விருந்தாளிகளின் வாழ்வு

வல்லினம் வெளியீடாக வெளிவரவிருக்கும்  ம.நவீன் எழுதியுள்ள ‘விருந்தாளிகள் விட்டுச்செல்லும் வாழ்வு’ எனும் கட்டுரை தொகுப்பின் முன்னுரை

navin.book.coverஉன்ன‌த‌மான‌ ஒரு நிக‌ழ்வு என்ற‌ த‌த்துவ‌த்தோடெல்லாம் வாசிப்பு என‌க்கு அறிமுக‌மாக‌வில்லை. மொழியின் சுவையே நான் புத்த‌க‌ங்க‌ளைத் தேடிப்போக‌க் கார‌ண‌மாக‌ இருந்த‌து. அதிர்ஷ்ட‌ வ‌ச‌மாக‌ என‌க்கு லுனாஸில் இருந்த‌ புத்த‌க‌க் க‌டையிலேயே வேலை கிடைக்க‌ சாண்டில்ய‌ன், க‌ல்கி, அகில‌ன், நா.பார்த்த‌சார‌தி, மு.வ‌ர‌த‌ராச‌ன், த‌மிழ்வாண‌ன், சுஜாதா, பால‌குமார‌ன், ஜெய‌காந்த‌ன், சிவ‌ச‌ங்க‌ரி, வாஸ‌ந்தி, வைர‌முத்து போன்றோரின் படைப்புகளைத் தொட‌ர்ந்து வாசிக்கும் வாய்ப்பு கிடைத்த‌து. நான் ப‌ணியாற்றிய‌ நான்கு மாத‌க் கால‌த்தில் நூற்றுக்கும் மேற்ப‌ட்ட‌ நூல்களை எந்த‌ப் ப‌ட‌ப‌ட‌ப்பும் இல்லாம‌ல் ப‌டித்து முடித்திருந்தேன். புத்த‌க‌க் க‌டை ந‌ஷ்ட‌த்தில் மூட‌ப்ப‌ட்ட‌தும் நூல்க‌ள் வாங்கும் வாய்ப்பு அச்சிற்றூரில் கிடைக்காம‌ல் போன‌து.

பின்னாளில் ஆசிரிய‌ர் ப‌யிற்சி க‌ல்லூரியில் ப‌டித்த‌ மூன்று ஆண்டுக‌ளும் பெரும் வ‌றட்சி. க‌ற்ற‌ல் க‌ற்பித்த‌லுக்கான‌ நூல்க‌ள் ம‌ட்டும் அங்கு இருந்த‌ன‌வே த‌விர‌ படைப்பிலக்கியங்கள் என்று பெரிதாக‌ எதுவும் இல்லை. நான் எப்போதோ ப‌டித்து முடித்திருந்த‌ மு.வ‌ர‌த‌ராச‌ன், க‌ல்கி அங்கொன்றும் இங்கொன்றும் இருந்த‌ன‌. ர‌ம‌ணி ச‌ந்திர‌னை 3 புத்த‌க‌ங்க‌ள் ப‌டித்த‌தோடு அலுத்துவிட்ட‌து. என‌து அறைத்தோழ‌ர் ச‌ங்க‌ இல‌க்கிய‌த்திலும் த‌னித்த‌மிழிலும் ஈடுபாடு காட்டிய‌தால் வேறு வ‌ழியில்லாம‌ல் உரையாடுவதற்காகவே அ.கி.ப‌ர‌ந்தாம‌னின் ந‌ல்ல‌ த‌மிழ் எழுத‌ வேண்டுமா தொடங்கி திருக்குற‌ள், திரும‌ந்திர‌ம் என‌ வாசித்து அவ்வ‌ப்போது பேசிக்கொண்டிருப்பேன். என்னைக் காட்டிலும் என் அறைத்தோழ‌ர் திருவ‌ருட்பாவையும் திருக்குற‌ளையும் ம‌ன‌ன‌மாக‌ச் சொல்வ‌தில் தேறியிருந்தார்.

டாக்ட‌ர் ச‌ண்முக‌சிவாவின் தொட‌ர்பு என‌க்கு சில‌ ந‌ல்ல‌ நூல்க‌ளை அறிமுக‌ம் செய்து வைத்த‌து. ஜ‌ன‌ர‌ஞ்ச‌க‌ எழுத்துக்கும் தீவிர‌ எழுத்துக்குமான‌ பேத‌ங்க‌ளை அவ‌ர் தொட‌ர்ந்து என்னிட‌ம் பேசிக்கொண்டே இருந்தார். இது நான் புத்தகத்தைத் தேர்ந்தெடுப்பதில் புதிய நுட்பத்தைக் கற்றுக்கொடுத்தது. அது அப்போது மிகத் தேவையானதாகவும் இருந்தது. கண்முன் குவிந்துகிடக்கும் புத்தகக் கூட்டத்தின் முன் தயங்கி நிர்க்கும் ஓர் ஆரம்பகால வாசகனுக்கு நிச்சயமாக ஒரு வழிகாட்டித் தேவைப்படுகிறார்.  வாசிப்பின் அடுத்த‌க் க‌ட்ட‌ங்க‌ள் தொட‌ர்பாக‌ சண்முகசிவாவிடம் ஒரு ப‌ட்டிய‌லே இருந்த‌து. ஒவ்வொரு ச‌ந்திப்பிலும் ஏதாவ‌து ஒரு புத்த‌க‌த்தை என் கைக‌ளில் கொடுத்துவிடுவார். ஜெ.ஜெ. சில‌ குறிப்புக‌ளிலிருந்து என‌து இர‌ண்டாம் க‌ட்ட‌  வாசிப்பு தொட‌ங்கிய‌தாக‌ ஞாப‌க‌ம்.

இர‌ண்டாம் க‌ட்ட‌ வாசிப்பில் முன்பு போல‌ நிதான‌ம் கைகூடி வ‌ர‌வில்லை. மிகுந்த‌ ப‌ட‌ப‌ட‌ப்பான‌ ஓர் ம‌ன‌ நிலையில்தான் வாசிப்பை மேற்கொண்டேன். கிடைக்கும் நூல்க‌ளையெல்லாம் இர‌ண்டு நாட்க‌ளுக்குள் வாசித்துவிட‌ வேண்டும் என்ற‌ முன் திட்ட‌ங்க‌ளோடுதான் வாசிப்பு நிக‌ழ்ந்த‌து. வாசிப்ப‌தும்… வாசித்தப் பிர‌திக‌ளின் எண்ணிக்கையும் ஒருவ‌கையான‌ கௌர‌வ‌ம் சார்ந்த‌ நிக‌ழ்வாக‌ மாறிக்கொண்டிருந்த‌து.

வாசிப்பும் எழுத்தும் ஆண‌வ‌த்தின் ஒரு வெளிபாடாக‌ நான் உண‌ர்ந்த‌ ஒரு த‌ருண‌ம்தான் மீண்டும் வாசிப்பை நிதான‌ப்ப‌டுத்த‌த் தொட‌ங்கினேன். ஒரு நிகழ்வில் முதன் முதலாகச் சந்தித்த சீ.முத்துசாமி அந்த நிதானத்துக்குக் காரணமாக இருந்தார். வாசிப்பின் தேவை என்ன‌ என்ற‌ கேள்வி என்னைத் திரும்ப‌ திரும்ப‌ தொந்த‌ர‌வு செய்த‌து. இந்த‌ச் ச‌மூக‌மும் உற‌வுக‌ளும் நாம் பிற‌ந்த‌திலிருந்து ம‌த‌த்தின் மூல‌மாக‌வும், ஜாதியின் மூல‌மாக‌வும், நிறத்தின் மூல‌மாக‌வும், அறிவின் மூல‌மாக‌வும் ந‌ம‌க்குள் மிக‌ ஆழ‌மாக ஏற்ப‌டுத்த‌ முய‌லும் அதே ஆண‌வ‌த்தைதான் வாசிப்பும் த‌ருகிற‌தென்றால் அத‌ன் அவ‌சிய‌ம்தான் என்ன‌ என்று என்னை நான் மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டேன்.

இல‌க்கிய‌ம் சார்ந்த‌ அறிவும் வெளிபாடும் ஏற்ப‌டுத்த‌ முய‌லும் ஆண‌வ‌த்தை அக‌ற்றிவிட்டு மீண்டும் மீண்டும் அதில் இய‌ங்குவ‌துதான் இல‌க்கிய‌த்தின் பெரிய‌ ச‌வால் என்று நினைக்கிறேன். அவ்வாண‌வ‌த்தில் விழுவ‌துதான் அத‌ன் தோல்வி. ஏற‌த்தாழ‌ எல்லா க‌லை வெளிப்பாடுக‌ளிலும் இத்த‌ன்மையே புதைந்துள்ள‌தாக உண‌ர்கிறேன். அப்புரித‌லோடு நான் நிக‌ழ்த்தும் வாசிப்பை மூன்றாம் க‌ட்ட‌மாக‌ பார்க்கிறேன். வாசிப்பின் புரித‌ல் ஒவ்வொரு க‌ட்ட‌த்தில் மாறுவ‌து போல‌ வாசிக்கும் நோக்க‌மும் வாசிப்பை எதிர்க்கொள்ளும் வித‌மும் அறிவின் முதிர்ச்சிக்கு ஏற்ப‌ மாறுகிற‌து.

