நாகம்

IMG-20171101-WA0023பக்கிரி உள்ளே நுழைந்ததும் வீட்டிலிருந்த பக்தர்கள் ஒவ்வொருவராக வெளியேறத் தொடங்கினர். வந்து ஒருமாதம் ஆகவில்லை. அதற்குள் சாமியின் மனதில் இடம்பிடித்துவிட்ட பக்கிரியின்மேல் அவர்களுக்குக் கோபமும் பொறாமையும் ஏற்பட்டது. வெற்றிலை சிவப்பு உதடுவரை ஒழுகியிருந்தது. கால்களில் பலமிழந்தவனைப்போல சடாரென அமர்ந்தான்.

“நாகம் செத்துப்போனத சொல்லிட்டியா?” என்று கேட்கும்போது சாமியின் கைகள் படமெடுப்பதுபோல விரிந்து பின்னர் சுரத்தில்லாமல் விழுந்தது. நீண்ட விரல்களின் மூட்டுகள் மொட்டு மொட்டாகப் பருத்திருந்தன.  பக்கிரிக்கு நாகம் அவனை பயமுறுத்தி விரட்ட பூமியை நோக்கி தன் முகத்தை ஓரிருமுறை அடித்தது நினைவுக்கு வந்தது. மினுமினுப்பான தோல்களைக்கொண்ட ஒரு நாகத்தினால் மனதைத் துளைக்கும் வகையில் சீற்றம் எழுப்ப முடியும் என பக்கிரிக்கு அப்போதுதான் தெரிந்தது. அவன் நிறைய மலைப்பாம்புகளைப் பார்த்துள்ளான். எதையாவது தின்றுவிட்டு அசையமுடியாமல் தீம்பாரில் கிடக்கும். ஒருதரம் கோழியைச் சுழற்றி விழுங்கும் மலைப்பாம்பைக்கூட பிடித்து ஜப்பானியர்களிடம் விற்றிருக்கிறான். நாகத்தை நேருக்கு நேராகப் பார்த்தது இதுதான் முதல் முறை. நாகம் என்பது முகத்தின் நுனியில் இருக்கும் இரு விஷப்பற்கள் மட்டும்தான் என அவன் அத்தனைகாலம் அலட்சியமாகத்தான் இருந்தான். படம் விரித்தபடி எழுந்து நின்று முன்னோக்கி தரையை அடித்து சீறியபோது வெலவெலத்தது.

“இல்லைங்கய்யா… ஊருக்கு நாசம் செஞ்சிட்டேன்னு என்னைய அடிச்சே கொன்னுடுவாய்ங்க… முதல்ல ஏதோ நாவராசாவோட விளையாடுறீங்கன்னு நெனச்சேன். ஒங்க கால அது தீண்டி, நீங்க கத்துனதும் நெதானம் தவறிட்டன். இழுத்துத் தள்ளிப்போடதான் தாசா கத்திய விசுறுனேன். வேகம் புடிபடல. நீங்கதான் காப்பத்தனுஞ் சாமி,” பக்கிரி பயந்துதான் போயிருந்தான்.

ஜப்பான்காரன் நாட்டைவிட்டு ஓடி ஒரு வருடம் ஆன பின்பும் ரயில் தண்டவாளம் போடச் சென்ற பெற்றோர் திரும்பாததால் தோட்டத்தைவிட்டு விரட்டப்பட்ட மாமாவைத் தேடி இங்கு வந்தவன்தான் பக்கிரி. அவனது மாமா தோட்டத்தைவிட்டு விரட்டப்பட்டபோது பிரிட்டிஷ் ஆட்சி நடந்துகொண்டிருந்தது. உயர்சாதிப் பெண்ணைக் காதலித்தார் என்ற குற்றத்திற்காகப் பஞ்சாயத்து முடிவின்படி ஊர் நீக்கம் செய்யப்பட்டவரை ஒரே ஒருமுறை திருவிழாவில் சந்தித்துள்ளான் பக்கிரி. புதிய தோட்டத்தில் தனக்கு ஒரே தோழன் சாமிதான் என மாமா கூறியது நினைவிருந்தது. சாமி என்பது ஒருவரின் பெயர் என்றே நினைத்து வந்தான். சாமி ஒரு கோயிலுக்குப் பூசாரியாக இருப்பார் என்றும் ஊரே அவர் பேச்சுக்குக் கட்டுப்பட்டிருக்கும் என்றும் அவன் கற்பனை செய்துகூடப் பார்க்கவில்லை. பூசாரியாக இருந்ததால் மட்டுமே சாமியை அந்தத் தோட்டத்தில் இருக்க ஜப்பான்காரர்கள்  அனுமதித்திருந்தனர்  என்பதும் தண்டவாளம் போடும் வேலையைத் துரிதப்படுத்த மாமாவும் பிடித்துச்செல்லப்பட்டார் எனவும் தெரிந்தபோது பக்கிரி அந்தத் தோட்டத்திலேயே சாமியுடன் தங்கிவிட்டான். தன் பெற்றோரைப் போலவே மாமாவும் இனித் திரும்பப் போவதில்லை என அவன் உள்ளூர அறிந்திருந்தான்.

“போடா பைத்தியக்காரா.” சாமி எழுந்து அமர முயன்றார். வாந்தியை வெளியேற்ற அடிவயிறு உள்ளே வெளியே என சுருங்கி விரிந்துகொண்டிருந்தது.  பக்கிரி அருகில் இருந்த பாத்திரத்தை வாகாகப் பிடித்துக்கொண்டான். சாமி வாயில் இருந்து ஆமணக்கு இலையின் நெடி வீசியது.  நெருப்பில் வாட்டி, காலில் கடிபட்ட இடத்தில் கட்டப்பட்ட விரலி மஞ்சளின் பொசுங்கிய வாடை வீடு முழுவதும் பரவியிருந்தது. சாமி வாந்தி வராமல் கொஞ்சம் எச்சிலைத் துப்பினார். ஏதோ நெஞ்சில் அடைத்துக்கொண்டு நிற்பதுபோல சிரமப்படுவது தெரிந்தது.

“கொஞ்சம் நீவி விடட்டாய்யா.”

“அடைச்சிக்கிடக்கிறது மார்ல இல்லடா. மனசுல. நீவி விட்டா சரியாகாதுடா பைத்தியக்காரா. நெசத்த சொன்னாதான் சரியாகும். நெசம் வாந்தி மாதிரி. கக்கும்போது கஷ்டமா இருக்கும். கக்கி முடிச்சிட்டா நிம்மதியா தூங்கலாம்.”

“நான் சொல்லிடுறேங்கய்யா. நாகராசா சாமிய நான் வெட்டிக் கொன்னுட்டேன்னு சொல்லிடுறேங்கய்யா. ஊரவுட்டு அடிச்சி தொறத்துவாய்ங்க. தொறத்தட்டுங்கய்யா. மாமனத் தேடி வந்தேன். சோறு போட்டு தங்க இடம் கொடுத்தீய்ங்க. பஞ்சம் பொழைக்க வந்த நாயிக்கு வேற ஊரா கெடைக்காது. போயிடுறேனுங்கய்யா.”

“சொல்லிடு.” என்றவர் சுவரில் சாய்ந்தார். கழுத்திலும் விரல்களிலும் எப்போதும் கனத்துக்கொண்டிருக்கும் நகைகள் இல்லை. சாமியை அவன் எப்போதும் அப்படி வெறிச்சோடிய நிலையில் பார்த்ததில்லை.  “சொல்லத்தான் வேணும். அதுக்கு முன்னாடி நா உனக்கு நம்ம நாகராசன பத்தி சொல்லுறேன். கேக்குறியா? பைத்தியக்காரா…”

பக்கிரி கயிற்றுக் கட்டில் ஓரம் அமர்ந்துகொண்டு அவர் கால்களை அமுக்கத் தொடங்கினான். சாமி நாகத்தின் கதையைச் சொல்லத் தொடங்கினார்.

***

மாடுகளை மேய்க்கச் செல்லும்போது கொம்பனும் உடன்வராமல் இருந்ததில்லை.IMG-20171101-WA0024 தோட்டத்தில் புகுந்துவிட்ட ஒற்றைக் காட்டுப்பன்றியைத் தாக்கச் சென்று கடிபட்டதில் ஒரு காதை இழந்ததும் காசிதான் அதற்கு கொம்பன் எனப் பெயரிட்டான். மாடுகள் தப்பித் தவறி பயிர்களைப் பதியனிட்டிருக்கும் நிலப்பரப்புக்குச் சென்றால் கொம்பன் மூர்க்கமாகிவிடும். கொம்பன் இருக்கும் தைரியத்தில்தான் காசி அவ்வப்போது அரசமரத்தடியில் கண்ணயர்வான். மேட்டுவீட்டுக்காரரின் மாடுகளுக்குக் கழுத்தில் மணி இருக்கும். அதன் ஓசை காதுகளுக்குத் தொலைவில் போகாத வரை காசி நிம்மதியாகத் தூங்கலாம். அவன் திடுக்கிட்டு விழித்தால் கொம்பனும் பதற்றமாகிவிடும். ஏதோ சரியில்லை என குரைக்கத் தொடங்கும்.

மேட்டு வீட்டுக்காரரைத் தவிர முத்தம்மாவின் இரண்டு மாடுகளையும் காசிதான் மேய்த்தான். கொம்பன் அவற்றை விரட்டுவதில்லை. தோட்டத்து கிராணியாக இருந்த அவள் அப்பா நாகம் தீண்டி இறக்கும்போது மகளுடன் மாடுகளையும் இனி யார் பராமரிப்பார்கள் என்ற கவலையில் கண்கலங்கியதை தோட்டம் இன்றும் நினைவுகூர்வதுண்டு. முத்தம்மாவின் அப்பாவுக்குத் தோட்டத்தில் நல்ல மரியாதை. குடும்பத்தகராறு, சொத்துத்தகராறு என எது வந்தாலும் தோட்ட மக்கள் அவர் வீட்டுக்கதவைத்தான் தட்டுவார்கள். வீட்டினுள் யாரையும் அனுமதிக்கமாட்டாரே தவிர எவருக்கும் செவிகொடுக்கத் தவறியதில்லை. அவருக்கு விலங்குகளை வளர்ப்பதில் ஆர்வம் இருந்தது. இரண்டு நாட்டு நாய்கள், இரண்டு ஜோடிக் கிளிகள், நான்கைந்து பூனைகள், சில ஆடுகள், கோழிகள் என்று போய் இறுதியாக அவர்  வளர்த்ததுதான் இரண்டு மாடுகளும். முத்தம்மாவுக்கு மாடுகளைப் பாதுகாக்கத் தெரியாது. கன்றாக அப்பா வாங்கி வந்தபோது கொஞ்சியதோடு சரி. அப்போதே அவளுக்கு வயது முப்பதைக் கடந்திருந்தது. அப்பா இறந்தபிறகு எல்லாவற்றையும் விற்கவும் விரட்டவும் முடிந்தது. அவர் அதிகம் அன்பு வைத்திருந்த மாடுகளை அவ்வாறு செய்ய மனம் வரவில்லை. மேலும் அவை கன்றுகளாக இருந்தபோது அவள்தான் ராமன், சீதை எனப் பெயரிட்டாள். விலங்குகளுக்குப் பெயர் வைத்தால் அவை பெயர் வைப்பவர்களின் உறவாகிவிடுவதாக அவள் நம்பினாள்.

ஜோடியாகத் திரியும் முத்தம்மாவின் மாடுகள் கூட்டத்தில் கலக்காது. மேய்ந்துவிட்டு ஆறஅமர அசைபோட்டுக்கொண்டிருக்கும். இரண்டுமே நல்ல வெள்ளை. கண்களில் இன்னமும் கன்றுக்குட்டிபோல கொஞ்சல் இருந்தது. மேட்டுவீட்டுக்காரர்போல காசிக்கு முத்தம்மா பணம் ஏதும் கொடுப்பதில்லை. “அக்கா…” எனக் குரல் கேட்கும்போதெல்லாம் பிராஞ்சாவில் அமரவைத்து உணவை வயிறாரப் போடுவாள்.  நல்ல கைப்பக்குவம் முத்தம்மாவுக்கு. ஆனால் சோற்றுக்காகவெல்லாம் காசி முத்தம்மாவின் மாடுகளை மேய்க்கவில்லை. முத்தம்மாவிடம் இருப்பது போலவே மாடுகளின் மீதும் அவனுக்கும் தனி அன்பு இருந்தது.  இரண்டு நாளைக்கு ஒரு முறையாவது சூரியகாந்தி பூக்களின் விதைகளை நீக்கி அவற்றுக்கு உண்ணக்கொடுப்பான். கைக்கு எட்டும் கொய்யாப் பழங்கள் எல்லாம் அவற்றுக்கு நொறுக்குத்தீனி. முத்தம்மாவுக்குப் பிடித்த புளிச்சகாய்களும் நிச்சயம் அவன் மடியில் ஒவ்வொரு நாளும் இருக்கும். அவற்றைப் பெற்றுக்கொள்ளும்போதெல்லாம் முத்தம்மா அவன் தலைமுடியை கலைத்துவிடுவாள். அது அவனுக்கான வெகுமதி.

சீதை முதல் முறையாக கர்ப்பவதியானாள். அத்தனை காலம் தன்னிடம் குழந்தைபோல கொஞ்சியது தாயின் நிதானத்துக்கு வந்ததில் காசிக்கு பெரிய ஆச்சரியம்.  “க்கா… கொழந்தன்னு நெனச்சோம். பொம்பளையா ஆயிட்டா பாரேன்.” என ஒவ்வொருமுறை சீதையின் பெருக்கும் வயிற்றைத் தடவிக் கொஞ்சும்போதெல்லாம் முத்தம்மா புறக்கடை வாயிலில் அமர்ந்து கொண்டு “நீயுந்தாண்டா காளையாயிட்ட” என்பாள். காசிக்குக் கூச்சமாக இருக்கும். கொஞ்சம் கூடுதல் அக்கறை எடுத்தே சீதையைக் கவனித்து வந்தான். அவளுக்குப் பிடித்த மக்காச் சோளத்தை எந்தத் தோட்டத்திலாவது திருடி ஒரு வாயாவது தினமும் ஊட்டிவிடுவான். அப்போதெல்லாம் காலராவில் இறந்துபோன அவன் தாயின் நினைவு வரும். தன்னைத் தனியே விட்டுவிட்டு கப்பலேறி ஊருக்குப்போன அப்பா திரும்பாமல் அனாதையாக நின்றபோது துரைவீட்டிலேயே வேலைக்கு ஏற்பாடு செய்துகொடுத்த கிராணியை எதிர்க்கொள்ளும் போதெல்லாம் அவன் கரம் கூப்பி வணங்குவான். நன்றிக்கடனாக அவனாகவே சீதையையும் ராமனையும் பராமரிக்கத் தொடங்கினான். பிரசவத்துக்கு முன்பே சீதை, நாகம் தீண்டி இறந்துபோனதுதான் அவனை நிம்மதி இழக்க வைத்தது.

முத்தம்மா தன் பசு செத்ததைவிட, அதனைத் தீண்டிய பிறகு தன்னை உக்கிரமாக நோக்கி நிமிர்ந்து நின்ற நாகத்தைப் பற்றிதான் அதிகம் பிதற்றத் தொடங்கியிருந்தாள். “அவன் ராச நாகம். மஞ்ச ராசா. என் நெத்தி ஒசரம் நின்னான்…” எனக் காண்போரிடமெல்லாம் பேசுவது பயத்தில் வந்த காய்ச்சலின் உளறல் என காசி மட்டும்தான் முதலில் நினைத்தான்.

