மலேசிய நவீனச் சிறுகதை இலக்கியத்தில் 2000க்குப் பின்பான மூன்று முகங்கள் (முதல் பகுதி)

12806074_107760769619361_6004662501850992085_n-210x3001990-களுக்குப் பிறகான உலகமயமாக்கல், நவகாலனியவாத எதிர்ப்பு சிந்தனைகள், அதைத்தொடர்ந்து உருவான நவீனத்துவம், 2000-க்குப் பிறகான, அமைப்புகளை எதிர்க்கும் பின்நவீனத்துவச் சிந்தனை போன்ற அடுத்தடுத்த சீரான நகர்வுகளைத் தமிழ்நாட்டு இலக்கியச் சூழலைப்போல மலேசிய இலக்கியத்தில் காணமுடியாது. இங்குள்ள நாளிதழ்களில் பிரசுரமாகும் பெரும்பகுதிப் படைப்புகளை வெகுஜன வாசிப்புக்கான படைப்புகளின்கீழ் வகைப்படுத்திவிட முடியும். அப்படைப்புகள் பொதுவாக நல்லறம் சார்ந்த அறிவுரைகள், பாலர் வகுப்புகளில் சொல்லித்தரப்படும் நீதிக்கதைகளின் வெவ்வேறு வடிவங்கள், முடிவில் மனந்திருந்தும் கதாபாத்திரம் கொண்ட கதைகள், தென்றல் புயலாக மாறும் அல்லது மெழுகாக உருகி ஒளிதரும் மகளிர் பாத்திரக் கதைகள். இவைதான் 99.9%. இதை எழுதுபவர்கள்தான் மலேசியாவில் ‘ஆகச்சிறந்த’ எழுத்தாளர்கள். வாசிப்பவர்களுக்கு நல்ல கருத்துகளை, அறிவுரைகளைச் சொல்லாத இலக்கியம் எப்படி இலக்கியமாகும் என்று கேட்கும் ‘அதிநவீன இலக்கிய’ அமைப்புகள், வாசகர்கள். புதிய சிந்தனைகளுக்கு, திறப்புகளுக்கு இலகுவில் மனங்கொடாத சூழல். பெரும்பாலான எழுத்தாளர்களே பரந்துபட்ட வாசிப்பு இல்லாதவர்கள். ஒருசிலரிடம் வாசிப்பு இருந்தாலும் அவர்களது படைப்பில் அதன் தாக்கம் இருப்பதில்லை. அதே நீதிக்கதைகளை சற்று நவீன எழுத்து நடையில் எழுதுகிறார்கள்.

சிறுபான்மையாக, கொஞ்சம் நவீன இலக்கியம் குறித்த அறிமுகம் கொண்ட மலேசியச் சிறுகதை எழுத்தாளர்களும் உள்ளனர். அவர்களில் கிட்டத்தட்ட எல்லோருமே தோட்டப்புற வாழ்வு அல்லது தோட்டத்திலிருந்து நகரம் பெயர்ந்தவர்களின் ஏக்கம், துன்பம், அல்லது அந்நியப்படுதல் குறித்த ஒரு கதையேனும் எழுதியிருக்கிறார்கள். அவ்வகையில் தோட்டப்புறச் சூழலை முன்னிறுத்தும் படைப்புகள் மலேசிய இலக்கியத்தின் (ஒரே) அடையாளமாக மாறிவிட்டது என்று கூடச் சொல்லலாம். சில மூத்த எழுத்தாளர்கள் மலேசியா சுதந்திரம் பெற்ற சமயத்தில் நிகழ்ந்த நிகழ்வுகள், சயாம் மரண ரயில் பாதைச் சம்பவங்கள் மற்றும் ஜப்பானியர் வருகையின்போது நடந்தவற்றை அடிப்படையாகக் கொண்டு எழுதியுள்ளனர். ஆனால், அப்படியான படைப்புகளை விரல்விட்டு எண்ணிவிடலாம் எனும் அளவிலேயே இருக்கின்றன.

