துவர் பரிந்துரைத்த எந்த மருந்தும் குழந்தைக்க்கு ஒத்துப்போக வில்லை. தாய்பாலையும் முழுமுற்றாய் தவிர்த்தது. இளஞ்சூட்டில் குளுக்கோஸை தாய்ப்பாலில் சேர்த்து வர்புறுத்தியே ஊட்டவேண்டி இருந்தது.

“கவலையா இருக்கீங்களா,” சந்தையில் காய்கறி விற்பவள் கேட்டாள்.

“என் மக….,” நளினி தொடர்ந்தாள். “அவளுக்கு உடம்பு சுகமில்ல.”

“ரொம்ப கவனமா இருக்கனும். இந்த குழந்தையும் மற்றதுகள தொத்திக்கிட்டு போயிடப் போகுது.”

அவளது வார்த்தை ஜாலங்களில் மயங்கியே எப்போதும் கடையில் கூட்டம் மொய்த்துக் கொண்டிருக்கும். பெரும்பாலும் தான் விற்கும் பொருட்களின் நிகரில்லா அற்புதங்களைப் பற்றி பேசுபவள் அன்றாட வாழ்க்கையின் கஷ்ட நஷ்டங்கள் குறித்தும் அவ்வப்போது கருத்து சொல்லிக் கொண்டிருப்பாள். காய்கறிகளைத் தாளில் சுற்றுவது, கத்தரிக்காய், வெண்டை, மிளகாய்களைச் சிறிய நெகிழிப் பைகளில் போட்டு கட்டுவது போன்ற வேலைகளை அவள் செய்ய, அவளது கணவன் வாடிக்கையாளர்கள் எடுக்கும் காய்கறிகளை நிறுப்பது, விலையைக் கணக்குப்போட்டு சொல்வது, காசு வாங்குவதுதென இருப்பான். நளினி கரு தரித்தது தொடங்கி கருச்சிதைவு ஏற்பட்ட கதைவரை அனைத்தையும் அனுதாப சொறிந்த  முகத்துடன் கேட்டிருக்கிறாள்.

அவள்தான் முன்பு குட்டி கிருஷ்ணனைப்பற்றி நளினியின் காதில் ஓதியிருந்தாள். செல்வியை கருவுற்றிருந்தபோது, எந்தக் காய்கறி சாப்பிட வேண்டும், எந்தெந்த இறைச்சி வகைகளை உணவில் சேர்த்துக்கொள்ள கூடாது, வீட்டை விட்டு எப்போது வெளியே வரணும், வீடு திரும்பும்போது எப்போது வாசற்படியைத் தாண்டனும் என தான் கற்றுவைத்திருந்த சில வழக்கங்களையும் நாட்டுப்புறக்சடங்குகளையும் நளினியின் சிந்தனைக்குள் தெளித்து விட்டிருந்தாள். (சமயங்களில் நளினி காரை ஏதாவதொரு மூலையில், அல்லது மரத்தடி நிழலில் நிறுத்திவிட்டு அவள் சொன்ன நல்ல நேரத்திற்காக காத்திருந்தாள்!) தான் சீராட்டி வளர்க்க ஏழு பிள்ளைகள் இருப்பதாகவும், ஏழாவது குழந்தை பிறந்தவுடன் வயிறை கட்டிவிடும்படி மருத்துவரிடம் தானே கேட்டுக் கொண்டதாகவும் நளினியிடம் அவள் முன்பெப்போதோ கூறியிமிருந்தாள்.

அவளது பேச்சில் கோபமடைந்த நளினி அங்கிருந்து விலகி, வேறொரு கடையில் தனக்கு வேண்டிய காய்கறிகளை வாங்கிக் கொண்டு வெளியேறினாள். “அவங்க அப்படி பேசியிருக்கக் கூடாது!” மனதுக்குள்ளேயே பலவாறாய் முனகிக் கொண்டு  காரை வீட்டை நோக்கி செலுத்தினாள். காய்கறி வியாபாரியின் ஒவ்வொரு சொல்லும் நளினியின் மன ஆழத்தில் செங்குத்தாய் செருகிக் கொண்டன.

குழந்தை ஏழாவது மாதத்திற்குள் அடியெடுத்து வைத்தபின், நளினியின் பிராணன் கொஞ்சம் அசுவாசமடைந்தது. இருந்தும் உள்ளுக்குள் முரண்டுபிடித்துக் கொண்டிருந்த ஆழ்மன அச்சங்களிலிருந்து மீளாமல் இருந்தாள். தத்தித்தாவி நடக்கும் இளம்பிஞ்சின் வழிதடங்களை ஓயாமல் பின் தொடர்ந்தாள். எப்போதாகினும் விழுந்துவிட நேர்ந்தாள் தாவிப் பிடித்து தாங்கிக் கொள்ள பின்னாலேயே சென்றாள்.

“இந்த அளவுக்கு செய்ய வேண்டியதில்ல!” அன்பாய் கடிந்துகொண்ட குமார் “நமக்கு பெரிய செல்வம்ல கிடைச்சிருக்கு!” என்றான்.

“அதனாலதான் எப்போதும் கவனமா இருக்கேன்.”

மிக விரைவிலேயே குழந்தை வரவேற்பறையைச் சுற்றி சுற்றி ஓட ஆரம்பித்திருந்தது. அந்தமற்ற பெருவலிமையின் ஊற்றாய் பெம்பர்ஸை பிதுக்கிக் கொண்டு குழந்தை ஓடும் காட்சியைக் குமார் பெருமிதத்தோடு ரசித்துக் கொண்டிருந்தான்; நளினிக்கு அறற்றியது.

“குழந்தைங்க தானாவே சீக்கை தேடிக்கும்.”

“பயந்தாங்கோழி!”

குட்டிப் பெண் ஓரிடமாய் அமருவதே இல்லை. இரண்டிலிருந்து ஐந்து வயது வரையிலான குழந்தைகளுக்கான கார்ட்டூன்களைப் பார்த்துவிட்டு முன்னும் பின்னுமாக உருண்டு காட்டி சாகசங்களைச் செய்து கொண்டிருந்தாள். பின்னொருநாளில் சற்றே வேறொருவளாகி வயது மூத்த குழந்தைகளுக்கான கார்ட்டூன்களுக்குள் உறிஞ்சப்பட்டு சிலையாகி ஒரு அடி பிசகாமல் உட்கார்ந்திருந்தாள். உறங்கும் வேலைகளில் நளினி கட்டிலோரம் அமர்ந்து கதை சொல்வது கட்டாயமாக்கப் பட்டது. குழந்தை உறங்கிவிட்டாளா என நோட்டம்விட நளினி கொஞ்சம் அவகாசம் எடுத்தாலும்கூட “அப்பறம்?” என தவறாமல் கேட்டு வைத்தாள்.

நளினி சொல்லி வந்த கதைகளெல்லாம் பின்னாளில் செல்வியால் பிழையில்லாமல் அவற்றை வாசிக்க உதவியது. A-for–Apple, B-for-Bat வகைசார்ந்த அட்டைகளையோ புத்தகங்களையோ முற்றிலும் தூரத் தள்ளி அடுத்தக் கட்டம் நோக்கி குழந்தை முன்னேறியிருந்தது. சிறுவர்களுக்கான பாடல்களை வைத்து புதுப்புது விளையாட்டுக்களை உருவாக்கி செல்வி விசித்திரமாய் வித்தைக் காட்டினாள்.

“ஜில் எங்க போனான்? ஜேக்கின் உடைந்த கிரீடத்தை ஒட்டி, எடுத்துவர போனான்!”

“மேரி எங்கு போனாள்? காணாமல் போன ஆட்டுக் குட்டியை தேடிப் போனாள்!’

வேலை முடிந்து வரும் குமாரின் முழங்கால்களை இறுக்கி அதன்மீது உட்கார்ந்து கொண்டு ஊஞ்சள் ஆடினாள்.

“நான் நல்லா படிப்பேன் ப்பா. கேட்கறீங்களா?”

பீட்டரும் ஜேனும் குதூகலாமாய் பயணித்த, விமானமா பட்டாம்பூச்சியா என்று சொல்லிவிடமுடியாத அந்த வாகனத்தை தோட்டத்துப் பூக்களுக்கு மத்தியில் நிறுத்திவிட்டு அவர்கள் வாசத்தை மோப்பம் பிடித்தக் கதையை வாசித்துக் காட்டினாள்.

ஆச்சரியங்களை மறைத்துக் கொண்ட குமார், அவளுக்காய் அடுத்தடுத்தப் பக்கத்தை திருப்பினான். கொஞ்சம்கூட தடுமாறாமல் அடுத்தப் பக்கத்தையும் சரளமாகவே வாசித்துக் காட்டினாள்.

“இன்னும் நிறைய புத்தகம் வாங்கனும் ப்பா!”

அதன்பிறகு புதிது புதிதாய் நிறைய புத்தகங்களை வீட்டுக்கு எடுத்து வந்தான். சில புத்தகங்கள் அவளது வயதுக்கு மீறியவை. கடினமான வார்த்தைகளையெல்லாம் அவள் வாசித்துக் கடப்பதை கேட்டுக் கேட்டு ரசித்தான்.

சில நேரங்களில் சொந்தமாய் கதைகளை உருவாக்கி, நடித்தும் காட்டினாள். குமார் வாங்கிக் கொடுத்த கதைப் புத்தகங்களிலிருந்து, தொலைக்காட்சியில் பார்த்த கார்ட்டூன்களிலிருந்து, அக்கு அக்காய் கேட்டிருந்த புராணக்கதைகள் நீதிக்கதைகளிலிருந்தும் தனக்கு வேண்டியதை உறிஞ்சி புதிதுபுதிதாய் கதைகள் புனைந்தாள். அப்போதெல்லாம் அவள் செல்வியாக இல்லாமல் வேறொருத்தியாக மாறிவிட்டிருந்தாள். அந்த வேறொருத்தி அசட்டையாய் தனக்குப் பிடித்த சாக்கலெட்டுக்காக எல்லாவித அட்டகாசங்களும் செய்தாள். பல மாதிரியான சூழல்களை உருவாக்கி அதனுள் மாட்டிக் கொள்பவளாகவும் இருந்தாள். அடர்ந்த இருள் சூழ்ந்த நாளொன்றில், சூனியக்காரியின் கைப்பாவையாய் சிறைபட்டு நசிந்தாள். பின் சாதூர்யமாய் வார்த்தைகளை உந்தித் தள்ளி மந்திரங்களாக்கி, சூனியக்காரியிடமிருந்து அந்த இன்னொருத்தியைக் காப்பாறினாள். காப்பாற்றிய அடுத்த நொடி, “முட்டாள்! முட்டாள்! போயும் போயும் சாக்கலெட்டுகளுக்கா இப்படி பேராசை பிடித்து திரிவது!” என்று வேறொருத்தியாக மாறி திட்டிக் கொண்டிருந்தாள்.

