மண் விழுந்தது

shapeimage_3நான்கு வருடங்கள் கழித்து மீண்டும் பொறியியல் மற்றும் பசுமை தொழில்நுட்பப் புலத்தின் அறை எண் E214-இல் வகுப்பு நடத்த இடமளிக்கப்பட்டிருந்தது. இம்முறை அங்கு சர்வதேச மாணவர்களுக்கு மலேசிய வரலாற்றையும் அரசியலையும் போதிக்கும் பாடம். அன்று அதுதான் முதல் வகுப்பு. வகுப்பில் பாடம் போதித்துக் கொண்டிருக்கும்போது மெசெஞ்சரில் தகவலொன்று வந்தது. அதையடுத்து எனக்குப் பாடம் நடத்த மனம் இருப்புக்கொள்ளவில்லை.

***

1993 ஆண்டு நிகழ்ந்த நிலச்சரிவில் ஹைலண்ட்ஸ் டவர் முற்றாக தரைமட்டமானது. மலேசியாவையே உலுக்கிய இச்சம்பவத்தில் 48 பேர் மரணமடைந்தனர். அதன் பிறகும் ஆங்காங்கே சில மண் சரிவு துயரங்கள் நிகழ்ந்தன. சில உயிர்கள் உயிரோடு மண்ணுக்குள் புதையுண்டன. பினாங்கு அம்னோ கட்டிடத்தின் முன் நடந்த ஒரு சம்பவத்தில் ஒரு கார் அதன் பயணியோடு மீண்டும் மீட்டெடுக்க இயலாத நிலையில் புதையுண்டு போனது. அதையடுத்து, அண்மையில் பினாங்கு தஞ்சோங் பூங்காவில் ஏற்பட்ட நிலச்சரிவு மிக மோசமானதாக கருதப்படுகிறது. 11 பேரின் உயிரைக் காவு வாங்கிய நிலச்சரிவு, நாட்டு மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் கோவத்தையும் ஏற்படுத்தியது.

காலை 8.30 மணியளவில் ஏற்பட்ட நிலச்சரிவில் 20 பேர் புதையுண்டதாக ஆரம்பக்கட்ட செய்திகள் வெளியாகின. புதையுண்டவர்கள் பெரும்பாலும் இந்தோனேசிய தொழிலாளர்கள். நிலச்சரிவு ஏற்படுவதற்கு காரணம் என்னவென்று ஆராயும்போது வழக்கமான அரசியல் விளையாட்டு தொடங்கியது. ஆளுங்கட்சியும் சரி, எதிர்க்கட்சிகளும் சரி எந்நேரத்திலும் கண்ணில் விளக்கெண்ணையை விட்டுக்கொண்டு அரசியல் சார்பான  ஏதாவது ஒரு பிரச்சனை  கிடைக்காதா! என காத்திருக்கும் வேளையில் இத்துயர சம்பவம் மத்திய அரசாங்கம் மாநில அரசாங்கத்திற்கு நெருக்குதல் கொடுக்க சாதகமாக அமைந்தது.

எதிர்க்கட்சியின் பிடியிலிருக்கும் பினாங்கு மாநிலத்தை எப்படியாவது அடுத்த பொதுத்தேர்தலில் கைப்பற்ற துடிக்கும் மத்திய அரசாங்கம் இத்துயரச் சம்பவத்தை வைத்து அரசியல் ஆட்டத்தை ஆரம்பித்தது. அதிகமான கட்டுமானத் திட்டங்கள் மேற்கொண்ட காரணத்தினால்தான் நிலச்சரிவு ஏற்பட்டதாக மாநில அரசாங்கத்தை குற்றம் சாட்டியது. இதில் வேடிக்கை யாதெனில் கடந்த கால  தே.முவின் ஆட்சியிலும் கூட இதே நிலைதான். பினாங்கில் மட்டுமல்ல, மலேசியாவின் பிறப்பகுதிகளில் மேற்கொள்ளப்படும் கட்டுமானத் திட்டங்களும் எந்த வரையறையும் இன்றி தொடர்ந்து அங்கீகரிப்பட்டே வருகின்றன. இதன் விளைவாக வீடுகளின் விலை தொடர்ந்து எகிறிக்கொண்டே போகின்றன. மேம்பாட்டாளர்களுக்கு ஆதரவான தமக்கு சாதகமான திட்டங்களை அங்கீகரிப்பத்தில் அரசியல் பேதமின்றி கட்சிகள் எல்லாம் ஒருசேரவே நடந்துகொள்கின்றன.

கோவத்தின் உச்சத்திலிருந்த பினாங்கு தஞ்சோங் பூங்கா மக்களும் அதிகமான கட்டுமானத் திட்டங்கள் மேற்கொண்டதை குற்றச்சாட்டாக முன்வைத்து மாநில அரசாங்கத்திடம் கேள்வியை எழுப்பினர்.  அப்பகுதியில் கட்டுமானம் தொடர்வதற்கு யார் அனுமதி வழங்கியது என கேள்விகள் எழுந்தன. கட்டுமானம் மேற்கொள்ளப்பட்ட பகுதியின் அருகாமையில் கல்குவாரி இருப்பதும் அங்கு வெடிவைத்து கல்லுடைக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்துகொண்டிருந்ததும் நிலச்சரிவு ஏற்படக் காரணமென பத்திரிக்கைகள் செய்திகளைப் படம்போட்டு வெளியிட்டன. வழக்கம் போல் அதிகாரக் கைகள் வெவ்வேறு தரப்பை நோக்கியபடியே காட்டிக்கொண்டிருந்தன.

வழக்கமாக இது போன்ற இயற்கை பேரிடர்களும், வேலை இட விபத்துகளும் நடந்த பிறகுreceived_10208035690970167 காரணங்களை ஆராய்வது போலத்தான் இந்த துயரத்தின் பின்னணியும் ஆராயப்பட்டது. ஆனால், கடந்த பத்தாண்டுகளில் பினாங்கு தீவின் நில விலையின் படு வேக வளர்ச்சியும் அதனால் வீட்டு விலை மிக சாமானியர் கைக்கு எட்டா நிலைக்கு உயர்ந்து விட்டதையும் யாரும் மறுக்க முடியாது. பினாங்கில் கட்டப்படும் வீடுகளின் விலை உண்மையில் மலேசிய பயனீட்டாளர்களைக் குறி வைத்து விதிக்கப்படுகிறதா என்பதே சந்தேகத்துக்குறியதுதான். காரணம் இங்கு வானளாவ உயர்ந்து நிற்கும் உயர்தர அடுக்கு மாடி வீடுகளில் பல சிங்கப்பூர், ஹாங்காங் குடிமக்களுக்கு சொந்தமானவை என்கிற பேச்சு பரவலாக உள்ளது. சாமானிய மக்கள் குடியிருந்த பழைய கம்பங்கள் பல இன்று மேம்பாட்டாளர்களின் கைக்குச் சென்று நவீன அடுக்கு மாடிகளாக மாறி விட்டன. கம்போங் புவா பாலா என்கிற  இந்தியர்கள் வாழ்ந்த கம்பம் தேசிய முன்னனியின் ஆட்சிகாலத்தில் மிக சாதுரியமாக மேம்பாட்டாளரிடம் விற்கப்பட்டதும் அதன் பின் எழுந்த அரசியல் கபடிகளும் யாவரும் அறிந்தவைதான்.

பினாங்கில் சொத்து விலை ஏற்றத்தின் நேரடியான தாக்கம் செல்வந்தர்களுக்கு சார்பாக இருப்பதும் தெளிவாக தெரிகிறது. லட்சக்கணக்கான வெள்ளிக்கு வீடு வாங்க வசதி படைத்த சமூகமாக இருக்கும் சீன மக்களே அதிகமாக பினாங்கு தீவில் புதிய வீடுகளை வாங்க முடிகிறது. நடுத்தர வாழ்வாதாரத்தையும் அதற்கும் கீழான வாழ்க்கை சூழலும் கொண்ட மலாய்காரர்களும் இந்தியர்களும் பினாங்கு தீவில் வீடு வாங்க முடியாமல், பினாங்கு பெருநிலத்திலும் கூலிம் வட்டாரத்திலும் கட்டப்படும் வீடுகளை தேடி வருவது வாடிக்கையாகிவிட்டது. ஆகவே இன்னும் சில ஆண்டுகளில் பினாங்கு தீவு செல்வந்தர்களுக்கு மட்டும் சொந்தமான இடமாக மாறிவிடும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த வியாபார பின்னணியில்தான், பினாங்கு தீவின் பல ஆபத்தான பகுதிகளிலும் மலைச் சரிவுகளிலும் புதிய அடுக்குமாடிகளை கட்ட மேம்பாட்டு நிறுவனங்கள் முன்வருகின்றன. ஆயினும் இது தொடர்பான குற்றச்சாட்டுகள் போதிய சுற்றுச்சூழல் புரிதல் இன்றி அரசியல் பழியாக மாற்றப்பட்டுவிடுவதால் தக்க தீர்வின்றி கிடப்பில் போடப்படுகின்றது (http://utaranews.com/2017/06/pulau-pinang-hadapi-ancaman-alam-sekitar-yang-serius-dibawah-pentadbiran-dap.html/)

அண்மைய துயரச்சம்பவத்தில் கூட மாநில அரசாங்கத்தைக் தற்காத்துக்கொள்வதற்காக சம்பவ இடத்திற்கு விரைந்த மாநில முதல்வர் லிம் குவான் எங், நிலச்சரிவை வேலையிடம் சார்ந்த விபத்து என வகைப்படுத்தினார். இருந்தாலும் பினாங்கு மாநில ஆளுநரின் உத்தரவுப்படி விசாரணை ஆணையம் அமைக்கப்படும் எனவும் அறிவித்தார். அதோடு கட்டுமானத்தை மேற்கொண்ட மேம்பாட்டாளரின் கட்டுமான உரிமம் இரத்து செய்யப்படுவதாகவும் அவர்கள் தொடரவிருக்கும் மற்ற கட்டுமானத் திட்டங்களுக்கு உடனடியாக தடை விதிப்பதாகவும் உத்தரவு பிறபிக்கப்பட்டது.