இவற்றையெல்லாம் நவீன இலக்கியமாக வகைப்படுத்துவதிலும் எனக்குச் சில மனத்தடைகள் உள்ளன. அவை வாசிப்புக்கு 1960-70-களில் எழுதப்பட்ட படைப்புகளைப் போல் உள்ளதாகத் தோன்றுகிறது. உன்னதமான நோக்கங்களைக் கொண்ட கதாபாத்திரங்கள், நாட்டுப்பற்று, மொழிப்பற்று போன்றவற்றை வலியுறுத்தும் கதைப்போக்கு, லட்சிய ஆண், பெண் கதாபாத்திரங்களைக் கொண்டவையாக அவை உள்ளன என்பதனால் இருக்கலாம். மேலும், இயல்புக்கு மாறான நாடகத்தனமான, உணர்ச்சிகரமான வசனங்கள், பாடல்களை உள்ளடக்கிய அவற்றின் எழுத்து முறையும் ஒரு காரணமாக இருக்கக்கூடும். இந்தப்போக்கு மிகச்சமீபமாக வந்த எழுத்துகளில் கூட இருக்கிறது.

இருந்தாலும், மீச்சிறு பகுதியாக நவீன இலக்கிய எழுத்து என்பதும் இந்தவகை எழுத்தின் இன்னொருபுறம் உருவாகிவந்துள்ளது. அது ‘வல்லினம்’ போன்றவர்களின் இதழியல் முயற்சிகளில் உருவானதுதான். 2000-க்குமுன் ஓரிருவர் அதை முயற்சி செய்திருந்தாலும் அப்படைப்புகள் நவீன இலக்கியத்தின் வகைப்பாட்டிற்குள் முழுமையாக வராமல், அதன் சமகாலப் போக்கை அனுசரித்தும் இருந்துள்ளது என்றுதான் சொல்லவேண்டும். ஆக,  நவீன இலக்கியம் என்பது மலேசிய இலக்கியத்தைப் பொறுத்தவரை மிகச்சமீபத்திய வருகை என்றே கொள்கிறேன்.

இந்த இடத்தில் ‘நவீன இலக்கியம்’ என்று எதைக் குறிப்பிடுகிறேன் என்று தெளிவுபடுத்த வேண்டியுள்ளது. எளிமையான புரிதலுக்காக இப்படிச் சொல்லலாம். முன்னற்கூறியது போல் இல்லாமல், யதார்த்த வாழ்வியலைப் பேசுகிற, சமூகத்தின் பொதுப்புத்திக் கருத்துகளை முன்வைக்காத, துணிச்சலோடு அதன் விழுமியங்களை மீள்பார்வை செய்கிற, சமகால மனிதனின் தனிமனித உணர்வுகளை, விருப்பங்களை, உளச்சிக்கல்களைப் பேசுகிற-ஆராய்கிற, தற்போதுள்ள அரசியல் தொழிற்படுகிற இடங்கள், விதங்கள் குறித்த விழிப்புணர்வு கொண்ட எழுத்து என்று சொல்லலாம். இத்தகைய கூறுகள் நவீன இலக்கியம் என்று கோரப்படும் படைப்புகளுக்கு மிக மிக அடிப்படையானவை என்று நினைக்கிறேன். அந்த வகைப்பாட்டிற்குள் அமைந்துள்ளதாகக் கருதப்படும் மூவரின் சிறுகதைத் தொகுப்புகள் இங்கே விமர்சனத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன. சு.யுவராஜனின் ‘அல்ட்ராமேன்’, கே.பாலமுருகனின் ‘இருளில் தொலைந்தவர்களின் துர்கனவுகள்’, ம.நவீனின் ‘மண்டை ஓடி’. இவை கடந்த மூன்று வருடங்களுக்குள் வெளியான சிறுகதைத் தொகுப்புகள். கதைகள் அனைத்தும் 2000-த்திற்குப் பிறகானவை.

