அறிந்த வரலாற்றில் அறியப்படாத இடைவெளி

08picமலேசிய இலக்கிய வரலாற்றின் வழித்தடத்தையும், அதன் பல்வேறு பரிமாணங்கள் பற்றியும் மா.இராமையா, ரெ.கார்த்திகேசு, வா.முனியன், சை.பீர்முகம்மது, முனைவர் கிருஷ்ணன், முனைவர் சபாபதி, பாலபாஸ்கரன் என பல்வேறு தரப்பினர் எழுதியுள்ளனர். இது அவர்களுக்கு அந்தந்த காலக்கட்டத்தில் கிடைத்த தரவுகள், ஆவணங்கள் அடிப்படையில் உருவாக்கப்பட்ட  வரலாற்றுக்குறிப்புகள் எனலாம். இத்தகவல்களை அவர்கள் முந்தைய ஆய்வாளர்களிடமிருந்தும் அச்சு ஊடகங்களிடமிருந்தும் எடுத்து தொகுத்திருப்பதோடு, இன்னும் சிலர் தங்களின் அனுபவங்களையும் நேரடி கள ஆய்வுகளின்வழி திரட்டிய தெரிவல்களையும்  தொகுத்து எழுதியிருக்கின்றனர். அவ்வாறு நேரடி கள ஆய்வின் ஓர் அங்கமாக ஆய்வாளர்கள் தகவல்களைத் திரட்ட நேர்காணல் என்பது இன்றியமையாததாக இருக்கின்றது. நேர்காணலின்வழி குறிப்பிட்ட காலக்கட்டத்தில் இயங்கிய இலக்கியச் சூழலையும் அதன்கண் பாடுபட்டவர்களின் செயல்பாடுகளையும் இன்னும் தெளிவாகவும் நுண்ணிய முறையில் அறிந்து கொள்ள முடியும்.

அவ்வகையில்மீண்டும் நிலைத்த நிழல்கள்மலேசிய இலக்கிய வரலாற்றில் இதுவரை சொல்லப்பட்ட தகவல்களை மறுஉறுதி படுத்துவதற்கும் மாற்றுக்கருத்துகளை முன் வைப்பதற்கும் தோதான ஓர் ஆவணம் எனலாம்.

இந்த நேர்காணல்களில் 50% ஏற்கனவே ஆவணப்படங்களாக ‘சடக்கு’ இணையத்தளத்தில் தொகுக்கப்பட்டிருந்தாலும் இவ்வாறு நூலாக்குவதில் இரண்டு நன்மைகளைக் காண்கிறேன். முதலாவது, ம.நவீன் தான் நேர்காணல் செய்த நூற்றுக்கும் மேற்பட்டவர்களில் 25 பேரை மட்டும் முன்வைப்பதன் அவசியம் புலனாகிறது. அந்த 25 ஆளுமைகளும் ஏதோ ஒரு வகையில் மலேசிய – சிங்கப்பூர் இலக்கியத்தில் அவசியமானவர்கள்; முதன்மையானவர்கள் என்பதை முன்வைக்கிறார். மற்றது இந்த நூல் நேர்காணலைத் தொகுக்கும் நோக்கத்தில் மட்டும் தயாராகவில்லை. நூலில் மிகத் தெளிவாக மலேசிய இலக்கிய வரலாற்றின் முக்கிய தருணங்களை யார் யாரெல்லாம் பேசியுள்ளனர் எனும் பட்டியல் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல மலேசியாவின் மிக முக்கியமான வரலாற்று நிகழ்வுகளான ஜப்பானியர் ஆட்சி காலம், தொழிற்சங்கம், மே கலவரம், ஹிண்ட்ராப் எனவும் பட்டியல் வழங்கப்பட்டு அது குறித்த பேசியவர்களின் பெயர்களும் இணைக்கப்பட்டுள்ளது. ஆக, இது மலேசிய சிங்கப்பூர் இலக்கியப் போக்குக் குறித்து ஆய்பவர்களுக்குப் பெரிதும் துணையாக இருக்கும்.

நூல் பட்டியல் ஒருபுறம் இருக்க, நேர்காணலை அடுக்கித்தொகுத்த விதமும் ஆண்டுவாரியாக இலக்கியத்தில் இயங்கியவர்களின் வரிசையில் உள்ளது கூடுதல் சிறப்பு. இது இந்த நூலின் நோக்கத்தை இன்னும் தெளிவாக்குவதாகவே அமைந்துள்ளது. அதாவது, மலேசியசிங்கை அரசியல், சமூக, இலக்கியவரலாற்றில் ஆர்வம் கொண்டவர்கள் எவ்வாறு இந்த நூலை அணுகி முழுமையான பயன் பெறலாம் என அதன் ஆசிரியருக்குத் திட்டவட்டமான எண்ணம் இருந்துள்ளதை இந்தக் கட்டமைப்பில் உணர முடிகிறது

450 பக்கங்களுக்கும் மேல் கொண்ட தடிமனான நூலை முழுக்க ஆராய்வதில் உள்ள சிக்கலைக் கவனத்தில் கொண்டு மலேசிய இலக்கியத்தில் புதிதாக இணைபவனாக  இந்நாட்டின் இலக்கியத்தின் வரலாற்று முகத்தை அறியும் பொருட்டு தேர்ந்தெடுத்த நேர்காணல்களை வாசித்தே இக்கட்டுரையை எழுதுகிறேன். ஒவ்வொரு காலக்கட்டத்திலும் மலேசிய நவீன இலக்கிய வளர்ச்சிக்கு பங்காற்றியவர்களின் சொற்கள் வழி என் மனதில் உருவான எளிய சித்திரத்தை பதிவு செய்கிறேன்.

