மாயமான் – கே.எஸ்.மணியம்

ks maniamசில வருடங்களுக்கு முன்,  பாசீர் பஞ்சாங்கின் புறநகர்ப்பகுதியில், தாமான் பஹாகியா புதிய வீடமைப்பு திட்டம் உருவானபின் அதுவரையிலும் அப்பகுதியில் வாழ்ந்த மக்கள் தங்கள் வாழிடங்களைப் பெயர்த்தெடுக்க வேண்டியதாகியது. அத்திட்டத்தில் உருவான நவீன, தனித்த, ஆடம்பர இரட்டைமாடி வீட்டு வரிசைகளின் குடியிருப்பைக் கடந்து, காடும் அதை ஒட்டிய மலை முகடுகளுக்கும் நெருக்கமான, ஓர் ஒதுக்குப்புறமான இடத்திற்கு அவர்கள் தள்ளப்பட்டனர். அங்கு தங்கள் வீடுகளை, உண்மையாக சொன்னால், சிறு கொட்டில்களை மீண்டும் கட்டியெழுப்பிக் கொண்டனர். இத்தற்காலிக இடைஞ்சல்களுக்குப் பின் மீண்டும் தங்களுடைய வழக்கமான வாழ்க்கைக்குள் திரும்பியும் விட்டனர். அவர்களது தகரக் கூரைகளும், உயிர்காப்பு படகுகளைப் போலாகிவிட்ட பலகை வீடுகளும் சாலையின் ஓர விளிம்புகளில் சரளைக்கற்களுக்கு மத்தியில் மட்டுமே தெரியக் கூடியதாய் இருந்தன. தாமான் பஹாகியா வாசிகள் தங்களுக்குள்ளேயே பணம் திரட்டி தடுப்பு மதில் சுவர் எழுப்பி, அரண்களை உருவாக்கி அந்நியர் நடமாட்டங்களை விலக்கி வைத்தனர்.

மறைமுகமாய் கட்டவிழ்க்கப்பட்ட தங்களுக்கு எதிரான அச்செய்கையை எதிர்த்து இவர்கள் துளியும் வஞ்சம் வைத்துக்கொள்ள வில்லை. பதிலாக, பல ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கி புழக்கத்தில் வைத்திருக்கும் புகலிட புனிதச் சடங்குகளை ஒருங்கிணைப்பதில் மும்முறம் காட்டத் தொடங்கியிருந்தனர். அச்சமூகத்தை வழிநடத்திக் கொண்டிருக்கும் சக்தியாகவும் பண்டிதராகவும் இருக்கும் கோவிந்தசாமி, குறிசொல்லும் தன் தீர்க்க தரிசன சக்தியின் மூலமாக இப்பிரபஞ்சம் அதன் அழிவு கட்டத்துக்குள் நுழைந்து கொண்டிருப்பதாகக் கணித்துக் கூறினான். அவன் சகல தெய்வீகமும் பொருந்திய இந்து தத்துவவாதியாக பாவிக்கப்பட்டான். சொந்த மண் என்கிற மாதிரியான நடைமுறை நம்பிக்கைகளை முழுமுற்றாய் மறுதளித்தான், விசித்திரமான தொன்மங்களைக் கொண்டு தன் இருப்பைக் கட்டமைத்து வைத்திருந்தான். இந்தியாவுடனான தொடர்புகள் அற்றுபோய் ஒரு தலைமுறைக்கும் மேலாகிவிட்ட அந்த குடியிருப்புவாசி தமிழர்கள், தங்களின் ஞாபகத்தில் திட்டுத் திட்டாய் வந்துபோகும் இப்பிரபஞ்ச உருவாக்கத்தின் உட்பொருளைத் தங்களைவிட மேலான ஞானம் கொண்டிருந்தவனின் வழியாகவே விளங்கிக் கொள்ள வேண்டியிருந்தது.

கோவிந்தசாமி ஒருபோதும் தனக்குத் தெரிந்ததைச் சுருக்கமாக சொல்லி, அதை மக்களின் மனதின் உடனுக்குடன் பதிய வைப்பதில் திருப்தி கொண்டிருக்கவில்லை. நாடோடியாய் ஆங்காங்கு கோயில்களைக் கட்டி கைத்தேர்ந்தவனாய், பிரதான சாலைக்கு மிக நெருக்கத்தில் இருந்தபோதுகூட, கோவிந்தசாமி முந்தைய அக்குடியிருப்பில் நான்கு சிலைகளை செய்து வைத்திருந்தான். இப்போது, குடியிருப்பு மாறிவந்துவிட்ட பிறகும், அதே பெண்தெய்வ சிலைகளுக்குப் பொருத்தமான தளத்தை குடியிருப்பின் நுழைவாயிலில் நிறுவி வீடுகளுக்கு நேரெதிர் இருக்கும்படி கட்டி வைத்தான். அடிக்கடி விரதமிருந்தான். பொழுது சாய்ந்த நேரங்களிலெல்லாம் சரஸ்வதி, லெட்சுமி, பார்வதி, காளியம்மா என பெண் தெய்வங்களின் மாய சக்திகளையும் பேராற்றலையும் குடியிருப்புவாசிகளிடம் ஓதிக்கொண்டே இருந்தான். ஓதுவதற்கான சாத்திய சந்தர்ப்பங்களும் அடிக்கடி வாய்த்த வண்ணமிருந்தது; குடியிருப்பின் நண்டு சிண்டுகளுக்கு கதைகளின் எந்த எந்த இடைவெளியிலெல்லாம் எதிரொளி கொடுக்க வேண்டும் என்றும் தெரிந்திருந்தது.

“நாமெல்லாம் கனவு காலத்திலிருந்து வந்திருக்கோம்,” கோவிந்தசாமியின் சொற்கள் ஒருவித வழுவான தாளகதியில் வந்து விழுந்தது. “தம்பிகளின் வாய்ச்சண்டையால் தூக்கத்திலிருந்து விழித்துக்கொண்ட பிரம்மா, தம்பிங்க ரெண்டுபேரும் முரட்டுத்தனமாய் விளையாடிக்க இந்தப் பிரபஞ்சத்தை உருவாக்கி கொடுத்துட்டான். ஒன்னுமில்லாத அந்த வெத்து நிலத்துல அலஞ்சி திரிஞ்சி சளிச்சுபோன தம்பிங்க மீண்டும் பிரம்மாவிடம் போய் நிற்க, உலகத்த உருவாக்கி பலவிதமா மனிதர்களை ரொப்பி கொடுத்திருக்கான். ஆனா, அவன் படைத்த இதெல்லாத்துக்கும் ஒரேயொரு கனவோட ஆயுள் காலம் மட்டும்தான் கொடுக்கப்பட்டிருக்கு. அதுல அடையாளம், அங்கீகாரம், துயரம், அழிவுகள்னு இருக்கு. ஒவ்வொன்னும் தனித்தனி காலப்பகுதிகளாக வேற வேற பெண் தெய்வங்களுடைய பெயரால் அழைக்கப்படுது.”

“சரஸ்வதி, லெட்சுமி, பார்வதி, காளியம்மா,” குழந்தைகள் குரல் கொடுத்தனர்.

“முதல் காலகட்டம்,” கோவிந்தசாமி முழங்கினான். “மனுசன் பூமிக்குள்ள இருக்கும் சாமான்கள அடையாளம் கண்டு கொண்டான்: கற்கள், தாவரங்கள், மிருகங்கள், மலைகள், ஆறுகள்… கடல்கள். அவன சுத்தியிருக்கும் சுற்றுசூழலைப் பற்றி தெரிந்து கொண்டான். நெலத்தையும், தண்ணீரையும், காற்றையும் தனக்கு வசதியா வளைத்து பிடித்துக் கொண்டான்.”

“சரஸ்வதி காலம்,” குழந்தைகள் குரல் கொடுத்தனர்.

“மனுசன் தனக்குள்ள இருக்கும் சக்திய கண்டுபிடிக்க பழகினதும், சாமியெல்லாம் கேளிப் பொருளாகிடுச்சி. நிலம், நீர், காற்றுனு கூடவே சக மனுசனையும் சேர்த்து சுரண்ட ஆரம்பித்தான். அத பயன்படுத்தி தன்னை சுயமா பணக்காரனாகவும் அதிகாரம் செய்கிறவனாகவும் ஆக்கிக் கொண்டான்.”

“லெட்சுமியின் காலம்,” குழந்தைகள் குரல் கொடுத்தனர்.

“மூனாவதில், மனுசன் தன்னோட அடையாளம் அழிஞ்சி போனதை உணர ஆரம்பிச்சான். வாழ்க்கைக்கு வழிகாட்டியா இருந்தத தொலைத்துட்டு பார்வதியைப் போல சிவனை இழந்து, அவன் வருகைக்காக காத்திருக்கத் தொடங்கினான். இதுதான் ஏக்கம் தோய்ந்துபோன துயரமான காலகட்டம்.”

“பார்வதி காலம்!”

“நாலாவது, ஆகக் கடைசியான இந்தக் காலத்துக்குள்ளதான் இப்ப நாமெல்லாம் நுழைஞ்சிருக்கோம். இது அழிவுக்கான காலம். மனுசன் தான் யாருனு தன்னோட இருப்பு என்ன என்ற புதிருக்கு விடை தேட வேண்டிய காலம்.  நாம வெறும் கனவு மட்டும்தானா இல்லை நிஜமா? அடுத்த எல்லைக்கு போய்சேர, மனுசன் முதல்ல தனக்குத் தெரிந்த எல்லாத்தையும் அழிக்கனும். தன்னையே முதல்ல பழி தீர்த்துக்கணும்.”

“காளியம்மா காலம்!”

கோவிந்தசாமி சிலைகளின்மீது மல்லிகை பூக்களை தாராளமாய் வீசி இறைத்தான்.

அடிப்பாகத்தில் தனியாக ஓரு பீடம் அமைத்து காளியம்மாவை மட்டும் மற்ற பெண் தெய்வங்களைவிட உயரமாக காட்டினான். வந்திருந்தவர்கள் அந்த நான்கு நாமங்களையும் பாடினார்கள். மீண்டும் ஒருமுறை அந்த நான்கு காலங்களையும் அதன் தன்மைகளையும் தங்களுக்குள்ளாகவே காட்சி பிம்பங்களாய் ஓட்டிப் பார்த்தபடி. மர்மத்துக்குள் வசியப்பட்டு அதை நம்பிக்கையோடு உள்வாங்கி, பின் அடர்த்தியற்ற வீடுகளுக்குள் கூடடைந்து உறங்கப் போனார்கள், காத்திருந்தார்கள்.

“இந்த பிரபஞ்சத்தோட சங்கடங்களைப் பற்றி இன்னொரு நாள் சொல்கிறேன்,” எண்ணிக்கைக்குள் அடங்காத உண்ணாவிரத பிரார்த்தனைகளினூடே கோவிந்தசாமி மறவாமல் இதை உபதேசித்தான்.

“இன்னைக்கு நாம் வெளியே போகும் பாதையைப் பற்றி தெரிஞ்சிக்கலாம். முன்னொரு காலத்துல, உலகம் கடவுள்களோட தோள்மேலதான் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தது. இப்போது உலகத்துடைய பாரத்தைச் சுமக்க வேண்டியது மனிதனுடைய கடமையாக்கப்பட்டிருக்கு. தூங்கிக் கொண்டிருக்கறவங்க எல்லாரையும் இந்தக் கனவுதான் எழுப்பணும். நம்ம அம்மா, காளியம்மா வந்துதான் நமக்கெல்லாம் சகாயஞ்செய்வா.”

“நம்ம அம்மா, காளியம்மா,” குழந்தைகள் கோஷமிட்டார்கள்.

“பிரம்மா ஒரு கனவிலிருந்துதான் இந்த பிரபஞ்சத்தைப் படைச்சான்”, என்றான். “இனி மனுசன்தான் அவனவனுக்கு வேண்டிய சத்தியை சுயமாக உருவாக்கிக்கணும். இந்த கனவு காலத்திலிருந்து வெளியேறும் மந்திரத்தை அவனேதான் கண்டுபிடிக்கணும். இதுவரைக்கும் மனுசன் செயலற்று கிடந்தான்; தனக்கு ஏதோ புரியுதுங்கிறதுக்கான அறிகுறிய மட்டும் காட்டினான். அதனாலதான் ஒவ்வொரு காலக்கெடுவும் பெண் தெய்வங்களின் பெயரில் இருக்கு. அளவுக்கு மீறி இப்படி வெறுமனே கெடந்தா முரட்டுத்தனம்தான் வரும். அதனாலதான் உக்கிரத்தை வெளிபடுக்கும் காளியம்மா இப்போது இந்த உலகத்தை ஆள ஆரம்பித்துட்டா.”

“காளியம்மா, காளியம்மா, காளியம்மா, காளியம்மா,” குழந்தைகள் பாடினார்கள். உள்ளீர்க்கப்பட்டார்கள்.

“காளியம்மாவுக்கு சேவை செய்ய நம்மிலிருந்து ஒருவர் வரணும்,” கோவிந்தசாமி கூறினான்.

“இனிவரப்போகும் நாள்களிலாவது யோசித்து பாருங்க. உங்களில் யார்னு.”

காளியம்மா நமத்தைப் பாடவும் மண்டியிட்டு கும்பிடவும் வழிகாட்டினான். ஊதக்காற்றும் இருளில் அவள் பெயரையே எதிரொலித்தது; தாமதமாகத் தூங்கும் சில தாமான் பாஹாகியாக்காரர்கள் மட்டும் ஜன்னல்கள் வழியே எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். பெருத்த உருவமாய் செழிப்பற்றிருந்த நோஞ்சான் சிலைகளைச் சுற்றி கருத்த பெருந்திரள் கூடி நிற்பதை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

அந்த குடியிருப்புவாசிகள் ஒருவரை ஒருவர் நோட்டமிடத் தொடங்கினார்கள். சரக்கு வண்டி ஓட்டும் குமரன், ஒரு மிடரு சம்சுவை உள்ளிறக்கியவனாய் போதுமான அளவுக்கு முறுக்கேறி இருந்தான். முனியாண்டி, உலை நிறுவனம் ஒன்றில் சிற்றூழியன், ஒரு காலத்தில் ஆஜானபாகு தோற்றம் கொண்டவன், இப்போது வயது மூப்பால் கூடு சுருங்கி கிடந்தான். சமயங்களில் அவன் எண்ணங்கள் கட்டுக்கடங்காமல் பிசிறு தட்டின, வாழ்வின் முடிவுக்கு காத்திருப்பதுபோல் கிடந்தான். அவனது வயதை ஒத்த சில சகாக்கள் மட்டும் பவ்யமாய் அவன் வால் பிடித்துக் கொண்டிருந்தனர். அதுகூட இம்மொத்த காட்சிக்குள்ளும் கோவிந்தசாமி வருவதற்கு முன்பு. இளவட்டங்கள், சொற்ப சம்பளம் வேண்டி சோர்வுடன் மல்லுக்கட்டி, குடும்பத்தைக் கரைசேர்க்கத் தொடர்ந்து உழைக்க வேண்டியிருந்தது. வெளியே, அசுர வேகத்தில் வளர்ந்து கொண்டிருந்த பாசீர் பஞ்சாங்கில் பகுதிநேர வேலைகளைத் தேட தெம்பின்றி சோர்வுக்குள் மூழ்கி முடங்கியிருந்தார்கள்.

எஞ்சி இருந்தவன் ஆரோக்கியன் மட்டும், குழந்தை இல்லாத காளியின் கணவன் (இவள் காளியம்மா சாமி இல்லை), உள்ளிருந்து ஏதோவொன்று, உந்தித்தள்ள வேட்டைக்கு முன்வந்தான். பத்து வருடமும் தரிசாகிப்போன திருமண வாழ்க்கையை தெம்மேவென ஓட்டிவிட்ட பின்புதான் அவனுக்கு இதில் இப்போது நாட்டம் வந்திருந்தது. மென்மையானவன், சாந்தமானவன் என்று நம்பியிருந்த ஒட்டுமொத்த குடியிருப்பும் அவனது முடிவை வியப்பு மேலிட பார்த்தது. தன்னைச்சுற்றி, அக்குடியிருப்பில் நடப்பதை அன்றாடம் பார்த்து பார்த்து அவன் இப்படியாக உருமாறியிருந்தான்; தொடர்ந்து துளைத்துருக்கும் நிர்பந்தத்தில் மட்டும் சில நேரம் பதில் பேசினான். பாசீர் பஞ்சாங்கை சுற்றியிருந்த மற்ற கோயில்களில் தெய்வ ஊடகர்களிடம் ஆலோசனை கேட்டபடியே இருந்தாள் காளி; மறுபக்கம் இருவரில் அவனுக்குத்தான் மலட்டுத்தன்மை இருப்பதாக அரசல் புரசல் குரல்கள் கிளம்பிக்கொண்டிருந்தன. குடியிருப்புவாசிகள் அவனை மிச்சமில்லாமல் அலட்சியம் செய்து வைத்தனர். காளியம்மா பூஜையில் ஆரோக்கியன் வந்து நின்ற சமயத்தில், காளியம்மாவின் கழுத்து மாலை சரிந்து விழ கோவிந்தசாமி ஆரோக்கியனை விஷேசமாய்ப் பார்த்தான்.

ஒவ்வொரு மாலையும் குடியிருப்புவாசிகள் காளியம்மா கோவிலில் திரண்டு கொண்டிருந்தார்கள். கோவிந்தசாமிக்கு வேலை முடிந்து வந்த அடுத்த கணம் வெள்ளை வேட்டி தரித்துக் கொள்வதுதான் அனைத்திலும் அதிமுக்கியமாய் இருந்தது. விரல்களை நெருக்கி நரம்பு புடைக்க மடக்குவதும் பின் மெலிந்து நீண்டிருந்த மூக்கை தேய்த்தபடி ஆழ்ந்த சிந்தனைக்குள் மூழ்கியதுமாக குடியிருப்பைச் சுற்றி வலம்வந்தான். அதன்பிறகு குடியிருப்புவாசிகள் கூடுதல் அக்கறையெடுத்து தங்களைத் தூய்மைபடுத்திக் கொண்டு வழக்கத்துக்கு முன்னதாகவே கோயிலில் கூட ஆரம்பித்தார்கள். கோவிந்தாமி, தன் மனைவியுடன்கூட அவ்வளவு பேசியிருக்க மாட்டான், கடவுளின்முன் தன்னை குறுக்கிக் கொண்டு, நீண்டு முழங்கி ஜபித்தான். குடியிருப்பு முழுக்கவே அவன் பின்னால் நின்றது, சலனம் துறந்து, மெளனித்து அல்லது உக்கிர தேவியின் முன் பயபக்தியுடன் மண்டியிட்டு வணங்கியது.

காளியம்மாவின் துதிகளை ஜபிப்பதில் அவன் ஆழமாக நுழைந்ததும், அவன் பின்னால் அதுவரை மண்டியிட்டு இறைஞ்சிக் கொண்டிருந்தவர்கள், காளியம்மாவின் அரிவாள் மீது தங்கள் கண்களைப் பதித்துக் கொண்டார்கள். அரையிருளில் விநோத ஒளிகொண்டு அது மின்னியது. ஆவிகள் உலாவும் பொழுதுபட்ட நேரங்களில் மனிதனின் நனவுக்குள் அவற்றால் ஊடுருவ முடியும் என்பதை, குடியிருப்புவாசிகள் துளி சந்தேகமில்லாமல் நம்பினார்கள். திடீரென கோவிந்தசாமி ஜபிப்பதை நிறுத்தினான். அவனது உடல் ஆவேசமாய் கிளர்ந்தது, கரகரப்பான குரலொன்று வெளிபட முயற்சித்தது. குற்றத்தை ஒப்புக்கொள்கிற கயவனின் தோரணையில், முகத்தை நனைத்திருந்த வியர்வையை விருட்டென தொட்டு துடைத்துக் கொண்டான்.

“நம்ப அம்மா, காளியம்மா, இன்னைக்கு என்கிட்ட வந்தா. உங்க எல்லாரிடமும் ஒரு கதை சொல்ல சொன்னா. அவளோட சொற்களுக்குப் பின்னால நாம செய்ய வேண்டிய அடுத்தக் கட்ட வேலையின் சுருள் முடிந்துகிடக்குது. அதனால கவனமா கேளுங்க.”

பெரிய பிள்ளைகள் கூட்டிப்பெறுக்கி மென்மை சேர்த்து வைந்திருந்த தரையில் பெண்களும் சிறுவர்களும் உட்கார்ந்து கொண்டார்கள். அவர்களுடன் சேர்ந்து சில ஆண்களும் உட்கார, குமரனுடன் மேலும் சிலர் மட்டும் நிற்பதைத் தொடர்ந்தார்கள்.

“நாம தயாராக இருக்கிறோமா?” கோவிந்தசாமி கேட்டான். “ஏற்கனவே இருந்த இடத்துல, முன்னமே உங்களுக்கு நான் ஒரு கதை சொல்லியிருக்கிறேன். அதை ஞாபகப்படுத்திப் பாருங்க. சீதையைக் கவர்ந்து கொண்டு போவதற்காக ராவணன் ராமனைத் ஏமாற்றி அவன் கவனத்தைத் திசைத்திருப்பிய கதை. தனக்கு ஆலோசகரா இருந்த மாரீசனை மானாக மாறும்படி தூண்டிவிட்டு சீதைய அதன் அழகுல மயக்கச் செஞ்சான். மாரீசனும் அப்படியே செய்தான். நிறத்த பலவிதமாய் மாற்றி காட்டிக்கொண்டிக்க, மானுடைய அழகுல ஈர்க்கப்பட்ட சீதை கணவன் ராமனைக் கூப்பிட்டா. மானைப் பார்த்த ராமனுங்கூட அதோட தோற்றத்தையும் வசீகரத்தையும் கண்டு சொக்கிட்டான்.

அதுவரை தங்க மானாக ஜொலித்த அது, ராமன், சீதை, லட்சுமணன் (ராமனின் தம்பி) கவனிக்க ஆரம்பிச்சதும் துள்ளி குதித்து பலமாதிரி சாயல் காட்டிச்சி. தன்னோட பச்சை புல்வெளி தேகத்தின்மீது சிற்றலைய உருவாக்கியது, அப்பறம் உயர்ந்த வானம், இப்போது நீலக் கல்லோட ஒளித்தெறிப்பு, வைரம் அப்பறம் முத்து. “எனக்கு அதை பிடித்துக் கொடுங்க,” சீதை கேட்டாள். “இதில் ஏதோ சரியில்ல, குழப்பமா இருக்கு,” என்று லட்சுமணன் கூற, “நீங்க அதை உயிரோடு பிடித்து வராவிட்டாலும் பரவாயில்ல, அதன்மீது அம்பு தொடுங்க. அதன் தோல்கூட பொக்கிஷம்தான்!” சீதை விடாபிடியாய் இருந்தா.

லட்சுமணம் சீதைய பார்த்துக்கொண்டிரும்போதே ராமன் மானை தேடி ஓடினான். தங்க மானாகவே மாறியிருந்த மாரீசன் ராமனோட வேகத்தைக் காட்டிலும் துரிதாமாய் ஓடியது; ஆனா… ராமனின் அம்புகளவிட வேகமா ஓட முடியல. துளையிட்ட அம்பு மாரீசன அசல் உருவத்துக்கு கொண்டு வந்து போட்டுச்சி. ராமன் ஏமாந்து போனான். பிறகு ஆசிரமத்துக்குத் திரும்பியபோது என்ன நடந்ததுனு உங்களுக்குத் தெரியும். அந்த மான் மந்திர சக்தி கொண்டது,” கோவிந்தசாமி கூறி நிதானித்தான். இடைநிறுத்தி மீண்டும் முகத்தைத் துடைத்துக் கொண்டான்.

அந்த இரவில் புழுக்கம் அடர்ந்தது. குடியிருப்புவாசிகளும் சிலைகளாகி அசையாமல், குறுக்குவெட்டாய் தரையில் தாறுமாறாய் இறைந்து கிடந்தார்கள்.

“அதே மான்தான் நம்முடைய முப்பாட்டன் வாழ்க்கையிலும் அடிக்கடி தோன்றிக் கொண்டே இருந்துச்சி. மிக சமீபமா நம்மோட அப்பா தலைமுறையில. சில காலங்களுக்கு முன்னால்கூட யாரோ ஒருவன் பிடிபடாமல் நழுவக்கூடிய அந்த மானைத் தேடி போனதாக தகவல் வந்துச்சி. மாதங்கள் கடந்து வெறுங்கையோடுதான் திரும்ப வந்திருக்கான். ஒருநாள் அவன் குட்டியுடன் இருந்த ஒரு தாய் மானை பார்தானாம்.

இரண்டையும் ஒருசேர பிடிக்க ஆசைப்பட்டு ரொம்ப எச்சரிக்கையா அதுகளின் பக்கத்தில் போயிருக்கான். நெருங்கிப் போன மறுகணம் குட்டி மான் மாயமாய் மறைந்தத பார்த்திருக்கான். ஒருவழியாக தாய் மானை வலைத்து சரித்துவிட்டானாம். ஆனால் செத்ததும் அந்த மான் பிணமாக பலமடங்கு கணக்க ஆரம்பித்திருக்கு. வேறு வழியில்லாமல வெட்டி, சுத்தப்படுத்தி, கொன்ற இடத்துலயே இருந்த பெரிய இலையில் சுருட்டி, மூடி, மூட்டை கட்டியிருக்கான். திரும்பி வந்தவன் மூட்டையில் என்ன கொண்டு வந்திருக்கிறான் என பார்க்கும் ஆவலோடு அக்கம் பக்கத்து ஆட்களெல்லாம் அவன் வீட்டில் குவிந்தாங்கலாம். மூட்டையை அவிழ்த்துவிட்டபோது, துண்டு துண்டாய் இருந்த சதையெல்லாம் இணைந்து முழு மானாகவே மாறியதாம்!

அந்த இலையோட சக்தியை தெரிந்துகொண்டவன்போல அவன் திரும்பவும் காட்டுக்குள்ள போயிருக்கான். மானை கொன்ற இடத்துக்கு வந்ததும், தன்னோட சுண்டு விரலை அதன் முதல் மூட்டு வரைக்கும் வெட்டி, அந்த இலையைப் போலவே இருந்த ஒரு இலைய கிழிச்சு துண்டித்துவிட்ட விரலை மூட்டுடன் இணைத்துக் கட்டிப் பார்த்திருக்கிறான். ஆனால் விரல் ஒட்டல. தவறான இலையப் பறித்துவிட்டதை உணர்ந்தவன் திரும்ப அந்தச் செடிகளுக்கு மத்தியில் போய்த் தேடிப் பார்த்திருக்கிறான். ஆனால், தூய மணம் வீசிய அந்த கருகலான இலைய அவனால எங்குமே கண்டுபிடிக்க முடியல. இன்னைக்கு வரைக்கும் அவன் துண்டித்துபோன சுண்டு விரலின் நினைவாகவே காடு முழுக்க அலைந்து திரிந்து அந்த இலையத் தேடிக்கிட்டிருக்கான்.”

முகத்தை மீண்டும் வழித்து துடைத்தபடி கோவிந்தசாமி தன்னையே பார்த்துக் கொண்டிருப்பவர்களை துருவி ஆராய்ந்தான். அந்தக் கட்டுக்கதையில் மூழ்கி குழம்பி தடுமாறியவர்களாய் அவர்கள் மேலும் கதைகேட்க காத்திருப்பது தெரிந்தது.

“அதே மான்தான் மனுசன மயங்கச்செய்யும் வாழ்க்கைங்கிற மாயாஜாலத்துக்குள்ள இழுத்து போவத உங்களால பார்க்க முடியுதா?” பொறுமையிழந்தவனாய் கோவிந்தசாமி பேசினான்.

“நாம அந்த மானை தேடி கண்டு பிடிக்கனும். இந்த நாட்டுல அதோட பேரு பெலாண்டுக். யாராவது ஒருத்தர் அந்த பெலாண்டுக்க வேட்டையாடி கொல்லனும்.”

“ஆனா இந்த அரசாங்கம் உன்னை பிடிச்சி ஜெயிலில் போட்டுடுமே,” இப்போது குமரன் பேசினான்.

“தடைசெஞ்ச பிறகும் மீறிப்போய் திங்கறதுதானே பழத்தோட ருசியைக் கூட்டுது. அதுமாதிரிதான். இங்க பெலாண்டுக் பாதுகாக்கப்படுது. அதுக்கு விசித்திரமான சக்தி இருக்கு.”

“அதை யார் கொல்றது?” முனியாண்டி கேட்டான்.

“ஆரோக்கியன்.”

முதன் முறையாக அந்த இரவில் எல்லாருமே சிரித்தார்கள்.

“குரங்குடைய வாலுக்கும் விரலுக்குமே அவனுக்கு வித்தியாசம் தெரியாதே!” குமரன் கூறினான்.

“ஆனா அவன்தான் அத செய்ய தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கான். காளியம்மாதான் அவனை மலடனாக ஆக்கியிருக்கா. அன்னைக்கு அவள் கழுத்திலிருந்து சரிந்து விழுந்த மாலைய மறந்துட்டயா? இதுதான் இந்த சமூகத்துக்கு அவனால கிடைக்கக்கூடிய பலன்.”

இந்தக் காலக்கட்டத்தில்தான் பாண்டியன், இருபது வயதில் இருந்த ஒரு இளைஞன், தனது தோள்பட்டை மீது ஒரு சுருக்குப் பையை சுமந்தபடி, ஒரு மதிய வேலையில் அங்கு வந்தான். கலவரமும் முன்னெச்சரிக்கை மனோபாவமும் தோய முழுபிரக்ஞையையும் தன்மீது செலுத்தியிருந்தான். கைகள் இரு பக்கங்களிலும் தளர்ந்து ஆடிக் கொண்டிருந்தன, நடை மொத்த உடலையும் குலுக்கிக் கொண்டிருந்தது, உதடுகள் மட்டும் தொடர்ந்து புன்னகைத்தபடி இருந்தன. அவன் பாசீர் பஞ்சாங்கிற்கு வெளியே, ஒரு தோட்டத்திலிருந்து வந்தவன். அந்த குடியேற்றத்தில் அறிமுகமாகத் தொடங்கிய முதல் சில வாரங்களுக்கு முன்புதான் அம்மாவை அடக்கம் செய்திருந்தான். சுயமாய் ஒரு குவளை காப்பிகூட கலந்து குடிக்கத் தோதுபடாத அவனுக்கு அங்கிருந்த எல்லா குடும்பங்களும் மனமுவந்து விருந்தோம்பலை நடத்தின.

குடியிருப்புவாசிகளின் கவனம் ஆரோக்கியன், பாண்டியன் என இருவர்மீதும் சரிசமமாய் பிரிந்து விழுந்தது. இன்னொருவர் கைப்பிடித்து கூட்டிச்செல்லும் அளவுக்கு பாண்டியனின் நடையில் தல்லாட்டம் இருந்தது. குடும்பங்கள் ஒன்றுமாறி ஒன்றாக அவனுக்கு காலையும் இரவும் உணவு கொடுத்துக் கொண்டே இருந்தது. மதிய உணவை டவுனில் முடித்து கொண்டான். ஆரோக்கியனுக்கு நம்பிக்கையும் சேர்த்து உணவாக ஊட்டப்பட வேண்டியிருந்தது. தலைகீழாக நடந்துகொண்டிருந்த இந்த உபச்சாரங்கள் தொடக்கத்திலிருந்தே ஆரோக்கியனுக்குப் பெருத்த அவநம்பிக்கையைத் தந்தன. முற்றிலும் தன்னை உள்ளிழுத்துக் கொண்டான். பல மணிநேரம் ப்ராஞ்சாவில் அமர்ந்தபடி வேட்டை ஆயுதங்களைப் பழுதுபார்த்துக் கொண்டும் சுனை ஏற்றிக்கொண்டும் இருந்தான். ஆனால் எங்கும் போய்விடவில்லை.

வேலையிடத்தில், நகராண்மை கழகத்தில், குப்பை சேகரிக்கும் இருவரும் தோல் உரசிக்கொள்ளும் இடைவெளியிதான் அன்றாடம் புழங்கிக் கொண்டிருந்தார்கள். கட்டுக்கடங்கா வலிமையுடன் தன் கைகளை வனாந்திர வேட்கையுடன் சுழற்றி வண்டியிலிருந்து காலைவேலை குப்பைகளை மண்வெட்டியால் பாண்டியன் வாரி இறைக்க, ஆரோக்கியன் அதை மெர்போக் ஆற்றின் கரையோரத்தில் கொட்டி, நிரப்பி மண்ணோடு சமன் செய்தான், நகர மறுசீரமைப்புத் திட்டமாக.

“நீ ஏன் இவ்வளவு வேகமாக வேலை செய்யற?” ஆரோக்கியன் கேட்டான்.

“நான் சீக்கிரமாக பணம் சேர்க்க வேண்டியிருக்கு. ‘உனக்கு கல்லறை கட்டுவேன்னு’ அம்மாவுக்கு வாக்கு கொடுத்திருக்கேன்.”

“உனக்கு அதே சம்பளம்தான கிடைக்கப்போகுது.”

அந்த வார்த்தைகளாலெல்லாம் பாண்டியனின் ஊக்கம் மட்டுபடுவதாயில்லை. வேலைக்குச் சேர்ந்த சில வாரங்களிலேயே சோர்வுக்கு இதமளிக்கும் ராகங்களை உருவாக்கிக் கொண்டான். பாசீர் பஞ்சாங்கின் தெருக்களில் போய்க்கொண்டிருக்கும் லாரிக்குப் பின்னால் அவன்தான் வேலை செய்து கொண்டிருக்கிறான் என்பதை அவன் எழுப்பும் ராக சுரங்கள் தெளிவுபடுத்திக் கொண்டிருந்தன. மிக நேர்த்தியாக தொகுக்கப்பட்ட அசைவுகளாய் குப்பைத் தொட்டியை தூக்குவது, பின் அதை கவிழ்த்து குப்பைகளை அகற்றுவது, மீண்டும் பழைய இடத்தில் குப்பைத் தொட்டியை வைப்பது, பின் அடுத்த குப்பைத் தொட்டியை நோக்கி நகர்வது என பாண்டியனின் வேலைகள் ஒன்றுபோல் நேர்த்தியாய் சுழன்று கொண்டிருந்தன. இப்படியாக தனக்குள் ஒரு ஒழுங்கைக் கொண்டுவர கற்றுக் கொண்டிருந்தான். ஆனால் குடியிருப்பில் மட்டும் அவனது நகர்ச்சிகள் ஒழுங்கற்றிருந்தன. ஆட்கள்மேல் மோதிவிடுவது, கைவாளி கவிழ்ந்துபோவது, சோற்றுப் பருக்கைகள் தரையில் சிந்துவது, பேசும்போது நாக்கு குழருவது, திக்குவது வாடிக்கையாகி விட்டிருந்தது. காளி கோவிலில் எல்லாரும் கூடும்போது, ஏதாவதொரு முனையில் நின்றபடி ஆர்வத்துடன் நடப்பதைப் பார்த்துக் கொண்டிருப்பான். கோவிந்தசாமி திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருந்த தீர்க்கதரிசன தத்துவங்கள் வெகு சீக்கிரத்திலேயே அவனை சோர்வாக்கின. அதன்பிறகு அவன் கோயிலுக்குப் போவதில்லை. வீட்டில் இருந்தபடி கூட்டம் களையும்வரை காத்திருந்தான், குழந்தைகள் அவனை வந்து சூழ்ந்து கொள்வதற்காக. தன்னைச் சுற்றி குழந்தைகள் இருப்பதை விரும்பினான். தோட்டத்தில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களைக் குழந்தைகள் சூழ்ந்துகொண்டு கேட்பது அவனக்கு இனிப்பூட்டியது.

இருளும் அவநம்பிக்கையும் அக்குடியிருப்பின் எல்லா இடமும் கெளவிக் கிடப்பதைக் காண முடிந்தது. அரைகுறையாகக் கட்டப்பட்ட கொட்டிலின் பலகை சுவர்கள் வெள்ளையடிக்கப்படாமல் இருந்தன. அந்த அவலட்சன வீடுகள் கட்டப்பட்டபோது பரவி விழுந்த மரத்தூள்கள் சூழலை இருண்மையாக்கி மக்கிய வாடையெழுப்பிவிட்டிருந்தன. சில சன்னல்கள் அசைக்க முடியாதபடி பிடிமானமற்று கிடந்தன; மேலும் சில பழுதுபார்க்கப்படாமலிருந்தன. இரவு நேரங்களில் இழுத்து அடைக்கும்போது அச்சத்தினால் உண்டாகும் ஆழ்ந்த முனகல்போல் ஒலியெழுப்பின. தடுப்புச் சுவர்களைச் சுற்றி, அண்டை குடியிருப்பைக் கடந்து போக நேரும்போது இக்குடியிருப்புவாசிகள் ஊக்கமிழந்து, சலிப்புடன் உலாவினார்கள். பெண்கள் வாசலில் நின்று இருளில் எதையோ வெரித்து பார்த்தபடி கொசுக்கள் உப்பிப்பெருக்க தங்கள் உடம்பை ஈகை செய்து கொண்டிருந்தனர்.

சாத்தியப்பட்ட அரைவயிற்று பருக்கை மட்டும் தின்று வயிறு முன் துறுத்திக்கொண்டு வாத்துபோல அசைந்து வந்த குழந்தைகளைப் பார்க்கும்போது பாண்டியனின் விரக்தி எல்லைமீறிக் கொண்டிருந்தது. அம்மாக்கள் நியமித்துவிட்டிருந்த வேலைகளைச் செய்துகொண்டு பெண் பிள்ளைகள் கம்பிகள்போல் மெலிந்தும் களைத்தும் இருந்தனர். பாசீர் பஞ்சாங்கிற்கு போய் படித்துவிட்டு திரும்பும் ஆண், பெண் பிள்ளைகள் அதற்கடுத்து எக்காரணத்துக்காகவும் காளியம்மாவின் எல்லைக் காவலை கடந்து வெளிசெல்ல தடைவிதிக்கப்பட்டிருந்தது.

“ஸ்கூலுக்கு போறதுக்கு முன்னால நெற்றியில கொஞ்சம் துன்னூரு வைத்துட்டு போ. டவுனில் கெட்ட சக்திகளிடமிருந்து அதுதான் உன்னை காப்பாத்தும்!” அம்மா ஒருத்தி கடிந்து கூச்சலிட்டாள்.

சிறுவன் கள்ளியம்மாவின் கால்மாட்டில் வைக்கப்பட்டிருந்த தட்டில் குவிந்துகிடந்த திருநீற்றை விரல்குவித்து ஒரு சிட்டிகை அள்ளிக் கொண்டான்.  தட்டிலிருந்த அந்த சாம்பல் குவியல் ஒருபோதும் குறைந்ததில்லை.

“காலை கழுவு,” அதே அம்மாதான் பள்ளிக்கு போய்விட்டு திரும்பிய பையனிடம் கூறினாள். உன்கூட எதுவெல்லாம் தொத்திக்கொண்டு வந்து வீட்டுக்குள்ள நிழையுமுன்னு தெரியாது.”

“டவுனில் நம்ம கண்ணுக்குத் தெரியாத பெரிய பூதம் இருக்கு,” அவள் பையனிடம் கூறிக்கொண்டிருந்ததைப் பாண்டியன் கேட்டுக்கொண்டிருந்தான். இள ரத்தம், உறுதியா உடம்பு உள்ள சின்ன பையனுங்களுக்காக அது காத்துக்கிடக்கும்.  பிள்ளைகள மயக்க  அழகழகான பொம்மைகள், புதுசுபுதுசா சட்டைகள், இனிப்பு மிட்டாய்கள் எல்லாத்தையும் காட்டும்.

டவுனில் தனியாக அலையறவங்க காணாம  போயிடுவாங்க. அவங்கள பூதம் தூரத்துல ஒரு குகைக்குள்ள மறைத்து வச்சிடும். கொஞ்ச நாளுல அவங்க வீங்கி பெருத்ததும், துண்டு துண்டாய் வெட்டி தின்னுடும்.”

சிறுவன் அம்மாவின் பக்கத்தில் நின்று கொண்டான். அடுத்தமுறை காளி கோயிலுக்குப் போனதும் முழங்கால் மண்டியிட்டு உட்கார்ந்து திருநீற்றை அள்ளி நெற்றியில் விரிந்த கோடிட்டுக் கொண்டான். சிறுவனை உற்றுப் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பாண்டியன் இளவட்டங்களிடம் இந்தத் திடீர் மாற்றங்களை எதிர்பாராதவனாய் நகைப்புக்குள்ளானான். மாலை வேளையில் பாண்டியன் பாசீர் பஞ்சாங்கிற்குப் போகத் தொடங்கினான், குடியேற்றத்தில் அழுத்திக் கொண்டிருக்கும் காற்று வெளியிலிருந்து ஒருசில மணிநேரமேனும் விடுபட தோன்றியது. திரும்பி வரும்போது மொத்த குடியிருப்பும் கோயிலுக்குள் சங்கமித்துக் கொண்டிருக்கும்.

ஆரோக்கியன் மீண்டும் ஒருதரம் மந்தகாசனாய் மாறியிருந்தான்; கோவிந்தசாமி பலிபீடத்தில் பூஜைகள் செய்துகொண்டிருக்கும்போது விகாரமாய் நின்று கொண்டிருந்தான். மனைவி காளியிடமிருந்து திருநீரு வாங்கிக்கொண்டாள். அவளும் தன் பங்குக்குக் கொழுத்த கன்னத்தில் புன்னகையைக் காட்டிக் கொண்டிருந்தாள், அதில் எதிர்பார்ப்பொன்று ரகசியமாய் சிமிட்டிக் கொண்டிருந்தது. கோவிந்தசாமி பொன்னிற மாயமானைப் பற்றி ஒன்றுக்கு நூறுமுறை விவரித்துக் கொண்டே இருந்தான். அதன் விசித்தர தோற்றம் ஆரோக்கியனின் மனதின் ஆழத்தில் சென்று பதியும்வரை.

ஆரோக்கியனின் மாற்றத்தைப் பாண்டியன் வெகு சீக்கிரமே அடையாளம் கண்டிருந்தான். the-deer 2 குப்பை குவியலில் வேலை செய்யும்பொழுது அவனிடம் சற்றே மேலதிகமான துள்ளல் இருந்தது. அவன் வாழ்வை வித்தியாசமாக பார்க்கத் தொடங்கிவிட்டதைப் பாண்டியனும் தனக்குள் உத்தேசமாய் புரிந்து கொண்டான். அம்மாவுக்குக் கொடுத்திருந்த வாக்குறுதி இப்போது சுமையாக மாறி பாண்டியனுக்கு எரிச்சலூட்டிக் கொண்டிருந்தது. கடந்த காலங்களில் அவன் கொஞ்சம் அவசரக்குடுக்கையாக இருந்திருக்கிறான். தன் அம்மாவின் கவனிப்பில் வாழ்ந்த வாழ்வின் இருப்பு பல குருட்டுத்தனமான உந்துதல்களைத் தந்தது இப்போது அவமானத்துக்குறியதாகப் பட்டது. அதிக செலவில்லாத சாதாரண பளிங்கு கல்லைக் கல்லறையிலூன்றி தனது கடனை முடித்துக் கொள்ள முடிவு செய்தான்.

அம்மாவின் கல்லறைக்குக் குறுகியகால விஜயத்தை முடித்துக் கொண்டு திரும்பியபோது, குடியிருப்பு மெல்லிய உற்சாகத்துக்குத் தூண்டப்பட்டிருப்பதைக் கவனித்தான்.

குழந்தைகளுடன் பெரியவர்களும் அரோக்கியனின் வேட்டை பயணங்கள்மீது கவனம் குவிந்திருந்தனர். இது ஒன்றும் மிகையான காட்சி இல்லைதான். ஆனால் குடியிருப்புக்கு வெளியிலிருந்து அடக்கிக்கொள்ளும் சிரிப்புகளையும், அடிக்கடி விரைந்த நோட்டத்தையும் ஆரோக்கியனின் செயல்கள் ஏற்படுத்திக் கொண்டிருந்தன.

ஆரோக்கியன், இந்த நேரத்தில், வேட்டைக்குத் தேவையான அனைத்து உபகரணங்களையும் சேகரித்துத் தொகுத்துக் கொண்டிருந்தான். சிறிய ஈயக் குண்டு கொண்ட சிறு தூண்டில் –பொடுசுகளால்கூட எளிதாக கையாளக்கூடியது; நீரோட்டத்திற்கு எதிராக எம்பி தூர எறியும்படியான பெரிய வலை; பழந்தின்னி வெளவால்களைப் பிடிக்க முனைகளில் நைலான் கவண் கட்டி ஒரு ஜோடி மூங்கில் கழி; காட்டுப் பன்றிகளின் இதயத்தை துளைத்துக் கொண்டு போகும் பல ரக தடிமன்களில் மர ஈட்டிகள்,  உடும்பு அலுங்குகளின் குரல்வளையை நெறிக்க உறுதியான நைலான் சுருக்குக் கயிறு, அம்பறாத்தூணியில் கூர்முனைகளுடன் சிறுசிறு மூங்கில் சுழிகள், முனைகளில் பிசின் பூசப்பட்டு புடைத்திருந்தன- அரிதான பறவைகளின் பறப்பதற்குதவும் இறகுகளைச் செயலிழக்க அவன் அதைப் பயன்படுத்தக்கூடும்- இப்படியானவை அவற்றுள் அடங்கும்.

அன்று அவன் தூண்டிலுடன் குடியிருப்புக்குப் பின்னாலிருந்த காட்டில் ஆழமில்லா ஓடை பக்கம் போயிருந்தான். குடியிருப்புவாசிகள் கோயிலில் ஒன்றென திரண்டு பின் சிதறினார்கள். ஆண்கள் கூடி, பாசீர் பஞ்சாங் பற்றியும் அதனுள் அவர்கள் கண்ட பயங்கரங்கள் பற்றியும் பேசிக் கொண்டார்கள்.

“என் வாழ்நாள்ல இப்படியொரு இழிவ நான் பார்த்த்தேயில்ல!” கோவிந்தசாமி பொங்கினான்.

“குப்பைத்தொட்டி நெறஞ்சி வழியிது. ஈ நம்ம முகத்துலயே குடித்தனம் கெடக்குது.”

“சாப்பாடு கடைங்க இன்னும் மோசம். சாப்பிடப் போறவங்க மேசைய சுத்தி பலிகடா போல உட்கார்ந்திருக்காங்க. சாப்பாட்டுக்கு ஆர்டர் எடுக்க வர்றவனுங்க ஏதோ பிரசாதம் போடும் பூசாரிங்க போல வறானுங்க. நண்டு, ஊடான், சீப்பூட் ஓடு மேசைமேல அப்படியே இறைந்து கெடக்கும். நூறு வருசமா பட்டினி கிடந்தவனுங்களாட்டம் எல்லாத்தையும் அப்படியே முழுசா வாய்க்குள்ள தள்ளிடறானுங்க!” இப்போது குமரன் பேசினான்.

“அவனுங்க புதுசுபுதுசா ஏதோ சாப்பிடறானுங்க. என் காலத்தில கோழி, ஆட்டுக்கறி, பன்றி இறைச்சினு சத்தான சாப்பாடு கிடைக்கும். இப்போ பாரு, நோஞ்சான் மாதிரி வழவழனு வெள்ளை கால், அதுவும் தவளை கால். சினைப்பன்னிய பொளந்து கருவை எடுத்து சூப் வைத்திடுறானுங்க. அதையெல்லாம் எப்படித்தான் சாப்பிடுறாங்களோ   தெரியல!”

நினைக்கும்போதே முனியாண்டிக்கு அரற்றியது. குமரன் உறுமினான்.

“இது காளியம்மாவோட யுகம். மறந்துடாதிங்க,” கோவிந்தசாமி கூறினான்.

“அவங்க அனுமானுடைய சதையைக்கூட பீய்த்து தின்பாங்க. ஆனுமானோட தம்பி.. குரங்கைத்தான் சொல்றேன்.”

இவர்கள் பேசுவதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த பாண்டியன், வீட்டுக்குள் நுழைந்தவனாய் கதவையும் சன்னல்களையும் சந்தடி சத்தமில்லாமல் சாத்தினான்.

ஏறக்குறைய ஒரு மணி நேரம் கழித்து, குடியிருப்பில் புதிதாய் ஏதோ சத்தம் கேட்க விழித்தான். நுண்மையான வாடையுடன் குளிர் காற்று சமன்குழையாமல் உட்புகுந்தது. ஆண்களும் பெண்களும் ஆரோக்கியனை வளைத்து வட்டமிட்டு சூழ்ந்துகொண்டதை அவனால் கேட்க முடிந்தது. அவனை நெருங்கி விடாமல் லாவகமான எல்லைக்குள் நின்று கொண்டார்கள்.

“எல்லாருமே பார்க்கத்தான் போறிங்க. முதலில் சாமான்கள கீழே இறக்கிடுறேன்.”

இலைகளில் சுற்றப்பட்ட மீனின் பச்சை வாடையுடன் சேர்ந்து இலைகளில் சாறும் களிமண் வாசமும் தொற்றிக்கொண்டு அன்றைய இரவை நிரம்பியிருந்தது. மறுநாள் காலை, பெண்கள் மீன் கறி சமைத்து முதல்நாள் இரவு மிஞ்சி சில்லிட்ட சோற்றுடன் வைத்து காலைச் சாப்பாட்டுக்கு வழிசெய்தனர். தட்டு நிரம்ப கிடைத்த மீன்கறி சோற்றை மறுத்த பாண்டியன் அதனுடன் இணை சேர்க்கையாய் வந்த காப்பியை மட்டும் ஏற்றுக் கொண்டான்.

குடியிருப்புவாசிகளின் சிந்தனைப் போக்கிலிருந்து விலகிச் செல்ல ஆரம்பித்தான். அடிக்கடி டவுனுக்குப் போய் வந்தான். ஆனால், அவனது ஊதியம் டவுனின் தங்குவதற்கான இடங்களைக் கண்டுபிடித்துவிட ஒருபோதும் அனுமதிக்காது என்பதை உணர்ந்தான். இந்தக் குடியிருப்பில் எளிய மனிதர்களின் கவனிப்பு, உபசரணை, பெயரளவில் கட்டிக்கொண்டிருக்கும் வாடகை என சில அனுகூலங்கள் அவனுக்கு இப்போதும் இதமளித்துக் கொண்டிருந்தது. தான் அவர்களுக்குக் கடன் பட்டிருப்பதாகவும் உணர்ந்தான். அந்த குடியிருப்புவாசி பெண்கள் தங்களுக்கே உரிய கரிசனத்துடன் இருந்தனர். விழாகாலங்களில் விசேசமாய் எது சமைத்தாலும் அவனுக்கு கொடுத்தனர்; அவனுடைய துணிமணிகளைத் துவைத்துப் போட்டனர். இவையெல்லாம் அம்மாவின் அக்கறையை அவனுக்கு நினைவூட்டின. இருப்பினும் அந்த மாதிரியான அக்கறைதான் முன்பு அவனை தவறான வழிகளுக்கு இட்டுச் சென்றிருந்தது.

சில நாட்கள் பூட்டப்பட்ட வீட்டுக்குள் ஒடுங்கிக் கொண்டான். தன் இருப்பின் தனிமையையும் தன்னை வியாபித்திருக்கும் அறிவீனத்தையும் உடலிலிருந்தும் மனதிலிருந்தும் வெளியேற அனுமதித்தான். டவுன், அதன் விலைமதிப்பற்றத் தன்மையை உணர்ந்தவர்களின் கைக்குப் போய்விட்டது, ஆனால் அது அவர்களால் கொண்டாடப்படவில்லை. ட்ரக்கு வண்டியில் குப்பை இழுவையில் நின்றுக்கொண்டு நகரம் முழுக்க செல்லும்போது தெருவீதிகள், கடைகள், சினிமா, மதுபான விடுதிகள், சாப்பாட்டுக் கடைகள், மினி சூப்பர்மார்க்கெட்கள் அவன் முன் தோன்றி அங்கிருந்தபடியே அவனை மயக்கிக் கொண்டிருந்தன. ஆழ்ந்த அதிருப்தியுடன் கவனித்தான். சிறுகடைகள் தரைமட்டமாக்கப்பட்டன, சிறு வியாபாரிகள் இடம்பெயர்க்கப்பட்டிருந்தனர். அவர்களில் சிலர் துணிமணி வியாபாரிகள், தென் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்து பத்திரிக்கை, இதழ்கள் விற்றவர்கள், வெள்ளி சாமான்கள் விற்றவர்கள், வழிபாட்டு வீட்டு பொருள்கள் விற்றவர்கள் என வாழ்ந்த இடமது. தங்களுக்கு இழைக்கப்பட்ட இந்த அநீதிகளை வலிமையுடன் உரத்துகேட்க முடியாமல் புகார்களாய் குசுகுசுத்துக்கொண்டிருந்தனர். இந்தியாவுக்கே குடிபோய்விட காத்திருந்தனர்.

தோட்டத்தில் அம்மாவுடன் இருந்தபோது இதையெல்லாம் கவனிக்கவோ, யோசிக்கவோ, ஏதாவது ஒரு வழியைத் தேர்ந்தெடுக்கவோ பாண்டியனுக்கு அவகாசம் இருக்கவில்லை. அன்றாட வேளைகள் அவர்களது கவனத்தை எதிலும் சிதறிவிடாமல் கட்டுக்குள் வைத்துக் கொண்டன. சில சடங்குபூர்வமான மத கொண்டாட்டங்கள், குடும்பத் தகறாருகளுக்குள் மல்லுக்கட்டிக் கொண்டிருப்பதைத் தவிர. பெரும்பாலான நாட்களில் மக்களுக்கு வேலைக்குச் செல்ல, அதனால் களைத்துப்போக, பிறகு விரைவாகவே தூங்கிவிட மட்டும் அவகாசம் இருந்தது. பால் மரம் சீவவோ, களையெடுக்கவோ அவனை ஒருபோதும் அனுமதிக்காத அம்மா தன் வேலைக்குத் தோதான பொருட்களை சுத்தம் செய்து கொடுக்கவும் வீட்டுக்குத் தேவைப்படும் சாமான்கள் வாங்க தோட்டத்து வங்சா கடைக்கு ஓடவும் மட்டும் மும்முரமாக்கி வைத்திருந்தாள்.

குடியிருப்பில், தனிமையில் கழிந்த சில வாரங்கள் சில நுட்பமான மாற்றங்களை அவனுக்குள் உருகொள்ள செய்திருந்தன. கடந்த காலம், எதிர்கால கற்பனைகளுக்கு மத்தியில் சிக்கி விரக்தியடைந்த அனுபவங்களை வைத்து இனி ஒருபோதும் கையறுநிலைக்குத் தள்ளப்பட்டு எதற்கும் சரணடைவதில்லை என உறுதியுடன் வெளிபட்டு நின்றான். பாசீர் பஞ்சாங்கை சுற்றிவரும் குப்பை வண்டியில், தன் கைகளின் இயக்கங்களைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தான். கட்டுக்கடங்கா வலிமையுடன் தன் கைகளை வனாந்திர வேட்கையுடன் தாளகதிக்கு ஏற்ப சுழற்றுவதெல்லாம் நின்று போனது. தன் சக்தியைச் சேமித்துக் கொண்டான்; பகல் வேலைகளில் சாப்பாட்டுக் கடைகளில் துணிக்கடைகளில் வேலைப் பார்த்தான்.

முதலில், ஒரு சாப்பாட்டுக்கடையில் வேலை கிடைத்தது. துடைப்பத்தால் தரையைச் சுத்தம் செய்வது, மேசை துடைப்பது, சாப்பாட்டு நேரத்தில் போய் மங்கு கழுவுவதுதான் வேலை. கடை நிர்வாகம் சொற்ப கூலி கொடுத்து இரவு உணவும் கொடுத்தது. கொஞ்ச நாட்கள் அது அவனை திருப்திகொள்ள செய்தது. அவனுடைய திட்டம் என்னவென தெளிவாக புரியும்வரை, கிடைத்த பணத்தையெல்லாம் சேமித்து வைத்தான். ஓரளவு பணம் கையில் சேர்ந்த பிறகு நல்ல துணிமணிகளை வாங்கிக் கொண்டான். துறுத்திக்கொண்டு வெளிபட்ட அவனது ஆனந்தத்தைக் குடியிருப்பு புதிய கண்கொண்டு பார்த்தது.  குடியிருப்புவாசிகளின் கவனம் கூடுதலாய் விழுந்ததால் பாண்டியனின் தேவைகளும் அகல விரிந்தன.

சாப்பாட்டுக் கடையின் நீர்தொட்டி கழிவுநீர் சட்டைமீது தெறித்தது. கடையில் வேலை செய்த மற்றவர்களின் வியர்வை கவுளும் கொச்சை மொழி புழக்கமும் வசைகளும் அவனை தடுமாற வைத்தன. சாப்பாட்டுக்கடை பக்கம் மட்டும் அழகாய் உடுத்துவதை முற்றிலும் தவிர்த்து விட்டான். உள்ளுக்குள், வாடிக்கையாளர்களிடம் ஆர்டர் வாங்குபவனாய் வெள்ளை சீருடை அணிய விரும்பினான், சாப்பாட்டின் வாசத்தில் தன்னைப் போர்த்திக்கொள்ள விரும்பினான், வாசம் கமழும் அறிமுகமில்லா பெண்களின் அருகில் சென்று குனிந்து பேச விரும்பினான், மேசைகளின் மத்தியில் நின்று ஆர்டர் எடுக்கவே ஆசைப்பட்டிருந்தான். வேறொரு சூழலுக்குத் தன்னை தயார்படுத்திக் கொண்டான், தீத்திவங்சா துணி பேரங்காடியில், இன்னும் நிலையான இடத்தில்.

அங்குதான் உண்மையில் அவன் அவனாகவே இருப்பதை உணர்ந்தான். அங்குத் தயங்கி தயங்கி கடைக்குள் நுழைந்த நோஞ்சான் இளைஞர்கள் வெளியேறும்போது நேர்த்தியான சட்டைகள் கால்சட்டைகள் அணிந்து முனைப்பு மேலிட வருவதைப் பார்த்தான். இளம்பெண்கள் சாவதானமாக நடந்துவந்து தெளிவில்லாமல், தன்னுணர்வற்றவர்களாக உள்ளே நுழைந்து புதுவகை துணிமணிகளுடன் திரும்புவதைப் பார்த்தான்.  ஒருமுறை முதியவர் ஒருவர் நுழைந்து புதிதாய் வந்திறங்கிய ஜீன்ஸ் கேட்க,

“உங்க பையனுக்கா?” என பாண்டியன் கேட்டுவிட்டான்.

“எனக்கு!” காட்டத்துடன் கிழவன் பதில் கூறினான்.

ஆடைகளின் வாசனை, வடிவமைப்பு, அழகு பாண்டியனைக் கவர்ந்திழுத்தது. ஜீன்ஸ், அகலமான காற்சட்டை, மடிப்புகளுடன் சட்டைகள், இடைவார் பொருந்திய அரைக்கால் சட்டை என அவனுடைய ஆடைகள் எண்ணிக்கையில் பெருகின. மதிய நேரம் பாசீர் பஞ்சாங் போக தயாராகும் பாண்டியனுக்கு அதற்கொத்த உடையைத் தேர்ந்தெடுக்கவே குறைந்தது முப்பது நிமிடங்கள் செலவாகின.

குடியிருப்புவாசிகள் பாண்டியனின் புதிய வாழ்க்கைமுறையைப் பார்க்க ஆர்வம் காட்டினாலும் அதுகுறித்து தவறான புரிதல்களையே கொண்டிருந்தனர். அவன் வீட்டு வாசலில் நின்று விரிசல் விழுந்த கண்ணாடி குவளையில் காப்பி குடிக்கும்போது பெண்கள் ஒப்புக்காய் சிரித்து வைத்தனர்; பேருக்கு பாராட்டினர். ஓரடி முன்வைத்து பாதத்தைத் தரையில் ஊன்றி, மற்றொரு கால் உடல் எடையைத் தாங்கி நிற்க, இடுப்புவரை சட்டைத் துணி விழுந்து சரிய, அதிலிருந்து மிக கூர்மையாய் நீளும் கால்சட்டை மடிப்புவரை காட்டிக்கொண்டு நிற்பான். குடியிருப்பின் முன்எல்லை முனைவரை சிறுவர்கள் அவனைப் பின்தொடர்ந்தனர். காளியம்மா, அவர்களின் விருப்பத்திற்கு ஆதரவாய் புன்னகைக்கும் அந்த எல்லை முனைவரை மட்டும்.

சில மாதங்களில் வீட்டுக்குச் சாயம் பூச, கவர்ச்சிமிகுந்த வீட்டுப் புளக்கத்திற்கான சாமன்களை வாங்கிப்போடும் அளவுக்குக் கையில் பணம் சேர்ந்தது. பளிச்சென ஆரஞ்சு நிற சாயம் பொம்மையின் சாயலை குழந்தைகளுக்குத் தூண்ட, வீட்டு முன்னறைக்குள் நுழைந்தனர்,  புனைவுகளில் வரும் விசித்திரமான உலகைக் கண்டுகொண்டவர்களாய்.

“பெருசா வளர்ந்த பிறகு இதேபோல உங்களாலும் இருக்க முடியும்,” பாண்டியன் இரகசியமாய் சொன்னான்.

“இப்ப எங்களுக்கு ஏதாவது குறை இருக்கா? நாங்க பெரிய ஆபளயா ஆகமுடியாதா?” சிறுவன் கேட்டான்.

“உங்கப்பாகிட்ட போய் கேளு,” பாண்டியன் கூறிவிட்டு சிரித்தான். அவர்களை மேலும் குழப்பிவிட்டான்.

ஒருநாள் மாலை, பாண்டியன் அடுத்த வேலைக்குக் கிளம்பிக் கொண்டிருக்கும்போது, ஆரோக்கியன் குடியிருப்புக்குள் வருவதைக் கேட்டான். சிறுவர்கள் சட்டென சூழ்ந்துகொண்டு கேள்விகளை அவனிடம் சிதறினர்.

“மூட்டையில என்ன இருக்கு?”

“பெரிய பாம்பா?”

“எங்களைக் கடிக்குமா?”

“போதும்!” ஆரோக்கியன் குரல் உரத்துக் கேட்டது. “நகருங்க. கடைசி நிமிசத்துல கொஞ்சம் சந்தோசமா இருந்துட்டு போகட்டும்.”

ஆரோக்கியன் சாக்கு மூட்டையின் சுருக்கைத் தளர்த்தும்போது சிறுவர்கள் ஓரடி பின்வாங்கிக் கொண்டனர். சாக்கினுள் வெறித்தனமான திமிறல் இருந்தது. கண நேரத்தில் உடும்பின் குழாய் மூக்கு தென்பட்டது. அதன் கண்களில் பழியுணர்ச்சி ஏறியிருந்தது; நாக்கு சவுக்குபோல் சுழன்றது. பயத்திலும் ஆச்சரியத்திலும் சிறுவர்கள் கூச்சலிட்டனர்; அப்போது அவர்களுடைய அம்மாக்களும் அங்கு வந்து சேர்ந்தனர். தப்பிவிடுவதற்கு அடையாளமாய் உடும்பு தன் தடித்த தோலினை பலவாறாய் பளுப்பு நிறத்தில் மாற்றிக் கொண்டே இருந்தது. தன் இறையைத் தாக்க தயாராவதுபோல் கம்பீரம் கொண்டது. ஒரு கல்லின் மேல், இப்போது அதன் பின்னங்கால்களைத் தூக்கி உந்தித்தள்ளி பார்த்துக் கொண்டிருப்பவர்களை நோக்கி உக்கிரத்துடன் முன்னேறி, சட்டென தூர்வாரி தரையில் சரிந்து சூன்யமாய் வெரித்தது.

“உடும்பு இறைச்சி சாப்பிட்டு ரொம்ப நாளாகுது,” லெட்சுமி சொன்னாள். “வீட்டுக்காரர கொஞ்சம் கூடுதலா இஞ்சி வாங்கி வர சொல்லனும். இது வேக ரொம்ப நேரமாகும்!”

ஆரோக்கியன் அந்த ஊர்வன ஜந்துவை அதன் முதுகு பக்கமாக திருப்பிப் போட்டான். படபடத்த கையில் நுனிநோக்கி சிறுத்து செல்கிற கூர்முனை ஒன்றை இறுகப்பிடித்து வெண்மையான அதன் வெண்ணிற அடிவயிற்றில் கீறல்விட்டான். தாரை தாரையாய் ரத்தம் மட்டும் வழிந்தது. அந்த ஊர்வன ஜந்து துடிதுடித்து அதிர்ந்து சட்டென அசைவற்று போனது. ப்ராஞ்சா உத்திரத்தில் கட்டி தொங்கவிட்டு தோலுறிக்க ஆரம்பித்தான். சிறுவர்கள் பார்த்துக் கொண்டே இருந்தனர், வியந்துபோய் மெளனமாய்.

“ரத்த நரம்புகள வெட்டிடக் கூடாது,” சிறுவர்களிடம் கூறினான்; தனக்கும் சேர்த்து. “அப்படி வெட்டிட்டா இறைச்சி கவுளடிக்க ஆரம்பிச்சிடும்.”

“நீ எப்ப மானை பிடிக்க போற?” டவுனிலிருந்து அப்போதுதான் திரும்பியவனாய் கோவிந்தசாமி கேட்டான்.

“என்ன மான்?” என ஆரோக்கியன் மீண்டும் கேட்டு வைத்தான்.

அந்த நேரம் பாண்டியன் அவர்களைக் கடந்து போய்க்கொண்டிருந்தான். இருவரின் பார்வையிலிருந்து அகன்று, கடந்து சென்ற அந்தப் பகுதிநேர விற்பனையாளன்;  ஆரோக்கியன்மீது விசித்திர முகபாவத்தைக் காட்டினான். தனது சுய திருப்தியின் அடையாளமாவும் இருக்கலாம், அகந்தை அல்லது மேல்தட்டு இளிபார்வையாகவும் இருக்கலாம், ஆனால் அரோக்கியன் வெடுக்கென குனிந்து வேலை பார்க்க ஆரம்பித்தான். கையை உள்ளூடுருவி ஏதோ தட்டுப்பட்டவனாய் தடித்த தோலை உடம்பிலிருந்து பிரித்தெடுத்தான். பலவீனமான அதன் நிர்வாணத்தைத் திறந்து காட்டினான்.

மற்றொரு முறை ஆரோக்கியனும் பாண்டியனும் குவியல் மேட்டில் சந்தித்துக் கொண்டனர், இளையவனாய் ஆரோக்கியனை நோக்கி தயங்கியபடி வந்தான்.

“நீங்க எப்போதான் அந்த மானை பிடிப்பீங்க?” பாண்டியன் கேட்டான்.

“நீயும் உன் அழுக்கும்! அதுலயே கெட!” ஆரோக்கியன் கூறினான்.

ஆரோக்கியனின் அவமதிப்புகளை புறம்தள்ளிவிட்டு, “நீங்க எல்லாரும் ஏன் இந்தமாதிரி குருட்டுத்தனமா மூடநம்பிக்கைகள அப்படியே முழுசா நம்புறீங்க?” பாண்டியன் கேட்டான்.

“நீ எப்படி இவ்வளவு சீக்கிரமா ஞானியாகிட்ட?” ஆரோக்கியன் ஏளனமாய் நகைத்தான்.

“என் கண்ணையும் மூளையையும் திறந்துவெச்சிதான்,” பாண்டியன் வெகுளியாய் பதில் கூறினான். “நீங்க இதுக்கெல்லாம் கோபப்பட வேணாமே. நடக்கிறதெல்லாம் பார்க்க எனக்குதான் வியப்பா இருக்கு. அவ்வளவுதான்.”

மீதமிருந்த மதிய நேரம் முழுதும் சத்தமில்லாமல் வேலை நடந்தது. அன்றைய நாளின் வேலை முடிந்த உடனேயே, விரைந்துபோய் சுத்தமான மேலாடையை உடுத்திக் கொண்டு துணிக்கடையில் தன் வருகையை பதிவு செய்துவிட்டான். மீன் வலையைப் பழுது பார்ப்பது, மரச்சட்டங்களைக் கூர்மை செய்வது, கொல்லனிடமிருந்து சேகரித்துவந்த எஃகு ஈட்டிகளை தீட்டு சுனையேற்றுவது என ஆரோக்கியன் இறைத்துப்போட்டு தன் வேட்டை உபகரணங்களுக்கு மத்தியில் உட்கார்ந்துவிட்டான்.

அந்திவெயில் அடங்கி அரையிருள் குடியிருப்பைச் சூழத் தொடங்கியது. சிரகசைப்புகளையும் தனித்த கீச்சிடல்களையும் வரைந்துகொண்டு இசைவுமிக்க காத்திருப்பை முடுக்கிவிட்டது. குடியிருப்புக்குப் பின்னால் தோ அமான் கம்பக்காட்டில் வானிலிருந்து அழுத்தச்சுமையொன்று விழுவதைக் கவனித்தான். அந்த ஆண்டுக்கான முதல் பழந்தின்னி வெளவால். கட்டாய கவனத்தைக்கோறும் அதனுடைய கூரான முகவாகு, வஞ்சக இயல்புகளைப் பார்த்து அவர்கள் அதற்கு பறக்கும் நரி என்றும் பெயர் வைத்திருந்தனர். ஒருமுறை அவை ரம்புத்தான், மாமரங்களில் சாவாகாசம் கண்டுவிட்டால், இடுக்களில் தேங்கி நிற்கும் இருட்டை தவறாய் கற்பிதம் செய்துக் கொண்டு அந்த மங்கிய வெளிச்சம் நோக்கிய நெட்டிப் பறக்க ஆரம்பிக்கும்.  ஆரோக்கியன் இந்த தருணத்துக்காகதான் காத்திருந்தான். ஒரே அளவிலான மூங்கில் சுழிகளின் இரு முனைகளிலும் இழுத்து முடிச்சிட்டப்பட்ட நைலான் வலைகளைப் பயன்படுத்த தயாராக இருந்தான். ஒரு வாரம் அல்லது அதற்கும் கூடுதலாய் மரத்தடியில் காத்திருந்தான். தன் பழங்களை நாசமாக்குமந்த சிற்றுயிர் இனி தனது பழத்தோட்டத்தை அண்டாமல் இருக்கும் என தோ அமான் உள்ளூர மகிழ்ந்தான் – அந்த இரவு அமைதியாய் விழிப்புடன் மரணிக்கும் முன்பு.

அது பித்துபிடிக்க வைக்கும் கணம். தலைகீழாக தொங்கும் தந்திரத்திலிருந்து சிதறடிக்க கற்களை அவற்றின்மீது எறிந்தான். கற்கள் குறுக்குவெட்டாக வான் நோக்கி பறந்தன. ரத்தத் துளிகள் ஆரோக்கியனின் தலைநோக்கி வடிந்தன. மூங்கில் சுழிகளை மேல்நோக்கி எம்பி வலையை அவற்றின்மீது வீசினான். மென்மயிர் ஜந்துக்களைப் பிடித்து சாக்கினுள் நெருக்கினான். அங்கிருந்து கிளம்பி திக்கற்று இருளில் படபடக்கும் மற்றனவற்றுக்கும் குறி வைத்தான். மீண்டும் மீண்டும் தாக்கினான், தடித்த மரங்களுக்கு அடியில் வளரும் புதர்களைப் பிடித்து ஏறி கடந்தான். மரங்களைத் தவிர்த்தான். மூங்கில் சுழிகளை மிகச் சரியாய் தலைக்கு மேலே பிடித்துக் கொண்டான். சாக்கு மூட்டை நிறைந்ததும், எதிர்பாராத வெற்றியால் மேல்மூச்சு வாங்கியது.

குளிர்ந்த நீரோடை அருகில் அமர்ந்து அவற்றின் தோலுறித்து, பின் குடியிருப்புக்குள் கொண்டு வந்தான். முதலில் கொஞ்சம் தயங்கியும் பின் முறைப்பாகவும், அவன் வருகைக்காக காத்திருந்தவர்களை நோக்கி சாவதானமாய் நடந்து வந்தான். சாக்கின் வாயைத் தளர்வாக்கி திறந்தான். பழதின்னி வெளவால்கள் உருண்டுவந்து விழுந்தன. அவற்றின் இருபக்க கை மூட்டுகளும் கருத்த உடலை போர்த்தியிருந்தன, அவற்றின் சிறுத்த முகங்கள் ஆழ்துயிலிலிருந்து விருட்டெழுந்த சிறுவனைப் போல் அதிர்ச்சியில் உறைந்திருந்தன. அக்குடியிருப்புவாசிகள் அவரவருக்கு வேண்டியதைப் பொருக்கிக் கொண்டனர்; சிலர் அந்த வெளவால்களை வாட்டினர்; சிலர் கொத்தமள்ளி மிளகாய் தூவி அலங்கரித்தனர், சிலர் பொறித்தனர். இறைச்சியைத் துண்டுதுண்டாய் கடித்து ருசித்துக் கொண்டிருந்த சிறுவர்கள் ஒருவருக்கொருவர் கீச்சிட்டுக்கொண்டு விசமத்தனமாக குதூகளித்தனர்.

பழங்காய்க்கும் பருவத்தில் மிதமிஞ்சி ஆர்பரித்தது குடியிருப்பு. ஆனால் அதைவிட சீக்கிரமே பழந்தின்னி வெளவாலின் சுவை சலித்தும்போனது. அரோக்கியன் மீன் பிடிப்பது, அவ்வப்போது உடும்பு, அலுங்கு வேட்டையாடுவதென பழைய வழக்கத்திற்குள் திரும்பினான். குடியிருப்புவாசிகள் அவ்வளவு எளிதில் ஏமாறுவதாக இல்லை. உடும்பு, அழுங்கு இறைச்சிகள் அண்மையில் அவர்களது எதிர்பார்ப்பை முடுக்கிவிட்ட மெல்லிய பழந்தின்னி வெளவால் இறைச்சியின் முன் மதிப்பற்று போயின.

“நாம எப்போது அந்த தங்க மானை பார்க்க போறோம்?” கோவிந்தசாமி கேட்டான்.

“இங்க, அது பெலாண்டுக்,” குமரன் சொன்னான்.

“டுக், டுக், டுக்,” சிறுவர்கள் தங்கள் நாக்கில் ஒலியெழுப்பி பார்த்தனர்.

அவர்கள், திரும்பவும் சீக்கிரமே கேட்டுவிடக்கூடும்; காளியம்மா கோயிலில் எல்லாரும் கூடி, களைந்து, சிதறும்போது, அச்சுறுத்தும் ஓசையாக “டுக், டுக், டுக்,” எங்கெங்கோ மூலைகளிலிருந்து, சற்றுமுன் சிறுவர்கள் கற்றுக்கொண்ட அந்த விளையாட்டை.

dear 1ஆரோக்கியன் வீழ்ச்சியை நோக்கி போய்க்கொண்டிருந்தபோது (உடும்புகள் தஞ்சமடையும் இடங்களான ஓடைகளையும் நீர்த்தேக்கங்களையும் கம்பங்காட்டுக்காரர்கள் காலி செய்து வைத்திருந்தனர்) பாண்டியன் ஏறுமுகம் கண்டான். குடியிருப்பில் மிக அரிதாகவே அவனைப் பார்க்க முடிந்தது. அப்படி பார்க்க நேரும்போதும் பொறாமையில் வியந்து தலையைக் தொங்கப்போட்டுக் கொண்டது குடியிருப்பு. அவர்களின் இரகசிய நோட்டங்கள் பாண்டியன் வேறுவிதமாய் மாறியிருப்பதைக் காட்டியது. அவன் உடல் முறைப்பாய் உரமேறியிருந்தது; மேலதிக தன்னம்பிக்கையுடன் இருந்தான்.

“முகத்தை என்னிடமிருந்து ஒளித்திக் கொள்ளாதிங்க,” குமரனின் மனைவி விமலாவிடம் கூறினான்.

“நீ கிட்டத்தட்ட யாரோபோல மாறிட்ட,” என்று அவள் சுய உணர்வுடன் கூறினார்.

“நீங்க இன்னும் கொஞ்சம் அதிகமா மனிதர்களோட முகத்தைப் பார்க்கனும். கல்லோட முகத்தை இல்ல.” அவன் கூறினான்.

 “அப்படி சொல்லாத. காளியம்மா கோபித்துக்கொள்ள போறாங்க.” விமலா கூறினாள்.

“உங்ககிட்டல்லாம் பேசறதுல பயனில்ல,” பாண்டியன் கூறினான்.

“உன் சப்பாத்தைவிட நீ பெரிதா வளர்ந்துட்ட, தெரியுதா,” விமலா பதில் கூறினாள், அவன் வார்த்தைகளால் நொந்தவளாய்.

“இதைப் பாருங்க!” காலணிகளைக் காட்டிச் சொன்னான்.

“ரெண்டு நாளுக்கு முன்னதான் வாங்கினேன். கஷ்டப்பட்டு வேலை செய்து சம்பாதித்தேன்.”

“யாருக்கு வேணும் பணம்,” விமலா கூறினாள்.

“இதில் இழிவா நினைக்க ஒன்னுமில்ல. இங்கிருக்கிற ஆம்பளங்க பயம்னு சொல்லிக்கிட்டு தங்களோட சோம்பேறித்தனத்த மறைத்துக்கறாங்க.”

“உன்னால ஆரோக்கியன் போல ஆக முடியாது. அவன் நிறைய ஆபத்துகளை பார்த்திருக்கான்,” என்றாள்.

“வரும்போது கூடவே சதைப் பிண்டங்களா கொண்டுவருவான்ல…,” பாண்டியன் கூறினான்.

“இங்கிருந்து போயிடு,” அவள் கத்தும் தொனிக்கு வந்துவிட்டாள்.
மாதங்கள் தீபாவளியை நெருங்கிக் கொண்டிருந்தன. அக்குடியிருப்பு ஆடம்பரமாய் கொண்டாடும் ஒரே விழா. இதிலும்கூட கோவிந்தசாமியின் செல்வாக்கைக் காண முடியும். கோவிந்தசாமி நுட்பமாய் எல்லாரையும் கூட்டாய் ஒரே சிந்தனைக்குள் கொண்டு வந்தான். காளியம்மா மறக்கருணைமிக்க நீதிக்காக நீண்ட நெடிய நாள் காத்திருப்பதை நினைவுகூர்த்து அதற்கு மரியாதை செலுத்தும்படி செய்தான். வறுமை முகத்தைக் காட்டும் அவர்களிடம் கொடுத்தக் கடனை திரும்ப வாங்க முதலாளிமார்கள் வற்புறுத்த மாட்டார்கள் என்பதை அறிந்திருந்தவர்களாக  கடந்த காலங்களில் வகைதொகையில்லாமல் கடன் வாங்கியிருந்தார்கள். இங்கு அதற்கு வழியில்லை. ‘பாய்’மார்கள், செட்டியார்கள், கடைக்காரர்கள் எச்சரிக்கையாகவே இருந்தார்கள்; கடன் தரவோ பாக்கி வைக்கவோ அறவே மறுத்தார்கள். நெருங்கிவரும் விழாவுக்கு முன்சிந்தனையுடன் சிறுவர்கள் பெண்களின் தேவைகளுக்குச் சுவர் எழுப்பி தடை போட்டிருந்தார்கள், ஆண்கள். அம்மாக்களாக இருந்த பெண்களுக்குக் கையறுநிலை. பிள்ளைகள் வாயடைத்துக் கிடக்கும் தண்டனையை அவர்களாய் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

விமலாதான் முதலில் பாண்டியனிடம் சென்றாள். அவன் அப்போதுதான் தித்திவங்சா துணிப் பேரங்காடியிலிருந்து வந்திருந்தான். விமலா அவன் வீட்டில் நுழைவதை யாரும் பார்த்துவிடக் கூடாதென விரும்பினாள். படாரென்று உள்ளே நுழைந்தவள் சோபாவில் நீட்டி படுத்திருந்தவனைக் கவனித்தாள். அவன் உள்ளுள் உறைந்து கிடந்தான்; முகத்தில் சோர்விருந்தது; சில நொடி நிலை தப்பி, பின் சுயநினைவுக்குத் திரும்பி, முகத்தை அழகான பெரிய கைக்குட்டையில் துடைத்துக் கொண்டு, அவளைப் பார்த்து சிரித்தான்.

“கைய கோசமா வச்சிக்கிட்டு வந்திருக்கீங்க,” பொங்கல் நாளில் இனிப்பாய் சோறு கொண்டுவந்தவளின் ஞாபகத்தை மீட்டுவந்து பேசினான்.

“கையை நிரப்பிக்கொள்ள வந்தேன்,” விமலா வெளிப்படையாகவே பேசினாள்.

“நிரப்பிக்கொள்ளவா? எங்கிட்ட என்ன இருக்கு?”

“காசு,” தயக்கத்துடன் கூறினாள்.

“நீங்க காசபத்தி இழிவா பேசியிருக்கீங்க, நினைவிருக்கா?”

“குழந்தைகளுடைய முகத்தைப் பார்த்த பிறகு அப்படியில்ல.” இன்னொருவள் அதேபோல் ரகசியமாய் வந்து நிம்மதி பெருமூச்சோடு போனாள். வீட்டு ஆண்கள் அவர்களிடம் கடுகடுத்தனரே அன்றி பாண்டியனிடம் பணத்தைத் திருப்பிக் கொடுத்துவிடும்படி வற்புறுத்தவில்லை. ஆரோக்கியன் குடியிருப்புவாசிகளுக்கு ஏதாவது இறைச்சியைக் கொண்டுவந்து கொடுத்துவிட முடியும் என்கிற வேட்கையோடு தினம் தினம் காட்டின் விளிம்புக்குச் சென்று இரவுவாகி மீழும்போது சாக்குப் பை முதுகில் விசிறியடித்துக்கொண்டு வரும்.

தீபாவளி வந்து போனது. கொஞ்ச பட்டாசுகளை வெடித்தும் பாசீர் பஞ்சாங்வரை படம் பார்க்க ஊர்வலம் போயும் தீபாவளியன்று சாப்பிட மாட்டேன் என நிராகரித்த பலகாரங்களை அந்த வாரம் முழுக்க கொரித்துத் தின்றும் சிறுவர்கள் கொண்டாடினார்கள்.

ஆரோக்கியன் விரக்தியில் தனக்குள்ளேயே அடைகாத்துக் கிடந்தான். கோவிந்தசாமி பொறுமையிழந்தவனாய் அவனை இழுத்துச் சென்றான். “டுக். டுக். டுக்,” குழந்தைகள் குடியிருப்பின் பல மூலைகளிலிருந்து முணுமுணுத்தனர். பாண்டியனிடம் வாங்கிய பணத்தைத் திரும்ப கொடுக்க பெண்கள் அவரவர் செலவுகளில் கண் வைத்துக் கொண்டனர். பாண்டியன் கல்பதித்த கடிகாரத்தைத் தீபாளியின்போது தனக்காக வாங்கிக் கொண்டான். இப்போது புதிய ஹோண்டா மோட்டரை ஓட்டிக் கொண்டு குடியிருப்புக்குள் நுழைந்தான்.

அந்தக் குடியிருப்பு இதற்குமுன் நிறைய மோட்டார் வண்டிகளைப் பார்த்திருக்கிறது, ஆனால் ஒன்றுகூட அவர்களின் வீட்டு வாசலில் நின்றதில்லை. தாமான் பஹாகியாவாசிகள்கூட மதில் சுவர்களுக்கு அப்பாலிருந்து குடியிருப்பைப் பார்த்தனர். பாண்டியன் மோட்டாரை சுத்தம் செய்யும் துடைத்து பொழிவாக்கும் நேர்த்தி அவர்களையும் கவர்ந்திருக்கலாம்தான். அதனால்தான் எப்போதோ சில முறையாவது அவர்களது தலைகள் குடியிருப்பின் பக்கம் அதற்கு பின்பான நாட்களில் திரும்பிக் கொண்டிருந்தது.

அவனும் மோட்டாரும் மரியாதைக்குறியதாய் ஆனார்கள். சிறுவர்களுக்கு நகல்செய்து ஒலிக்க புதியதாய் ஒரு சத்தம் கிடைத்திருந்தது. அவர்கள் தங்களது கற்பனை மோட்டாரில் ஏறி உட்சபட்ச வேகத்தில் வீடுகளைக் கடந்தார்கள். மோட்டார் இயந்திரத்தை நிறுத்தி “டுக், டுக், டுக்,” என முடித்தார்கள். இப்போது, ஆரோக்கியனும் பாண்டியனும் வெளிப்படையாகவே விரோதம் காட்ட தொடங்கியிருந்தார்கள். இந்த விரோதத்தை எரிபொருளாக்கி கோவிந்தசாமி காளியம்மாவிடம் வேண்டுகோள் ஒன்றை வைத்தான். உயிர்காக்கும் இந்த கொடுஞ்சோதனைக்கு மாற்றுவழி கேட்டு வேண்டுகோள் வைத்தான்.

“நம்ம அம்மா இதற்குமேல் முயற்சி செய்துக்கொண்டிருப்பதை அனுமதிக்க மாட்டா. ஆரோக்கியன் சீக்கிரமா பெலாண்டுக்க கண்டுபிடிக்கனும்.”

“அசைகிற மிருகங்கள் மேல நான் இதுவரை அம்பு வீசியதில்ல. அதற்கு நான் நடு காட்டுக்குள் போக வேண்டியிருக்கும்.”

“நீ பயப்படுற,” கோவிந்தசாமி கூறினான்.

“படிப்படியாதான்.. ஒன்னொன்னாதா.. செய்ய முடியும்,” ஆரோக்கியன் தன்னை தற்காத்தான்.

“நீ படிப்படியாக போய் சேர்வதற்குள்ள இந்த குடியிருப்பே இல்லாம போய்விடும்,”

“காடு எனக்குப் பழக்கமில்லாத புது இடம். முதலில் தெரிந்துக்கொள்ளனும். அதோட எல்லை, அமைப்பு,  வரையறைகளை, மனப்பாங்கு, எது திறந்தவெளி, எது மறைவதற்கான இடம் … ”

“அப்படியே நாம எல்லாருக்கும் வயசாகிடனும்,” குமரன் முடித்து வைத்தான்.

“நான் முதல்ல கொஞ்சம் அனுபவத்தைத் தேடிக்கிறேன்.” எல்லாப்பக்கமும் சுற்றிவளைக்கப் பட்டவனாய் ஆரோக்கியன் கூறினான். “பெலாண்டுக் பிடிப்பதற்கு முன்னாடி காட்டுப் பன்னி ஒன்றை பிடிக்கப் பார்க்கறேன்.”

“சரி, அங்கிருந்தாவது ஆரம்பிப்போம்,” கோவிந்தசாமி கூறினான்.

அடுத்தநாள் பகலில் வேட்டைக்கான ஆயத்த வேலைகளைத் தொடங்கினான். வேட்டையாடும் உபகரணங்கள் அத்தனையையும் சரி பார்த்தான்.  எல்லாவற்றையும் அப்படியே போட்டுவிட்டு டவுனுக்குப் போனான். திரும்பியபோது குடிபோதையில் தள்ளாடி வந்தான்.

“காளி, உனக்காக ஒரு புலியையே வேட்டையாடுறேன்!”

“அந்த காளியம்மாவுக்குச் சிங்கத்தை வேட்டையாடுறேன்!” மனைவியிடம் போதையில் கத்தினான்.

வீட்டுச் சுவரை குத்தி மர, உலோக ஈட்டிகளின் ஆண்மையின்மையை சபித்து, பாண்டியனை வசைபாடி சண்டைக்கு இழுத்துக்கொண்டிருக்க, மொத்தத்தையும் துணிப் பேரங்காடியிலிருந்து வேலை முடிந்து வந்த பாண்டியன் கேட்டுக் கொண்டிருந்தான். ஆரோக்கியனின் வசைகளையும் அவமதிப்புகளையும் கேட்டபடி வீட்டுக்குள்ளேயே இருந்தான். மறுநாள் காலை இருவரும் சேர்ந்து மெர்போக் ஆற்றங்கரையில் வேலை செய்யும்போதும் பாண்டியன் அமைதியாகவே இருந்தான். காளியம்மா கோயிலில் எல்லாரும் கூடியபோது தனது பிரகடனத்தை வாசித்தான்.

“நான் முதல்முறை இங்க வரும்போது,” பேச ஆரம்பித்தான். “நான் நிறைய கூச்சப்பட்டேன், பயந்தேன். என் அம்மா காட்டிய உலகம் மட்டும்தான் எனக்குத் தெரியும். அப்பாவோடு சேர்ந்து வெளியில சுற்ற ஆரம்பித்த நேரத்துலதான் அவர் இறந்துபோனாரு. அந்தத் தோட்டம் மாதிரியேதான் இந்த குடியிருப்பும் இருக்கு. மூடநம்பிக்கை நிறைய குவிந்திருக்கும் காட்டுக்குள்ள மறைந்துகிடக்கு. நான் ஆரோக்கியனுடன் வாய்த்தகறாறு, சண்டை போடப் போவதில்ல. ஆனால், அடுத்த வேட்டைக்கு ஆரோக்கியனோட நானும் போவேன். பன்னியோடு வருவேன்!”

“இவன் பயபக்தி இல்லாதவனாக இருக்கலாம். ஆனால் காளியம்மா முன்னுக்கு வந்து உண்மையைப் பேசியிருப்பதால அடுத்தமுறை ஆரோக்கியனோடு இவனும் போகட்டும்,” கோவிந்தசாமி கூறினான்.

“நானும், ஒரு மிருகத்தோடு வறேன்,” ஆரோக்கியன் கூறினான், பாண்டியனைப் பார்த்தவாறு.
அந்த வார இறுதியிலேயே இருவரும் கிளம்பினார்கள். ஆரோக்கியன் தன் காக்கி சிலுவாருடனும், பாண்டியன் முரட்டு ஜீன்ஸ், சப்பாத்து, முழுக்கை பருத்தி சட்டை, இன்னொரு மேல்சட்டையுடன் புறப்பாடு நடந்தது. ஆரோக்கியன் சாக்குக்குள்  கத்தி, நைலான் கயிறு, தட்டு, சிறிய பானை, கை விளக்கு, தக்கர் வைத்து, ஈட்டிகளுடன் சேர்த்து கட்டி தோள்பட்டையில் சரிசமமாய் தொங்கவிட்டு சுமந்து கொண்டான்.  பாண்டியன் டின்களில் அடைக்கப்பட்ட பழங்கள், குடிநீர் புட்டி, சிறு மின்மப்பொறி வானொலி, கொஞ்சம் மாற்று உடைகளைப் பயணம் போவதற்குரிய பையில் எடுத்துக் கொண்டான். ஓரிரவு தங்குவதாய் உத்தேசம்.

பக்கத்து வீட்டு பெரிய பையனிடம் “மோட்டர யாரும் தொடாம பார்த்துக்கோ,” என்றான் பாண்டியன்.

காளியம்மாவின் பலிபீடத்திலிருந்த தட்டை கொண்டுவந்து, திருநீறு குவியலின் மத்தியில் சூடக்கட்டிகளை வைத்து பற்றவைத்தான் கோவிந்தசாமி. குறுகிய பூசை செய்தான். ஆரோக்கியன் அந்தப் பரிசுத்த சாம்பலை அள்ளி நெற்றி, தொண்டை, ஈட்டிகளில் தேய்த்துக் கொண்டான். பூஜை நடக்கும் இடத்திலிருந்து தள்ளியே நின்றான் பாண்டியன்; சம்பலை பூச மறுத்தான்; கோவிந்தசாமி பெண் தெய்வத்திடம் பிரார்த்தனையை முடித்த கணம் ஆரோக்கியனின் முன்போய் நின்றான்.

சொன்னபடி மறுநாள் பகலாகியும் இருவரும் குடியிருப்புக்குத் திரும்பாதது அனைவருக்குள்ளும் பதற்றத்தை வளரவிட்டது. அவர்களது வருகைக்காக காத்திருப்பதை கோவிந்தசாமி குடியிருப்பின் பார்வையில் பதிவுசெய்துகொண்டே இருந்தான்; சீக்கிரமே குளித்துவிட்டான்; கோயிலில் பூசைபோட ஆரம்பித்தான்.

“அவர்கள் வரும்வரை நான் பூசைய நிறுத்த மாட்டேன்,” அறிவிப்பு செய்தான்.

கொஞ்ச நேரம் அவன் பின்னாலேயே நின்று கொண்டிருந்த சிறுவர்களும் பெண்களும் புடைபெயர்ந்து அவரவர் வீடுகளுக்குச் சென்றனர். நேரம் வேகம் குன்றி நகர்ந்தது. நேரத்துடன் சேர்ந்துகொண்டு காளியம்மாவின் காலடியிலிருந்து கோவிந்தசாமியின் குரல் மட்டும் தனிமையில் கேட்டது. சில ஆண்கள் குடியிருப்பு நோக்கி அனாசயமாய் வந்து கொண்டிருந்தனர்; சிலர் வீட்டுக்குத் திரும்பினர். பெண்கள் வாசற்படியில் உட்கார்ந்து கொண்டனர்; மடியில் சாய்ந்திருந்த சிறுவர்கள் சீக்கிரமே தூங்கி விட்டனர். சிறிது நேரத்துக்கெல்லாம் பெண்களும் கிளம்பி, தூங்கிய குழந்தைகளை எழுப்பிக் கொண்டு கட்டிலுக்குப் போய்விட்டனர்.

கோவிந்தசாமியின் நாராசமான கோஷம் வழுக்கி, கம்மி, குசுகுசுக்க ஆரம்பித்தது. காளியம்மாவின் பலிபீட ஜோதி மட்டும் சுடர்விட்டு பிரகாசித்தது. அரிதுயிலில் கிடந்தவன் நிமிர்ந்து உட்கார்ந்தான்; முன்பின் அறிமுகமில்லாத பாடல் அவன் காதுகளுக்குக் கேட்டது. தாமான் பஹாகியா வீடுகளை நோட்டமிட்டான். எல்லாம் இருள்தொற்றி பூட்டிக்கிடந்தது. எழுந்தான்; குடியிருப்பின் எதிர்விசை நோக்கி நடந்தான்.

குடியிருப்பை ஒட்டிய சகதிவழி கை விளக்கு மினுக்குமினுக்கென ஒளியிட்டது. இரண்டு உருவங்கள் சுமையுடன் போராடிக் கொண்டிருப்பதை கோவிந்தசாமியால் பார்க்க முடிந்தது. பாண்டியனின் மின்மப்பொறி வானொலி கோவிந்தசாமி  அறிந்த பாடல் ஒன்றுக்காக முயற்சித்துப் போராடிக் கொண்டிருந்தது. இருவரின் உறுமல் சத்தமும் பாட்டு சத்தத்துடன் சேர்ந்து அவர்களை குடியிருப்புக்குள் இழுத்துவந்து போட்டது; கோரமான சூழலை உருவாக்கிக் காட்டியது. பிறகே இருவரும் பார்வைக்கு தட்டுப்பட்டனர். இருவரும் ஒரு ஜோடி காட்டுப்பன்றியை இரு துருவங்களில் கட்டி தொங்கவிட்டு தூக்கி வந்தனர்.  ஆரோக்கியன் சோர்ந்திருந்தான்; அவன் உடை கசங்கி அழுக்காக இருந்தது. பாண்டியன் புறப்பட்டபோது இருந்த அதே உற்சாகத்துடன் இருந்தான், சட்டையும் கொஞ்சமே மண்பட்டும் கசங்கியும் இருந்தது,

“நாம ஒரு டவுனுக்கே சாப்பாடு போடலாம்!” பாண்டியன் ஆர்பரித்தான்.

ஒரு வார்த்தையும் பேசாமல், ஆரோக்கியன் காட்டுப்பன்றிகளைச் சுத்தம் செய்ய உட்கார்ந்தான்.

காட்டில், அவர்களின் நீண்ட பயணம் குறித்த விபரங்கள் துண்டு துண்டாக கசிந்தன. பாண்டியன் காட்டில் இருக்கும்போது பயந்துவிட்டதாக ஆரோக்கியன் கூறினான். மேலும், சின்னச் சின்ன சத்தங்களுக்கெல்லாம் ஆரோக்கியனை எழுப்பிக் கொண்டிருந்ததாகச் சொன்னான். மறுநாள் காலை தூய்மையான துரித நீரோட்டத்தைப் பார்த்ததும் வானொலியைத் திறந்து வைத்து, கொண்டுவந்திருந்த உணவுகளைச் சாப்பிட்டு உல்லாசப் பயணம் செய்தான். மிரட்டிய பிறகே புத்தி தெளிந்து அங்கிருந்து கிளம்பி ஆரோக்கியனைப் பின் தொடர்ந்தான். ஆரோக்கியனின் சட்டை நுனியை வால்போல் பிடித்துக் கொண்டதாகவும் காட்டுப்பன்றி துடிதுடித்து உக்கிரமாய் மரண ஓலமிடும்போது திரும்பி புறமுதுகு காட்டி வானொலியைத் திறந்து கொண்டதாகவும் கூறினான்.

“அவன் பொய் சொல்றான்! நான்தான் பன்னிகளோட வாடையையே கண்டுபிடித்தேன். அவன் பயந்து ஒடுங்கி என் பின்னால் நின்னுக்கிட்டான். மர ஈட்டியை என் கையில் வைத்து இருட்டுக்குள்ள தள்ளிட்டான். பன்னியோட கொம்புகள் அப்படியே மினுமினுத்துச்சி. ஆனால் நான் பயப்படவேயில்ல,” என்றான் பாண்டியன்.

ஈட்டியை காட்டுப் பன்றியின் இதயத்தில் குத்தித் துழைத்ததையும் அது துடிதுடித்து உயிருக்குப் போராடி சாகும்வரை கீழே கிடத்தி அழுத்தியதையும் அப்படியே செய்தும் காட்டினான். குடியிருப்புவாசிகளுக்கு யாரை நம்புவதென தெரியவில்லை. இருவரின் அந்த முதல் பயணத்திற்கு பிறகு ஆரோக்கியன் மூர்க்கமாய் மெளனமானான்.

பேய் பிடித்தவன்போல் முகவாட்டமிருந்தது.

பல வாரங்களாக வேட்டைக்குப் போவதைப் புறக்கணித்தான். அவனுடைய வேட்டை ஆயுதங்கள் கைப்படாமல் ப்ராஞ்சாவில் கிடந்தன. உள்ளுள் உறைந்து கொண்டான்; பாண்டியன் முதன்முதலாய் குடியிருப்புக்குள் நுழைந்தபோது செய்ததைப்போலவே. மனைவியின் குத்தலான வசைகள் அவனை கொஞ்சமும் பாதிக்கவில்லை. பாண்டியனைப் போலவே குடியிருப்புவாசிகளும் அவரவர் வாழ்க்கைக்குள் நுழைந்து, யாரும் யாருக்கும் ஒட்டுறவற்று தனித்தனியே பிரதிபலித்து வழக்கத்திற்குள் நுழைந்திருந்தனர். ஆரோக்கியன் அவர்களைப் பார்த்துக் கொண்டே இருந்தான். பாண்டியனின் மோட்டார் சத்தம் மட்டும் அவனுள் உயிர்வீரியத்தைத் தூண்டிவிட்டது. அந்த இளைஞன் தன் இயந்திரத்திலிருந்து அவ்வளவு வசீகரமாகவும் துறுதுறுத்தும் இறங்குவதை உற்றுப் பார்த்தான்.

பாண்டியன் மேலும் சில ஸ்டைல்கள் காட்டினான். அவன் முடி நீண்டு வளர்ந்து சட்டை காலர்வரை மென்மையாய் தொங்கியது. அணியும் சட்டைகளின் மேல் ஓரிரு பொத்தான்களை திறந்துவிட்டுக் கொண்டான். உடல் தசைகள் புடைத்திருந்தன; பார்க்கும் பெண்கள் தயக்கமின்றி எதிர்கொள்ள முடியாத அளவுக்கு அவனது அசைவுகளில் ஒருவித வசீகர ஒருங்கிணைவு இருந்தது.

“நாங்க உனக்கு பட்ட கடனை ஒருநாள் திரும்பத் தரணும்,” விமலா ஒரு பகல் பொழுதில் கூறினாள்.

“எனக்கு அந்தப் பணம் வேணாம்,” அவளைக் காயப்படுத்தும் தொணியில் பெருந்தன்மையோடு கூறினான்.

அடுத்தமுறை முடியைச் சுருட்டி கற்றை கற்றையாய் வெளியே தொங்கவிட்டிருந்தான். மார்பில் பதக்கம் மின்னியபடி தங்கச் சங்கிலியின் முடிவில் தொங்கிக் கொண்டிருந்தது. ஒவ்வொரு நாளும் அவனிடம் தென்படும் மாற்றங்களை ஆரோக்கியன் கண்காணித்துக் கொண்டே இருந்தான். ஒரு பொழுதில் பட்டுத்துணியும் நேர்த்தியான மடிப்புமாக மின்னல் வெட்டொளி தெறிப்புடனும், மறுபொழுது கசங்கி சுருங்கி உரப்பான தோற்றத்திலும் இருந்தான். கோவிந்தசாமியின் ஆர்பாட்டத்தையும் சிறுவர்களின் “டுக், டுக், டுக்,” கீச்சிடலையும் கேட்டு நாட்களாகியிருந்தது.

“நான் அந்த பெலாண்டுக்க வேட்டையாட போறேன்,” ஆழந்த பகல்கனவிலிருந்து விழித்துக் கொண்டவன்போல ஆரோக்கியன் பேசினான்.

“எப்போ?” கோவிந்தசாமி கேட்டான்.

“காளியம்மா இன்னும் தெளிவா என்னிடம் சொல்லும்போது,” என்றான்.

அரோக்கியன் மீண்டும் தனது வலைகள், மூங்கில் சுழிகள் மற்றும் மர ஈட்டிகளிடம் திரும்பியிருந்தான். எஃகு ஈட்டிகள் மிக நுண்மையான உருகொள்ளும்வரை அதை தீட்டுவதில் அளவுகடந்த நேரத்தைச் செலவிட்டான். குழந்தைகள் பேரார்வத்துடன் துளி சத்தமில்லாமல் பார்த்துக் கொண்டிருந்தனர்; பாண்டியன் வரும்வரை; பிறகு அவன் மோட்டாரிடம் ஓடி விட்டனர். இப்போது சிறுவர்களின் பெற்றோரும் அவனிடம் கனிவாக பழக ஆரம்பித்திருந்தனர். அவன் வீட்டுக்குள் நுழையவும் சிறுவர்களுக்கு அனுமதி கொடுத்திருந்தனர்.

“நான் அந்த பெலாண்டுக்கை பார்த்தேன்,” ஒரு பகலில் ஆரோக்கியன் கோவிந்தசாமியிடம் கூறினான்.

“அது நடு காட்டில் இருக்கு.”

“காளியம்மாதான் எனக்கு அதைக் காட்டினாள்.”
பேச்சில் இடைவெளி விட்டான்.

“ஆனால் என்னால தனியாகப் போக முடியாது.”

“அப்படினா இதை அவனால சொந்தமா செய்ய முடியாதா?” அந்த இடத்தை வந்தடைந்தவனாக பாண்டியன் குரல் வந்தது.

பயணத்தை மீண்டும் முடிவு செய்தார்கள். இந்த முறை இருவருக்கும் சேர்த்து கோவிந்தசாமி மிகுந்த அக்கறையோடு விரிவாய் பூசை செய்தான். காளியம்மா கோயில் முன் அரோக்கியன் நெடுங்கிடையாய் படுத்து வணங்கினான்; பின் பெருமூச்சி விட்டான்;பாண்டியன் வேட்டைக்கு முந்தினான்.

ஆரோக்கியன் புனித வேள்விக்கு புறப்பட்டிருப்பதாக கோவிந்தசாமி திடமாக நம்பினான். ஆகவே, இரண்டாவது நாள் இரவுகூட கோயிலில் கண்விழித்து காத்திருக்கவில்லை.  நான்கு நாள்கள் கடந்தும் அவர்கள் வருகைக்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை. ஒரு வாரம் கழிந்தது. இப்போது குடியிருப்பு முழுவதுமே விழிவைத்து பார்த்துக் கொண்டிருந்தது. கோவிந்தசாமி விரதமிருந்தான்; வேண்டினான். மெளனித்துக் கிடந்த மோட்டாரை சிறுவர்கள் பார்த்து கொண்டிருந்தனர். விவரிக்க முடியா முகபாவத்துடன் பெண்கள் தத்தமது வேலைகளைச் செய்து கொண்டிருந்தனர். நெஞ்சைப் பிழக்கும் விசனத்துடன் காளி மார்பில் அடித்துக் கொண்டு தரையில் உருண்டாள்.

“அவன் எனக்கு குழந்தைய கொடுக்கல! ஆனா என்னை வச்சிப் பாத்தான்!”

அரோக்கியன் வந்து சேர்ந்திருந்தான். அவன் வருகையை எல்லாரும் எதிர்கொள்ளும் முன்பே அவன் அவர்களுள் ஒருத்தன்போல் நின்றிருந்தான். பாண்டியனை உடன் காணவில்லை. அரோக்கியன் ஏதும் பேசமால், ப்ராஞ்சாவில் அமர்ந்து காளியம்மன் சிலையையே வெரித்து பார்த்துக் கொண்டிருந்தான். சட்டையும் சிலுவாரும் கந்தலாகிக் கிடந்தது. அவள் புலம்பினாள். எழும்புகூடாய் மெலிந்திருந்தான்; உதடுகளில் வெடிப்பு இருந்தது; கண்களில் அழற்சி.

“பாண்டியன் எங்க?” கோவிந்தசாமி கேட்டான்.

ஆரோக்கியன் அவனுக்கு பதில்கூறவில்லை.காளி குவளையில் தண்ணீர் கொண்டு வந்து நீட்டினாள்; மறுத்து தள்ளினான்.

“அவன் எங்க?” கோவிந்தசாமி கேட்டான்.
ஆரோக்கியன் அப்போதும் காளியம்மா சிலையையே வெரித்துக் கொண்டிருந்தான். வலிமிகுந்த குரலில் பேச்சொலி வந்தது.

“நான் அந்த பெலாண்டுக்க கொன்னுட்டேன். மாரீசனைப் போல அந்த மானும் மனுசனா மாறிடுச்சி. அவன் குழம்பிப்போய் பயந்துல நடுங்கிக்கிட்டிருந்தான், நம்ம மாதிரி.”

மொழிபெயர்ப்பு : விஜயலட்சுமி
ஆங்கில மூலம் : The Pelanduk (K.S. Maniam)

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...