என்னைப்போன்ற ஒருவனுக்கு மலேசிய எழுத்துகளை அணுகிப் புரிந்துகொள்வதற்குப் பொதுவாக சில தடைகள் உண்டு. பேச்சுமொழியில் கலந்துவிட்ட மலாய் சொற்களின் பயன்பாடுகளைத் தாண்டி ஏற்கெனவே சொன்னபடி நாடகத்தனமான, மிகப்பழமையான தேய்வழக்குகள் நிறைந்த நடை ஒருபுறம் என்றால், எழுத்தாளரை இந்திரன், சந்திரன் என்று புகழ்கிற முன்னுரைகள், மற்றும் புத்தகத்தில் மலிந்து கிடக்கும் எழுத்துப் பிழைகள், சொற்பிழைகள், வாக்கியப் பிழைகள்,  மறுபுறம். இதையெல்லாம் தாண்டித்தான் படைப்பை அணுகவேண்டியுள்ளது என்பதையும் இங்கே குறிப்பிட வேண்டியுள்ளது.

மற்றுமொரு விஷயம், பெரும்பாலான மலேசியப் படைப்புகள் பல பத்தாண்டுகள் பின்தங்கியிருப்பதற்குச் சொல்லப்படும் காரணங்களில் ஒன்று, தமிழகத்திலிருந்து பிழைக்க வந்தவர்கள் உருவாக்கிய இலக்கியம் இது என்பதுதான். கல்வி கற்கும் சூழல் இல்லாத நிலையில் மொழியைப் பாதுகாக்க பிடிவாதமாக இவர்கள் சுமந்து சென்ற இலக்கியம் தமிழகத்தின் அக்காலக் கலைநுட்பத்துடன் இல்லாமல் இருப்பது இயல்பே என்ற வாதம். மற்றொன்று, தமிழகம் போல இங்கே புத்தகங்கள் கிடைப்பதில்லை. எனவே சமகால இலக்கியத்தோடான பரிச்சயம் இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது என்பது.

ஆனால் மலேசியாவில் 1960—70 களில் கூட விரல்விட்டு எண்ணக்கூடிய சிலர் தமிழகத்தின் சிற்றிதழ்ப் போக்கைக்கூட அறிந்தவர்களாக இருந்திருக்கின்றனர். ஏற்கெனவே குறிப்பிட்டபடி அவர்கள் இலக்கியத்தை அணுகியவிதம் பொதுப்போக்கிலிருந்து சற்று மாறுபட்டும் உள்ளது. கு.அழகிரிசாமி இங்கு பத்திரிகைத்துறையில் வேலை செய்தபோது, உள்ளடக்கத்தை மட்டுமே புனைவு என நம்பிக்கொண்டிருந்த மலேசிய – சிங்கை தமிழ் எழுத்தாளர்கள் மத்தியில் படைப்புகளின் வடிவம், கலையமைதி குறித்த அறிமுகம் ஏற்பட்டிருந்தது என்பதையும் சில கட்டுரைகளின் வழி அறியமுடிகிறது. எப்படியாயினும் தமிழகம் போலவோ இலங்கை போலவோ அன்றைய மலாயாவில் நவீன இலக்கியம் வளர்வதற்கான பரந்த தளம் அந்தத் தலைமுறையினருக்கு இல்லைதான்.

