எதிர்வினை

2015-01-02-How-to-Give-and-Receive-Criticismஅண்மையில் முகநூலில் வல்லினம் செயல்பாடுகள் குறித்த சில சர்ச்சைகள் எழுந்தன. பதிப்புரிமை, ராயல்டி குறித்து அவை இருந்ததால் பொது வாசகர்களின் குழப்பங்களைப் பொருட்படுத்தி அவர்கள் கேள்விகளுக்கான பதிலை வழங்கியுள்ளோம். அவதூறுகளைக் எளியக் கேள்விகளாக மாற்றி அவற்றுக்கான பதில்களை இணைத்துள்ளது மேலும் தெளிவடைய உதவும் என நம்புகிறோம். – ஆசிரியர்

வல்லினம் 100க்கு தேசிய நிலநிதி கூட்டுறவு சங்கம் 20,000 ரிங்கிட் கொடுத்தார்கள். இது குறித்து நவம்பர் 2018 வல்லினத்தில் பதிவாகியுள்ளது.

முதலில் இந்தத் தகவலே பிழையானது. தேசிய நில திதி கூட்டுறவு சங்கம் 2017இல் வல்லினம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட ‘வல்லினம் 100’ களஞ்சிய முயற்சியைக் கண்டு பாராட்டி, அதில் அடங்கியுள்ள எங்களின் முன்னெடுப்பில் நம்பிக்கை வைத்து, அவ்வமைப்பின் மூலமாக 2018இன் இறுதி கலை இலக்கிய விழாவுக்கு 20,000 வெள்ளி நிதியுதவி வழங்கியது. அதாவது 2018இல் வெளியிடப்பட்ட 10 நூல்களுக்கும் 4 ஆவணப்படங்களுக்குமான நன்கொடை அது. அதையொட்டி அவர்கள் வழங்கிய கடிதத்திலேயே தெளிவாக எழுதப்பட்டுள்ளது. நவம்பர் 2018 கட்டுரையில் அதைத்தான் குறிப்பிட்டுள்ளோம். அறிய விரும்புபவர்கள் வாசிக்கலாம்: (https://vallinam.com.my/version2/?p=5837)

வல்லினத்தில் வெளிவந்த படைப்புகளை தேர்ந்தெடுத்து ‘வல்லினம் 100′ என்கிற தலைப்பில் ஒரு புத்தகம் போட்டார்கள்.

இதுவும் தவறானது. வல்லினம் 100 களஞ்சியத்தில் 50% படைப்புகள் இந்தக் களஞ்சியத்திற்கென்றே எழுதப்பட்டவை. அனைத்துமே வல்லினத்தில் வெளிவந்தவை அல்ல. 2017 செப்டம்பருக்குப் பின் வல்லினம் 100இல் படைப்புகள் வல்லின அகப்பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதைப் பார்க்கலாம்.

அதில் போட்டியில் வென்ற சிறுகதைகளும் இடம்பெற்றுள்ளன. அந்தப் புத்தகத்தின் மூலம் வல்லினமும் நவீனும் ஈட்டிய பல ஆயிரம் வெள்ளி பணத்துக்குரிய ராயல்டி தொகையை எந்த எழுத்தாளர்களுக்கும் இப்போது வரை கொடுக்கவில்லை.

இதுவும் அவதூறான கருத்துதான். வல்லினம் 100க்காக பல படைப்பாளிகளிடம்  படைப்புகள் பெறப்பட்டன. சில குறிப்பிட்ட தலைப்புகளை வழங்கி ஆராய்ந்து கட்டுரை எழுதவும் பணிக்கப்பட்டது. இவ்வாறு கேட்டு எழுதப் பணிக்கப்பட்ட ஒவ்வொரு கட்டுரைக்கும் 250 ரிங்கிட் நூல் வெளிவரும் முன்பே வழங்கப்பட்டது.

இது ஒருபுறம் இருக்க,  சிறுகதைப் போட்டியின் அறிவிப்பில் படைப்புகளை நூலாக்கம் செய்ய வல்லினம் முழு உரிமை பெற்றிருக்கும் என்று மிகத் தெளிவாகவே கூறியுள்ளோம். போட்டியில் பங்குபெற்று பரிசு வழங்கப்பட்டபின்னர், அச்சிறுகதையின் உரிமம் வல்லினத்திற்கு உரியதாக இருக்கும்பட்சத்தில் அக்கதையை எத்தனை முறை எங்கும் பதிப்பிக்க வல்லினம் பதிப்பகத்திற்கு உரிமை உண்டு. அதன் அடிப்படையில் ‘வல்லினம் 100’ நூலில் வெற்றிபெற்ற கதைகள் சேர்க்கப்பட்டன. உண்மையை அறிய விரும்புபவர்கள் வாசிக்கலாம்: (https://vallinam.com.my/version2/?p=2928)

அந்த புத்தகத்தின் மூலம் பெறப்பட்ட இருபதாயிரம் ரிங்கிட் உட்பட எந்த விற்பனை கணக்கும் காட்டப்படவில்லை.

