நாவல்கள் குறித்த பகிர்வில் ஒரு புதிய பரிணாமம் – ம. நவீனின் விருந்தாளிகள் விட்டுச் செல்லும் வாழ்வு

navin.book.coverவல்லினம் பதிப்பகத்தின் புதிய வெளியீடாக ம. நவீனின் விருந்தாளிகள் விட்டுச் செல்லும் வாழ்வு எனும் கட்டுரைகளின் தொகுப்பு வெளிவரவிருக்கிறது. இந்நூலின் முன்னுரையில் நவீன் பதிவு செய்திருக்கும் கருத்துடன் இக்கட்டுரையைத் தொடங்குவது இத்தொகுப்பு குறித்து சிறந்த அறிமுகத்தினை வாசகர்களுக்கு வழங்கும்.

வாசிப்பின் புரிதல் ஒவ்வொரு கட்டத்திலும் மாறுவதுபோல் வாசிக்கும் நோக்கமும் வாசிப்பை எதிர்கொள்ளும் விதமும் அறிவின் முதிர்ச்சிக்கு ஏற்ப மாறுகிறது. அவ்வகையில் தொடர்ச்சியாக வாசிக்கும் நாவல்களில் நான் உணரும் விஷயங்களை மட்டுமே வல்லினத்தில் பகிர்ந்து கொள்ள விரும்பினேன். அது விமர்சனம் இல்லை. நான் விமர்சகனும் இல்லை. என் வீட்டிற்கு விருந்தாளியாக நுழையும் நாவல்கள் விட்டுச் செல்லும் வாழ்வின் மிச்சங்களைக் கையிலெடுத்து ஆச்சரியம் கொள்ளும் வாசகன்” என்கிறார் ம. நவீன்.

நவீன் கையிலெடுத்திருக்கும் வாழ்வின் மிச்சங்கள் ஒவ்வொரு கட்டுரையையும் வாசித்து முடிக்கும்போது நம்மையும் பற்றிக் கொள்வதே இத்தொகுப்பின் வெற்றி. பலதரப்பட்ட நாவல்கள் குறித்த 12 கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.

மலேசியாவின் மூத்த நாவலாசிரியர் அ.ரெங்கசாமியின் நினைவுச்சின்னம் நாவல் குறித்த பகிர்வு முதல் கட்டுரையாக இடம்பெற்றுள்ளது. மரண இரயில்வே என்றழைக்கப்படும் சயாம் – பர்மா இரயில் பாதை அமைப்பதில் வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லப்பட்டு வாழ்வாதாரமின்றி விடப்பட்ட தமிழர்களின் அவல வாழ்வைப் பேசுகிறது. ஒரு பகிர்வின் மூலம் அந்த மூலப் பிரதியை வாசிக்கத் தூண்டும் எழுத்து நவீனுக்கு வாய்த்திருக்கிறது. “நாம் மகத்தானதாக நம்பும் வெற்றிகள் எல்லாம் அடையாளம் தெரியாதவர்களின் தியாகங்களின் மேல்தானே ஏறி நிற்கிறது” என்ற வரிகள் நம்மை சட்டென விழித்தெழ செய்கிறது. எல்லா வெற்றிகளும் சட்டென நம்முன்னே சரிந்து வீழ்கிறது.

தொடர்ந்து  குறத்தி முடுக்கு : நாளை மற்றொரு நாளே நாவல்கள் குறித்த கட்டுரை பாலியல் தொழிலாளிகளின் சிக்கல்களைப் பேசுகிறது. அதைத் தொடர்ந்த அடுத்த கட்டுரை மீண்டும் சா. ஆ. அன்பானந்தன் மற்றும் அ. ரெங்கசாமியின் ஜப்பானியர் காலத்து வரலாற்று நிகழ்வுகள் குறித்தும் மக்களின் வாழ்வு குறித்தும் சிறந்த பகிர்வினை வழங்குகிறது.

செம்மண்ணும் நீல மலர்களும் என்ற நாவல் குறித்து மலேசிய உயர்க்கல்விக்கூடத்தில் தமிழைப் பாடமாக எடுத்து படித்திருக்கும் அனைத்து மாணவர்களும் கேள்விப் பட்டிருப்பார்கள். எம்.குமாரன் அந்த நாவலை எழுதியவர் என்று மட்டும் பலர் கேள்விப் பட்டிருப்பர். அவர் குறித்த மிக அரிய தகவல்களை நவீன் இந்தப் பகிர்வில் எழுதியுள்ளார்.

நாடு விட்டு நாடு; கருக்கு; நான் வித்யா; முள் என நான்கு வாழ்வும் வரலாறும் என்ற கட்டுரையில் நான்கு நாவல்கள் குறித்து பேசியுள்ளார். இந்த நான்கு நாவல்களும் சுயவரலாறு பேசும் ஒற்றுமையைக் கொண்டிருப்பதால் அந்த நாவல்கள் குறித்தும் ஒரே கட்டுரையில் பகிர்ந்துள்ளார். ஒவ்வொரு நாவலில் கதையையும் நவீன் மிக எளிய வார்த்தைகளில் பகிர்ந்துள்ளார். இந்த நான்கு நாவல்களையும்  கட்டாயம் வாசிக்க வேண்டும் என்ற தேடலை நவீனின் பகிர்vvவு நமக்கு ஏற்படுத்துகிறது.

