மன்னர் மன்னனுக்கு ஒரு திறந்த மடல்.

மன்னர் மன்னன்மதிப்பிற்குறிய மன்னர் மன்னன் அவர்களுக்கு. தங்கள் மீது எனக்கு பெரும் மரியாதை உண்டு. தாங்கள் பல ஆசிரியர்களை உருவாக்கிய ஆசிரியர். அவ்வகையில் உங்களைப் பற்றி பெரும்பாலான ஆசிரியர்கள் நல்லனவற்றையே கூறியுள்ளனர். எனவே தாங்கள் சார்ந்த துறை மீதும் அதில் தாங்கள் காட்டிய நாட்டம் மீதும் எனக்கு மதிப்புண்டு. நீங்கள் ஒரு நல்லாசிரியர். அதேபோல தாங்கள் மலேசியத்தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவராக தேர்வானபோதும் தங்களுக்கு மனமுவந்து எனது வாழ்த்துகளைத் தெரிவித்தேன். உங்கள் மூலம் ஆரோக்கியமான மாற்றங்கள் நிகழும் என நம்பினேன்.

தாங்கள் தலைவராக இருந்த அந்த ஈராண்டுகளில் பெரிய மாற்றங்கள் ஒன்றும் நடந்துவிடவில்லை. மீண்டும் ராஜேந்திரனின் ஆதிக்கமே இருந்தது. சங்கத்தில் உங்கள் சொல்லுக்கு மரியாதை இல்லை, உங்கள் திட்டங்களுக்குப் பெரிய தடைகள் இருந்தன என்றெல்லாம் நண்பர்கள் மூலம் அவ்வப்போது கேள்விப்படுவதுண்டு. கேள்விப்படும் தகவல்களை விமர்சிக்கும் ஆயுதமாக நான் எப்போதுமே பயன்படுத்துவதில்லை. எனவே அதுகுறித்து பேச ஒன்றும் இல்லை.

இந்த நிலையில்தான் நான் அண்மையில் நடந்துமுடிந்த எழுத்தாளர் சங்க ஆண்டுக்கூட்டத்தில் கலந்துகொண்டேன். அதற்கு முன்பு சை.பீர்முகம்மது ராஜேந்திரனை எதிர்த்துப் போட்டிப்போட்டபோது கலந்துகொண்டது. அந்தத் தேர்தல் மேடையில் ராஜேந்திரன் கொடுத்த ஒரு வாக்குறுதி என் நினைவில் இன்றும் இருக்கிறது. அதாவது, யாரோ ஒருவர் மூலம் நன்கொடையாகக் கிடைக்கப்போகும் ஒரு லட்சம் ரிங்கிட்டில் தொடர்ந்து மலேசிய எழுத்தாளர்களின் நூல்களை அச்சாக்கப் போவதாகச் சொன்னார் ராஜேந்திரன். அப்படி ஒரு திட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை என உங்களுக்கும் தெரியும். ஆனால் அந்த வாக்குறுதியை நம்பி ஓட்டுப்போட்டவர்கள் பலர். அந்தக் கசப்பு இன்னும் மனதை விட்டு அகலவில்லை. சரி இம்முறை நீங்கள் இருக்கிறீர்கள். நீங்கள் ஆசிரியர்களுக்கெல்லாம் ஆசிரியர், நேர்மை பிசகாதவர், இலக்கிய அறத்தில் நம்பிக்கையுள்ளவர் என்ற தைரியத்தில் மனதைத் திடப்படுத்திக்கொண்டு பல ஆண்டுகளுக்குப் பின் ஆண்டுக்கூட்டத்துக்கு வந்தேன். பலரையும் சந்தித்தேன். மகிழ்ச்சியாகத்தான் இருந்தது.

ஆண்டுக்கூட்டத்தில் ராஜேந்திரனின் தேர்தல் பிரச்சார படத்தை ஒளிபரப்புகிறார்கள் என்று கொஞ்ச நேரத்தில் கோபப்பட்டுவிட்டேன் ஐயா. பக்கத்தில் அமர்ந்திருந்த அன்பர்தான் அது  எழுத்தாளர் சங்க ஆவணப்படம் எனக்கூறி ஆசுவாசப்படுத்தினார். எழுத்தாளர் சங்கம் என்பது ராஜேந்திரன் மூலமே மேம்பட்டது எனக்கூறும் பிரச்சாரப் படத்தை அந்த அரங்கில் ஒளிபரப்பும் அவசியம் புரியவில்லை. எவ்வித முன்முடிவும் இன்றி அப்படத்தைக் காணும் ஒருவர் ராஜேந்திரனுக்கு ஓட்டுப்போடுவது உறுதி. அந்த அளவிற்கு அதில் ராஜேந்திரனின் நாமமே படர்ந்திருந்தது.  அந்தப்படத்தில் அவ்வப்போது “சத்தியமா இது எழுத்தாளர் சங்க ஆவணப்படம்தான்டோ டொட்டடோ!” என கவுண்டமணி குரலை  ஒலிக்க வைத்திருந்தால் இதுபோன்ற தேவையில்லாத சந்தேகம் எனக்கு வராது.

அதெல்லாம் போகட்டும் ஐயா. நான் சொல்ல வந்ததே வேறு. நிகழ்ச்சியில் நீங்கள் உரையாற்றினீர்கள். அதில் இனிப்பான செய்தி என மூன்று விடயங்களைக் கூறினீர்கள். நானும் மற்றவர்களைப் போல அந்த இனிப்பைச் சுவைக்க நாக்கை நீட்டியபடி காத்திருந்தேன். நீங்கள் சொன்ன இனிப்புச் செய்தி இவைதான்.

1.மே மாதம் முதல் அமைச்சர் டாக்டர் சுப்ரமணியம் 5000 ரிங்கிட் சங்கத்துக்கு வழங்குவார். அப்பணம் மூலம் மாதம் ஒரு எழுத்தாளரின் நூல் பதிப்பிக்கப்படும்.

2. ஒருவருடத்தில் பத்து எழுத்தாளர்களுக்கு அமைச்சரே முன் வந்து எழுத்தாளர்களின் நூலை வெளியீடு செய்வார்.

3.உமா பதிப்பகத்தில் மலேசிய எழுத்தாளர்களின் நூல்கள் தனி ஒரு வரிசையில் அடுக்கிவிற்பனை செய்யப்படும்.

எல்லோரும் மகிழ்ச்சி அடைந்திருப்பார்கள். ஆனால் பாருங்கள் சின்ன வயதில் எனக்கு மூளையில் சுலுக்குவிழுந்திருக்கும்போல. என்னால் உங்கள் பேச்சில் மகிழ்ச்சி அடைய முடியவில்லை. மாறாக சில கேள்விகள் மட்டுமே எழுந்தன. ஆனால் அந்தக் கேள்விகளை அந்த அரங்கில் கேட்க இடமில்லை. சங்கம் குறித்து கேள்வி எழுப்ப ஏழு நாட்களுக்கு முன்பே கடிதம் அனுப்பியிருக்க வேண்டும் என  ஒரு சட்டம் வைத்துள்ள தாங்கள் தேர்தல் அன்று பிரச்சாரம் செய்யக்கூடாது என்ற பொதுவிதியை ஏன் மீறினீர்கள் எனப்புரியவில்லை. சரி அதையும் மன்னித்துவிடுவோம். கேள்விக்கு வருவோம்.

1. அமைச்சர் டாக்டர் சுப்ரமணியம் பணம் கொடுப்பதற்கும் ம.இ.கா கொடுப்பதற்கும் நிறைய வித்தியாசம் உண்டு. நிரந்தமாகப் பணம் வருவதற்கு அந்தக் கட்சியிடம் உறுதியான ஒப்புதல்கள் நடந்திருக்க வேண்டும். அப்படியான ஒப்பந்தம் கையெழுத்தானதா?. அன்றி, மிகவிரைவில் வரக்கூடிய தேர்தலில் பாரிசான் ஆட்சியை இழந்தாலோ டாக்டர் சுப்ரமணியம் தொகுதியை இழந்தாலோ அவர் தொடர்ந்து அமைச்சரவையில் இடம் பிடிக்காவிட்டாலோ நீங்கள் கூறியபடி அவர் 5000 ரிங்கிட் வழங்குவாரா? அவர் சொந்தப்பணத்தையா கொடுக்கப் போகிறார்? அப்படி அவர் வழங்காவிட்டால் நீங்கள் கொடுத்த வாக்குறுதியை தேர்தல் பிரச்சாரம் என எடுத்துக்கொள்ளலாமா? இப்படி ராஜேந்திரனின் சாதனை என நீங்கள் பிரச்சாரம் செய்ய மேடையில் சொன்ன விடயம் தொடர்ந்து நடக்குமா என சந்தேகிக்க வைக்கிறது.

2.5000 ரிங்கிட் என்பது என்ன கணக்கு? எல்லா வகை நூலையும் 5000 ரிங்கிட்டில் தயாரிக்க முடியுமா? அது 64 பக்க புத்தகம் என்றால் அதிகபட்சம் 3000.00 ரிங்கிட் செலவாகலாம். அப்படியானால் மீதம் 2000.00 ரிங்கிட்டை என்ன செய்வீர்கள்? சரி பணத்தை சம்பந்தப்பட்ட எழுத்தாளரிடம் கொடுப்பீர்களா அல்லது அந்தக் குத்தகையைச் சங்கமே எடுத்துக்கொள்ளுமா? இதற்கான அடிப்படை திட்ட வரையறை உண்டா?

3.தமிழ் இலக்கியம் சார்ந்த பரிட்சயம் இல்லாத டாக்டர் சுப்ரமணியம் ஒரு நூலை வெளியிடுவது அவ்வளவு பெரிய அங்கீகாரமா? மிகவிரைவில் வரப்போகும் நாட்டின் 14ஆவது பொதுத்தேர்தலுக்குச் சுப்ரமணியம் வெற்றிபெற சங்கம் அமைத்துக்கொடுக்கப்போகும் மேடை என இதை கருதலாமா? ஒருவேளை தேர்தலில் தோற்று அவர் அமைச்சராக இல்லாவிட்டாலும் தொடர்ந்து அவரை அழைப்பீர்களா?அப்படியானால் இந்த அறிய வாய்ப்பு எத்தனை ஆண்டுகளுக்கு?

4.மலேசியாவில் உள்ள ஒரு புத்தகக் கடையில் மலேசிய புத்தகத்தை விற்பனைக்கு வைப்பதுதான் உங்கள் அதிகபட்ச சாதனையா? தமிழ்நாட்டில், டெல்லியில், இலங்கையில் என உலகில் எங்கெங்கோ மலேசிய இலக்கியத்துக்குப் பீடம் அமைப்பதாகச் சொல்லும் சங்கம் மலேசியாவில் உள்ள ஒரு புத்தகக் கடையில் புத்தகத்தை விற்பனைக்கு வைப்பதை சாதனையாக சொல்வது ஆச்சரியமாக இருக்கிறது. அப்படியானால் முகமது அபு பாக்காரும் சாதனையாளர்தான். யார் அது எனக்கேட்கிறீர்களா? அவர் எங்கள் ஊரில் பிரியாணி கடை நடத்துகிறார். என்ன ஆச்சரியம் பாருங்கள், பிரியாணிக்கடையில் பிரியாணி விற்கிறார். அதுவும் மலேசிய நாட்டின் கோழிகளையும் ஆடுகளையும் கொண்டு சமைத்த பிரியாணி. மலேசிய நூல்களை மலேசிய புத்தக்கடைகளில் விற்பது சாதனை என்றால் மலேசிய கோழிகளை பிரியாணியாக்கி மலேசிய உணவகத்தில் விற்பதும் சாதனைதானே ஐயா. அடுத்தத் தேர்தலில் அவரையும் பாராட்டி ஓரிரு வார்த்தைகள் பேசிவிடுங்கள். நீங்கள் ஆசிரியர்களுக்கெல்லாம் ஆசிரியர் அல்லவா!

ஐயா, நீங்கள் கல்வியாளர். உங்களை மிரட்டியெல்லாம் யாரும் எதையும் சொல்லமலேசிய எழுத்தாளர் சங்கம் வைத்திருக்க முடியாது. நீங்கள் நல்லது கெட்டது அறிந்தவர். தேர்தலின்போது மேற்கண்டத்திட்டங்களைக் கூறி அதற்கெல்லாம் ராஜேந்திரனே காரணம் என நீங்கள் கூறிய நோக்கம் என்னவென்று உங்களுக்கே தெரியும். ஒருவேளை உங்களின் சார்புநிலையின் மேல் நியாயம் கற்பிக்கலாம். இருக்கட்டும். ஆனால் மேற்கண்ட திட்டங்களில் ஒன்று நடக்காமல் போனாலும் நீங்கள் பொறுப்பெடுப்பீர்களா? உங்கள் வாக்குறுதியை நம்பி ஓட்டுப்போட்டவர்களுக்கு ஏதேனும் பதிலைச் சொல்வீர்களா? அதிகபட்சம் உங்களால் சிரித்துக்கொண்டே ஒரு மன்னிப்புக் கேட்க முடியும்.

இந்தக் கட்டுரையால் எதுவும் மாறிவிடப்போவதில்லை என எனக்குத் தெரியும். இது ஒரு பதிவு. பொய்களைத் தூவிவிட்டு நீங்கள் எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் ஓடுங்கள். வருங்காலம் உங்களைப் பற்றி பேசும்போதெல்லாம் இந்த உண்மையையும் இணைத்தே உங்களை மதிப்பிடும். உங்கள் ஒட்டுமொத்த பொதுவாழ்வில் அழியா கறையாக இவ்வுண்மை  துருத்திக்கொண்டே இருக்கும்.

3 comments for “மன்னர் மன்னனுக்கு ஒரு திறந்த மடல்.

  1. nanthini
    May 12, 2017 at 1:40 pm

    Good critic, honesty is the best policy .

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...