அறியப்படாத வரலாற்றில் அறிந்த மனிதர்கள்

6_5661மலேசிய வரலாற்றில் சுதந்திர காலப்போராட்டங்களையும்,அதற்குப் பிந்திய வாழ்க்கையையும் பலர் நாவலாக புனைந்துள்ளார்கள். அவ்வகை புனைவுகள் பெரும்பாலும் இந்தியர்களை மையப்படுத்திய கதைகளாகவும், கற்பனை அதிகம் கலக்கப்பட்ட மேலோட்டமான கதைகளாகவும் மட்டுமே அமைந்திருக்கின்றன. மலேசிய மக்களின் வாழ்வு என்றால் ஜப்பானிய, ஆங்கிலேயர்களின் ஆட்சியில் நடந்த கொடுமைகள், தோட்டப்பாட்டாளிகளின் கதைகள் என்ற கதைக்களத்திலேயே நான் வாசித்த பெரும்பான்மை நூல்கள் இருந்தன. எல்லா நாவல்களிலும் ஒரே மாதிரியான கதையோட்டமாகவே இருந்த காரணத்தினால் ஒரு கட்டத்தில் அத்தகைய புனைவுகளை வாசிப்பதில் ஆர்வம் குன்றிப் போனது.

அ.பாண்டியன் எழுதியுள்ள ‘ரிங்கிட்’ குறுநாவல் மலேசிய மண் சார்ந்த வாழ்வியலை வேறொரு கோணத்தில் கொண்டு சென்றிருக்கிறது. சில மரபுகளையும், தேய்வழக்குகளையும் உடைத்துள்ளது. பலர் அறிந்திராத ஒரு போராட்டத்தையும், அதைச் சார்ந்த வாழ்க்கையையும் சொல்கிறது. மலாய் குடும்பத்தின் பாரம்பரியத்திலிருந்து கதையை நகர்த்திச் செல்லுதல் புதுமையானது. மலாய்க்காரர்களின் வாழ்க்கை முறையை நன்கு கூர்ந்து கவனித்து எழுதியிருக்கிறார். பிலாச்சான் சம்பல், ரெண்டாங், மரவள்ளிக்கிழங்கு என உணவு முறை தொடங்கி, அவர்களின் உடை, வசிப்பிடம், தொழில் அனைத்தையும் நுணுக்கமாக பதிவு செய்துள்ளார். அதே வேளையில் சீனர்கள், இந்தியர்களின் வாழ்க்கை முறையையும் அழுத்தமாய் பதிவு செய்திருக்கிறார்.

பொதுவாகவே காதல், குடும்பம் சார்ந்த புனைவுகளை எழுதுதல் எளிதானது. கற்பனையிலேயே பெருமளவு கதையை உருவாக்கிவிட முடியும். ஆனால் ஒரு வரலாற்றை எழுதும்போது அதில் கற்பனையைவிட நிதர்சனமே மேலோங்கியிருக்கவேண்டும். பாண்டியனின் உழைப்பையும், தேடலையும் இக்கதையில் பார்க்கமுடிகிறது.

ஹசானின் பேத்தி ஆய்ஷாவின் அறிமுகத்தில் தொடங்குகிறது இந்நாவல். தலைநகரில் பணிபுரியும் ஆய்ஷா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தாத்தா ஹசானை நினைத்துப் பார்க்கிறாள்.

கம்போங் காஜா பூத்தேவில் ஒரு மளிகைக்கடை வைத்திருக்கும் ஹசானின் வாழ்க்கையின் ஊடாக கதை பயணிக்கிறது. சிறுவனாக இருக்கும்போது கம்யூனிஸ்டுகளை அப்பா டாவூட் எதிர்ப்பதைப் பார்த்து வளர்ந்தவன். அதனால் அவனுக்குள்ளும் சீனர்கள் ஆபத்தானவர்கள் என்ற எண்ணம் வலுவாகப் பதிகிறது. பெரியவனானபிறகு, இராணுவத்தில் சேரவேண்டும் என்ற லட்சியம் அவன் தாயால் தடைப்பட்டுப்போகிறது. இருந்தாலும் தன்னை ராணுவனைப் போன்று வீரமிக்கவனாக வரித்துக்கொள்ளும் ஹசான் வேட்டைக்குப் போவதன் வழி தன் வீரத்தை வெளிப்படுத்துகிறான். மலேசிய நாட்டைக் காக்கும் ஆற்றலும்,உரிமையும் தன் இனத்துக்கு மட்டுமே உண்டு என்ற நிலைப்பாட்டில் இருக்கிறான் அவன்.

அச்சமயம் (1967) பிரிட்டிஷ் நாணயத்தின் மதிப்பு 15 சதவிகித வீழ்ச்சியை அடைவதோடு, புதிய நாணயம் அறிமுகப்படுத்தப்படும் முயற்சியும் மேற்கொள்ளப்படுகிறது. அடித்தட்டு மக்கள் முதல் பெரிய வியாபாரிகள் வரை பலருக்கும் அச்சம் தரும் விசயமாக அந்த மாற்றம் அமைகிறது. மலாய்க்காரர்களுக்கும் அதிருப்தி என்றாலும் அவர்கள் அரசுக்கு எதிராக எதையும் செய்ய விரும்பாதவர்களாக இருக்கிறார்கள். அப்படி செய்தால் நாடு சீனர்களின் வசம் போய்விடும், தங்கள் உரிமைகள் பறிபோகும் என்ற ஐயம் அவர்களுக்கு.

இன்னொரு பக்கம் சீனர்களின் தலைமையில் தொழிலாளர் கட்சி ஒன்று அமைதியான முறையில் அரசை எதிர்க்க எண்ணுகிறது. கடையடைப்பு போராட்டத்தை மேற்கொள்ள எண்ணி,அறிக்கைகளை தயார் செய்கிறது.

சிலர் கடையை மூட சம்மதித்தாலும், சிறு அங்காடிகாரர்கள் கடையை அடைக்க தயாராக இல்லை. அன்வாரும் அவர்களில் ஒருவன். கர்ப்பிணி மனைவிக்காகவும், நோன்புப் பெருநாள் கொண்டாட்டத்திற்கான செலவினங்களுக்காகவும் பணம் சேமித்தாக வேண்டிய கட்டாயத்தில் அவன் இருக்கிறான். எனவே மேலும் சிலரோடு சேர்ந்து அந்தக் குறிப்பிட்ட தினத்தில் கடையைத் திறந்தே வைக்கிறான். அது சில சீனர்களுக்கு கோபத்தை ஏற்படுத்துகிறது. அமைதியான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போராட்டம் வேறு விதமாகி வன்முறையில் முடிகிறது. சீனர்களிடம் அடிவாங்கிய பழக்கடைக்காரனும், அப்பம்பால் வியாபாரியும் இறந்துவிட மலாய்க்காரர்களின் கோபம் அதிகமாகிறது. பழிக்குப் பழி வாங்க அவர்களும் கண்ணில்பட்ட சீனர்களைத் தாக்குகிறார்கள். சீனர்களும் பதிலுக்கு மலாய்க்காரர்களைத் தாக்குகிறார்கள். இத்தாக்குதலில் ஹசானும் அடி வாங்குகிறான். அவனால் அவர்களை எதிர்த்துப் போராட முடியவில்லை. கண்ணெதிரே தன் இனத்து சகோதரன் தாக்கப்பட்டு இறக்கும்போதும் இவனால் ஒன்னும் செய்யமுடியவில்லை. உயிருக்கு பயந்து அவ்விடத்தைவிட்டு ஓடி ஒளிகிறான்.

இராணுவ வீரனைப் போன்று மிடுக்காக திரிந்த ஹசானுக்கு அது பெரும் அவமானமாக தோன்றுகிறது. வலிமையானவர்களை எதிர்க்கமுடியாத ஹசான் சீனக்கிழவி ஒருத்தியை அடித்துக்கொன்று தன் வன்மத்தைப் போக்கிக்கொள்கிறான். அக்கிழவியின் பேத்தியைக் கொல்ல மனமில்லாமல் வீட்டுக்கு தூக்கிவந்து பாத்திமா என பெயரிட்டு வளர்க்கிறான்.

பாத்திமா வளரும்போது தன் தோற்றத்திலுள்ள வேற்றுமையை உணர்கிறாள். சிறு தவறு செய்தாலும் கம்யூனிஸ்டுகளோடு ஒப்பிட்டு அவள் தாய் தூற்றுவதால் அவள் தன்னை மலாய்க்கார பெண்ணுக்கு ஈடாக மாற்றிக்கொள்ளும் பெருமுயற்சியில் இறங்குகிறாள். அவளது கணவன் அவளை விட்டுவிட்டு ஓடியதும், அவளையும் அவளது இரு குழந்தைகளையும் ஹசான்தான் கவனித்துக்கொள்கிறார். பாத்திமா இறந்தபிறகு அவளின் குழந்தைகளை வளர்க்கிறார். இருவரில் எஞ்சிய குழந்தைதான் ஆய்ஷா.

கதை முடிவில் நினைவு தப்பிய நிலையில் ஹசான் கடைசித் தருணத்தில் இருக்கிறார்.

இந்நாவலின் வழியே நான் கண்டது அச்சத்தைதான். கதையின் பல இடங்களில் கதாபாத்திரங்கள் ஏதோ ஒரு விசயத்திற்கு அஞ்சிக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஜப்பானியர்களைக் கண்டு மிரளும் பெண்களின் அச்சம், மகனின் பாதுகாப்பு குறித்த ஹசானின் தாயின் அச்சம், கணவனின் உயிர் குறித்து ஆறுமுகத்தின் மனைவியின் அச்சம், வேட்டையாடப்போகும்போது குட்டிகளோடு இருந்த புலியைப் பார்த்த ஹசானின் அச்சம், மலாய் சமுதாயம் தன்னை ஒதுக்கிவிடுமோ என்ற பாத்திமாவின் அச்சம், இந்நாட்டில் தன் எதிர்காலம் குறித்த கதிரேசனின் அச்சம், வன்முறைப் போராட்டத்தின்போது சிலருக்கு ஏற்படும் உயிர் மீதான அச்சம் என பல இடங்களில் அச்சம் பிரதானமாய் இருக்கிறது.

பிரிட்டிஷ் டாலரின் வீழ்ச்சியாலும்,புதிய நாணயத்தாலும் சந்திக்கப்போகும் நில நெருக்கடி குறித்த அச்சமும், சீனர்கள் நாட்டைக் கைப்பற்றிவிடுவார்களோ என்ற அச்சமும் பேரச்சமாக எழுந்து ஒரு பெரும் வன்முறைக்கு வித்திடுகின்றது.

இக்கதையில் நாட்டின் வளர்ச்சியும், உருமாற்றமும் ஆங்காங்கே காட்டப்பட்டு வருகின்றன. முதல் அத்தியாயத்தில் கம்போங் காஜா பூத்தே மசூதியை புத்ராஜெயாவோடு ஒப்பிடுதல் தொடங்கி, விரைவு ரயில்களின் சேவை, பினாங்கில் கட்டப்பட்ட புதிய பேரங்காடி, காளியப்பனின் முடி திருத்தும் கடை ஆகியவற்றின் ஊடே நாட்டின் பரிணாம வளர்ச்சியும் பயணித்தே வருகிறது. இக்கதையில் எந்த இடத்திலும் யாருடைய காதலும் காட்டப்படாததும் புதுமைதான். இப்படி பல நுட்பமான விசயங்களை கதையில் புகுத்தியிருக்கிறார்.

இக்கதையில் நிறைய கதாபாத்திரங்கள் வந்துபோவதால் சில பெயர்களை நினைவில் வைத்துக்கொள்வது சற்று கடினமாக இருந்தது. மலாய்க்கார கதாபாத்திரங்கள் ஆதிக்க மனப்போக்கு கொண்டவர்களாக காட்டப்பட்டுள்ளார்கள்.

“உணவு முதல் அரசியல் வரை புதிய ஒன்றை அவர்கள் விரும்புவதே இல்லை”
“இது நம்ம இடம், இவனுங்க யாரு நம்மை வெரட்ட”

போன்ற வசனங்கள் மலாய்க்காரர்களின் ஆதிக்க மனநிலையைக் குறிக்கின்றன. மலேசியா தங்கள் நாடு. அந்நாட்டைக் காப்பாற்றும் பொறுப்பும், ஆற்றலும், உரிமையும் தங்களுக்கு மட்டுமே இருக்கிறதென்ற பெருமையில் உழல்கிறார்கள். மற்ற இனங்களின் மூலம் எதையும் பெறக்கூடாது என்ற தன்மானமும் அதிகமிருக்கிறது.