இதற்கிடையில் நிலச்சரிவில் புதையுண்டவர்களை மீட்கும்பணி துரிதப்படுத்தப்பட்டது. புதையுண்டவர்கள் பிணங்களாக மீட்கப்பட்டனர். இறுதியில் 11 பேர் மட்டுமே இந்நிலச்சரிவில் புதையுண்டதாக விபரம் கொடுக்கப்பட்டது. 11 பேரில் 10 பேர் அந்நியத் தொழிலாளார்கள். ஒருவர் உள்நாட்டைச் சேர்ந்தவர் எனவும் வேலையிடக் கண்காணிப்பாளராக இரண்டு வாரங்களுக்கு முன்பாக இவ்வேலையிடப் பகுதிக்கு மாற்றலாகி வந்தவர் எனவும் செய்திகள் வெளியாகின. இறந்தவர்கள் பெரும்பாலோர் அந்நியத் தொழிலாளர்கள் என்பதால் அவர்களது இறப்பையும் அவர்களை இழந்து தவிக்கும் குடும்பத்தினரின் வலியையும் உள்ளூர் மக்கள் மிக எளிதாக கடந்து சென்று விடுவர். ஆனால் அந்த இளம் கண்காணிப்பாளர் மலேசிய குடிமகன் என்பதால் மட்டும் என் மனம் பதரவில்லை.

***

நான்கு வருடங்களுக்கு முன்பு பொறியியல் மற்றும் பசுமை தொழில்நுட்பப் புலத்தின் அறை எண் E214-இல் முதன்முதலாக வகுப்பு வழங்கப்பட்டிருந்தது. மாணவர்களுக்கு தமிழ் வேற்றுமொழிப் பாடமாக போதித்தேன். அவ்வகுப்பில் ஐந்து மாணவர்கள் மட்டுமே. எல்லோரும் ஆண்கள், சீன மாணவர்கள். ஆக, ஒவ்வொரு வகுப்பும் கலகலப்பாகவே இருந்தது. எதைக் குறித்தும் பேச முடிந்தது. ஆக, எனக்கும் அவர்களுக்கும் இடையே நல்ல உறவும் புரிந்துணர்வும் இயல்பாகவே அமைந்தது. பதினான்கு வாரங்களில் நாங்கள் மிகவும் நெருக்கமானோம். அவர்களுக்கு நான் மிகவும் பிடித்தமான   விரிவுரையாளரானேன்.

அவர்களுக்கான வகுப்பு முடிந்தும் அவர்கள் என்னிடம் தொடர்பில் இருந்தனர்.  அவ்வப்போது என் அலுவலகத்திற்கு வந்து அரட்டை அடித்துவிட்டுச் செல்வார்கள். அவர்கள் ஐவரும் வெற்றிகரமாக அவர்களது பட்டப்படிப்பை முடித்தனர். பட்டமளிப்பு விழாவுக்குப் பிறகு நான் அவர்களைச் சந்திக்கவில்லை. ஆனால் அவர்கள் தொடர்பில் இருந்தனர். ஒவ்வொருவரும் நாட்டின் வெவ்வேறு பகுதியில் பணிக்கு அமர்ந்தனர். தம் மாணவர்கள் நல்ல நிலையில் எங்கோ இருக்கிறார்கள் என்னும் நிறைவு எல்லா ஆசிரியர்களுக்கும் உள்ளதுதான்.

நான்கு வருடங்கள் கழித்து மீண்டும் அதே E214 அறையில் வகுப்பு நடத்திக்கொண்டிருந்தபோது தான் மெசெஞ்சரில் தகவல் வந்தது.

”சார், உங்களுக்கு ’கோக் ஃபூனை’ ஞாபகம் இருக்கிறதா? கட்டுமானத்துறையைச் சேர்ந்த மாணவன்!” – உடன் புகைப்படம் இணைக்கப்பட்டிருந்தது.

”ஆம். ஞாபகம் இருக்கிறது” – என பதிலளித்தேன்.

”பினாங்கு நிலச்சரிவில் சிக்கிய கட்டுமான கண்காணிப்பாளர் ’கோக் ஃபூன்’ சார்” – மீண்டும் தகவல் வந்தது.

மனம் இருப்புக்கொள்ளவில்லை. கண்முன் அவன் அமர்ந்திருப்பதைப் போல் எண்ணம் ஓடியது. அவனது கலகலப்புகள் நிறைந்த அறை இப்போது வெறுமையாக தெரிந்தது.

நிலச்சரிவில் இறுதியாக கண்டெடுக்கப்பட்ட பிரேதம் அவனுடையதுதான்.  அதோடு நிலச்சரிவில் மண்ணில் புதையுண்டவர்களைத் தேடும் பணி நிறைவு பெற்றதாக அறிவிப்பு வந்தது. மண்ணில் புதையுண்டவர்களின் இறுதி மூச்சுக்காற்று அம்மண்ணில் கரைந்திருந்தாலும் இன்றுவரை அதன் ஈரம் என் மனதில் காயவில்லை.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...