இந்நாட்டின் புதிய தலைமுறை எழுத்தாளர்களில் பரவலான கவனத்திற்குட்பட்ட படைப்பாளி கே. பாலமுருகன். கெடா மாநிலத்தைச் சேர்ந்த இவர் படைப்புகள் பல, உலக தமிழ் வாசகர்களின் வரவேற்பை பெற்றுள்ளன. உள்நாட்டில் பல இலக்கிய போட்டிகளில் அவரது படைப்புகள் வாகை சூடியுள்ளன. அஸ்ட்ரோ தொலைக்காட்சி நிறுவனமும் மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கமும் இணைந்து நடத்திய நாவல் போட்டியில் இவரது ‘நகர்ந்து கொண்டிருக்கும் வாசல்கள்’ நாவல் முதல் பரிசை வென்றதோடு தஞ்சை பல்கலைக்கழகத்தின் வழி வழங்கப்படும் கரிகாற்சோழன் விருதும் பெற்று மலேசிய படைப்பாளிகளுக்கு பெருமை சேர்த்தது. பாலமுருகனின் குறிப்பிடத்தக்க மற்றொரு படைப்பு ‘தீர்ந்து போகாத வெண்கட்டிகள்’ என்னும் உலக திரைப்பட கட்டுரை நூலாகும்.
இலக்கிய பரப்பில் முழு ஈடுபாட்டுடன் இயங்கிக் கொண்டிருக்கும் கே.பாலமுருகனின் அறிய உழைப்பில் புதிய வெளியீடாக வரவிருக்கும் நூல் ‘இருளில் தொலைந்தவர்களின் துர்கனவுகள்’ என்னும் சிறுகதைத் தொகுப்பாகும். வல்லினம் வெளியீடாக வந்திருக்கும் இந்த நூல் வடிவ அமைப்பில் வெகுவாக நம்மை கவர்கிறது. அழகிய முகப்பு ஓவியத்துடனும் கச்சிதமான அளவிலும் அமையப்பெற்றிருக்கும் இந்த நூல் மொத்தம் பன்னிரெண்டு சிறுகதைகளை உள்ளடக்கியுள்ளது.
சமகால இலக்கிய நகர்ச்சியை உற்று நோக்கிவரும் வாசகர்கள் உலக அளவில், பொதுவாக இலக்கிய படைப்புகளும், குறிப்பாக சிறுகதை படைப்புகளும் அடைந்துவரும் மாற்றங்களை நன்கு அறிந்திருப்பர். பின்நவீனத்துவ சிந்தனையும் பல்வேறு இலக்கிய கோட்பாடுகளும் கதை சொல்லும் உத்தியை வெகுவாக மாற்றி அமைத்திருக்கின்றன. கதைகளுக்கான கரு, களம், உத்தி என பலவகையிலும் பரிசோதனைகளும் நவீன வெளிப்பாடுகளும் படைப்பாளிகளால் முன்னெடுக்கப்படுகின்றன. அவ்வகையில், இத்தொகுப்பில் இடம் பிடித்திருக்கும் சிறுகதைகள் நவீன கதை சொல்லும் உத்தியை ஏற்று புதுப்பாதையை அமைத்துக் கொள்கின்றன. பல கதைகள் துண்டு துண்டாக உடைக்கப்பட்டு பின் ஒன்றாய் இணைகின்றன அல்லது வாசகனே அதை கண்டடையும் பொருட்டு திறந்த முடிவுகளோடு கதைகள் முடிகின்றன. இக்கதைகளை ஒரு முறை வாசித்து முடித்ததும் உள்நாட்டு படைப்புகள் புதிய பரிணாமத்தை நோக்கி நகர்வது தெளிவாக தெரிகிறது.
2000-தாம் ஆண்டுகளில் எழுதத் தொடங்கிய கே.பாலமுருகன் இச்சிறுகதைத் தொகுப்பில் 2009 முதல் தான் எழுதி பல்வேறு இணைய ஊடகங்களிலும் அச்சு இதழ்களிலும் வந்த சிறுகதைகளில் சிறந்தவற்றை தொகுத்துள்ளார். பன்னிரெண்டு கதைகளும் பன்னிரெண்டு விதமான மனச் சலனங்களை விட்டுச் செல்லக்கூடிய ஆற்றல் வாய்ந்தவை. இக்கதைகளில் அடங்கி இருக்கும் அதே சுவை இந்நூலுக்கு அவர் எழுதியிருக்கும் முன்னுரைக்கும் இருப்பது குறிப்பிட தக்கது. “ இருளுக்குள்ளே வாழ்ந்து புதைந்துபோன தமிழர்களின் ஒரு காலக்கட்டத்தின் குரலே என் சிறுகதைகள்” என்று கூறும் அவரின் அனைத்து கதைகளிலும் மெல்ல படர்ந்திருக்கும் இருள் அசாதாரண வாசிப்பனுபவத்தை கொடுக்கின்றது. இருளானது தனி மனித மனங்களில் படிந்து கிடக்கும் அவலங்களின் குறியீடாகவும் சமுதாயத்தின் மேல் பன்னெடுங்காலமாக பலதரப்பினரும் வலிந்து புகுத்திய அசட்டுத்தனங்களின் குறியீடாகவும் பல கதைகளிலும் புகுந்து படர்ந்து செல்கிறது.
இந்நூலில் இடம் பெற்றிருக்கும் கதைகளுக்கான தலைப்புகளும் குறிப்பிடத்தக்க அதிர்வுகளை உள்ளடக்கி இருக்கின்றன. ‘தங்கவேலுவின் 10 ஆம் எண் மலக்கூடம்’, ‘பறையர்கள் இருந்ததாகச் சொல்லப்படும் வீடு’ போன்ற தலைப்புகளில் இருக்கும் எள்ளல் சமுதாய கட்டமைப்பை நோக்கிய எள்ளலாக படிமம் கொள்கிறது.
இந்நாட்டின் தமிழ் இலக்கிய வாசகர் அனைவரும் கண்டிப்பாக வாங்கி வாசிக்க வேண்டிய நூல் ‘இருளில் தொலைந்தவர்களின் துர்கனவுகள் ’ என துணிந்து கூறலாம். பல்வேறு சந்தர்ப்பங்களில் நம் கண்முன்னே கண்டும் நம் கவனத்தைக் கவராத பல நுண்ணிய நிகழ்வுகளை இக்கதைகள் போதுமான அளவு செறிவு படுத்தி புது வேகத்துடன் மீண்டும் நம்முன்னே வைக்கின்றன. நாம் முன்பு அலட்சியப் படுத்திய வாழ்க்கை, இப்போது பூதகரமாக பல்வேறு கேள்விகளை நம்மை நோக்கி வீசுகின்றது.
தொடர்ந்து தீவிர இலக்கிய முயற்சிகளை முன்னெடுத்துச் செல்லும் வல்லினம் தனது ஆண்டு நிகழ்வான கலை இலக்கிய விழாவில் கே. பாலமுருகனின் ‘இருளில் தொலைந்தவர்களின் துர்கனவுகளையும் மேலும் இரண்டு நூல்களையும் வெளியிட உள்ளது. ஆர்வமுள்ளவர்கள் தொடர்புகொள்ள ம.நவீன்: 0163194522 என்ற எண்ணுடன் தொடர்பு கொண்டு மேல்விபரம் பெறலாம்.