Etger Keret: மொழிப்பெயர்ப்புச் சிறுகதைகள்

ETGAR-KERET-PHOTO-ANNA-KAIMஇஸ்ரேலிய எழுத்தாளர் Etger Keret (1967) சமகால உலக இலக்கியத்தில் முக்கியமான சிறுகதையாசிரியா்களில் ஒருவர். Pipelines (צינורות, Tzinorot, 1992), அவரது படைப்பில் வெளியான இம்முதல் சிறுகதை நூல் மிகக் கடுமையான புறக்கணிப்புக்கு உட்பட்டது. ராணுவத்தில் தன்னுடன் பணிபுரிந்த நண்பனின் மரணத்திற்குப் பிறகு எழுத வந்த அவரது இரண்டாவது நூல் Missing Kissinger  (געגועיי לקיסינג’ר, Ga’agu’ai le-Kissinger, 1994) ஐம்பது மிகக் குறுகிய கதைகளின் தொகுப்பாக வெளிவந்தது. அவருடைய ‘Siren’ சிறுகதை இஸ்ரேலிய சமுதாயத்தின் முரண்பாடுகளைச் சொன்னவிதத்தில் அந்நாட்டு பாடத்திட்டத்தில் இடம்பெற்றது. கிராபிக்ஸ் நாவல், சிறார் கதைகள், காமிக்ஸ் என இதுவரை முப்பதுக்கும் மேற்பட்ட மொழிகளில் அவரது நூல்கள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. Missing Kissinger சிறுகதை நூல் அதையடுத்து வந்த The Chamber Quintet என்ற தொலைக்கட்சி காமடி தொடர் ஆகியவை ஆஸ்திரேலியாவை அடியொட்டு வரும் எழுத்து முறைக்கும் வணிக லாபத்தை ஈட்டுத்தரும் அடியொட்டு வரும் எழுத்து முறைக்கும் அப்பால் சென்று இஸ்ரேலிய சமூகத்தின் அவலங்களைத் தனக்கே உறிய மொழிநடையின் வாயிலாக கூறியதில் இளைஞர்களின் ஏகோபித்த ஆதரவையும் சல்மான் ருஷ்டி போன்ற பழம்பெரும் எழுத்தாளர்களின் பாராட்டுகளையும் பெற்றது.

கரிட், இலக்கியத்திற்காக பிரதமரின் விருதையும் அந்நாட்டு கலாச்சார அமைச்சகம் வழங்கிய சினிமா விருதுகளையும் பெற்றுள்ளார். அவர் எழுதி இயக்கிய குறும்படம் மல்கா லெவ் அடோம் (Malka Lev Adom (Skin Deep, 1996) (ஸ்கின் டீப், 1996) Film Academy விருதையும் Munich International Festival of Film Schoolsஇன் முதல் இடத்தையும் வென்றது. Jellyfish என்ற படத்திற்காக Camera d’Or என்ற பரிசை  2007இல் Cannes Film Festivalலில் பெற்றுள்ளார். இவரது பெரும்பாலான படைப்புகள் The New York Times, Le Monde, The Guardian, The Paris Review and Zoetrope இதழ்களிலும் பிரசுரம் கண்டுள்ளன. இதைத் தவிர, 40க்கும் மேற்பட்ட குறும்படங்கள் இவரது கதைகளைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளன. பிற எழுத்தாளா்களின் கதைகளையும் இவரே காமிக்ஸாகவும் குறும்படமாகவும் இயக்கியிருக்கிறார். தற்போது Ben-Gurion பல்கலைக்கழகத்தில் விரியுரையாளராகப் பணிபுரியும் இவரது கதைகள் National Public Radioவிலும் பலமுறை வாசிக்கப்பட்டுள்ளன.

