சொல்லிய கதையும் சொல்லாத கலையும்

10picமலேசிய இலக்கியத்தின் புதிய திசைகளைக் கண்டடைய, அதன் புதிய எல்லைகளைத் தொட்டுவிட பெரும் அடர்காட்டை அழித்துக் கொண்டு புதிய பாதைகளைத் திறந்து வைக்கும் ம.நவீனை ‘சாளரங்களைத் திறந்து வைக்கும் கலைஞன்’ என சு.வேணுகோபால் அவரது முன்னுரையில் குறிப்பிடுகிறார். அவரின் எழுத்துகளே அவரை அறிவதற்கான மிகப் பெரிய சாளரமுமாகிறது. சமூகத்தின் பார்வைக்கு ஏற்ப தனது பிம்பத்தை நிறுவ முயலாத நவீன், நிச்சயம் ஒரு சராசரி எழுத்தாளன் அல்ல. அதனை இந்த ‘போயாக்’ சிறுகதைத் தொகுப்பு மட்டுமல்ல அவரது பல படைப்புகளும் உறுதிப்படுத்திக்கொண்டேதான் இருக்கின்றன. நாரின் மணம், வெறிநாய்களுடன் விளையாடுதல், மண்டை ஓடி என சில உதாரணங்களை முன் வைக்கலாம்.

நவீனின் கதைகளை வாசிக்கும்போது, அவர் எழுத்துக் கலைக்குக் கொடுக்கும் அபாரமான உழைப்பு ஒரு கணம் நம்மை சிலிர்க்க வைக்கக்கூடியது. நம்மில் பலரும் இலக்கியமெனும் கலைக்கு அவ்வளவு எளிதாகக் கொடுத்துவிட முடியாத உண்மையான உழைப்பு அது.

மனித வாழ்க்கையில் மிக சுவாரசியமானது என நம்பக்கூடிய மிகச் சில வாழ்வின் பகுதிகள் மட்டுமே மீண்டும் மீண்டும் முன் வைக்கும் புனைவுகள் சில சமயம் சோர்வளிகக்கூடியவைதான். ஆனால் அந்தச் சோர்வு கதைக்கருவால் ஏற்படுவதல்ல. கதையை வாசகனுக்கு கடத்தும் காட்சிகளிலும் அதன் கோர்வையிலும்தான் ஒரு புனைவு சிறப்படைகிறது. அதுவே ஒரு கலைஞனுக்கான கலைத்தன்மையைத் தனித்தும் காட்டுகிறது. அந்த வகையில் நவீனின் கதைகள் எவ்விதத்திலும் சோர்வளிக்காதவை. அவரின் கதைகளில் அவர் தேர்ந்தெடுக்கும் கரு, களம், மாந்தர்கள், காலம் என எல்லாமே  சராசரிகளைக் கடந்தவை. இந்தத் தன்மையே நவீனுக்கு வாசகர்களை வெகு எளிதில் உருவாக்கிக்கொடுக்கிறது.

நவீனின் போயாக் சிறுகதைத் தொகுப்பிலிருக்கக்கூடிய கதைகள் எனது முதல் வாசிப்புக்குக் காட்டிய முகம் இரண்டாவது வாசிப்பின்போது வேரொன்றாக மாறி இருந்தது. ஒருவேளை, மூன்றாவதாக வாசித்தேனென்றால் அது  இன்னும் பல முகங்களை எனக்கு அறிமுகம் செய்யலாம். ஒரு வாசகனுக்கு அவனது ஒவ்வொரு வாசிப்பின்போதும் புதிய ஒன்றை புதிதாகவே அறிமுகம் செய்யக் காத்திருக்கும் படைப்புகள் பாதுகாக்கப்படவேண்டியவை மட்டுமல்ல அதிகம் பேசப்பட வேண்டியவையும்கூட.