ஆனால், இன்றைய சமகாலச் சூழலில் இதுபோன்ற காரணங்கள் நகைப்புக்குரிய பொய்யான காரணங்களே. ஏனெனில் தற்காலச் சூழ்நிலையில் தமிழகத்தின் வாராந்திர இதழ்கள் கூட அந்தந்த வாரத்திலேயே கிடைக்கிறது எனும்போது சமகால இலக்கியத்தை வெளியான உடனேயே வாசிக்கும் வாய்ப்பு நிச்சயமாக எல்லோருக்கும் இருக்கிறது. போதாக்குறைக்கு இணையம் வேறு. மேலும் சஞ்சிக்கூலிக்கு வந்த கல்வியற்ற தலைமுறை இப்போதிருக்கும் தலைமுறையல்ல. எனவே, இத்தகைய காரணங்கள் தமிழகம் அல்லது இலங்கையின் இலக்கியப் படைப்புகளோடு மலேசிய இலக்கியத்தை ஒப்பிட்டுப் பேசுவதைத் தடுக்கமுடியாது. கடந்த 15 ஆண்டுகளாக இணையம், நூல்கள், தமிழ்க்கல்வி, ஒப்பீட்டளவில் அதிகமான இலக்கியப் படைப்பாளிகளின் வருகை எனப் பல்வேறு வாய்ப்புகளைப் பெற்றிருக்கும் புதிய சமகாலப் படைப்பாளர்களின் புனைவுகளை ஒட்டுமொத்த சமகாலத் தமிழ்ச்சிறுகதையுலகின் தரத்தோடுதான் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டியுள்ளது.

சு. யுவராஜன். (2016). அல்ட்ராமேன். மலேசியா: தோழி பதிப்பகம்.essay3a

பதிப்பாளர் உரை (தோழி), டாக்டர். சண்முக சிவா அவர்களின் அணிந்துரை, சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி அவர்களின் மதிப்புரை, பிறகு ‘உருப்படும் வழியே சிறுகதை(?)’ – என ஆசிரியரின் முன்னுரை என 15 பக்கங்களுக்கு மிகப்பலமான பீடிகை. முன்பே சொன்னபடி ஆசிரியரைப் புகழ்ந்து தள்ளும் முன்னுரைகள்தாம். இவ்வுரைகள் குறித்த விமர்சனம் இங்கே தேவையில்லை. ஆனால் அவற்றில் சொல்லப்பட்ட சில விஷயங்களை விமர்சனத்திற்கு அளவுகோலாக்கலாம் என்று நினைக்கிறேன். டாக்டர்.சண்முகசிவா அவர்கள் தனது உரையில்,

யுவா என்கிற யுவராஜனின் பலம் என்பது வாசிப்பு. பரந்து விரிந்த வாசிப்பு. மலாயாப் பல்கலைக்கழகத் தமிழ் நூலகத்தில் முதலும் கடைசியுமாகப் பிரித்துப் படித்து மூடிவைக்கப்பட்ட பல சிறுகதை, நாவல்கள் யுவாவின் இரண்டாவது ஸ்பரிசத்திற்காக இன்னமும் காத்திருக்கின்றன.’

‘ஜெயமோகன் போன்ற தலைசிறந்த எழுத்தாளர்களின் நட்பும் உறவும் விரிவான வாசிப்புக்கான தளமும் தாகமும் வாழ்வையும் மனிதர்களையும் நுட்பமாகக் கவனித்துச் சேகரித்துக் கொண்டுவரும் வாழ்வனுபவங்களும் நேற்றைய, இன்றைய இலக்கியப் போக்குகள் பற்றிய பிரக்ஞையும் எளிமையாகவும் ஆழமாகவும் சொல்ல வந்ததைச் சொல்லுக்குள் வசப்படுத்தும் எத்தனிப்பும் யுவாவை அடுத்த படிநிலைக்கு உயர்த்திக்கொண்டே போகும் என்பதில் எனக்கு ஐயமில்லை.’

என்கிறார். இந்த வார்த்தைகள் இயல்பாக எந்தவொரு வாசகனுக்குள்ளும் எழுத்தாளர் குறித்த மிகப்பெரிய எதிர்பார்ப்பை உண்டாக்கிவிடும். ஆனால் அதேசமயம்,

’. . . யதார்த்த வாழ்வைப் பற்றிய புரிதலிலிருந்து தொடங்கும் இந்தக் கதைகளின் வழி படைப்பு சூட்சுமம் கைகூடும் என்ற அவரது நம்பிக்கையில் எனக்கும் ஒப்புதல் உண்டு.’