கரிட்டின் பல கதைகள் குறுங்கதைகள் என்றாலும் கூறும் முறையில் பல்வேறு நுட்பங்களைக் கையாண்டிருப்பார். மனித கசடுகள், தனிமையால் உண்டாகும் வெறுமை, மானுடத்தின் புரிதல்கள், உலகின் சாத்தியமற்ற தன்மைகள், அந்நியமாகும் மனித இயல்புகள், மாய எதார்த்தங்களுக்கும் கட்டுக்கதைகளுக்கும் இடையே தென்படும் நுண்ணிய இடைவெளிகள் என இறந்த காலம், நிகழ் காலம், எதிர்காலம் என அவரது கதைகள் விரிகின்றன. அன்றாட வாழ்வில் புழங்கும் சொற்களையும் எளிய, ஆனால் கூர்மையான நையாண்டிகளையும் அவரது எழுத்தில் காணமுடிகிறது. பெரும்பாலான கதாபாத்திரங்களுக்குப் பெயர்களே இருப்பதில்லை. தன்னை ஒரு முக்கிய தாராளவாத இடதுசாரி இஸ்ரேலியராக கட்டமைத்துக் கொண்டியங்கும் இவர் உள்நாட்டு, சர்வதேச ஊடகங்களில் புனைவு, அபுனைவு வழியாக எதிர்வினைகளைப் பதிவு செய்துகொண்டேயிருக்கிறார்.  

கட்டுப்பாடு (Cramps)

அந்த இரவு நான் ஒரு நாற்பது வயது பெண்ணாக இருப்பதுபோல கனவு கண்டேன், என் கணவர் பணி ஓய்வுபெற்ற ராணுவ படைத்தளபதி. அவர் அக்கம் பக்கத்தில் இருக்கும் ஏழை எளியவர்களுக்காக சமூக மையம் ஒன்றை நடத்திக் கொண்டிருந்தார். அவருடைய சமூக திறன்கள் ஒன்றுக்கும் உதவாததாக இருந்தன. அவருடைய தொழிலாளர்களே அவரை வெறுத்தார்கள் காரணம் எல்லா நேரங்களிலும் அவர் தொழிலாளர்களிடம் கத்திக்கொண்டே இருந்தார்.  அடிப்படை பயிற்சிகளைக் கற்றுக்கொள்ள வந்தவர்களை நடத்துவதுபோல தங்களிடம் அவர் நடந்துகொள்வதாக  அவர்கள் புகார் கூறினர். ஒவ்வொரு காலையும் ஒரு முட்டை பொறியல், நல்லிரவு உணவாக கன்றிறைச்சி கட்லட்டுடன் மசித்த உருளைக்கிழங்கையும் செய்து கொடுத்தேன். நல்ல மனநிலையில் இருக்கும்போது, உணவு ருசியாக இருப்பதாக சொன்னார். ஒருபோதும் சாப்பிட்ட பின் மேசை துடைத்து சுத்தம் செய்ய மாட்டார். மாதத்திற்கு ஒருமுறை, வீட்டிற்கு இறந்த மலர்களின் பூச்செண்டுகளைக் கொண்டு வருவார், அவற்றை குடியேறி பிள்ளைகள் மங்கிய சாலை விளக்கொளி நிரம்பிய சாலை சந்திப்பில் விற்றுக்கொண்டிருப்பார்கள்.

அந்த இரவு நான் ஒரு நாற்பது வயது பெண்ணாக இருப்பதுபோல கனவு கண்டேன், எனக்கு தசைபிடிப்புகள் இருந்தன. அன்றைய இரவுநேரம், திடீரென்று என்னுடைய மாதவிடாய் குப்பிகள் தீர்ந்துவிட்டது ஞாபகத்துக்கு வந்தது. என் கணவரை எழுப்புவதற்கு முயற்சி செய்கிறேன். அவர் பணி ஓய்வு பெற்றுவிட்ட ராணுவ படைத்தளபதி. மருந்தகத்திற்கு அழைத்து செல்லும்படி கேட்கிறேன், குறைந்தபட்சம் காரில் ஏற்றிச் செல்லவாவது கேட்கிறேன். என்னிடம் கார் ஓட்டும் உரிமம் இல்லை, அப்படியே உரிமம் இருந்தாலும்கூட எங்களிடம் ராணுவத்துக்குச் சொந்தமான கார்தான் இருக்கிறது. அதை ஓட்டுவதற்கு எனக்கு உரிமை இல்லை. நான் மிகுந்த நெருக்கடியில் இருக்கிறேன் என்பதைக் கூறினேன், அப்போதும் அவர் புறப்படவில்லை. தூக்கத்தில் முணுமுணுத்துக் கொண்டே இருந்தார். உணவு மோசமாக இருந்ததென்று, ராணுவ சமையல்காரர்கள் இனி விடுமுறையையே மறந்துவிடும் அளவுக்கு அது இருந்ததென்று, ஏனென்றால் இது இராணுவம் கோடைக்கால முகாமல்ல என்று முணுமுணுத்துக் கொண்டிருந்தார். நான் திசுக்களை மடித்து வைத்துக் கொண்டு குப்புற படுத்துவிட்டேன். முடிந்தவரை மூச்சு விடவில்லை, துளித்துளியாய் கசிந்து வெளியாகாமல் இருக்க. ஆனால் என் மொத்த உடலும் ரணமாய் சுட்டது. இரத்தமும் துருத்திக் கொண்டு உடலிலிருந்து வெளியானது, உடைந்த கழிவுநீர் குழாயிலிருந்து நீர் பாய்ச்சி அடிப்பதுபோல சத்தம் வெளிபட்டது. என் இடுப்பு மற்றும் கால்கள் வழி கசிந்து வயிற்றின் மீது தெறித்தது. திசுக்கள் என் முடிகளிலுல் தோள்களிலும் ஒட்டிக்கொண்டு ஈரமாகி தடித்தது.

