அம்மாவின் கொடிக்கயிறும் எனது காளிங்க நர்த்தனமும்

சீ.மு-02உருளும் சக்கரத்தில் கடகடத்து நகர்ந்து ஓடி, தடாலெனச் சுவரில் மோதி நின்று, வழிவிட்ட இரும்புகேட் வழி, உறுமலுடன் சீறிப்பாய்ந்து, உள்வந்து நின்றது கார்.

மீண்டும் மீண்டும் உறுமி, கரும்புகை பின்னால் புகை மூட்டமாக மேல் எழும்பிக் குமட்டும் நாற்றம், நாசியைத் துளைக்க –  எஞ்சின் அணைந்து அமைதியானபோது, குசினியில் ஓடிய மிக்சியை நிறுத்த, கால்கள் விறைத்து, தரையுடன் ஒட்டி நகர மறுத்து, உடல் சரிந்து நாற்காலியில் தொய்ந்து சாய்ந்தது.

தொடர்ந்த நிசப்தம், பேரிரைச்சலாய் மனவெளியில் சிறகு விரித்து முட்டிமோதிப் போக்கிடம் தெரியாது பரிதவித்தது.

அடிவயிற்றிலிருந்து எழுந்த நெருப்புத் துண்டம், சங்கடமாய் உருண்டு மேல் வந்து தொண்டைக் குழியில் மையம் கொள்ள, விக்கித்து, பயப்பிராந்தி மென்னியைக் கவ்வி நெறிக்க, மூச்சுத் திணறலெடுத்துத் திக்குமுக்காடியது.

மரண பயம், சன்னஞ்சன்னமாய்ச் சிதைத்து, சீரழிக்கும் விஷவிருட்ஷமாய்…

திறந்து மூடிய கார்க் கதவின் அலறல் சப்தம், குசினிவரை வந்து எதிரொலிக்க, செவிப்பறையில் மோதிச் சிதறி மண்டைக்குள் இடியாய் இறங்க, கண்களில் மின்னல் கொடியோடி கலங்கியது.

மதியத் தூக்கத்திலிருந்து டாமியும் துணுக்குற்று எழுந்து குரைத்து, அடையாளங்கண்டு, குழைந்து வாலாட்டி, முன்னகால்களை மார்பில் புதைத்து சோம்பல் முறுவலித்து, முகத்தை நக்கிச் சுகப்படும் ஏக்கத்துடன், வாசலைப் பார்த்திருந்தது.

இந்த ஒருவாரமாய் இதுதான் நடைமுறை.

அதிர்வலைகள் மேல் எழ, துணுக்குற்றுக் கூரையிலிருந்து குப்பென எழுந்த புறாக்கள் சிறகு விரித்து, வடக்குப் பர்ர்த்து, ஒட்டுமொத்தமாய்ப் பேசிவைத்த்துபோலப் பறந்தன.

கூரையின் கீழ வியாபித்திருக்கும், மௌனப் பிராந்தியத்துள் உறைந்து, அமைதியிழந்து சலனிக்கும் உளைச்சலை –  அவை ஒவ்வொரு முறையும் சரியாய் அடையாளங்கண்டு, பதற்றமுற்று, எழுந்து எங்காவது போய்விடுவதுண்டு.

சிறகு விரித்து மேல் எழுந்த புறாக்களைப் பார்த்து, மீண்டும் விசனத்துடன் தலைகவிழ்ந்து படுத்தது டாமி – நாலு கால்களுக்கு மாற்றாய் இரண்டு கால்களும் கனத்த உடலைச் சுமந்து வானில் பறக்க ஏதுவாய், உறுதியான நீண்ட இறக்கைகளும் இருந்திருந்தால். இந்த ஒருவார காலத்தில் பலமுறை வானில் பறந்து எங்காவது போய் வந்திருக்கும் டாமியும்.

அவிழ்த்துவிட்டாலாவது, நாலு கால் பாய்ச்சலில் சந்து பொந்தெல்லாம் நுழைந்து, கண்மண் தெரியாமல் குதித்து ஓடி, எதிர்படும் எலிகளையும் பூனைகளையும் சந்தோஷமாய்த் துரத்தி விரட்டி – ஒருவாரமாய்க் கட்டிப்போட்ட இடத்திலேயே சங்கடத்துடன் பெய்யும் மூத்திரமும் கழிக்கும் மலமும் தவிர்த்து, வழக்கமாய்ப் போகும் புல்தரையில், ஓடி நின்று, பழையதை முகர்ந்து அடையாளங்கண்டு, சுகமாய்ப்போய் – பின்னங்கால்கள் பூமியில் அழுந்த உதைத்து, புழுதி கிளப்பி, ஆனந்தக் கூத்தாடியிருக்கும்.

மீண்டும் ஓட்டமாய் ஓடி, எதிர்வரும் பழைய வைரியின் உறுமலை எதிர்கொண்டு, ஒருவாரமாய் உள்ளடக்கிக் குமைந்து புழுங்கி வேகும் நமைச்சல் தீர- ஆங்காரம் கொப்பளிக்கும் நறநறக்கும் பற்கள் தெரிய, எட்டி பிடித்து கட்டிப்புரண்டு உருள, வாலைச் சுருட்டி ஓடும் எதிராளியை, மதர்ப்புடன் பார்த்துப் புன்னகைத்து – எல்லாம் வற்றி வடிந்துபோன சுகானுபவத்தில் மூச்சிரைக்க ஓடுவந்து, நிம்மதியாய் ஒரு தூக்கம் போட்டிருக்கும்.

மெயின்ரோட்டு மின்சாரக் கம்பிகளில், இன்னும் கொஞ்ச நேரத்தில், வரிசை பிடித்து உட்கார்ந்துவிடும் எல்லா புறாக்களும். அண்ணாந்து பார்க்க, சுந்தர ராமசாமி சொன்னது நினைவில்வர, லேசாய்த் தலையாட்டிப் புன்னகைக்கலாம் – ‘புறாக்கள் வானத்தில் மிகச் சிறிய இடத்தை அடைத்துக்கொண்டு மிகப்பெரிய அழகை சிருஷ்டித்து விடுகின்றன’.

ஒரு வசதிக்கு நமக்கும் சிறகுகள் இருந்தால், இந்நேரம் இந்தப் புழுங்கும் இறுக்கத்தைச் சற்றே, தளர்த்திவிட்டு வானத்தில் பறந்து எங்காவது ஒரு கோயில் கோபுர உச்சியிலோ, கீழே அமைதியாய் ஓடும் ஆற்றைப் பார்த்து மோனத்தில் ஆழ்ந்திருக்கும் ஏதோ ஒரு மரத்தின் கிளையிலோ உட்கார்ந்து –  யாருமில்லாத் தனிமை வனாந்தரம் தந்துவிடும் சுதந்திரத்தில், பெருங்குரலெடுத்து அழுது தீர்த்திருக்கலாம். அப்படியும் தீராத பட்சத்தில், வானத்தின் எல்லைவரை சிறகுகள் சோர்ந்து இற்றுப்போக, பறந்துபோய், ஏதேனும் ஒரு புள்ளியில், அகண்டவெளியின் பிரம்மாண்ட்த்துள் கலந்து, கரைந்து, காணாமல் போய்விடலாம்.

வாசல் நோக்கி நகரும் அந்த முகத்தின் நிலைத்துவிட்ட சோக வரிகளை, அதன் சகல நுட்பமான வேலைப்பாடுகளுடன் துல்லியமாய் வரைந்து பார்க்க முடிந்தது மனக்கண்களில்-

தசைநார்கள் இறுகிக் கெட்டித்து, சலன ரேகைகள் சோக இழைகளாய்ப் பின்னிப்படர்ந்து, முகமெங்கும் பந்தலிட, சிரைக்காத ஒருவாரக் கருமை தாடி.. புகைந்து கனலும் நெருபின் கனப்பு, கண்களின் ஜூவாலைவிட்டுத் தகதகக்க –  எதனுடனும் ஆன தனது தொடர்பு சாதனம் பழுதுபட்டுப்போன தனிமையின் வேதனையில் –  நாலே எட்டில், விசுக்கெனக் கால்கள் தாவிப் பாய்ந்து உள்வந்து – அறைக்குள் சங்கமித்திருக்கும் இந்நேரம்.

அடுத்து தொடுக்கப் போகும் தாக்குதலின் கடுமை நினைத்து, பதற்றத்துடன் எதிர்ப்பார்த்து, இன்று சுவரிலோ தரையிலோ பறந்து வந்து மோதிச் சிதறப் போகும் பொருள் எதுவாக இருக்கலாம் என்ற கணக்கிடலில் குழம்பி இருக்க – பாத்ரூமில் கேட்ட சப்தம், மூச்சு இலகுவாய் விட உதவியது.

ஒருவாரமாய்க் கேட்பதுபோல், இன்றும், கொட்டும் நீரின் சலசலப்பு, கூடுதல் விரைவுடனும் அழுத்தத்துடனும் இருந்தது. ஆவேசத்துடன்  அள்ளியள்ளி ஊற்றும் நீர் தரையில் இரைச்சலிட்டு இறங்கி, கதவின் இடுக்கில் தெறித்து வந்து நடைபாதையில் ஈரப்படுத்தியது – வழுவழுத்த தரையில் காலைவாரிவிட ஏதுவாய்,

குளித்து முடித்து விசுக்கென வெளியில் காலெடுத்து வைத்து – ;தண்ணியக்கூடத் தொடைக்க முடியாதா?” என்பதாய், அடுத்த தாக்குதலின் முதல் குண்டு சீறிப்பாய்ந்து வரலாம்.

அறைக்குப் போகும் வழியில், சம்பந்தமே இல்லாமல் மேஜை டிராயரை இழுத்து, மூர்க்கமாய்த் தரையில் அடித்து நாசப்படுத்தி, அடுத்த குண்டு, மார்பைத் துளைத்துப் போகலாம்.

துடைப்பதோடு போய் நிற்க, உள்ளிருந்து கேட்டது, ஒருவாரமாய் மந்திர உச்சாடனமாய் வீட்டில் விரவி மனப்பாடம் ஆகிப்போயிருந்த- ‘கண்டவனுக்கெல்லாம் எதுக்குக் காரியம் பண்ணனும் ? அவன் எனக்கு என்ன அப்பனா?”

‘அவன் என்ன எனக்கு அப்பனா?” என்பதோடு, இரட்டிப்பு வேகத்துடன் கதவிடுக்கில் சிதறிவரும் நீரோடு, காறி உமிழ்ந்த எச்சிலும் கலந்து வந்து, தரையெங்கும் தாராளமாய் விரவி ஓடியது.

ஒவ்வொரு முறையும், வாயில் சுரந்து நிரம்பும் எச்சிலை, ஒட்டுமொத்தமாய் ஒன்றுதிரட்டி எதிராளியின் முகத்தில் காறி உமிழ்ந்து திருப்திகொள்வதான, பழிதீர்க்கும் செயல்பாடாக அல்லாமல் – புதியதொரு பரிமாணாத்தில் – உள்ளே எங்கோ ஒரு மூலையில் புரையோடி அழுகி நாற்றமெடுத்து, குமட்டி வரும் ஏதோ ஒன்றை – பிய்த்தெடுத்து வந்து வெளித் தள்ளி, நிரந்தர நிவாரணம் பெறுவதற்குரிய ஒரு அசுரப் பிரயத்தனமாகவே அது தெரிந்தது.

இதுநாள் வரையிலும், அம்முயற்சி வெற்றி பெறாததன் அடையாளம்தான், இப்போதும் பாத்ரூமுக்குள் ஓங்காரமாய் ஒலிக்கும், காறி உமிழும் சடங்கு –  மீண்டும் மீண்டும் ஒரு சங்கிலித் தொடராக, தொண்டைக்குழி ரணமாகிக் குருதி கசியும்வரை.

இந்த ஒருவார காலத்தில், பெரும்பாலான பொழுது, அறையின் வெறிச்சிட்ட நிசப்தத்தில், நிம்மதியிழந்துஅடைந்துகிடந்த அவருடைய அம்மா, மெதுவாய்க் கதவைத் திறந்து எட்டிப் பார்த்தார் – துடைப்பத்தோடு சுவரில் சாய்ந்து, நிலைகுலைந்து நின்றவளைப் பார்த்துக் கலங்கினார்.

வழக்கமாய் இந்நேரம் குளித்து முடித்து வருவதற்குள் காப்பி ஹாலுக்குப் போயிருக்கும்.

தலையைத் துவட்டி, இடுப்பில் கட்டிய துண்டோடு ஈரம் சொட்டும் உடலுக்கு இதமாய், மேலே காற்றாடி முழு வீச்சில் சுழன்று காற்றைக் கீழே தள்ள, ஒரு மிடறு சூடான காப்பி சுகமாய் உள்ளிறங்க –  காலை நீட்டிப் போட்டு ஐந்தரை மணிச் செய்தியில் மூழ்கி, முடியும்போது இன்னொரு காப்பியும் முடிந்திருக்கும்.

முகத்தைத் தொடங்கப்போட்டு, இன்று விசனத்துடன் வாசலில் படுத்துக்கிடக்கும் டாமி, வீட்டினுள் உலாப்போகும் நேரமும் அப்போதுதான். வசதியான இடம் தேடி மூத்திரம் போகப் பார்க்கும். கோவப்பட்டு துரத்தினால், ஆட்டம் காட்டிப் பாதுகாப்பாய் அவரது காலடியில் அடைக்கலம் தேடி, கொறிப்பதைப் பங்கு போட்டு, ஒரு குட்டித் தூக்கமும் போட்டிருக்கும்.

அதற்கு வழி இல்லாதபடி, மத யானை தலையில்  சர்க்கஸ் ராட்டினம். கால்களில் அசுரப் பசி. வழியில் எதிர்ப்படும் எதனையும் துவம்சிக்கும் குணாம்சம். சொற்களுக்குச் சாணை பிடித்து, வாரி இறைத்து ரணகளமாக்கி, தானும் சிதறுண்டு அழுது அரற்றும் பரிதாபம்.

பீறிட்டு வரும் உணர்வுக் காட்டாற்றில், தானே விழுந்து மூழ்கித் திக்குமுக்காடி – ஜல சமாதியில் மரணிக்கும் துயரம், இந்த ஒருவாரமாய்.

சின்னச் சின்னப் பொறி போதும் அதற்கு. இரை, பார்வையின் வட்டுத்துக்குள் வர, வாய்ப்பிளந்து, கர்ஜித்துப் பாய்ந்து வரும் மிருகம். மனத்தின் சந்துபொந்துகளில் சந்தடியில்லாமல் ஒளிந்திருந்து ஏதோ ஒரு கட்டவிழ்ப்பில் சீறிப்பய்ந்து, அனைத்தையும் தனது பிரவாகத்தில் அடித்து இழுத்துப்போகும் குரூரத் தண்டவம்.

கனவுலும் விடாமல் துரத்தும் அப்பன்.

மின்சார அதிர்வாய் உடல் குலுங்க, ஊழிக்காலமாய் மனிதகுலம் சேமித்த துக்கத்தின் ஒட்டுமொத்த வடிகாலாய்த் தொடரும், மரண ஊளை பல இரவுகளில்.

தொடரும் கனவுக்குப் பயந்து, கண்மூட மறுத்து, இருளில் பார்வை எங்கோ வெறித்து நிலைகுத்திக் கிடக்க, நீண்ட நேரம், சுவரோடு சரிந்து குத்திட்டு உட்கார்ந்திருப்பது, மங்கலாய்த் தெரியும்.

அவர், இன்னமும், என்றோ வீட்டு உத்திரத்தில் தூக்கிட்டு மாண்டுபோன அப்பனோடு, நிரந்தரமாய் ஐக்கியமாகி, கனவிலும் அவரோடு வாழ்பவர்

முதன் முதலில், பெண் பார்க்க வந்தவரிடம்  பூதக் கண்ணாடி வைத்துத் துழாவித் தேடி, ரொம்பவும் பிடித்துப்போனதாய், பட்டியலில் முதல் ஸ்தானத்தில் சேர்ந்தது- பார்த்த மாத்திரத்தில் கண்களில் வந்து ஒட்டிக்கொண்ட அந்த மென்மைதான்.

நீளம் நீளமான கைகளும் கால்களும் மெலிந்த ஒடிசலான உடம்பும் –  குழந்தை முகமும் – மெல்லத் திறந்து வெளிப்பட்டு மறையும் சிரிப்பலை. முடியின் ஒன்றிரண்டு நரைத்தும் ஏதும் மையடிக்காமல் இருக்க யதார்த்த இயல்பு பிடித்திருந்தது.

நடுநிசியில், நிசப்த இருண்மையுள், சிறகுகோதி உயிரில் தோய்த்துச் சொட்டும், ஏதோ ஒரு பாடகனின் குரலை ஒத்து, அவரது குரலும்.

திருமணம் முடிந்து, அவர், எனக்குத் தன்னிடம் பிடித்துப்போனது என்ன என்று கேட்டு உற்றுப் பார்த்து நின்றவரிடம் – ‘உங்க குரல்தான்’ என்று சற்றும் தயங்காமல் சொன்னதைக் கேட்டு, அவர் முகத்தில் பரவிய கலவரரேகைக்கான அர்த்தம் வெகுநாள் கழித்தே பிடிபட்டது.

கரடு முரடானது எதுவும் ஒத்துவருவதில்லை –  ஓய்வு ஒழிச்சல் இல்லாமல், ரோட்டில் இரைச்சல் எழுப்பிக் குதித்து ஓடும் வாகனங்கள் தொடங்கிப் பக்கத்து வீட்டு ரேடியோ போடும் அதீத சத்தம்– வானில்மழைக்குமுன்கடகடத்துஓடும்இடிமுழக்கம்-பக்கமே நிற்க, தேவையில்லாமல் பெருகுரலெடுத்துப் பேசும் மனிதர்கள் –தலைதெறிக்கக் கத்திப் போகும் ஆம்புலன்ஸ் –  இடி முழுக்கமாய் வானில் தாழ்வாய்ப் பறந்துபோகும் விமானம்.

ரொம்பவும் பிடித்ததாய் இன்னமும் மனசுகள் பச்சைக்கட்டி நிற்பது –  கிணற்றடியில், நடுங்கும் குளிரில் தலைக்கு ஊற்ற, உருண்டோடி விழுந்த நீரின் சலசலப்பு –  மழைக்காலத்தில் நிறைந்து நிற்க, அலைந்துவிட இசையோடு கிளை பிரிந்து பரவும் அலையோட்டம் – கிணற்றுமேட்டில் குடியிருந்த முனிசாமியின் சாயங்கால பூஜை மணியோசை-

சாயங்கால மஞ்சள் வானத்தில் குறுக்குவெட்டாய், மேற்கிலிருந்து கிழக்காய், தொலைதூரத்தில் தெரியும் பச்சைக்காடு பார்த்து, பறந்துபோகும் வௌவால்களின் தாளம் தவறாத சிறகசைப்பு…

குறைப்பிரசவத்தில், இரட்டையையும்மண்ணுக்குக்கொடுத்துவந்தபோதும், இதேபோல், ஒருமாதமாய், இவரதுதெறிப்புகள்அனல்துண்டுகளாய், சிந்திச்சிதறி, வீடெங்கும்பற்றிஎரிந்துரணபடுத்தின.

கருவில் இரட்டை என்று டாக்டர் சொன்னதைக்கேட்டும் சந்தோஷம் தாளாமல், சாமிக்கு வேண்டிவந்து, மந்திரித்த மஞ்சள் தாயத்தைக் கட்டிவிட்டு – ‘ஒடம்புல பலமில்லனு டாக்டரு சொல்லி இருக்காரு,  பார்த்துக்க’ என்று முகத்தில் நிஜமான சந்தோஷம் பீறிட்டு மிதக்கநின்றபோது –  ரொம்பநாளைக்கு அப்புறம் மனம் நிறைந்துபோனது.

ஒருநாள் நடுநிசியில், தாளமுடியாத வலியில் ஆஸ்பத்திரிக்கு அவசரமாய் ஓட, டாக்டர் சொன்னது கேட்டு அதிர்ந்துபோய் நின்றோம் – “ரெண்டையும் உடனடியா வெளியாக்கனும். இல்லனா அம்மா உயிருக்கே ஆபத்து. சீக்கிரமா இதுல சைனப்போடுங்க.”

மூன்று நாட்களாய் மனத்தில் உறுத்தியது, அப்போது உறுதியானது – நாலைந்து தடவையேனும் தட்டப்படும் அசைவு நின்றுபோய், உள்ளே மயான அமைதி ஆட்கொண்டிருந்தது. குழப்பத்துடன் தொட்டுத்தடவி, ‘அப்படி எல்லாம் ஒன்றும் இருக்காது. பயப்படாத, தைரியமா இரு’என்று அவரும் சொன்னதில் கொஞ்சம் பயம் விலகியது.

வயிற்றைக் கிழித்துத்தான் எடுத்தார்கள். இரண்டும் உள்ளேயே பிணமாய் இருந்தன. கருப்பையே கல்லறையான கொடுமை… வெள்ளைத்துணியில் சுற்றி, ‘எங்காவது பத்திரமான எடத்துல பொதச்சிடுங்க’ என்று இரண்டையும் கைகளில் திணித்து, சர்வசாதாரணமாய் நர்ஸ் நகர்ந்துபோனபோது – அவரின் முகத்தைப்பார்க்கச் சகியாமல், அம்மா தூரப்போய் அழுதிருக்கிறாள்.

கூட யாரும் வேண்டாம் என்று அவர்தான் ஒத்தையாய்க் கொண்டுப்போய்ப் புதைத்துவந்தார்.

எங்கோ ஒதுக்குப்புறமான காட்டுப்பகுதி. எங்கே என்பது இதுவரை அவரிடமிருந்து கசியாத ரகசியம். கேட்டால், ‘உனக்கு எதுக்கு இப்ப அதெல்லாம். பார்த்துட்டு இன்னும் மனசுகஷ்டப்படவா’ என்பார்.

ஆற்றுக்குப்பக்கமாய் இருக்கும். அங்குதான் பிஞ்சி உடலை நோகச்செய்யாத ஈரப்பசையோடு சுலபமாய் பிரிந்துவரும் மண் இருக்கும். புதைகுழிக்குக் குடைபிடித்து, மழைக்கும் வெயிலுக்கும் பாதுகாப்பாய், பெரிதாய் ஒரு காட்டுமரம் நிற்கும். அடையாளமாய் ஏதாவது பூச்செடி நடப்பட்டிருக்கும்.

ஒன்று மட்டும் நிச்சயமாய்த் தெரியும். சோகம் தாளாமல் ஒருநாள் உளறி வைத்தார்.

குழியைத் தோண்டி வைத்து, புதைக்க மனமில்லாமல் ரொம்ப நேரம் உட்கார்ந்து பார்த்திருக்கிறார். பையன் நல்ல நிறத்திலும் பெண் மாநிறத்திலும் கையும் காலும் நல்ல நீளத்தில். இருள் கவிந்து வண்டுகளின் ரீங்காரம் தொடங்கும்போது, இரண்டையும் வாரி அணைத்துக்கதற – துணுக்குற்றுப்பார்த்த பறவைகளிடம், ‘எம்புள்ளைகளப் பத்திரமாய்ப் பார்த்துக்குங்க’ என்று கைகூப்பி நின்றிருக்கிறார்.

ஒரு வாரத்திற்கு முன்பு, அது இப்படித்தான் தொடங்கியது. நடுஹாலில் நின்று, சோபா மேசையை எட்டி உதைக்க, உருண்டோடி சுவரில் மோதி கண்ணாடிச்சில்கள் சிதறுவதை திருப்தியுடன் பார்த்து கண்கள் சிவந்து கலங்க, அம்மாவைப்பார்த்து – ‘அப்பனக்கொன்னவனுக்கும் இங்கயே திவசம் செய்ய ஏற்பாடு பண்றியா? அதுமட்டும் நடக்காது. அவனுக்கு மட்டுமல்ல, உனக்கும் செத்தா எங்கையால எதுவுமே நடக்காது. ஞாபகம் வச்சுக்க’.

பதினைந்து வயதில் பார்த்த, வீட்டு உத்திரத்தில் கயிற்றில் தொங்கிய அப்பன், அவருள் ஆழவேரோடி, ஆலவிருட்சமாய்ப் பிரம்மாண்டம் கொண்டு, தினமும் பேயாட்டம் போடுவது இந்த ஒருவாரத்தில் உறுதியானது.

இவரது அம்மாவுக்கு, இந்த விதமான பாதிப்பு இருப்பதன் அறிகுறி ஏதும், இதுநாள்வரை தெளிவாய் அடையாளம் காட்டவில்லை.

சகஜமாய் நடமாடும் அவரது அந்தரங்கம் பிடிபடாத ஒன்று. பேச்சுவாக்கில் – ‘மாமா இப்ப இருந்தா நல்லா இருக்குமில்ல’ என்ற ஆதங்கத்துக்கு, அவர்கோடிட்டுப்போனது- ஒருசின்ன, வாசிக்க இயலாத சலனித்த பார்வை மட்டுமே.

அவரது அறைதாண்டித்தான், குசினி நுழையும் வாசல்.

சின்ன அறை. வெளிர்மஞ்சளில் கதவை மறைத்துத்தொங்கும் திரைச்சீலை. கதவைத்திறக்க, சன்னல் ஊடே பளிச்செனக்கண்ணுக்குள் புகும் பசுமை. பச்சை போர்த்தி நிற்கும் வேப்பமரம், ரோட்டுக்கு அந்தப்பக்கம். அதன்பக்கமே நிற்கும் விளக்குக்கம்பம்.

இங்கிருந்துமட்டுமே, மரத்தை, முழுஉருவில் பார்க்க இயலும் என்பதால், வேலை ஒழிந்தமதியப்பொழுதுகளில், மரத்தை உள்வாங்க உட்கார்ந்து, அம்மாவோடு பேச்சுக்கொடுப்பதுண்டு. இரவில், எப்போதேனும் எழுந்து குசினிக்குப்போகும் வழியில் – இருளில் மூழ்கின அறையின் கதவிடுக்கில் கசிந்து வந்து, ஸ்தம்பிக்கச்செய்யும் மெல்லிய அழுகைஒலி. அன்றைய பொழுது விடிந்தும், நீண்டநேரம் கதவு திறவாமல் சாத்திக்கிடக்க, உள்ளிருந்து கேட்கும் அடர்ந்த மௌனம்.

அவரது அப்பா தூக்கில் தொங்கிப்போனபின், யாரோ ஒருவர் இவர்களோடு வந்துதங்கிவிட்ட துண்டுச்செய்தி ஒன்று, உறுத்தலாய் மனசில் நெருடியது ரொம்பநாட்களாய்.

ஒருநாள், அந்த மர்மமனிதர் குறித்த ஆவல் அதிகமாக, அந்த அலமாரி ஞாபகம் வந்தது. – பாச்சை குண்டின்நெடி. மேலடுக்கில், உடைந்து பசைபோட்டு ஒட்டிய மண்பொம்மை ஒன்று. நாலைந்து நிறம் வெளுத்த பிளாஸ்டிக் வளையல்கள். கறுத்து நிறமிழந்த பித்தளைச்சங்கிலி ஒன்று. ஒருவெற்றிலைச் சுருக்குப்பை.

கொஞ்சம் அக்கறையெடுத்து தேடினால், எங்காவது ஒரு துண்டுப்படமோ, ஒரு சுருட்டுத்துண்டோ கூடக்கிடைத்திருக்கலாம். ஏனோ கைகள் தயங்கின. எதையும் தொட மறுத்து சத்தியாக்கிரகம் செய்தன. ஏதோ புரியாத தடுமாற்றம். ஒரு ஜீவனின் புனிதமான அந்தரங்கப்பிரதேசத்துள் அத்துமீறிப் பிரவேசித்த குற்ற உணர்வாக இருந்திருக்கலாம்.

முடங்கிக் கிடக்கிறது டாமி – மார்க்காம்புகளை இழுத்தபடி, பிறந்து இரண்டு வாரமே ஆனகுட்டிகள், பஞ்சுப்பொதிகளை ஒத்த பல வண்ணக்கலவையில். ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான கலவையில். ஒன்று மட்டும் எதனுடனும் ஒட்டாத சுத்தமான வெள்ளையில்.

அம்மா நிறத்தில், ஒன்றிரண்டு மட்டுமே தேறும்போல் தோன்றியது-  சாக்லெட் நிறதோலில் ஆங்காங்கே திட்டுத்திட்டாய்க் கரும்புள்ளிகள் உடல் முழுக்கவும். இரண்டு கண்புருவங்களுக்கு மத்தியில் தொடங்கி, நாமம் இட்டதுபோல் ஒரு வெள்ளைக்கோடு கீழ்நோக்கி இறங்கி மூக்கின் நுனிவரை. காதுமடல்கள் செங்குத்தாய் மேல் நோக்க வளைந்த அதன்வால் பகுதி முழுக்கவும் விசிறிபோன்ற அடர்ந்த முடிக்கற்றை.

நேற்றிரவு, அசதியில்கண்மூடி – பின்திடுக்கிட்டுகண்விழிக்க – நடுநிசிகடந்தும், பால்மணம் வீசும் குட்டிகளை மார்போடு அணைத்து – ரெட்டையையும் புதைத்து வந்த ஏதோ காட்டின் ஒரு மூலைக்கு இடம்பெயர்ந்து – அவற்றை வாரி அணைத்து தேற்றுவதான பாவனையில், ஏதோ பிதற்றியபடி அவர்…

இருட்டி வெகுநேரமாகிறது,

அறைக்குள் போனவரை இன்னும் காணவில்லை. விளக்குப்போடப்படாமல், அறை இருளில் மூழ்கிக்கிடப்பது கதவிடுக்கில் தெரிகிறது. இடைஇடையே வந்துபோன செருமலும் கணைப்பும், எதிர்கொள்ளவேண்டிய ஆபத்தை அறிவித்தபடி இருந்தன.

அறையின் இருளுள் புதைந்து-  அன்றைய முதல்தாக்குதலைக் குளியலறையில் தொடங்கி வெற்றிகரமாக நடத்தி முடித்துவிட்டதன் திருப்தியை அசைபோட்டு ரசித்தபடி – அடுத்ததாக்குதலுக்கான ஆயுதத்தையும், அவர் சாணைபிடிக்கத் தொடங்கிவிட்டதற்கான தெளிவான அறிகுறி அவை என்பது புரிந்தது.

இனி, எந்தவினாடியிலும், அறைக்கதவு படாரெனத் திறந்துக்கொண்டு – அங்கிருந்து அடுத்த குண்டு சீறிப்பாய்ந்து வந்து – மீண்டும் ஒரு முறை வீட்டை ரணகளப்படுத்தலாம் என்கிற அச்சம் மேலோங்க –இதற்குமேலும் தாமதித்தல் கூடாது எனும் சங்கல்பமும் வலுப்பட – எனது காளிங்கநர்த்தனம் அரங்கேறவேண்டிய தருணம் இதுதான் என்பதை உணர்ந்து, அவரது அறைபார்த்துதிரும்ப –

கொடுக்கயிற்றோடு அம்மா.

சீ.முத்துசாமியின் படைப்புலகம் குறித்த விவாதம் 17.3.2018 நடைபெற உள்ளதை முன்னிட்டு இச்சிறுகதை மீள்பிரசுரம் செய்யப்பட்டுள்ளது.

 

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...