மட்டக்களப்பில் வல்லினம் 100

21762838_1480486425321429_4654187497600265211_oசில முறை தமிழகம் சென்று வந்திருந்தாலும் இலங்கை செல்லாதது மனதில் ஒரு குறையாகவே இருந்து வந்தது. சமீபத்தில் வெளியிட்ட ‘வல்லினம் 100’ குறித்து நண்பர்களுடன் பேசிக்கொண்டிருக்கும்போது தமிழர்கள் வாழும் இடங்களில் எல்லாம் இந்நூல் சென்று மலேசிய – சிங்கப்பூர் நவீன இலக்கியத்தை அறிமுகம் செய்ய வேண்டும் என்ற யோசனை வந்தது. அப்போதே அதற்கான திட்டமிடலும் செய்ய ஆரம்பித்தோம். அப்போதுதான் இலங்கைக்கு செல்வதற்கான ஏற்பாடு தொடங்கியது. அதே சமயத்தில்  முகநூல் நண்பர் திலீப்குமாரும் இலங்கைக்கு அழைக்கத் தொடங்கினார்.

இலங்கை செல்வதற்கான இதர ஏற்பாடுகளில் ம.நவீன் வழக்கம் போல பல திட்டமிடல்களுடன் ஈடுபட தொடங்கிவிட்டார். சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்னதாகவே திலீப்பிற்கு வல்லினம் 100 புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. கொழும்பில் திலீப்குமார் சந்திப்புக் கூட்டத்தை ஏற்பாடு செய்வதாக கூறியிருந்தார். அச்சந்திப்பில் இலங்கை எழுத்தாளர்கள் வாசகர்கள் மத்தியில் இருந்து வல்லினம் 100 குறித்த விமர்சனம் இடம்பெற வேண்டும் என்பதே பிரதான நோக்கம்.

இலங்கையில் பல இடங்களில் வல்லினம் 100 குறித்த சந்திப்பை ஏற்பாடு செய்திருந்த ம.நவீன், வல்லினம் நண்பர்களையும் அங்கு பேசுவதற்குத் தயாராக இருக்கச்செய்தார்.

முதல் நாள் இலங்கை பேராதனைப் பல்கலைக்கழகத்தில் நடக்கவேண்டிய நிகழ்ச்சி சில காரணங்களால் இடமாற்றம் செய்யப்பட்டது. மட்டக்களப்பு, பெரியார் வாசகர் வட்டம் ஏற்பாட்டில் மட்டக்களப்பு நூல்நிலையத்தில் நிகழ்ச்சி மாலை நான்கு மணிக்கு தொடங்கியது.

நாங்கள் சற்று தாமதமாகவே அங்கு வந்து சேர்ந்தோம். நூல் நிலையத்தின் இரண்டாவது மாடியில் சந்திப்பிற்கான இடத்தை ஏற்பாடு செய்திருந்தார்கள். இருக்கைகள் நிறைந்தே இருந்தன.

WhatsApp Image 2018-04-01 at 19.36.13ஏற்பாட்டாளரான திலீப்குமார், எச்.ராஜாவின் சமீபத்திய சிறுபான்மையினர் கருத்துகளுக்கும் அவரது இந்துத்துவா நடவடிக்கைகளையும் கண்டித்து, அவரின் புகைப்படத்தை எரித்துவிட்டு தொடக்க உரையாற்றினார். தமிழகத்தில் உடைக்கப்படும் சிலைகளுக்கு இலங்கை மட்டக்களப்பில் பெரியாருக்குச் சிலை வைக்கப்போவதாக உறுதி கூறினார்.

அதன் பின் நிகழ்ச்சி தொடங்கியது. தொடக்கமாக வல்லினம் 100 குறித்து கௌரிபாலன் பேசினார்.

அக்கரைச்சீமை அழகு கெட்டுப்போன கதையைச் சொல்லவுள்ளதாக அவர் தன் பேச்சை தொடங்கினார். வல்லினம் 100 களஞ்சியத்தில் வெளிவந்திருக்கும் நேர்காணல்கள் குறித்து பேசவேண்டியவர், தொடக்கமாக வல்லினம் 100 களஞ்சியம் குறித்து தனது பார்வையை வைப்பதாக கூறி தொடர்ந்தார். வந்திருந்தவர்கள் கவனமாக கேட்கத் தொடங்கினார்கள். தான் திரிகோணமலையில் பிறந்ததாகவும் அதன் ஊடாகத்தான் எல்லாவற்றையும் பார்க்க முடியும் என்றார். 80களில் மலேசியா சிங்கப்பூர் குறித்த அறிமுகம் அவருக்கு சினிமா மூலம் கிடைத்ததைக் குறித்து பேசினார்.

அவர் பேச்சின் வழி, அச்சமயத்தில் அங்குள்ள இளைஞர்களுக்கு மலேசியா சிங்கப்பூர் செல்வதென்பது ஒரு கனவாகவே இருந்திருக்கிறது. அதற்கு சினிமாவும் ஒரு காரணமாக அமைந்திருந்தது தெரிய வந்தது. “எங்களைப்போன்று ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் அங்கில்லாமல் மூவின மக்களும் ரொம்பவும் நல்ல முறையில் வாழ்ந்துக் கொண்டிருப்பதாகவே இங்குள்ளவர்கள் நினைத்தார்கள்,” என்றார்.

முன்பு இலங்கையில் காலணியும் குடையும் கருப்பு நிறத்தில் மட்டுமேindex பயன்படுத்தியிருக்கிறார்கள். வண்ணங்கள் மீதான ஈர்ப்பு அப்போது இருந்திருக்கவில்லை. அப்போது மலேசியா சிங்கப்பூரில் வேலைக்கு சென்று பென்ஷன் வாங்கி வந்தவர்கள் பலரும் பலவற்றை வண்ண பொருட்களை, வண்ண செருப்புகள், குடைகள் என  அறிமுகம் செய்திருக்கிறார்கள். இதை பார்க்கும் போதெல்லாம் சிங்கப்பூரும் மலேசியாவும் வண்ணமயமான நாடுகள் என்றே தங்களுக்குள் கற்பிதம் இருந்ததாக கூறவும் அங்கிருந்த நடுத்தர வயதினர் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக்கொண்டார்கள். இதில் சலூன்களே பிரதானமாக இருந்ததாம். அதில் உள்ளவர்கள் சிங்கப்பூர்க்காரர்களுடன் தொடர்பில் இருந்திருக்கிறார்கள். இங்குள்ள சலூன்களை நடத்துகின்றவர்கள் பெரும்பாலும் சிங்கப்பூர் மலேசியாவில் இருந்து பென்ஷன் வாங்குபவர்களாக இருந்துள்ளார்கள். வெளிநாடு செல்வதற்கான வெள்ளிப்பணத்தை மாற்றுவதற்கு இளைஞர்கள் இந்தச் சலூன்களில் கூடுவது உண்டு என்றார்.

நடிகர்களை தவிர்த்து முதல் முதலாக மாடல்களை சலூன்களில்தான் பார்த்திருக்கிறார்கள். எவ்வாறான ஸ்டைலில் முடி வெட்டலாம் எது எந்த முகவாட்டத்திற்கு அழகாக இருக்கும் என்பது மாதிரியான மாடல்களின் புகைப்படங்கள் சலூன்களில் பிரதானமாக இருந்துள்ளதை அவர் பேச்சில் அறியமுடிந்தது.

இப்படியான வெளிநாடு செல்லும் கனவில் இருந்த பலரும் பிற்காலத்தில் எப்படியோ இயக்கங்களின் ஆயுதங்களாக மாறிப்போனார்கள். தங்களுக்குள் இருந்த மலேசியா சிங்கப்பூர் குறித்த கற்பிதங்களை முதன் முதலில் உடைத்துக்காட்டியது ப.சிங்காரம் எழுதிய புயலிலே ஒரு தோணி மற்றும் கடலுக்கு அப்பால் என்னும் இரண்டு நாவல்கள்தான் என்றார். இரண்டாம் உலகப்போர் குறித்து பேசினாலும் அங்குள்ள விளிம்பு நிலை மக்கள், அவர்களின் நிலை, அந்த மண் போன்றவற்றை தெரிந்துக்கொண்டது இவ்வழியில்தான் என்றார்.

அடுத்ததாக  அ.ரெங்கசாமியின் ‘நினைவுச்சின்னம்’ மற்றும் ‘சயாம் மரண ரயில்’ என்னும் நாவல்கள் மலாயாவின் உண்மை வாழ்வை அறிய உதவின என்றார். பிரிட்டிஷ்காரர்களால் உடல் உழைப்பு தொழிலாளிகளாகக் கொண்டு செல்லப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த மக்களின் வாழ்க்கைப்பாடுகளையும், அதன் பிறகு ஜப்பானியர்களின் வசமாகிவிட்ட பொழுதும், தண்டவாளத்தைப் போடும் கடும் வேலையில் ஏற்பட்ட துயரங்களையும் என இன்னமும் அந்தச் சந்ததியினர் அங்கு வாழ்ந்துக்கொண்டிருப்பதை இந்நாவல்கள் வழி அறிந்ததாக கூறினார்.  இதன் வழிதான் மலேசிய சிங்கப்பூர் குறித்த உண்மை நிலவரம் தங்களுக்கு தெரிந்ததாகக் கூறியவர் போதுமான தரவுகள் கொண்ட புத்தகங்கள் கிடைக்காதது குறித்தும் கூறினார்.  அப்போது தமிழகத்தில் இருந்து ஜனரஞ்சக இதழ்கள்தான் கிடைத்ததாம். இதன் காரணமாக மலேசிய இலக்கியம் குறித்து பரந்த பார்வை கிடைக்கவில்லை என்றார்.

