முன்னுரை: காற்றில் அலையும் ஓசை

08picமலேசியாவில் வெளிவரும்  ‘மன்னன்’ மாத இதழுக்கு நேர்காணல்கள் செய்யத் தொடங்கியது 1999களில். அது வெகுசன இதழ். எனவே நேர்காணல்களின் நோக்கம் வாசகர்களை உற்சாகப்படுத்துவதாய் இருந்தது. எனவே சமகாலத்தைய நிகழ்வுகளின், சலசலப்புகளின் அடிப்படையில் நேர்காணல்களில் கேள்விகளை அமைத்திருப்பேன்.

‘காதல்’ இலக்கிய இதழ் தொடங்கப்பட்டபோது அதில் மாதம் ஓர் எழுத்தாளரின் நேர்காணலைப் பிரசுரிப்பதென முடிவானதும், அப்பொறுப்பை நானே ஏற்றுக்கொண்டேன். மா.சண்முகசிவா  சுபமங்களாவில் வெளிவந்த நேர்காணல்களை வாசிக்கச் சொன்னார். அவரிடம் அவ்விதழ்கள் தொகுக்கப்பட்டு சேகரிப்பில் இருந்தன. நான் அதில் சிலவற்றை வாசித்தபோது நேர்காணல் செய்வதில் எனது போதாமைகளை உணர்ந்தேன். பின்னர்  நர்மதா பதிப்பில் அவ்விதழ்களில் வந்த நேர்காணல்களின் முழுத் தொகுப்பையும் வாசித்து ஓரளவு அதன் நுணுக்களைப் புரிந்துகொண்டேன்.

‘வல்லினம்’ உருவான பிறகு நேர்காணல்களில் கூடுதல் கவனம் செலுத்தத் தொடங்கினேன். இலக்கிய இதழைப் பொறுத்தவரை அதில் இடம்பெறும் எழுத்தாளர்களின் நேர்காணல்கள் சமகால அரசியல், சமூகச் சிக்கல்களை மட்டும் பேசுவதாக அமையாமல் இலக்கிய வரலாற்றில் அவர்கள் கடந்து வந்த நினைவுகளும் முழுமையாகப் பதிவாக வேண்டும் என விரும்பினேன். தனித்த, நுண்மையான ஆய்வுகள் இன்றி, தொடர்ந்து மலேசிய இலக்கிய வரலாற்றை எழுதுபவர்கள் நகல் இயந்திரங்களாக இருந்த காரணத்தினால் ஏற்கெனவே சொல்லப்பட்ட வரலாற்றுக்கான தரவுகளையும் அதில் உள்ள இடைவெளிகளை நிரப்ப புதிய தகவல்களையும் நேர்காணல்கள் வழி உருவாக்க முடியும் என நினைத்து இப்பணியில் மும்முரம் காட்டினேன். பின்னர் அதன் நோக்கம் விரிவாகி வரலாறு, சமூகம், பண்பாடு என விரிந்தது. இவையெல்லாம் ஒன்றுடன் ஒன்று முயங்கிக்கிடப்பதை காலம் செல்லச் செல்லவே உணர முடிந்தது.

எழுத்தாளர்களின், ஆய்வாளர்களின் வாய்மொழியின் ஊடாக, நினைவுகள் ஊடாக வரலாற்றுத் தகவல்கள்களைத் திரட்டுதல் என்பதே நான் செய்யவேண்டிய பணி என்று கால ஓட்டத்தில்தான் என்னால் தீர்மாணிக்க முடிந்தது. கறாரான விமர்சன முறையின்  வழி மூத்தப்படைப்பாளிகளை கவனப்படுத்தி வரும் ஜெயமோகனின் முன்னெடுப்புகள் இச்சிந்தனை மாற்றத்துக்குக் காரணம் எனலாம். ஒட்டுமொத்த நவீன தமிழ் இலக்கியப்பரப்பை பெரும் ஆவலுடன் அணுகி தனது தனித்த பார்வையின் வழி வாசகனுக்கு ஒரு வரைபடத்தை உருவாக்கும் அவரது பணியின் முக்கியத்துவம் அறிந்தவன் நான். அவ்வாறான மலேசிய சிங்கப்பூர் தமிழ் இலக்கியத்துக்கான ஒரு வரைப்படத்தை நேர்காணல்கள் வழி உருவாக்க முயலும் எளிய முயற்சியாகவே இந்நூலைத் தொகுக்க எண்ணினேன். அதன் அடிப்படையில் இதுவரை நான் செய்த நூற்றுக்கும் மேற்பட்ட நேர்காணல்களில் இருபத்து ஐந்தை மட்டும் இந்நூலுக்கென தொகுத்துள்ளேன். ஏற்கெனவே செய்த நேர்காணல்களை மேலும் சில கேள்விகள் மூலம் மேம்படுத்தியுள்ளேன்.