என்கிறார். அதாவது இன்னமும் படைப்பை உருவாக்குவதன் சூட்சுமம் அவருக்குக் கைகூடவில்லை என்றும் அர்த்தப்படுகிறது.

இந்தச் சிறுகதைத் தொகுப்பில் மொத்தம் பத்து கதைகள் உள்ளன. 2003-லிருந்து 2016 வரை எழுதப்பட்ட கதைகள். இந்தப் பதிமூன்று ஆண்டு கால இடைவெளியில் அவர் கதைகளில் எந்த வளர்ச்சியையும் என்னால் பார்க்க முடியவில்லை. பொதுவாக மலேசிய எழுத்தாளர்களால் ஊறவைத்து, நைய அடித்து, துவைத்துக் கந்தலாக்கப்பட்ட தோட்டப்புறப் பின்னணி கொண்ட கதைகள். ஆனால், அதில் புதிதாகச் சொல்வதற்கு யுவராஜனிடம் ஏதுமில்லை. இந்தக் கதைகளைத் தோட்டப்புறத்திற்கு வெளியே வைத்தும்கூட எழுதிவிடலாம். எந்த வித்தியாசமும் இருக்காது. ஆனால், ‘மலேசியச் சிறுகதை’ என்றால் தோட்டப்புறம் வரவேண்டும் என்பதற்காக எழுதியுள்ளார் போல.

அல்ட்ராமேன், ஊதுவத்திப்பையன், தாத்தா சாமந்தி அத்தை மற்றும், துளிர், சாவி, அப்பாவும் நெத்திவெள்ளையும், காணாமல் போன கோப்பை, சிறகு என்கிற இந்த எட்டுக்கதைகளைப் பற்றியும் பெரிதாகச் சொல்வதற்கு ஒன்றுமில்லை. அவை இலக்கியத் தரம் வாய்ந்த சிறுகதைகளா என்பதில் எனக்குச் சந்தேகம் உள்ளது. காரணம் முன்பே குறிப்பிட்டபடி பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு எழுத்தாளர்களால் பலமுறை வெவ்வேறு வடிவில் கையாளப்பட்டுவிட்ட கதைக்கரு. அவை வெகுஜன ரசனைக்கானவை. இதனால் அவற்றை இலக்கியச் சிறுகதை எனும் வகைமைக்குள் என்னால் கொண்டுவர முடியவில்லை. ‘கருப்பண்ணன்’, ‘துஞ்சல்’ ஆகிய சிறுகதைகள் மட்டுமே சிறுகதைக்கான தெறிப்புக்கூறுகளைக் கொண்டவை. அதிலும் ‘துஞ்சல்’ சில இடங்களில் சிறுவனுடைய பார்வையைத் தாண்டிவிடுகிறது. கருப்பண்ணனின் நீளமான விவரிப்பு அலுப்பூட்டக் கூடியது. என்றாலும் இந்த இரண்டை மட்டுமே சிறுகதை வரிசையில் வைக்கலாம்.

ஆனால் இவரது சிறுகதைகள் மலேசியச் சிறுகதை என்ற அடையாளமற்றவை. அங்காங்கே ரப்பர், பால்வாசனை, செம்பனை, லயத்து வீடு, கொய்தியாவ் கோரெங், நூடுல்ஸ் சூப், போன்ற வார்த்தைகளைச் சேர்த்துவிட்டால் அது மலேசிய மண்ணுக்கான சிறுகதை என்று ஆகிவிடாது. அந்த வார்த்தைகளை நீக்கிவிட்டுப் பார்ப்போமெனில் இவை மலேசியச் சிறுகதைகளென்பதற்குத் தனித்த அடையாளம் ஏதுமற்ற கதைகள்தான். தமிழகத்தில் கல்கி, குமுதம், குங்குமம் போன்ற வெகுஜன இதழ்களில் இதுபோன்ற சிறுகதைகள் வருகின்றன. ‘பெயர்ச்சொற்களால் மட்டும் ஒரு சிறுகதை குறிப்பிட்ட நிலத்தைச் சேர்ந்த இலக்கியமாக அடையாளப்படுவதில்லை’ என்பதை அவர் புரிந்துகொள்ள வேண்டும். அந்த மண்ணுக்கே உரித்தான மனிதர்கள், அவர்களின் குணாம்சங்கள், அவர்களின் தனித்த வகையான வாழ்வியல், அதிலுள்ள சிக்கல்கள் ஆகியவை வெளிப்படவேண்டும்.

உலகம் முழுக்க குடிகாரப் புருஷனிடம் அடிவாங்கிக் கொண்டு வேலைக்குச் செல்லும் பெண்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். வெகுநிச்சயமாகக் குழந்தைகளின் மனதில் அதற்கான தாக்கம் இருக்கும்தான். ஆனால் இதெல்லாம் எவ்வளவு அரதப்பழசான கரு! இதை ரப்பர் காட்டிற்கிடையில் வைத்து எழுதினால் அது நவீன சிறுகதையாகிவிடுமா? என்ற சந்தேகம் எனக்கு வருகிறது. ஊதுவத்தி விற்கும் பையன் தம்பியை நினைவுபடுத்துகிறான் என்று கையிலிருக்கும் காசைத் தானம் செய்வது, பேச்சுவார்த்தை அற்றுப்போன உறவுகள், மயான வைராக்கியம் இதெல்லாம் இதுவரை சொல்லப்படாத கதை என்று ஆசிரியர் நம்புவாரேயானால், அவர் சமகாலத் தொலைக்காட்சித் தொடர்களைப் பார்க்கலாம். இதைவிட பிழியப் பிழிய சோகக் காட்சிகள் உள்ளன என்பதே என் பதில். கூறுவது கூறல் பிழையல்ல, ஆனால் அதில் இதுவரை சொல்லப்படாத ஏதாவது புதிய கண்டுபிடிப்பு (Finding) இருந்தால் மட்டுமே அதைச் சொல்லவேண்டும்.

நீளமாக உணர்ச்சி பொங்க விவரித்து பாதியில் அறுந்த மாதிரி முடித்தால் நவீன சிறுகதை என்று சொல்லிவிட முடியாது. கதை என்ன சொல்ல வருகிறது என்று வாசகன் குழம்பினால் அது நவீன இலக்கியத்தில் சேர்ந்துவிடுமா என்ன? மிகப்பெரிய சித்திரமொன்றின் ஒரு பகுதியை மட்டும் காட்டி மற்ற பகுதிகளைப் புரியவைப்பது சிறந்த உத்தி என்பதை ஒப்புக்கொள்கிறேன். உதாரணமாக, புலியின் வாலைக் காட்டினால் புலி ஞாபகத்துக்கு வந்துவிடும். ஆனால் புலியின் வாலை அவ்வளவு துல்லியமாகச் சித்தரிக்கத் தெரியவேண்டும் என்பதோடு மட்டுமன்றி, ஏன் புலியின் ‘வாலை மட்டும்’ காட்டுகிறோம் என்பதற்கும் ஒரு தர்க்கநியாயம் இருக்கவேண்டும். மௌனி, நகுலன், தஞ்சை பிரகாஷ், வண்ணநிலவன் போன்ற ஜாம்பவான்கள் அவ்வகையிலான சிறுகதைகள் எழுதியுள்ளார்கள். ஆனால் ஒரு சிறுகதையை அப்படி எழுதவேண்டிய தேவை (மற்றும் அதற்கான பயிற்சி) இருந்தால் மட்டுமே எழுதவேண்டும். இல்லையென்றால் அது வெறும்  வார்த்தைக்குவியல் மட்டுமே.