முத்தம்மா நல்ல உயரம். அவள் நெற்றியளவு நாகம் நின்றிருக்குமா அல்லது பயத்திலோ மாட்டை இழந்த கவலையிலோ புத்தி பிரண்டு அதிகப்படுத்திச் சொல்கிறாளா என தோட்டத்தில் இளைஞர்கள் சிலருக்கும் நாள்பட சந்தேகம் வரவே செய்தது. அது மட்டும் ஒரு மனிதனாக இருந்திருந்தால் தோட்டத்தில் உள்ள அத்தனை பெண்களும் அவனைக் காதலித்திருப்பார்கள் எனத்  தன்னிடம் சொன்னதாக பாஞ்சாலைக் கிழவி ஊர் முழுக்கச் சொல்லியது அவளது புத்திசுவாதீனம் குறித்த சந்தேகத்தை இளைஞர்கள் மத்தியில் வலுவாக்கியது. அவள் பொய் சொல்ல மாட்டாள் என்று தோட்டத்துப் பெரிசுகள் உறுதியாக நம்பினர். பெரிய மனுஷியாகும் வரை அவளிடம் வினோத சக்தி இருப்பதாகவே தோட்டத்தில் நம்பிக்கை இருந்தது. காலரா நோய் கடுமையாகத் தோட்டம் முழுக்கப் பரவுவதற்கு முன்பும் மலேரியா காய்ச்சல் கண்டு மரணங்கள் சம்பவிக்கும் முன்பும் முத்தம்மா தோட்டத்து மாரியம்மன் கோயிலில் மயங்கி விழுந்தது துர் நிகழ்வின் அறிகுறியாகவே குறிபார்க்க வந்தவர்களால் கணிக்கப்பட்டிருந்தது. கிராணிக்கு மரியாதை கூடிப்போக முத்தம்மாவும் ஒரு காரணம். எந்தச் சுபகாரியம் நடந்தாலும் முத்தம்மாவிடம் ஆசீர்வாதம் வாங்கச்செல்வது தொடக்கத்தில் அவருக்கு சந்தோஷத்தைக் கொடுத்தாலும் அவளது திருமணத்துக்கு அந்த நம்பிக்கைகளே தடையாக இருந்தது சாகும் வரை அவரை வருத்தியது.

நாகத்தைப் பார்த்ததிலிருந்து முத்தம்மாவின் உளறல்கள் ஒரு பக்கம் இருக்க  கோழி வளர்க்கும் சிலர் அப்போதுதான் அதற்கு முந்தைய தங்கள் அனுபவங்களைச் சொல்லத் தொடங்கினர். அவர்கள் வீட்டுக் கோழிக்குஞ்சுகள் சில காணாமல் போனதும் அடைக்கு வைத்திருந்த முட்டைகள் களவாடப்பட்டதும் நாகத்தின் கணக்கில் சேர்க்கப்பட்டு அதற்கு மரண தண்டனை தீர்ப்பானது. அதுவரை யாருமே பார்த்திராத நாகம் அந்தத் தோட்டத்தின் மிகப்பெரிய எதிரியாக உருவானது.

வேறு யாரையும்விட காசிதான் நாகத்தைக் கொல்வதில் தீவிரமாக இருந்தான். முத்தம்மாவுடையதும் அவரது பக்கத்துவீட்டுக்காரரதும் கோழிப்பண்ணை இருக்கும் லயத்தில்தான் நாகம் வந்துபோகும் நம்பத்தகுந்த தடயங்கள் இருந்ததால் இரவு நேரங்களில் முத்தம்மா வீட்டு பிராஞ்சாவிலேயே தங்கிவிட்டான் காசி. கொம்பனும் அவனுடனேயே தங்கிவிடும். அந்த லயம் காட்டுடன் ஒட்டியிருந்தது. மரக்கன்றுகள் நடப்படாத அவ்விடத்தைத்தான் கால்நடைகள் வளர்க்க அந்த லயத்துக் குடியிருப்புவாசிகள் பயன்படுத்திக்கொண்டனர். அந்த லயத்தில் வீடு கிடைத்தவர்கள் அதிர்ஷ்டசாலிகள் என்ற பேச்சு மறைந்து பாவம் செய்தவர்களாக வர்ணிக்கப்பட்டார்கள். அந்த லயத்தில் உள்ளவர்களில் பெரும்பாலோர் தோட்ட அலுவலக வேலை செய்பவர்கள். தோட்ட நிர்வாகம் புதிய குடியிருப்பை உருவாக்குவதில் முனைப்புக்காட்டியது. அதுவரை அவர்களைப் பொறுத்துக்கொள்ளச் சொன்னது. தங்கள் பங்குக்கு கந்தகத்தைக் கிலோ கணக்கில் தூவி விட்டது. அதெல்லாம் வேலைக்காகவில்லை. எவ்வளவு காவல் காத்தும் ஒவ்வொருநாளும் நாகம் ஏதாவது ஒரு கூண்டிலிருந்த முட்டைகளையோ குஞ்சுகளையோ திருடிக்கொண்டுதான் இருந்தது. பெட்டைகள் கொக்கரிக்கும் சத்தம் கேட்டு ஓடிப்போய் பார்ப்பதற்குள் நாகம் சென்றிருக்கும். பெட்டைக் கோழிகள் கலவரத்துடன் கத்திக்கொண்டிருக்கும்.

காசிக்கு இது ஒரு மர்மமாகவே இருந்தது. முத்தம்மா சொல்வதுபோல நெற்றி வரை எழுந்துநின்று படமெடுக்கும் நாகம் அவ்வளவு சீக்கிரம் ஊர்ந்து ஒளிவது சாத்தியமா எனக் குழம்பினான். அப்பா விட்டுச்சென்ற தோட்டத்துக் கணக்கு வழக்கு வேலைகளைப் பழுதின்றிச் செய்பவளாக இருந்தாள் முத்தம்மா. அப்பாவைப் போலவே தோட்ட மக்களுக்கு ஏதும் சிக்கல் என்றால் முதல் ஆளாக வந்து நிற்பாள். அவள் அதிகம் சிரித்ததையோ அழுததையோ அவன் இதுவரை பார்த்ததில்லை. கடிதம் எழுதுவது, ஊர்ச்செய்திகளை வாசித்துக்காட்டுவது என எப்போதும் அவள் உதவியை நாடலாம். தோட்டத்தில் அவளிடம் மட்டுமே கிராமபோன் ஒன்று இருந்தது. அது எப்போதும் பாடிக்கொண்டே இருக்கும். தோட்டத்தில் யாரைக்காட்டிலும் கெட்டிக்காரியான அவள் இந்த நாக விஷயத்தில் நடந்துகொள்ளும் விதம்தான் அவனுக்குக் குழப்பத்தை உண்டாக்கியது..

பலிவாங்குவதற்காகப் பாம்பைத் தேடிய அவனுக்கு இப்போது அந்தப் பாம்பு தன்னுடன் மல்லுக்கு நிற்பதாகவே தோன்றியது. மனித உடலின் உஷ்ணத்தை அறிந்தவுடன் இடத்தை மாற்றிக்கொள்ளும் நாகம் எல்லா ஆரவாரங்களுக்கு மத்தியிலும் தனது லாவகத்தைக் காட்டுவது காசியை உசுப்பேற்றியது.

மாடு மேய்க்கச் செல்வதை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்துக்கொள்ளத் தொடங்கினான் காசி. முத்தம்மாவுக்குப் புளிச்சக்காய்களையும் பறித்துவருவதில்லை. எந்த நேரமும் வெறிபிடித்தவன் போல கையில் கழியுடன் சில இளைஞர்களைச் சேர்த்துக்கொண்டு லயத்தைச் சுற்றிச் சுற்றி வந்தான். கழியுடன் அவனைப் பார்க்கும்போதெல்லாம் முத்தம்மா அவனைப் பார்த்துச் சிரிப்பது அவமானத்தில் கூசச்செய்யும். ஆனால் ஒன்றும் சொல்லாமல் அவனுக்கு உணவு கொடுப்பாள். அந்த லயத்தில் கோழி வளர்த்தவர்களுக்குத்தான் காசியின் சேவை அவசியமாக இருந்தது. எப்படியாவது நாகத்தைக் கொன்று தங்களை நஷ்டத்தில் இருந்து காக்கும்படி கெஞ்சினர். ஆனால் பொறுப்பில்லாமல் பாம்பு பிடிப்பதாகச் சொல்லிக்கொண்டு சுற்றிக்கொண்டிருந்த காசியை நம்பி மேட்டுவீட்டுக்காரர் மாடுகளைக் கொடுப்பதை நிறுத்தியிருந்ததைப் பற்றியெல்லாம் காசிக்குக் கவலையே இல்லை. தன்னிடம் சவால் விடும் பாம்பிடம் போராடிப் பார்ப்பதென முடிவு செய்தான்.

அப்படி ஓர் இரவில்தான் அவனுக்கும் அவன் கூட்டாளிகளுக்கும் நாகத்தின் வால் நுனியைப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. முதலில் அவர்கள் அதை தடித்த மரத்தின் வேர் என நினைத்தனர். அசைந்தபோதுதான் நல்ல தடிமனான வால் எனத் தெரிந்தது. இருட்டில் அதன் மஞ்சளை உணர முடியவில்லை. அன்று கொஞ்சம் பெரிய கோழிக்குஞ்சைத் தின்றுவிட்டு நிதானமாக புதருக்குள் நுழைந்தது நாகம். அதனிடம் அவசரம் இல்லை. காசி நினைப்பதுபோல அது இத்தனை நாள் பயந்தெல்லாம் ஓடவில்லை. அதன் நிதானமே அதன் அசைவுக்கும் அளவுக்கும் கம்பீரம் கொடுத்தது. அதன் வால் அவனை அச்சமுற வைத்தது. எஞ்சிய உடலை கற்பனை செய்யவே பயமாக இருந்தது. வாலை நோக்கி கம்பை எறிந்ததன் விளைவு மறுநாள் ராமன் பிணமாகக் கிடந்தான். முத்தம்மா அழவில்லை. ராமனை மௌனமாகப் பார்த்துக்கொண்டிருந்தாள். கடி தொடையில் விழுந்திருந்தது. இரண்டு பற்களில் ஒன்று நல்ல ஆழம் சென்றிருந்தது. தோட்டத்தில் அனைவருமே பயந்திருந்தனர். பாம்பிடம் பகைத்துக்கொண்டால் உயிரிழப்பு நிச்சயம் என்பதால் போராட்டத்தில் இருந்து இளைஞர்கள் விலகிக்கொண்டனர். முத்தம்மாவின் பேச்சுகள் பிதற்றல் இல்லை என ஒப்புக்கொண்டனர். இளைஞர்களுக்கு நாகத்தின் மீதிருந்த அச்சம் அவள் மீது தாவியது. பெரியவர்களுக்கு மரியாதை கூடியது. தாங்கள் பின்வாங்க விரும்புவதை பாம்பிடம் எவ்வாறு உணர்த்தலாம் எனத் தோட்டமே யோசித்துக்கொண்டிருந்தபோது காசி தனியாகவே அதனைக் கொல்வதென முடிவெடுத்தான்.

மறுநாள் இரவு பெட்டைக்கோழிகள் கூக்குரலிட்டபோது கூண்டைச் சுற்றி குவித்து வைத்திருந்த காய்ந்த புற்களுக்கு நெருப்பு மூட்டினான். பெட்டைகள் நெருப்பைப் பார்த்த பயத்தில் வேகமாகக் கொக்கரித்தன. முத்தம்மாவுக்கும் லயத்துக்காரர்களுக்கும் என்ன நடக்கிறதென புரியவில்லை. பயத்தில் அலறும் பெட்டைகளையும் குஞ்சுகளையும் உடனே சென்று காப்பாற்றும் அளவுக்கு தைரியம் இல்லாமல் காசியைச் சபிக்கத் தொடங்கினர்.

“அது மஞ்ச ராசா… ஒன்னால புடிக்க முடியாதுடா…” என முத்தம்மா சத்தமிட்டது காசிக்குக் கோபத்தை மூட்டியது. தன் பசுக்களைக் கொன்ற நாகத்துக்குச் சார்பான அவளது பேச்சின் வன்மம் அவனை மூர்க்கமாக்கியது. அவள் ஏளனம் அவனை மேலும் உசுப்ப, வெறிகொண்டவனாக கூண்டுக்குள் புகுந்தான். கொம்பனும் அவன் ஓடும் இடமெல்லாம் ஓடி ஏன் எதற்கென தெரியாமல் குரைத்தது. கழியைச் சுற்றி அடித்து அடைக்கு வைத்திருந்த பெட்டிகளை நகர்த்தினான். முட்டைகள் உடைந்து பிசுபிசுத்த உடலுடன் பெட்டைகள் வெளியே பறந்தன. குஞ்சுகள் அவன் காலில் மிதிபட்டன. கூரையைத் தட்டி உடைத்தான். அதன் இண்டு இடுக்குகளில் அரவத்தைத் தேடினான். ஆக்ரோஷமாக வெளியே வந்து கூண்டுக்குக் கீழே கம்பை வைத்து வாரினான். இப்போது பெட்டைகளின் கூச்சலைவிட லயத்து மக்களின் கூச்சல் அதிகரித்தது. நெருப்பின் ஜுவாலையின் களியேந்தி  கரிய முறுக்கிய உடலுடன் முனிபோல நின்றான். நாகம் கண்களுக்கு அகப்படவே இல்லை.

வடிந்த வியர்வையின் உப்பில் எரிச்சல் கிளம்பியபோதுதான் அவன் உடலில் ஆங்காங்கு கீறல்கள் இருப்பதை உணர்ந்து நிதானமானான். கோழிக்கொட்டகைகள் சேதம் அடைந்திருந்தன. பெட்டைகள் தங்கள் குஞ்சுகளை சேகரித்து இறக்கைக்குள் அடைத்துக்கொண்டன. சேவல்கள் பதற்றமாகக் கொக்கரித்துக் கொண்டிருந்தன. லயத்துப் பெண்களும் ஆண்களும் அவனை வசைபாடுவது தெளிவாகக்கேட்டது. காசி ஒன்றும் பேசவில்லை. எல்லார் முன்பும் நிர்வாணமாக நிற்பதுபோல உணர்ந்தான். இனி பாம்பு பிடிக்க வரவேண்டாம் என கடுமையாக அவனுக்கு எச்சரிக்கை விடப்பட்டது. மறுநாள் அவன்மேல் துரையிடம் புகார் கூற முடிவானது. அவனிடம் மல்லுக்கு நிற்பது சரிவராது என ஆண்கள் தங்கள் மனைவிகளைச் சமாதானம் செய்து வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். முத்தம்மா ஒன்றும் சொல்லவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக இரவு தனது நிரந்தர அமைதிக்குத் திரும்பியபோதும் அங்கேயே நின்றுக்கொண்டிருந்த அவனை பிரஞ்சாவில் அமர வைத்தாள். “ஏன் அழற… நீயும் ராசாதான்” என தலைமுடியைக் கலைத்துவிட்டாள்.

கொம்பன் கூண்டைச் சுற்றிச்சுற்றிக் குரைத்த களைப்பில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தது. காசிக்கு இப்போது நாகத்தின் மீதிருந்த வெறி குறைந்திருந்தது. இனி இந்த லயத்துப் பக்கம் வரக்கூடாது என எழுந்தபோது முத்தம்மா அவனை உள்ளே அழைத்தாள். அவள் அப்படி யாரையும் கூப்பிடுபவள் அல்ல. அவள் அப்பாவைப் போலவே எவரையும் வீட்டினுள் அனுமதிப்பதில்லை. தயங்கி நின்றிருந்தவனின் கையை தனது கைகளால் நாகம்போல வளைத்துப்பிடித்து உள்ளே இழுத்தாள். நூதனமான பிடியில் அவன் விரல்கள் அவளது அக்குள் ஈரத்தில் பிசுபிசுத்தது.

***

IMG-20171101-WA0025“உள்ள நுழைஞ்சதும் முதல்ல எனக்குப் புரியல. கண்ணத் துடைச்சிட்டு உன்னிப்பா பார்த்தப்பதான் அவ மெத்தமேல நாகம் கொஞ்ச கொஞ்சமா வளர்ந்து என் நெத்தி வரைக்கும் நிக்கிறத பார்த்தேன்”

“ஆத்தாடி… நாகம் அந்தம்மாவோடதா?”

“நா மெல்லமா அத நோக்கி நடந்தேன். எனக்குப் பயமில்லை. ஆனா ஒரு ராசா முன்னாடி அடிமை  மாதிரி பவ்வியமா நின்னேன். அது மஞ்சள் ராச நாகம். நாக்க நீட்டி ஒடம்பு சூட்ட புரிஞ்சிக்கிச்சி. அதோட படம் என் ரெண்டு கைப்பாத அளவுல விரிஞ்சது. நான் அது முன்ன மண்டி போட்டேன். கைகளைக் கூப்பி ராசன வணங்கினேன்.”

“நெசமா  மஞ்சளுங்களா ஐயா? நெசமாலும் சொல்றீங்களா?” பக்கிரியின் குரலில் பதற்றம் இருந்தது.

“மஞ்சதான்.. முத்தம்மா ஆருக்கும் தெரியாம ரொம்ப வருஷமா வளத்த நாகம். “

“மஞ்சள்னா சொல்றீங்க.”

“முத்தம்மா அக்கா ஏன் கோவப்பட்டா, ஏன் எகத்தாளமா சிரிச்சான்னு அப்பதான் புரிஞ்சது. எந்தப் பொட்டச்சிக்கும் வீரியமான ஆம்பளமேலதான் ஆச வரும். ராசன் ஆம்பள.  நாங்க எல்லாம் கோழைங்க. கூட்டமா சேந்து பயந்துகிட்டே ராசன தேடுனோம். வந்து நின்னான் பாரு. ஒத்தயா. சரிக்கு சமமா வரியான்னு. அவனோட மோத முடியுமா? அப்படியே சரணடைஞ்சி விழுந்துட்டேன்.”

“அப்ப நான் கொன்ன கருநாவம் சாமி பாம்பு இல்லையா?”

“நான் கும்பிட்டதும் அந்த ராசா தோட்டத்தவிட்டே போயிடுச்சி. நானும் முத்தம்மா அக்காளும் அது போறத பாத்துக்கிட்டே இருந்தோம்.”

“என்னய்யா சொல்றீங்க… சாமி நாகம் இந்தத் தோட்டத்துலேயே இல்லையா? அப்ப நான் கொன்னது? உங்கள கொத்துனது?”

“யாருக்கும் மஞ்ச நாகம் தோட்டத்தவிட்டுப் போனது தெரியாது. முத்தம்மா அக்கா அதன்பொறவு யார் கிட்டவும் பேசுறதில்ல. எனக்கு மட்டும் தவறாத சோறு போடுவா. கொஞ்ச நாள்ள படுத்தபடுக்கையா ஆயிட்டா. துரைகிட்ட பேசி இந்த லயத்துல நாகராசன் கோயில் கட்டித்தர கேட்டா. அதுக்கு என்னையே பூசாரியா போட்டா மவராசி. கோயில ஒட்டி இந்த வீடும் கெடைச்சது. நான் மஞ்ச நாகத்தால ஆசிர்வதிக்கப்பட்டவன்னு அவ சொன்னத இன்னிக்கும் தோட்டம் நம்புது. கன்னிகழியாத பொண்ணு சாவுறதுக்கு முன்னுக்கு சொன்ன வாக்குக்குன்னு ஊரே கட்டுப்பட்டுச்சி.”

“இப்ப நான் கொன்னது?”

“இந்தக் காட்டோரம் ஏராளமான நாகம் இருக்கு. ஊருக்கு உண்மைய சொல்லச் சொல்லுதுன்னு நினைக்கிறேன்… நீ எனக்கு ஒரு ஒதவி செய்யனும்…”

“சொல்லுங்கய்யா.”

“நான் செத்துட்டேன்னா இந்த உண்மைய எல்லாருக்கும் சொல்லனும். இதெல்லாம் பக்தியால பயத்தால ஊர் போட்ட தங்கம். திரும்ப ஊருக்கே கொடுத்திடனும். எல்லார் மனசுலயும் இன்னும் நெத்தி வரைக்கும் வளந்து நிக்கிற மஞ்ச ராசாமேல பயம் இருக்கு… அது எல்லார் நெனப்புலேருந்தும் போவட்டும். ஒருவேள பொழச்சி வந்தா நானே சொல்லிருவேன்.” சாமி மீண்டும் வாந்தி எடுத்தார். நெஞ்சில் ஏதோ அடைத்துக்கிடப்பதுபோல கஷ்டப்பட்டார்.

“சரிங்கய்யா…சொல்லிடுறேன். மார தேய்ச்சி விடவா..”

“எல்லா நெசங்களும் வாந்தியா வருவதில்ல பக்கிரி. செலது நெஞ்சியலேயே தங்கி நெரந்தர வலியாயிடுது.”

***

பக்கிரிசாமி தன்னைத் தொழும் தோட்டத்து மக்களுக்கு உண்மையில் மஞ்சள் வண்ண ராஜ நாகம் தன்னையும் தன் குருவையும் ஆசிர்வதிக்கவில்லை என்பதை ஊருக்கு எடுத்துச் சொல்ல நம்பகமான ஒருவனுக்குக் காத்திருந்தான். கழுத்திலும் விரல்களிலும் அரித்துக்கொண்டிருக்கும் காசிசாமி விட்டுச்சென்ற தங்க நகைகள் போலவே நெஞ்சை அரித்துக்கொண்டிக்கும் அவர் சொன்ன அந்த உண்மையை சொல்லி முடித்துவிட்டால் நிம்மதியாக இருக்கும். அப்போதும்கூட அதிஷ்டவசமாகப் பிழைத்துக்கொண்ட காசி சாமியின் இரண்டாவது மரணம் பற்றி சொல்லவே முடியாமல் அவன் நெஞ்சிலேயே தங்கி கடைசிவரை தொந்தரவு செய்யலாம்.