அந்த இரவு நான் ஒரு நாற்பது வயது பெண்ணாக இருப்பதுபோல கனவு கண்டேன், என்மீது நானே அதிருப்தி கொண்டிருந்தேன். கார் ஓட்டும் உரிமம் இல்லாத நிலையில், ஆங்கிலம் தெரியாமல், ஒருமுறைகூட வெளிநாட்டுக்கு பயணங்கள் போயிருக்காமல் இருக்கும் என் வாழ்க்கையின்மீதும் வெறுப்படைந்திருந்தேன். என் மீது பாய்ந்தோடிக் கொண்டிருக்கும் இரத்தம் இறுகிக் கொண்டிருந்தது. அது ஒரு சாபம் போல ஆகியிருப்பதை உணர்ந்தேன். என் காலம் எப்போதுமே முடிவடையாதது போலிருந்தது.

அந்த இரவு நான் ஒரு நாற்பது வயது பெண்ணாக இருப்பதுபோல கனவு கண்டேன், நான் தூங்கிவிட்டிருந்தேன், மனைவியைக் கர்ப்பமாக்கிவிட்ட இருபத்தி ஏழு வயது ஆணாக இருப்பது போல கனவு கண்டேன். பின்னர் மருத்துவ கல்லூரி முடிந்து அவளையும் குழந்தையையும் வெளிநாட்டுக்கு உடன் குடியேற வற்புறுத்தினேன். அவர்கள் மோசமாக வதைப்பட்டார்கள். அவர்களுக்கு ஆங்கிலத்தில் ஒரு சொல்கூட தெரியாது. அவர்களுக்கு நண்பர்கள் இல்லை, வெளியில் எப்போதும் குளிராகவே இருக்கும், பனி பொழியும். பிறகு, ஒரு ஞாயிற்றுக்கிழமை, நான் அவர்களை சிறு சுற்றுலா ஒன்றுக்கு அழைத்துச் சென்று புல்வெளியில் பாயை பரப்பிப் போட்டேன். அவர்கள் சுற்றுலாவுக்காக எடுத்து வந்திருந்த பையிலிருந்து உணவு பண்டங்களை எடுத்து வைத்தனர். நாங்கள் சேர்ந்து சாப்பிட்ட பிறகு, நான் துப்பாக்கியை எடுத்து அவர்களை நாய்போல சுட்டேன். காவலர்கள் என் வீட்டுக்கு வந்தனர். இல்லினாய்ஸ் காவலர்களில் மிகத் தேர்ந்த துப்பறிவாளர்கள் என்னை கொலை குற்றவாளியாக்க முயன்றார்கள். அவர்கள் என்னை இந்த அறைக்குள் வைத்தார்கள், என்னை தூற்றினார்கள், புகைபிடிக்க அனுமதிக்கவில்லை, கழிவறைக்கு போகவும் என்னை அனுமதிக்கவில்லை, ஆனாலும் நான் ஒருபோதும் உடைந்துபோய்விட மாட்டேன். கட்டிலில் என் அருகில் படுத்திருந்த கணவர் வசைத்துக் கொண்டிருந்தார். “இதற்கு முன் நீ எப்படி நடந்துகொண்டாய் என்பது பற்றியெல்லாம் எனக்கு பொருட்டில்லை. இப்போ இங்க நான்தான்  ராணுவ படைத்தளபதி.”