முன்னுரையில் டாக்டர்.சண்முகசிவா அவர்கள் ‘யுவராஜனின் பலம் பரந்து விரிந்த வாசிப்பு’ என்கிறார். ‘மலாயாப் பல்கலைக்கழக நூலகத்தில் இவர் வாசித்து மூடிவைத்த சிறுகதை, நாவல்கள் அவரது இரண்டாவது ஸ்பரிசத்திற்காக ஏங்குகின்றன’ அவ்வளவு விரிவான வாசிப்பு அவரது பேச்சில் தெரியும் என்கிறார். பேச்சில் தெரியுமாக இருக்கலாம், எழுத்தில் நிச்சயமாக இல்லை. யுவராஜன், டாக்டரின் பரிந்துரைப்படி அவற்றை இரண்டாவதுமுறை வாசித்துப் பார்க்கலாம். அது அவருக்கு மிக நிச்சயமாக உதவும். இந்தக் கதைகளுக்கு பரிசுகள் கிடைத்திருப்பது மலேசிய நவீன இலக்கியச்சூழலில் நிலவும் சிக்கலைத்தான் காட்டுகிறது.

நண்பர்கள் யுவராஜனைக் குறிப்பிடுகையில் நல்ல சிறுகதைகள் எழுதியுள்ளார் என்றனர். ஒருவேளை எழுதியிருக்கலாம், அவை நிச்சயமாக இந்தத் தொகுப்பில் வரவில்லை. சமயத்தில் ஒரு தொகுப்பில் குறிப்பிட்ட எழுத்தாளரின் சுமாரான கதைகள் மட்டுமே வந்துவிடுவது உண்டு. எனில், அவரது அடுத்தத் தொகுப்பிற்காக நானும் காத்திருக்கிறேன்.

தொடரும்

1 comment for “மலேசிய நவீனச் சிறுகதை இலக்கியத்தில் 2000க்குப் பின்பான மூன்று முகங்கள் (முதல் பகுதி)

  1. ஸ்ரீவிஜி
    November 6, 2017 at 4:59 pm

    நிறைய வாசிப்பதால் ஒருவரின் எழுத்து பண்பட்டுவிடுமா என்றால் அது உண்மையில்லை என்றே நான் சொல்லுவேன். நிறைய எழுதினால், அவர் எழுத்தாளர் ஆகிவிடமுடியுமா என்றாலும், இல்லை. பிறகு எதுதான் எழுத்து… !!? அதுதான் இங்கே பிரச்சனை. அதுதான் இங்கே சர்ச்சை, அதுதான் இங்கே வம்பு சண்டை, அதுதான் இங்கே ஈகோ பிரச்சனை.
    நிறைய வாசிப்பவரின் எழுத்து, அவர் அடிக்கடி வாசிக்கின்ற பிரபல எழுத்தாளரின் நகலாக இருக்கும். வாசிப்பே இல்லாமல் எழுதிக்கொண்டே இருப்பவரின் எழுத்து எதுக்கும் உதவாததுபோல் இருக்கும். மண்மனம் என்பார்கள், தோட்டப்புற சூழலில் ஸ்ரீ சொன்னதுபோல் இருக்கும். பிறகு எப்படிதான் எழுதுவது என்கிற வகுப்பும் வல்லினத்தால் கொடுக்கப்பட்டும் விட்டது.. நிஜமாகச் சொல்கிறேன், எழுத்தை எப்படிப் போதித்தாலும், வராது. அது ஒரு வரம். அதை எழுதுவதற்கு அதீத தைரியம் தேவை.. இதுவரையிலும் நாம் கோழைகளே.
    ஒழுக்கமான வாழ்வை எழுத்தில் மட்டும் கொண்டுவந்து சுபம் போட்டுக்கொண்டிருக்கின்றோம், வெறும் உபதேசமாக.
    தொடருங்கள்.. இந்தக்கருத்துக்களை நான் வரவேற்கிறேன் ஸ்ரீ.

    (பி.கு, சொல்றியே நீ எழுது, என்று சொல்லவேண்டாம். நான் எழுத்தாளர் அல்ல, சகி, வாசகி.)

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...