மாறுதல்

IMG-20180131-WA0009அருவி குளிர்ச்சியை அள்ளிக் கொட்டியபடி ஓடுகிறது. தார்ச்சாலையில் நின்று பார்க்காமல் உள்ளே வந்து நின்றால், வெண்மஞ்சள் பாறையில் அருவி குதித்து வரும் நிர்மால்யம் ஈர்க்கிறது. தார்ச்சாலையில் நின்றபோது, இவ்வளவு அழகான அருவியை முழுசாகப் பார்க்கவிடாமல் மரங்கள் மறைத்தன. அருவியின் காலடி மரங்களின் கீழே நீரடித்து வந்த சருகுகள் மெத்தையைப்போலக் கிடக்கின்றன. மூன்று மாதங்களாக மழையே இல்லை. இரண்டு நாட்களுக்கு முன்பு பெய்த மழைநீர் ஓடிவந்த தடங்கள், இலைச் சருகுகளை அள்ளிவந்து இங்கே சேர்த்துவிட்டன. மேலருவி, பாறையில் விழுந்து கீழருவியாகக் கொட்டுகிறது. துணிச்சலான இளவட்டங்கள் ஏழெட்டு பேர் மேலருவிக்கு ஏறிப்போய் குளிக்கிறார்கள். சிறுவர்கள், சிறுமியர்கள், பெரியவர்களின் தலைமுடிகளெல்லாம் அருவியில் புசுக்கென படிந்து வழுவழுக்கின்றன. ஜில்லென்ற பளபள நீரில் அமிழ்ந்து குதூகலித்தோம். மற்றொரு வேனிலிருந்து இறங்கி, விடலைப் பையன்கள் வேகமாகவும், சுடிதார் பெண்கள் ஒருவரை ஒருவர் பிடித்துக்கொண்டும் குளிர்ச்சியில் நனைந்தபடி, நாங்கள் குளிக்க மாட்டோம் என்பதுபோலச் சிரித்தபடி மெதுவாக வருகின்றனர்; குளிப்பவர்களை வேடிக்கை பார்த்தபடிச் சிரிக்கின்றனர்.

கண்ணபிரான், இங்கு நாளைக்கு வரலாம் என்றுதான் சொன்னான். கண்ணபிரானுடைய பெரிய அத்தையின் பேத்திக்கு மொட்டை எடுக்க வருகிறார்கள்.

கொஞ்ச நாளாகப் பேச்சு வழக்கில்லாதிருந்த அத்தை. பேத்தியின் மொட்டைக்குக் கூப்பிட வந்திருந்தார். அத்தை, பழைய விஷயங்களை இழுத்துப் பேச சண்டையில் போய் முடிந்துவிட்டது. அம்மா, வீட்டில் யாரும் போகக்கூடாது என்று சொல்லிவிட்டார். “அதெல்லாம் முடியாது. போட்ட திட்டம் போட்டதுதான். இன்னைக்கி அவனுக்கு சங்கு ஊதியே தீருவேன்டா. வக்காளி… அவன் டவுசர அவுத்தாத்தான் என் ஆத்திரம் அடங்கும். வந்தே தீரணும்” திட்டவட்டமாகச் சொல்லிவிட்டான் மணிகண்டன். முக்கியமாக, இன்று இரவு கண்ணபிரான் ஊரில் மாரியம்மனுக்கு பூக்குழி இறங்குகிறார்கள். பக்கத்து ஊர்தான். இரவு பத்து மணிக்கு மேல் மஞ்சளாடை உடுத்தி பெண்கள் குழந்தைகளைத் தூக்கிக்கொண்டு இறங்க வருவார்கள். படித்த, படிக்கும் பெண்கள் சுடிதாரில் இறங்கி ஓடுவார்கள்.

பூக்குழி இறங்கத் தொடங்கும்போது ரகுராம் தோட்டத்தை வேட்டையாடிவிட வேண்டும் என்பதுதான் முக்கியமானத் திட்டம். ஊரே பரவசத்தில் இருக்க, தோட்டத்தில் சூறையாடிவிட வேண்டும் என்று மணிகண்டன் சவால் விட்டான். மணிகண்டனும் கண்ணபிரானும் என்.ஜி.எம். கல்லூரியில் படிக்கிறார்கள். நான் உடுமலைப்பேட்டை அரசு கல்லூரியில், அழகிரியும் லட்சகனும் கற்பகம் கல்லூரியில். ப்ளஸ்டூவில் படித்ததுபோல என்.ஜி.எம். கல்லூரியில் எல்லோரும் ஒன்றாகப் படிக்க நினைத்தும், பாடப்பிரிவு கிட்டாததால், ஆளாளுக்கு பிய்த்துக்கொண்டு போக வேண்டியதாகி விட்டது.

வேலியோரம் நின்றிருந்த பப்பாளி மரத்தில் நீளமான தென்னை மட்டையை நீட்டி பழத்தை இடித்து விழச்செய்ய முயன்றபோது, ரகுராம், பின்னால் வந்து மணிகண்டனின் பிடறியில் ‘பொட்பொட்’டென போட்டிருக்கிறான். இவன் முறைத்துப் பார்க்க சட்டையை முறுக்கி வேலியோரம் தள்ளி ‘கொன்னுபோடுவேன்’ என்று விரலைக் காட்டி நாக்கைத் துருத்தியிருக்கிறான். வன்மம், சிங்கத்தின் தலைக்கேறிவிட்டது. அன்றிரவே வேட்டைக்குக் கிளம்ப வேண்டும் என்று துடித்தான். அழகிரிதான், ‘மாரியம்மன் மஞ்சள் பட்டுடுத்தி பூக்குழி இறங்குவோருக்கு ஆசிர்வதிக்கிற தினத்தில் வைத்துக்கொள்வோம்’ என்று தடுத்தாட்கொண்டான். குரங்கருவியில் நீராடி, அறிவுத்திருக்கோயில், கண்ணன் கோ சாலை, நீலாம்பதி குகைகளைச் சுத்தியடித்து விட்டு வந்தால் இரவிற்குத் தயாராக சரியாக இருக்கும். வேழம் புகுந்ததுபோல கரும்பு காட்டையும் பலாமரத்தையும் ஒரு ஆட்டு ஆட்டிவிட வேண்டும். கரும்புக்காட்டை ஒட்டிய மூன்று ஏக்கர் நிலத்தில் கொய்யா கன்றுகள் வைத்திருக்கிறான். ஐம்பது கன்றுகளையாவது இழுத்து ஒடித்து அங்கேயே போட்டுவந்தால்தான் அவனது திமிர் அடங்கும். விடியற்காலை தோட்டத்திற்கு வரும் ரகுராம் அதைப் பார்த்து புழுங்கிச் சாகவேண்டும். இதைச் சொல்லும் போதெல்லாம் மணிகண்டன் பற்கள் நெமுறும். எங்களை எதிர்த்தவர்களுக்கு அவர்கள் அறியாமலே ஆப்பு அடிப்பதுதான் எங்களின் வீரக்கொள்கை.