மற்றொரு சமயம் சிறுவனாக மாறி எல்லா விதமான சாகசங்களையும் செய்து கொண்டிருந்தாள். வரவேற்பரை குரூரமான காடாய், அல்லது கடலை கண்டும் காணாததுமான குன்றின் உச்சியாய், அல்லது கொந்தளிக்கும் கடலாய் அவளது விருப்பத்திற்கேற்ப மாறிக்கொண்டே இருந்தது. டிராகன்கள், புலிகள், சிங்கங்கள், முதலைகள், சுறாக்கள், அனைத்திலும் கொடிய தி-ரெக்ஸ் வகை டைனாசர்களுடன் அவளாகவோ அவனாகவோ மாறி கடுமையாக சண்டையிட்டுக் கொண்டிருந்தாள். இப்படி வெவ்வேறாய் மாறிக் கொண்டிருக்கும் செல்வியை வேடிக்கையாய் பார்க்கும் கணங்களில் நளினியின் மனதில் காய்கறி விற்பவளின் வார்த்தைகள் கீற்றிடும். அந்த இறுகிய கணங்களில், ‘நிஜமாகவே அவள் பிழையாக சொல்லிவிட்டாள்’ என்று நளினி தனக்குள் மீண்டும் உறுதிபட கூறிக் கொண்டாள். செல்வி அவர்களைப் பின்பற்றி செல்லவில்லை; தனக்குள்ளிருந்துதான் அவர்களை வெளிகொண்டு வருகிறாள்.

இருந்தும் சமயங்களில் செல்வியின் நடவடிக்கைகள் நளினியைச் சலனப்படுத்திக் கொண்டே இருந்தது. வரவேற்பரையின் ஏதாவது மூளையில்போய் உட்கார்ந்து கொள்வதும், நளினி, வேலைக்கார பெண்ணின் பார்வையிலிருந்து நழுவி வெறுமனே சோபாவுக்குப் பின்னாள் போய் மறைவது என செல்வியின் சில நடவடிக்கைகள் அவளை அச்சுறுத்தியது. அவ்வாறான தருணங்களில் எவ்வளவுதான் அணைத்துகொள்ள முயன்றாலும் செல்வி மேலும் வேலும் பின்வாங்கி தன்னை தனிமைப்படுத்திக் கொள்வதிலேயே குறியாய் இருந்தாள். அப்போதெல்லாம் வீட்டு பணிப்பெண் அந்தப் பாடலைப் பாடத் தொடங்குவாள். எறிதழல் பிழம்பாய் கொதிக்கும் எரிமலையிலிருந்து தப்பித்து ஓடிவரும் கிராமத்து சிறுவனின் கதை சொல்லும் அந்தப் பாடலைப் பாடுவாள். அந்தப் பாடல் செல்வியை குதூகலமாக்கும்; மறைந்திருந்த இடத்திலிருந்து சட்டென தாவி வெளிபடுவாள். இருந்தும் கடைசியாக ஒருமுறை எதற்கும் மசியாமல் மூலையில் சென்று தன்னை ஆழ புதைத்துக் கொண்டாள்.

கே.எப்.சிக்கு போகும் முன், சாகச  உலகிலிருந்து அவளை மீட்க ஏதேதோ சமாதானம் செய்தும், செல்வி பிடிவாதமாய் மறுத்துவிட்டதோடு சோர்ந்துபோய் தூங்கும்வரை அங்கேயே அசையாமல் இருந்துவிட்டாள்.

“எனக்கு ரொம்ப பதற்றமா இருக்கு குமார்,” பின்னகர்ந்துவிட்ட நடுநிசியில் கட்டிலில் படுத்தபடி நளினி பேசத் தொடங்கினாள். இந்த முறை குமார் அவளை “பயந்தாங்கோழி!” என்று சொல்லவில்லை; நெருங்கி அணைத்துக் கொண்டான்.

செல்வி இப்படி தன்னுள்ளேயே உறிஞ்சப்பட்டு பின்வாங்கிச் கொள்ளும் செயலின் சாரத்தை ஒருநாள் எப்படியோ கண்டுபிடித்தாள். அவளும் சிறுவயதில் அப்படி இருந்திருக்கிறாள். ஆவிகள் சூழ்ந்திருப்பதாய் சொல்லப்படும் இடங்களில் அவற்றிடமிருந்து தங்களை தற்காத்துக் கொள்ளும் மர்ம விளையாட்டுக்களை நண்பர்களுடன் விளையாடியபோது இப்படி பயந்திருக்கிறாள்.

“என்னம்மா பிரச்சனை உனக்கு?”

“ஒன்னும் இல்லம்மா.”

“ஒரு விளையாட்டு இருக்கு. வா.. விளையாடலாமா?”

“கடுப்பா இருக்கும்மா.”

“இது வித்தியாசமான விளையாட்டு செல். மாயாஜாலம் எல்லாம் இருக்கு.”

 “மாயாஜாலம்னா?”

“மேஜிக்.”

“எப்படி விளையாடுறது?”

“முதலில் நீ இப்படி உட்காரனும்,” நளினி உட்கார்ந்து காட்டினாள். கால்கள் இரண்டையும் குறுக்காக மடக்கி உட்கார்ந்தாள்.

“விளையாட்ட ஆரம்பிக்கலாமா?”

“சரிமா.”

“என்ன பிரச்சனை உனக்கு? சொல்லு.”

“எனக்கு பயமா இருக்கும்மா.”

“ராத்திரியை நினைத்தா?”

“இல்ல.”

“யாரையாவது பார்த்து பயந்துட்டுயா?”

“அம்மா, இங்க,” நெஞ்சுக்கு மேல் கை வைத்துக் காட்டினாள்.

“சரி,” செல்வியின் சம்பாஷனைகள் அவளுக்குப் பயத்தைக் கிழப்பியது. வெளிகாட்டாமல் பேச்சுக் கொடுத்தாள்.  “இப்போவே நாம அதை எடுத்திடலாம்.”

நிமிர்ந்து உட்கார்ந்தாள். மிக ஆழமாக மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே இரு கைகளையும் வயிற்றுப் பகுதியில் வைத்தாள். உடம்புக்குள்ளிருந்த அதை வெளியே எடுப்பதைப் போல மெல்ல மெல்ல கைகளை மேலே கொண்டு வந்தாள். கன்னங்களை ஊதி பெருதாகி வெடித்து, நாக்கை இங்குமங்கும் அசைத்து அடித்தொண்டையிலிருந்து குரலெழுப்பினாள். அந்த ஏதோவொன்று அவளது வாய்க்குள் சிக்கி நச்சரிப்பதுபோல் செய்தாள். சட்டென வாயைப் பொத்தி கொஞ்சம் கொஞ்சமாய் காற்றை வெளியாக்கி, அதை ஒன்றை கையில் இறுக்கி பிடித்தாள். கைவிரல்களைக் கிடுகிடுவென அசைத்துக்காட்டி அந்த ஒன்று தன் கைகளிலிருந்து கஷ்டப்பட்டு வெளியேறி மீண்டும் தனக்குள் புகுந்துகொள்ள முயற்சிப்பதுபோல் செய்து காட்டினாள்.

“இப்போ நீ இதே மாதிரி உனக்குள் இருப்பதை ஊதி வெளியாக்கனும்,” ஆழ்ந்து, மூச்சை இழுத்து, கையை சன்னலருகே கொண்டுபோய் அந்த ஒன்றை வெளிநோக்கி ஊதித் தள்ளினாள். “இப்போ நீ செய் பார்க்கலாம்.”

நளினி செய்ததை செல்வி அச்சுபிசகாமல் பிரதியெடுத்தாள்.

“அது இன்னும் அங்கேயேதான் இருக்கா?”

செல்வி தலையசைத்தாள். தன்னை நசுக்கிக் கொண்டிருந்த ஒன்றை முட்டிக் கொண்டு எழும்பி நின்று இரு கைகளையும் அகல விரித்தாள். வரவேற்பறையைச் சுற்றிப் பறந்து, “வ்வ்வ்வ்வீவீ! வ்வ்வ்வ்வீவீ!” என்று பறவையாகவே மாறி கத்தினாள். நளினி அவளை எட்டிப் பிடித்து மார்போடு அணைத்துக் கொண்டாள்.

“அவளை ப்ரைவெட் ஸ்கூலில் சேர்த்திருக்கனும். அங்குதான் பிள்ளைகள் ஒவ்வொருவரையும் தனித்தனியா நல்லமுறையில் கவனிப்பாங்கனு கேள்விப்பட்டேன்,” செல்வி பாலர்பள்ளிச் செல்லும் வயதை நெருங்கிக் கொண்டிருந்தபோது குமார் சொல்லியிருந்தான்.

“ப்ரைவெட் ஸ்கூலிலில் அவள் படிக்க வேண்டாம்.”

“அவளுடைய மனநிலை பற்றி யோசித்துப் பார்த்தாயா?”

“அதெல்லாம் பழைய சம்பவங்களின் பாதிப்பு மட்டும்தான்.”