இந்த நேர்காணல்கள் வழி மலேசியத் தமிழ்ச் சமூகம் கடந்த 70 ஆண்டுகளில் அரசியல், இலக்கியம், பொருளாதாரம், பண்பாடு போன்றவற்றில் எதிர்கொண்ட மாற்றங்களை, அக்காலகட்டங்களில் வாழ்ந்த படைப்பாளிகளின் அனுபவங்கள் வழி பதிவு செய்துள்ளேன்.

கதை வகுப்பு, ரசனை வகுப்பு, கு.அழகிரிசாமியின் இலக்கிய வட்டம், மாணவர் மணிமன்றம், தமிழ் இளைஞர் மணிமன்றம், முத்தமிழ் படிப்பகம், இலக்கிய வட்டச் சிற்றிதழ் குழு, இலக்கியச் சிந்தனை, நவீன இலக்கியச் சிந்தனை, அகம் என நவீன தமிழ் இலக்கியத்தை இந்நாட்டில் உருவாக்க தொடர்ச்சியாக நடந்த முயற்சிகள் பற்றிக் குறிப்பிடத்தக்க அளவு விவரங்களை பல நேர்காணல்கள் விவரிக்கின்றன. அதேபோல, சயாம் மரண இரயிலில் மலேசிய இந்தியர்கள் அனுபவித்த கொடுமைகள் முதல் ஹிண்ட்ராப் போராட்டம் உருவாக நவீன மலேசியாவில் தமிழர்கள் எதிர்கொண்டிருக்கும் இன்னல்கள் வரை சில நேர்காணல்கள் விரிவாகப் பேசியுள்ளன.

தோட்டப் பாட்டாளிகளின் வரலாறு, மலேசியத் தொழிற்சங்கத்தின் வரலாறு, மே 13 இனக்கலவரம் குறித்த நினைவுகள் என இன்னொரு பிரிவும் ஆதாரங்களுடன் இந்நூலில் பதிவாகியுள்ளது. மேலும், 1965வரை மலாயாவுடன் இணைந்திருந்த சிங்கப்பூரின் இலக்கியச் சூழலையும் அதன் வரலாற்றையும் பதிவு செய்யும் நோக்கில் சிங்கைப் படைப்பாளிகளிடம் இருந்து குறிப்பிடத்தக்க நேர்காணல்களைத் தொகுத்துள்ளேன். இதை தவிர்த்து சமகால அரசியல், கலை இலக்கிய, சமூக முன்னெடுப்பு முயற்சிகளும் இந்நூலில் இடம்பெற்றுள்ள நேர்காணல்கள் வழி ஆழமான புரிதலை உண்டாக்கும் என நம்புகிறேன்.

ஒருவகையில் இந்த நேர்காணல் எனது தொடக்ககால அபோதத்தையும் காலம் செல்லச் செல்ல உருவான முதிர்ச்சியையும் காட்டுவதாய் அந்தரங்கமாக உணர்கிறேன். அதைப் பொதுவில் அப்படியே வைப்பதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. அதேபோல தொடர்ந்து நான் மேற்கொண்டு வரும் ஆவணப்படப் பணிக்காக எடுக்கப்பட்ட நேர்காணல்களும் தொகுக்கப்பட்டுள்ளதால் இடைக்கேள்விகள் இல்லாமல் வரலாற்றுப் பதிவுகளாக மட்டுமே சில நேர்காணல்கள் உள்ளதை தவிர்க்க முடியவில்லை.   எப்படியாயினும் இவை அனைத்தும் காற்றில் அலைந்துகொண்டிருந்த ஓசைகளைச் சேர்த்து வைக்கும் முயற்சிகளே.

தனிப்பட்ட முறையில் இந்நூலை தொகுத்து முடித்தபோது தமிழவேள் கோ.சாரங்கபாணியின் மீது பெரும் மதிப்பு உருவாகியது. மலேசியாவில் தமிழர்கள் காட்டைத் திருத்தி சாலை அமைத்ததையும் இரயில் சடக்குகளை உருவாக்கியதையும் இந்நாட்டில் அவர்களது பங்களிப்பாக வரலாற்றில் சொல்வதுண்டு. கோ.சாரங்பாணியும் சாலை அமைத்துள்ளார். அது பண்பாட்டுச்சாலை. மொழி மற்றும் கலை மூலமாக அவர் அமைத்துச் சென்ற சாலையில்தான் இன்றைய மலேசிய நவீன இலக்கியம் தடையின்றி பயணிக்கிறது. அவருக்கு இந்த எளிய முயற்சி சமர்ப்பணம்.

1 கருத்து for “முன்னுரை: காற்றில் அலையும் ஓசை

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...