குளித்துவிட்டு மேலேறி வரும்போது மேல்புறம் பந்தல்போல அடர்ந்து சாய்ந்திருக்கும் புங்கமரம் உலும்பி அசைந்தது. மற்ற மரங்கள் இலை உதிர்ந்து நின்றாலும் புங்கமரம் அடர்த்தியான இலைகளோடு பளபளவென கரும்பச்சையில் மினுமினுக்கின்றன. எந்த வறட்சியிலும் இதன் இலைகள் உதிர்வது இல்லை. கரிச்முரிச் கரிச்முரிச் சத்தமிட்டுக்கொண்டு குரங்குகள் மரத்திலிருந்து சாலையோர தடுப்புச்சுவரில் குதித்து நடக்கின்றன. ஒரு தாய்க் குரங்கு குட்டியை இடது கையால் அணைத்தபடி எங்களைப் பார்த்து தலையைச் சொறிந்தபடி அமர்ந்தது. வலக்கால் இல்லாத அளவான பெண் குரங்கு, தடுப்புச் சுவர் மேல் இருகைகளால் ஊன்றி தலைகீழாக உடலைத் தூக்கி கழுத்தைக் குறுக்கி, சரசரவென நடந்து சாலையில் இறங்கி நின்று எங்களைப் பார்த்து கைகளைத் தேய்த்தது. கண்ணபிரான் பிஸ்கட் பாக்கெட்டை எடுத்துப் போட்டான். பரபரவென தாளைக் கிழித்து இரண்டு பிஸ்கட்டை எடுத்து வாயில் வைத்தது. எடுக்கும்போதே உடைந்து துண்டு உதிர்ந்தது. க்ரீச் க்ரீச் சத்தம் வந்தது. பெரிய ஆண் குரங்கு ஒற்றைக் கையால் கிளையில் தொங்கிக் குதித்து விரட்டியது. அது பாக்கெட்டை வாயில் கவ்வியபடி தலைகீழாகக் கைகளால் ஓடித் தாவி டைவடித்து அலரி மரத்தில் பற்றி ஏறியது.

இசையின் புதிய கோலங்களை உருட்டித் திரட்டி மிதமான ஓசையில் அருவி கொட்டுவதும் கேட்கிறது. பெண்களின் கூக்குரல் எழுந்தது. மலை இன்னும் தன் நெஞ்சை நிமிர்த்தி உயர்ந்தது.

மசினங்குடிக்குப் போகும் வழியில் சமணப் படுக்கைகள் இருப்பதைப் பார்த்துவிட்டுக் கீழிறங்கலாம் என்று நடந்தோம். தார்ச்சாலையிலிருந்து இடப்பக்கம் ஜீப் போய்வரும் பாதை போனது. பாதையின் இருபுறமும் அடர்த்தியில்லாமல் மரங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக நிற்கின்றன. மொட்டைத்தலை போல பாறை புடைப்புகள் காய்ந்த புற்களிடையே தெரிந்தன. புதிய பச்சை தளிர்கள் தரைபத்தில் இத்தினியூண்டு இத்தினியூண்டாக முளைவிடுகின்றன. பாதையில் யானையின் காய்ந்த லத்தி, வெளிறிய பச்சையில் வண்டுகள் கிளறி போட்ட கோலத்தில் சிறுசிறு குச்சிகளோடு கிடக்கிறது. காட்டிற்குள்ளிருந்து “டேய் நில்லு” என்ற சத்தம் வந்தது. வாச்சர் கையில் வைத்திருக்கும் கம்பால் ‘திரும்பிப் போ’ என சுழற்றிச் சொன்னான். நாங்கள் நின்றோம். “சமணப் படுக்கையைப் பாக்க வந்தோம்” என்றேன். “பாதைய மூடி ரெண்டு மாசமாயிருச்சு. வேடை காலம். எல்லா ஜீவராசிகளும் கீழ இறங்குற காலம். புலி நடமாட்டம் இருக்கு. திரும்பிப் போங்க. ம்ம் போங்க. ஒரு நொடி இங்க நிக்கக் கூடாது” – விரட்ட திரும்பினோம். தார்ச்சாலை வரை துரத்திக்கொண்டே வந்தான். எரிச்சலாக இருந்தது.

மறுபடி அருவிக்கு வரும்போது தார்ச்சாலை ஓரம் ஏழெட்டு வேன்கள், மூன்று கார்கள் நின்றிருக்கின்றன. குளித்துவிட்டு வந்த பெண்கள் இரண்டாவது வேனுக்குள் துணிமாற்றிக்கொண்டிருக்கும் அரவம் கேட்டது. தரையெல்லாம் ஈரம். வேன் ஜன்னல்களில் துண்டுகளைப் விரித்து போட்டுக்கொண்டிருக்கிறார்கள். குளித்துவிட்டு ஈரக்கூந்தல் முதுகில் படர கீழ்முடிச்சோடு தார்ச்சாலைக்கு வந்தவள் தன் கையிலிருந்து மற்றொரு துண்டை எடுத்து கணவரிடம் கொடுத்தாள். அந்தப்பெண் அவரைவிட உயரம். அவருக்கு முன் தலை வழுக்கை விழுந்துவிட்டது. நாற்பது வயதிற்குள் இருப்பார்கள். நல்ல சிவப்பு. அந்த பெண்ணும் நிறம்தான். வடிவாக இருந்தாள். எங்களுக்குப் பின் நடந்து வந்தவர்கள் வலப்பக்கம் விலகி நடந்தார்கள். பின் பேச்சைத் தொடங்கினார்கள்.