ஜிப்பைத் திறந்து (Unzipping)

அது ஒரு முத்தத்திலிருந்துதான் தொடங்கியது. பெரும்பாலும் அது முத்தத்திலிருந்துதான்images தொடங்கும். எலாவும் த்சீகியும் கட்டிலில் இருந்தனர், நிர்வாணமாய், நாக்குகள் இரண்டு மட்டும் தொடுகையில் இருந்தன. அப்போதுதான் அவள் ஏதோ குத்துவதுபோல உணர்ந்தாள். “நான் உன்னை காயப்படுத்தி விட்டேனா?” அவன் கேட்டுக் கொண்டிருக்கும்போதே அவள் இல்லை என்று தலையசைத்தாள். பேசுவதைத் தொடர்ந்தவனாய் “உனக்கு ரத்தம் வருகிறது” என்றான். அதேபோல அவள் வாயிலிருந்து ரத்தம் வழிந்தது. “என்னை மன்னித்துக்கொள்,” என்றவன் சமையலறையில் வெறிகொண்டு எதையோ தேடினான். குளிர்சாதனப்பெட்டியைத் திறந்து ஐஸ்-கட்டிகள் உறைந்திருந்த பாத்திரத்தை எடுத்து மேசை மீது அழுத்தித் தட்டினான். “இதோ, இதை வைத்துக்கொள்,” குளிரில் நடுங்கிய கைகளில் சில ஐஸ்-கட்டிகளை ஏந்தியிருந்தான். “உன் உதட்டில் வைத்துக் கொள் ரத்தம் நின்றுவிடும்.”  இந்த மாதிரியான விசயங்களில் த்சீகி சரியாகவே நடந்துக் கொள்வான். ராணுவத்தில் இருந்தபோது மருத்துவ உதவியாளனாய் இருந்தான். அவன் பயிற்சி பெற்ற சுற்றுலா வழிகாட்டியும்கூட. “என்னை மன்னித்துவிடு. நான் கடித்துவிட்டேன் போல. உனக்குப் புரியும்தானே… கட்டுக்கடங்காத உணர்ச்சியிலென்று.” “பரவாயில்ல,” அவனை பார்த்து சிரித்தாள். ஐஸ்-கட்டி அவளது கீழ் உதட்டில் ஒட்டிக் கொண்டது. “அதெல்லாம் ஒன்னுமில்ல,” அவள் சொல்வது பொய்தான். காரணம், உண்மையில் ஏதோ நடந்திருக்கிறது. நம்மோடு வாழ்ந்துகொண்டிருப்பவர் தினம் தினம் நம்மை இப்படி காயப்படுத்திக் கொண்டிருக்க வாய்ப்பில்லை. ஏதோ குத்திதான் ரத்தம் கசிவது நடக்கிறது என்று நாம் உணர்ந்துவிட்ட பிறகு தவறுதலாக கடித்துவிட்டதாக பொய் சொல்லும்போது ஏற்க முடியாததுதான்.

