அன்புள்ள நவீனுக்கு,
பேச்சி கதை வாசிப்பின் முடிவில், புதிதாக தீட்டப்பட்டு அதன் தணல் கூட குறையாத கத்தி, முதல் பலியினை அறுத்து அதன் குருதியில் தோய்ந்த உடனேயே, தன் கூர்நுனி கொண்டு பிரசவித்த பெண்ணின் மார்புக் காம்பில் நுண்துளையிட்டு, உறைந்து அடைத்த முலைப்பாலை, இளக்கி வெளிக்கொணர்ந்து, பிறந்த குழந்தைக்கு பருகக் கொடுத்த காட்சியை கண்டது போல இருந்தது.
கணிணியில் தமிழ் எழுத்துருக்களை, டைப் பதிக்கும் இந்த தலைமுறை இளைஞனுக்கு, தன் இறப்பின் விளிம்பில் இருக்கும் சென்ற தலைமுறை அப்பா, முன்பொரு முறை நிகழ்ந்த தன் வாழ்வின் உச்சநுனித் தருணத்தைப் பகிர்கிறார். இவர்கள் உரையாடல் வழியாக கதை விரிகிறது. வெள்ளைக்கார துரையிடம் வேலையாளாக இருந்த தன் தாத்தா, அவரளித்த துப்பாக்கியை சிரத்தையுடன் பேணியவர். வேட்டை நாய்களின் துணை கொண்டு காட்டுப்பன்றிகளை வேட்டையாடி அதன் தலைகளை மண்ணில் புதைத்து பற்களை சேகரித்தவர். இறந்த வேட்டைநாயின், ‘ரத்த சதையின் மீது கறுப்பு கம்பளி போர்த்தியது போல இருந்தது’ ‘ஒரு தேர்ந்த வீரனின் வாளைப்போல இடவலமாக சுழன்ற வாள்’, என சில நொடிக்குமுன் விபத்தில் இறந்த விலங்கின் உடலின் சதையைத் தொட்டு வெதுவதுப்பை விரல் நுனியில் உணர வைத்த அனுபவத்தைத் தந்தது. தாத்தாவிற்கு பிறந்த குழந்தைகள் அடுத்தடுத்து இறந்தபின் ஒன்பதாவதாக பிறந்த பெண்ணும், கதைகூறியின் அன்னையான பேச்சிக்கும் அவருக்கும் இடையேயான தூற்றப்பட்ட உறவு, அவரின் பேரனான கதைகூறியின் மீதான அன்பில் எதிர்மறைத் தாக்கம் செலுத்தவில்லை. ஆனால் அந்த வினை கதைசொல்லிக்கும் அவன் மனைவி பொன்னிக்குமிடையேயான சிக்கலான உறவானதை எண்ணி உளன்று தாத்தா இறக்கிறார்.
மேற்கு மலேசியா காட்டின் மஞ்சளும் செம்மையும், மகரந்தமு்ம் நிரம்பிய சூழலின் இலையிலையான வர்ணனை, பலகைத்தரை வீடு கொண்ட கம்பம், தாய்லாந்துகாரர்களிடம் பெறப்பட்ட ரவை, காற்றில் பறந்து வந்த வினோத இலைகள் பறவைகள் போலிருந்தன், மகரந்தம் சூழில் சேரந்து எண்ணை ஊறும் செம்பனை ஆண்மரம், என நுண்தகவல்கள் விவரிப்புகள், வாசிப்பை ஆழமாக்கின. கதையின் உச்சத்தில் தாத்தா புதைத்த பன்றிகளின் வழித்தோன்றலாக வாய்ப்பிருக்கும் ஒரு முனிப்பன்றி, பலிக்கோழியை பேச்சிக்காக கொண்டு செல்லும் கதைகூறியை கொல்ல முழுத் தீவிரத்துடன், விரட்டுகிறது. ஆற்றங்கரை ஆலமரத்தின் கீழ் வீற்றுருக்கும் பச்சிளங்குழந்தைகளை காத்தருளும், பேச்சி பொன்னியின் சாயலுடன் எழுந்து முனிப்பன்றியுடன் சமரிட்டு வென்று, அவளின் பிள்ளையான கதைசொல்லியை முலைப்பால் கொடுத்து காக்கிறாள்.
என் ஆதி நினைவு தெரிந்த முதல் பேச்சியம்மனும், சப்த கன்னியர்கள் கூட சிறுமிகளாக தோன்றுமளவிற்கு,, மஞ்சளும், செம்பொடியும் பிரித்தறியாதபடி கலந்து படித்துறையில் எழுந்திருக்கிறாள். பச்சிளம் பிள்ளையைக் காக்க பேருருவெடுத்து சன்னதமாடி எதிரியைக் கொன்று உப்புக் குருதியை குடித்தபின்னரான பெருந்தாகத்தை அடக்க இவளுக்கு தேங்கிய பச்சைப்பாசிக் குளத்தின் நீர் சொட்டுதான் போலும். கரையைத் தொட்டு ஓடிய வைகைகூட இப்போது போதாமல் வீற்றிருக்கிறாள்.. பிரபாவலிக்குள் அடக்கப்பட்டு, கருவறையின் குறுவாயில் வழியாக இந்தப் பேச்சியின் ஆகிருதியை முழுமையாகக் காண முடியாது போலும், வரிப்புலி போன்ற கோரைப்பற்கள் தெரிய செவ்வாய்பிளந்து தன் உக்கிரத்தை ஒவ்வொரு அங்குலத்திலும் காட்டி வெட்ட வெளியில் நிற்கிறாள். அவளின் தழல்முன் தாழ்ந்து வணங்குவதைத் தவிர வேறு வழியில்லை.
பொன்னியை உடலுறவிற்காக பணிய வைக்க பாலியல் சைகைகள், தீண்டல் அழுத்தம், சீண்டும் பேச்சு என அடுத்தடுத்து முயலும் கதைகூறியின் கீழுணர்வின் அப்பட்டமான விவரிப்பு நாளங்களில் வெப்பமேற்படுத்தி துணுக்குற வைத்தது. என் வாசிப்பில் அம்மா, அப்பாவின் ஆரம்பகால மனம் ஒன்றாத உறவு விடுபட்ட கோட்டுச் சித்திரமாக மகனுக்கு விவரிக்கப்படுகிறது. இந்த விவரிப்பு தீவிரமாக இல்லை என மகனுக்கு தோன்றுகிறது. இந்த அத்தியாயத்தின் தீவிரத்தை மகன் மேம்படுத்த எத்தனித்து விரிவாக்குகிறானோ எனத் தோன்ற வைக்கிறது. என் நோக்கில், கதையில் இந்த பகுதிமட்டும், இன்றைய தலைமுறையை முன்னிறுத்தும் மகன், தன் இக்காலப் பார்வையை சுதந்திரமாக பயன்படுத்தி, தந்தை கூறிய கதையில் இடைச்செருகலாக நுழைத்திருக்கிறான். புணர்மம் மற்றும் இன்னபிற காட்சி ஊடகங்களின் 24 மணிநேர ஆக்கிரமிப்பின் பிடியில், ஆண் பெண் உறவின் இயல்பான உடல் மனக் கிளர்ச்சியினை இழந்து கொண்டு தனித்தீவுகளாகிக் கொண்டிருக்கும் இன்றையை தலைமுறையின் மீது நவீனின் விமர்சனமாகவும் தோன்றியது. ஆனால் அதற்கு மேலான உண்மையில், பொன்னி தன்மீது அறமற்ற சீண்டல் கொடு்க்கும் கணவனையே முழு முற்றாக சார்ந்து வாழ்கிறாள். உறவினை இழக்காமல் தன்னை காத்துக் கொள்ள, சன்னதம் கொண்டு, பயமுறுத்துவதைத் தவிர அவளுக்கு வேறு வழியில்லை. அது பிரக்ஞையில்லாமல் நிகழ்ந்திருந்தாலும் சரி, பிரக்ஞையுடன் நிகழ்ந்திருந்தாலும் சரி.
சிக்கலான பண்பாடு , காலநிலை, மொழிகள் கொண்ட தெற்காசியா பெருநிலத்தை பிரிட்டானிய பேரரசு எப்படி ஆக்கிரமித்தது என்பதும், எப்படி நூறாண்டுகளாக சுரண்டி ஆண்டார்கள் என்பதும் என்றுமே என்னை வியப்பில் ஆழ்த்தி சிந்திக்க தூண்டும் கேள்வி. இதற்கான விடைகளை என் கற்பனையை விரிக்கும் பாத்திரங்களும் சூழல்களும், மோதல்களும் நிரம்பிய புனைக்கதைகளுக்குள் தேடுகிறேன். கதைசொல்லியின் தாத்தாவை பிரிட்டானிய பேரரசாகவும், கதைசொல்லியை பிரிட்டனில் பிறந்து இந்திய பிரிட்டானிய இராணுவத்தில் உயர்பதவியிலிருந்த ஒரு தலைமை வீரனாகவும், பொருத்திப் பார்க்கிறேன். செம்பனைக் காட்டினை இரண்டாம் உலகப்போர் நிகழ்ந்த போர்ச்சூழலாவும், முனியேறிய பன்றியை ஜெர்மானிய ராணுவம் அல்லது ஜப்பானிய ராணுவம் என்றால். தன்னை சுரண்டும் பேரரசிற்காக, போர்களத்தில் சன்னதம் கொண்டு, முனியேறிய பன்றியை தடுத்து நிறுத்தி போரிட்டு, முலைப்பால் கொடுத்த, பொன்னி உருவில் வந்த பேச்சியை இந்த நிலத்தில் பிறந்த ஒரு சிப்பாயின் போர்க்கள கடுஞ்சினத்தில், மனம் பொங்க காண்கிறேன்.
உங்கள் அடுத்தடுத்த படைப்புகளை வாசிக்க ஆவலுடன் காத்திருக்கும் முதன்மை வாசகர்களுள் ஒருவனாக என் மனம்நிறைந்த வாழ்த்துக்கள்.
என்றும் அன்புடன்,
சிவமணியன்
அன்புள்ள நவீன்
இதுவரை வந்துள்ள இந்த வரிசை கதைகளில் எனக்கு மிகவும் பிடித்த கதை என ‘பேச்சி‘யை சொல்வேன். ‘யாக்கை’ யின் கதை சொல்லல் பாணி இதிலும் தொடர்கிறது. அப்பா கதை சொல்லியாகவும், அப்பா சொல்லி மகன் செல்வம் எழுதிய கதை என இரு சரடாக பிணைந்து செல்கிறது. அப்பா சொன்ன கதையே கூட செல்வம் சொன்னதுதானா என்றொரு மயக்கத்தை கதை அளிக்கிறது. இரண்டு கதைகளில் ஒரு கதை முற்று பெறுகிறது, மற்றொன்று பெறவில்லை என்பதாக கூட தோற்றமயக்கம் உருவாக்கியதில் கதை வெற்றி பெற்றுள்ளது. ‘கிராப்ட்’ ரீதியாக இந்த சோதனை கதை சொல்லல் முறையில் தேர்ந்து விட்டீர்கள் என்றே சொல்ல வேண்டும். எனினும் இதில் ஒரு சிறிய ஆபத்து உள்ளது, இது ஒரு கண்ணாமூச்சி விளையாட்டாக ஆகிவிடக்கூடும். கருப்பு மண்ணுக்கு அடியில் சிவந்த மண் கொம்பனை நினைவுபடுத்தியது போன்ற தகவல் வாசகரை கவனம் சிதற செய்யும் யுத்தியாக ஆகிவிடக்கூடும். தொன்மமும் உறவு சிக்கலும் முயங்கும் கதை. பேச்சி எனும் தொன்மம் வழியாக உறவு சிடுக்கை, பெண் உளத்தை தொட முயல்கிறது.
தந்தை மகள், அன்னை – மகன், கணவன் – மனைவி என இந்த மூன்று உறவுகளை பிணைக்கும் புள்ளியாக பேச்சி இருக்கிறாள். குல தெய்வத்தின் சாபத்தால் பிறந்த குழந்தைகள் இறந்துவிட , நேர்ந்துகொண்டு ஒன்பதாவதாக பிறக்கிறாள் பேச்சி. தாத்தாவிற்கு பேரன் மீது வாஞ்சையும் அன்பும் உண்டு ஆனால் மகளைப் பற்றிய எந்த அடையாளமும் அவரிடம் இல்லை. புகைப்படங்களில் கூட தாத்தாவின் புகைப்படங்களே உள்ளன. பிள்ளையை வயிற்றில் வாங்கி துரோகம் இழைத்துவிட்டாள் எனும் ஆங்காரம் அவருக்கு இருக்கிறது. பிள்ளையை பெற்றவுடன் அவள் மரித்தும் போகிறாள். பின்னர் பேரனுக்கு பொன்னியை திருமணம் செய்த பிறகு அவளுடைய வினோத நடத்தைக்கு காரணம் தாமிழைத்த துரோகம், பேச்சியை மறந்தது தான் காரணம் என புலம்பி மரிக்கிறார் தாத்தா. பேரன் தாத்தா நிறுவிய பேச்சி கோவிலில் காட்டு பன்றியால் தாக்கப்பட்டபோது பேச்சியால் காப்பாற்றப்பட்டதாக சொல்கிறான். அவன் பசி தீர்க்க அன்னையாக முலைபாலை பீச்சி அடிக்கிறாள். பொன்னியிடம் ““ஏற்கனவே பழக்கமா? எல்லாம் தெரியுது” என்று கேட்டவுடன் வீசி எறியப்படுகிறான். தாத்தா அவருடைய மகளை பற்றி சொல்லும்போதெல்லாம் தேவடியா கழுத, எவக்கிட்டயோ பிள்ளைய வாங்கிட்டு வந்ததடா என்றே வசைபாடுகிறார். அவளுடைய கருவை கலைக்க முயன்ற போது அவள் வீசிய உளியின் தழும்பு நெற்றியில் உள்ளது. பேரன் தாத்தாவிடம் பொன்னியைப் பற்றி கூறும்போது அவருடைய அந்த தழும்பு எரிகிறது. இவற்றை இணைத்து பார்க்கும் போது தாத்தா செய்த பாவம் என்ன எனும் கேள்வி கதையின் மையமாகப் படுகிறது. தாத்தா போதை உச்சியில் தனது வீர செயல்களை சொல்கிறார். கோழிகளை புணர்ந்ததை கூட சொல்கிறார். கருப்பு கோழியை தனியே பலியிட தூக்கி செல்கிறார். தோட்டத்திலிருந்து விலகி வரும் முன்பு எல்லா கோழிகளையும் பலியாக்க எடுத்து செல்கிறார். தாத்தா பேச்சியின் மரணத்திற்கு காரணமோ எனும் ஐயம் எழுகிறது.
பேச்சியால் காக்கப்பட்ட பின் செல்வம் எனும் மகனை ஈன்று அவன் பொன்னியுடன் நிறைவாழ்வு வாழ்கிறான் என்பது பிடிபடுகிறது. இவை அனைத்தும் பேச்சியால் பூடகமாக இணைகிறது. ஒருவகையில் இந்திய ஆண் மனதில் பெண் ‘அன்னைக் கடவுளாக’ புனிதமாகிறாள் அல்லது பணிவிடை செய்யும் அடிமையாகிறாள். இந்த இருமை கதையில் நன்றாக சித்தரிக்கப்பட்டுள்ளது. இந்த இருமையை வென்ற பின்னே பொன்னியை நெருங்க முடிந்திருக்கும் என தோன்றியது.
புகைப்படங்களில் நினைவுகளை சேமிக்க முயல்பவன், காட்டுபன்றி வேட்டை, முனி பன்றி என சாகசமும் வாசிப்பு சுவாரசியமும் உள்ள கதை. இப்பகுதிகள் முத்துசாமியின் மண்புழுக்கள் நாவலில் வரும் செம்போத்து தேடுதல் மற்றும் ஜின் பன்றி பற்றிய பகுதிகளை நினைவுபடுத்தியது.
சுனில் கிருஷ்ணன்
பேரன்புக்குரிய நவீன். அசத்தலான கதை ஒன்றை கொடுத்துவிட்டீர்கள். பிசகு இல்லாமல் ஆரம்பித்த இடத்தில் முடித்துள்ளீர்கள். நவீனமும் தொன்மமும் பாம்புகளாகி ஒன்றுடன் ஒன்று ஊர்ந்து (பிணைந்து)உச்சத்தை அடைந்து நல் வாசிப்பனுவத்தை வழங்கியது.
மூன்று தலைமுறை ஆண்கள்.
தாத்தா(வேட்டைக்காரர்) ஆணாகவே இருக்கும் ஆண். ஆணுக்கான பண்பாக புணர்தலை நினைப்பவர். (அது எப்படி/ எதனுடன் இருந்தாலும் ஏற்புதான்) அவருக்கு தெய்வம் என்பது தெய்வம். அன்னை என்பது அன்னை. அதில் அவருக்கு இரண்டாம் கருத்து இல்லை. பெண் தெய்வ வடிவத்தில் இருந்தால் மட்டும் அடிபணிவார். தெய்வம் அன்றி எதற்கும் அடிப்பணியாத ஆண். காட்டுப்பன்றியிடம் கூட முனி என்பதால் (முனியாண்டி?) அடங்கி போகும் ஆண்.
அடுத்து கதைச்சொல்லி ஆண். தாத்தாவைப் போல வீரியம் மிக்கவன். (அவர் பற்றி தெளிவான சித்திரம் இல்லை நவீன்.) அவர் பேயும் தாயும் ஒன்றென அறியும் தலைமுறை. ஒரு மகா ஆணை (முனிப்பன்றி) கொன்ற பேச்சி அவனைக் காக்கும்போது அதுதான் அவர் மனைவியும் என தரிசனம் கண்ட ஆன்மா.
மூன்றாவது கதை எழுதும் ஆண். அவனுக்கு பெண் என்பது தாய்தான்.(தாய்மை மட்டுமே) அதற்குப்பின் அவனுக்கு எந்த புலம்பலும் தேவையில்லை. அவன் விரும்பி முடிக்கும் இடமே அவன் கண்ட தரிசனம்.
இப்படி மூன்று தலைமுறை ஆண்கள் ஒரு பெண்ணில் தாயையும் பேயையும் கண்டு தரிசிக்கும் இடம் அபாரம்/அசத்தல். பெண் தன்னைவிட ஆகிருதியாக இருக்கும்போது அவளுடன் இணையமுடியாத தவிப்பும் அந்தத் தவிப்பால் அவள் மேல் புகுத்தப்படும் சாமி (அல்லது பேய்) கதைகளும் எல்லா ஊர்களுக்கும் பொதுதான் போல.
கதை எழுதும் பேரன் குறித்து ஒழுங்கான சித்தரிப்பு இல்லாதது பெருங்குறை. மற்றபடி செம்பனை தோட்டத்தை ரசித்தேன். வாழ்த்துகள்.
சோமாசுந்தரம்
மகனுக்கு தனது வாழ்க்கை வரலாற்றை விளக்கும் விதமாகவும் அதை தன் மகன் கதையாக தைப் செய்வதுப் போலவும் ஆரம்பிக்கிறது. கை எழுத்தாக இல்லாமல் தைப் செய்வதை பிணத்துக்கு பொட்டு வைப்பது போல என்று கூறுவது தலைமுறை இடைவெளியை காட்டுகிறது.
பேச்சி என்ற தனது தாத்தா கூறிய குல தெய்வம் மையக் கருவாக இருந்தாலும் தனியே இருக்கும் காட்டு பன்றி முனிக்கு சமமாக போற்றப் படுவது அறியாமையின் வெளிப்பாடு தான். இறுதியாக பேச்சி என்ற குல தெய்வம் காட்டில் ஒரு பெண்ணாக தோன்றி முனி என்று போற்றப் படும் பன்றியை தாக்குவது வேடிக்கை தான்.
தாத்தா கதைச்சொல்லியின் தாய்க்கு பேச்சி என பெயர் வைப்பதும் பின்பு அவள் ஒழுக்கம் கெடும் போது தெய்வ குற்றம் என்று அவளை பலி கொடுப்பதும் அபத்தமாக தான் உள்ளது.பெயருக்கும் தெய்வ குற்றத்துக்கும் என்ன சம்பந்தம் என்று தெரியவில்லை.
கதைச்சொல்லி திருமணம் செய்யும் பெண்ணும் ஒரு கட்டத்தில் குல தெய்வத்தோடு சம்பந்தப் படுத்தப் படுகிறாள்.குல தெய்வத்தின் கோபம் தான் பேரணை பழி வாங்குகிறது என்று உறுதியாக நம்புகிறார் அவனின் தாத்தா.தாத்தாவின் முரட்டுத்தனமும் அவரின் முரணான பாலியல் செய்கையும் குல தெய்வத்தின் மீது காட்டும் கண் மூடித்தனமான பக்தியும் முரணாக தான் உள்ளது.
குல தெய்வமும் பாலியலும், ஒழுக்கமும், தெய்வ குற்றமும், வேட்டையாடி தின்னும் ஜந்துவையும் முனி என்பதும் இப்படி பக்தி சிரிப்பாய் சிரிக்கிறது கதையில்.
காட்டில் திடீரென்று தோன்றி தன்னை காப்பாற்றி முலை பாலில் மயக்கம் தெளிய வைத்து தூக்கிக் கொண்டு காட்டில் ஓடும் அந்த பெண் யார்?படுக்கையில் அவன் பாலியல் தேவையை பூர்த்தி செய்யும் அவனது மனைவியா?இல்லை பலி கொடுக்க பட்ட அவனின் தாயா?அவனது தாத்தா தனக்கு கடத்தி விட்ட பாழாய் போன மூட நம்பிக்கை தான் இப்படி விசுவரூபம் எடுத்து அவனுக்கு தரிசனம் தந்தது. மகனுக்கு புரிந்து விட்டது முடிவு.
மகேந்திரன்