“எங்க வீட்டுக்காரரு பெரிய டி.வி. வாங்கணும்ன்னு ஒரு மாசமா சொல்லிக்கிட்டிருக்காரு.”

“எங்க வீட்டுக்காரம்மா ரெண்டு வருசத்துக்கு முன்னயே அடம்பிடிச்சு வாங்கிட்டா.”

“அவரு டிபன் ஐட்டத்த விரும்ப மாட்டேங்கிறாரு. மூணுவேளையும் சாப்பாடுன்னா சந்தோசம்தான். பிள்ளைக ரெண்டும் டிபன்தான் கேக்குதுக. வாரத்தில ஒரு நா சாயந்திரத்தில ஏதாவது திங்க செஞ்சு குடுன்னு தொத்துங்க.”

“எம்பிள்ள டவுணுக்குள்ள போனா கொத்து புரோட்டா வாங்கி வாப்பான்னு கேக்கும். அத ஜாஸ்தி சாப்பிடக் கூடாதுன்னு சொன்னாலும் அதத்தான் விரும்பி கேக்குது.”

எனக்கு அப்போதுதான் திக்கென்றது. அவர் கணவர் இல்லை. ஒட்டியும் ஒட்டாமலும் முகம் மலர பேசிக்கொண்டு போகிறார்கள். லட்சகன் ஒரு எட்டு முன் வைத்து கையால், ‘வேகமாக வாங்கடா’ கண்சிமிட்டி பின்தொடர்ந்தான். காலை குளியல் குளித்துப் போகிறார்கள். எங்கிருந்து வந்தார்கள்; என்ன வேலையாக வந்தார்கள்; என்ன வேலையில் இருக்கிறார்கள். நேற்றே வந்து தங்கிவிட்டு அருவிக்கு காலையில் வந்து குளித்துவிட்டுப் போகிறார்களா, நேரே வந்து குளித்துவிட்டுப் போகிறார்களா, இனிமேல்தான் வந்த காரியத்தை நோக்கிப் போகிறார்களா, தேடி ஓடும் கேள்விகளுக்கு விடை தெரியவில்லை. இப்போது அந்தப் பெண்ணை நன்றாகப் பார்க்க வேண்டும்போல் இருந்தது. சேர்ந்து குளித்தார்களா, பிரிந்து குளித்தார்களா, குளிக்கும்போது எப்படி இருந்தார்கள்? அருவிக்கு ஓடியது மனசு. அவர்கள் தங்களுக்குள் பேசியபடி செல்லும் பரிவர்த்தனைகளைக் கேட்க பின் தொடர்ந்தோம். “ச்சே நாம குளிக்கிறப்ப வந்திருந்தா, அந்தக் கண்கொள்ளாக் காட்சிய பாத்திருக்கலாமே. அப்படியே அருவியிலேயே கணக்குப் பண்ணியிருக்கலாம். இப்ப அவளோட அருவியில குளிக்கணும்போல இருக்கே” மணிகண்டன் தோளில் கை போட்டு காதில் கமுக்கமாகச் சொன்னான். “சொட்டையனுக்கும் குட்டையனுக்கும் வாய்க்குது. நமக்கு வாய்க்க மாட்டெங்குதே. இந்த கடவுளுக்குக் கருணையே இல்லையா” மணிகண்டன் புலம்பியது அவர் காதில் விழுந்திருக்க முடியாது. நாங்கள் பின் தொடர்வது அவருக்குப் பொறி தட்டியிருக்க வேண்டும். வலது தோள் பக்கம் திரும்பி கவனிப்பது தெரிந்தது. அவள் பக்கத்து வீட்டுப் பெண்ணைப் பற்றி சொல்லி மெலிதாகச்சிரிப்பது பக்கவாட்டில் தெரிந்தது. இந்தநிலையில் அவளிடம் ஒரு தளுக்கான கவர்ச்சி கூடிக்கொண்டு வந்தது.

பழைய இரும்பு கேட் திருப்பத்திற்கு வருவதற்கு முன்பே கண்ணபிரான், “டேய் அப்படியே சுலோ பண்ணுங்கடா” என்றான். “என்ன” என்றேன். “மெல்ல நடங்க” என்றான் தலையைக் குனிந்து கமுக்கமாக நடையின் வேகத்தைக் குறைத்தோம். முன்பு இரும்பு குழாய் தடுப்பு இருந்தது. குறுக்காக மறிக்கும் அந்தக் கருத்தக் குழாய் இப்போது இல்லை. பக்கவாட்டில் இரும்பு பட்டை மட்டும் குத்துக்கல் உயரத்தில் நிற்கிறது. குளிப்பதற்கு மேலேறி வந்து கொண்டிருந்தவன் கண்ணபிரானைப் பார்த்ததும் “கண்ணபிரா என்னடா மொட்டைக்கி வரமாட்டென்ன. இப்ப மொத ஆளா வந்து நிக்கிற” கேட்டான். “அப்படித்தான்… அவங்களுக்குள்ள சண்டையின்னா, எனக்கென்ன” விஷயத்தை வளர்க்காமல் கடந்தான். அவன் “ம்ம். பார்ரா” என்றதற்கு பதில் சொல்லாமல் எங்களுடன் நடந்தான். எங்களைப் பார்த்து, “இனி ஒவ்வொரு ஆளும் பாக்கும்போது கேப்பாங்களே…” சிரித்தான். துரத்திச் சென்ற ஆர்வம் தணியத் தொடங்கியது. அவர்கள் தொலைவுக்குப் போய்க்கொண்டே இருந்தார்கள்.

“நமக்கு ராசியில்லடா” லட்சகன் கையை விரித்து உதட்டைப் பிதுக்கினான்.

அருவியில் குளிப்பதற்கு பிளாஸ்டிக் பைகளில், கட்டைப் பைகளில், ரெக்சின் பைகளில் மாற்றுத் துணிகளை வைத்துக்கொண்டு குழந்தைகள் முன் ஓட, தாய்மார்கள் புன்னகையோடு பின் தொடர்ந்து போகிறார்கள். கண்ணபிரானின் உறவுக்காரர் இருவர் துண்டை உருமாலாகக் கட்டி நடுரோட்டில் நின்று “பட்டுன்னு வாங்க” என்கிறார். “அங்கப்பாரு… போச்சுடா” கண்ணபிரான் புருவங்களை உயர்த்தி கண்களில் ‘அவ்வளவு’தான் என்றான். பாதை அகன்று விரியத் தொடங்கியது. நேர்த்திக்கடன் செய்ய வந்த ஒரு கோஷ்டி சாய்மான திண்டுபோல நிற்கும் குட்டி பாறையை ஒட்டி இடம்பிடித்து, போர்வையை விரித்து அமர்ந்திருக்கிறது. அந்த கோஷ்டியை நோட்டம் விட்டுச் சென்ற அளவான ஆண் குரங்கு தள்ளிப்போய் குத்தவைத்து அமர்ந்தது. விரட்டுவதற்கு எழுந்து வந்த சிறுவனை ‘இஸ்ஸ்’ பற்களைக் காட்டி சீற, பயந்து ஓடிவந்து அம்மாவின் பின் பம்மினான். “அத போடுடா” பெரியவர் சொல்ல ஒருவர் எழுந்தார். அது எழுந்து தாவி மரக்கிளை குலுங்க ஏறி கூட்டத்தையும் எங்களையும் பார்த்தது. எப்போதும் குரங்குகள் புருவமேட்டை தூக்கி வைத்தபடிதான் பார்க்கின்றன.

காளிகோயில் ரவுண்டானா வரவும் கண்ணபிரான் மாமாவிடம் மாட்டிக் கொண்டோம். கண்ணபிரான் கையைப் பிடித்து நிறுத்திவிட்டார். சிறப்பு தருகிறவர்களும், கிடா விருந்து தருபவர்களும், திதி கொடுப்பவர்களும், காது குத்த வந்தவர்களும் கூட்டம் கூட்டமாக வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். நீரோட்டம் அகன்ற ஓடையின் குறுக்காக விழுந்து கிடக்கும் மரத்தின் மீது சிறுவர்கள் இந்தப் பக்கமிருந்து அந்தப் பக்கத்திற்கும் அந்தப் பக்கமிருந்து இந்தப் பக்கத்திற்கும் ஒரு சாகசம் போல நடக்கிறார்கள். கண்ணபிரானின் அத்தை சற்று கனத்த உடம்போடு வேகமாக வந்தார்.

“என்னடா நெனச்சிருக்கீங்க, உறவு இத்தோடு போகட்டும்னு நினைக்கிறீங்களா. நல்ல படியாதானே நீ வீட்டுக்கு வந்துக்கிட்டு இருந்த. பின்ன எதுக்குடா வராமப் போன. அத்தக்காரி ஒங்க பணத்த பிடிங்கிக்கிருவா போகாதன்னு சொன்னானா என் அண்ணங்காரன். இல்ல ஒங்க அம்மா சொன்னாளா?”

“இல்ல அத்த.”

“எங்களுக்குள்ள ஆயிரம் இருக்கும். நீ ஏன்டா சட்டுன்னு நின்ன.”

“…”

“நீ ஒருத்தன்தான் நல்லது கெட்டதுக்கு மொத ஆளா முன்ன நிப்பன்னு நெனச்சு எம்பிள்ளையாட்டம் பாத்தேன். கடைசியில நீயும் ஏமாத்திட்ட.”

“இல்ல அத்த.”

“சரி பழைய வண்டவாளத்த இப்ப பேசக் கூடாது. ஒழுக்கமுறையா வந்து முன்ன நில்லு சொல்லிட்டேன். அவங்கெடக்கிறான். வா. நீங்க எல்லாரும் வாங்கயா. வாங்க வாங்க” கண்ணபிரான் கையைப் பிடித்து இழுத்துச் சென்றார்.

அப்பாவையும் அம்மாவையும் தெரிந்தவர்கள் எழுந்து வந்து என்னை அழைத்தார்கள். சுற்றி வளைத்துப் பார்த்தால் கண்ணபிரானுக்கு நானும் உறவுக்காரனாக வருவேன். நாங்கள் தப்பிக்க முடியாது அந்தக் கூட்டத்தில் இணைந்தோம். நல்லவேளை… பெண்ணைத் துரத்திக்கொண்டு வந்ததை ஒருவரும் பார்க்கவில்லை.

குப்பையாகக் கிடக்கும் இடத்தில் குரங்குகள் ஒன்றை ஒன்று துரத்திக் கொண்டும் பற்களை இளித்து முறைத்துக்கொண்டும் சுற்றின. அழுக்கேறி சடை வைத்த அவன் பேசாமல் அமர்ந்திருந்தான். இப்போது மீசையில் ஒன்றிரண்டு நரைகளும் தோன்றிவிட்டன. குரங்குகள் அவன் இருப்பதையே கண்டுகொள்ளவில்லை. அவனை ஒட்டி ஓடுவதும் சாடுவதுமாக இருக்கின்றன. எப்படியென்றாலும் உணவு மீந்தால்தான் குரங்குகளுக்குக் கடைசியில் கிடைக்கும். இப்போதிருந்த சமையல் நடக்கும் இடங்களில் போய் ரவுசு பண்ணுகின்றன. எச்சில் இலையை விரித்து அதில் ஒட்டியிருக்கும் உணவை இரு கைகளில் எடுத்து உண்ணும். அந்த இலையைப் பறிக்க பெரிய குரங்கு வரும்போது அவசர அவசரமாக உண்ணும். அது வருவதைப் பார்த்துவிட்டால், இலையை இழுத்துக்கொண்டு ஓடும்.

இந்தக் கோயிலில் வைத்துத் தரும் விருந்துக்கு வரும் போதெல்லாம் அவன் கண்ணுக்கு தட்டுப்படுவான். பண்டாரங்கள் போல,

‘சாப்பாடு என்ன ஆச்சு’

‘திதிக்கு ஆள் வேணுமா’

‘சிறப்பு கொடுக்க ஆள் வேணுமா’

‘நேர்த்திக்கு ஆள் வேணுமா’ என்று காரியம் ஆரம்பிப்பதற்கு முன் வந்து நிற்பார்கள். பந்தியெல்லாம் முடிந்து அவன் நீண்ட நேரமாய் அங்கிருப்பது அறிந்து “ஐயையோ பாவம் அவனுக்குச் சாப்பாடு போட மறந்திட்டோமே” அப்புறம் இருப்பதை வழித்து இலையில் போட்டுக் கொண்டுபோய் வைத்தால் அமைதியாக வாங்கி உண்பான். தரவில்லையென்றாலும் அவன் முகத்தில் வருத்தமோ, ஏமாற்றமோ ஏற்படாது. எனக்குத் தெரிந்து ஏழெட்டு வருடங்களாக இருக்கிறான். ஒரு சமயம், குரங்குக்குட்டி அவன் மடியில் விழுந்து புரள்வதும் அழுக்குச் சட்டையைக் கடித்து இழுப்பதும் அவன் தோளில் ஏறி சடையைப் பற்றித் தொங்குவதும் அப்படியே குதிப்பதுமாக செல்லாட்டம் ஆடியதைப் பார்த்தோம். குட்டியைத் தாய் கண்டு கொள்ளாமல் தங்கை போல இருந்த குரங்குக்கு அவன் அருகில் அமர்ந்து நிதானமாகப் பேன் பார்ப்பதில் மூழ்கியிருந்தது.

சமையலில் நின்றிருந்த அத்தை மகளின் குழந்தை சாலையின் இருபுறம் வடை சுட்டுக்கொண்டிருப்பவரைப் பார்த்து கை நீட்டியது. கண்ணபிரான் எழுந்துபோய் குழந்தையை வாங்கி வடை சுடும் இடத்துக்குக் கொண்டுசென்றான். பொறிகடலை, இளநீர், கொய்யாக்காய் விற்பவர்களும் அவனை வாங்கச் சொன்னார்கள். குளியல் துண்டு, தேங்காய் வாழைப்பழம், பத்தி, வெற்றிலை தரைக் கடைக்காரர்களைக் கடந்து செல்ல, பொருட்களை வாங்கும்படி அழைத்துச் சொல்கிறார்கள்.

“நம்மளை இப்படி உட்காரவைத்து விட்டானே” மணிகண்டன் புலம்பத் தொடங்கினான். அருவிக்குப் போகிறவர்களையும் குளித்து வருகிறவர்களையும் வண்டியின் அடியில் அமர்ந்தபடி பார்த்துக்கொண்டிருந்தோம். மொட்டையின் பேரில் வந்தவர்களில் முக்கால் வாசிப்பேர் அருவிக்குப் போய்விட்டார்கள். மொட்டைக்கு உரித்தானவர்கள்தான் சமையல் கட்டில் அல்லாடுகிறார்கள். கண்ணபிரானின் மாமாவும் இரு மகன்களும் பள்ளக்காலில் போட்ட குழாயிலிருந்து குடங்களில் தண்ணீரைப் பிடித்துக்கொண்டு வந்து பேரலில் ஊற்றுகிறார்கள். அருவிக்குப் போகாமல் வேலையில் ஈடுபட்டிருப்பவர்களின் குழந்தைகள் ட்ராக்டரில் ஏறி அமர்ந்து ஹாரன் அடிக்கவும் அமட்டுவதைக் கேட்டு இறங்கி ஓடுவதுமாக இருந்தார்கள். அவனைக் கூட்டத்தில் நிறுத்திவைத்து வேலையைச் செய்துகொண்டே அத்தை மகள் ஏதோ கேட்பது போலத் தெரிந்தது. குழந்தையைத் தூக்கியபடி ஏதோ சொல்கிறான். மாமா நாவிதரை அழைத்து வரப்போனார்.

எங்களுக்கு மேவரத்தில் அரிசி வெந்து மணம் வீசியது. இழுத்த அண்டா தட்டை மூடுகிறார். அது பெரிய கூட்டமாக இருந்தது. இங்கும் சமையல் ஜரூராக நடக்கிறது. செத்தை செதவல் இல்லாமல் தரையைக் கூட்டி களத்தை சுத்தம் செய்தது பாட்டி. குமரு பிள்ளைகள் இலைக்கட்டிலிருந்து பெரிய இலையை எடுத்து மூன்று மூன்றாக அறுத்து பக்கவாட்டில் அடுக்குகிறார்கள். அத்தை மருமகனின் தங்கை நான்கு மாத கைக்குழந்தையை மடியில் கிடத்தி துடையால் மெல்ல அசைத்து தூங்க வைப்பதில் முனைந்தாள். சுற்றிலும் சிறிதும் பெரிதுமான மரங்கள் சூழ நிழலடியில் காரியங்கள் நடக்கின்றன. ஏழெட்டு பண்டாரங்கள் காவி உடையில் மருத மரத்தின் முன்வந்து அமர்கிறார்கள். ஒரு பண்டாரம் சங்கு சேகண்டி வைத்திருக்கிறார்.

பெரிய புஷ்புஷ் வெள்ளைத் துண்டை இரண்டாக மடித்துப் போட்டு அதில் கண் அயர்ந்த குழந்தையை இட்டு எழுந்து வந்தவள் ஒரு டம்ளர் சூப்பை வாங்கிக் குடித்தாள். அத்தை நான்கு டம்ளர்களை இடது கையால் கவ்வி பெரிய ஜக்கில் சூப்பு நீரைக் கொண்டு வந்து எங்களுக்கு ஊற்றிக் கொடுத்தார். சூடும் உப்பு ருசியும் சுவையாக இருந்தது. குழம்பு கொதித்து வாசம் தூக்கியது. முன்னமே குளிக்கப் போனவர்கள் ஐந்து பேர் ஈரத்துண்டுகளை ட்ராக்டரின் தொடுக்கு தடுக்குகளில் காயப்போட்டார்கள். அத்தையின் மருமகனும் அவரது தம்பியும் குளிக்கப் போனவர்களைப் பார்த்து சத்தம் போட்டனர். “வேலையை முடிச்சுப் போட்டுப் போக வேண்டியது தானே, அதுக்குள்ள என்ன அவசரம்” வந்தவர்கள் திட்டுவதைப் பொருட்படுத்தாமல் அண்டாவைத் தூக்கி வைக்க உதவினார்கள்.