ஜோ டி குருஸ் அவர்களின் ‘ஆழி சூழ் உலகு’ நாவல் குறித்த கட்டுரை அந்த முழு நாவலையும் நம் கண் முன்னே கொண்டு வந்து சேர்க்கிறது. 554 பக்கங்களை கொண்ட நாவலுக்கு எழுதப்பட்ட கனமாக செறிவான கருத்துப் பகிர்வு இதுவென கண்டிப்பாக சொல்லலாம்.

தொடர்ந்து அ.ரெங்கசாமியின் மற்றுமொரு நாவலான ‘இமையத் தியாகம்’ குறித்து நவீன் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். இதுவும் மூன்று பாகங்களைக் கொண்ட ஒரு வரலாற்று நாவலாகும். சுரண்டப்படும் தமிழர்களின் வாழ்வை மையமாக கொண்ட இந்நாவல் குறித்த கருத்தும் சிந்திக்கத் தூண்டும் வகையிலேயே இருக்கிறது.

நவீன் மிக நேர்மையாக எந்தவொரு சமரசமுமின்றி கோ. முனியாண்டியின் இராமனின் நிறங்கள் குறித்த பகிர்வினை எழுதியுள்ளார். “ ஒரு கலைப்படைப்பு என்பது சொல்ல வருவதில் இல்லை உணர்த்தவே முயல்கிறது அல்லவா” என்ற வரிகள் ஒவ்வொரு கலைப்படைப்பும் செய்ய வேண்டியதை மிகத் தெளிவாக உணர்த்திப் போகிறது. கோ. முனியாண்டி இந்நாவலில் செய்திருக்கும் பிழைகள் சுட்டிக்காட்டப்பட்டதன் வழி புதிய படைப்பாளர்கள் மீண்டும் அப்படியான தவறுகளை செய்யாமல் மிகச் சரியான தடத்தில் பயணிக்கலாம்.

தொடர்ந்து தமிழக எழுத்தாளர் ச. பாலமுருகனின் சோளகர் தொட்டி குறித்த கட்டுரையும் ப. சிங்காரத்தின் புயலிலே ஒரு தோணி குறித்த கட்டுரையும் இடம்பெற்றுள்ளன. இரு கட்டுரையும் இருவேறு தளம் குறித்து பேசுகிறது.

மலேசிய நாவல்களில் குறிப்பிடத்தக்க நாவலாக கருதப்படும் கே. பாலமுருகனின் நகர்ந்து கொண்டிருக்கும் வாசல்கள் குறித்த கட்டுரையும் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. இந்நாவலை நானும் வாசித்திருக்கிறேன். நாவலில் விளங்கிக் கொள்ள முடியாத சில சம்பவங்களுக்கு நவீனின் பகிர்வு சிறந்த பதிலினை வழங்கிப் போகிறது.

இறுதிக்கட்டுரையாக ரெ. கார்த்திகேசுவின் சூதாட்டம் ஆடும் காலம் நாவல் குறித்த பகிர்வு இடம்பெற்றுள்ளது. எவ்வாறு ரெ.கார்த்திகேசு தனது இந்த நாவலையும் இன்னபிற நாவல்களையும் நகர்த்திப் போயிருக்கிறார் என்பது குறித்த தெளிவான பார்வையினை இக்கட்டுரை வழங்குகிறது. அதன் தவறுகளையும் சுட்டிக்காட்டத் தவறவில்லை.

படைப்பு தரமானது என்பதற்கு சரியான காரணங்களை முன்வைப்பதிலும் படைப்பின் குறைப்பாடுகள் பற்றி குறிப்பிடும்போதும் அதற்கான மிக அழுத்தான காரணங்களை முன் வைப்பதிலும் நவீனின் எல்லா பகிர்வுகளும் மிக சிரத்தையெடுத்து எழுதப்பட்டிருக்கின்றன. எதிலுமே நுனிப்புல் மேயாமல் மிக ஆழமாக தேர்ந்த எடுத்துக்காட்டுகளுடன் நவீனின் ஒவ்வொரு கட்டுரையும் எழுதப்பட்டுள்ளது.

இந்த கட்டுரைகளை வாசிக்கும் போதும் வாசித்து முடித்த போதும் வாழ்வு குறித்த கேள்விகள் பல தளத்திலிருந்து எழுந்தபடியே இருக்கின்றன. இருப்பதை இருப்பது போல தராமல் அதை உள்வாங்கி மிகச் செறிவான அளவான வார்த்தைகளுடன் கூடிய இக்கட்டுரைகள் மலேசிய தமிழ் இலக்கிய வெளியில் ஓர் நம்பிக்கையை ஏற்படுத்திப் போயிருக்கிறது. தொடர்ந்து தரமான வாசிப்பை மேற்கொள்ள விரும்புகிறவர்கள் கட்டாயம் விருந்தாளிகள் விட்டுச் செல்லும் வாழ்வை வாசிக்க வேண்டும். நாவல் வாசிப்பு குறித்த உண்மையான உணர்வினையும் வாழ்வு குறித்த குறைந்தபட்ட தெளிவினையாவது இந்த கட்டுரைகள் உங்களுக்கு வழங்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *