எஸ். பி. பாமா: கலையமைதியை விழுங்கிய தீவிரம்

எஸ்.பி.பாமா

எஸ்.பி.பாமா

மலேசிய பெண் எழுத்தாளர்களில் 80களில் எழுதவந்த எழுத்தாளர் எஸ்.பி. பாமா. பின்னர் வானொலி தொலைக்காட்சி பக்கம் ஒதுங்கியவர் நீண்ட இடைவெளிக்குப் பின் 2002-ஆண்டு முதல் மீண்டும் அச்சு ஊடகங்களுக்கு எழுதத் துவங்கினார். நாளிதழ் ஞாயிறு பதிப்புகளில் வெளிவந்த (2002க்கு பிறகு என்று நினைக்கிறேன்) பதிமூன்று சிறுகதைகளைத் தொகுத்து ‘அது அவளுக்குப் பிடிக்கல’ என்ற தொகுப்பாக வெளியிட்டுள்ளார் (2004). இவரது சிறுகதைகளும் ‘பவுன் பரிசு’ முதலான வெற்றிகளைப் பெற்றுள்ளதோடு வாசகர்களின் ஆதரவையும் பெற்றுள்ளன.

அவ்வகையில், எஸ்.பி பாமா முன்னர் அறிந்த மூத்த எழுத்தாளர்களைவிட மிகவும் அண்மைய காலத்தவர் என்று சொல்லலாம். அவர் சமகால எழுத்து முறையையும் இலக்கிய போக்கையும் நன்கு அறியக்கூடிய எல்லா தொழில்நுட்ப வசதிகளையும் கொண்ட இக்கால படைப்பாளியாவார். நவீன சிறுகதை உள்ளீடுகளை அறிந்துகொள்ள எல்லா வாய்ப்புகளும் அவருக்கு உணடு.  அவர் முழுக்க முழுக்க இன்று வாழும் மலேசிய பெண்களின் அடையாளமாக தன் எழுத்துக்களை முன்நிறுத்த முடியும்.

ஆனால் அவர் தொகுப்பில் இருக்கும் பதிமூன்று கதைகளையும் ஒரு சேர வாசிக்கும்போது அவர் முன்னைய படைப்பாளிகளைக் காட்டிலும் பலகீனமான கதைகளையே எழுதியிருக்கிறார் என்று தோன்றுகிறது. கருத்து எதிர்வினைகளுக்கு அவர் முக்கியத்தும் கொடுப்பதாலும் தான் சிந்திக்கும் கருத்தை வலிந்து வாசகனிடம் சேர்ப்பிக்கும் முயற்சியாலும் அவரது சிறுகதைகள் இலக்கிய தரம் குன்றியவையாக உள்ளன.

ந.மகேஸ்வரி, பாவை, க.பாக்கியம் போன்றே இவரின் படைப்புகளும் பெண்களின் குடும்ப வாழ்க்கைச் சவால்களையே முதன்மைப்படுத்தியுள்ளன. அடுத்ததாக தாய் அன்பு பற்றிய கவனத்தை முன்வைக்கிறார். உதிரியாக சில கதைகளும் உண்டு ‘ஶ்ரீ கிருஷ்ணா’ போன்று. ஆகவே இவரது கதையில் புதிய அல்லது தனித்துவமான கருத்துகள் ஏதும் இல்லை. 60-களிலும் 70-களிலும் எழுதப்பட்ட அதே விடயங்களை வேறு களத்தில் வேறு கோணத்தில் மீண்டும் சொல்கிறார். மிக மேலோட்டமான காட்சிப்படுத்துதலும் உச்சத்தை நோக்கி நகர்வதில் அவசரம் காட்டுவதும் இவரது கதைகளின் இயல்பு.

பிற எழுத்தாளர்களிடம் இருந்து இவரை வேறுபடுத்தும் ஒரு கூறு உண்டென்றால் அது இவரிடம் உள்ள நகைச்சுவை உணர்வுதான். “வேலன் மீண்டும் வேலைக்கு போகிறார்’, ‘மண்டையர்’, ‘ஶ்ரீகிருஷ்ணா’ போன்ற கதைகளின் சாரத்திலும் உரையாடலிலும் இழையோடும் நகைச்சுவை உணர்வை ரசிக்க முடிகிறது. ஆனால் ‘கற்போடு விளையாடாதே” கதையில் உள்ள அபத்த நகைச்சுவையை கடுமையாகக் கருதவேண்டியுள்ளது.   .

சமூக அமைப்பு அல்லது பெண்களின் நிலை குறித்தெல்லாம் அவர் தன் எதிர்வினைகளை மிகத் தீவிரமாக வைக்கிறார். அந்தத் தீவிரமே அவர் கதைகளில் கலையமைதி இல்லாமல் செய்கிறது. இவர் கைக்கொள்ளும் மொழியும் அவசரமாகவும் ஆவேசமாகவும் புறப்பட்டு அடங்கும் மேடைப்பேச்சு மொழியாக இருக்கிறது.

‘அது அவளுக்குப் பிடிக்கல’ என்கிற சிறுகதை, ஒரு பெண் சமூகத்தால் தன் மனதுக்குப் பிடிக்காத பல விடயங்களையும், சடங்கு, சம்பிரதாயம், குடும்ப மதிப்பு, உலக வழக்கு போன்ற காரணங்களால் சுமக்க வேண்டிய நிர்பந்த நிலையை விளக்குகிறது. தலைப்பைப் படித்ததுமே இக்கதையின் மையம் புரிந்து விடுகிறது. ஆனால் இக்கதையில் 38 முறை (முன்னுரையில் மாத்தளை சோமு எண்ணி எழுதியிருக்கிறார்) ‘அது அவளுக்குப் பிடிக்கல” என்ற வாக்கியத்தை அவர் பயன்படுத்தியுள்ளது, புனைவைவிட தன் எதிர்விணை வாசகர் உள்ளத்தில் ஆழப் பதியவேண்டும் என்ற முனைப்பையே காட்டுகிறது. பெண் ஒருத்தி தனக்குப் பிடிக்காத ஒரு சூழலுடன் சமரசம் செய்து வாழும் நிலையையே க.பாக்கியத்தின் “மன விகாரங்கள்” கதையும் மையப்படுத்துகிறது. ஆனால் அக்கதையில் காணப்படும் நேர்த்தி எஸ்.பி.பாமாவின் படைப்பில் அமையவில்லை.

எஸ்.பி பாமவின் சிறுகதை பெண்பாத்திரங்கள் இயல்புநிலையில் இருந்து விலகி இருக்கின்றனர். அவர்கள் ‘சினிமாத்தனமான’ கதாபாத்திரங்களாக, கே.பாலச்சந்தர் படத்தில் வரும் புரட்சி நாயகிகள் போல் யதார்த்தமற்றுப்  படைக்கப்பட்டுள்ளனர். அந்தக் கதாபாத்திரங்கள் படைப்பாளியின் குரலை ஓங்கி ஒலிக்க மட்டுமே பயன்படுகின்றன.  “அது அவளுக்குப் பிடிக்கல, ‘விகரம் விகாரமல்ல’, ‘விகாரம்’, பெண்ணே நிமிர்ந்து விடு’ ‘கற்போடு விளையாடாதே’, ‘கறுப்பு உடையில் ஒரு தேவதை’ போன்ற கதைகளின் பெண் பாத்திரங்கள் வாசகனுக்கு கடந்த நூற்றாண்டு மேடை நாடக நடிப்பையே நினைவுறுத்தும். அவர்கள் அதிகமாக உணர்ச்சிவசப்படுகிறார்கள். அதிகமாகப் பேசுகிறார்கள் அல்லது அரற்றுகிறார்கள், பின் வாசகன் முன் தோன்றி தங்களைப் பெண்ணியப் புரட்சியாளர்களாக ஏற்றுக்கொள்ள வற்புறுத்துகிறார்கள்.

இவரது பெண் பாத்திரங்கள் அனைத்திற்கும் உள்ள ஒரே ஒரு பொதுவான ஒற்றுமை, அவர்கள் வெளிப்படையாக பேசக்கூடியவர்கள் அல்லது பழகக்கூடியவர்கள் என்பதாகும். அவர்கள் தங்கள் மனதில் படுவதை ஒளிவு மறைவு இன்றி பொதுவில் பேசுகிறார்கள். ‘விகரம் விகாரமல்ல’ கதை நாயகி தன் பாலியல் தேவையை மாமியார் மாமனாரிடம் கூறி சண்டை பிடிக்கிறாள். ‘விகாரம்’ கதையில், பிற ஆண்களையும் அவர்களின் தோற்றத்தையும் அழகையும் தன் கணவன் உடன் இருக்கும்போதே அவள் மிக சகஜமாக புகழ்கிறாள். ‘கருப்பு உடையில் ஒரு தேவதை’ கதையில் ஒரு விளையாட்டாலனோடு சகஜமாகப் பேசிப் பழகுகிறாள். அதனால் அவர்கள் மேல் விழும் தவறான கண்ணோட்டத்தை அவர்கள் பொருட்படுத்துவது இல்லை. நவீன பெண்களுக்கு இந்த வெளிப்படைப் போக்கும் துணிவும் அவசியம் என்பதை எஸ்.பி.பாமா தன் பாத்திரங்கள் வழி உணர்த்துகிறார் என்று கொள்ளலாம். அதே சமயம் இந்த வெளிப்படை போக்கால் தடுமாறும் அல்லது சபலப்படும் ஆண்களை அவர் கடுமையாகச் சாடுகிறார். இது, பெண்களைப் பொதுவெளியில் சோஸியலாக பழகத் தூண்டுவதே ஆண்கள் தங்கள் சுயநலத்திற்குத் தீனி போடவே, என்கிற க.பாக்கியத்தின் குற்றச்சாட்டை எஸ்.பி.பாமா முற்றிலும் மறுக்கும் கண்ணோட்டமாகும். நவீனப் பெண்கள் வெளி அழுத்தங்கள் இன்றி தங்கள் எல்லைகளைத் தாங்களே வகுத்துக்கொள்ள வேண்டும் என்ற கருத்தை எஸ்.பி. பாமா கூறினாலும் அதை சிறுகதைக்குள் கூறும் முறையில் தடுமாறி இருக்கிறார்.

‘விகரம் விகாரமல்ல’ என்ற கதையின் நாயகி “கன்னியா இருக்கும்போது நான் அனுபவிக்காத, கற்பனையில் உணராத வாலிப சுகத்தை ஆறு மாசம் அனுபவிச்சிட்டேன். அதனால் எனக்கு இன்னொரு கல்யாணம் அவசியம். ஏன் உங்களோட பாஷையில் சொல்றதுன்னா ருசி கண்ட பூனை. என்னோட உணர்வும் செத்துடல. இந்த வயசுல உடல் உணர்ச்சி தலைதூக்குறது இயற்கை. அதை நானா வரவழைச்சுகல” என்று தன் மாமியாரிடம் ‘வெளிப்படையாக’ பேசி தான் மறுமணம் செய்ய விரும்புவதன் நோக்கத்தை விளக்கி வாதிடுகிறாள். இந்த விவாதத்திற்கு முதிர்கண்ணியாக வீட்டில் வாழும் நாத்தியும் மாமனாரும் பார்வையாளராகின்றனர். இவ்வளவு அபத்தமான கதையை பெண் ஒருவர் எழுதுவதே பெண்ணிய எழுத்துப் புரட்சி என்று எஸ்.பி.பாமா தவறான அபிப்பிராயம் கொண்டுள்ளார் என்று தோன்றுகிறது