நாவிதர் வரவும் டிராக்டருக்கு தெற்குப் பக்கம் நிற்கும் வன்னி மரத்தடியில் சாக்கைக் கொண்டு வந்துவிரித்தார் தாய்மாமனின் அம்மா. கிழக்குப் பார்த்து அமர்ந்த தாய்மாமனின் மடியில் கொண்டுவந்து ஒன்றரை வயது குழந்தையை அம்மா இருத்தினாள். அது அமராமல் எம்பி வீலெனக் கத்தியது. பெண்கள் வேலையைப் போட்டுவிட்டு வந்து வட்டமாக நின்று சமாதானம் செய்தார்கள். குழந்தை சமாதானமடையவில்லை. குதிக்கும் குழந்தையை மடியில் உட்கார வைக்க முடியாமல் சிரித்தபடி பிடித்தான்.

கிரிச்முரிச் என்று குரங்குகளின் சத்தம் வந்தது. ‘ஏய் ஏய்’ என சத்தமிட்டாள் குமரு. குனிந்துIMG-20180131-WA0045 கம்பை எடுப்பதற்குள், நல்ல வாளிப்பான பெரிய பெண் குரங்கு தூங்கிக்கொண்டிருந்த பெண் குழந்தையை இடது கையால் அள்ளி அணைத்து மூன்று காலோட்டத்தில் துண்டு தரையில் இழுபட பாய்ந்து ஓடி தாண்டி மரத்தில் பற்றி ஏறி தாவி பெரிய கிளையில் அமர்ந்தது. குழந்தையின் அழுகுரல் கிளம்பியது. தாய் தடுமாறி ஓடினாள். நாங்கள் விழுந்தடித்து ஓடியும் பறிக்க முடியவில்லை. அதற்குள் அது மரத்தில் ஏறிவிட்டது. அம்மாகாரி நெஞ்சிலும் தலையிலும் மட்டுமட்டுவென்று அடித்துக் கத்தத் தொடங்கினாள். கூட்டமாக வந்த குரங்குகள் சிதறி ஓடி மரங்களில் ஏறின. கல்லைக் குனிந்து எடுத்து எறிவது போல பொய்க்கல் வீசினேன். அந்தக் குரங்கு அழும் குழந்தையை அணைத்தபடி மேலிருந்து எங்களை இடவலம் பார்த்து அதற்கு மேல் உள்ள அளவான கிளையில் ஏறி அமர்ந்தது. ஆவேசத்தோடு பெரிய இரும்பு கம்பியைத் தூக்கி ஓடிவந்த குழந்தையின் அப்பா மரத்தில் பற்றி ஏறப்பார்த்தான். மறுபடி குரங்கு மற்றொரு மேல் கிளைக்கு பற்றித்தாவி ஏறி பெருமரத்தில் முதுகு சாய்த்து அமர்ந்து கத்தும் கூட்டத்தைப் பார்த்தது. அவனை மரத்தில் ஏற வேண்டாம் என்று பிடித்து நிறுத்தினர். அழும் குழந்தையை முடிபற்றும்படி அணைத்து அணைத்துப் பார்த்தபோது துண்டு நழுவி வந்து கீழ்க்கிளையில் விழுந்து தொங்கியது. எனக்கு உயிரே போய்விட்டது.

அங்கங்கு சிறப்பு தரவந்த கூட்டத்தினர் ஓடிவந்து திரண்டார்கள். ஆளாளுக்குக் கத்தினார்கள். மரத்தில் யாரேனும் ஏறினால் அது மிகப்பெரிய ஆபத்தாக முடிந்துவிடும். ஆட்கள் கத்தக் கத்த அது குழந்தையை நன்றாக இறுக்கிப் பிடித்தது. அழும் குழந்தையின் மெல்லிய தலைமுடியை மற்றொரு கையால் தடவிவிட்டு தரையைப் பார்த்தது. கையில் கிடைத்த குச்சியைத் தூக்கிக் காட்டி சந்தன வேம்பு மரத்துப் பக்கம் இறங்க பாவல் செய்தார்கள். அது அசரவில்லை. சேகண்டி வைத்திருந்த பண்டாரம் சொன்னார். இரண்டு நாட்களுக்கு முன்புதான் இதனுடைய குட்டியை ஜீப் சக்கரம் மின்னல் வேகத்தில் நசுக்கிக் கொன்றதை. ஒருவர் அடுப்பிலிருந்து எரியும் கட்டையை வீசுவதுபோல காட்டினார். குழந்தையின் அம்மா மண்ணில் விழுந்து புரண்டாள். வயது பிள்ளைகள் தாயைத் தூக்கி அணைத்தபடி அழத்தொடங்கினர்.

அத்தைக்கு கைகால்கள் கிடுகிடுவென நடுங்கி வேர்த்துக் கொட்டத் தொடங்கிவிட்டது. காற்று வரும்படி செய்துவிட்டு ஓடிப்போய் நீரைக்கொண்டு வந்து முகத்தில் அறைந்தார் ஒருவர்.

காச்சுமூச்சுவென்று கூட்டம் கத்த பொறிகடலை விற்றவர்கள், கொய்யாக்காய் விற்றவர்கள் எல்லாம் ஓடிவந்து கத்தினார்கள். அழகிரியும் லட்சகனும் தூக்கிக்கொண்டு வந்த போர்வையை குழந்தையுடன் அமர்ந்திருக்கும் குரங்கின் நேர்கீழாக சற்று விரித்து நின்று அண்ணாந்து பார்த்தனர். பெரிய ஆண் குரங்கு தாவி மேலேறி வருவதைப் பார்த்த அந்தக் குரங்கு குழந்தையை அணைத்த வாக்கில் மற்றொரு கிளைக்குத் தாவி பற்றி அமர்ந்தது. குரங்கு எந்த நிமிடமும் குழந்தையைப் போட்டுவிடலாம்.

