தேவதைகளின் குசு

6103380-288-k100822எதேச்சையாக தொலைக்காட்சி பார்க்க நேர்ந்தது. தனியார் அலைவரிசையில் பாடல் நிகழ்ச்சி ஒன்று ஒளியேறிக்கொண்டிருந்தது. வாண்டுகள் தங்கள் திறமையைக் காட்டிக்கொண்டிருந்தனர். தொகுப்பாளர்கள் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிக்கொண்டிருந்தனர். அவ்வப்போது இருவரும் நகைச்சுவை என்ற பெயரில் சில கன்றாவிகளை செய்தனர். அதில் ஒன்று, பெண் தொகுப்பாளினி கீழே குனியும்போது குசு விடும் சத்தத்தை ஒலிக்கச் செய்து அரங்கில் பார்வையாளர்களை சிரிக்க வைக்கப் போராடினார்கள். எனக்கு இது என் பல்கலைக்கழக காலத்தை நினைவுப்படுத்தியது.

பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்த நேரம் அது. ஓர் இரவு நேரத்தில் பொது அமர்வு இடத்தில் சீனியர்களும் ஜூனியர்களுமாக பேசிக்கொண்டிருந்தோம். பரக்கென்று சத்தம் கேட்க ஒரு சிலர் வேகமாக எழுந்து சென்றனர். சிலர் கண்களை ஆந்தைப்போல விரித்தப்படி ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர்.  சிலர் கண்களாலேயே சிரிப்பைப் பறிமாறிக்கொண்டனர். ஜூனியர் ஒருத்தி மட்டும் ஏதும் நடக்காததுபோல மெல்ல எழுந்து அவ்விடத்தை விட்டு அகன்றாள். அறைக்கு திரும்பியபோது, அவள் குசு விட்டதை சீனியர் ஒருவர் மற்றவர்களுக்கு  அடக்கமுடியாத சிரிப்புடன் நடித்துக்காட்டினார். இது சில நாட்களுக்கு அந்தப்பெண்ணைக் கேலி செய்ய பலருக்கும் சாத்தியங்களை உருவாக்கிக்கொடுத்தது. எனக்கும் அப்போது சிரிப்பு வந்தது. ஆனால் அச்சிரிப்பின் குரூரத்தை சுட்டிக்காட்டியது  ஒரு குழந்தைதான்.

ஒரு திருமண விருந்தில் கலந்துகொண்டபோது பெண் குழந்தைக்குத் தேவதை கவுன் அணிவித்து அசத்தியிருந்தார்கள். அவள் ஒரு மந்திரக்கோளை சுழற்றியபடி விருந்து மண்டபம் முழுவது வளம் வந்தாள். திடீரென ஒரு பெண் அப்பெண்ணை அடிக்க ஆரம்பித்தார். “வந்தா சொல்ல தெரியாதா?” எனக்கடிந்துகொண்டார். அவர் அக்குழந்தையின் அம்மாவாக இருக்க வேண்டும். பின்னர்தான் அக்குழந்தை தேவதையின் உடையுடன் மலம் கழித்துவிட்டது புரிந்தது. அக்குழந்தை தனக்கு என்ன நிகழ்கிறது எனத் தெரியாமலேயே அடிவாங்கிக்கொண்டு அழுதது.

சிறுவயதில் நமக்கு சொல்லப்பட்ட கதைகளில் வாயிலாக நமக்கு அறிமுகமான தேவதைகள்MASQUE-LOUPE-2 அதிகம். துரதிஷ்டவசமாக நமக்கு சொல்லப்பட்ட தேவதைகள் எல்லாம் ஒரே ரகம்தான். தேவதை என்பவள் யார்? எப்படிப்பட்டவள்? நாம் பார்த்திராத தேவதை பார்ப்பதற்கு எப்படி இருப்பாள்?  தேவதைக்குச், சில இலக்கணங்கள் வகுக்கப்பட்டுள்ளன. அவ்விலக்கணத்திற்குள் அடங்காத சில தேவதைகள் வேறு சில பெயர்ப்பட்டியலில் பிடாரியாகவோ அல்லது ரத்தக்கட்டேரியாகவோ வகைப்படுத்தப்படும். நமக்கு சொல்லப்பட்ட தேவதைகள் தெய்வகணம் பொருந்தியவர்கள். அவர்கள் அன்பானவர்கள். அன்பைப் போற்றுபவர்கள். சாந்தசொரூபமாக இருப்பவர்கள். அழகு நிறைந்தவர்கள். யாரையும் வசீகரிக்கக்கூடிய வாசமிக்கவர்கள். நம் கஷ்டங்களை போக்கக்கூடியவர்கள் என  இப்படியாக அடுக்கிக்கொண்டே போகலாம்.

நமக்கு சொல்லப்பட்ட, நாம் சொல்லக்கூடிய தேவதைகள் எல்லாம் நம் சமூகத்தில் நம்மோடு வாழும் பெண்கள் மீதான கட்டமைக்கப்பட்ட பிம்பம் என்றே அந்தக் குழந்தையைப் பார்த்தபோது தோன்றியது. பெண்கள் தேவதைகள். அவர்கள் இப்படித்தான் இருப்பார்கள் எனச் சொல்லிச்சொல்லி பெண் குழந்தைகள் வளர்க்கப்படுபவர்கள். பெண்கள் தங்களை தேவதையாக நினைக்கத் தொடங்கும் இடம்தான் அவர்கள் பல சங்கதிகளை தங்களுக்குள்ளேயே புதைத்துக்கொள்ளும் இடமாகவும் இருக்கின்றது.

பெண்கள் தேவதைகள் என கூறும் இச்சமூகம் அவர்களிடம் இறக்கைகளையும் எதிர்ப்பார்க்கிறது. ஆனால் அந்த இறக்கைகள் பறக்கக்கூடாது. அவை தடிமனாக அலங்கரிக்கப்பட்டிருக்க வேண்டும். அந்த இறக்கைகளைச் சுமப்பதுபோல சுமந்துகொண்டு அவர்கள் குடும்பங்களில் வளம்வர வேண்டும். பல பெண்களுக்கு அவை இறைக்கைகள் அல்ல சிலுவைகள் எனப் புரிவதே இல்லை. அந்த இறக்கைகளைச் சுமக்கும் காரணத்தினாலேயே அவர்கள் தங்கள் அற்புதமான கணங்களை மட்டும் பொதுவில் காட்டவேண்டும் என வற்புறுத்தப்படுகிறாள்.

இந்தச் சமூகம், பெண்களை எப்போதும் தன் உபாதைகளை மறைத்துக்கொண்டும் இயற்கைக்கு எதிராக வாழவும் பழக்கிவிட்டுள்ளது. பெண்ணுக்கென்று இங்கு எழுதப்படாத விதிகளும் நாகரீகமும் அவளை வேறொன்றாக காட்ட முற்படுகிறது. பெண்ணும் அதை ஏற்றுக்கொள்வதுபோல கண்புருவத்தை சீரமைத்து கால்களிலுள்ள மயிர்களை மழித்து தான் தேவதை என கற்பனையில் வாழ்கிறாள். முகப்பருக்கள் கூட அவளை பெரும் துன்பத்தில் ஆழ்த்திவிடுகிறது. அவள் கடைசிவரை மனிதனாக வாழ முயன்றதே இல்லை. விருந்தில் நான் பார்த்த குழந்தைகள்போலத்தான் இன்று பெண்களும் வாழப்பழகியுள்ளனர்.

இவ்வாறு இது இன்னும் தொடர நம்மைச் சுற்றி உள்ள நுகர்பொருள் கலாச்சாரமும் காரணமாக உள்ளது. அக்கலாச்சாரத்தை வலுப்படுத்த பெரும் வணிகர்கள் விளம்பரங்களின் மூலம் தொடர்ந்து முயன்று வருகின்றனர்.  இதன் வழி செயற்கையான அழகை உருவாக்கித்தரும் அழகு சாதன தயாரிப்பில் முன்னணி வகிக்கும் நிறுவனங்களாகின்றனர். நன்கு கவனித்தால் நமது சிற்றூரில் இதுதான் பெண்களுக்கான அழகின் அடையாளம் என நம்பப்படும் ஒன்று உலகில் எங்கோ ஒரு பெருநிறுவன குழுமத்தின் கற்பனையாகவே இருக்கும். அவர்கள் அந்தக் கற்பனையை நம்மிடம் விற்கின்றனர்.

உடல் உபாதைகள் இயற்கையானது. ஆனால் அது ஆணுக்கு மட்டும் இயற்கையானதாகவும் பெண்ணுக்கு புதுமையானதாகவும் பார்க்கப்படுவது எவ்வளவு கொடுமையானது. உடலில் உள்ள வாயு குசுவாக வெளியேறுவது இயற்கையானது. அதை உடலிலிருந்து வெளியேற்றாமல் அடக்க முயற்சிப்பதே ஆபத்தை விளைவிக்கக்கூடியது. ஆனால் இந்த ஆண் சமூகம், பெண்கள் எதிர்கொள்ளும் உடல் சார்ந்த உபாதைகளை எப்போதும் கவனத்தில் கொள்வது கிடையாது.  ஆண்கள் அதை வெளியேற்றும்போது அலட்டிக்கொள்ளாமல் கடந்துபோவதும், பெண்ணுக்கு வெளியேறும்போது அதை இயற்கைக்கு அநீதி இழைத்துவிட்டதுபோலவும் அல்லது செய்யக்கூடாத காரியத்தை செய்துவிட்டதுபோலவும் காட்டுவது கொரூரமானதுதானே! அந்தக் கொரூரத்தை நகைச்சுவை பொருளாக காட்டுவது இன்னும் எவ்வளவு கொடுமையானது?

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...