அடுத்து அவசியம் குறிப்பிட வேண்டிய மற்றொரு சிறுகதை, ‘பெண்ணே நிமிர்ந்து விடு’. மனைவிக்கு தெரியவரும் கணவனின் கள்ளக் காதல் விவகாரத்தை அடிப்படையாக கொண்டு எழுதப்பட சிறுகதை. இதே கருத்தை அடிப்படையாக வைத்து பாவை, க.பாக்கியம் இருவரும் கதை எழுதியுள்ளதை முன்பே பார்த்தோம். அதே வரிசையில் பாமாவும் ஒரு கதை எழுதியுள்ளார். பாவை தன் எதிர்வினையாக அமைதியான பிரிவைக் காட்டியிருப்பார். க.பாக்கியம் தாலியைக் கழற்றி கணவனின் காலடியில் வைத்தவிட்டு வெளியேறும் நங்கையைக் காட்டியிருப்பார். சமகாலப் பெண்ணிய எழுத்தாளர் எஸ்.பி. பாமா விவாகரத்து செய்யப் போவதோடு தன் இளமைக்கும் அழகிற்கும் ஏற்ற ஆணை மறுமணம் புரிந்து கொண்டு மகிழ்ச்சியாக வாழப்போவதாக தன் கணவனிடமே சவால்விடும் பெண்ணை காட்டியிருக்கிறார். ஒரே சிக்கலை மூன்று காலகட்டங்களில் மூன்று விதமாக அணுகும் பெண்களை இக்கதைகளில் காணமுடிகிறது. மலேசியப் பெண்கள் குடும்பம் சார்ந்த தங்கள் கருத்துகளில் மெல்ல மாறிவருகிறார்கள் என்பதை உணரமுடிந்தாலும் அதை ஒரு பிரச்சாரமாக பேசும் எஸ்.பி பாமாவின் தொணி எரிச்சல் ஊட்டக் கூடியது.

அடுத்த நிலையில் எல்லா பெண்ணிய எழுத்தாளர்களும் அவசியம் எழுதும் தாயன்பு பற்றிய இரண்டு கதைகள் உள்ளன. “அம்மா-ஆன்மா-ஆசை” மற்றும் “சாம்பலாகிவிடும்” ஆகிய இரண்டு கதைகளும் வெளிவந்த காலத்தில் வாசகர்களால் அதிகம் பேசப்பட்டிருக்கக் கூடும் என்பதை நூலின் பின்னினைப்பாக சேர்த்துள்ள விமர்சனக் குறிப்புகள் காட்டுகின்றன. ஒரு தாயின் மரணத்திற்குப் பின் நடக்கும் நிகழ்வுகளில் ஒளிந்திருக்கும் போலித்தனங்களை அமானுஷ்ய உத்தியோடு சொல்லப்பட்ட கதை. வயது முதிர்ந்த தாயும் தன் பிள்ளைகளின் தொடுகைக்கு ஏங்குகிறாள் என்பது ரெ.கார்த்திகேசுவைப் (விமர்சன குறிப்பில் குறிப்பிட்டிருக்கிறார்) போலவே என்னையும் சற்று சிந்திக்கவே செய்தது. ஆயினும் கச்சிதமாகச் சொல்லப்படவேண்டிய விவரங்களைக் கூட நீட்டி முழங்கி சொல்லிக் கொண்டு செல்லும் கதைப் போக்கால் கதை முடிந்து பின் மீண்டும் தொடங்கி அலுப்பூட்டுகிறது.

‘சாம்பலாகிவிடும்’ சிறுகதை, அம்மாவின் இறுதிச் சடங்குகள் நடைபெறும் நேரத்தில் மகள் அம்மாவின் நினைவுகளை மீட்டுணரும் வகையில் எழுதப்பட்டுள்ளது. நல்ல தொடக்கமாக கதை தொடங்கினாலும், தொடர்பற்ற பல விடயங்கள் (ஜோதி- தன்முனைப்புப் பயிற்சி- முன்பகை) சேர்ப்பால் கட்டுப்பாடு இல்லாமல் செல்லும் படகுபோல் சென்று விபத்துக்குள்ளாகி விடுகிறது. மேலும் மரணமுற்றவர்களைக் குளிப்பாட்டும் முறையில் உள்ள தவறுகள், சமூகக் கண்ணோட்டம் என்றெல்லாம் அதிகப்படியான விமர்சனங்களை படைப்பாளர் இக்கதையை பயன்படுத்திச் சொல்லியுள்ளார். ஆயினும், இறந்த பிறகும் பெண்களை நிர்வாணமாகப் பார்க்க (குளிப்பாட்டும் போது) சிலர் ஆர்வமாக இருப்பார்களா? எக்கி எக்கி எல்லாம் பார்ப்பார்களா? என்ற சந்தேகம் எனக்கு இருந்துகொண்டே இருக்கிறது.

எஸ்.பி பாமாவின் கதைகள் அதிகப்படியான சமூக விமர்சனப் போக்கால் தன் கலையை இழந்து சோபையாக நிற்கின்றன. அதோடு முன்னுரையில் மாத்தளை சோமு மறைமுகமாகச் சொல்வது போல் இக்கதைகள் அனைத்தும் கறாராக எடிட் செய்யப்பட்டிருக்க வேண்டும். ஒரு சிறுகதைக்குள் இருக்க வேண்டிய பகுதிகளைத் தவிர அனாவசியமாக புகுத்தப்படும் அனைத்து பகுதிகளும், (அவை எவ்வளவு அற்புதமான கருத்தாக இருந்தாலும்,) அக்கதைக்கு தொங்குசதைதான். அதிக பாரத்தை சுமந்து கொண்டு பறவைகள் பறப்பதில்லை. தன் சக்திக்கும் தேவைக்குமான பொருட்களை மட்டுமே அவை தூக்கிச் செல்கின்றன. அதனால்தான் அவற்றால் அதிக உயரம் பறக்க முடிகின்றது. எஸ்.பி பாமாவின் சிறுகதைகள் கப்பலை தூக்கிக்கொண்டு பறக்க முனையும் சிட்டுக் குருவிகளைப் போல் திணறி நிற்கின்றன.

முடிவு

முடிவாக, நான்கு படைப்பாளிகளின் சிறுகதைகளையும் ஒட்டுமொத்தமாக நோக்கும்போது சில விடயங்களைக் குறிப்பிடலாம்.

சிறுகதை என்பது இலக்கிய வடிவில் வார்க்கப்படும் ஒரு கலை வடிவம். அவ்வகையில் மேற்கண்ட படைப்புகள் கலையழகு குறைந்த படைப்புகளாக அமைந்துள்ளன. ஆகவே சிறுகதைகளை கலைநயத்தோடு இலக்கியமாகப் படைப்பதில் பெண் படைப்பாளிகள் முன்னகர வேண்டியுள்ளது. சிறுகதையை ஒரு கலைவடிவமாக பார்க்கும் போக்கின்றி அதைக் கருத்துகளைக் கடத்தும் ஒரு ஊடகமாக மட்டுமே பயன்படுத்துவது பொதுவாக எல்லா பெண் படைப்பாளிகளிடமும் காணப்படுகின்ற ஒரு பலகீனம். இதன் காரணமாகவே அவர்களின் படைப்புகளில் கலையமைதி கூடிவராத பல படைப்புகள் உள்ளன

உண்மையில் ஒரு இலக்கியப்படைப்பின் கலையமைதியை வரையறுத்துச் சொல்வது இயலாது. படைப்பில் கலையமைதி அமைவது மிகவும் நுட்பமான பகுதியாகும். அதற்கு அகண்ட வாசிப்பும் தொடர் பயிற்சியும் தேவை. ஆகவே கருத்துத் தீவிரத்தை மட்டும் முன்னிறுத்தும் படைப்புகள் தங்கள் கலையழகை இழந்து பிரச்சாரப் படைப்பாகிவிடுகின்றன. மேற்கண்ட நான்கு படைப்பாளிகளின் கதைகளில் கலையமைதியை விட பிரச்சார நெடிதான் அதிகமாக இருக்கிறது. தெளிவான இறுக்கமான கருத்துக்களை எழுத, சிறுகதை வடிவத்தை விட கட்டுரை வடிவமே சிறந்ததாக இருக்கும்.

ஒரு சம்பவத்தை கதாபாத்திரங்களின் துணையுடன் விவரிப்பது, ஒரு கருத்தை நிலைநிறுத்த ஆதாரங்களை அடுக்கி வாதிப்பது, ஒரு சமூகப் படிப்பினையை புகுத்த திட்டமிட்டுக் கதை வளர்ப்பது போன்ற நடவடிக்கைகள் சிறுகதையின் கலையமைதிக்கு முற்றிலும் எதிரானவையாகும்.   ஒரு சம்பவம் சிறுகதையாக மாறும் புள்ளியை பல படைப்புகளும் தொடவில்லை என்பது தெளிவாகிறது. அதேபோல் முடியவேண்டிய சரியான இடத்தை விட்டு மேலும் நீளும் கதைகள் பல உள்ளன. அவை தேவையற்ற வழவழப்புகளாக நீண்டு கொண்டு செல்வது அப்படைப்பின் தோல்வியாகும்.

இக்கதைகளில் காலம் குறித்த தெளிவான முடிவுகளுக்கு வரமுடியவில்லை. பெரும்பான்மையான கதைகள் கால பிரக்ஞையே இன்றி எழுதப்பட்டுள்ளன. “ஒரு ஊரில் ஒரு அரசன் இருந்தான்….” என்று தொடங்கும் சிறுவர் கதைகள் வாசகனுக்குத் தரும் காலம் குறித்த பொதுவான சித்தரிப்பையே இத்தொகுப்புகளில் பெரும்பான்மைக் கதைகள் கொடுக்கின்றன. தட்டையான கதை தலைப்புகள், தெளிவற்ற கதைக்களம் போன்ற சிக்கல்களும் உள்ளன

அதோடு, மலேசியப் பெண் எழுத்தாளர்களுக்கு நாட்டு நடப்பு அல்லது அரசியல் விடயங்களில் நாட்டமே இருக்காதோ என்று சந்தேகிக்கும் வகையில், அரசியல் சார்ந்த கதை  ஒன்றுகூட இந்தத் தொகுப்புகளில் இடம்பெறவில்லை. தேசிய பொருளாதாரம், வேலைவாய்ப்பு, இன மோதல்கள், மத சச்சரவுகள் போன்ற வெளி உலக சிக்கல்களும் இடம்பெறவில்லை. அதே போன்று அறிவியல் புனைவுகளோ எதிர்காலவியல் கதைகளோ எழுதப்படவில்லை. வரலாற்று அடிப்படையிலான புனைவுகள்கூட ஏதும் இல்லை. கம்யூனீஸ்டு பயங்கரவாதம், மே இனக்கலவரம் போன்ற வரலாற்று நடப்புகளை நேரடியாக அனுபவித்திருக்கக்கூடிய மூத்த படைப்பாளிகளான இவர்கள் அந்த அனுபவங்களை கதைகளுக்குள் கொண்டுவராமலே விட்டுள்ளனர். பாவையின் ‘செல்லாக்காசு’ மட்டுமே சமகால வரலாற்றை அடிப்படையாக கொண்டுள்ளது.

மேலும், ஆண் எழுத்தாளர்களிடையே சமகாலத்தில் அதிகமாக பேசப்பட்ட முற்போக்கு கருத்துகளும் பகுத்தறிவு பேச்சுகளும் மலேசிய பெண் எழுத்தாளர்களைக் கொஞ்சமும் கவரவில்லை என்பது உறுதியாகிறது. அவர்கள் அந்த வாதங்களை விட்டு முற்றாக தங்கள் வாழ்க்கையை விலக்கிக் கொண்டுள்ளனர். சாதிய எதிர்ப்பு, தொழிற்சங்கப் போராட்டம் போன்ற சமூகத் தளங்களுக்குள் அவர்கள் நுழையவில்லை. அவர்கள் சமூகச் சிந்தனையோடுதான் கதைகளை எழுதுகிறார்கள் என்றாலும் அவை குறுகிய எல்லைகளைக் கொண்டிருப்பவை. மேலும் வாழ்க்கையைத் தத்துவார்த்த நோக்கோடு அவர்கள் அணுகுவதில்லை. அன்றாடப் பிரச்சனைகளில் இருந்தே அவர்களின் வாழ்க்கை புரிதல் அமைகிறது.

அவர்கள் குடும்பச் சூழல்களாலும் வாழ்வியல் பரபரப்புகளாலும் கவரப்பட்டவர்களாகவே உள்ளனர். ஆண் பெண் உறவு குறித்த முழு விழிப்பு நிலையில் அவர்கள் வாழ்க்கை நகர்கிறது. தனிமனித ஒழுக்கம் என்பதே அவர்களின் அன்றாடச் சிந்தனையாக இருக்கிறது. பண்பாட்டு இறுக்கமும், சமய ஈடுபாடும் மிக்கவர்களாக உள்ளனர். தெய்வ பக்தியுடன் வாழ்கின்றனர். அவர்களின் எதிர்பார்ப்பு மிக எளிமையானதாகவே இருக்கிறது. அன்பும் நேர்மையும் கொண்ட ஒரு துரோகமிழைக்காத கணவனை வாழ்க்கைத் துணையாக பெறுவது மட்டுமே அவர்களின் பேராவலாக இருக்கிறது. ஆயினும் அவர்களின் அந்த எளிய அவா மிக நீண்ட காலமாகவே சமூகத்தால் மறுக்கப்பட்டு வருகிறதோ என்கிற எண்ணம் நம்மை அதிர்ச்சியடையச் செய்கிறது.

ஆகவே கணவன் மனைவி பிரச்னைகளையும் குடும்பச் சிக்கல்களையும் மையமிட்டு மீண்டும் மீண்டும் எழுதப்படும் பெண் எழுத்தாளர்களின் படைப்புகளை ‘அடுப்பாங்கரை’ இலக்கியம் என்று சிறுமைப்படுத்தி ஒதுக்கிவிட முடியாது. காரணம் அவர்கள் குடும்பச் சிக்கல்களை மையமிட்டு எழுதினாலும், அவற்றை கச்சாப்பொருளாக்கி தொலைக்காட்சி தொடர்கள் போல் வியாபாரம் செய்வதில்லை. மாறாக பெண் சமூகத்தின் மனஆதங்கத்தை தொடர்ந்து வலியுறுத்தும் ஒரு களமாகவே பயன்படுத்துகின்றனர்.

ஆயினும், தாங்கள் வாழ்வில் சந்தித்த அல்லது கேள்விப்பட்ட ஒரு சிக்கலை நேரடியாக வாசகனுக்கு மீண்டும் சொல்வது நவீன சிறுகதைகளின் பணி அல்ல. சிறுகதையில் முன்வைக்கும் பிரச்னைகளைத் தாண்டி வாசகனுக்கு வாழ்க்கையின் புதிய திறப்புகளைச் செய்யவல்ல ஆற்றல் அச்சிறுகதைக்கு அமைய வேண்டும். க.பாக்கியமும் எஸ்.பி பாமாவும் காரசாரமான விவாதங்களைத் தங்கள் சிறுகதைகளில் வைக்கின்றனர். ஆயினும் அவர்களின் விவாதத்தின் முடிவை வாசகனால் மிக எளில் புரிந்துகொள்ள முடிகிறது. பெரும்பாலும் அவை மையப் பிரச்னைகளின் புறவயப் பார்வையாகவே உள்ளன. இறுதியில் வாசகனுக்கு முடிந்த முடிவாக ஒரு கருத்தை முன்நிறுத்துகின்றன. வாசகனுக்குச் சிந்திப்பதற்கு அவை கொஞ்சமும் இடமளிப்பதில்லை. நவீன கலைப்படைப்புகள் முன்னிறுத்தும் பன்முகப் பார்வை அவற்றில் சாத்தியமற்று போகின்றன.

வாசக இடைவெளியற்ற முழுதும் படைப்பாளியின் கட்டுப்பாட்டில் அமைகின்ற படைப்புகளே இலக்கியம் என்கிற பிழையான புரிதல் எல்லா எழுத்தாளரிடமும் இருப்பதை அறியமுடிகிறது. சிறுகதைக் கலையின் முக்கிய கூறுகள் அது விட்டுச் செல்லும் வாசக இடைவெளியும் புதிய திறப்புகளுக்கான சாத்தியங்களுமேயாகும். 1934ல் மணிக்கொடியில் புதுமைப்பித்தன்  “இலக்கியத்தை அனுபவிக்கும் முறையை உணர்த்த முன்வரவேண்டும்” என்று எழுதியதில் பொதிந்திருக்கும் ‘இலக்கிய அனுபவம்’ நம் நாட்டு முன்னோடி நவீன பெண் படைப்பாளிகளின் சிறுகதைகளில் கிடைக்காததை கவனப்படுத்தவேண்டியுள்ளது.

ஆகவே இலக்கிய கட்டமைப்புக்குள் செறிவுடனும் கலையமைதியுடனும் தங்கள் கருத்துகளை முன்வைப்பதில் முன்னோடிகள் எதிர்நோக்கிய சிக்கல்களை இனிவரும் எழுத்தாளர்கள் வென்றெடுப்பார்கள் என்று எதிர்ப்பார்ப்போம்.

 

மேற்கோள்

எம். எஸ். ஶ்ரீலஷ்மி. (மார்ச் 2015). பன்முக நோக்கில் மலேசியப் பெண் எழுத்தாளர்களின் புதினங்கள் – ஓர் ஆய்வு. இணைப்பு: http://vallinam.com.my/version2/?p=1864.

பாலபாஸ்கரன். (டிசம்பர் 2010). முருகு சுப்ரமணியனும் தமிழ் முரசும் மலாயாச் சிறுகதை மன்னர்களும். இணைப்பு: http://balabaskaran24.blogspot.my/2010/12/blog-post_15.html

சை. பீர்முகம்மது. (1999). வேரும் வாழ்வும். கோலாலம்பூர்: முகில் எண்டர்பிரைசஸ்.

ம. திருமலை. (). கல்கி முத்திரைக் கதைகள்.

ம. நவீன் (தொகுப்பாசிரியர்). (2016). புனைவுநிலை உரைத்தல். சிலாங்கூர்: வல்லினம் பதிப்பகம்.

மா.  இராமையா. (1996). மலேசிய தமிழ் இலக்கிய வரலாற்றுக் களஞ்சியம். சேலம்: புரட்சிப் பண்ணை.

நா. மகேஸ்வரி. (ஜூன் 2007). மலேசியத் தமிழ் இலக்கியத் துறையில் பெண்கள். இணைப்பு: http://vallinam.com.my/issue1/essay3.html

2 கருத்துகள் for “எஸ். பி. பாமா: கலையமைதியை விழுங்கிய தீவிரம்

  1. ப.மணிஜெகதீசன்
    February 5, 2018 at 1:59 pm

    நல்ல ஆய்வு. ஆனால், எழுத்தாளர்களை எட்டுமா? /தகவல்களைக் கடத்தும் ஊடகமாக சிறுகதைகளை/பயன்படுத்தினர் என்பது மிகவும் சரியே.

  2. அகிலா
    March 5, 2018 at 3:48 pm

    கட்டுரை அருமை. //அன்பும் நேர்மையும் கொண்ட ஒரு துரோகமிழைக்காத கணவனை வாழ்க்கைத் துணையாக பெறுவது மட்டுமே அவர்களின் பேராவலாக இருக்கிறது. ஆயினும் அவர்களின் அந்த எளிய அவா மிக நீண்ட காலமாகவே சமூகத்தால் மறுக்கப்பட்டு வருகிறதோ என்கிற எண்ணம் நம்மை அதிர்ச்சியடையச் செய்கிறது.// ஹாஹாஹாஹாஹாஹா

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...