அத்தைக்கு தெளிச்சி வந்ததும் கால் நீட்டி தரையில் அமர்ந்து “ஆஞ்சநேயா ஒனக்குக் கோடி புண்ணியம் பிள்ளைய கொடுத்துருப்பா. இறங்கி வந்து கொடுத்துரு சாமி. எங்க கையில தந்திட்டா நான் முடிய இறக்கி காணிக்கையாக்குறேன் ஆஞ்சநேயா.” வேண்டுதலாக முன்வைத்தது. பெரிய பண்டாரம் “இப்படிக் கூட்டம் போட்டு ஆளாளுக்குக் கத்துனா பிள்ளைய கீழே போட்டாலும் போட்டுடும். எல்லோரும் விலகி வாங்க” என்றார். குழந்தையின் அப்பா உள்ளங்கை விரலை மடக்கி தன் நெஞ்சில் ஓங்கி ஓங்கி குத்தினான். லட்சகன் கையைப் பற்றித் தடுத்தான். தாய் தன் தலையில் மண்ணள்ளிப் போட்டு தலைவிரி கோலமாக கதறியவள் மயங்கிப் போனாள். அவரை மூன்று பெண்கள் டிராக்டர் பக்கம் தூக்கிக்கொண்டு ஓடினார்கள். குரங்கு கை நழுவி குழந்தையை விட்டால் தனி ஆளாக அப்படியே ஏந்திப்பிடித்து காப்பாற்றி விட வேண்டும். ஏந்திப் பிடிப்பதற்கு மனதுக்குள்ளே இசைவாக கைகளை நீட்டிப் பார்த்தேன். சுற்றி ஆட்கள் நின்றிருப்பது நினைவில்லாமல் இருகைகளை நீட்டி ஏந்திப்பிடிப்பதாகக் கொண்டு சென்றது வெக்கமாகிவிட்டது. யாரும் கவனிக்கவில்லை. பக்கத்து மரங்களிலிருந்து குரங்குகள் கத்துகின்றன.

நாவிதர் அங்கு யாரும் இருக்க வேண்டாம் என்று அழைத்துக் கொண்டே இருந்தார். கிறுக்கன் மரத்தை அண்ணாந்து புன்னகையோடு பார்த்தான். “அவனை அடிச்சு துரத்துங்கடா” என்றார் குழந்தையின் தாத்தா. நாவிதர், “அதெல்லாம் கூடாது. பேசாமல் இருங்க. யப்பா இங்கிட்டு வா” என்றார். அவன் சற்றுத் தள்ளிப் போய்த் தரையில் அமர்ந்தான். அப்போதுதான் எனக்கு யோசனை வந்தது “சமையல் முடிந்திருந்தால் சாப்பாட்டைக் கொண்டு வந்து போடுங்கள்” என்றேன்.

தவலைப் பாத்திரத்தில் சோற்றை ஆவி பறக்க அள்ளிப்போட்டு பத்துப் பதினைந்து இலைகளில் பந்தி வைப்பதில் ஈடுபட்டார்கள். மற்ற மற்ற கூட்டத்திலிருந்து வந்த பெண்களும் ஆண்களும் ஓடி ஓடி உதவினார்கள். வெவ்வேறு மரங்களிலிருந்து குரங்குகள் இறங்கி தொத்தல் ஓட்டத்தில் வந்தன. கிறுக்கனைச் சுற்றி நின்று பார்க்கின்றன. சிறிய குட்டி மெல்ல நடந்து வந்தது. செம்மறியாட்டுப் பட்டியில் நிற்கும் வெள்ளாடு போல அந்தக் கூட்டத்தில் ஒரு ஜீவனாகத் தெரிந்தான். அவனைக் கடந்து வந்த பெரிய குரங்கு ஒரு இலையைத் தரதரவென இழுத்துக்கொண்டு வந்து இருகைகளால் மாறிமாறி உண்டது. சாப்பாடு நல்ல சூடுபோல, ஊதி ஊதித் தின்றது. மற்ற சிறிதும் பெரிதுமான குரங்குகள் சாப்பாட்டை நோக்கி ஓடிவந்தன.

மரத்தின் உச்சியில் அழுத குழந்தை கிறங்கிவிட்டது. குழந்தையை வைத்திருக்கும் குரங்கு பரிதாபமாகத் தரையைப் பார்த்தது. குழந்தையை மார்பில் வைத்து காம்பை குழந்தையின் வாய்க்குத் தோதாக விரலால் எடுத்து வைத்தது. குழந்தை முறுக்கி விசும்பி தலையைப் பக்கவாட்டில் சாய்த்தது. இந்தக் குரங்கு விளையாட்டுத்தனமாக கீழே நழுவ விட்டுவிடுமோ என்று மேலே பார்த்தபடி பதற்றப்பட்டார்கள் இடது கையிலிருந்து குழந்தையை வலது கைக்கு மாற்றியது. குழந்தையை தூக்கிச் செல்லுமளவிற்குப் பலம் இருப்பது ஆச்சர்யமாக இருந்தது எனக்கு. குட்டியைப் பறிகொடுத்ததால் மடிகட்டி வலி எடுத்திருக்குமோ என்று தோன்றியது. மனிதக் குழந்தையைத் தூக்கி வைத்துக்கொண்டது விளங்காப் புதிராக இருக்கிறது. இழப்பின் வலிக்கு ஆறுதலடைகிறதோ, என்னவோ? அந்த இடத்தில் யாரும் இல்லை. கீழ் கிளைக்கு இறங்க பெருமரத்தின் சொரசொரப்பைப் பற்றி இறங்கித் தொற்றியது. பெண்கள் “ஐயையோ” என்றனர். தொங்கும் குழந்தையை வசமாக மறுபடி மடியில் வைத்து. கசுபுசுவென பேசினர். “பேசாதீங்க பேசாதீங்க” என்றார் நாவிதர். பேச்சு அடங்கியது ஒரு கணம். குழந்தையின் கை கால்கள் தொங்குவது எனக்கு என்னவோ போல் ஆகிவிட்டது. முடித்துக் கட்டி விட்டதோ என்ற நினைப்பு ஓடியது. அது தொங்கும் வலது கையை எடுத்து நெஞ்சுப் பக்கம் வைத்தது. குழந்தை குரங்கின் மயிரைப் பற்றி பிடிக்காததினால் அது புரிபடாத விசயமாகக் குழந்தையைப் பார்த்தது. அதனால் என்னவோ குழந்தையை நன்றாக அணைத்துக் கொண்டது.
மறுபடி சாப்பாட்டை தவலைப் பாத்திரத்தில் கொட்டி இலைகளில் போட்டனர். ஆவி அடங்க பின்னால் ஒருவர் லேசாக கிளரி விட்டுக்கொண்டு வந்தார். காய்கறிகளை அவசரமாக வைத்துப் போனார். வந்திருக்கும் கூட்டமே அந்த மரத்தைத்தான் பார்க்கிறது. அது பற்றி இறங்கும் போதெல்லாம் குழந்தை உலுக்கி விழுந்து உலுக்கி விழுந்து விசும்பியது. அப்பாவின் பாட்டி “மெல்ல இறங்குசாமி. மெல்ல இறங்குசாமி. ராமா வழியச் சொல்லு” தன்னையறியாமல் கும்பிட்டபடி சொல்கிறது. குரங்குக் கூட்டம் கிரிச்முரிச்சிட்டு சாப்பாடுகளை இழுத்து பாதிதின்று பாதி சிதற அவசரம் காட்டின.

தன் தொடையில் குழந்தையின் இரு கால்களும் தொங்க குரங்கு தரையில் குதிக்கப் பார்த்தது. ஒரு கணம்தான். இரு கைகளால் குழந்தையை அணைத்து குதித்து ஒரு ஸ்பிரிங்போல மல்லாக்க விழுந்து அடுத்த கணத்தில் இரண்டு பின்னங்கால்களால் எழுந்து நடக்கத் தொடங்கியது. நல்ல வலுவான குரங்குதான் குழந்தையை இரு கைகளால் அணைத்திருந்த பக்குவமும் குழந்தையின் முகத்தைப் பார்த்து நடந்த விதமும் ஒரு தாயைப்போலவே இருந்தது. கிறுக்கன் அருகில் குழந்தையைக் கிடத்திவிட்டு இரு ஆராட்ட தவ்வல் போட்டு பின் முகத்தை உர்ர்ரென நோட்டமிட்டு நடந்து வந்து இலையை இழுக்க கையை நீட்டினது. இன்னும் அழ குழந்தைக்கு சத்து இருந்திருக்கிறது. கிறுக்கன் அதை புன்னகையோடு பார்த்தான். குழந்தையின் தகப்பன் தடாலென பாய்ந்தோடி குழந்தையின் அருகில் இடறி விழுந்தான். லேசாக தூசி பறந்தது. உண்ண வந்த அந்தக் குரங்கு இழுத்த இலையைப் போட்டுவிட்டு சரட்டென ஓடி மரத்தில் ஏறி கிளையில் அமர்ந்து பார்த்தது. தகப்பன் குழந்தையை அள்ளி முத்தம் கொஞ்சிக் கதறினான். குழந்தையைப் பார்க்க ஓட்டமெடுத்தோம். குழந்தையின் உடம்பில் அங்கங்கு மரப்பட்டை உரசியதில் லேசான காயமும் சிவந்த தடிப்புகளும் இருந்தன.

பெண்கள், “குழந்தை கெரங்கிப் போச்சு பாலக்குடுங்க” என்றனர். சுருண்டு படுத்து குலுங்கிக் கொண்டிருந்த தாயை அணைத்து நிமிர்த்தி இருத்தினார் அவளுடைய அம்மா. அவள் கண்ணைத் திறக்க பயந்து இறுக மூடினாள். அவள் மடியில் விசும்பும் குழந்தையை இட்டனர். அவளுக்குத் துக்கம் பீறிட்டது. கிறுக்கனைச் சுற்றி குரங்குகள் இலைச் சோற்றைப் பற்ற ஒன்றை ஒன்று சண்டைபோட்டு இழுத்துத் தின்கின்றன. அவன் அமைதியாக அவற்றைப் பார்த்தான். கூட்டம் அவரவர் இடத்திற்குக் கலைந்து போனது. “நானெல்லாம் கதையை முடிச்சு போடுமன்னுதான் இருந்தேன். பாரு என்னா அமிர்க்கையா கொண்டு வந்து போட்டிருக்கு” இது பற்றியே பேசிக்கொண்டு போனார்கள். மெல்ல சகஜத்துக்கு வந்தார்கள். குழந்தைக்கு மொட்டை எடுக்க ஆயத்தமானார்கள். அருவிக்குக் குளிக்க வந்தவர்கள், “இந்த குழந்தைதானா” என்று பார்த்தனர். தூக்கிச் சென்ற குரங்கு அதுதான் என்று ஒருவர் கை காட்டிக் கூறினார். மொட்டை எடுத்து எல்லோரும் உண்டபின் அவனுக்கு இருந்தால் போடுவார்கள். இல்லையென்றாலும் ஒன்றுமில்லை. குட்டியை இழந்த குரங்கு பற்றியாரும் பேசவில்லை. அது எப்படிப் பக்குவமாக இறக்கிக் கொண்டுவந்துவிட்டது என்பதை அருவியில் குளித்துவிட்டு வந்த சொந்தங்களிடம் பாட்டி அபிநயத்து சொல்வதில் இருந்தார். பாட்டிச் சொல்லச் சொல்ல ஏமாற்றமாக இருந்தது கேட்டவர்களுக்கு. கண்ணபிரானின் ஒன்றுவிட்ட அக்காள் மகள், “ஐயையோ நானில்லாமல் போய்ட்டேனே” என்று வருத்தப்பட்டது. மணிகண்டன் “ரகுராம் தோட்டத்த வேட்டையாட வேண்டாம்டா. சாப்பிட்டிட்டு ஊருக்குப் போயி பூக்குழி இறங்குறதப் பார்ப்போம்” என்றான்.

ஓவியங்கள் : தீர்த்த பாதா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *