தோங் ஜியாவ் ஸோங் : மலேசிய சீனர்களின் வரலாற்றின் ஊடே ஓர் அறிமுகம்

04மலேசியாவில் அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து இயங்கி வரும் ‘தோங் ஜியாவ் ஸோங்’ என்பது மலேசிய சீனக் கல்வி இயக்கமாகும். இன்றும் இந்நாட்டில் நாம் தொடர்ந்து தாய்மொழிக் கல்வியைப் பெறுவதற்கான வாய்ப்பை நிலைநிறுத்திய அமைப்பு இதுவாகும். மலேசிய அரசியல் வரலாற்றில் மட்டுமின்றி மலேசியக் கல்வி வரலாற்றிலும் மிக முக்கியமானதோர் இயக்கமாக தோங் ஜியாவ் ஸோங் இயக்கம் திகழ்கிறது. ஆக, இக்கட்டுரையானது வாசகர்களுக்கு இவ்வியக்கம் தொடர்பான வரலாற்றையும் அதன் செயல்பாடுகளையும் குறித்து அறிமுகம் செய்யும் விதமாக அமைகிறது.

மலேசிய சீனர்களும் சீனப் பள்ளிகளும்

மலேசிய வரலாற்றில் சீனர்களின் வருகையும் இந்தியர்களின் வருகையும் மலேசிய தோற்றத்தை முற்றிலும் மாற்றியமைத்தது. பதினெட்டாம் நூற்றாண்டில் இந்தியர்கள் கூலித் தொழிலாளர்களாகவும் சீனர்கள் சுரங்கத் தொழிலாளர்களாகவும் (ஒப்பந்த தொழிலாளிகள்) ஆங்கிலேயர்களால் மலாயாவிற்கு அழைத்து வரப்பட்டனர். இந்தியர்கள் கரும்புத் தோட்டங்களையும் பின்னர் இரப்பர் தோட்டங்களையும் உருவாக்க காடுகளில் விடப்பட்டனர். அவர்கள் முற்றிலும் ஆங்கில முதலாளிகளின் கட்டுப்பாட்டிலும் கங்காணிகளின் மேற்பார்வையிலும் வாழ்ந்தனர். அவர்களுக்கான அடிப்படைத் தேவைகளான ஆரம்பக் கல்வி, கோயில் போன்றவற்றை ஏற்படுத்திக் கொள்ள ஆங்கில முதலாளிகள் அனுமதித்தனர். ஆகவே மிக எளிய முறையில் தமிழ்ப் பள்ளிகளும் சில கோயில்களும் நிர்மாணிக்கப்பட்டன. அவை தோட்டப்புறத்து பாட்டாளிகளின் பிள்ளைகளுக்கு அடிப்படைத் தமிழ்க் கல்வியை மட்டும் கொடுத்தன. தோட்ட பாட்டாளிகள் தோட்டங்களை விட்டு வெளியேறாமல் இருக்கும் பொருட்டு ஆயக்கூடம், பள்ளிக்கூடம், கோயில், கள்ளுக்கடை போன்ற அடிப்படைத் தேவைகளை அவர்கள் வாழும் இடங்களுக்கு அருகிலேயே அமைத்துக் கொடுப்பதை ஆங்கில முதலாளிகள் தயக்கம் இன்றிச் செய்தனர்.

இந்தியர்கள் இந்தியாவை விட்டு வெளியேற பல காரணங்கள் இருந்ததுபோல சீனர்களும் சீனாவை விட்டு வெளியேறச் சில காரணங்கள் இருந்தன. சிங் பேரரசுவின் (Qing Dynasty) பலவீனமும் அதற்கு எதிரான மக்கள் எதிர்ப்பு அதிகரிப்பும், அந்நிய சக்திகளின் தலையீடும் சீனர்கள் தென்கிழக்காசியப் பகுதிகளுக்கு இடம்பெயர மூல காரணங்களாக அமைந்தன.

ஆனால், சீனர்கள் ஈயச் சுரங்கங்களில் குத்தகை முறையில் பணி செய்ததாலும் நகர்புறங்களைச் சார்ந்து வாழ்ந்ததாலும் அவர்களின் வாழ்க்கை பெரிதும் பொருளாதார சுயசார்பு கொண்டிருந்தது. குறிப்பாக மலாயாவில் அச்சமயம் சுரங்கத் தொழிலுக்கும் துறைமுகத்திலும் வேலையாட்களின் தேவை அதிகரிக்க அதிகமானோர் மலாயாவிற்கு குடிபெயர்ந்தனர். யாப் ஆ லோய் போன்ற முதலாளிகள் ஈயச் சுரங்க தொழிலிலும் நகர நிர்மாணப் பணிகளிலும் மலாயாவில் முன்னோடிகளாக இருந்தனர். அவர்கள் உள்ளூர் மலாய்த் தலைவர்களுடன் கூட்டு ஒப்பந்தங்களின் வழி தங்கள் தொழிற்துறையில் முன்னேறினர்.  ஈயச் சுரங்கத்தில் தொழிலாளர்களாக செயல்பட்டுக்கொண்டிருந்தவர்கள் பிற்காலத்தில் வியாபாரிகளாகவும் வணிகர்களாகவும் உயர்ந்து பொருளாதார ரீதியில் தங்களை நடுவர்க்க சமூகமாக மேம்படுத்திக்கொண்டனர். சீனர்கள் மலாயாவிற்கு குடிபெயர்ந்தாலும் அவர்கள் தாய்நாட்டுடனான உறவை இறுக்கிப் பிடித்திருந்தனர். அதன் வாயிலாக அவர்கள் தங்களது அடையாளத்தை கலாச்சாரம், பண்பாடுகள் மூலமாகவும் நிறுவினார்கள்.

1920 – 1930க்கும் இடையில் அதிகமான சீனர்கள் மலாயாவிற்கு குடி பெயரத் தொடங்கினர். இக்காலக்கட்டத்தில் சீனப் பெண்களின் குடி பெயர்வு சீனர்களிடையே திருமணத்தை அதிகரித்தது. அதன் வாயிலாக மலாயாவில் இரண்டாம் தலைமுறை சீனர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. அவர்களது பிள்ளைகளின் கல்வித் தேவைக்காகவும் நலனுக்காகவும் சீனச் சமூக அமைப்புகள் (Sehtuan) சீனப் பள்ளிகளை இந்நாட்டில் அமைத்தன. இவ்வமைப்புகள் சீன நாட்டின் கல்வி, கலாச்சாரம், பாரம்பரியத்தை மக்களிடையே இணைக்கும் பாலமாக இருந்திருக்கின்றன. 1949-இல் ஆயிரத்து ஐநூறுக்கும் அதிகமான சீனச் சமூக அமைப்புகள் மலாயாவில் காலனித்துவ ஆட்சியின்போது இருந்திருக்கின்றன.

சீனப் பள்ளிகள் இளைய தலைமுறையினரின் சமூக அரசியலின் ஒரு பகுதியாக விளங்கியுள்ளது. சீனப் பள்ளிகளுக்காகப் பணம் படைத்த வியாபாரிகளும் வணிகர்களும் வழங்கும் நன்கொடை அல்லது நிதியுதவி அவர்களின் சமூக மற்றும் அரசியல் அந்தஸ்தை உயர்த்தியது. சீனர்கள் அவர்களது பேச்சு மொழியாலும் (Dialects), பண்பாடு, கலாச்சாரம் மற்றும் அரசியல் கொள்கைகளால் வேறுபட்டாலும் கன்பூசிய கொள்கைகளின் (Confucian) உணர்வாலும், கல்வியின் வழி பெறப்படும் அறிவு மட்டுமே தம் பிள்ளைகளுக்கு முன்னேற்றகரமான வாழ்க்கையை வழங்கும் என்ற நம்பிக்கையாலும் ஒன்றிணைந்து செயல்பட்டனர். அவர்கள் தங்களுக்கான பள்ளிகளையும் பண்பாட்டு மையங்களையும் ஏற்படுத்திக்கொள்ள சுயமாக பல முயற்சிகளை எடுத்தனர்.

ஆங்கிலேயரின் காலனித்துவ ஆட்சியில் ஆங்கிலேய அதிகாரிகளின் நன்மதிப்பையும் ஜெபி போன்ற சிறப்பு விருதுகளையும் பல சீன இனத் தலைவர்கள் பெற்றிருந்தனர். அவர்கள் தங்கள் சொந்தச் செலவிலும் மக்கள் நன்கொடையிலும் பல சீனப் பள்ளிகளைப் நகர்புறங்களில் தொடங்கினர். ஆங்கிலேய அரசு அதை சீனர்களின் சொந்த விவகாரமாகவே கருதியது.

ஆங்கிலேயரின் பிரித்தாளும் போக்கு மலாயாவின் பல்லினங்களையும் இன வாரியாக தனித்திருக்கச் செய்தது. அவர்கள் இனக்குழு உணர்வுடன் பிற இனங்களிடையே மெல்லிய பகை உணர்ச்சியோடு எப்போதும் இருப்பதை ஆங்கில ஆட்சியாளர்கள் கவனித்துக் கொண்டனர்.

இதன் காரணமாக சீனர்கள் அவர்களுடைய பள்ளிகளை மேம்படுத்தவும் அதன் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் பள்ளிகளைத் தொடர்ந்து நடத்தவும் நிதிப்பற்றாக்குறையை எதிர்நோக்கிய போதும் மிகவும் பிடிவாதமாக அவற்றை தொடர நடவடிக்கைகள் எடுத்தனர்.  மாநில வர்த்தகச் சபையில் உறுப்பியம் பெற்றிருந்த வியாபாரிகளும் வர்த்தகர்களும் நிதியுதவி வழங்கியதோடு பள்ளிகளுக்கு இடமாக கடைவீடுகளையும் நிலங்களையும் வழங்கினர். அதுமட்டுமல்லாது சீனாவிலிருந்து ஆசிரியர்களைக் கொண்டு வருவதற்கு வேண்டிய செலவுகளையும் அவர்கள் ஏற்றனர். இதன் மூலமாக அவர்கள் பள்ளிகளின் நிர்வாகக் குழுவில் உறுப்பியம் பெற்றனர். பள்ளியின் பாடத்திட்டங்கள் முதல் ஆசிரியர்களின் பணி மற்றும் ஊதியம் வரை  முடிவெடுக்கும் பொறுப்பை அவர்கள் பெற்றிருந்தனர்.

சீன நாட்டு அரசியலின் மாற்றம் சீனர்களை குடும்பத்துடன் மலாயாவிலேயே நிரந்தரமாகத் தங்கச் செய்தது. அவர்கள் தங்களது வியாபாரம், வணிகத்துடன் அரசியல் தொடர்புகளையும் மேம்படுத்திக் கொண்டனர். பல்லின சமூகத்தில் இணைந்து வாழ ஆரம்பித்தனர்.

மூன்றரை ஆண்டுகள் ஜப்பானிய ஆட்சிக் காலத்திற்குப் பிறகு மலாயா மீண்டும் பிரிட்டிஷ்05 அரசாங்கம் வசமானது.  தன்னாட்சியை நோக்கி நகர்த்திச் செல்லும் விதமாக ‘மலாயான் யூனியன்’ பிரிட்டிஷ் அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது. ‘மலாயான் யூனியன்’ மலாயாவில் பிறந்த சீனர்களுக்கும் இந்தியர்களுக்கும் முழு குடியுரிமையை வழங்கியது. சுல்தான்களின் அதிகாரத்தை முடக்கியது. மலாய் சமூகத்திற்குள் அது மிகப் பெரிய அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது. அதன் விளைவு மலாய்க்காரர்கள் ஓன் ஜஃபார் தலைமையில் ‘அம்னோ’வைத் தோற்றுவித்தனர். அம்னோவின் வாயிலாக மலாய்க்காரர்கள் ‘மலாயான் யூனியனை’ கடுமையாக எதிர்த்தனர். மலாய்க்காரர்களின் எதிர்ப்பை அடுத்து பிரிட்டிஷ் அரசாங்கம் மலாயன் யூனியனுக்கு மாற்றாக மலாயா அரசியலமைப்புச் சட்டத்தை 1948 (Federation of Malaya – Persekutuan Tanah Melayu) அறிமுகப்படுத்தியது. அது மலாய்க்காரர்களின் சிறப்பு அங்கீகாரத்தையும் அரசியல் அதிகாரத்தையும் மீட்டுக்கொடுத்தது. குடியுரிமைச் சட்டத்தை மேலும் கடுமையாக்கியது. அது சீனர்களுக்குப் பெரும் இடியாக அமைந்தது. சீனர்களின் தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் அதனால் பாதிக்கப்பட்டனர்.

1947- இல் பலவீனமடைந்திருந்த மலேசிய கம்யூனிச கட்சிக்கு சின்பெங் தலைமையேற்று சீனாவில் நடந்தேறிய மாவோ புரட்சியின் அணுகுமுறையைப் பயன்படுத்தி கட்சியை மீண்டும் பலப்படுத்தினார். மலேசிய கம்யூனிசக் கட்சியில் அங்கத்துவம் பெற்றிருந்தவர்கள் பெரும்பாலானோர் சீனர்கள். அவர்கள் தங்களுடைய சித்தாந்தத்தைப் பரப்புவதற்கு சீனப் பள்ளிகளைப் பயன்படுத்திக்கொண்டனர். ஆனால் பிரிட்டிஷ் அரசாங்கமோ மலேசிய சீனர்கள் எல்லாரையுமே கம்யூனிச ஆதரவாளர்களாக எண்ணியது. கம்யூனிசத்தை கட்டுப்பாட்டில் கொண்டுவர, பிரிட்டிஷ் ஜெனரல் ஹரோல்ட் பிரிக்ஸ் (British General Sir Harold Briggs) ‘பிரிக்ஸ் திட்டத்தை’ (Briggs Plan) அமல்படுத்தினார். இத்திட்டத்தின் வாயிலாக நானூற்று எழுபதாயிரம் சீனர்களைப் புதிய குடியிருப்பு பகுதியில் குடி அமர்த்தினர். அதேநேரத்தில் முப்பதாயிரம் கம்யூனிச ஆதரவாளர்கள் சிறையில் தள்ளப்பட்டனர். பதினைந்தாயிரம் பேர் மீண்டும் சீனாவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டனர். அவர்களில் பெரும்பாலோர் சீனப்பள்ளித் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களாவர்.

சீனக் குடியரசின் கம்யூனிச அரசாங்கம் தங்களது சொத்துக்களைக் கையடக்கப்படுத்திவிடும் என்ற பயத்தில் சீனாவைக் கடந்து வாழும் சீனர்கள் தங்களது சொத்துக்களையும் வியாபாரத்தையும் காப்பாற்றிக் கொள்ள சீனாவின் கம்யூனிச அரசாங்கத்திற்கு ஆதரவு அளிக்கவில்லை. மலாயாவில் வாழும் சீனர்களுக்கும் சீன அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இல்லாததால் அவர்கள் வேறுவழியின்றி மலாயாவையே தங்களது இருப்பிடமாகவும் சொந்த நாடாகவும் ஆக்கிக்கொண்டனர்.

02மலாயா சீனர்களை ஒன்றுபடுத்த திரு. தான் செங் லோக் சீன சமூகத்தின் பலதரப்பட்ட அமைப்புகளின் ஆதரவோடு ‘மலேசிய சீனர் சங்கத்தை (மசீச) பிப்ரவரி 27 ஆம் நாள் 1949-இல் தோற்றுவித்தார். சீனர்களின் ஆதரவை மீட்டெடுக்க மசீச அவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்தது. ஆகஸ்ட்,1951இல் அம்னோவின் தலைவரான துங்கு அப்துல் ரஹ்மான், 1952இல் மசீசவையும், 1954இல் மஇகாவையும் ஒன்றிணைத்து பல்லின அரசியல் கூட்டணியைத் தோற்றுவித்தார். இக்கூட்டணியானது மலேசியாவின் தேசிய அரசியலின் தொடக்கமாக அமைந்தது. மூவின மக்களின் ஒத்துழைப்போடு உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு முன்னோடியாக திகழ்ந்த துங்குவும் தான் செங் லோக்கும் புதிய அரசாங்கத்தை நிறுவினர்.

காலனித்துவ ஆட்சியிலிருந்து விடுதலையும் தன்னாட்சியையும் நோக்கி நகர்ந்து கொண்டிருந்த மலாயாவில் புதிதாகத் தோன்றிய பல சிக்கல்களை அவ்வளவாக கண்டுகொள்ளாத பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு மலாயாவின் கல்விக் கொள்கை சார்ந்து புதிய சிக்கல்கள் உருவானது. மலாய் மொழியை மலாயாவின் முதன்மை மொழியாகவும் மலாய்ப் பள்ளிகளின் கல்வி முறையில் மாற்றங்களைக் கொண்டு வருமாறும் மலாய்க்காரர்கள் கோரிக்கைகள் வைத்தனர். மாறாக சீனர்களும் இந்தியர்களும் பன்மொழி, பல்லின சமூகம் மற்றும் பல்லினக் கலாச்சாரத்தையே விரும்பினர். அவர்களது அடையாளமாக தாய்மொழிக் கல்வியைக் கருதினர்.

அதன் விளைவாக, எல்.ஜே.பார்னஸ் (L.J.Barnes) அவர்களின் தலைமையில் ஓர் ஆய்வுக்குழு ஜூலை, 1950இல் அமைக்கப்பட்டது. சீனச் சமூக இயக்கங்கள் கொடுத்த தொடர் அழுத்தங்கள் காரணமாக, சீனக் கல்வி குறித்த கருத்துக்களை அறிய ஃபேன்-வூ (Fenn-Wu) ஆய்வுக்குழு நியமிக்கப்பட்டிருந்தது. ஃபேன்-வூ ஆய்வுக்குழுவுக்கு வெளிநாட்டவர்களான டாக்டர் வில்லியம் ஃபேன் (Dr. William Fenn) மற்றும் டாக்டர் வூ தே யாவ் (Dr. Wu The-yao) பொறுப்பேற்றிருந்தனர்.

1951ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் பார்னஸ் அறிக்கையும் ஜூலை மாதத்தில் ஃபேன்-வூ அறிக்கையும் வெளியிடப்பட்டன. பார்னஸ் அறிக்கையில் சீனம் மற்றும் தமிழ்க்கல்விக்கான பரிந்துரைகள் ஏதுமில்லை. அதற்கு மாறாக, மலாயாவில் செயல்பட்டுக் கொண்டிருந்த தாய்மொழிப் பள்ளிகள் படிப்படியாக மலாய்ப் பள்ளிகளாக மாற்றம் பெற வேண்டுமெனப் பரிந்துரைக்கப்பட்டது. அதனை மலாய்க்காரர்கள் வரவேற்றனர். ஆனால் சீனர்களும் இந்தியர்களும் அதிருப்தியடைந்தனர். அவர்கள் பார்னஸ் அறிக்கையைக் கடுமையாக எதிர்த்தனர்.

மாறாக, ஃபேன்-வூ அறிக்கை சீனப் பள்ளிகள் மலாயாவில் தொடர்ந்து நீடித்திருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியதோடு மட்டுமல்லாது பல்லினம் கொண்ட மலாயாவில் ஒரே மொழி அல்லது இரு மொழி பாடத்திட்டத்தை அமல்படுத்துவதில் உள்ள ஆபத்தும் எச்சரிக்கப்பட்டிருந்தது.

தோங் ஜியாவ் ஸோங் அமைப்பின் தோற்றமும் வளர்ச்சியும்

பார்னஸ் கல்வி அறிக்கையை எதிர்த்து அப்போதைய கோலாலம்பூர் சீன ஆசிரியர் சங்கத்தின் 03(Kuala Lumpur Chinese School Teachers’ Association) தலைவரான லிம் லியோன் கியோக் தலைமையில் கல்வியாளர்கள் ‘PAN – Malayan Chinese Teachers Meeting’ எனும் கூட்டத்தை நடத்தினர். அதன் விளைவால் ஐக்கிய சீனப் பள்ளி ஆசிரியர் சங்கம் (The United Chinese School Teacher Association – Jiao Zong) டிசம்பர் மாதம் 1951-இல் தோற்றம் கண்டது. சீனக் கல்வியைத் தற்காப்பதும், சீனக் கலாச்சாரத்தை ஊக்குவிப்பதும், சீன ஆசிரியர்களின் நலன்களைப் பாதுக்காப்பதும் ஜியாவ் சோங்கின் ஆரம்ப நோக்கங்களாக அமைந்தன. திரு. லிம் லியான் கியோக்கின் தலைமைத்துவத்தின் கீழ் சீன ஆசிரியர்கள் தொடர்ந்து பார்னஸ் அறிக்கையைக் கடுமையாக எதிர்த்தனர். சீனக் கல்வியை நிலைநிறுத்துவதற்கான போராட்டத்தை லிம் லியோன் கியோக் தொடர்ந்தார்.

மலாயாவின் விடுதலைக்கு முன்பாக நாட்டின் முதல் பொதுத்தேர்தல் 1955-இல் நடக்கவிருந்தது. 1952ஆம் ஆண்டில் அமலாக்கத்திற்கு வந்திருந்த கல்விச் சட்டத்தின் (1952 Education Ordinance) தாய்மொழிக் கல்விக்கு எதிரான நியாயமற்ற போக்கு சீனர்களின் எதிர்ப்பை மேலும் கடுமையாக்கியது. துங்கு அப்துல் ரஹ்மானின் தலைமையிலான கூட்டணியின் வெற்றிக்கு அது பெரும் சவாலாக இருந்தது. தேர்தலில் கூட்டணியின் வெற்றி குறைந்தால், விடுதலைப் பேச்சுவார்த்தை பாதிப்படையும் என்பதை துங்கு உணர்ந்தார். இந்த இக்கட்டான நிலையில், துங்குவும் ஜியாவ் சோங் அமைப்புக்குத் தலைமையேற்றிருந்த திரு. லிம் லியோன் கியோக்கும் சந்திக்க ஏற்பாடு ஆனது. மசீசவின் தலைவர் தான் செங் லோக்கின் மலாக்கா இல்லத்தில் 12 ஜனவரி 1955-இல் துங்கு அப்துல் ரஹ்மானுக்கும் லிம் லியோன் கியோக்கும் இடையே சந்திப்பு நடந்தது. இந்தச் சந்திப்பை ‘Maliujia Huitan’ (Malacca Meeting) என்பார்கள். அதுவரை மலாயாவிற்கு சீனம், மலாய், ஆங்கிலம், தமிழ் ஆகிய நான்கு மொழிகளும் தேசிய மொழிகள் என போராடிய லிம் லியோன் கியோக், அச்சந்திப்பின்போது துங்கு அப்துல் ரஹ்மான் தாய்மொழிக் கல்வியை நிலைநிறுத்தும் கோரிக்கையை ஏற்கவும் பார்னஸ் அறிக்கையை கைவிட வைக்கவும் போராடினார்.

தமது கோரிக்கைக்கு துங்குவின் பதில் கோரிக்கை லிம்மை சமரசம் காணச் செய்தது. தேர்தல் வரை தேசிய மொழிகள் குறித்து கேள்விகள் எழுப்பக்கூடாது எனவும், 1952 கல்விச் சட்டம் நீக்கப்படுமெனவும் அதோடு சீனப் பள்ளிகளுக்கு இரண்டு மில்லியன் டாலர் நிதியுதவியாக வழங்கப்படுமெனவும் துங்கு அப்துல் ரஹ்மான் வாய்மொழி உத்தரவாதம் அளித்தார். லிம்மின் இந்நடவடிக்கை சீனர்களின் விமர்சனத்திற்கு உள்ளானது.

1955 தேர்தலில் 52இல் 51 தொகுதிகளை வெற்றிகொண்டது துங்குவின் கூட்டணி. துங்குவின் வாய்மொழி உத்தரவாதத்தின்படி, அப்போதைய கல்வி அமைச்சரனான டத்தோ அப்துல் ரசாக் தலைமையில் பதினான்கு பேர் கொண்ட குழுவினருடன் ஆகஸ்ட் 1955-இல் கல்வி மறு ஆய்வுக் குழு அமைக்கப்பட்டது. அதன் வழியாக மலாய், ஆங்கிலம், தமிழ், சீனப் பள்ளிகள் நிலைநிறுத்தப்பட்டன. ஆயினும், ரசாக் கல்வி அறிக்கையில் எல்லா வகைப் பள்ளிகளுக்கும் பொதுவான ஒரே கலைத்திட்டமும் மலாயா பின்னணியைக் கொண்ட பாடநூல்களின் தயாரிப்பும் பயன்பாடும் வலியுறுத்தப்பட்டது. தொடக்கப்பள்ளி ஆசிரியர் பயிற்சிக்கான கல்வித் தகுதியும் உயர்த்தப்பட்டது. ஆனாலும் ரசாக் கல்வி அறிக்கையின் ஆரம்ப நகல், மெல்ல மெல்ல ஒரே மொழிப் பள்ளியைக் கொண்டு வரும் இறுதி இலக்கைக் (Ultimate objective) கொண்டிருந்தது.

தோங் ஜியாவ் ஸோங் அமைப்பானது அடிப்படையில் இரண்டு அமைப்புகளின் ஒருங்கிணைவாகும். ஒன்று, மலேசிய ஐக்கிய சீனப் பள்ளி ஆசிரியர் சங்கம் [The United Chinese School Teacher Association of Malaysia (ஜியாவ் சோங்)]. மற்றொன்று, மலேசிய ஐக்கிய சீனப் பள்ளி நிர்வாக உறுப்பினர் சங்கம் [The United Chinese School Committees’ Association of Malaysia (தோங் ஸோங்)]. புதிய கல்விக் கொள்கைகளின் அச்சுறுத்தலால், அரசாங்கத்திற்குப் பதிலளிக்கும் விதமாக ஜியாவ் சோங் அமைப்பு தோற்றம் கண்டபின் மாநில நிலையிலான அனைத்து பள்ளிக்கூட நிர்வாக செயற்குழுக்களும் ஒரு குடையின் கீழ் இணைந்து செயல்பட தோங் ஸோங் அமைப்பு 1954-இல் தோற்றம் கண்டது. பிறகு, இவ்விரண்டு இயக்கங்களும் கூட்டாக இணைந்த பின் ‘தோங் ஜியாவ் ஸோங்’ என அதிகாரப்பூர்வமாக இயங்கியது.

மலேசிய தேசிய உருவாக்கத்திற்கு தாய்மொழிப் பள்ளிக்கூடங்கள் தடையாக இருப்பதாக விவாதங்கள் தொடர்ந்தன. மலேசியா தொடர்ந்து அம்னோ தலைமையிலான கூட்டணி அரசாங்கத்தால் ஆட்சி செய்யப்படுகிறது.  அரசாங்கத்தில் மலாய்க்காரர்களின் ஆதிக்கம் வலுவாக இருப்பதால், பொதுவாக தாய்மொழிக் கல்விக்கு குறிப்பாக சீனக் கல்விக்கு தொடர்ந்து இடையூறுகள் வருவது இயல்பாகியது. தோங் ஜியாவ் ஸோங் இயக்கம் அவற்றை எதிர்த்துப் போராடியது. பொதுவில் தோங் ஜியாவ் ஸோங் இயக்கத்திற்கு சீனர்களிடமிருந்து பெரும்பான்மையான ஆதரவு கிடைத்துக்கொண்டிருந்தது. ஆகவே அது அரசியல் முக்கியத்துவம் பெறுவதும் தவிர்க்க முடியாததாகியது.

சீன மக்களின் ஆதரவை பெற, சீன அரசியல் கட்சிகள் தங்கள் கவனத்தைச் சீனப் பள்ளிகளின் மீதும் சீன மொழி வளர்ச்சியின் மீதும் எப்போதும் குவித்திருக்கும் நிலை உருவானது. தேசியக் கல்வித் திட்டத்தில் சீனப் பள்ளிகள் (ஆரம்பப் பள்ளிகள், இடைநிலைப் பள்ளிகள், உயர்கல்வி நிலையங்கள்) முறையான அங்கீகாரத்தைப் பெறுவதற்கு தோங் ஜியாவ் ஸோங் இயக்கம் போராடியது. இதனால் இறுதியில் அரசாங்கம் வேறுவழியின்றி சீனப் பள்ளிகளைத் தேசிய கல்வித் திட்டத்தில் இணைத்துக் கொண்டது. சீன ஆரம்பப் பள்ளிகள் தேசிய வகைத் தொடக்கப் பள்ளிகளாக மாறின. மலாய் மொழியும் ஆங்கில மொழியும் கட்டாய பாடமாக்கப்பட்டன.

ரசாக் கல்வி அறிக்கையின் அமலாக்கத்தை ஆய்வு செய்த ரஹ்மான் தாலிப் அறிக்கை 1961-ஆம் ஆண்டு கல்விச் சட்டமாக அங்கீகரிக்கப்பட்டது. இச்சட்டத்தின் விதிமுறைக்கேற்ப, தேசிய நிலையில் 70இல் 54 சீன சுயாட்சி இடைநிலைப் பள்ளிகள் தேசிய திட்டத்தோடு ஒருங்கிணைக்கப்பட்டன. மற்ற 16 இடைநிலைப் பள்ளிகளும் சீன சுயாட்சி இடைநிலைப் பள்ளிகளாகத் தொடர்ந்தன. அவை சீனமொழியைப் போதனைமொழியாகவும் தொடர்பு மொழியாகவும் கொண்டிருந்தன. அனைத்து தேசியப் பள்ளிகளும் தனியார் பள்ளிகளும் கல்வி அமைச்சின் ஒருங்கிணைந்த பாடத்திட்டத்தைப் பின்பற்றின.

1950, 1960களின் காலக்கட்டத்தில் தோங் ஜியாவ் ஸோங் இயக்கத்தால் சீனப் பள்ளிகளின் அசல் தன்மைகளைப் பேணிக் காக்கும் அதன் நோக்கத்தை அடைய இயலவில்லை. தான் செங் லோக்கின் மறைவுக்குப் பிறகு மசீசவுடனான உறவும் அவ்வளவு சுமுகமாக இல்லை. மசீச அம்னோவுடன் இணைந்து அணுக்கமாகச் செயல்பட்டது. மசீசவின் சீனக் கல்வி தொடர்பான செயல்பாடுகள் அனைத்தும் அரசாங்கத்தின் சார்பாகவே நடைபெற்றன. அதனால் மலேசிய சீனக் கல்வி இயக்கத்தின் செயல்பாடுகளுக்கு மசீசவிடமிருந்து ஆதரவு இல்லாமல் போனது. அம்னோவுடனான மசீசவின் நெருக்கமான உறவால் மலேசிய சீனக் கல்விக்கு ஆபத்து இருப்பதாகவும் அது சீனப் பள்ளிகளின் அசல் தன்மைகளை மாற்றியமைக்கூடுமென சீனக் கல்வி இயக்கம் தனது அச்சத்தை மக்களிடம் வெளிப்படுத்தியது. சீனர்கள் தங்களது கலாச்சாரம் சீனப் பள்ளிகளால்தான் காக்கப்படுவதாக உறுதியாக நம்பினர். அதன் காரணமாக சீன சமூகத்தின் பலமான ஒத்துழைப்புடன் சீனக் கல்வி இயக்கம் நாடு தழுவிய நிலையில் சீனப் பள்ளிகளுக்கிடையிலான தொடர்பை 1960க்குப் பிறகு தீவிரமாக மேம்படுத்தியது.

இவ்விடத்தில், தோங் ஜியாவ் ஸோங் இயக்கம் சீனப் பள்ளிகளின் மீதும் சீனக் கல்வியின் மீதும் மிகத் தீவிரமாக ஈடுபடுவதன் பின்னனியை வரலாற்றில் அண்டை நாடான இந்தோனீசியாவில் ஏற்பட்ட இன அத்துமீறல்களைப் படிப்பினையாக கொண்டும் உணரமுடியும். இந்தோனீசியாவில் டச்சு ஆட்சி அதிகாரம் குறைந்த காலகட்டம் தொடங்கி உள்ளூர் மக்களுக்கு சீன எதிர்ப்பு மனநிலை உருவாக்கப்பட்டு வளர்க்கப்பட்டது. சீனர்கள் தேசிய நலனில் அக்கறையற்ற சுயநலவாதிகள் என்ற தோற்றம் பல சம்பவங்களால் கட்டியமைக்கப்பட்டது.

அந்த வெறுப்புணர்வு, இந்தோனீசியப் புரட்சியின்போது பூதகரமாக உருவெடுத்து இனப் படுகொலைகள் நடக்கக் காரணமாகியது. பிறகு மலர்ந்த சுதந்திர இந்தோனீசிய ஆட்சியில் சீன இனத்தின் அடையாளம் முற்றாக அழிக்கப்பட்டது. தேசியவாதிகளின் கோரிக்கைக்கு முன்னுரிமை கொடுத்து அரசாங்கம் சிறுபான்மை மக்களின் மொழி இன பண்பாட்டுச் சுதந்திரத்தை நசுக்கியது. சுகார்த்தோ ஆட்சியில் சீன நாளிதழ் முதல் சீனத்தில் பிள்ளைகளுக்குப் பெயரிடுவது வரை தடைசெய்யப்பட்டது. ஊடக ஒளி/ஒலி பரப்புகளுக்கு மாண்டரின் மொழி தடை செய்யப்பட்டது.

ஆகவே மலேசியச் சீன இனப்பற்றாளர்கள் மலேசியாவிலும் இனஅரசியல் காரணங்களாலும் தேசியவாதக் கருத்துகளாலும் தங்கள் அடையாளம் அழிக்கப்படக்கூடும் என்ற அச்ச உணர்வில் இருந்தனர் என்பதை உணரலாம். அதே காலகட்டத்தில் மலேசியாவில் நடந்த மே கலவரம் (1969) மலாய்காரர்களுக்கும் சீனர்களுக்கும் இடையே இருந்த பகை உணர்வைப் பெரியதாக்கியது. இனங்களுக்கிடையே பொருளாதார இடைவெளியோடு புரிந்துணர்வு இடைவெளியும் அதிகரித்தது. இக்காலகட்டத்தில் தாய்மொழிப் பள்ளிகள் இன ஒற்றுமைக்கு குந்தகம் செய்கின்றன என்ற குற்றச்சாட்டு பெரிதும் பேசப்பட்டது. இனங்களிடையே ஒற்றுமையை உருவாக்கவும் ‘முஹிபா’ பண்பாட்டை வளர்க்கவும் தேசியப் பள்ளிகளின் முக்கியத்துவம் அதிகம் வலியுறுத்தப்பட்டது. ஆகவே இன இயக்கவாதிகள் மொத்த சீன மக்களுக்கும் இயக்க அடிப்படையில் இன உணர்வும் மொழி உணர்வும் ஊட்டுவதைக் கடமையாக கொண்டிருந்தனர். அதன்வழி இந்நாட்டில் சீனப்பள்ளிகளும் சீன மொழியும் அழியும் ஆபத்தில் இருந்து காக்கப்படும் என்பதை அவர்கள் உறுதியாக நம்பினர்.

நிர்வாக மறுஆய்வும் அதன் சீரமைப்பும்

1970, 1980களின் காலக்கட்டத்தில் தோங் ஜியாவ் ஸோங் இயக்கத்தில் பள்ளிக்கூட நிர்வாக குழுக்கள் முக்கியப் பங்கு ஆற்றியதைப் பார்க்க முடிந்தது. கல்வி அமைச்சு பெரும்பாலான சீனப்பள்ளி ஆசிரியர்களுக்கு அரசாங்கப் பணியாளர் அந்தஸ்தை வழங்கியது. இதன் வாயிலாக சீனப் பள்ளி ஆசிரியர்கள் நிரந்தரமான ஊதியத்தையும் அரசு பணியாளர் நலத்திட்டங்களையும் அனுபவித்தனர். ஆனால்   அரசாங்கப் பணியாளர்கள் என்ற காரணத்தால் அவர்களுக்கு தோங் ஜியாவ் ஸோங் இயக்கத்தில் இணைந்து செயல்பட தடைவிதிக்கப்பட்டது. அந்நேரம் இயக்கத்திற்குள் இளையோர்கள் மற்றும் புதிய தலைவர்கள் நிர்வாக குழுவில் இடம்பெற்றிருந்தனர். அவர்கள் சீனக்கல்வி பிரச்சனையை அணுகுவதற்கு மாற்று உத்திகளைக் கையாண்டனர்.

அவர்கள் தேசியக் கல்வித்திட்டத்திலிருந்து விலகியிருந்த சீன சுயாட்சி கல்விக் கூடங்களுக்குத் தங்களது ஆதரவை வழங்கினர். 1973இல் தோங் ஜியாவ் ஸோங் இயக்கம் சிறப்பு செயற்குழுவை நிறுவியது. அதன் மூலமாக போட்டியாற்றல் மிக்க பாடத்திட்ட வரைவை சீன சுயாட்சிப் பள்ளிகளுக்குத் தயார் செய்தது. அது தவிர்த்து பாடப்புத்தகங்கள், விரிவான மற்றும் உயர்தரமான தேர்வுத்தாள் தயாரிப்பு, பள்ளிக்கூடங்களின் சிறப்புத் தேவைகளைப் பூர்த்தி செய்தல் என இச்செயற்குழு பல்வேறு ஆக்கரமான பணிகளுக்கு உட்படுத்தப்பட்டிருந்தது.

பொது பல்கலைக்கழகங்களில் படிக்க வாய்ப்பு கிடைக்காத ஏழை எளிய சீன மாணவர்களுக்கு உயர்க்கல்வி கற்க வாய்ப்பு வழங்கும் விதமாக 1970-இன் பிற்பகுதியில் தோங் ஜியாவ் ஸோங் இயக்கம் ‘மெர்டேக்கா பல்கலைக்கழகம்’ அமைக்க தனி நிதியைத் திரட்டுவதற்கான பிரச்சாரத்தையும் மேற்கொண்டது. ஆனாலும் பல்கலைக்கழகம் அமைப்பதற்கான மனுவை அரசாங்கம் நிராகரித்தது. ‘மெர்டேக்கா பல்கலைக்கழகம்’ சீனர்களுக்கு மட்டுமே அமைப்பதற்கான நோக்கமும் அதன் செயல்வடிவமும் நிராகரிப்பதற்கு முக்கியக் காரணமாக அமைந்தது. அரசாங்கத்தை எதிர்த்து ‘மெர்டேக்கா பல்கலைக்கழகம் பெர்ஹாட்’ நிறுவனம் வழக்கு தொடுத்து, அவ்வழக்கு நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.

அரசாங்கத்தின் கல்விக் கொள்கைகளை முன்வைத்து தோங் ஜியாவ் ஸோங் இயக்கம் விமர்சனத்தையும் கருத்துக்களையும் வெளியிட்டாலும் அரசாங்கம் அதனை ஒரு பொருட்டாக கருதவில்லை. மாறாக, அரசாங்கத்தின் மிகச் சிறந்த கல்விக் கொள்கையால் அனைத்து இன மாணவர்களையும் ஒன்றிணைக்க முடியுமென அரசாங்கம் எண்ணியது. தேசியப்பள்ளிகள் மலேசியர்களது தேர்வாக இருக்க வேண்டுமென்பதை அரசாங்கம் விரும்பியது. அதன் காரணமாக சீன மற்றும் தமிழ்ப்பள்ளிகளுக்கான நிதி விநியோகத்தைக் கட்டுப்படுத்தியது.

தோங் ஜியாவ் ஸோங் இயக்கத்திற்கும் மசீசவுக்குமான உறவு அம்னோவால் அவ்வளவு சுமுகமாக இல்லாதபோதும் சீனர்களின் மிகப் பெரிய அரசியல் கட்சியான மசீச சீனக்கல்விக்காக போராட வேண்டிய நிலை ஏற்பட்டது. அது மசீசவின் கடமையாகவும் அதேவேளையில் சுமையாகவும் இருந்தது. அம்னோவின் கூட்டணிக்கட்சியான மசீசவின் நடவடிக்கை அரசாங்கத்தை பாதிக்காத வகையிலேயே செயல்பட வேண்டியிருந்தது. மசீச அதன் தேவைகளை அரசாங்கத்திடமிருந்து பெறுவதில் குறைந்த அளவிலேயே வெற்றி கண்டுள்ளது. மசீசவின் செயல்பாடுகளையும் நடவடிக்கைகளையும் தோங் ஜியாவ் ஸோங் இயக்கம் கடுமையாக விமர்சித்தது மட்டுமல்லாது தனது எதிர்பார்ப்பையும் முன்வைத்தது. ஆகவே கூட்டணி உறுப்பு கட்சியாக இருந்து தேசியநலனில் அக்கறை செலுத்தும் அதே நேரத்தில் மசீச, சீன மக்களின் இனம் மற்றும் மொழி சார்ந்த கோரிக்கைகளுக்கும் முன்னுரிமை வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அதன் பலனாக, அரசாங்க ஆதரவுடன் துங்கு அப்துல் ரஹ்மான் கல்லூரியை முதன்முதலாக 1969 ஆம் ஆண்டு நிறுவியது. பிறகு, அக்கல்லூரி 1971களில் தீவிர விரிவாக்கம் கண்டதோடு புரவலரான மசீசவின் நேரடிப் பார்வையில் இயங்கியது. இக்கல்லூரி, புதிய பொருளாதர கொள்கையில் முக்கிய அம்சமான ‘இட ஒதுக்கீடு’ (Quata) முறையினால் பொது பல்கலைக்கழகத்தில் இடம் கிடைக்காத மாணவர்களுக்கு மேற்கல்வியைத் தொடர வாய்ப்பை வழங்கியது. ஆகவே, மசீச தான் சார்ந்த அரசியல் கூட்டணியின் வியூகமான இட ஒதுக்கீட்டு பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காண முடியாவிட்டாலும், சீன மக்களின் வெறுப்பை சம்பாதிப்பதில் இருந்து ஓரளவு தப்பித்தது என்று கூறலாம்.

அதோடு மசீசவின் தொகுதி மற்றும் கிளைத் தலைவர்களும் தனிநபர்களும் சீனத் தொடக்கப்பள்ளிகளின் புரவலராக இருந்து பள்ளி வளர்ச்சிக்கு பங்காற்றினர்.  பள்ளிகளுக்கான நிதிநிர்வாகத்திற்கு வேண்டிய நிதியை மசீச தனது அரசியல் மற்றும் உறுப்பினர்களின் வணிக தொடர்பாலும் வெற்றிகரமாக திரட்டியது.

வருடாந்திர பட்ஜெட்டில் கல்விக்கு ஒதுக்கப்படும் நிதியைத் தவிர்த்து சீனப்பள்ளியின் மேம்பாட்டுக்காக சீன சமூகம் ஒவ்வொரு வருடமும் தொடர்ந்து பல மில்லியன்கள் ரிங்கிட் நிதியைத் திரட்ட வேண்டிய நிலை இருந்தது. அதன் வாயிலாக எந்தவொறு சீனப்பள்ளியையும் சீனர்கள் கைவிடாமல் தொடர்ந்து நடத்த முடிந்தது. மலேசிய மக்கள் தொகையில் சீனர்களது சதவீத(%) ரீதியில் குறைந்தாலும் எண்ணிக்கையின் அடிப்படையில் அதிகரித்திருந்தது. அது சீனப்பள்ளிகளில் மாணவர்களது எண்ணிக்கையும் அதிகரித்தது. அதனால் புதிய சீனப்பள்ளிகளை நிர்மாணிக்கும் திட்டத்தைக் கல்வி அமைச்சு நிராகரித்தது.

மலேசிய நாட்டில் சீனப்பள்ளிகள் தொடர்ந்து நிலைத்திருப்பதற்கும் செயல்படுவதற்கும் சீனர்கள் அவரது பிள்ளைகளைச் சீனப்பள்ளிக்கு அனுப்புகின்றனர். இன்றைய சூழலில் 90 சதவீதம் சீனப் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளைச் சீனப்பள்ளிக்கு அனுப்புகின்றனர். சீனப்பள்ளியின் தரமான கல்விச் சூழல், சீன மொழியின் பொருளாதார மதிப்பு ஆகியவை சீனர் அல்லாதவர்களையும் தத்தம் பிள்ளைகளை சீனப்பள்ளிக்கு அனுப்ப வழிவகுத்தது. 2007 ஆம் ஆண்டு தோங் ஜியாவ் ஸோங் இயக்கத்தின் தகவல் அடிப்படையில் கல்வி அமைச்சு தனது அறிக்கையில் 65,000 (10.7%) சீனர் அல்லாத மாணவர்கள் சீனப்பள்ளியில் படிப்பதாக தெரிவித்தது. 2015 ஆம் ஆண்டு அறிக்கையில் அவ்வெண்ணிக்கை 87,463-ஐ எட்டியது. தற்போதைய புதிய ஆய்வுகளில் இவ்வெண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்திருக்கக்கூடும்.  இந்தியர்களோடு பல மலாய்காரர்களும் தங்கள் பிள்ளைகளைத் தற்போது சீனப்பள்ளிகளுக்கு அனுப்புகின்றனர். சீன மொழி பயில்வதால் வேலைவாய்ப்புகள் பெருவது சுலபம் என்பது பெற்றோர்களின் நம்பிக்கை.

061987ஆம் ஆண்டில் அப்போதைய கல்வி அமைச்சரான அன்வார் இப்ராஹிம் அவர்களால் 100 சீனர் அல்லாத துணைத்தலைமையாசிரியர்களும் தலைமையாசிரியர்களும் சீனத் தொடக்கப்பள்ளிகளில் பணியில் நியமிக்கப்பட்டனர். கல்வியமைச்சின் நடவடிக்கையானது சீனர்கள் மத்தியில் கடும் சினத்தை மூட்டியது.  சீனர்கள் அந்நடவடிக்கையை சீனப்பள்ளிகளைத் தேசிய பள்ளிகளாக்கும் திட்டமாக பார்த்தனர். தோங் ஜியாவ் ஸோங் இயக்கம் தலைமையில் கோலாலம்பூரில் உள்ள ஹைனானீஸ் சங்க கட்டிடத்தில் சீனர்கள் ஒன்று கூடி தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். கல்வி அமைச்சு தன் நடவடிக்கையை உடனடியாக மீட்டுக்கொள்ள வேண்டுமெனவும், இல்லையேல் மூன்று நாட்களுக்குப் பள்ளிகளைப் புறக்கணிக்கப் போவதாக கோரிக்கை வைத்தனர். கல்வியமைச்சு அதன் முடிவில் உறுதியாக நின்றது.  அதே நேரத்தில், சீனர்களுக்கு எதிராக மலாய்க்காரர்கள் சீனர்கள் எதிர்ப்பு (Anti Chinese) போராட்டத்தை நடத்தினர். இனங்களுக்கிடையே பதற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் செயல்பட்டதாக கூறி அரச மலேசியப் போலீஸ் படை ‘ஓப்பராசி லாலாங்’ நடவடிக்கையில் 106 பேரை உள்நாட்டு பாதுகாப்பு சட்டத்தின் (ISA) கீழ் கைது செய்தது. அதில் 40 பேர் இரண்டு ஆண்டு கால சிறைத்தண்டனை அனுபவித்தனர். கைதானவர்களில் பலர் எதிர்க்கட்சித் தலைவர்கள், சமூகவாதிகள் மற்றும் அரசியல்வாதிகளாவர். கைது நடவடிக்கையில் தோங் ஜியாவ் ஸோங் இயக்கத்தின் அப்போதைய தலைவர் லிம் ஃபோங் செங் அவர்களும் கைது செய்யப்பட்டார். மலேசிய சீனக் கல்வி இயக்கத்தை எதாவதொரு வழியிலாவது தடுத்திடவும் முடக்கிடவும் அரசாங்கம் முயற்சித்தாலும் அதனை எதிர்கொண்டு அவ்வியக்கம் அதன் உரிமைக்காக போராடிக்கொண்டுதான் இருந்தது.

புதிய அரசியலும் அதன் வாய்ப்புகளும்

‘மெர்டேக்கா’ பல்கலைக்கழகம் அமைப்பதில் தோல்வி கண்ட தோங் ஜியாவ் ஸோங் இயக்கம் 1997ஆம் ஆண்டு நியூ ஏரா கல்லூரியைக் காஜாங்கில் நிறுவியது. பரந்த உயர்க்கல்வி கொள்கையினால் அந்நேரம் மலேசியாவில் புதிய தனியார் கல்லூரிகளும் உயர்க்கல்வி கூடங்களும் வரத் தொடங்கின. மெர்டேக்கா பல்கலைக்கழகத்தின் தோல்வியிலிருந்து கிடைக்கப்பெற்ற எச்சரிக்கையும் அனுபவமும் இம்முறை இயக்கத்தை சரியாக வழிநடத்தியது.

1999 ஆம் ஆண்டு பொதுத் தேர்தல், தேசிய முன்னணி அரசாங்கம் பெரும் சவாலை எதிர்கொண்ட நேரம். அம்னோவிலிருந்து அன்வாரை விலக்கியதோடு அனைத்து பதவிகளில் இருந்தும் (துணைப்பிரதமர் பதவி உட்பட) நீக்கப்பட்டு சிறையில் தள்ளப்பட்டதும், அம்னோ மீதான பிற குற்றச்சாட்டுகளும், அரசாங்கத்தின் மீது சாமானிய மலாய்க்காரர்களுக்கு கடும் அதிருப்தியை உருவாக்கி இருந்தது. அதனால் அம்னோவில் பிளவு ஏற்பட்டு மலாய்க்காரர்கள் இரண்டு பிரிவாக பிரிந்தனர். தேசிய முன்னணியின் வெற்றியைத் தீர்மானிக்க சீனர்களது ஓட்டு முக்கியமானதாக இருந்தது. இது மலேசிய சீனக் கல்வி இயக்கத்திற்கு ஓர் அரசியல் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது. 2095 மலேசிய சீன அமைப்புகளின் ஆதரவோடு சீனக் கல்வி இயக்கம் இதர 13 சீன இயக்கங்களோடு சேர்ந்து Suqiu-ஐ (Malaysian Chinese Organization Election Appeals Committee) அமைத்தது. அதன் மூலம் 17 கோரிக்கைகளை முன்வைத்தது. அதில் இனசார்பற்ற பிரச்சனைகளுக்கும் (ஜனநாயகம், மனித உரிமைகள், நீதி) இனவாத பிரச்சனைகளுக்கும் (பல்கலைக்கழக மெரிட் அமைப்புமுறை அமலாக்கம், சமத்துவமான பல்லின கலாச்சாரம்) முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது. இயக்கம் முன்வைத்த கோரிக்கையில் முக்கியமானது மலாய்க்காரர்களின் சிறப்பு உரிமைகளையும் சலுகையும் நீக்கக் கோரியது. மசீசவும் கெராக்கானும் கோரிக்கைகளைப் பெற்றுக்கொண்டாலும் அம்னோவிடமிருந்து எழுந்த பலத்த எதிர்ப்பும் விமர்சனமும் சர்ச்சைக்குரிய கோரிக்கைகளை மீட்டுக் கொள்ளச் செய்தது.

முடிவு 

தோங் ஜியாவ் ஸோங் எனும் மலேசிய சீனக் கல்வி இயக்கம் தாய்மொழிக் கல்வி சார்ந்த விசயத்தில் ஒரு முன்னுதாரண இயக்கமாக திகழ்கிறது. தாய்மொழிக் கல்விக்கு ஏதிரான கல்வி திட்டங்களுக்கு எதிராக தன் ஓயாத போராட்டத்தை அது முன்னெடுத்துள்ளது. மலாய்க்காரர்களின் ஆதிக்கமும் அதிகாரமும் நிறைந்த மலேசிய நாட்டில் வெற்றிகரமாக அனைத்து சீனப்பள்ளிகளையும் ஒன்றிணைத்து சீனக் கல்வியின் பயன்பாட்டைப் பரப்பி சீனக் கலாச்சாரத்தின் தொடர்ச்சியை நிலைநிறுத்தியதோடு அவை தனித்து செயல்படும் துணிச்சலையும் விதைத்தது அதன் மிகப்பெரிய சாதனையாகும். அதுமட்டுமல்லாது 16 சுயாட்சி மேல்நிலைப்பள்ளிகளின் எண்ணிக்கையை இன்று 60 சுயாட்சி மேல்நிலைப்பள்ளிகளாக உயர்த்தியதுள்ளது. அதோடு காஜாங்கில் ‘நீயு ஏரா கல்லூரி’, ஜோகூரில் ‘சௌத்தென் கல்லூரி’ மற்றும் பினாங்கில் ‘ஹன் சியாங் கல்லூரி’ என மொத்தம் மூன்று கல்லூரிகளை நிர்மாணித்து அவற்றுக்கு புரவலாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

இன்று அவ்வமைப்பு அரசியல் ரீதியாக தாய்மொழிக் கல்வி சம்பந்தமாக அரசாங்கத்திற்கு மிகப் பெரிய அழுத்தத்தைக் கொடுத்து இன்றும் தாய்மொழிக் கல்வியின் இருப்பை உறுதி செய்து வருகிறது. இன்றுவரை அரசாங்கம் முன்மொழியும் அல்லது அறிமுகப்படுத்தும் புதிய கல்வி திட்டங்களில் தாய்மொழி கல்விக்கும் தாய்மொழி பள்ளிகளுக்கும் ஆபத்தாக இருப்பனவற்றை கண்டறிந்து உடனுக்குடன் எதிர்க்கும் ஒரே இயக்கமாக தோங் ஜியாவ் ஸோங் உள்ளது. 2003 ஆண்டில் கல்வி அமைச்சு பெரும் பொருளாதார முதலீட்டுடன் கொண்டுவந்த PPSMI இருமொழி திட்டத்தை மிகக் கடுமையாக எதிர்த்த அமைப்பு தோங் ஜியாவ் ஸோங் ஆகும். கணிதமும் அறிவியல் பாடங்களும் ஆங்கிலத்தில் போதிக்க வழி செய்த அத்திட்டம் சீன பள்ளிகளுக்குள் செல்ல முடியவில்லை. அரசாங்கம் கொடுத்த தொடர் நெருக்குதல்களின் பிறகு சீன ஆரம்ப பள்ளிகள் அறிவியல் கணிதம் ஆகிய இரண்டு பாடங்களையும் மாணவர்களுக்கு ஆங்கிலத்திலும் சீனத்திலும் இரண்டு வேளைகளில் போதிக்கும் முறையை நடைமுறை படுத்தின. அதற்கான கூடுதல் செலவுகளை சீன இயக்கங்கள் ஏற்றுக் கொண்டன.  இதன் வழி கணிதம் அறிவியல் ஆகிய பாடங்களில் பயன்படுத்தப்பட்ட சீன மொழி பயன்பாடு குறைக்கப்படுவது தவிற்கப்பட்டது.  பிறகு 2012-ல் அத்திட்டம் அரசாங்கத்தால் மீட்டுக் கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அதே காலக்கட்டத்தில் அரசாங்கம் முனைப்புடன் கொண்டுவந்த ‘வாவாசான் பள்ளி திட்டம்’ சீன பள்ளிகளின் எதிர்காலத்திற்கு ஆபத்தானது என்ற கருத்தை முன்நிறுத்தி தோங் ஸோங் இயக்கம் அத்திட்டத்தில் சீனப் பள்ளிகள் இணையாது என்று திட்டவட்டமாக அறிவித்தது. மும்மொழி பள்ளிகளையும் ஒரே வளாகத்தில் நிர்மாணிக்கும் அத்திட்டம் சீனப் பள்ளிகளின் புறக்கணிப்பால் தோல்வி கண்டது.

இந்த ஆண்டு, மலேசியக் கல்விப் பெருந்திட்டத்தின் ஒரு பகுதியாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள DLP இருமொழி திட்டத்தையும் சீனப்பள்ளிகள் ஏற்றுக் கொள்ளவில்லை. அத்திட்டம் சீனப்பள்ளிகளுக்கு தேவை இல்லை என்று வெளிப்படையாக கூறி அவை விலகிக்கொண்டுள்ளன.

முடிவாக, தோங் ஜியாவ் ஸோங் இயக்கத்தின் அறுபது ஆண்டு வரலாற்றை மீள்பார்வை செய்யும் போது நமக்கு அதன் துணிச்சலான பயணமும் சவால்களை முறியடிக்கும் திறனும் வியப்பளிக்கிறது. ஆரம்ப கட்டத்தில் அது சமூகம் சார்ந்த ஒரு இயக்கமாக இருந்தாலும் பின்னர் அரசை பணியவைக்கும் சக்தியாக (pressure group) தன்னை வடிவமைத்துக் கொண்டுள்ளது. மொழி சார்ந்த விடயங்களில் அது எந்த சமரசமும் இன்றி அதிகார வட்டத்தை எதிர்க்கும் வல்லமை பெற்றுள்ளது. மேலும் தோங் ஜியாவ் ஸோங் அமைப்பு 1970-ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு ஆளும் கூட்டணியின் உறுப்பு சீன அரசியல் கட்சிகளான ம.சீ.ச, கெராக்கான் போன்றவற்றுடன் முரண்பட்டே இயங்கியுள்ளது. அக்கட்சிகள் ஆளும் கூட்டணியில் அங்கத்துவம் பெற்றிருப்பதால் அரசாங்க ஆதரவு தரப்பாகவே செயல்படவேண்டிய நிலையில் தோங் ஜியாவ் ஸோங் அமைப்பு மொழியை எக்காரணத்திற்காகவும் விட்டுக் கொடுக்காமல் இருந்து வந்துள்ளது.

தூரநோக்கு சிந்தனையும் நடைமுறை சூழலுக்கு ஏற்ற திட்டங்களை வகுத்து துணிந்து செயல்படுவதும் அவ்வமைப்பின் வெற்றியாகும். அரசாங்க சார்புடன் தேசியமயமாக்களுக்கு ஒத்து ஊதும் கல்விமான்கள் கொண்டுவரும் திட்டங்களையெல்லாம் முன்பின் ஆராயாமல் ஏற்கும் நிலையை சீனக் கல்வி பரப்பில் காண முடியாததற்கு காரணம் தோங் ஸோங் அமைப்பு எடுக்கும் திடமாக நிலைபாடுகள்தான்.

சீன அரசியல் கட்சிகளின் அதிகாரத்தால் பாதிக்கப்படாமல் அந்த அமைப்பு இதுவரை செயல்பட்டு வந்திருப்பதை கூர்ந்து நோக்க வேண்டியுள்ளது. அது சுதந்திரமாக செயல்பட முடிந்திருப்பது மக்கள் அதன்மீது வைத்துள்ள நம்பிக்கையையே காட்டுகிறது. அரசியல் ஆசைகளுக்கும் பட்டம் பதவிகளுக்கும் விலைபோகும் சுயநலம் அங்கு குறைவாக இருந்ததாலேயே இதை சாதிக்க முடிந்திருக்கிறது. மலேசிய இந்தியர்களின் நிலையில், ம.இ.கா தன் அதிகாரத்தை மட்டும் பெருக்கிக் கொள்ளும் பொருட்டு அப்போது இயங்கிய காத்திரமான இந்திய அரசு சாரா அமைப்புளையும் தனிமனிதர்களையும் எதிரிகளாக பாவித்து ஒடுக்கிய சூழல் சீன சமூகத்தில் நிகழாதது அவர்களின் நல்லூழ் என்றே சொல்லவேண்டும்.

அதே போல் சீன மக்களின் ஆதரவை பெரும் பொருட்டு சீன அரசியல் கட்சிகள் சாதகமான சில நடவடிக்கைகள் எடுக்கவும் இச்சூழல் அவர்களுக்கு வழிவகுத்துள்ளது. ஒரு அரசு சாரா இயக்கமாக தன் கடமையை மிகச் சிறப்பாக ஆற்றும் பொது இயக்கமாக தோங் ஜியாவ் ஸோங் உள்ளது. அதே நேரத்தில் இனப்பற்றும் மொழி உணர்வும் உள்ள ஒரு வெளியமைப்பு முன்வைக்கும் கருத்துகளையும் குரலையும் உள்வாங்கி தன் சூழலுக்கு ஏற்ப செயல்படுத்த வேண்டிய நிலையில் சீன அரசியல் கட்சிகள் இருப்பதையும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. தோங் ஜியாவ் ஸோங் அமைப்பிற்கும் சீன அரசியல் கட்சிகளுக்கும் இடையே உள்ள உரசலும் உறவும் எப்படியாயினும் சீன கல்வியைக் காப்பதிலும் சீனப்பள்ளிகளை நிலை நிறுத்துவதிலும் வெற்றிகரமாக பங்காற்றுவதை காணமுடிகிறது. இது இந்நாட்டில் சீன சமூகத்தின் வெற்றிகளை மேலும் வளர்த்துச் செல்லும் என்பது தெளிவாகிறது. கல்வி சார்ந்த போராட்டம் அல்லது செயல்திட்டத்தை முன்னெடுக்க விரும்பும் யாரும் தோங் ஜியாவ் ஸோங் இயக்கத்தை முன்மாதிரியாக கொள்ள வேண்டியது அவசியம்.

துணைநூல் பட்டியல்.   

  • Ching Hwang Yen. (2008). The Chinese in Southeast Asia and beyond: socioeconomic and political dimensions. Singapore: World Scientific Publication
  • (2002). Dong Jiao Zong: The Malaysian Chinese Education Movement. Malayisan: Syarikat Percetakan Lian Hup
  • Ming Chee Ang. (2009). The Chinese Education Movement in Malaysia. Clacso
  • Santhiram Raman. R & Tan Yao Sua. (2015). The Development of Chinese Education in Malaysia: Problems and challenges. ISEAS
  • ஆ.திருவேங்கடம். ஒப்பிட்டேன் ஓலமிட்டேன் கட்டுரை
  • semparuthi.com

 

3 comments for “தோங் ஜியாவ் ஸோங் : மலேசிய சீனர்களின் வரலாற்றின் ஊடே ஓர் அறிமுகம்

  1. Selva Ramasami
    November 1, 2017 at 6:56 pm

    மலேயா பல்கலைக்கழக இந்தியர் துறை அமைய அரசியல் சார்பற்ற இயக்கங்களின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. அதே சமயம் இந்தியர்களின் ஆதரவுடன் தொடங்கிய பல்கலைக்கழகம இந்திய தமிழ் சம்பந்தப்பட்ட விஷயம் ஏதும் இல்லாமல் இயல்பாக செயல்படுவது மிகவும் வருத்தமாக இருக்கிறது.

    சீன சமூகம் தொடங்கிய கல்வி இயக்கம் பாராட்டுக்கு உரியது.

    கங்காதுரையின் இக்கட்டுரை, அறுபது ஆண்டுகளுக்கு மேலாக சவால்களை எதிர்கொண்டு வெற்றி பெற்ற ஒரு இயக்கத்தின் வரலாற்று பதிவு, தமிழ் சமூகத்திற்கு பரவலாக பயனளிக்கும் என்று நம்புகிறேன்

  2. பத்மினி ராஜமாணிக்கம்
    November 2, 2017 at 9:24 am

    வரலாறு கூறு கொண்ட பதிவு.ஆளுமையும் வளமையும்
    கொண்ட சீனச் சமூகம் பாரம்பரியத்தையும் கலைகலாசாரத்தையும் அரசியலையும் ,எதிர்காலத்தையும் சீர்தூக்கிப் பார்த்த விதமே தனித்துவம் கொண்டது. இதெல்லாம் மரபணுவிலேயே விதைக்கப் பட்டிருக்க வேண்டும்.
    நல்ல விதைகள் விழுதுகளாய் விளார்களாய் வேர்களாய் தழைக்கட்டும் தோ ங் ஜியாவ் ஸோங்

  3. ஸ்ரீவிஜி
    November 28, 2017 at 2:37 pm

    ஆக மொத்தத்தில் நெல்லுக்கு இரைத்த நீர் கொஞ்சம் புல்லுக்கும் பாய்ந்திருக்கு..
    ஆன ஒன்னு, இத எழுத எவ்வளவு வாசிச்சிருப்பிங்க.. அழகா எழுதிருக்கீங்க. அருமை. வாழ்த்துகள்

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...