மலேசிய நவீனச் சிறுகதை இலக்கியத்தில் 2000க்குப் பின்பான மூன்று முகங்கள் (இறுதிப் பகுதி)

கே. பாலமுருகன். (2013). இருளில் தொலைந்தவர்களின் துர்கனவுகள். கவர்

மலேசியா: வல்லினம் பதிப்பகம்.

இத்தொகுப்பில் மொத்தம் பன்னிரண்டு சிறுகதைகள். அவற்றில் குறிப்பிடத்தக்க சிறுகதை, ‘தங்கவேலுவின் 10-ஆம் எண் மலக்கூடம்’, ‘இருளில் தொலைந்தவர்களின் துர்க்கனவுகள்’ மற்றும் ‘பறையர்கள் இருந்ததாகச் சொல்லப்படும் வீடு’ கதைகள்தான். மற்ற சிறுகதைகள் முன்கூறியபடி விரிவாகப் பேசவேண்டிய தேவையில்லாத கதைகள். தொகுப்பின் முதல் கதையான ‘தங்கவேலுவின் 10-ஆம் எண் மலக்கூடம்’ சிறுகதை வெகுநிச்சயமாக சிறந்த மலேசியச்சிறுகதை என்று எப்போதும் அடையாளப்படுத்தப்படக் கூடியது. தோட்டப்புறங்கள் குறித்து எழுதுபவர்கள் இக்கதையை கவனத்தில் வைப்பது நல்லது. தோட்டப்புறங்களுக்கே உரித்தான, தனித்தன்மையான ஒரு விஷயத்தைக் கதைக்களமாகக் கொண்டு எழுதப்பட்ட இச்சிறுகதை ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தின் வாழ்வியலை நம் கண்முன் கொண்டு வருகிறது. இக்கதையினை வேறு நிலப்பரப்பில் இருந்து உதாரணமாகத் தமிழ்நாட்டிலிருந்து யாரும் எழுதுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை எனுமளவு, தோட்டப்புற வாழ்வியலோடு மட்டுமே இணைந்த ஒரு விஷயத்தைக் கதைக்கருவாக எடுத்துக்கொண்டதில்தான் இக்கதை முக்கியமாகிறது.

தோட்டப்புறங்களில் இருந்து நகரத்துக்கு வலுக்கட்டாயமாக நகர்த்தப்பட்டவர்களின் சிக்கல்கள் என்று பேசும்போது பெரும்பாலான எழுத்தாளர்கள் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் தங்கவைக்கப்பட்டவுடன் அவர்களது புழங்குவெளி குறைவதையும் இயற்கையோடு இயைந்ததொரு வாழ்க்கையை நடத்தியவர்கள், நகரத்தின் பரபரப்புக்கு ஈடு கொடுக்க முடியாது அந்நியப்படுவதை மட்டுமே அதிகம் எழுதியுள்ளார்கள். ஆனால் பாலமுருகனின் இச்சிறுகதை அதே சிக்கலின் வேறொரு பரிமாணத்தை நுட்பமாக விவரிக்கிறது. கதை சொல்லப்பட்ட விதத்தில் சிக்கல் இருக்கிறதுதான். எதற்கு கட்டுரை போன்ற உபதலைப்புகள்? ஒருவேளை அது புதியதொரு உத்தி என்று நினைத்துச் செய்திருக்கலாம். ஆனால் அது கதையின் ஓட்டத்தைப் பாதிக்கிறது, கதையின் திருப்பங்களைத் தலைப்பாக முன்கூட்டியே சொல்லிவிடுவதால் சுவாரசியம் குறைந்துவிடுகிறது. இந்த ஒரு விஷயத்தைச் சரி செய்திருந்தால் கதைக்கு வேறு கனம் கிடைத்திருக்கும்.

‘பறையர்கள் இருந்ததாகச் சொல்லப்படும் வீடு’ சிறுகதை நல்ல சிறுகதையே. ஆனால், அது எடுத்துக் கொண்ட விஷயத்திலிருந்து சற்றே விலகி விட்டதாகத் தோன்றுகிறது. மலேசியச் சமூகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளை விமர்சிப்பதாக ஆரம்பித்த கதை பிறகு தனிமனிதர்களின் குணாம்சங்களை, உளச்சிக்கல்களை வெளிப்படுத்தும் வகையில் மாறிவிடுகிறது. அது ஒன்று மட்டுமே இக்கதையில் உள்ள சிக்கலாக நான் உணர்கிறேன்.  ‘எச்சில் குவளை’ சிறுகதையையும் மற்றுமொரு குறிப்பிடத்தகுந்த ‘முயற்சியாக’ சேர்த்துக் கொள்ளலாம். அந்தச் சிறுகதையில் உள்ள சிக்கல் துண்டு துண்டான வாக்கிய அமைப்பில் கதையைச் சொல்லியிருப்பது.

பாலமுருகனின் இத்தொகுப்பிலுள்ள மற்ற சிறுகதைகளும் நல்ல சிறுகதைகளாக மாறியிருக்கும், அவர் அதற்கான காலத்தை எடுத்துக்கொண்டு அவற்றைச் செதுக்கியிருந்தால். பாலமுருகனின் எழுத்துகளில் எனக்குத் தெரிவது ஒருவித அவசரமே. சொல்லி முடித்தால் போதும் என்பதுபோன்ற ஒரு அவசரம். இதனால் சில இடங்களில் அவரது காட்சியமைப்புகள் மிகவும் நாடகத்தன்மையோடு அமைந்துவிடுகின்றன, பலநேரங்களில் அவரது சிறுகதைகளில் உள்ள உரையாடல்களும் கூட அப்படித்தான். தொடர்ந்த அவதானிப்பு, கதைகள் அவருக்குள் செழுமைப்படுவதற்காகக் காத்திருத்தல், பின் எழுதிய கதைகளைச் சீரமைக்க நேரம் எடுத்துக் கொள்ளுதல், மிக முக்கியமாக மூன்றாம் பார்வை கொண்டு சிறுகதைகளைச் சீர்படுத்துதல் என ஒரு சிறுகதை உருவாகத் தேவைப்படும் கால அவகாசத்தை அவர் வழங்க வேண்டும். அப்படிச் செய்தால் அவரிடமிருந்து இன்னமும் அதிக எண்ணிக்கையில் சிறப்பான சிறுகதைகள் வெளிப்படும் என்பது உறுதி.

ம.நவீன். (2015). மண்டை ஓடி. மலேசியா: வல்லினம் பதிப்பகம்.

11873758_1041742255838852_3368109114859042634_nஇந்தத் தொகுப்பில் மொத்தம் எட்டு கதைகள். அவற்றில் ‘மண்டை ஓடி’, ‘நெஞ்சுக்கொம்பு’, ‘மணிமங்களம்’, ‘இழப்பு’, ‘எனக்கு முன் இருந்தவனின் அறை’’ ஆகிய கதைகள் குறித்துப் பேசலாம். நவீனின் இந்தத்தொகுப்பில் உள்ள அனைத்துக் கதைகளிலும் உள்ள ஒரு ஒற்றுமை அதன் கூறுமுறை சிறப்பானது. அனைத்துமே நேர்கோட்டில் சொல்லப்பட்ட கதைகள்தான். பெருமளவு, கதைசொல்லும் தன்மையை நம்பியே சொல்லப்பட்ட கதைகள், உத்திகளென்று தனியாக ஏதுமில்லை என்றாலும் அனைத்துக் கதைகளும் சுவாரசியமான வாசிப்புக்கு உகந்தவையே. சமகால தமிழிலக்கியச் சூழலின் நவீன சிறுகதைகளை மலேசியாவில் எழுதக்கூடிய எழுத்தாளர்களில் ம.நவீன் குறிப்பிடத்தகுந்தவராக உள்ளதற்கு அவரது கூறுமுறையும் ஒரு முக்கியக் காரணம்.

‘மண்டை ஓடி’ என்ற வித்தியாசமான தலைப்பில் எழுதப்பட்டுள்ள இக்கதை மனிதர்களின் விநோதமான, முன்கணிக்க முடியாத குணங்களைப் பற்றிப் பேசுகிறது. நேர்கோட்டில், தன்மையிலிருந்து சொல்லப்படும் கதை. ஒரு விட்டேத்தியான லும்பன்தனமான கதாபாத்திரத்தின் சித்தரிப்பு மட்டுமே இக்கதையில் முக்கியமானது.

‘நெஞ்சுக்கொம்பு’’ மிகச்சிறப்பாகச் சொல்லப்பட்ட கதை. கதாபாத்திரச் சித்தரிப்புகளும், தோட்டப்புறச்சூழலும் சிறப்பாகச் சொல்லப்பட்டிருக்கிறது. குறிப்பிடும்படியான நுண்சித்தரிப்புகளும் உள்ள கதை. ஒரு நல்ல கதை என்பது மீள் வாசிப்புகளில் வாசகன் புதிய விஷயங்களைக் கண்டடையும்படியாக இருக்கவேண்டும். ஓலம்மா அன்னாசிச் செடிகளை நட்டு வைப்பது அவ்வாறான ஒரு நுண்சித்தரிப்பு.

‘மணிமங்களம்’ முதல் வாசிப்புக்கு மிகச்சாதாரணமான ஒரு சிறுகதையாகத் தோன்றக்கூடியது. ஆனால் இதில் உள்ள நுட்பம், கணவன் தனது மனைவி மீது கொள்ளும் வேட்கை, அதை அவன் அடையும் விதம் என்றும் அர்த்தப்படுத்திக் கொண்டால் வேறுதளத்திற்கு நகரும் விதமாக அமைக்கப்பட்ட சிறுகதை.

‘இழப்பு’’ பலரால் சிலாகிக்கப்பட்ட சிறுகதை என்றாலும், முன்பே குறிப்பிட்டது போல தோட்டப்புறத்திலிருந்து வெளியேற்றப்பட்டவர்கள் எதிர்கொள்ளும் புழங்குவெளி குறைதல் என்ற விஷயத்தைச் சொல்கிறது. அதை ஒரு சிறுவனின் பார்வையில் முன்னிறுத்துகிறது என்பது மட்டுமே வித்தியாசம் என்பதால் அதைப் பெரிய அளவில் என்னால் பாராட்ட முடியவில்லை.

‘எனக்கு முன் இருந்தவனின் அறை’ என்ற சிறுகதை முழுக்க முழுக்க சொற்களை வைத்து நிரவப்பட்ட கதையாகத்தான் எனக்குத் தோன்றுகிறது. இக்கதையில் கனமான சொற்பிரயோகங்கள், வாக்கிய அமைப்புகள் உண்டு, ஆனால் சிக்கல் என்னவென்றால் இதுபோன்ற முயற்சிகள் ஏற்கெனவே தமிழில் செய்யப்பட்டுவிட்டன. வாசிக்கும்போது அவை நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை. இந்தக்கதையின் தன்மை எனக்கு ரமேஷ்-பிரேமை நினைவூட்டியது.

இச்சிறுகதைத் தொகுப்பில் உள்ள மற்ற சிறுகதைகளான நொண்டி, ஒலி, ஆகியவையும் வாசிப்புக்குச் சிறப்பானவைதான். நவீனுக்கு எது சிறுகதை என்பதில் தெளிவுள்ளது, எதை எப்படிச் சொல்லவேண்டுமென்ற கதை சொல்லும் லாவகம் கைவந்துவிட்டது. இனி அவர் நேர்கோட்டு உத்தியில் மட்டும் கதை சொல்வதை விடுத்து வேறுசில புதிய கூறுமுறைகளையும் உத்திகளையும் முயற்சி செய்து பார்க்கவேண்டும் என்பதே என்னுடைய கருத்து.

இறுதியாக, மலேசியப் படைப்புகளின் பொதுவான சிக்கல் அவை தனக்கென ஒரு வகைமையை உருவாக்க முயலாமல் தமிழகப் படைப்புகளை நகலெடுக்க முயல்வதுதான் என்று தோன்றுகிறது. அதன் அடுத்த சிக்கல் இன்னமும் அது தன்னுடைய மூதாதையர் காலத்திலேயே சிந்தனையை வைத்திருப்பது. நவீன வாழ்க்கை முறை எனும்போது தமிழகத்தைவிட பத்தாண்டுகள் முன்னே இருக்கும் மலேசியத் தமிழர்கள் சிந்தனையில் மட்டும் ஐம்பதாண்டு பின்னே இருக்கும் ரகசியம் எனக்குப் பிடிபடவில்லை. கல்விச்சூழலை ஒரு காரணமாகச் சொல்ல முடியவில்லை. சமூகச் சூழலில் அரசியலற்ற அழகியல் சார்ந்த படைப்புகள் இருக்கும்தான், இருப்பதில் தவறில்லை, ஆனால் மொத்தப் படைப்புலகமும் அரசியல் நீக்கம் செய்யப்பட்ட படைப்புகளால் ஆனது எனும் சூழல் ஆரோக்கியமானதா என்ற கேள்வியும் எழுகிறது. மேலே குறிப்பிட்ட மூன்று படைப்பாளிகளில் இரண்டு படைப்பாளிகளிடம் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. நவீன சிந்தனை அவர்கள் மூலமாகத்தான் பல்கிப் பெருக வேண்டும். வேறு சாத்தியங்கள் இதுவரை கண்ணில் படவில்லை. (யுவராஜனின் அடுத்த தொகுப்பை நான் இன்னும் வாசிக்கவில்லை.)

ஒரு சமூகம் மானுடத்தின் உன்னதம் என்று நம்பப்படுவதை ஒட்டி, சற்றும் தாழாமல் இருப்பது போல நடந்துகொள்வதும் படைப்பில் அதை அப்படியே பிரதிபலிப்பதும் ஒருவிதமான தேர்ந்த கூட்டு நடிப்புதான். இலக்கியம் எப்போதும் மானுடத்தின் உன்னதங்களைப் பேசுவதைவிட மனித மனத்தின் கசடுகளை, கீழ்மைகளை நோக்கியே பேசும். அது அன்றி இலக்கியம் நல்ல கருத்துகளைச் சொல்வதற்காக மட்டுமே என்ற பாலர்பள்ளி வாதங்கள் அந்தச் சமூகம் இன்னமும் முதிர்ச்சியடையவில்லை என்றே காட்டுகிறது. மேலும் அவ்வாறான படைப்புகளை இலக்கியம் என்பதன்கீழ் வகைப்படுத்த வேண்டிய தேவையில்லை. அப்படிச் செய்வோமானால் இதற்கு முன் இலக்கியத்திற்காகத் தங்களை அர்ப்பணித்துக்கொண்ட பல்வேறு உண்மையான எழுத்தாளர்களை, படைப்பாளிகளை அசிங்கப்படுத்துவதாகிவிடும். இலக்கியப் படைப்பாளி என்று தன்னைக் கூறிக் கொள்பவன் உண்மையிலேயே அவர்களை வாசித்திருப்பானேயானால் தான் எழுதுவதை இலக்கியம் என்று பேசுவதற்கு ஒருபோதும் துணியமாட்டான். அதை வாசகனும் காலமும் தீர்மானிக்கட்டும் என்று விட்டுவிடுவான். ஆனால் இங்கே மலேசியாவில் மாலை, மரியாதைகளுக்கும், விருதுகளுக்குமான ஒரு குறுக்கு வழியாகவே இலக்கியம் என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. வாழ்வில், சிந்தனையில், வாசிப்பில், கருத்தியலில் எந்தவிதமான முக்கியத்துவமும் இல்லாத ஒருவர்கூடத் தன்னை ‘இலக்கியவாதி’ என்று அடையாளப்படுத்திக்கொண்டு மாலை, மரியாதைகளைப் பெறமுடியும். தமிழ்நாட்டிலும் இச்சூழல் உண்டுதான், ஆனால் அவர்கள் இதுதான் இலக்கியம் என்றோ, நாங்கள்தான் இலக்கியவாதிகள் என்றோ கூறிக்கொள்வதில்லை. தீவிர இலக்கியம் என்பது தனி வகைமை என்பதை, அந்த வகைமைக்குள் தாங்கள் வரப்போவதில்லை என்று புரிந்து கொண்டு ஒதுங்கி விடுகிறார்கள். இவ்வளவு சத்தம் போடுவதில்லை.

தீவிர இலக்கியம் என்பது நிச்சயமாக வேறுதான். மலேசியத் தமிழ் இலக்கியச்சூழலில் அவ்வாறான வகைமைக்குள் வருவதற்கான முயற்சிகள் ஒருசிலரால் மட்டுமே எடுக்கப்படுகின்றன. இது அதிகரிக்க வேண்டியதே இன்றைய தேவை. ஒரு இனத்தின் உயர்வு, தாழ்வில் படைப்பாளிகளுக்கும் பங்குண்டு. தங்களைப் படைப்பாளி என வகைப்படுத்திக் கொள்பவர்கள் இதை உணர்ந்தால் இவ்வாறு, நடைமுறையில் இல்லாத மானுட மேன்மைகளையும் உன்னதங்களையும் பேசி நடித்துக் கொண்டிருக்க மாட்டார்கள். அல்லது அப்படி நடித்துக் கொண்டிருக்கும் எவரும் தங்களைப் படைப்பாளி என்றழைத்துக் கொள்ளும் அருகதையற்றவர்கள் என்று சொல்லத் தோன்றுகிறது.

‘ஓர் இனம் தாழ்வுற்றுத் தன் நிலை அறியாது கிடக்கும்போது அந்த இனத்தில் எழுதும் கவிஞர்களுக்குப் பொறுப்பு கூடிவிடுகிறது. சும்மா உடல்மொழி, மனமொழி என்றெல்லாம் பேசிக்கொண்டிருப்பதில் அர்த்தமில்லை. இனம் இருந்தால்தான் கவிதையெல்லாம். பெரிய பெரிய விஷயங்களைப் புரிந்து வைத்திருப்பவர்கள் இந்த எளிய உண்மையை மறந்து விடக்கூடாது’ என்பார் கவிஞர் விக்ரமாதித்யன். இது கவிஞர்களுக்கு மட்டுமின்றி அனைத்து படைப்பாளிகளுக்கும் பொருந்தும்.

3 கருத்துகள் for “மலேசிய நவீனச் சிறுகதை இலக்கியத்தில் 2000க்குப் பின்பான மூன்று முகங்கள் (இறுதிப் பகுதி)

 1. ஸ்ரீவிஜி
  December 6, 2017 at 2:47 pm

  இன்னொரு சிக்கலும் உண்டு ஸ்ரீ, “படைப்பாளிகளைப் பாராட்டுதல்களின் மூலமாக மட்டுமே ஊக்குவிக்க முடியும், நிறைவாக இல்லாத எழுத்துகளின் ஏற்ற இறக்கங்களை விமர்சனம் செய்தால், எழுதுகிற `சிலரும்’ எழுதாமல் கோபித்துக்கொண்டு சென்றுவிடுவார்கள், பிறகு நாட்டு நிலவரத்தை எழுத `எலுத்தாளர்கள்’ இல்லாமல் போய்விடும் நிலை வந்துவிடும், என்கிற கவலையில், சோகத்தில், துக்கத்தில், துயரத்தில் மூழ்கிக் கிடக்கின்ற `இலக்கியவாந்திகள்’ அதிகம் பேர் இங்கே. பார்த்து எழுதுங்க தல. 😉

 2. யாழினி முனுசாமி
  December 7, 2017 at 12:42 pm

  நன்று. இருப்பினும் இன்னும் கூடுதலாகக் கதைகளை விளக்கி எழுதி இருக்கலாம்.

  • December 24, 2017 at 12:40 pm

   யாழினி, உங்கள் கருத்துக்கு நன்றி. விமர்சனம் ஒரு படைப்பை விமர்சிக்கும் பொருட்டு, அதன் சாதக, பாதகங்களை ஆராயும் பொருட்டு, அந்தப்பிரதி இலக்கியத்தில் எங்கே தன்னை இருத்திக் கொள்கிறது, அல்லது அதற்கு இடம் உண்டா என்ற விவாதத்தைத் துவங்கும் பொருட்டு எழுதப்படுவது. அதில் கதை சொல்லத் தேவையில்லை. குறிப்பிட்ட பிரதியை ஏற்கெனவே வாசித்தவர்கள், தங்களுடைய கருத்துகளை ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ள அவ்விமர்சனத்தை வாசிக்கலாம் அல்லது ஒருவேளை இந்த விமர்சனத்தின் மூலமாக அந்தப் பிரதியை அடையலாம். எனில் இவர்களுக்கு நான் ஏன் கதை சொல்ல வேண்டும்? கதை சொல்வது படைப்பாளியின் வேலை, விமர்சிப்பவர்கள் வேலையல்ல. விமர்சகன் முன்பு நான் குறிப்பிட்ட வேலையைச் செய்கிறவன். விமர்சனம் என்ற பெயரில் பாராட்டுரை எழுதி முதுகு சொறிபவர்கள் ஆரம்பித்து வைத்த பழக்கம் இது என்றே யூகிக்கிறேன். அல்லது ஒரு மொண்ணையான புத்தகத்தில் குறிப்பிட்டுச் சொல்ல எதுவுமே இல்லாமல் போகிறபோது பக்கங்களை நிரப்ப அதைச் செய்திருக்கலாம். அல்லது ஒருவேளை எப்படி விமர்சிப்பது என்று தெரியாமல் மண்டையைச் சொறிந்தவர்கள் தொடங்கி வைத்ததாக இருக்கலாம் என அனுமானிக்கிறேன்.
   மற்றொரு எதிர்பார்ப்பு விமர்சனத்தில் கூறப்படும் கருத்துகள் அனைத்திற்கும் அந்த விமர்சனத்தில் ஆதாரம் கொடுக்கவேண்டும் என்பது, அதாவது ஒரு கருத்தைக் கூறினால் அதற்கு அடுத்து உடனேயே பிரதியிலிருந்து சில வரிகளை ஆதாரமாகச் சுட்டிக்காட்ட வேண்டும் என்று எதிர்பார்ப்பதும் முட்டாள்தனமானது. கூறப்படும் கருத்துக்கான, விமர்சனத்துக்கான சான்று அந்தப் பிரதியில் இருக்கிறது. அதை எடுத்துப்பார்க்கக்கூடத் திராணியில்லாத வாழைப்பழச் சோம்பேறிகளுக்கு என்ன சொல்வது? எல்லாவற்றுக்கும் ஆதாரத்தை இணைத்துக் கொடுக்க, நான் விமர்சனம் செய்கிறேனா இல்லை அரசாங்கத்திடம் உதவித்தொகை கேட்டு மனுச்செய்கிறேனா? தமிழிலும் ஆங்கிலத்திலும் நல்ல விமர்சனம் என்று கருதப்படுகின்ற பல விமர்சனங்கள் பிரதியிருந்து ஒருவரியைக்கூடக் குறிப்பிடாதவையாக இருந்திருக்கின்றன. எனும்போது இதெல்லாம் எவ்வளவு academic ஆன சிந்தனைகள். தவறு உங்களிடம் இல்லை, அப்படியான சூழ்நிலையை உருவாக்கி இதுதான் விமர்சனம் என்று நம்பவைத்திருக்கிறார்கள். இதிலிருந்தெல்லாம் வெளியே வரவேண்டிய காலகட்டம் வந்துவிட்டது. தொடர்ந்து வாசியுங்கள், கேள்வி கேளுங்கள், சுதந்திரமாக யோசியுங்கள். நன்றி.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...