கதை வகுப்பு

மலேசிய சிறுகதை இலக்கியத்தின் வளர்ச்சியை ஊடாடிப் பார்க்கையில் யாராலும் தமிழ்நேசனின் கதை வகுப்பை அவ்வளவு எளிதில் கடந்து விட முடியாது. மலேசிய நவீன இலக்கியத்தைத் திட்டவட்டமான பாதையில் கொண்டுச்செல்லும் நோக்கத்தில் அமைக்கப்பட்டதால் இதுவே வரலாற்றில் முதல் முயற்சி எனலாம்.  1950- களில் தமிழ்நேசன் ஞாயிறு பதிப்பில் கதை வகுப்புத் தொடங்கி எழுத்தார்வம் உள்ளோருக்கு கந்தசாமி வாத்தியார் எனும் பெயரில் சுப.நாராயணனும், வானம்பாடியார் எனும் பெயரில் பைரோஜி நாராயணனும் சிறுகதை இலக்கியத்தைப் பற்றி பயிற்சியளித்துள்ளனர். இதுவே மலேசிய எழுத்தாளர்கள் பலர் முகிழ்த்தெழ தூண்டுகோலாக இருந்துள்ளது எனலாம்.

இந்தக் கதை வகுப்பில் பங்கெடுத்த மூவரின் நேர்காணல்கள் இந்த நூலில் இணைக்கப்பட்டுள்ளன. எழுத்தாளர் மா.செ.மாயதேவன், இக்கதை வகுப்பு ஆறு மாதக் காலம் நடைபெற்றதாகச் சொல்கிறார். இக்கதை வகுப்பில் எழுத்தாளர்களின் சிறுகதைகளுக்குண்டான திருத்தங்களைச் செய்து சுப. நாராயணன் பத்திரிகைகளில் வெளியிட்டு, அச்சிறுகதைகளில் எவ்வாறான மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்பதையும் கூறி எழுத்தாளர்களை ஊக்கப்படுத்தியுள்ள பாங்கு தெரியவருகிறது. .ரெங்கசாமி கதை வகுப்பினை கந்தசாமி வாத்தியார் என்பவர் நடத்தியதாகவும் அவர் கதைகளைத் திருத்தி குறைகளைகளைச் சொன்னதன் வழியே தான் பலனடைந்ததையும் குறிப்பிடுகிறார். இக்கருத்தை வலியுறுத்தும் வகையில் இராம. கண்ணபிரான், கதை வகுப்பு மலேசிய சிறுகதை வளர்ச்சிக்கு மிகவும் உதவியதாகச் சொல்கிறார். ஆனால், நா.பாலபாஸ்கரனின் நேர்காணலில் இந்தக் கருத்து கொஞ்சம் மாறுபடுகிறது. பைரோஜி.நாராயணன் தன்னோடு வானொலியில் வேலை செய்தபோது கதை வகுப்பு பற்றி சொல்லியதாகவும், தன் வேண்டுகோளுக்கிணங்க பின்னர் கதை வகுப்பு பற்றி அவர் நினைவுக்கட்டுரை படைத்ததாகவும் சொல்லும் நா.பாலபாஸ்கரன், கதை வகுப்பு பெரிதாக ஒன்றையும் சாதித்து விடவில்லை என்றும், கதை வகுப்பு செய்ய நினைத்தது ஒன்று; செய்தது ஒன்று என அவரே பதில் சொல்லுகிறார்.

50-களில் உருவான எழுத்தாளர்கள் பலரும் கதை வகுப்பை தங்கள் இலக்கிய ஆர்வத்துக்கான முக்கியக்காரணியாகக் குறிப்பிடுவதை இந்த நேர்காணலில் காண முடிகிறது. இவர்கள் பல்வேறு ஊர்களைச் சார்ந்தவர்கள். எனில், நாளிதழ் நவீன இலக்கிய வளர்ச்சிக்கு எவ்வளவு வீச்சுடன் செயல்பட்டுள்ளது என்பதற்கு இவர்களது எண்ணப்பகிர்வுகளே சான்றாக உள்ளன.

 

கு.அழகிரிசாமி வருகை

1952-களில் தமிழ்நேசன் நாளேடுக்குப் பணி நிமித்தமாக வந்தவர் கு.அழகிரிசாமி. அக்காலக்கட்டத்தில் மலேசியச் சிறுகதைகளின் தட்டையான இலக்கிய வடிவத்தில் ஒவ்வாமை கொண்டிருந்த அவர் கறாரான விமர்சனத்துடன் அவற்றைப் புறக்கணிக்கவும் செய்துள்ளார். பின்னர் அக்கால மலேசிய மக்களின் வாழ்வியல், கல்விச் சூழலைப் புரிந்துகொண்டு இந்நாட்டு இலக்கியத்தை முன்னெடுக்கத் தொடங்கியதாகச் சொல்கிறார் மா.செ.மாயதேவன். மூர்த்தி என்பவரின் துணையுடன்இலக்கிய வட்டம் எனும் சந்திப்பை ஆரம்பித்துள்ளார் கு.அழகிரிசாமிகதைகளைத் திருத்தி வெளியிட்டதுடன் நல்ல எழுத்தாளர்களை அடையாளம் கண்டு அவர்களை ஊக்கப்படுத்தி எழுதவும் வைத்துள்ளார். நவீனத் தமிழ் இலக்கியச் சூழலில் அவரே மிகச் சிறந்த எழுத்தாளராக இருந்த காரணத்தினால் புனைவிலக்கியத்தில் ஆர்வமுடன் செயற்பட்டுள்ளார்.

மா.செ.மாயதேவன் கு.அழகிரிசாமி பற்றிக் குறிப்பிடுகையில், இந்நாட்டு எழுத்தாளர்களுக்குச் சரியான கலைவடிவில் சிறுகதைகளை எழுத முடியாத காலக்கட்டத்தில்தான் அவரின் வருகை நிகழ்ந்தது என்கிறார். மிக முக்கியமாக மா.செ.மாயதேவன் நேர்காணலில் அக்காலக்கட்டத்தில் கதை வகுப்பு நடத்திய நாராயணன்களுக்கும் கு.அழகிரிசாமிக்கும் கருத்து வேறுபாடுகள் இருந்திருக்கலாம் என்ற தகவல் மிக நாசுக்காக அடிப்படுகிறது. இத்தகவல் தவிர்க்கக்கூடிய விடயமல்ல. கதை வகுப்பில் தமிழக வாழ்க்கையை விட்டு மலேசிய வாழ்க்கையை எழுதும்படி வலியுறுத்தப்பட்டதை நேர்காணல்கள் வழி அறிய முடிகிறது. அதேபோல அழகிரிசாமி சிறுகதையின் கலை வடிவத்திற்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளார் என்பதும் பதிவாகியுள்ளது. எனின், சிறுகதை கருத்தைச் சொல்வது X சிறுகதை கலை வடிவம் என்ற முரண்பட்ட கருத்துகள் தோன்றிய முதல் காலமாகவே 50-களைக் காண முடிகிறது.

இரசனை வகுப்பு

கு.அழகிரிசாமியின் இலக்கிய வட்டம் உருவான காலத்தில்தான் சுப.நாராயணன் மீண்டும் தமிழ்முரசு நாளிதழ் வழி 19 ஏப்ரல் 1952 முதல் 28 ஜுன் 1952 வரை இரசனை வகுப்பு நடத்தினார். அவர் சுப நாராயணன் கந்தசாமி வாத்தியார் எனும் பெயரில் நடத்தியது குறிப்பிடத்தக்கது. மா.இராமையா, மாயதேவன், இராம.கண்ணபிரான் என பலருமே தம்முடைய நேர்காணலில் இரசனை வகுப்பைப் பற்றி பெரிதாக எதுவும் பேசவில்லை என்பது ஆச்சரியம்.

இந்த நேர்காணலின் தொகுப்பின் வழி சுப.நாராயணன் குறித்து அறியும் ஆர்வம் எழவே செய்கிறது. பாலபாஸ்கரன் போன்ற ஆய்வளார்களே அவர் குறித்த சித்திரத்தை ஓரளவு உருவாக்கியுள்ளனர். அதன் வழி சுப.நாராயணன், தமிழ்நாட்டின் சக்தி இதழில் பணியாற்றிவிட்டு சிங்கப்பூர்மலாயாவுக்கு வந்தவர் என்பது தெரிய வருகிறது. சிங்கப்பூர் வானொலியில் தமிழ்ச் செய்தி வாசித்திருக்கிறார். கோலாலம்பூரில் போலீஸ் இலாக்காவில் எழுத்தராகப் பல ஆண்டுகள் வேலை செய்துவிட்டு ஓய்வு பெற்றவர். தமிழகத்தில் இருக்கும்போதே பல நூல்களை எழுதியுள்ளதை பாலபாஸ்கரன் குறிப்பிடுகிறார். அக்காலக்கட்டத்தில் கலை, இலக்கியத்தின் அடிப்படை புரிதல்களில் கு.அழகிரிசாமி போன்றவர்களுடன் மாற்றுக்கருத்துகள் இருந்தாலும் சுப.நாராயணனின் முன்னெடுப்புகளும் அவரது தொடர் செயல்பாடுகளும் நேர்மையானவை, மலேசிய இலக்கியத்திற்கு வளம் சேர்த்தவை என்பதில் எவ்வித மாற்றுக்கருத்துகளும் இல்லை.

மாணவர் மணிமன்றம்/தமிழ் இளைஞர் மணிமன்றம்

மலேசியாவில் மொழி சார்ந்தும் பண்பாட்டுக் கூறுகள் மேம்பாடு சார்ந்தும் கோ.சாரங்கபாணி ஆற்றிய தொண்டுகள் அளப்பரியதாகும். 1934-ஆம் ஆண்டு தமிழ்முரசு நாளேட்டை தொடங்கி, அதன்வழி பல தமிழ்த்தொண்டுகளை ஆற்றியவர் அவர். உள்நாட்டில் எழுத்தாளர்களை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில், மாணவர்களை மையப்படுத்தி  கோ.சா அவர்களால் 2-5-1952-இல் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதே மாணவர் மணி மன்றமாகும். இதில் பலனடைந்த மாணவர்கள் வளர்ந்து இளைஞர்களானப்பின் 1964-ஆம் ஆண்டு தமிழ் இளைஞர் மணிமன்றமென அமைத்தனர்.

மா.செ.மாயதேவன் கோ.சாரங்கபாணியைப் பற்றிக் குறிப்பிடுகையில் மாணவர் மணிமன்றத்தைப் பற்றியும் குறிப்பிடுகிறார். பேச்சுப்போட்டி, பாட்டுப்போட்டி, கட்டுரைப்போட்டி என இளம் தலைமுறையினரை ஊக்குவித்துத் தமிழை வளர்த்தார்”, என்று அவர் கூறுவதன்வழி அதன் தாக்கத்தை அறிய முடிகிறது.

அரு.சு.ஜீவானந்தனின் நேர்காணலிலும் தமிழ் இளைஞர் மணிமன்றத்தைப் பற்றி அறிய முடிகிறது. அவர் அவ்வியக்கம் நாடு முழுவதும் தீவிரமாக இயங்கிக் கொண்டிருந்ததாகச் சொல்கிறார். தான் வாழ்ந்த பாத்தாங் பெர்ஜுந்தாயிலும் ஒரு மன்றம் இருந்ததாகவும், அங்கே ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நிகழ்ச்சி ஒன்று செய்யப்பட்டதாகவும், பேச்சுப் போட்டி, இலக்கியக் கலந்துரையாடல், திருக்குறள் போட்டி போன்றவை முன்னெடுக்கப்பட்டதாகவும் தன் நேர்காணலில் குறிப்பிடுகிறார். ஆசிரியர்கள் சிலர் மேடைப்பேச்சுப் பயிற்சி, சொற்போர், பட்டிமன்ற பயிற்சி போன்றவற்றை மாணவர்களுக்கு மணிமன்றம் மூலம் கொடுத்ததாகவும் குறிப்பிடுகிறார்.

சை.பீர்முகம்மது அவர்களின் நேர்காணலும் மணிமன்றம் தொடர்பான விரிவான தகவல்களைத் தாங்கியுள்ளது. ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிறுகளில் அப்பர் தமிழ்ப்பள்ளியில் மணிமன்றக் கூட்டம் நடந்ததாக அவரின் நேர்காணல் நமக்குத் தெரியப்படுத்துகிறது. .ஆ அன்பானந்தன் அப்போதைய தலைவராக இருந்திருக்கிறார். இலக்கியம், தமிழர் சார்ந்த சிக்கல்களை இளைஞர்கள் அப்போதைக்கு இம்மணிமன்றத்தில் பேசியுள்ளனர் என்பது அவர் நேர்காணல் வழி அறிய முடிகிறது. சை.பீர்முகம்மது அவர்கள் தொடக்கத்தில் மலேசியா முழுக்க ஏழு மணிமன்றங்கள் இருந்ததாகக் குறிப்பிடுகிறார். பினாங்கு, கோலாலம்பூர், ஈப்போ, பாத்தாங் பெர்ஜுந்தை, தெலுக் இந்தான், கோல கங்சார், சுங்கை சிப்புட் என அவை தனித்தனியே இயங்கியுள்ளன என்பது அவர் நேர்காணலின் வழி அறிய முடிகிறது.

1964-ஆம் ஆண்டு இம்மன்றங்களை எல்லாம் ஒன்று சேர்க்க வேண்டுமென பினாங்கு மன்றம் மாநாடு ஒன்றைத் துவக்கியது. அந்த மாநாட்டில் ச.. அன்பானந்தன், கிருஷ்ணசாமி, பாதாசான் போன்றவர்கள் கலந்து கொண்டனர். அதில் மலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றப் பேரவை அமைக்கப்பட்டது. முதலாவது அமைப்புக் கூட்டம் கோலாலம்பூரில் உள்ள கம்போங் பண்டானில் உள்ள பள்ளிக்கூடத்தில் இளைஞர் அமைச்சின் ஆதரவுடன் நடைபெற்றுள்ளது. அதில் ச.. அன்பானந்தன் தலைவராகவும், துணைத்தலைவராகக் கிருஷ்ணசாமியும், துணைத்தலைவராகச் சை.பீர்.முகம்மதுவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் எனும் தகவலும் சை.பீர்முகம்மது சொற்கள் வழி அறியலாம்.

மலேசிய நவீன படைப்பாளிகளான சை.பீர்முகம்மது, அரு.சு.ஜீவானந்தன் போன்றவர்களின் ஆளுமை வளர்ச்சிக்கு மணிமன்றத்தின் பங்கும் இருந்துள்ளதை இந்நூல் விளக்குகிறது.

அப்போது தமிழ் நேசனில் இருந்த முருகு.சுப்பிரமணியம் அவர்களுக்கு மிகுந்த ஆதரவு கொடுத்துள்ளார். மணிமன்றம் குறித்துத் தலையங்கம் எழுதியும், மன்ற செய்திகளைப் பிரசுரித்தும் உதவியுள்ளார். சைக்கிளில் சென்றே செயலவைக்குழு மணிமன்றத்தை வளர்த்துள்ளது. நூற்றுக்கணக்கான மணிமன்றங்கள் வளர்ந்த நிலையில், ஆண்டுக்கொரு முறை ஒவ்வொரு இடத்திலும் மூன்று நாள் மாநாடு நடத்தப்பட்டுள்ளது.

மணிமன்றத்தைப் பற்றி இராம. கண்ணபிரான் குறிப்பிடும் பொழுது, அவர் உயர்நிலைப்பள்ளியில் படிக்கும்பொழுது மணிமன்றத்தில் உறுப்பினராகி, மற்ற இரு உறுப்பினர்களோடு கடித உறவு கொண்டதைக் குறிப்பிடுகிறார். தமிழ் முரசு நடத்திய சிறுகதை போட்டிக்குக் கதையும் எழுதியுள்ளார். லதா மாணவர் மணிமன்றத்தைப் பற்றி சொல்லும்பொழுது, மாணவர்களுக்கு எழுதுவதில் ஆரம்பக் களத்தை அமைத்துக் கொடுத்ததில் வை.திருநாவுக்கரசிற்கு மிகுந்த பங்குள்ளதைத் தெளிவுப்படுத்துகிறார்.

பவுன் பரிசுத்திட்டம்

1972-இல் முருகு சுப்ரமணியம் ஆசிரியராகப் பொறுப்பேற்று தமிழ் நேசனில் நடத்திய பவுன் பரிசு திட்டம்மலேசிய எழுத்தாளர்களுக்கு உந்துதல் கொடுத்ததோடு மலேசியாவில் தமிழ் இலக்கியம் செழித்திருப்பதற்கான வழி வகையையும் செய்துள்ளது. மலேசியாவின் தலைச்சிறந்த எழுத்தாளர்கள் பலரை வார்த்தெடுத்த பெருமையும் இத்திட்டத்திற்கு உண்டு எனலாம். மா.ராமையா, மாயதேவன், சி,வேலுச்சாமி, ரெ.கார்த்திகேசு, பாவை என பலரும் சித.நாராயணனும் பைரோஜியும் நடத்திய கதைவகுப்புகளிலும் ரசனை வகுப்புகளிலும்  தங்களைத் தேற்றிக் கொண்டு, தங்கள் திறமைகளைப் பவுன் பரிசு திட்டத்தில் சோதித்துக் கொண்டனர் என்பது சுவாரசியமான விடயமாகும்.

பவுன் பரிசுத்திட்டம் பற்றி அரு.சு. ஜீவானந்தன் கூறும்பொழுது, தான் எழுதுவதற்கான தளத்தை உருவாக்கிக் கொண்டு நகரும்பொழுது, அத்திட்டம் தமிழ் நேசனால் உருவாக்கப்பட்டதாக கூறுகிறார். அத்திட்டத்தில் அவருக்குத் தொடர்ந்து மூன்று மாதங்களுக்குத் தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது.

சீ.முத்துசாமியின் நேர்காணல் கூர்ந்து கவனிக்கப்பட வேண்டியது. 70-களில் நம் நாட்டுத் தமிழ் இலக்கியத்தை முன்னெடுப்பதில் தமிழ் நாளேடுகள் பெரும் பங்காற்றியதாகக் கூறும் அவர், ஆசிரியர் முருகு.சுப்பிரமணியம் தமிழ் நேசனில் நடத்திய பவுன் பரிசுத்திட்டத்தை அதற்கு நல்லதொரு சான்றாகக் குறிப்பிடுகிறார்.     இராம.கண்ணபிரான் பவுன் பரிசுத் திட்டத்தைப் பற்றி குறிப்பிட்டுக் கூறாவிடினும், எழுபதுகளைச் சிறுகதைகளின் பொற்காலமென்கிறார். செறிவான உள்ளடக்கத்தையும் உருவத்தையும் கொண்டு விளங்கிய சிறுகதைகள் இக்காலக்கட்டத்தில் வெளிவந்ததை அன்னார் குறிப்பிடும் போது, தமிழ்நேசனின் பவுன் பரிசுத் திட்டத்தையும் இதனுள் ஒன்றாகக் கொள்ளலாம்.

இலக்கிய வட்டம் இதழ்

பேராசிரியர் இரா. தண்டாயுதம் அவர்களின் ஆலோசனையில் ரெ.கார்த்திகேசு அவர்கள் முன்னின்றுஇலக்கிய வட்டம்’  என்ற குழுவையும் அதன் மூலம்இலக்கிய வட்டம்எனும் காலாண்டு இதழ்களையும் உருவாக்கினார் என்ற தகவல் அரு.சு.ஜீவானந்தன் நேர்காணல் வழி கிடைக்கிறது. இதில் பலரின் பங்களிப்பு இருந்துள்ளது. முதல் இதழ் பிப்ரவரி 1973ல் வெளியிடப்பட்டுள்ளது. முதல் இதழ் அரசாங்கப் பதிவு எண் இல்லாமல் தனிச்சுற்றாகவே வந்து பின்னர் இவ்விதழ் முறையான அரசாங்கப் பதிவு எண்ணைப்பெற்று குறிப்பிட்ட வட்டத்தில் மட்டுமே வாசிப்புக்குச் சென்றுள்ளது. அரசுப் பதிவு எண்ணுக்காக எழுத்தாளர் எம்.குமரன் (மலபார் குமார்) முகவரி வழங்கப்பட்டிருந்த சூழலில் உள்ளடக்கச் சாரத்தை ரெ.கார்த்திகேசுவே தீர்மானித்துள்ளார். மே 1974ல் ரெ.கா வானொலி பணியில் இருந்து விலகி பினாங்கு மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தில் இணைந்தபோது இலக்கிய வட்டம் தன் ஆயுளை முடித்துக்கொண்டுள்ள தகவலும் இத்தொகுப்பில் கிடைக்கிறது. இலக்கிய வட்டம் திட்டவட்டமான பக்க எண்ணிக்கைகளையும் அமைப்பையும் கொண்டிருக்காமல் சூழலுக்கும் வாய்ப்புக்கும் ஏற்ப உருவாகியுள்ளது.

இவ்விதழில் பங்காற்றிய ஜீவானந்தன் தன் நேர்காணலில், பெரும்பாலும் இலக்கியக் கட்டுரைகளை தாங்கி மலர்ந்த அவ்விதழ்கள், விவாதங்களையும் கடந்த கூட்டத்தில் பேசியதைத் தொகுத்து ரெ.கார்த்திகேசு எழுதிய கட்டுரைகளையும் தாங்கி இருக்குமென சொல்கிறார். அந்த நேரத்தில் அகிலனின் வருகையின்போது நடந்த சந்திப்பையும் எழுதி வெளியிட்டதையும் சொல்கிறார்.

அரு.சு.ஜீவானந்தனின் நேர்காணலில் சில புதிய திறப்புகளை மலேசிய இலக்கியம் குறித்து வழங்குகின்றன. இலக்கியத்தின் புதிய குரல்களை ஒலிக்க வைக்க உருவான சிற்றிதழ் தன்மை கொண்ட இதழாகவேஇலக்கிய வட்டம்இதழைக் குறிப்பிடலாம். ஆனால் இதில் ஒரு முரண் உள்ளது. அக்காலக்கட்டத்தில் சிற்றிதழ் மனநிலையில்இலக்கிய வட்டத்தினர்இயங்கினாலும் ஜனரஞ்சக எழுத்தாளராகக் கருதப்பட்ட அகிலன் உள்ளிட்ட எழுத்தாளர்கள் மீதும் இக்குழுவுக்கு ஈடுபாடு இருந்தது தெரிய வருகிறது. எழுபதுகளில் தமிழகத்தில் எழுந்த சிற்றிதழ் அலையுடன்இலக்கிய வட்டம்இதழை ஒப்பிட முடியாது என்றாலும் தன்னளவில் புதிய முயற்சிகள் உருவாகவும் ரசனை விமர்சனங்கள் தோன்றவும் காரணியாக இருந்துள்ளது.

நவீன இலக்கியச் சிந்தனை

இந்தத் தொகுப்பில் நவீன இலக்கியச் சிந்தனை எனும் அமைப்பு குறித்து சீ.முத்துசாமி மற்றும் கோ.முனியாண்டி ஆகியோரின் நேர்காணல் மூலம் அறிய முடிகிறது.

1979-களில் நவீன இலக்கியச் சிந்தனை எனும் அமைப்பு உருவாக சீ.முத்துசாமி, எம்..இளஞ்செல்வன், கனலன் ஆகிய மூவருமே தீவிரம் காட்டியதாகக் கோ.முனியாண்டி குறிப்பிடுகிறார். அதன் வீச்சு கெடா மாநிலம் முழுக்கப் பரவியிருந்தது அவர் நேர்காணல் வழி அறிய முடிகிறது. அது பரவி பேராக், சிலாங்கூர், நெகிரி செம்பிலான், ஜொகூர் போன்ற மாநிலங்களுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. வானம்பாடி இதழ் நவீன இலக்கியச் சிந்தனை அமைப்பு உருவாகவும் காரணமாக இருந்துள்ளதும் அதற்கு ஆதி.குமணன், இராஜகுமாரன், அக்கினி சுகுமாறன் ஆகியோர் முனைப்பாகச் செயல்பட்டதும் இவர்கள் நேர்காணலில் புலனாகிறது. வானம்பாடியைப் போலவே இந்த அமைப்புப் புதுக்கவிதையில் ஆர்வம் காட்டியதால் இவ்விரண்டும் அதன் வளர்ச்சிக்குப் பெரிதும் பாடுபட்டுள்ளதை அறிய முடிகிறது. மலேசியாவின் முதலாவது புதுக்கவிதை நூலை நவீன இலக்கிய சிந்தனை 1979-களில் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வானம்பாடி

தமிழகத்திலிருந்து வந்த “வெளிச்சங்கள்” எனும் கவிதைத் தொகுப்பிலிருந்த “இது வானம்பாடிகளின் மானுட கீதம்” என்ற வரியே ‘வானம்பாடி’ எனும் பெயருக்கு மூலமென அக்கினி தன் நேர்காணலில் சொல்கிறார். வானம்பாடியில் நிறைய புதுக்கவிதைகளைப் பிரசுரிக்க முடிந்ததாகவும், நிறைய எழுத முடிந்ததாகவும் கூறும் அக்கினி, இதழை பெட்டாலிங் மாரியம்மன் கோவிலுக்கு அருகில் அலுவலகம் அமைத்து வெளியீடு செய்துள்ளனர்.

ஆதி.குமணன், அக்கினி, இராஜகுமாரன், பாலு ஆகியோர் இணைந்து இதழை நடத்தியுள்ளது நேர்காணலின்வழி தெரிய வருகிறது. பத்திரிகையின் ஆரம்பக்கால வியாபாரம் படுமோசமாக இருந்துள்ளது. ஆனால், அக்கினியின் புதுவிதமான உத்தியாலும், தற்கால மருத்துவம் போன்றவற்றைத் தொட்டு எழுதியதாலும் வானம்பாடியின் வியாபாரம் உயர்ந்துள்ளது.

சிங்கப்பூர் இளங்கோவன் புதுக்கவிதை பயணத்தில் வானம்பாடி இதழினரோடு பக்கபலமாக இருந்திருக்கிறார். கோ.முனியாண்டி, துரை முனியாண்டி, கெடாவிலிருந்து கனலன் என புதுக்கவிதையாளர்களின் கூட்டம் பெருகி வந்திருக்கிறது. தினமலர், நேசன் போன்ற நாளேடுகள் பின்னர் புதுக்கவிதைகளை அதிகம் பிரசுரிக்க ஆரம்பித்தப்பிறகு மலேசியாவில் புதுக்கவிதை வேரூன்ற ஆரம்பித்துள்ளது. இதற்கு அடிப்படை காரணம் வானம்பாடி என்கிறார் அக்கினி.

 

இலக்கியக் களம் 

அரு.சு.ஜீவானந்தம் வானொலியில் பணியாற்றிக் கொண்டிருக்கும்போதே அவருடைய நண்பர்கள் சிலர் இலக்கிய வட்டம் எனும் குழுவை அமைத்துச் செயல்பட்டுக் கொண்டிருந்ததாகவும், இரா.தண்டாயுதம் மலேசியா வந்திருந்த புதிதில் நவீன இலக்கியம் குறித்துப் பேசுவதற்காக ஒன்று கூடினார்கள் எனவும் கூறுகிறார். பின்னர், அவரையும் அதில் இணைத்துக் கொண்டுள்ளனர். இலக்கியம் தொடர்பான பலத்  திறப்புகளோடு லண்டன் சென்ற அவர், பின்னர் அங்கிருந்து வந்தப்பிறகு சாமி மூர்த்தி, சை.பீர் முகம்மது, அன்புச் செல்வன், மலபார் குமார் ஆகியரோடு இணைந்து இலக்கியக் களம் எனும் ஒரு குழுவை 1985-இல் தொடங்கினார்கள். அக்களத்தில்  நாளேடுகளில் வரும் கதைகளை வாசித்துச் சிறந்த கதைகளுக்குப் பரிசுகள் வழங்கி வந்துள்ளனர். பின்னர், சிறுகதை போட்டியும் நடத்தி வென்றவர்களுக்குப் பரிசுகளும் தந்துள்ளனர். ஆனால், அது நீடிக்கவில்லை. இலக்கியக் களத்தில் மா.சண்முகசிவா ஆரம்பத்தில் வெறும் பார்வையாளனாக மட்டுமே இருந்துள்ளார்.

இக்களத்தில்தான் சுந்தர ராமசாமியின் வருகை நிகழ்ந்துள்ளது. இந்த நாட்டில் பரவலாக தீவிர எழுத்தாளர்களின் அறிமுகம் என்பது குறைவாகவே உள்ளது என்று ஆரம்பிக்கும் அரு.சு.ஜீவாவனந்தன், வானொலியில் அவரை அழைத்துப் பேட்டிக் காண வைக்கும் பொழுது யாவரும் அவரை யாரென வினவியதைக் குறிப்பிடுகிறார். மா.சண்முகசிவா சுந்தர ராமசாமியைப் பற்றிக் குறிப்பிடும்போது, சுந்தர ராமசாமி இலக்கியக் களத்தினரால் மலேசியாவிற்கு அழைத்து வரப்பட்டப் பொழுது இங்கே ஒரு கட்டுரை வாசித்துள்ளார். அக்கட்டுரையில் முக்கியப் படைப்பாளிகளின் பட்டியல் இடம்பெற்றுள்ளது. அதைக் கொண்டு மா.சண்முகசிவா தன்னுடைய வாசிப்பை விரிவுபடுத்தியுள்ளது தெரிய வருகிறது.

கவிதைக்களம்

கவிதைக்களத்தைக் கவிஞர் காரைக்கிழாரோடு பாவலர் பா.மு.அன்வர், பாதாசன், மைதீ சுல்தான், அரு.சு.ஜீவானந்தன் போன்றோர் இணைந்து  மரபுக்கவிதைக்காக ஆரம்பித்துள்ளனர். அரு.சு.ஜீவானந்தத்தின் நேர்காணலின்வழி கவிதைக்களம் இலக்கியக்களத்திற்கு பின்னரே தொடங்கியுள்ளதாக தெரிய வருகிறது. அப்படி அதில் இணைந்ததில் மற்றுமொருவர் மா.சண்முகசிவா. இக்கூட்டத்தில் புதுக்கவிதைகள் குறித்து பேசவே  அரு.சு.ஜீவானந்தன் சென்றுள்ளார். ஆனால், அக்கருத்துகளை யாரும் பொருட்படுத்தாததால் அவர் தொடரவில்லை.

மா.சண்முகசிவாவும் இதே கவிதைக்களத்தில் கலந்து கொண்டு மரபான சிந்தனை கொண்டவர்களோடு முரண்பட்டிருந்ததால் தொடர்ந்து பயணிக்க முடியவில்லையயென பதிவு செய்துள்ளார்.

அகம் இலக்கிய வட்டம்

திலிப்

கவிதைக்களத்தில் நட்பான அரு.சு.ஜீவானந்தனும் மா.சண்முகசிவாவும் பின்னர் இணைந்து 1987-ஆம் ஆண்டு அகம் எனும் குழுவைத் தொடங்கியுள்ளனர். அதில் அவர் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் உற்சாகமாக செயல்பட்டிருக்கிறார். அகம் குழுவில் சாமி மூர்த்தி, அரு.சு.ஜீவானந்தன், ரெ.சண்முகம், கந்தசாமி போன்றோரும் இணைந்து இயங்கியுள்ளதோடு நூல்களை வாசித்து விவாதித்துள்ளனர். பெண்ணியம், தலித், இசை, நாடகம் என அவர்களின் விவாதிப்பு பல துறைகள் சார்ந்து இருந்துள்ளதை அவரின் கூற்றின்வழி அறிய முடிகிறது. பின்னர், அவர்களது உரையாடல்களைப் பதிவுச் செய்வதற்கு ஒரு இதழ் தேவைப்பட்ட வேளையில் மயில் இதழை அவர்கள் நாடியுள்ளனர். அவ்விதழ் மூலமாக ஒவ்வொரு மாதமும் ஒரு எழுத்தாளரை வரவழைத்து அவரோடு கலந்துரையாடல் செய்வதை வழக்கமாகக் கொண்டு  “அகம்” செயல்பட்டுள்ளது. எழுத்தாளர் எழுதத் தொடங்கியதற்கான காரணம், அவரது வாசிப்பின் மூலம், பின்னணி, எழுதுவதற்கான சாதகப் பாதகச் சூழல் போன்ற கலந்தாடல்கள் நிகழ்த்தப்பெற்றுள்ளன. அவர்கள் தங்களின் எழுத்துலக அனுபவங்களை இதில் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

இந்த நேர்காணல் மூலமாக மலேசிய எழுத்தாளர்கள் ஒரு சாதகமற்ற சூழலையே எதிர்நோக்கியிருந்தது புலப்பட்டதாகக் குறிப்பிடும் மா.சண்முகசிவா, நவீன இலக்கியம் சார்ந்த அவர்களின் புரிதலும் மரபு இலக்கியம் சார்ந்த பார்வையும் மலேசிய இலக்கியம் அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு செல்வதில் தடையாக இருந்ததாகக் குறிப்பிடுகிறார்.

முடிவாக

மலேசியா, சிங்கையின் இலக்கியம் சார்ந்த வளர்ச்சிக்குப் பலரின் முன்னெடுப்பும் அயராத உழைப்பும் இருந்துள்ளதை உணர முடிகிறது. வாழ்வின் எல்லா தருணங்களையும் படம்பிடித்துக் காட்டுவதில் முனைப்புக் காட்டிய எழுத்தாளர்கள், அவ்வாறான படைப்புகளின் தோய்வையும் சரிகட்ட பல முயற்சிகளை எடுத்துள்ளனர் என்பதை உணர முடிகிறது. அதில் பல அமைப்புகள் முகிழ்த்தெழுந்து பலரின் படைப்பாளுமை வளர உதவியுள்ளன. இவற்றின் பங்களிப்புகள் போற்றப்பட வேண்டியதாகும்.  அகம் இலக்கிய வட்டத்திற்குப் பிறகு மலேசிய நவீன இலக்கியத்தில் மெல்லிய தொய்வு ஏற்பட்டுள்ளது. அகம் இலக்கியக் குழுவை வெவ்வேறு தருணங்களில் முன்னெடுத்து வந்த மா.சண்முகசிவா வழியே 2007இல் அச்சிதழாக வந்த அன்றைய வல்லினம் குழுவினர் சிலர் இலக்கியத்தில் தீவிரமாக இயங்கியுள்ளனர். அந்த அச்சிதழில் மா.சண்முகசிவா தலையங்கம் எழுதியதும் அதற்கு அவர் ஆலோசகராக இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

எனவே மலேசிய நவீனத் தமிழ் இலக்கியத்தின் தொடர்ச்சி வல்லினத்தில் இருந்து மீண்டும் உயிர்பெற்று பயணிப்பதாக சொல்வதில் தவறேதுமில்லை.

 

மேற்கோள்

நவீன்..(2018).மீண்டு நிலைத்த நிழல்கள். மலேசியா:வல்லினம் பதிப்பகம்.

கங்காதுரை.(2017). டாக்டர் மா.சண்முகசிவா சிறுகதைகள் : நவீன அழகியலின் முகம். https://vallinam.com.my/version2/?p=3869 எடுத்தாளப்பட்டது.

நவீன்..(2016). இலக்கிய வட்டம் : ஒரு பார்வை.

http://vallinam.com.my/versionHYPERLINK “https://vallinam.com.my/version2/?p=2711″2/HYPERLINK “https://vallinam.com.my/version2/?p=2711”?p=HYPERLINK “https://vallinam.com.my/version2/?p=2711″2711 எடுத்தாளப்பட்டது.

சிவகுமரன்..ரா.(2000). சிங்கப்பூர்த் தமிழ்ப் படைப்பிலக்கிய வளர்ச்சியில் கோ.சாரங்கபணியின் பங்கு (The role of S Sarangapani in the Singapore Tamil creative writing). முதலாம் சாரங்கபாணி ஆய்வு மாநாடு.மலேசியத் தேசியப் பல்கலைக்கழகம்,

முகம்மது.சை.பீர்.(2003).மலேசியத் தமிழர்கள் வரலாறும் இலக்கியமும். லண்டன்.தேசம்.

பிற இணைப்புகள்:

 

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...