அவள் உதட்டில் வெட்டுக் காயம் இருந்ததால் சில நாட்களாக அவர்கள் முத்தம் கொடுத்துக்கொள்ள வில்லை. உடலில் அதிக உணர்ச்சிமிக்க பாகம் உதடுகள்தான். அதன்பிறகு முத்தமிட வாய்ப்பிருக்கும்போதெல்லாம் மிக கவனமாக இருந்துகொண்டார்கள். அவன் தன்னிடமிருந்து எதையோ மறைப்பதாக அவனிடம் சொல்ல முனைந்தாள். ஒரு இரவு அவள் அதை உறுதிபடுத்தியும் விட்டாள். அன்று அவன் வாய்பிளந்து உறங்கும்போது, நாக்குக்கடியில் விரல்களைவிட்டு தூக்கி நோட்டமிட்டாள். கண்டுபிடித்தாள்; அது ஒரு ஜிப். மிகச் சிறிய ஜிப். அவள் அதை இழுத்தபோது த்சீகி ஒரு சிப்பியைப் போல் முற்றிலுமாய் திறந்துகொண்டான். அவன் உள்ளுக்குள் ஜர்கன் இருந்தான். த்சீகியைப் போல அல்லாமல் ஜர்கனுக்கு குறுந்தாடி இருந்தது, காதின் பக்கவாட்டு முடிகள் மிக கவனமாக மழிக்கப்பட்டிருந்தன, அவனுடைய ஆண்குறி சுன்னத்து செய்யப்படாமல் இருந்தது. எலா அவனது உறக்கத்தில் அவனை கவனித்துக் கொண்டிருந்தாள். கொஞ்சமும் சத்தமில்லாமல் த்சீகியை சுருட்டி மடித்து சமையலறை அலமாரியில் குப்பைத் தொட்டியின் பின்புறம் மறைத்து வைத்தாள். அங்குதான் குப்பைப் பைகளை வைப்பது வழக்கம்.

ஜர்கனுடனான வாழ்க்கை அவ்வளவு சுலபமானதாக இருக்கவில்லை. அவனுடன் புணர்வது அலாதியாக இருந்தது. அவன் அதிகம் குடித்தான். அதிகம் குடிக்கும்போதெல்லாம் படுபயங்கரமாக அமளி துமளி செய்து சங்கடமான சூழலை உருவாக்கிவிடுவான். இதெல்லாவற்றையும்விட மேதிகமாக, வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் எலாவை குற்றவுணர்ச்சிக்கு ஆளாக்குவதில் ஜர்கன் முனைப்புக் காட்டிக் கொண்டே இருந்தான். அவளுடன் வாழ்வதற்காக ஐரோப்பாவிலிருந்து வந்ததைச் சொல்லிச் சொல்லி நோகடித்தான். இந்த நாட்டில் ஏதாவது நடந்துவிட்டாலோ, அது நிஜ வாழ்க்கையுடன் தொடர்புடையதாக இருந்தாலும் சரி தொலைக்காட்சியில் பார்த்த ஒன்றாக இருந்தாலும் சரி “நீ வந்திருக்கின்ற நாட்டை பாரு,” என்பான். அவன் பேசும் ஹிப்ரூ மொழி கேட்கவே நாராசமாய் இருந்தது. அவன் சொல்லும் ‘நீ’ என்னும் சொல் ஒரு குற்றச்சாட்டாக ஒலித்தது. அவளுடைய பெற்றோருக்கு அவனைப் பிடிக்கவில்லை. த்சீகி அதிகம் நேசித்த எலாவின் அம்மா ஜர்கனை வேற்றுசாதிக்காரன் என்றே அழைத்தாள். அப்பா ஜர்கனின் வேலை குறித்து கேட்கும்போதெல்லாம் ஜர்கன் நகைப்புடன் பதில் சொல்வான். “வேலை என்பது தாடி மாதிரி திரு.ஷிவ்ரோ. அது பழைய ஸ்டைல் ஆகி நீண்ட நால் ஆகுது.” அவனுடைய பதில் அத்தனை அறிவுப்பூர்வமாக அவர்களுக்குப் படவில்லை. அதிலும் எலாவின் அப்பாவுக்கு. அவர் இன்னமும்கூட வேலை செய்து கொண்டிருந்தார்.

கடைசியாக, ஜர்கன் போய்விட்டான். டசல்டார்வ்வுக்கு திருப்பி, அங்கு இசையமைத்துக் கொண்டு அதில் வரும் வருமானத்தில் வாழ்வை ஓட்டிக் கொண்டிருந்தான். அவளுடன் வாழ்ந்த நாட்டில் அவனால் பாடகனாக ஆகவே முடியவில்லை. அதற்கும் அவன் பதில் சொன்னான், தன்னுடைய உச்சரிப்புகளை அவர்கள் தனக்கெதிராக வைத்ததாக. அங்குள்ளவர்கள் அனைவரும் பாராபட்சமானவர்கள் என்று, அவர்களுக்கு ஜெர்மனியர்களைப் பிடிப்பதில்லை என்று, அவனுடைய விசித்திரமான இசையும் ரசனையூட்டாத வரிகளும் உண்மையில் அவனை அவர்களிடமிருந்து தள்ளியே வைத்தது. எலாவைப் பற்றிகூட அவன் ஒரு பாடல் எழுதியிருந்தான். பெண் தெய்வம் என்பது அதன் தலைப்பு. பாடல் முழுக்கவே புணர்தல் பற்றியும் மதில்கரைகளில் எப்படி புணரலாம் என்பது பற்றியும் அவள் எப்படி வந்தால் என்றும், சுவரில் மோதி எப்படி அலை உடைகிறது என்பது பற்றியும். அதில் ‘ஒரு கல்மீது அலைமோதி உடைவது போன்று’ என்ற வரி வாசகம் போலானது.

ஜர்கன் பிரிந்து ஆறு மாதம் கழித்து, குப்பைப் பைகள் சேமித்து வைக்குமிடத்தில் த்சீகியைத் தேடினாள். அந்த ஜிப்பை திறந்தது தவறாகக்கூட இருக்கலாம் என்று அவள் நினைத்துக் கொண்டாள். இருக்கலாம்தான். அப்போதிருந்த சூழலில் அவளால் அதை அவ்வளவு உறுதியாக சொல்லிவிட முடியவில்லை. அதேபோலொரு பகலில், அவள் பல்லை துலக்கி கொண்டிருக்கும்போது, அவள் அந்த முத்தத்தை நினைத்துப் பார்த்தாள். ஏதோவொன்று குத்திய அந்த இடத்தை. நிறைய நீர் கொண்டு வாயைக் கொப்பளித்துக் கொண்டாள். பின் கண்ணாடியைப் பார்த்தாள். அந்த வெட்டுக் காயம் இன்னுமிருந்தது. நெருங்கிப்போய் கூர்மையாகப் பார்த்தாள். அவளது நாக்கின் கீழும் சிறு ஜிப் ஒன்று இருப்பதைப் பார்த்தாள். சற்றே தயக்கத்துடன் விரல்களால் தீண்டிப்பார்த்தாள். தான் உள்ளுக்குள் என்னவாக இருப்பேன் என கற்பனை செய்தாள். அது அவளுக்கு பெரும் நம்பிக்கையை ஊட்டியது. நடுவில் தோல் சுருங்கியும் காய்ந்து போயும் இருக்கக்கூடும் என்ற மனவோட்டம் கொஞ்சம் கவலையை உண்டாக்கியது. அவள் ரோஜா மலர் ஒன்றை பச்சை குத்தியிருக்கக்கூடும், எலா நினைத்துக் கொண்டாள். எலா எப்போதும் அப்படியொன்று வேண்டும் என்கிற ஆவல் இருந்தது. செய்துக்கொள்ளதான் தைரியமில்லை. அது மிகுந்த வலிகொடுக்கக்கூடும் என்று தயங்கியிருந்தாள்.

போத்தல் (Bottle)

12BTB-blog427-v2இரண்டு பேர் ஒன்றாக பார்ரில் உட்கார்ந்திருந்தார்கள். அவர்களில் ஒருவன் ஏதோ ஒன்றை அல்லது இன்னொன்றை முதன்மை படமாக தேர்வு செய்து கல்லூரி ஒன்றில் படித்துக் கொண்டிருந்தான். மற்றவன் தன்னை ஒரு இசைக் கலைஞனாக நினைத்துக் கொண்டு அவனது கித்தாரை துஷ்பிரயோகம் செய்து கொண்டிருந்தான்.  அவர்கள் ஏற்கனவே இரண்டு பீப்பாய்கள் நிறைய குடித்துவிட்டிருந்தனர், மேலும் குறைந்தபட்சம் இரண்டு பீப்பாய்கள் பியரை குடிக்க திட்டமிட்டிருந்தனர். கல்லூரி பையன் தன் ரூம்மேட்டை காதலித்துக் கொண்டிருந்தான், ஆனால் அந்த ரூம்மேட்டுக்கு கழுத்துவரை முடியுள்ள காதலன் ஒருவன் இருக்கிறான் என்பதும் ஒவ்வொரு இரவும் அவன் வருவதும் காலையில் இருவரும் தற்செயலாக சமையல் அறையில் சந்தித்துக் கொள்வதும் கல்லூரி பையனுக்கு கடும் மன உளைச்சலைத் தந்தது. அதிலும் உனக்கு- என்- பரிதாப முகங்கள் என்பதுபோல அந்த காதலன் காட்டும் முகபாவனைகள் கல்லூரி பையனுக்கு மேலதிக உளைச்சலைக் கொடுத்துக் கொண்டிருந்தது.

