பொதுத்தேர்தலின் முடிவும் எழுத்தாளர் சங்கத்தின் வாக்குறுதியும்.


17990847_1534307343308070_5457568037605100123_n2017இல் எழுத்தாளர் சங்க தேர்தலுக்குப் பிறகு மன்னர் மன்னன் அவர்களுக்கு ஒரு திறந்த மடல் எழுதியிருந்தேன். ஒரு சுரண்டலுக்குக் கல்வித்துறையின் வழி அவர் சம்பாதித்த நற்பெயரை ஆயுதமாக வழங்கியிருந்ததை சுட்டிக்காட்டி எழுதப்பட்ட மடல் அது.

எழுத்தாளர் சங்க தலைவர் ராஜேந்திரன் ஒவ்வொரு முறை தேர்தலில் போட்டியிட்டு தோல்வி பயம் நெருக்கும் போது புதிதாகச் சில திட்டங்களை ஆண்டுக்கூட்டத்தில் கூறுவார். முன்பு ஒருமுறை சை.பீர்முகம்மது அவரை எதிர்த்துப் போட்டியிட்டபோது, அம்முறை தேர்தலில் தான் வென்றால் மட்டுமே ஒரு கொடையாளர் மூலம் ஒரு லட்சம் ரிங்கிட் கிடைக்கும் என்றும் அதன் மூலம் எழுத்தாளர்களின் நூல்களைத் தொடர்ந்து வெளியிட இயலும் என்றும் கூறியிருந்தார். ராஜேந்திரன் வென்றும் அது நடக்கவே இல்லை. கடந்த ஆண்டும் மு.கணேசனுக்குப் பயந்து அப்போதைய அமைச்சராக இருந்த டாக்டர் சுப்ரமணியம் மாதம் ஒன்றுக்கு ஐயாயிரம் ரிங்கிட் கொடுப்பார் என்றும் அதன் வழி மாதம் ஒரு எழுத்தாளரின் நூல்களை வெளியிடப்போவதாகவும் திட்டத்தை அறிவிக்க கூட்டம் கலைக்கட்டியது.

ராஜேந்திரன் ஒவ்வொரு தோல்வி பயத்தின் போதும் இவ்வாறான திடீர் திட்டங்களை அறிவிப்பார் என்றாலும் இந்தத் திட்டங்களின் ஆயுட்காலம் குறித்து அறியாத எழுத்தாளர்கள் அவருக்கு ஓட்டுப்போட அப்பாவியாகச் சம்மதிப்பர்.

நான் இந்தத் திட்டத்தின் பலவீனத்தை அப்போதே சுட்டிக்காட்டியிருந்தேன்.

அமைச்சர் டாக்டர் சுப்ரமணியம் பணம் கொடுப்பதற்கும் ம.இ.கா எனும் கட்சி கொடுப்பதற்கும் நிறைய வித்தியாசம் உண்டு. நிரந்தமாகப் பணம் வருவதற்கு அந்தக் கட்சியிடம் உறுதியான ஒப்புதல்கள் நடந்திருக்க வேண்டும். அப்படியான ஒப்பந்தம் கையெழுத்தான தகவல் இல்லை.
மிக விரைவில் வரக்கூடிய தேர்தலில் பாரிசான் ஆட்சியை இழந்தாலோ டாக்டர் சுப்ரமணியம் தொகுதியை இழந்தாலோ அவர் தொடர்ந்து அமைச்சரவையில் இடம் பிடிக்காவிட்டாலோ நீங்கள் கூறியபடி அவர் 5000 ரிங்கிட் வழங்குவாரா? அவர் சொந்தப்பணத்தையா கொடுக்கப் போகிறார்? அதற்கான திட்டவட்டமான முடிவு தெரிந்தால் மட்டுமே இது எழுத்தாளர்களுக்குப் பயனளிக்கும்.

அப்படி அவர் வழங்காவிட்டால் ராஜேந்திரன் கொடுத்த வாக்குறுதியைத் தேர்தலுக்கான பொய் பிரச்சாரம் என எடுத்துக்கொள்ளலாமா?

மே 2017 அன்று நான் கூறியபடியே பாரிசான் தேர்தலில் தோல்வியடைந்து ம.இ.காவும் எதிர்க்கட்சியாகி டாக்டர் சுப்ரமணியமும் இனி அக்கட்சியின் தலைவர் இல்லை எனும் நிலை உருவாகியுள்ளது. இப்போது எழுத்தாளர்களிடம் இருக்கும் கேள்வி இனியும் இத்திட்டம் தொடருமா? இத்திட்டத்தை நம்பி ஓட்டுப்போட்டவர்களுக்கான பதில் என்ன?  என்பதுதான்.

அடுத்த வரப்போகும் ம.இ.கா தலைவரின் உதவியை நாடுவதோ அல்லது இன்றைய ஆளுங்கட்சியில் உள்ள யாராவது ஒரு தலைவரின் நட்பை பத்திரிகை பலம் வழி சம்பாதித்து நன்கொடை பெறும் வேட்டையோ நடக்கலாம்தான். ஆதி.குமணன் இறந்த சில மாதங்களில் அவரை எதிரியாக நடத்திய சாமிவேலுவுடன் நட்புக்கரம் கோர்த்து தன் நூலை  வெளியீடு செய்த பெ.ராஜேந்திரனின் திறனை  யாரும் மறந்துவிடவில்லை. எனவே தேர்தலில் ம.இ.காவுக்குச் சாதகமாக  தன் பத்திரிகை வழி செயல்பட்ட அவர்  கொஞ்ச நாட்களில் இன்றுள்ள ஆளுங்கட்சி இந்திய தலைவர்களிடம் பத்திரிகை பலத்தைக் காட்டி நட்பைச் சம்பாதித்துக்கொள்ள ஆயத்தமாகியிருக்கக் கூடும்.

எழுத்தாளர்கள் இப்போதாவது விழிப்படைவார்களா என்று தெரியவில்லை. நிரந்தரமான சட்டம் என்பதற்கும் சலுகைகள் என்பதற்கும் வித்தியாசம் உண்டு என இனியாவது அவர்கள் அறிந்துகொள்வார்களா? தேர்தலில் ஓட்டுபெற ராஜேந்திரன் எழுத்தாளர்கள் முன் காட்டுவது சலுகைகள். அது எப்போது வேண்டுமானாலும் பறிக்கப்படலாம். அரசு சார்புடைய நிபுணத்துவமான பதிப்பகங்களும் விநியோகிப்பு முறையுமே இன்றைய நமது தேவை. அதை பெற எழுத்தாளர் சங்கத்தால் என்றுமே முடியாது. காரணம் எளியதுதான்.

அவ்வப்போது எலும்பை வீசினால்தான் நாய்கள் நன்றியுடன் இருக்கும் என்ற அவர்கள் எண்ணம். அதாவது தொடர்ந்து தன் அரசியல் தொடர்புகளால் மட்டுமே எழுத்தாளர்கள் நூல் பதிப்பாகும் எனும் பொய் பிம்பத்தை ஏற்படுத்துவதன் வழி எழுத்தாளர்களைத் தனக்கு விசுவாசமானவர்களாக மாற்றுவது. எதிர்ப்பு தெரிவிக்காத ஒரு கூட்டத்தை உருவாக்குவது.

மேலும் இதுபோன்ற சலுகைகளை ஏற்படுத்துவதால் தொடர்ந்து ஊடகத்தில் தான் ஏதோ செய்வதாக காட்டிக்கொள்ள வாய்ப்புகள் அதிகம். எழுத்தாளர்கள் சங்கத்தின் உதவி இன்றி தனித்து இயங்கும் ஒரு சூழல் அமைந்துவிட்டால் அவர்களது அடையாளம் உடைபடலாம். நிரந்தர தீர்வுகளால் பலவீனமானவர்கள் தங்களைத் தொடர்ந்து அடையாளப்படுத்த முடியாது.

இனியாவது இந்நாட்டின் எழுத்தாளர்களுக்குச் சிந்திக்கும் ஆற்றல் இருந்தால் அவர்கள் செய்ய வேண்டியது அரசியல் கட்சியைக் / அல்லது தலைவர்களைக் காட்டி பம்மாத்துக்காட்டும் இயக்கங்களை ஓரங்கட்டுவதுதான்.  நிரந்தரமான தீர்வுகளை நோக்கி நகரும் வழியில் சுயநலத்துக்காகச் செயல்படும் இயக்கங்களை இன்னமும் அடையாளம் காணாவிட்டால் சிறுபான்மை இனத்தின் சக்தி என்பது வணிகர்களிடம் சேவை எனும் பெயரில் மலுங்கடிக்கப்படப்போவது உறுதி.

1 கருத்து for “பொதுத்தேர்தலின் முடிவும் எழுத்தாளர் சங்கத்தின் வாக்குறுதியும்.

  1. Kaveri
    June 22, 2018 at 1:43 pm

    முற்றிலும் உண்மை. உண்மையை வெளிப்படையாகவும் தைரியமாகவும் வெளியிட / எழுத ஒரு ‘முறுக்கு’ வேண்டும். அது உங்களிடம் உண்டு.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...