வார்த்தைகளுக்குள் உலகைப் பூட்டி வைத்தவள்- கவிஞர் பூங்குழலியின் நிகழ்தலும் நிகழ்தல் நிமித்தமும் – ஒரு பார்வை

kulali.book.coverகவிஞர் பூங்குழலி மலேசியத் தேசிய பல்கலைக்கழகத்தின் ஆண்டு கவிதை போட்டியின் வழியே எனக்கு முதலில் அறிமுகம் ஆனார். 2007ஆம் ஆண்டு நடந்த அப்போட்டியில் பூங்குழலியின் 7 கவிதைகள் பரிசுக்குரியதாகத் தேர்வுப் பெற்று முதல் மூன்று இடங்களையும் அவரே பெற்றிருந்தார். நான் அறிந்தவரை அதுதான் மலேசிய இலக்கியப் போட்டிகளில் முதன்முறையாக நிகழ்ந்த மிகப்பெரிய சாதனையாகும். ஆனாலும், கவிஞர் பூங்குழலி ஒரு சில வருடங்களிலேயே அப்போட்டியில் பங்கெடுப்பதை நிறுத்திக்கொண்டு தன் கவிதைக்கான அடுத்த கட்டத்தை நோக்கிப் பயணிக்கத் துவங்கினார்.

நிகழ்தலும் நிகழ்தல் நிமித்தமும் என்கிற கவிதை தொகுப்பு பூங்குழலிக்கு மூன்றாவது தொகுப்பாக இருந்தாலும் மலேசியக் கவிதை நூல்களில் இந்தப் பதிப்பு அதிக கவனத்திற்குரியதாக விமர்சன சூழலில் கருதப்பட வாய்ப்புண்டு. கடந்த 4 ஆண்டுகளில் வல்லினத்தின் கலை இலக்கிய முயற்சிகளுக்குப் பிறகு மலேசிய சூழலில் தீவிர இலக்கியம் நோக்கி இடம் பெயர்ந்திருக்கின்ற வாசகச் சூழல் கட்டாயம் அனைத்து நூல்களையும் மறுவாசிப்புக்கு உள்ளாக்கும் என நம்புகிறேன். குறிப்பாக பூங்குழலியின் கவிதை நூல் வாசகனைக் கொண்டு போய் நிறுத்தும் இடம் இதற்கு முன்பு மலேசியக் கவிதைகளை அவன் வாசித்துப் புரிந்துகொண்ட நிலையை மாற்றும் என்றே நினைக்கிறேன்.

காலமும் காதலும் கண்ணீரும் இழப்பும் என கவிஞனுக்குள் வார்த்தைகளாகச் சிக்கிக்கிடக்கும் இவையனைத்தையும் அவர் மீட்டுக்கொணரும் வெளிகளே இக்கவிதைகள். பூங்குழலி தன் வார்த்தைகளுக்குள் அவருடைய நிதர்சனத்தை, அவருடைய காலத்தை, அவருடைய காதலை, அவருடைய நினைவுகளை, அவருடைய கண்ணீரை, அவருடைய அன்பைப் பூட்டி வைத்திருக்கிறார். சொற்களை உடைக்கும் திறன்மிக்க வாசகன் இக்கவிதைகளின் மீது காதல் கொள்கிறான்.

சொல்லப்பட்ட சொற்கள் சொல்லப்படாமல் விடுப்பட்ட சொற்கள் என பூங்குழலியின் கவிதைகள் முழுக்க ஒரு மிகப்பெரிய இடத்தை விட்டுச் செல்கின்றன. இந்த இடத்தை அவருடைய கவிதைகளுடன் வெகுநேரம் உரையாட முடிந்த கணத்தில் உணர்கிறேன். ஒரு கவிதை என்பது சொல்லி உணர்த்தும் பாடம் கிடையாது, சொல்லாமல் நம்மையும் உடன் இழுத்துச் செல்லும் வன்முறை எனப் புரிந்துகொள்கிறேன். அவருடைய கவிதைகளுடன் நான் அலைந்து திரிந்து வெளியேறுகையில் ஒரு மிக நீளமான நாவலைப் படித்து முடித்த அசதியுடன் நிற்கிறேன். இது கவிஞரின் மிகப்பெரிய வெற்றி என்றே கருதுகிறேன்.

தன்னுணர்வுமிக்க அவரின் கவிதைகள் அவருடைய உலகத்தின் நிஜங்களை மட்டுமே சொல்லிச் செல்கின்றன. தான் காணாத எதையும் அவர் கவிதைக்குள் வைத்து முரடு பிடிக்கவில்லை. தன் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு அவர் முன் இயங்கும் அனைத்தையும் தன் சொற்கள் வசமாக்கி அது கவிதையாகுவதை அவர் உணர்வதே ஒரு கவிதையாக இருக்கின்றது.

மலேசியக் கவிதை வாசிப்பு சூழல் என்பது அதனுடைய 90களை விட்டு வெளியேற வேண்டிய சூழல் இருக்கின்றது. வானம்பாடி புரட்சியையே சுதாரித்துக்கொண்டும், புதுகவிதை மறுமலர்ச்சியையே ருசித்துக் கொண்டும் பேசிக்கொண்டும் இருப்பவர்களின் மனப்பாவத்தை மீள்பார்வை செய்யும் தருணமாகப் பூங்குழலியின் இந்தக் கவிதை தொகுப்பு அமைகின்றது. கவிதைகளுக்குப் பாடுபொருளோ தனிப்பட்ட கருத்தாக்கமோ தத்துவக்குறிப்போ தேவையில்லை, எதெல்லாம் கவிதையாகும் என்கிற அனைத்து விதிமுறைகளையும் உடைப்பதாகப் பூங்குழலியின் இந்தக் கவிதை தொகுப்பு அமைந்துள்ளது. வல்லினத்தின் மிக முக்கியமான காலக்கட்டத்தில் தேவையான முயற்சி இது. வாழ்த்துகள்.

‘எதுவுமே எழுதத்

தோன்றாமல்

விழித்து நிற்கும்

தருணங்களில்

என் எழுத்தாகிறாய்

நீ’

– பூங்குழலி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *