வாளாக மாறும் அளவுகோல்

36950874_2014690675210667_8402146561550712832_nமலேசியாவில் பன்னெடுங்காலமாக இலக்கியத்தில் இயங்கிகொண்டிருக்கும் தமிழ் எழுத்தாளர்களிடையே சுயத்தணிக்கை மனப்பான்மை அதிகம் இருப்பதை நூலகராக நான் பல தருணங்களில் அவதானித்ததுண்டு. பெரும்பாலும் குடும்பம், தோட்டம், பாலியம், காமம் என மிகச்சுருங்கிய களங்களில் அவர்கள் சிறுகதைகள் உருவாவதைப் பார்த்துள்ளேன்.

அதிகாரத்துக்கு எதிராகவோ அரசியல் ஒடுக்குமுறைகளின் எதிர்ப்புக்குரலாகவோ இனரீதியான பாராபட்சங்களுக்கு எதிர்வினையாகவோ இல்லாமல் தங்கள் மனதுக்குள் இருக்கும் ஒரு படுபயங்கர மாயச்சிறையில் எப்போதோ கைது செய்யப்பட்டு முடங்கிக்கிடப்பதுபோல அவர்கள் எழுத்துகள் அஞ்சி நடுங்கி வெளிபடுவதைச் சங்கடத்துடன் வாசித்துள்ளேன். மேலும் சிலர் இந்தியர்களுக்குள் இருக்கும் சிக்கல்களுக்கும் வரலாற்றில் எப்போதோ நிகழ்ந்துவிட்ட வன்முறைக்கும் தங்கள் ஆதங்கத்தை எழுத்தாக மாற்றுகிறார்கள். ஆனால் பல்வேறு இனம் கலாச்சாரம் அடங்கிய ஒரு தேசத்தில் வாழும் இந்தியர்களின் உண்மையான அவலம் என்ன என்று சிந்தித்தவர்களும் எழுதியவர்களும் மலேசியத் தமிழ் எழுத்தாளர்களில் மிகச்சிலரே.

அப்படி எழுத வருபவர்களின் பிரச்சாரத் தொணியாலும் சமூகத்தில் நிலவும் ஒரு அவலத்தில் உளவியலை ஆழமாக அறியாததாலும் பரந்த அரசியல், இலக்கியப் பார்வை இல்லாத்தாலும்  பல புனைவுகள் தட்டையான மொழியில் ஆழமின்றி மீந்துவிடுகின்றன. முற்போக்கு, புரட்சி, எதிர்வினை என்பதெல்லாம் மலேசியத் தமிழ் இலக்கியங்களில் தங்கள் சமூகத்துக்கு மட்டுமேயான உரையாடல்களாகச் சுருங்கிவிட்டன. இத்தகைய சூழலில்தான் கே.எஸ்.மணியத்தின் சிறுகதைகள் மொழிப்பெயர்க்க வேண்டிய அவசியம் இருப்பதை உணர்ந்தேன்.

கே.எஸ்.மணியத்தின் கதைகள் மலேசிய இந்தியர்களின் வாழ்வை பேசுகின்றன. குறிப்பாகத் தமிழர்களின் வாழ்வியலை; அவர்களோடு ஒட்டுறவாடிக் கொண்டிருக்கும் இதர சமூகங்களை; அவர்களது இருப்பை; பாரபட்சம் மிகுந்த அரசியலை; பல்லினம் வாழும் ஒரு நாட்டில் தனது இருப்பை அடையாளம் காண தவறும் அல்லது மறுக்கும் இந்தியர்களின் பிற்போக்குத்தனங்களை என கதைகள் வழி அவர் நிகழ்த்தும் உரையாடலும் விசாரணையும் விரிவானது.

இலக்கியம் மனிதவாழ்வை அதன் மெய்த்தன்மையோடு பதிவாக்கும் வேலையைச் செய்கின்றதெனில் கே.எஸ்.மணியத்தின் சிறுகதைகளும் அதைத்தான் செய்திருக்கின்றன. ஆண்டான் அடிமை முறையில் ஆண்டவனின் அத்தனை குரூர மனோபாவங்களையும் சொல்லும் அதேவேளை அடிமையின் கையாலாகாதத்தனத்தையும் இக்கதைகள் மீள மீள கேள்விக்குட்படுத்துகின்றன.

இத்தொகுப்புக்காக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் கதைகள் 1980லிருந்து 1990க்கு உட்பட்ட காலங்களில் எழுதப்பட்டவை. கதைகளில் காட்டப்படும் நிலமும் மனிதர்களும் மலாயா, சுதந்திர மலாயா, மலேசியாவென மூன்று வெவ்வேறு காலங்களைச் சுற்றி வட்டமிடுகிறது. குறிப்பாக ரப்பர் தோட்டக்காடுகள், வளர்ச்சியடைந்த மலேசியா எனும் இவ்விரு நிலக்காட்சிகளைத் தவிர்த்து தோட்டத் துண்டாடல்கள் நடந்த காலங்களில் நகரங்களின் எல்லைக்கோட்டில் கல்வி, பொருளாதாரம், நாகரீகம் அனைத்திலும் பிற்படுத்தப்பட்டவர்களாக மூட்டைப்பூச்சிகளைப்போல் இருளுள் சிறைபட்டு கிடந்த இந்தியர்களின் வாழ்வை நுட்பமான மொழியில் பதிவு செய்துள்ளார்.

சமூக பொருளாதார நீரோட்டத்தில் பெண்களின் பங்களிப்பை, இருட்டடிப்பு செய்யும் இலக்கியக் களவாணித்தனங்களுக்கு மத்தியில் பேராண்மையுடன் குடும்பத்தையும் சந்ததிகளையும் காப்பாற்றி கரைசேர்த்த பெண்களையும்,  வெறும் பெயர்களாக மட்டும் வந்துபோகும் கதாபாத்திரங்களாக இல்லாமல் இரத்தமும் சதையுமாய் இந்தியர்களின் வாழ்வில் இரண்டற கலந்துவிட்ட மலாய், சீன சமூகத்தை மிக அழுத்தமாக சித்தரிக்கும் கதைகளையும் இத்தொகுப்பில் காணமுடியும்.

இதற்குமுன் மலேசியத் தமிழ் இலக்கியத்தில் இடம்பெற தவறிய அல்லது ஒளி கம்மியே காட்டப்பட்ட மேற்சொன்ன பகுதிகளைப் பிரச்சார தொணியிலும், நேரடி கூறுமுறையிலும் பின்னலான மொழி விளையாட்டிலும் வடித்துக்காட்டி தமிழ்ப் பரப்பைக் கடந்து உலக அரங்கில் மலேசிய இந்தியர்களின் வாழ்வை விவாதப்பொருளாக்கிய கதைகள் இத்தொகுப்பிற்குள் இணைக்கப்பட்டிருக்கின்றன.

நான் மொழிப்பெயர்ப்பாளர் இல்லை. அடிப்படையில் ஒரு கட்டுரையாளர். ஆனால் தனது சமூகத்துக்காகச் சிந்தித்து அதற்காகவே எழுதியுள்ள ஒரு படைப்பாளி அவ்வினத்தின் தாய்மொழியில் படைக்காததால் தனது மக்களிடம் பரவலாகச் சென்று சேராமல் இருப்பது முறையில்லை என்ற ஆதங்கமே என்னை கே.எஸ்.மணியத்தின் புனைவுகளை மொழிப்பெயர்க்கத் தூண்டியது. எனவே என்னளவில் இது கடினமான பணியே. கட்டுரையாளருக்கென இருக்கும் மொழியில் இருந்து விலகி புனைவுக்கான மொழியில் மாறுவதென்பது ஒரு சவால். நேராகக் கோடிட பயன்படும் அளவுகோல் சட்டென கையில் ஒரு வாளாக மாறியது போல எனது மொழியை இம்முயற்சிக்காக நெகிழ்வாக்க முயன்றுள்ளேன். அம்முயற்சி வென்றுள்ளதா என வாசகர்கள்தான் சொல்ல வேண்டும்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...