சீனர்கள் போராட்டவாதிகளாக சித்தரிக்கப்படுகிறார்கள். மலாய்க்காரர்களைக் கொல்லவேண்டும் என்ற எண்ணமோ, நாட்டைக் கைப்பற்றவேண்டும் என்ற தீவிரமோ அவர்களுக்கு இல்லை. தங்களுக்கு சாதகமில்லாத விசயத்துக்காக அரசை எதிர்ப்பது மட்டுமே அவர்களின் போராட்டமாக இருக்கிறது. அவர்கள் கடும் உழைப்பாளிகளாகவும் இருக்கிறார்கள். நாடு பழமையான தோற்றத்திலிருந்து புதிய கட்டடங்கள், கடைகள் என வளர்ச்சியை நோக்கிச் சென்றுகொண்டிருந்ததில் சீனர்களின் பங்கு இன்றியமையாதது. அதேவேளையில் குறுக்குவழியில் ஏமாற்றி பணம் சேர்க்கும் சீனர்களும் அடகுக்கடை முதலாளியின் பாத்திரத்தில் வந்துபோகிறார்கள். அவர்களுக்குத்  தேவை பணம்.

அக்காலக்கட்டத்தில் காட்டுப்பெருமாள் உள்ளிட்ட சில போராளிகள் கம்யூனிஸ்ட் அமைப்பில் இருந்திருக்கிறார்கள். ஆனால் இக்கதையில் சொற்ப காட்சிகளில் வந்துபோகும் இந்தியர்கள் போராட்ட குணம் இல்லாது மலாய்க்காரர்களிடம் அபயம் தேடுபவர்களாக இருக்கிறார்கள். ஒரே ஒரு காட்சியில் வந்துபோகும் துரைசிங்கம் திருக்குறள், தேவாரம், இராமாயணம் என அகிம்சை வழியில் நடப்பவராக இருக்கிறார்.

முதல் அத்தியாயத்தில் ஒரு காட்சி வரும். ஹசானின் வீட்டில் இடதுகாலில் சின்ன வளையம் மாட்டப்பட்டு நூல் கயிறால் பிணைக்கப்பட்டு கூண்டில் வளர்ந்து வருகிறது ஒரு மணிப்புறா. ஹசான் அதை விடுவித்துவிட்ட பின்னரும் அது தன் விடுதலையை உணராது அந்த வீட்டையே சுற்றி வந்தது. இக்கதையில் ஆற்றில் அடித்துக்கொண்டு போய்விட்ட பாலுராவின் மகனைத் தேடும் முயற்சியில் இருக்கும் பெருமாள் உள்ளிட்ட பிரவுன் தோட்டத்து ஆண்களும்  அந்த மணிப்புறாவைப் போன்று அடிமை மனநிலையிலேயே இருப்பதாக உணர்கிறேன். மலாய்க்காரர்களை தங்களை விட ஒருபடி மேலானவர்கள் என்ற மனப்பான்மையில் அவர்களை அண்டி வாழ்பவர்களாகவே இருக்கிறார்கள். விசுவின் உடலைத் தேடும்போது டாவூட்டின் உதவி தேவைப்படுகிறது. டாவூட் மனிதாபிமானத்தோடு உதவ முன்வந்தாலும் அந்த உதவியில் ஆதிக்கமனமும் நிறைந்திருப்பதாய் தோன்றுகிறது.

இவர்களை அடுத்து, காளியப்பனின் கடையில் முடிவெட்டிக்கொள்ள வரும் கிருஷ்ணன் தண்டலும், மாதவன் டிரைவரும் சுயநலவாதிகளாக சித்தரிக்கப்படுகிறார்கள். சீனர்கள் காப்பிக்கடைகளில் போராட்டம் குறித்து பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்றால் இவர்களோ முடிதிருத்தும் கடையில் புறம் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். நாடு குறித்த எந்தக் கவலையும் அவர்களுக்கு இல்லை. ராமன் ஆண்டால் என்ன ராவணன் ஆண்டால் என்ன என்ற அலட்சியமான மனநிலைதான் அவர்களுக்கு. அவர்களை உசுப்பேற்றுவதற்கு தோமஸ் டிரசர்.

“தே ஆர் மெஜாரிட்டி,நாமதான் அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டு வாழ கத்துக்கனும்” என்ற அவரின் வசனம் அதை உணர்த்துகிறது.

இந்த இரு தரப்பினருக்கு நடுவே இந்தியாவிலிருந்து பிழைக்க வந்த காளியப்பன் பணம் சம்பாதிப்பதிலும், புறம் பேசுபவராக மட்டுமே கவனம் செலுத்துபவராக சித்தரிக்கப்படுகிறார். அவரின் அக்காள் மகன் கதிரேசனுக்கு இந்நாட்டுப் பெண்ணை மணந்துகொண்டு இங்கேயே வாழவேண்டும்; குடியுரிமை பெற்றுவிடவேண்டும் என்ற சுயநலம் மட்டுமே மிகுந்திருக்கிறது.

மனிதர்களின் மனோவியல் இக்கதையில் இயல்பை மீறாத வகையில் இயம்பப்பட்டுள்ளது.

தன்னை வருத்திக்கொண்டிருக்கும் அவமானத்தை ஒட்டுமொத்தமாக வெளிப்படுத்த சீனக்கிழவியைக் கொல்லும்போது ஹசானுக்கு எந்தப் பரிவும் ஏற்படவில்லை. ஆனால் குழந்தையைக் கொல்ல மனம் வரவில்லை. கிழவியைக் கொல்லும்போது வெறுமனே வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த கதிரேசன் குழந்தையை நோக்கி நிழல் விரையும்போது கத்தவே செய்கிறான். இக்காட்சியில் குழந்தை என வரும்போது மனிதம் விழித்துக்கொள்வது காட்டப்பட்டுள்ளது.

கதையில் சற்று நெருடலாக இருந்த அம்சம் நிறைய சம்பவங்களும், நிறைய கிளைக்கதைகளும், அதிகப்படியான வர்ணனைகளும்தான். சில இடங்களில் அந்த விவரிப்புகள் கட்டுரைத் தன்மையைக் கொடுக்கின்றன. சில கட்டங்களில் கதையின் விறுவிறுப்பைக் குறைத்துவிடும் வண்ணம் அந்த வர்ணனைகள் குறுக்கிடுகின்றன. ஆனால் அவற்றில் போற்றத்தக்க அம்சம் என்னவெனில் அந்த வர்ணனைகள் யாவும் ரசிக்கத்தக்க வகையிலும் இருந்தன என்பதுதான்.

‘கையும் ஓடல,காலும் ஓடல, பூமி பிளந்து விழுங்கிவிடுமோ’ போன்ற சலிப்பைத் தட்டும் எந்த உவமைகளும் இல்லாது  புதிய சொல்லாடல்களைக் கொண்டிருந்தன. ‘அடை காத்துக்கொண்டிருக்கும் சந்தேக், திடீர் அதிர்ச்சியில் எழுந்த அங்சா, தொட்டிலுக்குள் இருந்து தலையை நீட்டிப் பார்க்கும் குழந்தை என பாண்டியனின் கவிதை மனதைப் பிரதிபலிக்கும் பல கவித்துவமான காட்சிகள் கதையில் இருக்கின்றன.

அடுத்த நெருடலாக கதையில் சிறுநீர் கழிப்பது தொடர்ச்சியாக சில இடங்களில் வருகிறது. சம்சுடின் குடும்பம் மூங்கில் இடுக்குகளில் சிறுநீர் பெய்கிறது, ஓரிடத்தில் நாய் ஒரு காலைத் தூக்கி சிறுநீர் கழிக்கிறது, குழந்தை சைபுடீன் தொட்டிலிலும், ஹசான் சிறுவனாய் இருக்கும்போது கால்வாயிலும், கதை முடியப்போகும் தருவாயிலும் சிறுநீர் கழிக்கிறார்.

நவீன கதைகள் பலவற்றிலும் சிறுநீர் கழிக்கும் காட்சி இருந்திருக்கிறது. அக்காட்சி நவீன புனைவில் தவிர்க்கமுடியாத முக்கிய கூறு என்ற தவறான புரிதல் படைப்பாளிகளுக்கு ஏற்பட்டுள்ளதா என்ற குழப்பம் எனக்குள் உண்டு. ஆனால் ஒரே நாளில் பலமுறை மனிதன் சிறுநீர் கழிக்கவே செய்கிறான். அவ்வகையில் அக்காட்சிகள் இயல்புக்கு மீறியதாக இல்லை என்பதையும் உணரமுடிகிறது. கதையில் சொற்ப காட்சியில் வந்துபோகும் சில பெண்களின் கவர்ச்சி அங்கங்களும் அப்படிதான். ஆயினும் அந்தப் பெண்கள் அப்படிதான் உடுத்தியிருந்தார்கள் எனில், அக்காட்சியை அந்தக் கதாபாத்திரத்தின் குரலாக வெளிப்படுத்தும்போது அந்த வர்ணனைகள் தப்பில்லை என்ற சிந்தனையில் அந்த நெருடலும் இரண்டாம் வாசிப்பில் காணாமல் போய்விடுகிறது.

கடந்த கால நிகழ்வுகளையும், தற்கால நிகழ்வுகளையும் மாறி மாறி சொல்லும் கதையோட்டத்தில் வாசிப்போருக்கு குழப்பம் ஏற்படுத்தாத வகையில் புனைந்துள்ளார். கதையின் இறுதியில் சீனச் சிறுமி சில்லறையைப் பெற்றுக்கொண்டு, ஒரு வெள்ளி நாணயத்தைக் கொடுத்துவிட்டு செல்லும்போது, வெவ்வேறான பின்புலத்தைக் கொண்டிருக்கும் மனிதர்களையும் இணைக்கும் மாபெரும் ஆற்றல் பணத்துக்கு இருப்பதை உணரமுடிகிறது. ஆய்ஷா அந்தச் சீனச் சிறுமியை ரசிக்கவே செய்கிறாள். ஆய்ஷா நிறைய சில்லறைகளைத் தந்தாலும் தனக்கு வேண்டிய சில்லறையை மட்டும் அச்சிறுமி எடுத்துச் செல்வதில் ஒரு குறியீடு இருப்பதாக உணர்கிறேன். ”எனக்கு எது தேவையோ அதை மட்டுமே சீன இனத்தைச் சேர்ந்த நான் எடுத்துக்கொள்கிறேன், நீங்கள் பயப்படுவதுபோல் உங்கள் நாட்டையே எடுத்துக்கொள்ளும் எண்ணம் எனக்கு இல்லை” என்ற அர்த்தம் அக்காட்சியில் பொதிந்திருப்பதாய் தோன்றுகிறது.

கி.இ.உதயகுமாரி

கி.இ.உதயகுமாரி

கதையின் முடிவு எதிர்பார்த்ததுதான். உணர்ச்சியின் மிகுதியால் சீனக்கிழவியை அடித்துக்கொன்றுவிட்டாலும் உள்ளூர ஒரு குற்றவுணர்ச்சி ஹசானுக்கு இருந்துகொண்டே இருக்கிறது. பாத்திமாவை அக்கறையோடு கவனித்துக்கொண்ட போதிலும் அந்தக் குற்றவுணர்ச்சியிலிருந்து அவரது மனம் இன்னும் விடுபடவில்லை. அதனால்தான் அவ்வப்போது தறிகெட்டு ஓடும் நினைவுகளில் பாத்திமாவும் இருக்கிறாள்.

மலேசிய மண் சார்ந்த கதைகள் என எழுதப்பட்டு வந்த புனைவுகள் நம் நாட்டு மக்களின் உணவு முறை, தோற்றம், பழக்கவழக்கம் என வெறும் புறவயம் சார்ந்தேதான் எழுதப்பட்டு வந்திருக்கின்றன. ஆனால் பாண்டியனின் இக்குறுநாவலில் பழமையான காலத்தில் ஒரு காலக்கட்டத்தில் மலாய்க்காரர்கள், சீனர்கள், இந்தியர்களின் மனநிலை எப்படி இருந்தது என அகவயம் சார்ந்த ஒரு மனோவியல் காட்டப்பட்டிருப்பது இந்நாவலின் பலம்.

இப்போதைய காலக்கட்டத்திலும் நாம் வந்தேறிகளாக பார்க்கப்படுகிறோம். அவர்களின் உரிமையை நாம் பறித்துக்கொள்வோமோ என்ற அச்சத்தில் எழும் பிரச்சனையின் விளைவாக இன்னமும் ஆங்காங்கே சில வன்முறைகளும் அவற்றால் சில உயிருடற்சேதமும் நிகழ்ந்துகொண்டேதான் இருக்கின்றன.

இக்குறுநாவல் இன்றைய காலக்கட்டத்துக்கும் பொருந்திப்போகும் கதையம்சத்தைப் பெற்றிருப்பது அதன் மற்றொரு சிறப்பம்சம். இதுவரையில் அதிகம் பேசப்படாத, இன்றைய தலைமுறையினர் அவசியம் அறிந்து வைத்திருக்கவேண்டிய ஒரு போராட்டம், அதன் நீட்சியான வன்முறை ஆகியவை குறித்து நேர்மையாய் எழுதப்பட்டுள்ள இந்நாவல் நிச்சயம் போற்றத்தக்க நன் முயற்சி.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...