நண்பர்களைப் பின்பற்றி செல்வியை அருகிலிருந்த பாலர்பள்ளியிலேயே சேர்த்தாள். அவ்வப்போது குழந்தைக்குத் தேவையான பொம்மைகள், விளையாட்டுப் பொருள்கள், புத்தகங்கள் என வாங்கிக் கொடுத்துக் கொண்டே இருந்தாள். பாலர்பள்ளியில் கற்றுக் கொடுப்பது போக, வீட்டிலும் தன்னால் முடிந்த அளவுக்குப் படித்துக் கொடுத்தாள். அதெல்லாவற்றையும் விட பெரும் சிக்கலாக இருந்தது, குழந்தை அவ்வப்போது கேட்டுக் கொண்டிருந்த புதுப்புது கேள்விகள். அவற்றில் சில பெரியவர்கள் கேட்கும் தன்மையிலும் இருந்தன. செல்வி வேலைக்காரப் பெண்ணை அதிகம் தொந்தரவு செய்யாத சமத்துப்பிள்ளையாகவே இருந்தாள்.

பாலர்பள்ளிக்குப் போய் ஓராண்டு காலம் ஆனப்பின் சனிக்கிழமை பொழுதொன்றில் நளினி அவளை பல்கலைக் கழகத்துக்கு அழைத்துச் சென்றாள். அன்று சக விரிவுரையாளர்களுடன் சிறு சந்திப்பு ஏற்பாடாகி இருந்தது. அடுத்து வரும் செம்ஸ்டருக்கான பாடத்திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல்.. அறையின் ஓரத்தில் நாற்காலி ஒன்றில் அமர்ந்தபடி செல்வி அமைதியாக படித்துக் கொண்டிருந்தாள். கலந்துரையாடல் முடிந்த அடுத்த நொடி எல்லாரும் செல்வியைச் சூழ்ந்து கொண்டனர்.

“ரொம்ப அழகா இருக்கா!”

“வயத்துக்கு மீறிய புத்திசாலித்தனம்.”

“எந்த பாலர்பள்ளியில் சேர்த்திருக்க?”

“ஆமாம்லா. ரொம்ப முதிர்ச்சியான பிள்ளையா இருக்கு!”

நளினி பெருமையில் மிளிர்ந்தாள். காரில் வீட்டுக்கு திரும்பும்போது அடிக்கடி பார்வையை செல்விப் பக்கம் திருப்பி அவளது முடியைக் கோதி கலைத்தாள். செல்வி பாலர்பள்ளி முடிந்து ஆரம்பப் பள்ளியிக்குப் போயிருந்தாள். அங்கு அந்த ஆண்டும் அதற்குப் பின்பான ஆண்டும் வகுப்பில் முதல் மாணவியாக வந்திருந்தாள். நிறைய நண்பர்களைப் பிடித்துக் கொண்டு அவர்களுடனேயே சுற்றிக் கொண்டிருந்தாள். காய்கறி விற்பவள் செய்திருந்த எச்சரிக்கைகளில் உணவு தொடர்பானதைத் தவிர மற்ற அனைத்தையும்  தவிர்த்திருந்தாள்.

அவர்களது வாழ்வில் செல்வி ஒரு மையமாய் குவிந்தாள். இனி நளினியால் மற்றொரு குழந்தையைக் கருத்தரிக்க முடியாதென்று முன்னமே மருத்துவ நிபுணர்கள் சொல்லியிருந்தனர். உண்மையில், நளினி தனக்கு வேண்டிய எல்லா மாதிரியான குழந்தையாகவும் செல்வியை மனதில் இறுத்திக் கொண்டு வாழத் தொடங்கினாள்.

மொழியியல் புலத்தை நோக்கியே அவளது கார் தினமும் பயணித்துக் கொண்டிருந்தது. தனக்குப்பின் வேலையில் அமர்ந்தவர்களுக்கெல்லாம் முதுகலைப் பட்டப்படிப்பை வெளிநாடுகளில் மேற்கொள்ள வாய்ப்பு கிடைத்தபோதும்கூட அவள் துளியும் அதிருப்தி காட்டவில்லை.

பலி3நிறுவனத்தில் வேலை செய்பவர்களின்மீது கடுமையான விரக்தியோடு வீடு திரும்பியிருந்தான் குமார். நிர்ணயிக்கப்பட்டிருந்த சில விதிமுறைகளை ஏற்றாக வேண்டும் என்ற ஒரே காரணத்தை கருத்தில் கொண்டுதான் ஒரு சிலர் அந்நிறுவனத்தில் வேலைக்கு வைத்துக் கொள்ளப் பட்டிருந்தார்கள். “அவனுங்க வெறும் sleeping partnersஆக மட்டும் இருந்துவிட்டால் ஒரு பிரச்சினையும் இல்லை. போர்ட் மீட்டிங்கில் உட்கார்ந்து கொண்டு கொட்டாவி கொட்டாவியா விட்டாலும்கூட பிரச்சினை இல்லை. ஆனால் ஏதோ புதுசா ஐடியா கொடுப்பதா சொல்லிட்டு மடத்தனமான பேசிக்கொண்டிருக்கானுங்க!” குமார் அலுத்துக் கொண்டான். ஆகமொத்தம் அன்றைய பொழுது செல்வியின் முடிவற்ற கொண்டாட்டங்களால், தன்னை உயிர்பித்து மீண்டான்.

“இப்போ இது ஒருபக்கம்!” நளினி முணுமுணுத்தாள். செல்வி இன்னமும் அவளது அணைப்பிலேயே இருந்தாள். நடுக்கம் கொஞ்சம் குறைந்திருந்தது. குமார் அவர்களைப் பார்த்தான். இருவரும் ஒருவருக்கொருவரை தழுவிக் கொண்டிருப்பதுபோல் இருந்தது.

“என்னாச்சி?” வாட்டமாய் இருந்தவளை குமார் அழுத்தமாய் நோட்டமிட்டான்.

“அவங்க என்னை கடைசி வகுப்புல உட்கார வச்சிட்டாங்கப்பா! ஆனா அம்மா வந்து ஏதாவது செய்யப் போவதா சொல்லிருக்காங்க.”

“நான் ஆரம்பத்திலேயே சொன்னேன்.”

“நாம் ஏன் பிள்ளைய தனியார் பள்ளியில் சேர்க்கனும்? மற்றவங்களைபோல நமக்கும் சம உரிமை இருக்குதுல.”

“சம உரிமையா?”

அவர்கள் இந்த சம உரிமைப் பற்றியெல்லாம் நிறையவே பேசியிருக்கிறார்கள். நாளிதழ்களில் வந்த சிலவற்றை அவன் நளினியிடம் காட்டியிருக்கிறான். வட மாநிலத்தில் சில இந்திய மாணவர்களை அவர்கள் சரியாக நடத்துவதில்லை என்பதைப் பற்றி வந்த செய்தியும், மிக அண்மையில் ஒரு பிள்ளையை விளையாட்டாய் பென்சிலில் குத்திவிட்டாள் என்பதற்காக அந்த மாணவி காவல் நிலையத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டதையும் நளினி நினைவுகூர்ந்தாள். செல்வி பற்றிய பேச்சுகள் அடிபடும்போது பல்கலைக்கழக தோழிகள்கூட இதுகுறித்தெல்லாம் காற்றில் வார்த்தைகளை உதிர்த்திருக்கின்றனர்.

“அதெல்லாம் இங்க நடக்காது,” நளினி உறுதியாய் கூறினாள்.

“பேசாம செல்வியை பிரைவெட்டில் சேர்த்து விடலாம். நம்மிடம் அதற்கான வசதியும் இருக்கு.”

“முடியாதவங்க எப்படி?”

“நம்மைப்பற்றி மட்டும்தான் நம்மால் யோசிக்க முடியும்.”

நளினி வேலிக்கு வெளியே காரை நிறுத்துவிட்டு முதல் மாடிக்கு ஏறும்போது பள்ளி அதன் நண்பகல் நேர வேலையில் விறுவிறுத்துக் கொண்டிருந்தது. பெற்றோர் சந்திப்பின்போதே நளினி தன்னுடைய விபரங்கள் அனைத்தையும் பள்ளியில் மிகத் துல்லியமாய் கொடுத்து வைத்திருந்தாள். அலுவலகத்திற்குள் நுழையும்போது குமாஸ்தா ஒருத்தி மேசைமீது பரப்பியிருந்த கோப்புகளுக்கு மத்தியிலிருந்து தலையை மேல்தூக்கிப் பார்த்தாள்.

“தலைமையாசிரியையை பார்க்கனும்.”

பணிப்பெண் வேண்டாவெறுப்பாய் சோபாவில் உட்காரும்படி தலையாட்டினாள். நளினி சோபாவில் உட்கார்ந்து அறையைச் சுற்றிலும் பார்த்தாள். வருகையாளர்கள் காத்திருப்பதற்காகவே பிரத்தியேகமான அறைபோல குலுகுலுவென காற்றுடன் சுத்தமாக இருந்தது அறை.

‘இதை இவ்வளவு அவசரமாக செய்தே ஆக வேண்டுமா’ என நளினி முதலில் கொஞ்சம் தயங்கவே செய்தாள். ஆனால் தயங்கிய ஒவ்வொரு அடியாய் பேருந்தில் ஏறும்போது செல்வி முகத்தில் தெரிந்த அவநம்பிக்கையான சமாதானம் நளினியின் நினவுக்குள் தட்டுப்பட்டது. ‘செல்வி அவளாக இருப்பதை யாராலும் தடுக்க முடியாது!’ நளினி உறுதியானாள்.

அப்போதுதான் பேச்சு குரல் சட்டென மேல் எழுந்து, அடங்கி  அமைதியானதை உணர்ந்தாள். முகமெல்லாம் ரத்த சிவப்பாய், வேகவேகமாய் மூச்சை விட்டிழுத்தவாறு, சீன பெண்ணொருத்தி தலைமை ஆசிரியை அறையை விட்டு வெளியே வந்தாள்.

“இப்ப உள்ள போகலாம்!” தலை தூக்கிக்கூட பார்க்காமல் அந்த குமாஸ்தா உள்ளே போகச் சொன்னாள்.

நளினி உள்ளே நுழையும்போது, நேர்த்தியான வேலைபாடுகளுடன் பளபளத்துக் கொண்டிருந்த மேசையின் எதிர் பக்கம் உட்கார்ந்தபடி, பள்ளி தலைமையாசிரியை முகத்தில் எவ்வித சலனமுமின்றி நளினியை உட்காரச் சொல்லி நாற்காலியைச் சுட்டிக் காட்டினாள்.

நளினி உட்கார்ந்ததும் “யெஸ்?” எனச் சொல்லி நளினி வந்திருப்பதன் காரணத்தைக் கேட்டாள்.

“என் மகள் விஷயமாக வந்திருக்கிறேன்.”

“அடுத்து இன்னொன்னா?”

“எனக்குச் சரியா புரியல,” நளினி தொடர்ந்தாள். “என் மகள் நல்ல புத்திசாலியான பிள்ளை…”

“என்னுடைய மாணவர்கள் எல்லாருமே புத்திசாலிகள்தான். அந்த புத்திசாலித்தனத்த வெளிகொண்டு வருவது மட்டும்தாம் மிச்சமிருக்கும் வேலை. நீங்களே பாருங்க….”

“இல்லை. என்னால் எதையும் சரியா பார்க்க முடியல. கடந்த ரெண்டு வருடமா என் பிள்ளை முதல் வகுப்பில்தான் படித்தாள்.”

“அப்படியா?”

 “ஆனா, இப்போ எதற்காக கடைசி வகுப்பில் போட்டீங்க?”

“முதல் வகுப்பு, கடைசி வகுப்பு என்றெல்லாம் ஏதுமில்ல. இந்தப் பள்ளியில் எல்லா வகுப்புகளுமே ஒன்றுதான்!”

“என் மகள் ரொம்ப மனமுடைந்து போயிட்டா.”

“உங்களுக்கே இதெல்லாம் புரியனும்,”  சொல்லிக்கொண்டே அந்த தலைமையாசிரியை நாற்காலியில் சாய்ந்தாள். அவள் அணிந்திருந்த முக்காடு அவளது கோபத்தையும் எரிச்சலையும் வெளிப்படையாய் கட்டமைத்துக் காட்டியது.

“அந்த பெண்ணிடம் சொன்னதுதான் உங்களுக்கும். பெண்பிள்ளைகள் சின்ன சின்ன விஷயங்களுக்கெல்லாம் இப்படித்தான் சதா சோர்ந்து போகக் கூடியவர்களாக இருக்கிறாங்க.”

‘இது சின்ன விஷயமில்லை. என் மகளின் சுயமரியாதைப் பாதிக்கப்பட்டிருக்கு.”

“இப்போது குழந்தைகளுடைய உளவியல் பற்றி எனக்குப் பாடம் எடுக்க வந்திருக்கீங்களா?”

“என் மகளுடைய விஷயத்தைப் பேசி உங்களுக்குப் புரிய வைக்க மட்டும்தான் வந்திருக்கேன்.”

“உங்க மகளோட பெயர் என்ன?”

“செல்வி.”

“ஓ… செல்வியா? ஞாபகமிருக்கு. புத்திசாலி, கர்வமான பிள்ளை.”

“கர்வமெல்லாம் இல்ல.”

“அப்படினா உங்களுக்குத்தான் கர்வம்!” சொல்லி, சுருக்கமாய் சிரித்தாள்.

சட்டென தன் வேலையிடத்திலுள்ள மலாய் பெண் நளினியின் நினைவுக்குள் நுழைந்தாள். காரணம் அவள்தான் இதற்குமுன் நளினியை நோக்கி அத்தனை அகந்தையாய் சிரிப்பைக் கக்கி “என் பிள்ளை இன்னும் என்னென்னல்லாம் செய்யும்னு நீ பார்க்கனுமே!” எனச் சொன்னாள்.

“இங்கப் பாருங்க. யாருக்கு கர்வம்னு பேசுவதற்கு நான் இங்கு வரல. செல்வியை பழையபடி முதல் வகுப்பில் போடுங்கனு சொல்ல மட்டும்தான் வந்தேன். அவள் மனம் ரொம்பவே பாதிக்கப்பட்டிருக்கு. பள்ளிக்குக்கூடத்துக்கே வர மாட்டேன் என்று சொல்றா.”

விரைப்பாய் நளினியை ஏறிட்டதோடு பார்வையால் எடைபோடுவதுபோலவும் செய்தாள்.

“முதலில் வந்த பெண் மாதிரியேதான் நீங்களும். நீங்க எல்லாருமே ஒரே மாதிரிதான் இருக்கீங்க. உங்களைப்பற்றி மட்டும்தான் யோசிக்கறீங்க. உங்கள் பிள்ளைகப்பற்றி மட்டும்.”

“பிறகு வேறு எதைப்பற்றி யோசிக்கனும்?” எரிச்சலடைந்தவளாய் நளினி கேட்டாள்.

“விட்டுக் கொடுப்பதுபற்றி தியாகம் செய்வது பற்றி யோசிக்கனும். ஆமாம். கண்டிப்பா தியாகம் செய்வதை பற்றி யோசித்துப் பார்க்கணும். இங்கிருக்கும் பெரும்பான்மையைப் பற்றி யோசித்து பார்க்கனும்.”

செல்வியை வயிற்றில் சுமந்து கொண்டிருந்தபோது செய்த சடங்குகளையெல்லாம் நளினி ஒரு கணம் நினைத்துப் பார்த்தாள். செல்வியை பெற்றெடுக்கும்வரை கருப்பை உறுதியாய் இருக்கவேண்டி தரையில் முழங்காலிட்டு மன்றாடியிருக்கிறாள்.

“தியாகம்?” நளினி சொல்லிப் பார்த்தாள்.

“ஆமாம். அதனால்தான் நாங்கள் வகுப்புகளை எல்லாம் கலந்து வைத்திருக்கிறோம். அப்பதான் ரொம்ப புத்திசாலியான பிள்ளைகள் ஓரளவு புத்திசாலி பிள்ளைகளுக்கு உதவ முடியும். இது புதிய கல்விக்கொள்கை.”

“யார் கொண்டு வந்த கொள்கை? கல்வி அமைச்சா? இல்லை உயர்மட்ட அதிகாரிகளா?”

அந்தத் தலைமையாசிரியை அதிர்ந்து சிரித்து வெறுப்பை கக்கினாள்.

“மேல்மட்ட அதிகாரிகளா? நாங்கள்தான் அந்த மேல்மட்ட அதிகாரிகள். எதை செய்யனும் என்று நாங்கள்தான் தீர்மானிக்கிறோம். அதேபோல் எதை செய்யக்கூடாது என்பதையும்கூட நாங்களேதான் தீர்மானிக்கிறோம்!”

நளினி நாற்காலியிலிருந்து எழுந்தாள். பளபளப்பாய் மின்னிக் கொண்டுருந்த மேசையின் எதிர்திசையில் இருந்த அவளைப் பார்த்தாள்.

“உங்களுக்குப் பிடித்த மாதிரியெல்லாம் என் பிள்ளையிடம் செய்ய முடியாது!”

“குரலை உயர்த்த வேண்டிய அவசியமில்லை!”

“நான் குரலை உயர்த்தவில்லை. எனக்காக பேசுகிறேன். என்னைப் போன்றவர்களுக்காக பேசுகிறேன்!”

“நீங்க ஒன்னும் எம்.பி. இல்ல.”

“செல்விக்கு முன்னாடியே இரண்டு முறை இழந்திருக்கிறேன். தியாகத்தை பற்றி நீங்க பேசறீங்க! நீங்க எத்தனை முறை தியாகம் செய்திருக்கீங்க?”

“தனிப்பட்ட விஷயங்களை இங்கு பேச வேண்டாம்.” அதிகார கர்வம் அவள் முகத்தில் பிரவாகம் செய்ய ஆரம்பித்தது. “முதலில் எங்களுடைய கல்விக் கொள்கையை புரிந்துக் கொள்ளுங்க.”

“செல்வி உங்களுடைய கல்விக் கொள்கையைத் தூக்கிப் பிடிக்க இங்க வரல. குழந்தைகள் நீங்கள் கட்டமைக்கும் கொள்கைகளுக்கு அடங்கியவர்களும் இல்ல!”

“அப்படினா கூட்டிக்கொண்டு போங்க.  அவள் இங்கு இருப்பதற்குரிய ஆள் இல்லை.”

தலைமையாசிரியையின் பார்வை அவள் உதிர்த்த வார்த்தைகளைவிட அதிகமான அர்த்தங்களைச் சொல்லிக் கொண்டிருந்தது.

பிறகு குமார் முற்பகலிலேயே சீக்கிரம் வீடு வந்துவிட, நளினியும் செல்வியும் வழக்கத்திற்கு மாறாய் அமைதியாக இருந்தார்கள்; இடர்தணிந்த புன்னகையுடன்.

ஆங்கில மூலம்: கே. எஸ். மணியம் (Sacrifice)

1 கருத்து for “பலி

  1. August 6, 2017 at 11:01 am

    கே.எஸ் மணியம் நல்ல ஆங்கில மொழி எழுத்தாளர். எனக்கு 27 /28 வயது இருக்கும் போது அவர் கதை ஒன்று ஸ்ட்டெரெய்ட் டைம்சின் சிறுகதைப் போட்டியில் முதற்பரிசு பெற்றிருந்ததை வாசித்தேன். அதற்கப்புறம் அவரை வாசிக்கும் வாய்ப்பை உண்டாக்கிக் கொள்ளவில்லை. இப்போது விஜயாவின் மூலம் அவ்வாய்ப்பு கிடைக்கிறது. ஒரே மகளுக்காகத் தாய் பட்ட சிரமமும், அவளை வளர்த்தெடுக்க அவள் எதிர் நோக்கிய இன்னல்களும் மொழிபெயெர்ப்பில் பிசகில்லாமல் வந்திருக்கிறது. கே எஸ் மணியத்தின் கதையில் இனவாதத்துக்கு எதிரான குரல் பதிவாகியிருப்பது அவரின் தீவிரம் வெளிப்படுகிறது.நன்றி.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...