வல்லினம் அச்சு இதழ்களாக வந்திருந்தபோது சில இதழ்களைப் படித்திருப்பதாகக் கூறியவர் வல்லினம் 100 களஞ்சியம் குறித்து பேச ஆரம்பித்தார்.

கே.எஸ்.மணியம் குறித்து விஜயலெட்சுமி எழுதிய கட்டுரையில் இருந்த குறிப்பைக்காட்டி பேசலானார். அக்கட்டுரையில் மலேசியாவில் வாழும் மலாய் சீனர் இந்தியர்களைக் குறித்து வேறு வடிவத்தைக் கொடுத்திருப்பதாகச் சுட்டிக்காட்டினார். இவர்கள் எவ்வாறு வாழ்வில் சிக்கல்களை எதிர்கொள்கிறார்கள் என்பதை கட்டுரையாளர் சொல்லியுள்ளதாக கூறினார்.

முன்னமே கே.எஸ். மணியத்தின் சில படைப்புகளைப் படித்திருந்தாலும் இக்கட்டுரையில் ஆசிரியர் கூறியிருக்கும் பார்வை தனக்கு வேறாக அமைந்திருந்ததாகவும் அதில் ஒன்றுதான் இன்றைய சமகால இளைஞர்கள் எதிர்கொள்கின்ற சவால் என்றவர், அந்த சவால் இலங்கை இளைஞர்களுக்கும் பொருந்தி வருவதாக கூறினார்.

பிரதான சிக்கல், தத்தம் அடையாளங்களைப் பேணுவதா வேண்டாமா? என்பதுதான். மூத்தவர்கள் தங்களின் அடையாளங்களை இளைஞர்களுக்குக் கற்றுக்கொடுப்பதன் சிக்கல் குறித்து கட்டுரையில் கூறப்பட்டுள்ளதாக கூறினார். சர்வதேச தமிழர்கள் எல்லோருக்குமான சிக்கல்தான் இது. சொல்லப்போனால் வெளிநாட்டு தமிழர்களுக்குத் தமிழ்மொழி தெரியாவிட்டாலும் தங்களின் பெயர்களில் தமிழை வைத்திருப்பார்கள். இன அடையாளம் கொண்டிருப்பார்கள். ஏதோ ஒருவகையில் நமது அடையாளங்கள் துறந்து வேறொரு அடையாளத்தை சுமந்துக் கொண்டுதான் நாம் இருக்கிறோம் என்றார். ஒவ்வொரு இனத்திற்கும் உடல் மொழி மாறுபடுகிறதாகவும், எங்கே அது வன்முறையாக மாற்றம் காண்கின்றது என்பதும் இக்கட்டுரையில் கட்டுரையாசிரியர் குறிப்பிட்டுள்ளார். வழக்கமான திறனாய்வு கட்டுரை போல அல்லாமல், கே.எஸ். மணியம் குறித்த கட்டுரையில் நுண்ணரசியலை பேசியிருக்கிறார் என்றார். அங்கு வாழும் மூன்று இனங்களின் கண்ணுக்குத் தெரியாத சிக்கல்கள் மிக கூர்ந்த அவதானிப்பில் இக்கட்டுரையில் வெளிப்படுவதாக கூறினார்.

அடுத்ததாக ஶ்ரீதர் ரங்கராஜன் வல்லினம் 100 எழுதியிருந்த ‘2000-க்கு பின்பான மலேசிய நவீன சிறுகதைகளின் மூன்று முகம்’ என்ற விமர்சனக் கட்டுரையைக் குறித்து பேசலானார்.  கே.பாலமுருகன், சு,யுவராஜன், ம.நவீன் ஆகியோரின் சிறுகதைகள் குறித்து கறார் பார்வையில் விமர்சித்திருப்பதாகக் கூறினார். நவீன் என்பதற்காகவோ நண்பர்கள் என்பதற்காகவோ எந்த ஒரு தயவும் காட்டாமல் விமர்சனத்தை ஶ்ரீதர் முன் வைத்திருப்பதாக கூறினார்.