“அங்கிருந்து வெளியாகிவிடு,” தன்னை ஒரு இசைக் கலைஞனாக நினைத்துக் கொண்டிருந்தவன் கூறினான். அவனுக்கு சச்சரவுகளிலிருந்து தன்னை தவிர்த்துக் கொள்ளும் வரலாற்று பின்னணி இருந்தது. திடீரென்று, அவர்களின் உரையாடலின் நடுவில், அவர்கள் இதற்கு முன்புவரை பார்த்திராத குடுமி வைத்த குடிகாரன் கல்லூரிப் பையனிடம் வந்து “நான் உன்னிடம் ஒரு பந்தயம் வைக்கிறேன், இசைக் கலைஞனை என்னால் ஒரு போத்தலுக்குள் அடைத்துவிட முடியும் என்றும் அதற்கு நூறு ஷெக்கெல்ஸ் பந்தயம்,” என்றான். இசைக் கலைஞனை காலியான கார்ல்ஸ்பெர்க் போத்தலுக்குள் அடைத்துவிட முடியும் என்கிற அந்த அசட்டுத் தனமான பந்தயத்துக்கு கல்லூரி மாணவனும் சட்டென சரி சொல்லி ஒப்புக் கொண்டான்.

கல்லூரி பையனிடம் கேட்ட அளவுக்கு பணம் இல்லை, ஆனால் நியாயம் நியாயம்தான், நூறு ஷெக்கெல்ஸ் எடுத்துக் கொடுத்துவிட்டான். அவனை விலகி வந்து சுவரை வெரித்துப் பார்த்து தன்னைத்தானே நொந்துக் கொண்டான்.. “அவனிடம் சொல்லு,” போத்தலில் இருந்துக்கொண்டு அவனுடைய நண்பன் கத்தினான். “சீக்கிரம், வேகமா, அவன் போவதற்குள்,” என்றான். “என்ன சொல்லனும்?” கல்லூரி பையன் கேட்க, “என்னை இந்த போத்தலிலிருந்து வெளியே கொண்டு வர, இப்போதே, சீக்கிரம்,” கல்லூரி பையனின் மண்டைக்குள் இந்த செய்தி சென்று சேர்வதற்குள் குடுமி வைத்தவன் அங்கிருந்து மறைந்துவிட்டான்.

எனவே அவன் பணமும் கொடுத்துவிட்டான், உயிர் நண்பனையும் போத்தலில் அடைத்துவிட்டான், ஒரு வண்டியை வரவழைத்து,  இருவருமாக சேர்ந்து, குடுமி வைத்திருந்தவனை தேட ஆரம்பித்தார்கள். ஒன்று மட்டும் உறுதியாக தெரிகிறது, குடுமி வைத்தவன் தப்பித் தவறியெல்லாம் குடிக்க வரவில்லை, அவன் அதில் தேர்ந்தவனாக இருக்கிறான்.  எனவே அவர்கள் ஒவ்வொரு பார்ராக தேடுகிறார்கள். ஒவ்வொரு பார்ரிலும் ஒவ்வொரு மதுவாக குடிக்கிறார்கள், வெறுமனே வந்ததாக பார்க்காரன் நினைத்துவிடாமல் இருக்க. ஒவ்வொரு மிடரு குடிக்கும்போதும் கல்லூரி பையன் தன்னை தாழ்த்திக் கொள்கிறான். மேலும் குடிக்க குடிக்க தன்னை நினைத்து மேலும் மேலும் நொந்துக் கொள்கிறான். போத்தலுக்குல் இருந்தவன் உறிஞ்சியைப் போட்டு குடித்துக் கொண்டிருந்தான். அதை தவர அவனுக்கு வேறு வழியும் இருக்கவில்லைதான்.

காலையில் ஐந்து மணிக்கு, கடற்கரைக்கு அருகிலுள்ள ஒரு பாறையில் குடுமிக்காரனைக் கண்ட கணம் இருவரும் நொந்துபோய் இருந்தார்கள். குடுமிக்காரனும் நொந்துபோய்தான் இருந்தான்.  போத்தல் விவகாரம் குறித்து தனது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொண்டான். போத்தலுக்கு அடைத்தவனைப் பற்றி மறந்து விட்டதை எண்ணி சங்கடப்பட்டுக் கொண்டான். அதற்காக மேலுமொரு சுற்று குடிக்க வாங்கிக் கொடுத்தான், அதுதான் அன்றைக்கு ஆக்க் கடைசி.  அவர்கள் கொஞ்சம் பேசினார்கள், அந்த போத்தல் தந்திரத்தை தாய்லாந்தில் சந்தித்த பின்லாந்து நபர் ஒருவனிடம் தான் கற்றுக் கொண்டதாக குடுமிக்காரன் கூறினான். அந்தத் தந்திரம் தனக்கு ஒரு குழந்தை விளையாட்டாக இருப்பதாகவும் மது அருந்தும்போது பணம் போதாமல் சிக்கிக்கொள்ளும்போது இந்த தந்திரத்தைப் பந்தயமாக வைத்து விளையாடுவதாகக் கூறினான். அந்த தந்திரத்தை அவர்களுக்கும் குடுமிக்காரன் சொல்லிக் கொடுத்தான். உண்மை? நீங்கள் செய்து பார்க்கும் நிமிடத்திலிருந்தே, எவ்வளவு எளிது என்று வியப்பாக இருக்கிறது. அப்படி செய்வதால் தான் எவ்வலவு மோசமாக உணர்கிறேன் என்பதையும் கூறினான். உண்மை? இந்த தந்திரத்தை கற்றுக்கொண்டபின் அது எத்தனை எளிதானது  என்பதையும் உணர முடியும் என்றான்.

கல்லூரி பையன் வீடு திரும்பும்போது, கிட்டத்தட்ட சூரியனும் வெளிவர தொடங்கியிருந்தான். அவர் பூட்டுக்குள் தனது சாவியை நுழைக்கும் முன்பே, கழுத்துவரை முடி வைத்திருந்தவன் அவன் முன்னால் தோன்றினான். எல்லாவற்றையும் சவரம் செய்து வழித்து வைத்திருந்தான்.  கழுத்துவரை முடி வைத்திருந்தவன் மாடிப்படியின் வழி கீழே இறங்குவதற்குள், -அவள்-தோற்றத்தினால்தான் நீ-குடிக்க-வெளியே-போகிறாய் எனும் அர்த்தத்தில் முகத்தை ஏறிட்டான். ரூம்மேட்டுடன் சேர்ந்து உச்சத்துக் கண்டு முடித்திருந்தான், சிவேன்-அதுதான் அவளுடைய பெயர்-வாய் பாதி பிளந்தபடி-போர்வைக்குள் புதைந்து படுத்திருந்தாள், ஒரு குழந்தையைப் போல. அது அவளுக்குத் தனித்தன்மை வாய்ந்த அழகைத் தந்துக்கொண்டிருந்தது, மிக நிதானமாக. இந்த மாதிரியான அழகு மனிதர்கள் தூங்கும்போது மட்டுமே காணக்கூடியது, ஆனாலும் எல்லோருக்கும் அப்படியில்லை. ஒரு நிமிடம், அவளை அப்படியே தூக்கி, இப்போது அவள் இருப்பதைப் போலவே, ஒரு போத்தலுக்குக்குள் போட்டு அறையில் தன் கட்டிலுக்கு பக்கத்தில் வைக்க நினைத்தான். சீனாயிலிருந்து வண்ண வண்ண மணலை போத்தலுக்குள் அடைத்து ஆட்கள் வாங்கிவருவார்களே அதுபோல. இருட்டில் தனியாக தூங்க பயப்படும் குழந்தைகளுக்காக சிறு விளக்ககொன்றை ஏற்றி வைப்பது போல.

 

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...