மலேசியாவும் பழங்குடி கதைகளும்

“இந்தக் கதைகள்தான் எம்மக்களின் நூலகம்

ஒவ்வொரு கதையிலும் ஏதாவது ஒரு முக்கியமான அல்லது ஈர்பான நிகழ்வு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மனதில் வளப்பமாகிய வரலாற்றை இலைகளின்மீது நினைவகமாக்கியுள்ளது.

கதைகள் எங்கள் வாழ்க்கை, அவை இன்னும் வாழ்கின்றன.”

 

4

Lim Boo Liat

கதைக்கூறல் எனும் வாய்வழி மரபை உணர்த்தும் இவ்வாசகம், உலகில் வாழும் ஒட்டுமொத்த பழங்குடி சமூகத்தின் ஒற்றைக் குரலாக வெளிபடுகிறது. ஒரு சமூகத்தின் பண்பாடும், கலாச்சாரமும் ஒரு தலைமுறையினரிடமிருந்து இன்னொரு தலைமுறைக்கு வாய்வழியாக கடத்திச் செல்வதை வாய்வழி மரபு (Oral tradition) என்கிறோம். இவை பழங்குடிகளது வாழ்வின் ஆதாரம். கதைகள், பாடல்கள், நடனம், கைவினை பொருள்கள் ஆகியவை வாய்வழி மரபில் பிரதானமானவை. இவற்றின் ஊடாகத்தான் பழங்குடிகளின் பண்பாட்டு விழுமியங்கள், மொழி, விதிமுறைகள், வரலாறு, உறவுமுறைகளுடனான பிணைப்பு போன்றவை அடுத்தடுத்தத் தலைமுறைகளுக்குக் கடத்திச் செல்லப்படுகின்றன.

நடனம், ஓவியம், பாடல்கள் மூலமாக கதைகளைச் சொல்லி ஒரு குறிப்பிட்ட மரபை அல்லது வாழ்வியல் விழுமியத்தைத் தலைமுறை தலைமுறையாக உயிர்ப்பித்து வைப்பதை வாய்வழி மரபைப் புரிந்து கொள்ளலாம். இக்கதைகள் பழங்குடிகளில் மிக வயதான ஒருவரால் மட்டுமே அந்தச் சமூகத்துக்குச்  சொல்லப்படுவது வழக்கமாகும்.

உலகில் வாழும் பல்வேறு பழங்குடி சமூகங்களின் வாய்வழி மரபுகளை வாய்மொழி வரலாறு (Oral histories), புனைவு கதைகள் (Creation stories), கனவுகால கதைகள் (Dreaming stories), வாழ்க்கை வரலாறு (Biographies), பழங்குடி கதைகள் (Aborginal stories) என பல பெயர்களில் இன்று நம்மால் வாசிக்க முடியும். எனது வாசிப்பின் அடிப்படையில் பழங்குடிகளின் வாய்வழி மரபுகள் மூன்று பிரிவுகளுக்குள்ளேயே சுழன்று கொண்டிருப்பதாகக் கணிக்கிறேன். முதல்வகை கதைகள் வாழ்வுமுறை சட்டங்கள், நடைமுறை பழக்க வழக்கங்களை வழியுறுத்துபவை; இரண்டாவது வகை கதைகள் இயற்கையின் உருவாக்கங்களைப் பற்றி சொல்பவை; மூன்றாவது வகை கதைகள் தனிமனிதர்களின் வெற்றி, தோல்வி, சாகசங்கள் போன்றவற்றை பேசுவன. விழுமியங்களை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பேசுவதுதான் இம்மூன்று வகை கதைகளுக்குள்ளும் இருக்கும் ஒற்றுமை.

மலேசியாவின் பழங்குடி கதைகள்

மலேசியாவில் 100,000க்கும் குறையாதப் பழங்குடி சமூகங்கள் நெகிரீட்டோ, செனோய், மெலாயு-ப்ரொட்டோ எனும் மூன்று பெரும் இனக்குழுவாக வாழ்வதாகச் சொல்லப்படுகிறது. ஆனால் இவர்களின் வாய்வழி மரபு கதைகள் ஆவணப்படுத்தும் நோக்கில் அச்சு வடிவிலோ, JAKOA எனும் பூர்வக்குடிகள் மேம்பாட்டுத்துறையின் அதிகாரப்பூர்வ இணையப் பக்கங்களிலோ காணமுடியவில்லை. ஒரு சிலரது தனிமுயற்சிகளின், ஆர்வத்தினூடாக சாகச (Legends), வாழ்முறை சட்டங்கள் சார்ந்த கதைகள் இணையத்தில் ஆங்காங்கு வாசிக்கக் கிடைக்கின்றது. தேசிய கலை, இலக்கியத்தை முன்னெடுக்கும் அரசு சார்புள்ள அமைப்புகள், இச்சமூகத்தின் மீது கவனம் வைக்காதது போலவே  பதிப்பு முயற்சிகளிலும் இவர்களின் வாய்வழி மரபுக்கு பெரிய கவனம் கொடுக்காமலேயே உள்ளது.

ஒரு சில நூல்கள் நூலக இருப்பில் காணக்கிடைத்தாலும் அவை வண்ணப்படங்களுடன் பக்க அளவில் சிறியதாகவும், பெரிய எழுத்துருக்களைக் கொண்டும் சிறார் கதை நூல்களாக இருக்கின்றன. அக்கதைகளின் மூலம், பின்புலம் மற்றும் நிலம் சார்ந்த கூடுதல் தகவல்கள் அறிய வாய்ப்பில்லா வண்ணம் மிக கவனமாகவே பதிப்பு வேலைகள் நடைபெற்றிருக்கின்றன. சூழல் இப்படியிருக்க, இன்றைய தேடலின் அடிப்படையில் லிம் பூ லியாட் (Lim Boo Liat) எனும் விலங்கியல் நிபுணரின் (Zoologist) உருவாக்கத்தில் 1981ஆம் ஆண்டு வெளிவந்த ‘Orang Asli Animal Tales’ எனும் நூல் மட்டுமே தற்போது சற்று பரவலாக வாசிக்கக் கிடைக்கிறது. நூலாசிரியர் விலங்கியல் ஆய்வுலகில் முக்கியமானவர் என்பதால் அவருக்குக் கிடைக்கப்பட்ட வெளிச்சத்தில் இந்நூலும் சற்று பிரகாசித்துள்ளது.

இந்நூலாசிரியரான டாக்டர் லிம், மலேசியாவில் வாழும் விலங்குகள், விலங்குகளால் மனிதர்களுக்குத் தொற்றும் நோய்களைக் குறித்த ஆய்வுகளின் முன்னோடியாகத் திகழ்பவர். தேசிய ரீதியிலும் உலக அரங்கிலும் விலங்கியல் துறைசார்ந்து பல உயரிய பதவிகளில் அரிய பணிகள் செய்தவர். இவரது ஆய்வுகள் பல மேற்கோள்களாகப் பயன்படுத்தப்படுகின்றன. 1947ஆம் ஆண்டு மலாயாவில் பிரிட்டிஷாரின் நிர்வாகத்தின்கீழ் Scrub Typhus ஆய்வு பிரிவில் தற்காலிக ஆய்வக உதவியாளராகப் பணியைத் தொடங்கி, 1955க்கும் 1969க்கும் இடைப்பட்ட காலத்தில் 80க்குக் குறையாத விலங்கியல் ஆய்வு கட்டுரைகளைப் பதிப்பித்துப் படிப்படியாக அறிவியல் துறையில் முதுகலை பட்டம் பெற்று விலங்கியல் நிபுணராக வளர்ந்தவர். சிறுவிலங்குகள், ஊர்வன, நீர்நில உயிரினங்களின் சூழலியல், நிலம்சார்ந்து வாழும் முதுகெலும்புள்ள விலங்குகள், ஒட்டுண்ணியியல், விலங்கியல் தொற்றுநோய்கள் என விரிந்த ஆய்வுத்தளத்தில் டாக்டர் லிம் விலங்குகளுடன் அதே வாழ்தளத்தில் புழங்கும் பழங்குடிகளையும் நெருங்கிச் சென்று பார்த்தவர். 30,000 மேற்பட்ட விலங்கினங்களை ஆய்வுக்குட்படுத்திய இவர், ஆய்வுகள் தோறும் தொடர்ந்து பயணித்த, ஆய்வு வட்டத்திற்குள்ளும் புறமும் சுழன்றவர்களிடம் கூர்ந்து கவனித்தவைகளை எழுத்துருவம் கொடுத்ததன் விளைவே இந்நூல் முயற்சியாகும். இத்துறையில் தனது முதல் 30 ஆண்டுகால பழங்குடிகளுடன் நட்புறவில் செவிவழி கேட்ட கதைகளைத் தொகுத்து இந்நூலை உருவாக்கியுள்ளார். குறிப்பாக பேராக், பகாங், கிளந்தான், நெகிரி செம்பிலான், ஜொகூர் ஆகிய மாநிலங்களில் வாழும் ‘தெமுவான்’ (Temuan People) எனும் பழங்குடிகளின் கதைகளே இதில் இடம்பெற்றிருக்கின்றன.

ஆங்கிலத்தில் (ஈசாப் கதைகள்) Aesop Fables என்று சொல்லப்படும் நீதிக்கதைகளை ஒத்த வடிவில்தான் இந்நூலில் உள்ள பழங்குடி கதைகளும் அமைந்துள்ளன. வாய்வழி மரபு கதைகளின் முப்பிரிவுகளில் ஒன்றான ‘இயற்கையின் உருவாக்கங்கள்’ பற்றி இக்கதைகள் பேசுகின்றன. இயற்கையின் ஒரு பகுதியான விலங்கினங்களைக் கதாமாந்தர்களாக்கி கதைகள் வழி நீதிகளையும் சமூகம் சார்ந்த வாழ்வியல் விழுமியங்களையும் இக்கதைகள் அறிவுறுத்த முயற்சிக்கின்றன. இதர மனிதர்களைப் போலவே விலங்குகளையும் தங்களது வாழ்வில் ஒரு அங்கமாக கருதும் இப்பழங்குடிகள் தங்களுடைய அன்றாட வாழ்வில் நேரெதிர்கொள்ளும் விலங்குகளுக்கு மனிதத்தன்மையை ஏற்றி அதன்மூலம் தங்களது வாழ்வியல் விழுமியங்களை கடத்தி சென்றுள்ளனர்.

ஒவ்வொரு விலங்குக்கும் அடிப்படையான சில குணங்கள் இருப்பதாகவும், மனிதர்களைப் போலவே அவற்றுக்கும் சமூக அமைப்பு இருப்பதாகவும் குறிப்பிடும் டாக்டர் லிம், இக்கதைகளில் அச்சாணியாக இருக்கும் நீதிகளும் விழுமியங்களும் மிக நேர்த்தியாக விலங்குகளின் அடிப்படை குணாதிசியங்களுடன் பொருந்திப் போவதாகக் குறிப்பிடுகின்றார். மேலும், விலங்குகளின் உடல் அமைப்பும் கதைகள் சொல்ல வந்த நீதியை மிக துள்ளியமாக அடைகாத்து வைத்திருப்பது கவனிக்கத்தக்கது. எவ்வித நவீன கருவிகளும், கல்விப் பின்புலமும் இல்லாத இப்பழங்குடிச் சமூகம் உற்று நோக்கும் கலையை உள்ளீர்த்துக் கொண்டு விலங்குகளின் குணங்களையும் உடற்கூறுகளையும் புரிந்து வைத்திருப்பது இதன்வழி தெளிவாகிறது.

பழங்குடி கதைகளின் தொகுப்பு என்பதைக் கடந்து இந்நூலின் மற்றுமொரு சிறப்பம்சம் சிறியதும் பெரியதுமாக 26 பாலூட்டி வகை விலங்குகளின் படங்கள், அறிவியல் விளக்கங்கள் இடம்பெற்றுள்ளதாகும். பழங்குடி கதைகளில் பிரதானமாக வந்துபோகும் ஆமை, முதலை, முயல், மான் போன்ற விலங்குகள் அல்லாமல் இந்நூலில் முன்னிலை படுத்தப்பட்டுள்ள அனைத்து விலங்குகளும் இந்நாட்டு தட்பவெட்ப நிலைக்குள் பொருந்தி வாழும் மிக அரிய வகைகளாகும். வரலாற்று தேடல்கொண்டவர்களுக்குத் தேசிய பாரம்பரியத்தின் ஒரு பகுதியாகவும், குழந்தைகளுக்கு நன்னெறி சுட்டும் கதைகளாகவும் விலங்கியல் ஆர்வளர்களுக்கு அரிய விலங்கினங்களின் களஞ்சியமாகவும் இந்த இலக்கியப் படைப்பு உள்ளது.

ஆங்கிலம், மலாய் என இருமொழிகளில் வெளிவந்திருக்கும் இந்நூலின் கதைப் பகுதிக்கான வாக்கிய அமைப்புமுறைகளில் சிக்கல் இருப்பதைக் காண முடிகிறது. மொழி விளையாட்டுகளை தூரவீசிவிட்டு, இக்கதைகள் கூறப்பட்ட அதன் அசல்வடிவிலேயே பதிவு செய்ய நூலாசிரியர் முயற்சித்துள்ளார். மொழி ஒருபுறம் இருக்க, இலக்கியக் கோட்பாடுகளை மனதில் இருத்திக் கொண்டு இந்நூலை வாசிக்கத் தொடங்கினாலும் ஏமாற்றமே மிஞ்சும். இதற்கு காரணம் இக்கதைகளின் பன்முகத் தன்மையற்ற கதைக்கருவும் தட்டையான நேரடி கூறல் முறையுமாகும். இவற்றை நாட்டாரியல் கதைகளுடன் வேண்டுமானால் கொஞ்சம் பொருத்திப் பார்க்க முடியும். ஒரு கதையின் மூலமாக இந்நூலில் இடம்பெற்றுள்ள மற்ற அனைத்து கதைகளின் மொழி மற்றும் நேரடி கூறல் முறையை ஓரளவு அனுமானிக்கலாம்.

பேராசையால் வால் தொலைந்த லெமூர்

(நரிபோன்ற முகம் கொண்ட, அணில் வகை சார்ந்த சிறு விலங்கினம் )

காட்டில் நிறைய வகை பறக்கும் அணில்கள் இருந்தன. எல்லா அணில்களும் ஒரே5 வட்டத்துக்குள்ளான இடங்களிலேயே உணவு தேடி அலைந்தன.  இதனால் சில நாள்களிலேயே யார் முதலில் உணவிடத்துக்குச் செல்வது என்ற சிக்கல் உருவாகத் தொடங்கியது. இந்த அணில்களுக்கு மத்தியில் வேறொரு விலங்கினமும் இருந்தது. உணவுக்கு நடந்த போட்டியை அது தனது புத்தி சாதுர்யத்தால் எளிதில் தீர்த்து வைத்துக் கொண்டே இருந்தது. அனைத்து அணிகளுக்கும் மிகுந்த நம்பிக்கைக்குரியதாக வலம் வந்த அவ்விலங்கினம் ஒரு தலைவனாக மதிக்கப்பட தொடங்கியது. அதுதான் இந்த லெமூர்.

இப்படியாக நாட்கள் சென்று கொண்டிருக்கையில், எப்போதும் எழும் இந்த உணவு பிரச்சினைக்கு முழுமையான தீர்வை கண்டறிந்து சொல்லும்படி லெமூரிடம் பறக்கும் அணில்கள் கேட்டுக் கொண்டன. சிக்கலைத் தீர்த்து வைப்பதாக ஒப்புக் கொண்ட லெமூர் முதலில் உணவிடத்தை முழுமையாகப் பரிசோதித்து மொத்தமாய் எவ்வளவு உணவு இருக்கிறது என ஆய்வு செய்து கண்டறிய வேண்டும் என்றது. இந்தச் சந்தர்ப்பத்தில் பறக்கும் அணிகள் அனைத்தையும் வேறு இடங்களில் உணவு தேடிச் செல்லும்படி கேட்டுக் கொண்டது.

ஒருவருடத்திற்கும் மேலாக அவ்விடத்தில் தனித்திருந்த லெமூர் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு செடிகளின் துளிர்கள், பூக்கள், பழங்கள் என தின்று உல்லாசமாய் நாட்களை கழித்தது. விளைவாக, அப்பகுதியைச் சேர்ந்த பழம் காய்க்கும் மரங்கள் எதனிலும் பூ பூக்காமல் போனது.

இதற்கிடையில் வேறு இடங்களில் உணவு தேடிச் சென்ற பறக்கும் அணில்கள் பொறுமையிழந்து லெமூருக்கு அழுத்தம் கொடுக்கத் தொடங்கின. ஆய்வு முடிவுகளைச் சொல்ல இருதரப்புக்கும் இடையில் சந்திப்புக் கூட்டமும் நடந்தது. தான் ஆய்வு செய்துகொண்டிருந்த காலத்தில் மற்ற இடங்களில் உணவு தேடிச் சென்ற எந்த அணிலும் உணவு பற்றாக்குறை என தன்னிடம் குறை சொல்லவில்லை. அவ்வகையில் மற்ற இடங்களிலும் போதுமான உணவு கிடைத்துக் கொண்டுதானே இருக்கிறது என்று சொன்னது லெமூர்.

இடைபட்ட காலத்தில் நிறைய பழங்களையும் பூக்களையும் எளிதாக உண்டு கழித்த லெமூர் பேராசை தலைக்கேறி அந்த மொத்த இடத்தையும் தான் மட்டும் தனியாக ஆக்கிரமிக்க எண்ணம் கொண்டது. அதனை கூட்டத்திலும் சொன்னது.

அணில்கள் கோபமடைந்தன. தாவிப் பிடித்து அதன் வாலை நறுக்கி அவ்விடத்தைவிட்டு துரத்தியடித்தன. அன்றிலிருந்து நடக்கும்போதும் இரவு நேரங்களில் பறக்கும்போதும் பறக்கும் அணில்களுக்குப் பயந்து கொண்டுலெமூர் தன் வாலை மறைத்துக் கொள்ளும்.

மொழியழகுக்கும் வார்த்தை ஜாலங்களுக்கும் முக்கியத்துவம் இல்லாமல் இக்கதை சொல்லப்பட்டிருந்தாலும் இதனுள் நீதி போதயுடன் ஒரு விலங்கினத்தில் வாழ்வு, உடற்கூறு குறித்த அறிவு தெளிவாக வெளிபட்டிருப்பதைக் காண முடியும். இக்கதையில் வரும் லெமூர் என்ற விலங்கினம் (Malayan Flying Lemur) தென்கிழக்காசியாவின் சில சில நாடுகளில் மட்டும் வாழ்வதாகும். தீபகற்ப மலேசியாவில் மிக உயர்ந்த மலைகள் சிலவற்றில் மட்டும் காணமுடியும். இவை மரங்களின் துளிர்கள், பழங்கள், பூக்கள் என தின்று மரம் செடிகொடிகளை நாசம் செய்யக்கூடியதாவும் இதனால் செடிகளின் வளர்ச்சி மட்டுபடுவதாகவும் இந்நூலின் அறிவியல் குறிப்புகள் சொல்கின்றன. லெமூரின் உடற்கூறானது பறக்கும்போது கால்களையும் வாலையும் உள்ளிழுத்துக் கொள்வதுபோல் இருக்கும். பார்ப்பதற்கு வால் நறுக்கப்பட்டதைப் போன்று  காட்சியளிப்பது மேற்கூறிய கதையுடனும் அது சொல்ல வந்த நீதியுடனும் பொருந்திப் போவதாகவே உள்ளது. விலங்குகளின் உடற்கூறு, குணநலன்களை அடிப்படியாகக் கொண்டு நீதிகளைச் சொல்வதென இந்நூலின் அனைத்துக் கதைகளும் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஒரு கதையின்வழி இந்நூலில் புதைந்திருக்கும் மற்றுமொரு பிரம்மாண்டத்தையும் காணலாம்.

குரல்வலை தொங்கும் மனித குரங்கின் கதை

1குரங்குகளும் கிப்பன்களும் (Gibbon) வெவ்வேறு இனக்குழுக்களைச் சார்ந்தவை. இரு குழுக்களுக்கும் இடையில் அடிக்கடி மோதல்கள் நடந்து கொண்டே இருந்தது. கிப்பன்கள் தாங்களே மேன்மை மிக்கவர்கள் என்ற எண்ணம் கொண்டிருந்தன. அதனால் காட்டின் பெரும்பகுதி தங்களது ஆக்கிரமிப்பில் இருப்பதே சரி என்றும் நினைத்தன. மறுநிலையில், குரங்குகள் வால் இல்லாத கிப்பன்கள் தங்களுடன் இணைந்து வாழ தகுதியற்றவை என்று நினைத்தன. குரங்கு, மனிதன் என இருவகைக்குள்ளும் அடங்காத கிப்பன்களை தாங்கள் வாழும் சமூகத்திடமிருந்து விலக்கி வைக்க பெரும் வன்மம் கொண்டிருந்தன.

எல்லா குரங்குகளும் ஒன்று சேர்ந்து தலைவனைப் பார்க்கச் சென்றன. அவற்றின் குழுத் தலைவன் ஒரு மனித குரங்கு. கிப்பன்களைப் போலவே அதற்கும் வால் இல்லை என்றாலும்கூட அது கிப்பனின் இனக்குழுவை சேர்ந்ததல்ல. பெரிய உடல்வாகுவும் தலைவன் என்ற பொறுப்பும் இருந்ததால் மனித குரங்கு அதன் சந்ததிகளுடன் அங்கு வாழ்ந்து வந்தது.

இந்தச் சிக்கலை எப்படி தீர்த்துவைப்பதென்று தெரியாமல் தவித்த மனித குரங்கு கடைசியாக இரு குழுக்களையும் வெவ்வேறு இடங்களில் சென்று வாழும்படி முடிவொன்றைச் சொன்னது. முடிவை ஏற்று இரண்டு விலங்குகளும் அதனதன் இனக்குழுவுடன் வேறு இடங்களுக்குச் சென்று வாழத் தொடங்கின. கடும் வறட்சி, பஞ்சம் ஏற்படும் காலக்கட்டங்களில் மீண்டும் பழைய இடத்திற்கே திரும்பிவர அவை அனுமதிக்கப்பட்டிருந்தன.

 சில காலங்களுக்குள்ளாகவே வறட்சி ஏற்பட, இரு விலங்குகளும் பழைய இடத்திற்கு திரும்பின. ஒரே இடத்தில் தங்கி, உணவுகளைச் சாப்பிட்டு கொண்டிருக்கும்போது குரங்குக் குட்டியொன்று தாயைப் பிரிந்து மண்ணில் இறங்கி விளையாடியது. அச்சமயம் அங்கு வந்த புலி அதனை கவர்ந்து சென்றுவிட்டது.

இந்த முடிவை தராமல் இருந்திருந்தால் குரங்குக் குட்டி காணாமல் போயிருக்காது என இரு தரப்பு விலங்குகளும் மனித குரங்கை குற்றம் சாட்டின. புலியை வேட்டையாடி குரங்குக் குட்டியை மீட்பது மனித குரங்கின் கடைமையானது. மனித குரங்குக்கு வயதாகி விட்டதால் குரங்குக் குட்டியை தேடி கண்டுபிடிக்கும் பணி அதன் வாரிசுக்குக் கொடுக்கப்பட்டது.

மிகச் சில தருணங்களில் மட்டுமே குட்டிகள் பெற்றோரை பிரிந்திருக்கும் அளவுக்கு நெருக்கமாய் வாழ்ந்தது மனத குரங்கின் குடும்பம். புலியை எதிர்த்து நிற்கும் வல்லமை குன்றிய தன் குட்டியை நினைத்து மனித குரங்கு மனம் நொந்தது. இருந்தும் மனம் தளரவில்லை.

எனவே, ஒருநாள் காலை வழியேதுமின்றி மனித குரங்கு தன் குட்டியை வழியனுப்பி வைத்தது.  ஒவ்வொரு காலையும் மதியமும் ஓலமிட்டு அழைப்பு விடுப்பதாகக் குட்டியிடம் சொன்னது. குட்டி புறப்பட்டுபோன அன்றைய நாளிலிருந்து மனித குரங்கு ஓயாமல் அழைத்துக் கொண்டே இருந்தது. இதனால் சில நாட்களிலேயே அதன் தொண்டை பகுதியில் பை போல் சதை தொங்கத் தொடங்கியது. ஓலமிட்டு கத்தத் தொடங்கும்போது அந்த குரல் பை விரிந்து, காடு முழுவதும் ஓலம் எதிரொலிக்கத் தொடங்கியது. ஆனால் எல்லா அழைப்பிலும் ஏமாற்றமே மிஞ்சியது. மனித குரங்கின் துக்க ஓலம் இன்றுவரை கேட்டுக் கொண்டே இருக்கிறது.

பெற்றோருக்கு பிள்ளைகள்மீது இருக்கும் அன்பை உணர்த்தும் வகையில் அமைக்கப்பெற்ற இந்தக் கதை மனித குரங்கு எனும் குரங்கின வகையை முதன்மை கதாமாந்தராகக் கொண்டது. இதன் தோற்றத்தை முன்பின் கண்டிராதவர்களாலும் இக்கதையின் வழியாக இது கூட்டமாய் வாழும் குரங்கினத்தைச் சார்ந்தது என்றும், சற்றே வித்தியாசமாய் இதன் குரல்வலை சதை பெருத்து தாடைக்குக் கீழ் தொங்கும் என்றும் துள்ளியமாய் சொல்லிவிட முடியும். நீதி போதனைகளைக் கடந்து இதுவே இக்கதையின் வெற்றியுமாகும். மேலும், எண்ணிக்கையில் குறைந்துவிட்ட இப்பாலூட்டி இனத்தை ‘இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம்’ (IUCN) பேரழிவை எதிர்க்கொண்டிருக்கும் விலங்கின பட்டியலில் சேர்த்துள்ளது. இப்படியான விலங்குகளின் கதைகளையே டாக்டர் லிம் இந்நூலுக்குள் கொண்டுவந்துள்ளார்.

மேற்கூறிய இரு கதைகளில் பழங்குடிகளின் வாழ்வியல் நீதிகள் சற்றே மறைபொருளில் கூறப்பட்டிருந்தாலும் எல்லாக் கதைகளும் இத்தன்மையில் மட்டுமே இருப்பதில்லை.

விரும்பி பொய் சொன்னதால் பன்றி-வால் குரங்கு

பன்றிவால் குரங்கைத் தவிர இதர குரங்கினங்கள் அனைத்தும் ஒன்றாய் சேர்ந்து மனித6 குரங்குகளை தங்களது தலைவனாக தேர்ந்தெடுத்தன. மனித குரங்கு துளியும் குரங்கினத்தின் சாயலில் இல்லை என பன்றிவால் குரங்கு வாதிட்டது. பேரழகும் வலிமையும் பொருந்திய தன்னையே தலைவனாக்கியிருக்க வேண்டுமென எதிர்பார்ப்பு கொண்டிருந்தது. ஏமாற்ற உணர்வும் கோபமும் அதிகரிக்கவே பன்றிவால் குரங்கு சூழ்ச்சி செய்யத் தொடங்கியது.

ஒருநாள், மனித குரங்கிடம் சொல்லி சந்திப்புக் கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்தது. மற்ற விலங்குகளுடன் ஏற்படும் உணவுப் போட்டி மற்றும் மனிதர்கள் செய்யும் அழிவு வேலைகள் குறித்து அக்கூட்டத்தில் பேசுவதாகத் திட்டம். தொடக்கமாக பன்றிவால் குரங்கு பேச அழைக்கப்பட்டது.

“உங்களுடைய ஆலோசகன் எனும் முறையில் நமது வாழ்க்கையின் நாடித் துடிப்புக்கு ஆபத்து வந்துக் கொண்டிருக்கிறது எனும் உண்மையைச் சொல்லாமல் விடுவது தவறு என்பதால் இதை சொல்கிறேன். நம்முடைய பழத் தோட்டங்களைப் பாருங்கள். பழங்களை அணில்கள் சதா திருடித் தின்கின்றன. இதனால், உணவுதேடி உயிரை பணயம் வைத்து நாம் மனிதர்களின் குடியிருப்புகளுக்குச் செல்ல வேண்டியுள்ளது. நம்முடைய உடன்பிறப்புகள், உறவுகள் தொடர்ந்து தொந்தரவுகளுக்கும், தாக்குதல்களுக்கும் ஆளாகின்றன. மனிதர்களிடம் சிக்கி சாகின்றன; பட்டினியாலும் சாகின்றன.

நம்முடைய தலைவன், மனித குரங்கு, நிறைய முயற்சிகள் செய்கிறது. ஆனால் எல்லாம் பயனற்று போகிறது. அதன் சமூகம் மட்டும் இன்னும் நன்றாகத்தான் வாழ்கிறது. பழங்கள் இல்லாவிட்டாலும் மரங்களில் எஞ்சிய பகுதிகளைத் தின்கின்றன. பழங்கள் இல்லாமல் நாம்தான் துன்பப்படுகிறோம். அன்புக்குரிய உறவுகளே, நாம் நிறைய அவஸ்தைப் பட்டுவிட்டோம். நம்மால் இனியும் இதைத் தாங்கிக் கொள்ள முடியாது. நம்மை இந்தப் பேரிடர்களிலிருந்து காப்பாற்றும் ஒரு நல்ல தலைவனைத் தேர்ந்தெடுக்க வேண்டும். நம்முடைய தலைவனாக மனித குரங்கு நம்மீது பரிவும் அக்கறையும் கொண்டிருந்தாலும் அதைக்கொண்டு நம்மால் உயிர்வாழ முடியாது.”

பேசி முடித்தபின், பன்றிவால் குரங்கு மற்ற குரங்குகளின் பேராதரவை எதிர்பார்த்து ஒதுங்கி நின்று ஆவலாகக் காத்துக் கொண்டிருந்தது. இந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்வதற்கு ஒருநாளுக்கு முன்னமே பன்றிவால் குரங்கு அதன் சமூகத்துடன் சேர்ந்து மரத்திலிருந்தப் பழங்களைத் துவம்சம் செய்த கதையை நீண்டவால் குரங்குகள் மனிதக் குரங்கிடம் முறையிட்டிருந்தன. இதுகுறித்து எதுவுமே பன்றிவால் குரங்குக்குத் தெரிந்திருக்கவில்லை. ஒருபக்கம் அது நம்பிக்கையாய் காத்துக் கொண்டிருக்க, மற்ற குரங்குகள் ஒன்றாய்கூடி முடிவொன்றை எடுத்தன. எல்லா குரங்கினங்களும் தனக்கு சாதகமாய் பேசுமென பன்றிவால் குரங்கு நம்பிக் கொண்டிருக்க, கூட்டுமுடிவின் அறிவிப்பைச் செய்ய மனிதக் குரங்கு அழைக்கப்பட்டது.  பன்றிவால் குரங்குக்கு இது பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது. பன்றிவால் குரங்கின் அக்கறையை குழு மெச்சுவதாகவும், உணவுப் போட்டியும் மனித தாக்குதல்களும் நடப்பதை குழு ஒப்புக் கொள்வதாகவும் மனித குரங்கு விளக்கியது. ஆனால் ஒருவரை ஒருவர் அனுசரிக்கும் வாழ்வே இயற்கையானது எனக் கூறி பேராசையும், பதவி மோகமும் இல்லாமல் இருந்தால் எல்லாவித பேரிடர்களையும் எதிர்கொள்ள முடியும் என விளக்கியது.

பன்றிவால் குரங்கை அவமானப்படுத்தும் எண்ணம் இல்லாமல், இனி பன்றிவால் குரங்கு அதன் சமூகம் என அனைத்தும் தூரமான வேறொரு இடத்தில் வாழ வேண்டும் என ஒதுக்கி வைக்கும் முடிவைச் சொன்னது.

தன்னுடைய தந்திர வேலைகள் அம்பலத்துக்கு வந்துவிட்டத்தை பன்றிவால் குரங்கும் புரிந்து கொண்டது. ஏமாற்றமாக இருந்தாலும் குழுவின் தேர்வை மீற முடியாமல் நாடு கடத்தப்பட்டதை ஏற்றுக் கொண்டு புதிய வாழிடம் தேடி பன்றிவால் குரங்கும் அதன் சமூகம் போய்விட்டன. அன்று தொடங்கி பன்றிவால் குரங்கின் இனம் இதர வேறெந்த குரங்கினத்துடனும் பார்ப்பது அரிதாகிவிட்டது.

இக்கதை பன்றிவால் குரங்கின் தனித்து வாழும் சூழலியல் வாழ்வை சொல்வது ஒரு அறிவியல் உண்மை. அதை கடந்து, கதைவடிவத்திலெல்லாம் பரிசோதனை முயற்சிகளைச் செய்து பார்க்காமல் சொல்ல வந்த நீதியை நேரடியாகச் சொல்லிவிடும் தன்மையை இப்பழங்குடிக் கதைகள் கொண்டிருக்கின்றன .

பொதுவாக இலக்கிய வளர்ச்சி அல்லது இலக்கியச் சிந்தனையின் வளர்ச்சி என்பது சமூக மாற்றங்களை உள்ளடக்கி நிகழ்வதாகும். சமூகத்தின் சுற்றுச்சூழல் அமைப்பு, அரசியல், பொருளாதாரம், கல்விமுறை ஆகியன இலக்கியச் சிந்தனை வளர்ச்சியில் பெரும் பங்கு வகிக்கின்றன.  இதன் எதிர்நிலையில் நின்று செயல்படும் பழங்குடி சமூகங்களின் வாழ்க்கை முறையிலிருந்து வெளிபடும் இக்கதைகளின் இலக்கியத் தரம் குறித்தெல்லாம் விவாதிப்பது அபத்தம். ஆனால் ஒரு குறிப்பிட்ட நிலத்தையும் அதில் வாழ்ந்த உயிர்களையும் பதிவு செய்கிறது எனும் கோணத்திலிருந்து அணுகும்போது  இக்கதைகளின் மதிப்பு அனைத்தையும் மிஞ்சி நிற்பது உறுதி.

கருவிளை முரணிய தண்புதல் பகன்றை

பெருவளம் மலர அல்லி தீண்டிப்

பலவுக்காய்ப் புறத்த பசும்பழப் பாகல்

கூதள மூதிலைக் கொடி நிரைத் தூங்க’  (அகநானூறு 255 : 11-14)

எனும் இச்சங்கப் பாடலை வாசிக்கும்போது பல நூற்றாண்டு பழமை மிக்கது அல்லி மலர் எனும் கருத்தியல் நமக்குப் புலப்படுகிறது. இப்போது சங்கப் பாடல்களை ஆய்வு செய்யும் அறிஞர்கள் சங்க காலத்தில் மகளிர் தொகுத்து விளையாடியதாகச் சுமார் 103 மலர்களின் பெயர்களைக்  குறிப்பிடுகிறார்கள். இப்படியாக இயற்கையையும் இயற்கை சார்ந்த அன்றைய மனித வாழ்வையும் புரிந்து கொள்ள சங்கப் பாடல்கள் உதவுவதுபோல இப்பழங்குடி கதைகளும் இயற்கையோடு ஒன்றிய அவர்களது வாழ்வை தொகுத்து வைத்திருக்கும் என்பதில் சந்தேகமேதுமில்லை.

இந்நூலில் தும்பிப் பன்றி எதனால் காட்டு விலங்குகளின் சமூக கட்டமைப்பில் குறிப்பிட்ட ஓரிடத்தில் இருக்கிறது என்றும் எதனால் தேவாங்கின் கண்கள் அவமானம் பூத்து காட்சி அளிக்கிறது என்றும் நீதிகள் இழையோட கதைகள் நகருகின்றன. நீதிகளை ஒதுக்கிவிட்டு பார்த்தால் இவ்விலங்குகளின் உடற்கூறு தொடர்பான உண்மைகள் அறிவியல் ஆதரங்களோடு ஒத்துப் போவதாக இருக்கின்றன. மேலும், இக்கதையில் வரும் தும்பிப் பன்றி கிழக்காசியா குறிப்பாக மலேசியாவில் மட்டும் காணப்படும் அரிய வகை உயிரினமாகும். இப்படியாக இந்நூலின் 26 கதைகளில் வரும் விலங்குகள் அரிய வகையானவையாகவும் ‘தெமுவான்’ பழங்குடி சமூகத்தின் பண்பாட்டு கலாச்சாரங்களைத் தொட்டு நிற்பவையாகவும் உள்ளன.

இலக்கியம் மனித மனதை, அதற்கும் சமூக அமைப்புகளுக்குமான உறவுகளை, வாழ்க்கையை அது நேர்கொள்ளும்போது ஏற்படும் சிக்கல்களை அறிய முயல்கிறது என்றால், பழங்குடி கதைகள் உயிர்களின் தோற்றத்தை, இயற்கையை, உயிர்களுக்கும் இயற்கைக்கும் இடையேயான இணைப்பை, அவர்களது வாழ்வியல் விழுமியங்களைச் சொல்ல விளைகின்றன. வெறுமனே பொழுதுபோக்கு, கேளிக்கை தன்மை கொண்டிருப்பதில்லை. அரசாங்கமோ அறிஞர்கள் கூட்டமோ பதிவு செய்யும் என்ற எதிர்ப்பார்ப்புகள் இன்றி தங்களுக்கே உரிய எளிய வழியான கதைக் கூறல் முறையில் பழங்குடி சமூகங்களின் வாழ்வு இயற்கையின் பக்கங்களில் ஓயாமல் பதிவு செய்யப்பட்டுக் கொண்டே இருக்கிறது.

ஆதார நூல்:

Lim, B. L. (1981). Orang Asli Animal Tales. Kuala Lumpur: Eastern Univeristies Press.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...