அவ்வ‌கையில் தொட‌ர்ச்சியாக‌ வாசிக்கும் நாவ‌ல்க‌ளில் நான் உண‌ரும் விஷ‌ய‌ங்க‌ளை ம‌ட்டுமே வல்லினத்தில் எழுதிய ‘விருந்தாளிகள் விட்டுச்செல்லும் உலகம்’ எனும் தொடரில் பகிர்ந்துகொள்ள விரும்பினேன்.   அது விம‌ர்ச‌ன‌ம் இல்லை. நான் விம‌ர்ச‌க‌னும் இல்லை. என் வீட்டிற்கு விருந்தாளிக‌ளாக‌ நுழையும் நாவ‌ல்க‌ள் விட்டுச்செல்லும் வாழ்வின் மிச்ச‌ங்க‌ளை கையிலெடுத்து ஆச்சரியம் கொள்ளும் வாசகன். இத்தொடரில் இடம்பெற்ற ஒரு கட்டுரையை நீக்கியுள்ளேன். மறுவாசிப்பில் அந்நாவல் குறித்த விமர்சனங்கள் இத்தொகுப்புக்கு அக்கட்டுரை தேவையற்றது எனப் புரியவைத்தது. மேலும் மலேசிய நாவல்களில் சிலவற்றை நான் இத்தொகுப்பில் கவனத்துக்குக் கொண்டுவரவில்லை. குறிப்பாக, சீ.முத்துசாமியின் ‘மண் புழுக்கள்’, ரெங்கசாமியின் ‘லங்காட் நதிக்கரை’, சிதனாவின் ‘மல்லிகைகள் நிறம் மாறுவதில்லை’ என ஒரு பட்டியல் உண்டு. தொகுப்பில் சேர்க்க எழுதியே தீர வேண்டும் என அவற்றை வலிந்து வாசித்து குறிப்பெடுக்கும் அளவுக்கு கட்டொழுங்கு இல்லாத நான் மற்றொரு சந்தர்ப்பத்தில் அவை குறித்து எழுத உத்தேசித்துள்ளேன். அதேபோல மலேசியாவில் பிரபல நாவலாசிரியர்களாகக் கருதப்படும் எம்.ஏ.இளஞ்செல்வன், சை.பீர்முகம்மது, ரெ.கார்த்திகேசு போன்றவர்களின் நாவல்களை மீள் மதிப்பீடு செய்ய வேண்டிய அவசியம் உண்டு.

ஈழ நாவல்களை இப்போது கருதி வாசித்து வரும் பட்சத்தில் நாவல்கள் குறித்து எழுத வேண்டிய அவசியம் கூடியுள்ளதாகவே கருதுகிறேன். இந்தக் கட்டுரைகளை எழுத எழுத்தாளர் ஜெயமோகன் ஒரு முக்கியக் காரணி. மலேசிய வந்திருந்த அவர் இங்கு நாவல் இலக்கியம் பொருட்படுத்தும்படி இல்லை என்றார். பலரும் அதனால் கோவப்பட்டனர். ஆனால், இந்நாட்டில் இருக்கின்ற முக்கிய இலக்கியப் பிரதிகளை முன்வைத்து உரையாட வேண்டிய பொறுப்பு அதில் இயங்கும் எனக்கும் இருப்பதாக உறுத்தியது. பல நல்ல நாவல்கள் அவர்கள் கவனத்துக்குச் செல்லாமல் இருப்பது அவர்கள் தவறுமட்டுமல்ல என உணர்ந்தபோது எனக்குக் குற்ற உணர்ச்சியே மிஞ்சியது.

இந்தத் தொடரை எழுதிக்கொண்டிருக்கையில் நண்பர்களிடன் உற்சாகமான விமர்சனங்கள் வந்தவண்ணமே இருந்தன. எப்போதும்போல சண்முகசிவாவின் கருத்துகளை ஊக்கப்படுத்தின. ஜெயமோகன் சில முறை என் கருத்துகள் ஒட்டிய தனது அபிப்ராயத்தை எழுத்தின் வழி பகிர்ந்துகொண்டார். நண்பர் பாலமுருகன் மலேசிய படைப்புகள் குறித்து அதிகம் எழுதும்படி உந்திக்கொண்டே இருந்தார். சுவாமி பிரம்மானந்தாவின் தத்துவம் சார்ந்த பார்வையும் கருத்துகளும் இத்தொடரை எழுத பெரும் உதவியாக இருந்தன. அனைவருக்கும் எனது நன்றி.

குறிப்பாக இந்த ஒவ்வொரு கட்டுரையும் பிரசுரம் ஆகும் முன்பே அதை வாசித்து ‘ஏதோ குறைகிறது… இன்னும் கொஞ்சம் விரிவா எழுதுங்க’ என என்னை சோம்பலிலிருந்து மீட்கும்  மணிமொழிக்கு என் அன்பு.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...