ஓவியம் : தீர்த்த பாதா

 

3 comments for “நாகம்

  1. magendran rajendran
    November 1, 2017 at 11:26 am

    சில நம்பிக்கைகள் எப்படி காலம் காலமாக மக்கள் மனதில் வேரூன்றி கிடக்கிறது என்பதற்கு இந்த மஞ்ச ராச நாகம் பற்றிய கதை நெற்றிப் பொட்டில் அடித்தாற் போல புறிய வைக்கிறது. எல்லாவற்றுக்கும் ஒரு தொடக்க புல்லி நிச்சயம் இருக்கும். ஆனால் முற்றுப்புள்ளி என்பது தான் கேள்விக் குறியாக உள்ளது

    ஒரு ஆண் நாகத்தின் வீரியத்தை ஆண்மையோடு ஒப்பிடுவது கதையில் ஒரு திருப்புமுனை. தனது ஆண்மைக்கு சவாலாக இருக்கும் ஒன்றுக்கு தலை வணங்கி அடிமை படுவது பின்பு அதுவே பக்தியாக மாறுவது என்பதும் எதார்த்தமாக கூறப்பட்டுள்ளது.மனிதனின் முரண்பாடுகள் தெளிவாக தெரிகிறது.

    முதிர்கன்னியான முத்தமா தனக்கு இனி எந்த ஆணும் வரப்போவது இல்லையென்ற நினைப்பின் உச்சம் ஒரு ஆண் நாகத்தின் மீது மையல் கொள்ள வைக்கிறது.அதுவே அவளது இதயத்தில் ஆழ பதிகிறது.ஆகையால் எந்த ஆணும் தனது நாகத்திடம் வென்று ஜெயிக்க முடியாது என்று நம்புகிறாள்

    தோட்ட மக்களிடம் தவறான நம்பிக்கை ஏற்படுத்திய குற்ற மனப்பான்மை காசி என்ற சாமியாரை வாட்டுகிறது.வாந்தி எடுக்கும் போது கஷ்டமாக இருக்கும். ஆனால் எடுத்தவுடன் ஒரு நிம்மதி ஏற்படும் என்று பக்கிரியிடம் கூறும் போது ஒரு முற்றுப்புள்ளி வைக்க நினைக்கிறார்.ஆனால் இந்த நம்பிக்கை தொடர வேண்டும் என்று பக்கிரிக்கு தோன்றுகிறது. இதுவே காசி சாமியாரின் இரண்டாவது மரணத்துக்கு காரணம் ஆகிறது.சில நம்பிக்கைகள் சாக கூடாது சில உண்மைகள் உறங்கியே இருக்க வேண்டும் என்பது தானே எழுதப்படாத விதி.தோழர் நவீன் அருமையான ஒரு சிறுகதையை தந்து இருக்கிறார். இதில் மறைந்து கிடக்கும் சில அரசியலை அலச முடிகிறது. வாழ்த்துகள் மற்றும் நன்றி நவீன்

  2. Kalaishegar
    November 9, 2017 at 8:27 am

    *நாகம்: எமது புரிதலில்*

    கதையில் நிஜ நாகங்களும் உண்டு…
    மோக நிஜங்களும் உண்டு!

    இரண்டு பரிமாணத்தில் நாகம் நகர்கிறது. மரணப்படுக்கையில் சாமியாக காசி. முத்தம்மாவின் படுக்கையில் காசியாக சாமி.

    ஊரை ஏமாற்ற நாகத்தின் பேரில் பேதியைக் கிளப்பி, சாமியின் பேரில் தொடர்ந்திருந்த உறவை/உண்மையைச் சொல்லிவிட முனைகையில்…அச்சாமியை முடித்துவிட்டு, இச்சாமியாகும் பக்கிரி.

    கதையில் மனதை விட்டு நீங்காமல் படமாடும் விடயங்கள் பல. காட்டுப்பன்றியின் கடியால் ஒருகாதை இழந்த நாயின் பெயர் கொம்பன். சாமியின் உடல் நிலையை உணர்த்தும் நாட்டு மருத்துவ நெடிகள். ஆசைகளை அடைந்துக்கொள்ள காசியும் முத்தம்மாவும் கைமாற்றிக்கொள்ளும் உவமைகள்…என்று தனது படைப்பின் தரத்தை மேலும் ஒரு படி உயர்த்தியுள்ளார் நவீன்.

    நாகத்தைப் புரிந்துக்கொள்ள எமக்கு ஒரு வாரமானது. வாசிப்பவருக்கு வேலைக்கொடுக்கும் யுக்திமிக்க படைப்பு. புரியாதவர்களுக்கு நாகம் மட்டும் படமெடுத்து ஆடும். அந்த ஆட்டம் சாதாரணமாய் தோன்றும்.
    உன்னிப்பாகத் தேடுபவருக்கே அந்த ராஜ நாகம் காட்சி தரும்.

    நன்றி.

    கலைசேகர்

  3. ஸ்ரீவிஜி
    November 28, 2017 at 11:28 am

    மனிதன் சாகும்போதுதான் எல்லா அசிங்கங்களையும் நினைத்து குமட்டுகிறான். குமட்டுகிறதையும் வாளியில் பிடித்துவைத்து வருடக்கணக்காக வணங்கிவந்தாலும் ஆச்சிரியப்படுவதற்கில்லை காரணம் உயிர் `பக்கி’கள் வாழவேண்டுமே.!
    நல்ல புரிதலைக்கொடுத்த வாசிப்பு அனுபவம்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...