துரத்தியடிக்கப்பட்டவர்களின் கதை

வல்லினம் வெளியீடாக வெளிவரவிருக்கும் கே பாலமுருகனின் ‘இருளில் தொலைந்தவர்களின் துர்கனவுகள்’ சிறுகதை தொகுப்பின் முன்னுரை

“தோட்டங்களிலிருந்து தப்பி வந்த துரத்தியடிக்கப்பட்ட தமிழர்கள் சிறுநகரங்களிலும் பெருநகரங்களிலும் இன்னமும் தங்களுக்கான இடங்களைத் தேடி அலைந்து கொண்டிருக்கிறார்கள்.”

bala.book.cover‘எழுத்தாளனின் முடிவுகள் தயக்கத்திலிருந்தும் சந்தேகத்திலிருந்துதான் உருவாகின்றன’. என்னுடைய எல்லாம் கதைகளிலும் தீர்வுகளும் முடிவுகளும் சொல்லப்படவில்லையென்றாலும், நான் சேகரித்து வைத்திருந்த ஒரு வாழ்க்கையின் அனுபவமும் அதனுள்ளே எப்பொழுதும் உருவாகும் சில ஆதாரமான கேள்விகளுமே அடர்ந்திருக்கும். இந்த மாதிரியான சில கேள்விகள்தான் ஒரு படைப்பாளனை தன் வாழ்க்கைக்குள் ஆழ்ந்து நுழைய திறப்பாக அமைந்துவிடுகிறது. இருளுக்குள்ளே வாழ்ந்து புதைந்துபோன தமிழர்களின் ஒரு காலக்கட்டத்தின் குரலே என் சிறுகதைகள். அங்கிருந்தே என் உரையாடலைக் கதைகளின் வழி தொடங்குகின்றேன்.

சிக்கல்களும் மனத்தடைகளும் ஏற்படும் போதெல்லாம் பெரும்பாலான மரபார்ந்த மனம் தீர்வுகளையும் முடிவுகளையும் நோக்கித்தான் அலை மோதும். தனக்கு மிகவும் சாதகமான தன்னைத் திருப்திப்படுத்தக்கூடிய சமப்படுத்தக்கூடிய தீர்வுகளின் பின்னால் அலையக்கூடிய ஒரு திட்டவட்டமான மனோபாவத்தைக் கொண்டிருக்கும் தருணங்களில் நான் ரொம்பவும் தப்பித்தல் நிலையையே சார்ந்திருந்தேன். பிறகொருநாளில் உருவான மிகப்பெரிய தீவிரமான வாசிப்பும் தேடலும் என்னை நோக்கி எனக்குள் பயணிக்கச் செய்தது. சிக்கல்களும் சவால்களும் நிரம்பி வழிந்த காலக்கட்டங்களில் எது எனக்கு அவசியமானதாகத் தேவைப்பட்டது? இறுக்கமான சூழலில் எனக்கு என்ன தோன்றியிருக்க வேண்டும்? எதைக் கொண்டு நான் என்னை நடைமுறையின் கொடூரத்திலிருந்தும் பழக்கம் கொடுக்கும் சோம்பல்களிலிருந்தும் விடுவித்திருக்க வேண்டும்? எதற்குப் பின்னால் நான் இதுநாள்வரையில் என்னை ஒளித்துவைத்திருந்தேன்? இப்படியான சில கேள்விகள் அடிமனதின் ஆழத்தில் சரிந்துகிடந்த என்னுடைய சில தருணங்களை உந்தி வெளியே தள்ளியதன் விளைவுதான் என் சிறுகதைகள்.

