ஏன் சடக்கு?

logo n‘சடக்கு’ இணையத்தளம் மலேசியத் தமிழ் இலக்கிய உலகின் முகத்தை படங்கள், துண்டு பிரசுரங்கள், கடிதங்கள், கையெழுத்துப் பிரதிகள் வாயிலாக ஆவணப்படுத்தி பொது பார்வைக்கும் பயன்பாட்டுக்கும் கொண்டு செல்லும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டது என்பது ஒருவகை புரிதல். ஆவணப்படுத்துதல் எனும் பதத்தைவிட  காப்பகப்படுத்துதல் எனும் பதம்தான் இவ்விணையத்தள உருவாக்கத்திற்கு மிகப் பொருத்தமான பதமாக இருக்கும். ஆவணப்படுத்துதல் என்பது பயன்மதிப்புமிக்க தகவல் அல்லது சான்றுகளை வழங்கும் சாதனம் என்றும் அதன் செயல்முறையானது நூல்கள், புகைப்படங்கள் மற்றும் பலவற்றை வகைப்படுத்துதல்/தொகுத்தல் என்பதோடு நின்றுவிடும்.

ஆனால், இவ்விணையத்தளம் மிகத் திட்டவட்டமான நோக்கத்தையும் வரையறைகளையும் முன்வைத்து பல உள்ளடுக்குகளைக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட முயற்சியாகும். மிகச் சரியாக சொல்வதென்றால் ‘சடக்கு’ இணையத்தளம் Online Archiving ரகம் சார்ந்தது. Open Archival Information System (OAIS) model (ISO standard 14721) வரையறுத்து வைத்திருக்கும் ஆறு அம்சங்களை பின்பற்றி இத்தளம் உருவாக்கப்பட்டிருக்கிறது. நோக்கம், வரையறை, வழங்குபவர், இணையப்பக்க வடிவாக்கம், எளிய பயன்பாட்டுக்கான வழிமுறை, பயனர்கள் யார் என்ற தெளிவு, வேறொரு வடிவத்தில்/இடத்தில் பத்திரபடுத்தி வைத்தல் என அந்த ஆறு வரையறைகளை இத்திட்டம் முன்னெடுக்கப்பட்ட நாள் முதல் மிக பிரக்ஞைபூர்வமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டம் உருபெற சில அடிப்படை காரணங்களை முதலில் கவனப்படுத்த வேண்டும்.

 • மலேசியத் தமிழ் இலக்கியம் குறித்து இதுவரை எழுதப்பட்ட/வெளிவந்த ஆய்வுகள், புத்தகங்களில் பல முக்கிய தகவல்கள் விடுபட்டுபோயுள்னன; அவ்வாறு பதிவாகிவிட்ட தகவல்களையே ஆய்வு நோக்கமற்று மீள்பதிவு செய்யும் வழக்கம் இங்கு உள்ளது. இதற்கு அடிப்படை காரணமாக இருப்பது ஆங்காங்கு நடைபெறும் சிறுசிறு முயற்சிகள் குறித்த பார்வையற்று/பிரக்ஞையற்று பிரதான நிகழ்வுகளின் அடிப்படையில் வரலாறு தொகுக்கப்படுவதுதான். இத்தளம் பல மாநிலங்கள், சிறு – பெரு நகரங்கள், தோட்டங்கள் தோறும் நடைபெற்ற இலக்கிய முயற்சிகள், செயல்பாடுகள் குறித்த பதிவுத்தொகுப்பாக இருக்கும்.
 • இந்நாட்டில் பதிப்பிக்கப்படும் நூல்களுக்கு ISBN எடுக்கத் தவறுவதால் எப்படி தேசிய புத்தக விவரணப் பட்டியலிலிருந்து (National Bibliografi) தமிழ் நூல்கள் பல விடுபடுகின்றனவோ அதேபோல பல மூத்த எழுத்தாளர்களின் அடையாளங்களும் கால ஓட்டத்தில் காணாமல் போகாமல் இருக்கவும் அவர்கள் மேற்கொண்ட முயற்சிகளை வரலாற்றில் தொகுக்கவும் இத்தளம் உதவும்.
 • இந்நாட்டிம் தேசிய மொழியாகக் கருதப்படும் மலாய் மொழிக்கென்று மலாய் ஆவண மையம் (Malays Documentation Centre) 1993ஆம் ஆண்டு தொடங்கி செயல்பட்டு வருகிறது. 1 ஜூன் 2011 கணக்கெடுப்பின்படி இம்மையத்தில் மலாய் சமூகத்தினரின் சுமார் 159,970 ஆவணங்கள் புத்தகம், கட்டுரை, துண்டுப் பிரசுரங்கள், எழுத்துப் பிரதிகள், நினைவுப் பரிசுகள் வடிவில் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன. இது ஒருபுறம் இருக்க, தேசிய நூலகமும், இதர உயர்கல்விக் கூடங்களில் இயங்கி வரும் நூலகங்களும் ‘மலேசியானா’ எனும் பிரிவில் மலாய் மொழியின் இலக்கியங்களையும், மலாய் சூழலில் நடக்கும் ஆய்வுகளையும் தொடர்ந்து ஆவணப்படுத்திக் கொண்டே இருக்கின்றன. மறுநிலையில், தேசிய அருஞ்சுவடிக் காப்பகம் (National Archieve), தேசிய அருங்காட்சியகம் (National Museum) என, தனித்தனியாகவும் ஆவணப்பதிவுகள் நடைபெற்றுக்கொண்டே இருக்கின்றன. ஆனால், அங்கொன்றும் இங்கொன்றுமாக தமிழர்களின் தடங்கள் ஆங்காங்கு எலி பருக்கைகள் போல் சிந்திக் கிடப்பதோடு சரி. முழுமையான ஆவண சேகரிப்பு, அல்லது அதையொட்டிய தீவிர முயற்சிகள் இதுகாறும் மேற்கொள்ளப்படவில்லை. இத்தளம் அம்முயற்சிக்கான ஒரு தொடக்கம்.

மலேசியத் தமிழ் இலக்கியத்தின் எழுச்சி காலத்தை 70 ஆண்டுகளுக்குள் அடக்கிவிட முடியும். ஆனால் எழுபது ஆண்டுகால வரலாற்றைக் கூறும் முழுமையான வரலாற்றுப் பதிவுகள் இல்லாத நிலையில் இனி எப்போதும் அதை முழுமைபடுத்த முடியாது எனும் சூழலின் விளிம்பில் நிற்கிறோம் எனும் பிரக்ஞையை வல்லினம் ஆவணப்பட திட்டம் கொடுத்தது. இலக்கிய ஆளுமைகள் சிலரை ஆவணப்படம் செய்யும்போது அதற்கு இணைத்தகவல்களைத் தேடி கண்டடைவதில் கடும் சிக்கலை எதிர்கொள்ள நேர்ந்தது. தமிழ் இலக்கியவாதிகளின் படங்கள் மட்டுமின்றி கோ.சாரங்கபாணி, முனைவர் இராம சுப்பையா,  முனைவர் இரா. தண்டாயுதம் போன்ற சமூக மற்றும் கலை இலக்கியச் செயல்பாட்டாளர்களின் படங்கள் கூட நூல்களிலும்சரி இணையத்திலும்சரி கண்டடைய முடியாத நிலையே இருக்கிறது. இன்றளவிலும் இருக்கும் ஒன்றிரண்டு படங்களை வைத்து ஒப்பேற்றிக் கொள்ளும் நிலையைத்தான் பார்க்க முடிகிறது.

சிக்கலை கண்முன் கொண்டுவந்து காட்டிய வல்லினம் ஆவணப்பட திட்டம் அச்சிக்கலுக்கான தீர்வை நோக்கியும் நகர்த்திச் சென்றது. முதன்மை ஆவணங்கள் ஆங்காங்கு தனிமனித சேகரிப்பில், வீட்டுக் கிடங்குகளில், தூக்கியெறிப்படும் பொருள்களுக்கு மத்தியில் இருக்கவே செய்தன. ஆனால் அவற்றை ஓரளவேனும் பத்திரப்படுத்தி வைத்திருந்தவர்கள் அனைவரும் தங்களது அறுபது எழுபது வயதை எட்டிக் கொண்டிருந்தவர்கள். ஆக, குறைந்தது பத்தாண்டுகளுக்கு பின் இம்முதன்மை ஆவணங்கள் அனைத்தும் முற்றிலுமாய் அழிந்துபோய்விடும் சாத்தியம் இருப்பதை அவதானிக்க முடிந்தது.

இதை யார் செய்வது என்ற கேள்வி எழும்போது அரசாங்க பிரதிநிதிகளையோ தனவந்தர்களையோ சங்கங்களையோ நாடி செல்வதில் சற்றே அதிருப்தி மனநிலை மேலோங்கியது. காரணம் அவை நோக்கம் பிசகி ஒரு நாள் பிரம்மாண்டங்களால் அமிழ்ந்துபோய்க் கொண்டிருக்கும் நிதர்சனம்.  எந்தவொரு பெரும் பொருள்வசதியும், ஆதரவும் இன்றி மிகச்சிறிய அளவில் தொடங்கப்பட்ட தனி நபர் முயற்சிகள்தான் மிகப்பெரும் மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளதை தமிழ் சூழலிலேயே நம்மால் காண முடியும். உதாரணத்திற்கு உ. வே. சாமிநாதய்யர் – அழிந்து போகும் நிலையிலிருந்த பண்டைத் தமிழ் இலக்கியங்கள் பலவற்றைத் தேடி அச்சிட்டுப் பதிப்பித்தவர். தமது அச்சுப்பதிப்பிக்கும் பணியினால் தமிழ் இலக்கியத்தின் தொன்மையையும், செழுமையையும் உலகறியச் செய்தவர். 90 க்கும் மேற்பட்ட புத்தகங்களை அச்சுப்பதித்தது மட்டுமின்றி 3000க்கும் அதிகமான ஏட்டுச்சுவடிகளையும் கையெழுத்தேடுகளையும் சேகரித்தவர். இவரது இம்முயற்சி நவீன காலகட்டத்தில் தமிழ்ச்சூழலில் நிகழ்ந்த முதல்பெரும் அறிவியக்கமாக கொண்டாடப்படுகிறது.

இவரையடுத்து ஆறுமுகநாவலர், சி.வை.தாமோதரம்பிள்ளை, வித்வான் தாண்டவராய முதலியார், மழவை மகாலிங்கையர், சௌரிப்பெருமாள் அரங்கன், வ.உ.சிதம்பரம்பிள்ளை, களத்தூர் வேதகிரி முதலியார், திருத்தணிகை விசாகப்பெருமாளையர், கெ.என்.சிவராஜபிள்ளை, வையாபுரிப்பிள்ளை, ந.மு.வேங்கசாமிநாட்டார், மயிலை சீனி. வேங்கடசாமி, சாமித்தோப்பு ஆறுமுகநாடார் என நீண்ட பட்டியலிடுகிறார் எழுத்தாளர் ஜெயமோகன். இவ்வரிசையில் பழைய, அரிய வரலாற்று ஆவணங்களை மக்கள் உதாசீனப்படுத்தி ஒதுக்கிய காலப்பகுதியில் மிகுந்த வேட்கையுடன் தன் வாழ்வையே இதற்காக அர்ப்பணித்து, பின்பு அவற்றைப் பாதுகாக்கும் முயற்சியில் மரணத்தைத் தழுவிய ரோஜா முத்தையாவையும் இவ்விடம் நினைவுக்கோற வேண்டியுள்ளது. (சிறு பூச்சிகள்  நூல்களை அழிப்பதைத் தவிர்க்க அவர் பயன்படுத்திய ரசாயன தூள் மருந்தால் பிற்காலத்தில் அவருக்கு சுவாசம் தொடர்பான நோய் வந்ததாக அறிய முடிகிறது). மலேசியச் சூழலில் தொல்பொருள் சேகரிப்பாளர் ஆர். மணி, முதன்மை ஆவணங்கள் சேகரிப்பாளர் ஜானகிராமன் மாணிக்கம், கள ஆய்வுகள் வழி இலக்கியப் பிரதிகளில் வரலாற்றைப் பதிவிடும் ஆ. ரெங்கசாமி போன்றவர்களையும் இதனுடன் பொருத்திப் பார்க்க முடியும்.

இவர்களைப் பின்னொட்டி சிந்தித்து பெரிய ஆள்பலம், பொருளாதாரத்தையெல்லாம் எதிர்பார்த்து அதற்காக விண்ணப்பித்துக் காத்திருக்காமல் மிகச் சிறிய அளவில் இத்திட்டம் செயல்படத் தொடங்கியது. எதை சேகரிக்கப் போகிறோம் எனும்போது அரிய புகைப்படங்கள், செய்தித்தாள் துண்டுகள், அறிக்கைகள், தனிச்சுற்று இதழ்கள், கடிதங்கள், கையெழுத்துப் பிரதிகள் என்கிற வரையறை முடிவு செய்யப்பட்டது. எத்துறை சார்ந்த ஆவணங்கள் எனும்போது குறிப்பாக இலக்கியமும் பொதுவாக சமூகமும் சார்ந்து இயங்கிய ஆளுமைகள், இலக்கிய, சமூக நிகழ்ச்சிகள் என்கிற வரையறையும், காலக்கட்டம் – 1960கள் தொடங்கி 2000வரை என்கிற வரையறையும் வைக்கப்பட்டது. காரணம் இன்றைய தேவையைக் கருத்தில் கொண்டு அழிவுக்கு சாத்தியப்பட்டுக்கொண்டிருக்கும் தரவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்கிற நோக்கம். அதேவேளை, ஆவணங்கள் சேகரிக்கப்படும்போது கிடைப்பவை 2000க்கு பிந்தையவையாக இருந்தாலும் அவற்றை சேகரித்து வைக்கவும் தவறவில்லை. ஒவ்வொரு ஆவணமும் நிர்ணயிக்கப்பட்ட உயர்தெளிவில் (High resolution) scan செய்யப்பட்டு இணையப்பக்கத்தில் பதிவேற்றப்பட்டது. ஒவ்வொரு ஆவணத்திற்கும் அழைப்பு எண் (Call number),  நிகழ்ச்சி, ஆளுமை, ஆண்டு, ஆவணத்தைப் பங்களித்தவர் ஆகிய விபரங்கள் தமிழில் கொடுக்கப்பட முடிவானது.

இவ்வாறு சேகரிக்கப்படும் ஆவணங்கள் அனைத்தையும் இணையத்தளம் ஒன்றை உருவாக்கி அதில் பதிவேற்ற சில அடிப்படை காரணங்களும் இருக்கவே செய்கின்றன.

 1. முதன்மை ஆவணங்களைக் காகிதங்களில் மறுபிரதி எடுக்கும்போது அவை அசல் பிரதியின் தன்மையில் இருப்பதில்லை;
 2. மீண்டும் ஒரு புத்தக வடிவத்திற்கு கொண்டுவரும்போது அதற்குரிய பொருட்செலவு அதிகம் என்பதுபோல பிரதி ஆவணங்களைப் பயன்படுத்துவதிலும் பல்வேறு இடையூறுகள் ஏற்படும்;

