சுப்ரபாரதி மணியன் எதிர்வினையும் அசட்டுத்தனமும்

குறிப்பு: ஜனவரி வல்லினத்தில் கடவுச்சீட்டு என்னும் கள்ளச்சீட்டு எனும் தலைப்பில் கட்டுரை ஒன்று வெளியிடப்பட்டது. கடவுச்சீட்டு எனும் நாவலை எழுதிய சுப்ரபாரதிமணியன் அக்கட்டுரைக்கு தனது எதிர்வினையை அனுப்பியுள்ளார். இலக்கிய விமர்சனமாக இருக்கும் பட்சத்தில் இந்த எதிர்வினைக்கு அடுத்த மாதம் வல்லினம் தரப்பில் இருந்து பொறுமையாக பதில் கூறியிருப்போம். ஆனால் முற்றிலும் மலினமான அவதூறை தாங்கியுள்ள இந்தக் கடிதத்துக்கு உடனடியான எதிர்வினை ஆற்ற வேண்டும் என்ற நோக்கில் சுப்ரபாரதி மணியன் எதிர்வினையையும் அதன் கீழே எங்கள் பதிலையும்  இணைத்துள்ளோம். நன்றி.

கடவுச்சீட்டுவணக்கம். என் ‘கடவுச்சீட்டு’  நாவல் வெளிவந்து ஏறத்தாழ மூன்று ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் அது பற்றிய தங்கள் விசமத்தனமானக் கருத்துக்கள் உள் நோக்கம் கொண்டது, திட்டமிடப்பட்டது என நினைக்கிறேன்.

மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கம் பத்து ஆண்டுகளுக்கு முன் அங்கு  ‘நாவல் பயிற்சிப்பட்டறை’ நடத்த என்னை அழைத்தது. இந்த ‘கடவுச்சீட்டு’ நாவலையும் கோலாலம்பூரில் மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கம் வெளியிட்டது. நானும் கலந்து கொண்டேன். அன்று வெளியிட்டுப்பேசிய அதன் தலைவர் ராஜேந்திரனின் கருத்துக்களும் கட்டுரையாக வெளிவந்திருக்கிது. மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கம் மீது தங்களுக்கு உள்ளக் ‘காய்ச்சலை’ நான் அறிவேன். பெ.ராஜேந்திரன்  (மலேசியா தமிழ் எழுத்தாளர் சங்கம்) அவர்களின் முன்னுரையும் தொடர்பும் காய்ச்சலுக்கும் காரணம் என்பதும் தெரியும் . பல விடயங்கள் கேள்விப்பட்டுள்ளேன். அதன் விளைவே இக்கட்டுரை என எண்ணுகிறேன். மலேசியாவில் வாழும் பலர் இந்நாவலைப்படித்து விட்டு அபிப்ராயங்கள் சொல்லியிருக்கிறார்கள். இதில் உங்களது  திட்டமிடப்பட்ட அவதூறானது என நினைக்கிறேன்.

என் படைப்புகள் பற்றியும் என்னைப்பற்றித்தனிப்பட்ட முறையிலும் உங்களின் மரியாதைக்குறிய  எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் பலமுறை அவரின் வலைப்பக்கத்தில்  எழுதியிருப்பதைப் படித்துவிட்டு உங்கள் முடிவை இறுதியாக்கிக் கொள்ளுங்கள். அவரிடம் கேட்டும் தெரிந்து கொள்ளலாம்.

கடவுச்சீட்டு  பற்றிய கருத்துக்களுக்கு, நான் மலேசியா பற்றி கிரகித்த சில விசயங்களை இந்நாவலில் சொல்லியிருக்கிறேன்.  அவ்வப்போது அங்கு சில நாட்கள் தங்கியிருந்த  அனுபவங்களும்.  அந்நாவல் ஒரு முயற்சிதான். அது முழுமையடைந்ததா என்று பார்க்கவில்லை. முயலவேண்டும். இந்தச் சிக்கலை ஒவ்வொரு படைப்பிலும் உணர்கிறேன்.