வாசிப்பின் மூலம் நான் அடைந்த வெவ்வேறான அறிதல் சாத்தியங்கள், வாழ்க்கை குறித்துக் கூர்மையான அவதானிப்புகளை ஏற்படுத்தியது. இந்தக் கூர்மை என்பதன் மீதே எப்பொழுதும் எனக்கொரு சந்தேகமும் இருக்கவே செய்தது. போலியான சில அவசரப் போர்வையைப் போர்த்திக்கொண்டு உடனடியாக புத்திஜீவியைப் போல பாசாங்கு செய்துவிடுவேனோ என்கிற அச்சமும் தடுமாற்றமும் எப்பொழுதும் எனக்குள் எரிந்துகொண்டிருக்கின்றன. அதனால் எப்பொழுதும் அறிவுரைகளையும் முடிவுகளையும் என் சிறுகதைகளின் மூலம் சாத்தியமற்றதாகவே ஆக்கியுள்ளேன். என் சிறுகதைகளைப் படித்தவர்களுக்குக் குழப்பங்களும் புரியாமையும் மிஞ்சுவதாகச் சொல்லிக் கேட்டுள்ளேன். குழப்பங்கள் எப்படி உருவாகின்றன என்கிற கேள்வி உடனே எனக்குள் முளைத்து என்னை வதை செய்தது. வாசிப்பின் தீவிரமான நகர்ச்சி ஒரு வாசகனுக்கு மிகச் சிறந்த பயிற்சியையும் ஒரு படைப்பைத் தன்னளவில் புரிந்துகொள்ளும் ஆற்றலையும் கொடுத்திருக்கும் எனும் ஒரு நம்பிக்கையை வளர்த்துக்கொண்டேன். அதனைச் சார்ந்தே புரியவில்லை எனும் சொல்பவர்களை நிராகரிக்கவும் செய்தேன்.

எனக்குத் தெரிந்த ஒரு நண்பர், அவருக்கு என் கதைகள் புரியவில்லை எனும் குற்றச்சாற்றை முன்வைத்தார். அது அவருடைய உரிமையாகக் கருதிய என்னுடைய புரிதல் அடுத்த கணமே அவரிடமிருந்து வந்த மற்றொரு எதிர்பார்ப்பின் மூலம் உடைந்தது. எனக்கு புரியும்படி கதை எழுந்துங்கள் எனும் கட்டளையைச் சொல்லிவிட்டு தான் வாசித்த கடைசி கதை 5 வருடங்களுக்கு முன் எனவும் தெரிவித்தார். அவருடைய அறியாமைக்கு முன் வாசிப்பின் சிறிய எல்லையைக்கூட தொடாத அவரது சோர்வுற்ற முயற்சியின் முன், என் படைப்பை பற்றி சொல்ல என்ன இருக்கிறது என்கிற கேள்வி முளைத்து என்னை அவரிடமிருந்து தகர்த்து ஒதுக்கியது. இப்படியான சூழலில் முதலில் படைப்பாளனைச் சீர்ப்படுத்த வேண்டும் எனக் கிளம்புவர்களின் வாசிப்பின் பின்புலம் எப்படிப்பட்டது என்கிற கேள்வியை முன்வைக்க நாம் தயாராக இருக்க வேண்டும் என்றே தோன்றுகிறது.

என் படைப்பின் ஆதாரம் எது? உன்னுடைய கதைகளின் நோக்கம் என்ன என்கிற கேள்விகள் அவ்வப்போது என்னை நோக்கி எறியப்படுவதுண்டு. இதுமாதிரியான கேள்விகள் சக படைப்பாளிகடமிருந்து வருவது மிக அரிது. பெரும்பாலும் விமர்சகர்களும் ஆய்வாளர்களும் என் படைப்பு மனதின் சலனங்களையும் குழப்பங்களையும் அறிதலுக்கான நிலைகளையும் முற்றிலும் தெரிந்துகொள்ளாமல் நேர்த்தியான விளக்கங்களை நோக்கி கேள்விகளைச் சாதாரணமாக வீசுகிறார்கள். எல்லா கதைகளுக்கும் பின்னணியில் ஆழ்ந்துகிடக்கும் படைப்பு மனதின் யதார்த்தங்கள் குறித்து அவர்களுக்குக் கலை எழுச்சிமிக்கப் பார்வை இருந்ததில்லை. அவர்களுக்கு வேண்டியது அவர்களின் ஆய்வு முறையாக மேடையில் வாசிக்கப்பட வேண்டும், அல்லது நூலாகப் பதிப்பிக்கத் தேவையான தகவல்கள் வேண்டும். இவை இரண்டிற்கும் அப்பாற்பட்டு ஒரு படைப்பாளனுக்குள் விமர்சனத்தாலும் உரையாடலிலாளும் வெளிக்கொணர முடியாத ஒரு படைப்பு மனம் இருப்பது குறித்த பிரஞ்சை விமர்சனத்துறையில் ஏற்பட வேண்டும்.

இந்த நூலில் இடம்பெற்றுள்ள எனது பெரும்பாலான கதைகள் புனைவை நோக்கி என் ஆழ்மனம் கொண்டிருக்கும் தரிசனமும் பால்ய காலத்தின் நினைவுகளும்தான். ஒரு சில கதைகள் நேர்கோட்டு கதை சொல்லும் முறையிலிருந்து விடுவித்துக் கொண்டு குறுங்கதையின் தொகுப்பாகவும், துண்டிக்கப்பட்ட காட்சிகளின் கதையாடல்களாகவும் வெளிப்படுகின்றன. இது ஒருவகையிலான கதை தொழிட்நுட்பம் சார்ந்து உணரப்பட்ட மாற்றங்கள். மற்றப்படி என் சிறுகதைகளுக்குள் என் கடந்தகால வாழ்வின் குறிப்புகளும் அந்தக் குறிப்புகளின் வழியாக என் கதையின் வெளியிலிருந்து தப்பி வெளிப்படும் உண்மையான மனிதர்களும் இருக்கிறார்கள். அவர்களைக் கண்டடைய நான் எதிர்கொண்ட முயற்சிகளையும் சவால்களையும் உடைவுகளையும் என் வாசகர்களும் அடைவதற்குத் தயாரானால் மட்டுமே என் கதைக்குள் வரமுடியும். இதுதான் வாசகனுக்கும் பிரதிக்கும் உள்ள மிக உன்னதமான புரிதல். எந்தவித முயற்சியையும் மேற்கொள்ளாமல் தன்னை மீறி சென்றுவிடுமா என ஒரு படைப்பை நோக்கி ஒருவன் கொண்டிருக்கும் குதர்க்கம் அவனை இம்மியளவு கூட படைப்பிற்குள் நகர்த்தாது.

என் சிறுகதைகளைப் பிரசுரித்து ஆர்வத்தை ஏற்படுத்திய வல்லினம், அநங்கம், உயிர் எழுத்து, மக்கள் ஓசை பத்திரிக்கை, வார்த்தை, உயிரோசை, திண்ணை இணைய இதழ்கள் என அனைத்திற்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்தச் சிறுகதைகள் உருவாவதற்கு களமாக இருந்து என்னைச் சந்தித்த என்னைச் சந்திக்க வைத்த அனைத்து மனிதர்களுக்கும் இப்படைப்பைச் சமர்ப்பிக்கின்றேன். இன்னமும் பெருநகர் வெளியில் யாருக்கும் புலப்படாமல் எங்கோ ஒரு தனிமையில் கரைந்து காணாமல் போய்க்கொண்டிருக்கும் விளிம்புநிலை மனிதர்களை நோக்கியும், குரல் நசுக்கப்பட்டு ஒதுக்கி வாழ்க்கைக்கு வெளியே தூக்கி வீசப்பட்ட தமிழர்களுக்காகவும் அவர்களின் இருளுக்குள்ளிருந்து எனது கதைகளைப் புனைகிறேன்.

இந்நூலை பதிப்பித்த வல்லினத்துக்கு எனது நன்றிகள்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...