“மலேசிய இலக்கியத்தின் பொதுவான சிக்கல் என கட்டுரையாளர் சொல்லியிருப்பது எங்களுக்கும் பொருந்தும். அதாவது தனக்கான வெளியை உருவாக்கிக்கொள்ளாமல் தமிழக பாணியை நகலெடுக்க முயல்வதுதான் அது. அதன் அடுத்த சிக்கலான விடயம் அதன் மூதாதையரின் சிந்தனையையே தனக்கான சிந்தனையாக கொண்டிருப்பதை ஶ்ரீதர் கோடிகாட்டியுள்ளார்” என்றார் கௌரிபாலன். நவீன வாழ்க்கை முறை என பார்க்கும் போது தமிழகத்தைக் காட்டிலும் 10 ஆண்டுகள் முன்னே இருக்கின்றோம். ஆனால் மலேசிய படைப்புகளின் சிந்தனை மட்டும் 50 ஆண்டுகள் பின்னோக்கி இருக்கின்றோம் என்கின்ற கருத்தை வெகுவாகப் பாராட்டினார்.

அடுத்ததாக மலேசிய நவீன முன்னோடி பெண் எழுத்தாளர்கள் குறித்த அ.பாண்டியனின் கட்டுரை குறித்து பேசலானார். 1917 முதல் சமகால பெண் ஆளுமைகள் வரை எழுதியிருக்கின்றார் என்றார். தனது நோக்கு நிலையை ஒப்பிட்டாய்வில் அ.பாண்டியன் எழுதியிருக்கின்றார் என்றவர் முக்கியமாக இந்த ஒப்பீட்டை இந்திய எழுத்தாளர்களுடன் ஒப்பிடாமல் மலேசியாவின் மூத்த படைப்பாளிகளுடனேயே ஒப்பிட்டு பலம் பலவீனம் குறித்து பேசியிருப்பதைப் பாராட்டினார்.

அடுத்ததாக ‘இல்லாத விளக்கில் உருவாகும் ஒளி’ என்கின்ற தலைப்பில் சிங்கப்பூர் ஐந்து பெண் படைப்பாளிகள் குறித்த ம.நவீனின் கட்டுரையைப் பேசினார். இதில் அங்குள்ள ஜனரஞ்சக எழுத்தாளர்களைத் தேர்ந்தெடுத்து ஒரு காட்டு காட்டியிருக்கின்றார் என்றார். இக்கட்டுரைக்கு அவர்கள் எப்படி எதிர்வினை ஆற்றினார்கள் என தெரியவில்லை என்றார். இருந்தாலும் அக்கட்டுரையில் ஒவ்வொருவரது நல்ல படைப்பு எதுவென தேர்ந்தெடுந்து சிறந்த முறையில் விமர்சனம் செய்திருப்பத்தையும் சுட்டிக்காட்டினார்.

சீ.முத்துசாமி, அ.ரெங்கசாமி போன்று இலக்கியத்தில் உள்ளவர்கள் பற்றியும் ஜி.வி.காத்தையா என்ற தொழிற்சங்கவாதியும் நா.பாலபாஸ்கரன் மற்றும் அரு.சு.ஜீவானந்தன் போன்ற வானொலிக்கலைஞர்கள் என பல தரப்பினர்களின் பேட்டிகளும் இந்த வல்லினம் 100  களஞ்சியத்தில் குறிப்பிடப்பட வேண்டியதாக அமைந்துள்ளது எனக் கூறியவர் நேர்காணலில் தன்னைக் கவர்ந்த பகுதியாக சினிமா இயக்குனர்களின் நேர்காணல்களைக் குறிப்பிட்டார்.

கௌரிபாலனின் வல்லினம் 100 களஞ்சியம் குறித்த உரைக்கு பிறகு  இதழில் வெளிவந்திருக்கும் சிறுகதைகள் குறித்து எழுத்தாளர் மலர்ச்செல்வன் பேசத் தயாரானார். இவர் மட்டக்களப்பு மாவட்டத்தின் கலாச்சார பணிப்பாளர். பல சவால்களுக்கிடையில் கிழக்கிலிருந்து ‘மறுகா’ என்னும் சஞ்சிகையைத் தனியனாக வெளியிட்டு வருகிறார்.

வல்லினம் 100 களஞ்சியத்தில் வந்திருக்கும் கதைகளைப் படித்து கடந்துவிட முடியவில்லை 08என்றார் மலர்ச்செல்வன். மொழிகள் மாறியுள்ளதைச் சுட்டிக்காட்டினார். களஞ்சியத்தில் இருக்கும் 11 சிறுகதைகளில் தான் வாசித்த சிறுகதைகள் குறித்து மலர்ச்செல்வன் பேசலானார்.  அதில் நான்கு சிறுகதைகள் தன்னை வெகுவாக ஈர்த்துவிட்டதாகக் கூறினார். அக்கதைகள் இத்தொகுப்பிற்குக் காத்திரமான பங்களிப்பைக் கொடுத்திருப்பதாகக் கூறினார்.

ம.நவீன் எழுதிய ‘மசாஜ்’ என்னும் சிறுகதை, மிக முக்கியமான சிறுகதையாக இதில் வந்திருப்பதைச் சுட்டிக்காட்டினார். “வாலிப வட்டத்தில் ஏற்படுகின்ற அந்த கிறுக்குத்தனம், குறுகுறுப்பு அந்தக் கதையை மெல்ல மெல்ல முன்னேற்றிச் செல்கிறது. மசாஜ் செண்டருக்குச் சென்றிருக்காத ஒருவனை நண்பன் அழைத்துச் செல்கிறான். முதலில் விருப்பமில்லாமல் இருந்தவன் பின்பு அங்கு விரும்பி செல்கிறான்.  இக்கதையில் இரண்டு வகையான ஓட்டங்கள் இருக்கிறது. மொழி, மிக லாவகமாக சொல்லி செல்கின்றது. அதற்குள்ளாக தொன்மக்கதையொன்றையும் அக்கதையில் கொண்டு வர முயல்கின்றார். கத்தியின் நுனியில் நடப்பது போலத்தான் சிறுகதையாசிரியர் இச்சிறுகதையில் பயணப்பட்டுள்ளார். இந்த யுக்தி கதையை தோற்றுப்போகாமல் வெற்றியடையச் செய்திருக்கிறது என்று சொல்லலாம்” என்றார்.

தொடர்ந்து, “சிங்கை லதா எழுதியிருக்கும் ‘நிர்வாணம்’ சிறுகதை புற்று நோயால் பாதிக்கப்படும் உறவு பற்றிய கதை. லதா கதையைக் கையாண்ட விதம் படிக்கும் ஆவலைத் தூண்டியது. வழக்கமான கதைகளில் காட்டப்படும் முடிவுகள் போல இல்லாமல் முடிவும் வேறாகத்தான் இருந்தது. எங்கள் குடும்பத்திலும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர் இருந்திருக்கின்றார். இக்கதை எனக்கு அதனை மீண்டும் நினைவுப்படுத்தியது.” என்றவர் ஐஸ்வரியாவின் ‘சண்டை’ என்னும் சிறுகதை குறித்து பேசத் தொடங்கினார்..

“பெண் சுதந்திரம் எந்த நிலையில் இருக்கிறது என சுட்டிக்காட்டும் கதையாக இக்கதை அமைந்திருக்கிறது. ஓவியத்தின் மீது ஈடுபாடு கொண்ட மாணவி தற்காப்பு கலையைக் கற்றுகொள்ளும் படி நிர்பந்திக்கப்படும்போது ஏற்படும் மன உணர்வுகளை இக்கதையில் ஆசிரியர் சொல்லியுள்ளார்.” என்றார். தொடர்ந்து அவர், மதியழகன் முனியாண்டி எழுதிய ‘குளத்தின் முதலைகள்’ சிறுகதைக்குச் சென்றார். சட்டவிரோத கடனால் பாதிக்கப்பட்ட குடும்பத்தின் கதைபோல இலங்கையிலும் இவ்வாறு வட்டிகளால் பாதிக்கப்பட்டவர்கள் நிறையவே இருக்கிறார்கள் என்றார். இன்னும் சொல்லப்போனால், சிறுகதை போல அல்லாமல் சினிமாவைப்போல இக்கதை அமைந்திருப்பதாக கூறினார். ஏதும் இயக்குனர்களிடம் இக்கதையை கொடுத்து சினிமாவாக  சீரியலாகவோ கூட இக்கதை எடுக்கச் சொல்லலாம் என்றார். இவ்வாறு பேசி முடித்த மலர்ச்செல்வன் இன்னமும் எஞ்சியிருக்கும் அனைத்து சிறுகதைகள் குறித்தும் பேசியிருக்கலாம் என தோன்றியது.

தொடர்ந்து நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்த திலிப்குமார் கட்டுரைகள் பத்திகள் குறித்து பேசலானார்.

v‘தமிழ் தேசியம் தேவையா?’ என்கிற கட்டுரை, தற்போதைய சூழலுக்கு ஏற்புடையதாக இருப்பதாகக் கூறியவர் இக்கட்டுரையின் வழி, பெரியார், மலேசியச் சூழல், தமிழர்களின் நிலைபாடு, தமிழ்ப்பள்ளிகள் போன்றவற்றின் தகவல்களை பெற முடிந்ததாக சொன்னார். ம.நவீன் எழுதிய ‘கச்சடா பேச்சு’ ரசித்துப்படிக்கும்படி வந்திருப்பதாக கூறினார். ‘சூட் தெ கிளி’ என்ற சொற்றொடர் போல ‘சூட் தெ cow’ என இலங்கையில் தாங்கள் கூறிக்கொண்ட அனுபவத்தை சிரிப்பிற்கிடையே பகிர்ந்தார் .