வல்லினம் பதிவு பெறாத ஓர் இலக்கியக்குழு. எனவே எங்கள் செயல்பாட்டுக்காக யாரிடமிருந்தெல்லாம் பண உதவி பெற்றோமோ, அவர்களுக்கு நிகழ்ச்சி முடிந்து முழு கணக்கறிக்கையை சமர்ப்பித்தோம். பூவன், சுவாமி பிரம்மானந்தா, டாக்டர் சண்முக சிவா போன்ற தனி மனிதர்களுக்கும், மை ஸ்கில்ஸ், தேசிய நில நிதி கூட்டுறவுச் சங்கம் போன்ற அமைப்புகளுக்கும் வல்லினத்தின் இறுதி கலை இலக்கிய விழாவின் முழு வரவு செலவு விவரங்கள் அனுப்பப்பட்டன. அதற்குப் பிறகு நடந்த ஆசிரியர்களுக்கான சிறுகதை போட்டியிலும் இதையே கடைப்பிடித்தோம். (எப்போதுமே அப்படித்தான்) நிகழ்ச்சி முடிந்து ஒரு வாரத்திற்குள் வரவு – செலவுக் கணக்கு தெளிவாக வழங்கப்படும். அதே சமயம் கலை இலக்கிய விழா 10இல் வெளியிடப்பட்ட நூல்களுக்கும் 20% ராயல்டி நூல் வெளியீட்டுக்கு முன்னமே நூலாசிரியர்களுக்கு வழங்கப்பட்டது.

வல்லினம் இலங்கை, தமிழகம், சிங்கப்பூரில் வல்லினம் 100ஐ விற்று சம்பாதித்தது.

அப்படிச் செய்வது தவறில்லைதான். எப்படியானாலும் நூல் ஒரு பண்டம். பண்டத்தை விற்பதுதானே முறை. ஆனால் உண்மை வேறாக இருக்கும்போது விளக்க வேண்டிய அவசியம் உள்ளது. தமிழகத்தில் உள்ள ‘யாவரும் பதிப்பகத்திடம்’ சுமார் 30 நூல்கள் இலவசமாகவே வழங்கப்பட்டது. இதன் முக்கிய காரணம் மலேசியாவின் சமகால இலக்கியம் அங்குள்ள வாசகர்களிடம் சென்று சேர வேண்டும் என்பதே. அதேபோல சிங்கையில் நண்பர் ஷாநவாஸ் கேட்டுக்கொண்டதின் பேரில் 50 நூல்களை அனுப்பி வைத்தோம். அன்பின் பேரில் மலேசியச் சிறுகதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த (Children of Darkness) சிங்கையின் மொழிப்பெயர்ப்பாளருக்கு விற்பனையான பணத்தை அப்படியே ஷாநவாஸ் மூலம் கொடுக்கப் பணித்தோம். ஈழத்தில் மலேசிய பணம் 30 ரிங்கிட்டுக்கு 70 ரிங்கிட் மதிப்புள்ள நூல்களை அறிமுகக் கூட்டங்களில் விற்பனைக்கு வைத்தோம்.

சரி. இப்போது பலரும் தெளிவடைந்திருக்கலாம். இத்தனை தெளிவாக விளக்கியபிறகும் வசை பாடுபவர்களின் குரல்கள் ஓயுமா என்றால் நிச்சயம் ஓயாது. ஆகவே இந்த விளக்கங்கள் அவதூறுகள் பரப்புவதை நோக்கமாக கொண்டவர்களுக்கும் அந்த அவதூறுகளில் மகிழ்ந்து முதுகுசொறிந்து மகிழ்ந்து கொள்பவர்களுக்கும் பயன்படாது என்பதை அறிவோம்.  இந்த அவதூறு எழுந்த பிறகு அதன் உண்மையை அறியமுடியாமல் குழப்பத்தில் இருப்பவர்களுக்கு மட்டுமே.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...