ஒரு சாதாரண தமிழ்நாட்டுப் பெண், சாதாரண குடும்பத்தைச் சார்ந்தவள்,  மலேசியா பற்றி மனதில் கொண்டிருக்கும் கருத்து அது. பாமரக்கருத்துதுக்கள் அப்படி தானே மலேசியா நாடு பற்றி, முஸ்லிம் நாட்டு நடைமுறை பற்றி உள்ளன. தூரப்பார்வையில்  அவர்களுக்கு ஆழமாக முஸ்லீம்சட்டங்கள் பற்றித் தெரியாதே. எனக்கும் தெரியாதுதான். அவ்வளவு ஆழமாகத் தெரிந்து கொண்டு என்ன செய்யப்போகிறேன்.

நான் தங்கியிருந்த  இடங்களில்  சபேசன் காபி கடை போல் பல கடைகள் இருந்துள்ளன. 001அதை கவனித்ததால்  அதை உருவாக்கினேன். சில மலேசியா பற்றியத்திரைப்படங்கள், மலேசியா பற்றிய சில கதைகள் அக்கடைக்கு ஆதாரமாக இருந்தன. அந்தப்படங்கள் பற்றி என் வலைப் பூவில் கருத்துக்கள் உள்ளன. எல்லாப் படைப்புகளும் தன்னாலான முயற்சிகள்தான். அதையும் நான் முயன்று பார்த்துள்ளேன். அவ்வளவுதான் .இதில் வியாபாரமெல்லாம் இல்லை. 33 ஆண்டுகளாக கனவு என்ற இலக்கிய இதழ்,அதன் தொடர்பான செயல்பாடுகள்,  16 நாவல்கள் உட்பட 65 நூல்கள் என்று  தொடர்ந்த இலக்கியச் செயல்பாடுகள் என்று 63 வயதில் வந்து நிற்கிறேன்.

ரவுடிகள் சாப்பாட்டுக்கடைகள், மதுபான விடுதிகளில் அரட்டைக்காக உட்காருவது, ரகளை செய்வது , அத்துமீறல்கள் , பெண்கள்  மீதான விசமம்  போன்ற  இவற்றை சில மலேசிய சூழல் திரைப்படங்கள் ,உலகத்திரைப்படங்கள், மலேசியக் கதைகளில் கண்டிருக்கிறேன். இவ்வகைக் காட்சிகள் தமிழ்ப்படங்களிலும் சமீபமாய் அதிகரித்துள்ளன.  அதன் தாக்கமாய் அந்தச் சிறுபகுதி உள்ளது.  மலேசியச் சூழலுக்காக சில மலேயா  வார்த்தைகளைத் தேர்வு செய்திருக்கலாம். கடவுச்சீட்டுக்குப்பின், ரேகை நாவல் (பொன்னுலகம் பதிப்பகம் வெளியிட்டது) மற்றும் பிரசுரமாகாத  இன்னொரு நாவல், சமீபத்தில் எழுதி முடித்துடுள்ள 1500 பக்க நாவல் சிலுவை (சிலுவை பற்றிய விபரங்களை  இந்து போன்ற நாளிதழ்களும் வெளியிட்டுள்ளன) மத்தியில் கடவுசீட்டு நாவலில் அந்தப் பகுதி  ஞாபகப் பிசகில் உள்ளது போலாகிவிட்டது.- நினைக்கையில் சங்கடமே தருகிறது.

                                                                                                                          சுப்ரபாரதிமணியன்

மரியாதைக்குரிய எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் அவர்களுக்கு. இந்நாவல் குறித்த எங்கள் தரப்புக் கருத்து இவைதான்:

1. உங்கள் நாவலை மலேசியச் சூழலில் நடப்பதுபோல காட்ட முயன்றுள்ளீர்களே தவிர மலேசிய வாழ்வை நீங்கள் உள்வாங்கவில்லை. ஆங்காங்கு கேட்டு சேகரித்துக்கொண்ட சொற்களை ஒருவாரு தொகுத்துப் போட்டுள்ளீர்கள். ஆனால் வட்டாரச் சொற்கள் தூவப்பட்ட பிரதி அவ்வட்டார நாவலாவதில்லை.

2.  இந்த நாவலின் 132 பக்கம் தொடங்கி 136 ஆவது பக்கம் வரை நடக்கும் உரையாடலில் ஒருவர் தமிழகப் பெண் மற்றவர் மலேசியர். தன் தேசத்தைப் பற்றி விளக்கும் இடத்தில் முற்றும் முழுதான தவறான கருத்துகளைப் பகிர்கிறார். தவறு செய்தால்  தலையை வெட்டி, சவுக்கால் அடிக்கும் முஸ்லிம் நாடு மலேசியா என்பது தொடங்கி கடவுள் இல்லை என சொன்னால் வழக்கு பதிவிடுவார்கள் என்பதுவரை முற்றிலும் தவறான கருத்துகள் அந்த மலேசியப் பிரஜையால் சொல்லப்படுகிறது.

3. இந்த நாவலின் குண்டர் கும்பலை ஒட்டிய காட்சி, ‘ஆப்பே கடையில் நடந்த 236ஆவது மேசை உரையாடல்’ என்ற கே.பாலமுருகனின் குறுநாவலின் விவரிப்புகள் நகல் எடுத்ததுபோல வருகிறது.

எங்களின் இந்த எதிர்வினைக்கு உங்களிடம் இருந்து வந்த பதில்கள் இவ்வாறு உள்ளன.

1. மலேசிய எழுத்தாளர் சங்கத்துக்கும் வல்லினம் குழுவுக்கும் கருத்து வேறுபாடு உண்டு என்பதால் அவர்கள் ஆதரவில் வெளியான தங்கள் நாவலை நாங்கள் திட்டமிட்டு மறுக்கிறோம். மேலும் நீங்கள் எழுத்தாளர் சங்கத்தின் மூலம் பட்டறைகள் நடத்தியதாலேயே உங்கள் நாவலுக்கு எதிர்ப்பாக செயல்படுகிறோம்.

விளக்கம்: ஐயா நீங்கள் பெரியவர். 63 வயது என வேறு சொல்கிறீர்கள். இத்தனை வயதில் இவ்வளவு கீழ்மையான சிந்தனை இருக்குமா என்பது ஆச்சரியமாக உள்ளது. மலேசிய எழுத்தாளர் சங்கத்தில் சிறுகதை, நாவல் பயிற்சிப் பட்டறை நடத்திய எத்தனை தமிழக எழுத்தாளர்கள் எங்கள் நண்பர்கள். சங்கமே வெளியிட்ட ‘மண்புழுக்கள்’, ‘லங்காட் நதிக்கரை’ , ‘நகர்ந்துகொண்டிருக்கும் வாசல்கள்’ குறித்தெல்லாம் நாங்கள் ஆரோக்கியமான கருத்துகளை தொடர்ந்து வெளியிட்டு வருகிறோம். தாங்கள் இணையத்தில் வாசிக்கலாம். ஒரு நூலில் உள்ள வெளிப்படையான குறைப்பாட்டைச் சுட்டிக்காட்டும்போது அதிலிருந்து சாதுர்யமாக விடுபட அவ்விமர்சனத்தை தெருச்சண்டை போல மாற்ற உங்களைப் போன்ற மூத்த எழுத்தாளர்கள் முயல்வது வருந்ததக்கது.

2. தங்கள் ஆளுமை குறித்து ஜெயமோகனிடம் விசாரிக்கச் சொல்லியுள்ளீர்கள்

விளக்கம்: ஐயா, 63 வயது எழுத்தாளரான தங்களுக்குத் தெரியாததல்ல. ஒரு இலக்கிய விமர்சனம் செய்யப்படும்போது அந்தப்புனைவை எழுதியவர் யாருக்கு நெருக்கமானவர், யார் அவரைப் பற்றி புகழ்ந்துள்ளார்கள், அவர் யாருக்கு அல்லக்கை, அவர் யாருக்கு நல்லக்கை, அவரது முந்தைய முயற்சிகளை யார் பாராட்டியுள்ளனர் என கணக்கெடுப்பு செய்து முன்வைக்கப்படுவதல்ல. தாங்கள் யாராக இருந்தாலும் எங்கள் கருத்தில் மிகத்தெளிவாக இருக்கிறோம். இன்னாருக்கு பழக்கம் அதனால் விமர்சிக்கிறார்கள், நான் இன்னாருக்கு நெருக்கம் அதனால் விமர்சிக்க மாட்டார்கள் என நீங்கள் நினைப்பது அபத்தம் இல்லையா? (ஒரு சந்தேகம் ஐயா, பொன்னூலகம் உங்கள் நூலை பதிப்பதையும் தமிழ் இந்து தங்கள் நாவல் பற்றி கருத்து வெளியிட்டதையும் அந்த நாவல் 1500 பக்கம் இருப்பதையும் போகிர போக்கில் சொல்லியுள்ளீர்கள். அதை உங்கள் இலக்கியத் தகுதியாக நினைக்கிறீர்கள். அப்படி நினைத்தால் வருத்தமாக உள்ளது ஐயா.)

3. மலேசியச் சட்ட நடைமுறையை தவறாக எழுதிவிட்டு ‘ஒரு சாதாரண தமிழ்நாட்டுப் பெண், சாதாரண குடும்பத்தைச் சார்ந்தவள்,  மலேசியா பற்றி மனதில் கொண்டிருக்கும் கருத்து அது.’ என கூறியுள்ளீர்கள். மேலும் மலேசிய களத்தில் நாவல் எழுதும் தாங்கள் இந்நாட்டுச் சட்டத்தை தெரிந்து கொண்டு என்ன செய்யப்போகிறேன் எனக் கேட்டுள்ளீர்கள்.

விளக்கம் : ஐயா,  மலேசிய சட்ட நுணுக்கங்களை அறிந்துகொள்ள தங்களை நாங்கள் பணிக்கவில்லை. நாங்கள் சொல்வது, இங்கு இஸ்லாமிய சட்டம் அமுலில் இல்லை என்பதை மட்டுமே. ஆனால் உங்கள் நாவலில் அது அமுலில் உள்ளதாகச் சொல்லியுள்ளீர்கள். அதேபோல இந்த நாட்டில் தேசியக்கோட்பாட்டை எரித்ததற்காக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதே தவிர கடவுளை மறுத்ததற்காகவெல்லாம் சட்டம் பாய்ந்ததில்லை. எனவே மிக எளிதாக பெறக்கூடிய தகவல்கள் கூட உங்கள் நாவலில் தவறாக உள்ளது. மேலும் அந்த நாவலில் இக்கருத்துகளைச் சொல்பவர் ஒரு மலேசியர். எதிர்வினையில் நீங்கள் சொல்லியுள்ளதுபோல தமிழ்நாட்டுப் பெண் அல்ல. ஞாபகப் பிசக்கு என எதிர்வினையில் சொல்லியுள்ளீர்கள். அதுவாக இருக்கலாம்.

4. மலேசியத் திரைப்படங்கள், மலேசியச் சிறுகதைகளில் அந்த கே.பாலமுருகன் நாவலில் நகலெடுக்கப்பட்ட பகுதியை பார்த்திருக்கவும் வாசித்திருக்கவும் கூடும் என சொல்லியுள்ளீர்கள்.

விளக்கம்: ஒரு கதையையோ அல்லது திரைப்படைத்தையோ வாசித்தனால் அல்லது பார்த்ததனால் ஏற்படும் தாக்கத்துக்கும் அக்காட்சிகளை அப்படியே பயன்படுத்திக் கொள்வதற்குமான வேறுபாட்டை நீங்கள் நன்கு உணர்ந்திருப்பீர்கள். உங்கள் நாவலில் தெரிவது பாதிப்பு அல்ல. பயன்படுத்திக் கொள்வதுதான்.  உதாரணத்துக்கு, மூசாவில் நடந்த திருவிழா சண்டை என்பதும் பெடோங்கில் குண்டர் கும்பல் சண்டை நடந்தது என்பதும் பாலமுருகன் நாவலில் வரும் கற்பனைக் காட்சிகள். அப்படிப்பட்ட ஊர்கள் உண்மையில் மலேசியாவில் இல்லை. ஆனால் அதிசயிக்கத்தக்க வகையில் உங்கள் நாவலில் அதே ஊர்களும் சொற்களும் வருகின்றன. திருவிழாவில் நடந்த சண்டையில் கொலை நடந்ததாகவும் எழுதியுள்ளீர்கள்.  ஆப்பே காப்பிகடையின் விவரிப்பும் உங்கள் நாவலில் அப்படியே வருகிறது. கே.பாலமுருகனின் தன் நாவலில் விரிவாக எழுதிய பல காட்சிகளை உங்கள் நாவலில் சுறுக்கி பயன்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள்.

ஐயா, முதலில் கடவுச்சீட்டு ஒரு சுமாரான நாவல் என்றுகூட ஏற்றுக்கொள்ள முடியாத பிரதி. நாங்கள் இந்த நாவலின் தரம் குறித்து விவாதிக்க வரவில்லை. அப்படி இருந்தால் அது ஒவ்வொருவருக்கும் மாறுபடும். திட்டவட்டமான தகவல் பிழைகள், ஒரு நிலத்தின் நாவல் எனச் சொல்லி அதில் காட்டப்படும் ஏமாற்று வேலைகள், நகலெடுப்புகள் ஆகியவையே நாங்கள் சுட்டிக்காட்ட விரும்பியது. அதுகூட உங்களை திருத்த வேண்டும் என்பதற்காக இல்லை. யாருடன் யார் பழகுகிறார்கள் என்பதை வைத்து இலக்கிய விமர்சனத்தை முடிவெடுக்கும் உங்களிடம் அது சாத்தியம் இல்லை. எந்த தமிழ்நாட்டு எழுத்தாளன் வந்தாலும் கதைகளை கொடுத்து நூலாக்கி அதை அதிக விலை கொடுத்து ரிங்கிட்டில் வாங்க தயாராக இருக்கும் மலேசியாவின் பரிதாபத்திற்குறிய எங்கள் எழுத்தாளர்களுக்கு உண்மை நிலவரத்தைச் சொன்னோம். அவர்களுக்கு அது புரிந்தால் சரி.

வல்லினம் குழு

6 கருத்துகள் for “சுப்ரபாரதி மணியன் எதிர்வினையும் அசட்டுத்தனமும்

 1. எம்.பிரபு, பெந்தோங்.
  February 1, 2019 at 4:09 pm

  நன்று.

 2. ஸ்ரீவிஜி
  February 1, 2019 at 5:29 pm

  `நான் யார் தெரியுமா.’, என்கிற ஆதங்கத்திலேயே அவர் இலக்கியவாதி என்கிற அடையாளத்தை இழக்கிறார். யாரையும் சார்ந்திராமல் தம்பட்டமில்லாமல் தனித்து இயங்குபவரே படைப்பாளி. அவரின் எண்ண ஓட்டத்தை எதிர்வினை கடிதத்தின் மூலமாக அறிந்துகொள்ளமுடிகிறது. அது முகஞ்சுளிக்கச்செய்யும் சுயவிளம்பரமாகவே படுகிறது. படைப்பாளி quantity யில் பெருமிதம் கொள்வது எழுத்துலகில் ஆரோக்கியமற்ற சூழலை ஏற்படுத்தும்.
  எழுத்தாளர் சங்கத்தின் செயல்பாடுகளால் காழ்ப்பு என்பது மிகபெரிய நகைச்சுவை.
  எதிர்வினைக்கு அளித்த பதில் மிகுந்த மரியாதையுடன் இருப்பது மனதிருப்தியைக் கொடுக்கின்றது. வல்லினத்திற்கு வாழ்த்துகள்.

 3. மு.நிர்மலா
  February 2, 2019 at 6:20 pm

  எதிர்வினை கடிதத்தின் வாயிலாக அவர் கூறியுள்ள குற்றச்சாட்டுகள் தரமற்றவையாகவும் கோமளித்தனமாகவும் காணப்படுகிறது. இதற்கு வல்லினம் அளித்துள்ள பதில் ஏற்புடையதாகவும் மதிப்பு மிக்கதாகும் உள்ளது. வல்லினத்தின் பதில் திருப்தியளிக்கிறது. வாழ்த்துகள் வல்லினம்.

 4. மு.த.நீலவாணன்.
  February 2, 2019 at 7:26 pm

  இருதரப்பின் மொத்த கருத்தையும்
  இங்கே நான் கருத்து கூறுவதை விட
  ” ஆள் பார்த்து புகழ்வதும் ,விமர்சிப்பதும்
  எல்லா இடங்களிலும் உண்டு ” என்பதை
  பதிவிடுகிறேன் !

 5. selvakumarik
  February 3, 2019 at 12:38 am

  ஒரு படைப்பின் விமர்சனம் படைப்பாளியை நோக்கி நகர்த்தலும், படைப்பாளி பிறரை நோக்கி நகர்த்தலும் ஆரோக்கியமானதல்ல. சற்றே ஆசுவாசப்படுத்திக்கொள்ளுங்கள்..நன்றி

 6. Sunthari Mahalingam
  February 6, 2019 at 9:09 pm

  sariyaana pathiladi kodukkappatthullathu. Vaalthukkal.