தமிழ் சமூகத்தில் ‘காதலி’ என சொல்வது கூட கெட்ட வார்த்தையாக இருந்த கதையைப் பகிர்ந்தார். பத்தியில் அது சொல்லப்பட்டிருக்கும் விதத்தைச் சிலாகித்தார். அதோடு நகைச்சுவைக்காகப் பயன்படுத்தப்படும் நாதாரி, சண்டாளி போன்ற பெயர்கள் விளிம்பு நிலை மனிதர்களைக் குறிக்கும் வசைச்சொல் என்பதை இக்கட்டுரையின் வழி அறிந்துக்கொண்டதாகச் சொன்னார்.

மேலும் திலீப்குமார் பேசுகையில், தயாஜி மற்றும் அ,பாண்டியன் எழுதிய ‘சமூக மௌனம்’ எனும் கட்டுரை மிகுந்த கவனத்தை ஈர்த்ததாகக் கூறினார். மலேசியா போன்ற வளர்ச்சியை நோக்கி சென்றுக்கொண்டிருக்கும் நாடுகளில் இன்னமும் குண்டர் கும்பலில் ஈடுபடும் தமிழர்களில் நிலை குறித்து இக்கட்டுரை பேசியிருப்பதைச் சுட்டிக்காட்டினார். குண்டர் கும்பல் கலாச்சாரம் எவ்வாறு மலேசிய இந்திய சமூகத்தில் நுழைந்தது என்றும் அதன் அடுத்தடுத்த கட்டங்கள் எவ்வாறு மோசமானது என்றும் கட்டுரையில் விளக்கப்பட்டிருப்பதைச் சொன்னார். தற்போது இந்த மாதிரி தலைப்பையொட்டிய ஆய்வில் அவர் இருப்பதால் இக்கட்டுரை மிகுந்த பயனாகவும் பல தரவுகளைம் கொடுப்பதாகவும் கூறியவர் ரஜினிகாந்த நடித்த ‘கபாலி’ திரைப்படம் காட்டியுள்ள மலேசிய என்பது போலியானது எனவும் இதன்வழி  தெளிவாவதாக சொன்னார்.

திலிப்குமார் பேசி முடித்த பிறகு கலந்துரையாடல் தொடங்கியது. வல்லினம் 100 களஞ்சியத்தில் மலேசியாவில் இருக்கக்கூடிய ஓவியர்கள் குறித்தும் அவர்களின் ஓவியங்கள் குறித்தும் எந்த தகவலும் இல்லாதை முதல் கேள்வியாக வைத்தார்கள். எட்டு ஆண்டுகளுக்கு முன்பு வல்லினம் வெளியிட்ட மலேசியா-சிங்கப்பூர் 2010 என்ற தொகுப்பு புத்தகத்தில் மலேசியாவில் இருக்கும் ஓவியர்களையும் அவர்களின் ஓவியங்களையும் அறிமுகம் செய்திருப்பதைச்  சுட்டிக்காட்டினார் ம.நவீன். அதன் பிறகு புதிய ஓவியர்களின் வருகை பெரிய அளவில் நிகழ்ந்திருக்கவில்லை என்றார்.

அடுத்து வந்திருந்த கேள்வி எல்லோரையும் படபடப்பாக்கியது. வல்லினம் குழு ஏன் எழுத்தாளர் ஜெயமோகனுக்கு மிக நெருக்கமாக இருக்கிறது என்பதுதான் கேள்வி. வல்லினம் ஆலோசகர் ம.நவீன் நிதானமாக எழுந்தார். மிகவும் குறுகியப் பார்வை கொண்ட கேள்வியாக இக்கேள்வியை ம.நவீன் வர்ணித்தார். “கடந்த பத்து ஆண்டுகளில் ஆதவன் தீட்சண்யா, ஷோபா சக்தி, பேராசிரியர் நுஃமான், பேராசிரியர் அ.மார்க்ஸ், தமிழவன் , லீனா மணிமேகலை, வ.கீதா, இமையம் போன்றவர்கள் வல்லினம் மூலம் மலேசியாவிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். இவர்களை வைத்து பட்டறைகள் நடத்தியுள்ளோம், வகுப்புகள் நடத்தியுள்ளோம். மலேசிய படைப்பாளிக்கு விஷ்ணுபுரம் விருது கிடைத்ததையொட்டி அங்கு சென்று வந்தததாலும் இரண்டு முறை மட்டும் நாங்கள் அழைத்து வந்திருந்த ஜெயமோகன் குறித்து கேள்வி எழுப்பினால் குறுகிய பார்வையாகத்தான் இதனைச் சொல்லவேண்டியுள்ளது.” என்றார்.

navin 01குறிப்பிட்ட ஒரு படைப்பாளியைப் பின்தொடர்ந்து செல்கிறோம் என்பது எங்கள் செயல்பாடுகளை அவமானப்படுத்துவதாகப் பார்க்கிறோம் எனக்கூறிய நவீன் விரிவாக வல்லினம் செயல்பாடுகளை விளக்கினார். “வல்லினத்திற்கு முன்பு இருந்த மலேசியப்படையாளிகளில் பலர், தமிழகத்து வேர் பற்றி பயணிக்கும் ஒரு படைப்பாளியாகத்தான் இருந்தார்கள். தமிழக படைப்பாளிகளின் தொடர்ச்சியாக மலேசியாவில் தங்களைக் காட்டிக்கொள்ள நினைத்தார்கள். சுருங்கச் சொல்வதென்றால் மு.வாவின் படைப்புகள் போல சில படைப்புகள் இருக்கும். நா.பார்த்தசாரதி படைப்புகள் போல சில படைப்புகள் இருக்கும். மலேசியத் தமிழர்கள் என்பவர்கள் நாட்டின் சிறும்பான்மை இனத்தவர்கள். அதனை கருத்தில் கொண்டு செயல்படுவதுதான் வல்லினம் குழு. அதற்கான பொறுப்புணர்ச்சி எங்களிடம் இருக்கிறது. இந்தச் சமூகத்தை எப்படி பார்க்கவேண்டும் என்கிற  அரசியல் விழிப்புணர்வு எங்களிடம் இருக்கின்றது. அவ்வாறான விழிப்புணர்வை எழுத்தாளர்கள் கொண்டிருந்தாலும் அவர்களின் படைப்புகள் கலை குறைப்பாடாக வந்திருக்கிறது என்பதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்த குறைபாட்டைக் களைவதற்கான முயற்சியில்தான் தீவிரமாக செயல்படக்கூடிய படைப்பாளிகளுடனான  உரையாடலை அவசியமாக்குகின்றோம். அதற்காக நாங்கள் யாருடனும் தொடர்ந்து செயல்பட தயாராக உள்ளோம்”  எனக்கூறி மேற்கொண்டு கேள்விகளை ம.நவீன் வராமல் தடுத்துவிட்டார்.

வல்லினம் ஏன் விருதுகளை, பவுன் பரிசு திட்டங்களை விமர்சனம் செய்கிறது என்ற கேள்விக்கு அ.பாண்டியன் பதில் கொடுக்க தயாரானார். வல்லினம் கூட ‘வல்லினம் விருது’ என அ.ரங்கசாமிக்கு விருது கொடுத்திருப்பதை அ.பாண்டியன் அங்கு நினைவுப்படுத்தி பேச ஆரம்பித்தார்.

விருதுகளை யார் கொடுக்கிறார்கள்? யார் பெறுகிறார்கள்? அதன் பின்னனி என்ன? என்பது ஆராயப்படவேண்டிய ஒன்று என்றார். பவுன் பரிசு கொடுத்தார்கள்; அது எழுத்தாளர்களை ஊக்கப்படுத்துவதாகவும் அவர்களின் வளர்ச்சியாகவும் அமைந்திருந்தது. அதில் எந்த அரசியல் பின்புலமும் இல்லை என்பதில் மாற்று கருத்து இல்லை. ஆனால் எழுத்தாளர் சங்கம் மற்றும் இதர அமைப்புகள் கொடுக்கும் விருதுகளின் பின்னணியில் அரசியல் இருக்கிறது. இது கவனிக்கத்தக்கது. தங்களை முன்னிறுத்தி பொத்தாம் பொதுவாக இலக்கிய விருது என கொடுப்பது விமர்சிக்க வேண்டியதுதான். பொதுவாக எல்லா விருதுகளையும் நாம் மறுக்கவோ விமர்சிக்கவோ இல்லை என்று  அ.பாண்டியன் விளக்கம் கொடுத்தார்.

நிகழ்ச்சிக்கு பேராசிரியர் மௌனகுரு வந்திருந்தார். அடுத்து அவர் தம் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். எத்தனை தொலைவில் படைப்பாளிகள் இருந்தாலும் அவர்கள் ஊற்று தமிழ்நாடு என்பதை மறக்கக் கூடாது என்றார். தங்களைப்போன்ற மூத்த படைப்பாளிகள் இளம் படைப்பாளிகளைத் தத்தம் தோளில் தூக்கி வைத்திருப்பதாகவும் அவர்களால்தான் இளம் படைப்பாளிகளின் பார்வை அகன்றிருக்கிறது என்றும் கூறினார்.

அடுத்ததாக வல்லினம் குழுவில் இருந்து கங்காதுரை மலேசிய சீன இலக்கியம் குறித்துgangga பேசலானார். மலாய்க்காரர்களின் கைகளில் அதிகாரமும் சீன சமூகத்திடம் பொருளாதாரமும் இரண்டுக்கும் இடையில் இந்தியர்கள் இருப்பதை சுட்டிக்காட்டி தனது பேச்சை ஆரம்பித்தார். வெளியில் இருந்து பார்க்கையில் மூவினங்களும் ஒன்றாக வாழ்வதாக தெரிந்தாலும் உண்மையில் ஒருவருக்கு ஒருவர் பெரும்பாலும் பரிட்சயம் இல்லாதவர்களாகவே வாழ்கிறார்கள் என்றார். மலாய் இலக்கியத்தில் நடப்பதை ஓரளவு மலேசிய சூழலில் நம்மால் அறிய முடிந்தாலும் சீன சமூகம் குறித்து எதுவுமே தெரிந்து கொள்ளாமல்தான் நாங்கள் இருக்கின்றோம் என்றவர் அதே போன்று தமிழ்ச்சூழலில் நடக்கும் எந்த இலக்கிய முயற்சிகளும் முன்னெடுப்புகளும் சீன சமூகத்தினரால் கண்டுகொள்ளப்படுவதில்லை என்றார். மாற்றாக ஆங்கிலத்தில் எழுதப்படும் சில இலக்கியங்கள்தான் பரவலாக இதர மொழியினருக்கு தெரிகிறதே அன்றி மற்ற படைப்புகள் குறித்து மொழிப்பெயர்த்தால் அன்றி தெரிவதில்லை என விளக்கம் கொடுத்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “1960-70 ஆண்டுகளில் ரொமேன்டிக் அடிப்படையில்தான் சீன இலக்கியம் மலேசியாவில் எழுதப்பட்டது. அந்தக் கதைகளில் தங்களின் பூர்வீகத்தைப் புகுத்தியிருந்தார்களே தவிர மலேசிய வாழ்வியல் சூழல் சிக்கலை எழுதவில்லை . இரண்டு வகையாக சீன இலக்கியத்தைப் பார்க்கிறார்கள். ஒன்று மலேசிய சீன இலக்கியம். இன்னொன்று சீனர் மலேசிய இலக்கியம். மலேசியாவிற்கு குடியேறியவர்கள் சீனர் மலேசிய இலக்கியத்தை எழுதுவதாக கூறிகொண்டு  சீனாவின் பூர்வீக கதைகளை எழுதலானார்கள். மலேசியாவில் பிறந்தவர்கள் சீனர் மலேசிய இலக்கியம் என்று தங்களின் மலேசிய  வாழ்க்கைச் சூழலை ஆங்கிலத்தில் எழுதி பரவலாக்குகின்றார்கள்” என்று முடித்தார் கங்காதுரை.

31வல்லினம் 100 களஞ்சியத்தில் மலேசியப் பத்திரிகைகள் குறித்து விரிந்த கட்டுரை எழுதியிருந்த பத்திரிகையாளர் இரா.சரவண தீர்த்தா பத்திரிகைகளில் இருக்கும் ஜாதியத்தைக் குறித்து பேசினார். ஆதி.குமணன் அவர்கள் இருந்த காலக்கட்டத்திலும் அவரின் மறைவுக்கு பின்னரும் பத்திரிகைக்குள் மெல்ல நுழைந்த அல்லது நுழைத்த ஜாதியத்தைப் பற்றி மேலும் விரிவாக தனது கட்டுரையில் இருப்பதை சுட்டிக்காட்டினார்.

இவ்வாறு இலங்கை மட்டக்களப்பில் வல்லினம் குழுவினரின் முதல் நிகழ்ச்சி நடந்தேறியது. சந்திப்பு முடிந்தப் பின்னரும் ஆங்காங்கு பேச்சுகள் தொடர்ந்த வண்ணம் இருந்தன. இச்சந்திப்பு மலேசியாவிற்கும் இலங்கைக்கும் நல்லதொரு உறவுப்பாலத்தை ஏற்படுத்தும் என்பதில் நம்பிக்கைக் கொண்டு எல்லோரும் அங்கிருந்து விடைபெற்றோம்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...