ஆனால் இணையத்தளத்தில் பதிவிடும்போது,

 1. ஆவணங்களின் ஆயுட்காலம் நீட்டிப்படையும்;
 2. மிக எளிமையாக அணுகி பயனடைய முடியும்;
 3. அசல் பிரதியின் சாயலை இணையத் தரவிலும் பயனர்கள் முழுமையாக உள்வாங்க முடியும்;
 4. உடனடியாக பதிவிறக்கம் செய்ய முடியும்;
 5. எல்லா இடங்களிலிருந்தும் உடனடியாக பயன்படுத்த முடியும்;
 6. நிகழ்ச்சி, ஆளுமை, ஆண்டு என்கிற அடிப்படையில் ஒவ்வொரு ஆவணத்திற்கும் விபரங்கள் இருப்பதன்மூலம் மிக சுலபமாக பல தரப்பட்ட தேடுதல்களை மேற்கொள்ள முடியும்;
 7. இது தொடர் நடவடிக்கை என்பதால் புதியனவற்றை சேர்க்கவும், பழையனவற்றில் செரிவாக்கங்கள் செய்யவும் முடியும்.

இவற்றோடு மேலும், ‘சடக்கு’ இணையத் தளத்தில் பதிவிடப்படும் அனைத்து தரவுகளையும் Google, Yahoo, Bing, Ask.com, AOL.com, Baidu, Wolframalpha, DuckDuckGo போன்ற பலவகை தேடுபொறிகளிலிருந்தும் தேடி அணுக முடியும்.

இந்த இணையத்தளம் அதிகாரப்பூர்வமாக திறந்து வைக்கப்படுவதுதான் இம்முயற்சியின் வெற்றியா என்று கேட்டால் நிச்சயம் அதுவல்ல. இத்திட்டம் வல்லினம் எனும் குழுமத்தின் திட்டமாக மட்டும் சுருங்கி சுணங்கிவிடாமல் எழுத்தாளர்கள், வாசகர்கள், இலக்கிய ஆர்வலர்கள், சமூக செயல்பாட்டாளர்கள், ஆய்வாளர்கள் என அனைவரும் தங்களது சேகரிப்பில் இருக்கும் ஆவணங்களை வழங்கி இவ்விணையத்தளத்தின் சேகரத்தை பெருக்குவதும், ஆவணங்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் விபரங்களை மேலும் செரிவாக்க உதவுவதும், இவ்விணையத் தளத்தை பரவலாக அறிமுகம் செய்வதும், பகிர்வதும், விரிவான ஆய்வுகளை மேற்கொள்வதும் ஆவணம் செய்வதும்தான் இத்திட்டத்தின் வெற்றியாக இருக்க முடியும்.

அதேசமயம், ‘சடக்கு’ இணையத்தள திட்டம் காப்பகப்படுத்துதலின் ஒரு பகுதியை மட்டுமே செய்துள்ளது எனும் நிதர்சனத்தையும் இவ்விடம் புரிந்து கொள்ள வேண்டும். காப்பகப்படுத்துதலில் அசல் ஆவணங்களைச் சேகரிப்பது, பராமறிப்பது, இயற்பியல் அழிவை தள்ளிப்போடுவது, புதுப்பிப்பது எனும் மேலும் நான்கு பிரிவுகள் இருக்கின்றன. அவற்றை மேற்கொள்ள இடம், பொருள் செலவுகள் இருப்பதோடு அதை தொடர்ச்சியாக செய்ய ஆள் பலமும் தேவைப்படும். அவ்வாறான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவது காலத்தின் தேவையும்கூட.

உலகநாடுகளில் சிறுபான்மை இனமாக வாழும் ஒவ்வொரு இனமும் அந்நாட்டின் பெரும்பான்மை இனத்தவர்களை முன்னிறுத்தும் அரசியலமைப்புச் சட்டத்தினால் பல்வேறு நிலைகளில் நசுக்கப்படுவதையும், சுவடுகளின்றி அழிக்கப்படுவதையும் உலக வரலாற்றிலிருந்து காண முடியும். திட்டமிட்டு நடத்தப்படும் இவ்வெறியாட்டங்களுக்கு மத்தியில் முறையான திட்டமிடல்கள் இல்லாமல் போகும்போதும் குறைந்தது ஒரு நூற்றாண்டில் அவ்வினத்தின் அடிச்சுவடுகள் சுயமாக அழிந்து போகும் சாத்தியம் உண்டு. அதற்கு மிக அண்மைய உதாரணமாக மொரிசியஸ் தமிழர்களைக் காட்டலாம்.

புலம்பெயர்ந்துவந்து அந்நாட்டிலேயே நிலைத்துவிடும் ஒரு இனம் தனது அனைத்து அடையாளங்களையும் தக்கவைக்க, வளர்க்க, தனது சந்ததியினருக்குக் கொண்டுசெல்ல முதலில் காப்பகப்படுத்தும் செயல்பாட்டின் அவசியத்தை நன்கு உணர வேண்டியுள்ளது. பல்லின நாடான மலேசியாவில் அரசியல் அதிகாரம், பொருளாதாரம் ஆகியவற்றில் குரல் வற்றிய இனக்குழுவாகவும் மக்கள் தொகையில் ‘பிற’ என்ற வகையினரைவிட மிகக் குறைவான எண்ணிக்கையிலும் வாழும் தமிழர்களின் இனம், மொழி, கலை, இலக்கியம், பண்பாடு ஆகியவற்றின் கடந்த காலம் குறித்த அனைத்து வகை தரவுகளையும் காப்பகப்படுத்தும் வேலைகள் இன்றையச் சூழலில் அவசியமாகிறது. இந்நாட்டில் தமிழர்களின் ஆவணங்கள் முழுமையாகச் சேகரிக்கப்பட, பாதுகாக்கப்பட அரசாங்கம் ஆசியலமைப்புச் சட்டம் பெரிதாக முக்கியத்துவம் காட்டாத சூழலில் தமிழர்களும் அதற்கான தீர்வுகளை நோக்கி இன்னமும் சிந்திக்காமல் இருப்பது வருத்தத்துக்குரியதாகும்.

உலகின் மிக மோசமான இனப் படுகொலைக்கு உட்படுத்தப்பட்ட யூதர்களின் தற்போதைய அபரிமிதமான வளர்ச்சியும் சாதனைகளும் வெறுமனே அவர்களின் கல்வி, பொருளாதாரம், அரசியல் ஆகியவற்றைச் சார்ந்ததாக மட்டும் பார்ப்பது அறிவீனமாகும். உலகப் பரப்பில் பல்வேறு இடங்களில் ஆவண மையங்களை அமைத்து தங்களது அனைத்து வகை வரலாற்றுத் தடயங்களையும் தேடி எடுத்து, தொடர் ஆய்வுகளுக்கு உட்படுத்தி, தங்களது சந்ததியினருக்கு அவற்றை அறிமுகம் செய்துகொண்டே இருப்பது யூதர்களின் மிக முக்கியச் செயல்பாடாகும். குறிப்பிட்டுச் சொல்லவேண்டுமெனில் The Centre of Contemporary Jewish Documentation எனும் ஆவண மையம் 1943ஆம் ஆண்டு நிறுவப்பட்டு இன்றுவரை அதே வேகத்துடன் பாரிஸில் இயங்கி வருகின்றது.

உலகமே ஆவணப்படுத்துதலின் அடுத்தகட்ட மேம்பாட்டை நோக்கிப் புயல் வேகத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில் நாம் நமது ஆவணங்களைக் கண்டடைவதிலும், காப்பகப்படுத்துவதிலும் காட்டும் சுணக்கம், பெரும் இழப்புக்கு இட்டுச் செல்லப்போவது உறுதி. காப்பகப்படுத்துவதன் தேவையை அறியாமல் பண்டைய வரலாற்றையும், மாண்பையும் வாய்வழி, செவிவழிப் பரிமாற்றம் செய்து கொண்டிருப்போமேயானால் அவற்றின் ஆயுள் அதிகபட்சம் அடுத்த ஒரு நூறாண்டு மட்டுமே.

1 கருத்து for “ஏன் சடக்கு?

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...