மசாஜ் சிறுதையைப் பொறுத்தவரை ஒரு வாலிபனின் மசாஜ் நிலைய அனுபவத்தினூடே அவனது பாலியல் ரீதியிலான அனுபவத்தையும், அங்கிருக்கும் பெண்களை அவன் அணுகும் தந்திரத்தையும் திறந்து காட்டும் கதை. மலேசிய தமிழ் இலக்கியத்தைப் பொறுத்தவரையில் மலேசியாவில் ஒரு மசாஜ் நிலையத்தைப் பற்றி பேசக்கூடிய முதல் கதை இதுவாகவே இருக்கிறது.  மசாஜ் நிலையங்களுக்கு செல்லும் பழக்கம் இன்று சராசரியாகப் பலருக்கு இருந்தாலுமே அதை ஒப்புக்கொள்வதில் ஒருவித பண்பாட்டுச் சிக்கல் இருப்பதைப் பார்க்கலாம். அப்படிப்பட்ட சமூகப்பின்னணியிலிருந்து வந்தவர் இப்படி ஒரு கதையை அதற்குள் இருக்கும் பாலியல் தேவைகள், சேவைகள் என எதையும் கூட்டவும் குறைக்கவுமில்லாமல் எழுதியமை நிச்சயம் சவால்மிக்கது.

கதைச்சொல்லி மற்றும் ‘திரு’ என்ற இரண்டே வாலிபர்களால் வழிநடத்தப்படுகிறது கதை. இந்த மசாஜ் சிறுகதையில் திரு என்பவன் மசாஜ் நிலையங்களைப் பற்றி அதிக அனுபவமுடையவன். ஆனால் இக்கதையில் கதைச்சொல்லி பாத்திரம் அவ்வாறு அல்லாமல் மசாஜ் நிலையங்களுக்குப் புதியவனாகவே திருவால் அழைத்துச் செல்லப்படுகிறான். அங்கே ‘தரமான’ மசாஜ் சேவையைப் பெறுவதற்கு எப்படி நடிக்க வேண்டுமென கற்றுத் தருகிறான் திரு.

மசாஜ் செய்யும் பெண்களின் மீது அன்பாக, அக்கறையாக கருணையாக இருப்பது போல பேச வேண்டும் என கற்றுக்கொடுத்த திரு ஒருபோதும் உன் கண்களை அவளிடம் காட்டிவிடாதே என எச்சரிக்கிறான். அது நிச்சயம் உன்னைக் காட்டிக்கொடுத்துவிடும். ஒரு பெண்ணிடமிருந்து கிடைக்கும் சேவையைத் தரமானதாக உணர்வுள்ளதாகப் பெற்றுக்கொள்ள  அவளின் மனதை சலனப்பட வைக்கும் நாடகத்தை எவ்வளவு சொல்லிக்கொடுத்தும் கதைச்சொல்லியால் கற்றுக்கொள்ள முடியவில்லை. அவனுக்கு நடிக்க வரவில்லை. தன் அப்பாவைப் போல தான் நடிப்பில் சிறந்தவனல்ல என நினைக்கிறான். திருவிழா கூத்தில் அப்பாவின் அழுகை ஓர் ஓநாயின் ஊளை போல இருந்ததை நினைவுக்கூறுகிறான். அது அவனைப் பலமுறை அச்சுறுத்திய அழுகையாகவே இருந்துள்ளது. நாடக மேடைகளில் மட்டுமே அப்படி அழுத அப்பா, வீட்டில் ஒரு போதும் அழுதிடாத அப்பா ஒரு நாள் தன் முன் அழும்போது அந்த அழுகை முற்றிலும் மாறுபட்டதாக இருந்ததாகவும் கண்களில் மௌனமாக நீர்ச்சொட்டிக்கொண்டே இருந்ததாகவும் கதையில் சொல்லப்பட்டுள்ளது. பலமுறை தன்னை அச்சுறுத்திய ஆங்காரமான அப்பாவின் அழுகை நிஜத்தில் வேறொன்றாக மாறுபட்டிருப்பதைச் கதைச்சொல்லி சொல்கிறார். இந்தக் கதையின் சாரத்தை உணர எனக்கு உதவிய காட்சிகள் இவை.

இறுதியாக ஒரு ஈழப் பெண்ணிடம் மசாஜுக்கு செல்லும் இடத்தில் அவள் தன் சுய கதைகளைப் பேசி ஆறுதல் தேட முயல்கிறாள். ஆனால் தான் கட்டிய 150 ரிங்கிட் பண விரயமாவதை விரும்பாத நிலையில் கறாராக பேசுகிறான். அவளும் பேச்சை நிறுத்தாமலேயே மசாஜ் செய்கிறாள்.

 “நான் திரும்பி அவள் கண்களைப்பார்க்க முயன்ற போது மேலே சரிந்த மார்புகளால் முதுகை நீவத்தொடங்கினாள். எனக்கு அப்பா ஒப்பாரியை ஊளையிடும் சத்தம் கேட்டது.” இப்படிக் கதை முடிகிறது.

மானுட உணர்வுகள், எவ்வளவு போதித்தாலும் எவ்வளவு பயிற்சி எடுத்தாலும் நடிப்பின் நேர்த்தியில் வருவதில்லை. அது ஒரு கானகம் போல திட்டமிடப்படாமல் தன்னுள் ஒரு விதையை முளைக்க வைக்கிறது. அழுகை என்பது துக்கம் என்பது ஒரு சிரிப்பிலிருந்தும் எழலாம். காமத்திலிருந்தும் எழலாம். வன்மத்திலும் அது வெளிப்படலாம். ஆனால் துக்கம் ஒருபோதும் தன்னை துக்கமாகக் காட்டிக்கொள்வதில்லை என்பதாகவே கதையை நான் புரிந்துகொள்கிறேன்.

யாக்கை சிறுகதையும் மசாஜ் சிறுகதைக்குரிய களத்திலிருந்தே தொடங்கி அங்கேயே முடிகிறது. ஆனால், அந்த களங்களுக்குப் பின்னால் நவீன் காட்ட நினைக்கும் முகங்களும் வலிகளும் நிச்சயம் வேறுபட்டவை. ஒரு பாலியல் விடுதியிலிருக்கும் தமிழ் பெண்ணின் குரலில் சொல்லப்படும் காட்சிகள் நம் மனதை பல திசைகளிலிருந்து தாக்கக்கூடியவை. அது பல கேள்விகளை நம்மில் எழுப்பக்கூடியவை. இது இந்தத் தொகுப்பில் இருக்கும் மிக முக்கியமான கதையாகவே நான் பார்க்கிறேன். இந்தத் தொகுப்பிற்கு யாக்கை என்றே பெயரிட்டிருந்தால் இன்னும் பொருந்தியிருக்கலாம்.

“ஏன் என்னைய எடுத்தீங்க சார் வர்ரவன் எல்லாம் பிலிப்பினோ, இந்தோ காரியதான் தேடுவானுங்க.” என்ற கெத்திரினாவின் குரலிலிருந்தே கதை தொடங்குகிறது. அந்த அறைக்குள் இறந்து போன தன் அப்பாவைச் சுற்றியே அவளது பேச்சு வட்டமிடுகிறது. எல்லா பாலியல் தொழிலாளிகளைப் போலவும் தன் நிலையை நியாயப்படுத்திக்கொள்ள இவளும் தன் அப்பாவின் மரணத்தைக் காரணம் காட்டுகிறாளென அவனின் குரலில் ஒரு அலட்சியத் தொனி ஒலிக்கிறது. கப்பலிலிருந்து தவறி கடலில் விழுவதும் மீண்டும் ஏறிக்கொள்வதும் என்ற இயல்பான ஒரு விபத்திலிருந்து தன் தந்தைக்கு நிகழ்ந்த மிகப்பெரிய விபரீதத்தை அவள் அவளது பாலியல் சேவைகளுக்கு மத்தியில் சொல்லி தன் வெறுமைகளைத் தற்காலிகமாகத் தூர நிறுத்துகிறாள். கடலில் அவளுக்காக மட்டுமே உயிரை காப்பாற்றி வைத்துக்கொண்டிருந்த அப்பாவின் உடலில் மீன்கள் கடித்ததைச் சொல்கிறாள். கடலில் மிதக்கும் அப்பாவைப் பற்றி அவள் சொல்லும்போது கடல் காற்று, கடலலை, மீன்வாடை, கடலில் மிதந்த அப்பாவின் துடிப்பு என எல்லாம் அந்த அறையை முழுவதுமாக வியாபித்திருந்தது. கெத்திரினாவின் மீது ஏற்படக்கூடிய கருணையை தவறியும் கூட அந்த ஆடவனின் கண்களிலோ குரலிலோ நம்மால் பார்க்கமுடியவில்லை.

மேகங்கள், நட்சத்திரங்கள், கடல்கிழவி, கடல் பாசி என அந்தக் கடல் பரப்பிலிருந்துக் கொண்டு தன் கண்களுக்கு அகப்பட்ட ஒவ்வொன்றிலுமே எஞ்சிய நம்பிக்கையை மீட்டுக்கொண்டிருந்த அவளது அப்பா அங்கிருந்து தன் மகள் புதிதாக சேர்ந்த கல்லூரிக்குச் செலுத்த வேண்டிய கட்டணம் பற்றியும் அவளுக்கு தாய் இல்லை என்பது பற்றியும் சிந்திக்கிறார். கடலுக்குச் செல்லும் ஒவ்வொரு முறையும் இந்தக் கடல் கிழவியை நம்பியே அவளைத் தனியாக விட்டு வந்ததை நினைக்கிறார். தன் முன்னே கைலியைத் தூக்கிக் காட்டி அவளிடம் ஆபாசமாகப் பேசும் தன் சகாக்களில் ஒருவனான கோபி போன்ற ஆண் வர்க்கத்துக்கு மத்தியில் தன் பெண்ணைத் தனியே விட்டுச் செல்லமுடியாத பரிதவிப்பில் தனது இறுதிச் சொட்டு உயிரை அவளுக்காகவே பாதுகாக்கிறார். கடலிலிருந்து அவரை மீட்கும் அந்த இறுதி கணம் வரை காத்திருந்து மூர்ச்சையாகியவர் இரண்டு மாதங்களுக்குப் பிறகு கண்விழித்தபோது தான் கடலில் மிதக்காததை உறுதிப்படுத்திக் கொண்டு நிம்மதியடைகிறார். ஆனால் அப்போது அவள் பார்த்த கெத்திரினா வேரொருவளாக அவர் கண்களுக்குப் படுகிறாள். அந்த மாற்றமே அவரை அதிகம் சுடுகிறது. அவளை அதிக நேரம் உற்று கவனிக்கிறார்.  அவள் முன்பைக் காட்டிலும் பொலிவாக இருக்கிறாள். தன் மகளுக்காக மீட்டு வந்த உயிரை மிக சாதாரணமாகக் கடலின் அதே பகுதியில் விழுந்து மீன்களுக்குத் இரையாக்குகிறார். அவரது அத்தனை போராட்டமும் மனபலமும் ஒரே ஒரு உண்மையின் முன் நிற்கமுடியாமல் அர்த்தமின்மையாவதைக் கதை சலனமற்ற குரலில் சொல்லிச்செல்கிறது. அந்த அர்த்தமின்மையின் அர்த்தம் நமக்குள்ளும் அச்சத்தைப் படரவிடக்கூடியது. அதுவரை எந்த உணர்வுகளையும் வெளிப்படுத்தாத அவன் கெத்திரினாவின் அப்பாவின் முடிவை கேட்டபோது அவசரமாக காற்சட்டையை மாட்டிக்கொண்டு புறப்பட தயாராகிறான்.

உடல் என்பதற்கு அவன் வைத்திருந்த அத்தனை எண்ணங்களும் சிதறடிக்கப்படும் கணம் அது. அப்பாவின் முதுகை திண்ணும் மீனும் பெண்ணின் உடலைத் திண்ணும் அவனும் ஒன்றென அறிந்துகொண்ட நிமிடங்கள் அவை. உடலைத் திண்ணக்கொடுத்து வாழும் மனிதனின் அவலத்தில் தன்னை இழிவாக உணரும் அவன் அவ்வாறு ஓடுவதில் ஆச்சரியமில்லை. யாரோ யாருக்கோ இரையாவதும் இரையாக்கப்படுவதுமாக வாழ்க்கை புதிய புதிய அத்தியாயங்களைத் திறந்தும் முடித்தும் வைக்கிறது.

இந்தக் கதையில் கெத்திரினாவின் வாழ்க்கையில் இருக்கக்கூடிய வெறுமையும் சூன்யமும் கதையைப் படித்து முடித்தபிறகு நம்மை ஆட்கொள்கிறது. நிரந்தமான வெறுமையினை அவள் எதைக் கொண்டு போக்குவாள். மசாஜ் சிறுகதையில் வரும் ஈழ பெண்ணை நாம் இவளோடு பொருத்திப் பார்க்கலாம்.

அவளும் சில மணி நேரம் மட்டுமே தன்னோடு இருக்கப்போகிற ஒரு ஆடவனிடம் தன்னுடைய கதையை மிக உரிமையுடன் கூறுகிறாள். அந்த அறைக்குப் பின்னால் இருண்டு கிடக்கும் அடர்ந்த வெறுமையைக் கொஞ்சம் தள்ளி நிறுத்த அவர்கள் கண்டடையும் வடிகாலாகவே அந்த உரையாடல் அமைகிறது.  உண்மையில் நவீன் கதையைச் சொல்பவரல்ல என ஓரிரு சிறுகதைகளை வாசிக்கும்போதே அறியலாம். மானுடத்தின் நுணுக்கமான பகுதிகளைத் தொட்டுப்பார்க்க அவர் அமைக்கும் களங்கள் மட்டுமே அவை. அந்த திடமான களத்தில் இருந்து அரூபமான உணவுகளை நோக்கி வாசகர்களை அழைத்துச் செல்கிறார்.

‘ஜமால்’ கதைக்குள் புதைந்து கிடக்கும் தாய்மையின் ஈரக் கரம் நம்மையும் வருடக்கூடியது. இக்கதையில் நவீன் ‘நான்’ என்ற பாத்திரத்தின் வழி தன்னையே பாத்திரமாக்கியுள்ளார்.

தற்காலிகமாக வேலைக்குச் செல்லும் தொழிற்சாலையில் சக தொழிலாளியுடன் ஏற்படும் சின்ன சின்ன சலசலப்புக்கும், சீண்டல்களுக்கும் மத்தியில் நிகழ்காலத்தையும் கடந்த காலத்தையும் பின்னிச் சொல்கிறது கதை. அம்மா இறந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஏற்பட்ட விபத்தில் முதல் முறையாக அம்மாவை நினைத்து ஏங்கும் அவர் சின்ன வயதில் தனக்கு நிகழ்ந்த சின்ன சின்ன விபத்துகளின் போது அம்மாவின் கண்களில் இருந்த பதற்றத்தை நினைவுகளாக அடுக்கிச் சொல்லுகிறார்.

இப்போது அம்மா இருந்திருந்தாள் எப்படி பதறியிருப்பாள் என யோசிக்கிறார். ஆனால் எவ்வளவு முயற்சித்தும் அம்மாவின் கருணை முகத்தை நினைவிலிருந்து மீட்க முடியவில்லை. அவரது தூக்கத்தில்கூட விபத்தில் சிதறியிருக்க வேண்டிய தன் தலையை அம்மா பார்த்தால் அவரது கண்கள் என்னவாகும் என அம்மாவையும் அவளது கண்களையுமே தேடி தோற்கின்றன. சித்தியோடு கழியும் அப்பாவின் பொழுதுகளின் தனக்கான அக்கறைகள் எதுவும் இல்லாமல் போனதில் இருக்கும் வெறுமையினை நவீன் சொல்லவே இல்லை. ஆனால் அது வாசகனின் கண்களுக்குத் தெரியவே செய்கிறது. தொழிற்சாலையில் பணிப்புரியும் ஒரு மலாய்ப் பெண்ணின் ஒப்பனையை இரசிக்கும் அவரே தொழிற்சாலையிலிருந்து தூசு படிந்த ஆடையோடும் களைத்த முகத்தோடும் திரும்பும் தன் அம்மா ஒரு போதும் இப்படி இருந்ததில்லையே என மீண்டும் அம்மாவையே அவளோடு ஒப்பிடுகிறார்.

இப்படி தன்னைச் சுற்றி நடக்கும் ஒவ்வொன்றிலும் அம்மாவைப் பொருத்திப் பார்க்கும் இளைஞனாகவே அவரை நாம் அறியமுடிகிறது. ஜமால் தொழிற்சாலையில் பணிப்புரியும் சக தொழிலாளி. அவனுடன் ஏற்பட்ட முறுக்கலில் குட்டி குட்டி சண்டைகளில் தீவிரமாக மூழ்கியிருந்தபோது  ஒரு நாள் கதைச்சொல்லியின் கைவிரல்கள் இயந்திரத்துக்குள் சிக்கிக்கொள்கின்றன. சற்றுமுன் சண்டையில் ஈடுபட்டிருந்த ஜமால் அவரைப் பதற்றமாகவே காரில் ஏற்றி மருத்துவமனைக்குக் கொண்டு செல்கிறான். அவரது கனவுகளில் கற்பனைகளில் தேடிய அம்மாவின் கண்களைக் கதையின் இறுதியில் நாம் யாருமே கொஞ்சம் கூட எதிர்பார்க்காத ஜமாலின் கண்ணில் பார்த்ததாக கதை முடிகிறது.

இந்தக் கதையில் எந்த இடத்திலும் அம்மா இல்லாத வலியை அதன் ஏக்கத்தை மிதமிஞ்சிய உணர்வுகளாலோ வலிந்த சொற்களாலோ வாசகனிடம் கடத்த நவீன் முயற்சிக்கவே இல்லை. கதை முழுவதும் அங்கதமே பரவியுள்ளது. ஆனால் அது கடும் மனவேதனையைத் தருகிறது. எல்லா காட்சிகளுக்குப் பின்னாலும் புதைந்து கிடக்கும் அதன் உள்ளுணர்வுகள் நம்மை அதன் வசப்படுத்திக் கொள்கின்றன. இயந்திரங்களும், சத்தங்களும் கூடியுள்ள ஒரு தொழிற்சாலைக்குள்ளிருந்தும் கூட தாய்மைக்கான ஏக்கத்தை அவரால் சொல்ல முடிகிறது என்பது ஆச்சரியம்.

தலித்தியத்தை பேசக்கூடிய வண்டி சிறுகதையும் இத்தொகுப்பிலிருக்கும் மிகச் சிறந்த கதைதான். சு.வேணுகோபால் இக்கதையை தமிழில் எழுதப்பட்ட மிகச்சிறந்த தலித் சிறுகதைகளில் ஒன்று எனச் சொல்வது குறிப்பிடத்தக்கது.

தலித் வாழ்வியலை பேசக்கூடிய வண்டி சிறுகதையும் இத்தொகுப்பிலிருக்கும் மிகச் சிறந்த கதைதான். சு.வேணுகோபால் இக்கதையை தமிழில் எழுதப்பட்ட தலித் சிறுகதைகளில் தலையாயது எனச் சொல்வது குறிப்பிடத்தக்கது.

எம்.ஜி.ஆர் சுடப்பட்ட நிகழ்வையும் பின்னர் அவர் இறப்பையும் காலப்பின்னணியாக வைத்து மிக நுட்பமாகப் புனையப்பட்ட கதை இது. ஒரு மாட்டு வண்டியை முன் வைத்து நகரும் இந்தக் கதையில் சிறுவன் தோமஸ் அவனின் தந்தை மரியதாஸ் (ராமச்சந்திரன்) மற்றும் தாத்தா வீரையன் ஆகியோரை முக்கிய பாத்திரங்களைக் கொண்டே அமைக்கப்பட்டுள்ளது கதை. இக்கதை மூன்று தலைமுறைகளைக் காட்டினாலும் அதன் பின்புலம் ஒரே மையத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அது அந்த வண்டி.

கார்ட்டூன்களின் தாக்கத்தால் சிறுவர்களின் கனவுகளை அதிகம் அலங்கரிக்கும் கிருஸ்துமஸ் தாத்தாவின் ஸாண்ட்டகிளாஸ் வண்டியாகவே தோமஸ் தாத்தா வீட்டில் பார்க்கும் அந்த வண்டி உள்ளது. அவ்வண்டி அவனது தாத்தாவுக்கு எம்.ஜி.ஆர் ஓட்டிய மாட்டு வண்டியாக இருந்ததையும் அதே வண்டி அவனது அப்பாவின் பார்வையில் எப்படி குப்பை வண்டியாக மாறிப்போனது என்பதையும் கதை வெவ்வேறு காலங்களில் சொல்லி நகர்கிறது.

தன்னுடய சாதி  அடையாளங்களிலிருந்து  தன்னை விடுவித்துக் கொள்ளவும், அதன் பிடியிலிருந்து தன்னைத் தளர்த்திக்கொண்டு முற்றிலும் வேறொருவனாக தன்னை நிறுவிக்கொள்ள ஒரு தனிமனிதன் எடுக்கும் முயற்சிகளை ராமச்சந்திரனாக இருந்து மரியதாஸாசாக மாறிய தோமஸின் அப்பாவின் மூலம் சொல்லப்படுகிறது. எம்.ஜி.ஆராகவே தன்னை கற்பிதம் செய்து கொண்டு வாழ்ந்துவிட்ட தனது அப்பாவிற்கு கொல்லி வைக்க மறுக்கும்போதும், துக்கச் சோறு சாப்பிடாமல் போகும்போதும், மற்றவர் கொடுக்கும் உணவுகளைத் தோமஸ் உண்ண அனுமதிக்காத போதும், அம்மா வீட்டிற்குச் செல்லும்போது யாரின் பார்வையிலும் அகப்பட விரும்பாத போதும் அவர் தன்னை வேறொருவனாக நிறுவ முயற்சித்துக் கொண்டே இருக்கிறார்.

பள்ளியில் தனக்கு நிகழும் ஒவ்வொரு புறக்கணிப்புகளையும் அவமதிப்புகளையும் முறையிடும் ராமச்சந்திரனுக்குக் கொடுப்பதற்காக வீரய்யா வைத்திருக்கும் பரிசுகளும் அது நேர்த்தியாக வண்ணத் தாள்களில் மடிக்கப்பட்டிருப்பதும் இக்கதையில் நுட்பமானவை. அந்தப் பரிசுகளை ஆசையாகவே தன் நண்பர்களிடம் காட்டும் மரியதாஸ் அவை தன் நண்பர்கள் வீசிய குப்பைகள் என அறிகின்ற தருணம் நிச்சயம் ஒவ்வொரு வாசகனை பாதிக்கக்கூடியது.

ராமச்சந்திரனின் அம்மா செய்யும் மலம் அள்ளும் வேலையும் அதன் மீது சமுதாயத்தின் ஏளனமும் இக்கதையில் கவனிக்கப்பட வேண்டியதே. பொதுக் கழிப்பறையின் மலங்களை வாளியில் சேமித்து அதை சீனன் தோட்டத்தில் உரமாகக் கொட்டும் அவளது வேலையை தாழ்த்தி பார்க்கத் தெரிந்த  ஒரு சமூகம் அந்த வாளிகளில் கல்லெரிந்து பார்க்கவும் துணியுமென கதை அதன் அகோர முகத்தை திறந்து காட்டியுள்ளது. அந்தக் கல்லடியிலிருந்து ஏளனப் பேச்சிலிருந்தும் சிக்காமல் தன்னைப் பாதுகாக்க மரியதாஸின் அம்மா யாருடைய கண்ணிலும் சிக்காமல் விடிவதற்குள் சுற்றுப்பாதையில் போவது ஒரு தலித் மக்களின் வாழ்க்கையை அவர்களின் நிராகரிப்புகளோடு காட்டுகிறது.

இப்படி நிராகரிப்புகளால் ஏற்பட்ட விரிசல்களை ராமச்சந்திரனால் மேலுமொரு நிராகரிப்பால்  மட்டுமே ஈடு செய்ய முடிகிறது. தன்னை ஒரு போது ஏமாற்றாத தந்தையை மல வாளிகளுடன் சமுதாயத்தின் ஈனப்பார்வையயும் சேர்த்து சுமந்த தன் தாயை இறுதியாக தன் மத, சாதிய அடையாளங்களை அவர் நிராகரிக்கிறார்.

மரியதாஸாக வாழும் ராமச்சந்திரன் என்னதான் தன்னை தன் அடையாளங்களை புதிய ஒன்றில் மறைத்துக் கொண்டாலும் எம்.ஜி.ஆரின் மரணம் குறித்த அவனது வருத்தமும், பொட்டு வைக்காத அம்மாவின் முகம் ஏற்படுத்தும் வருத்தமும் அவருக்குள் இருக்கும் ராமச்சந்திரனை அவ்வப்போது காட்டிக்கொண்டே இருக்கிறது.  பாட்டி வீட்டில் இருந்த அவரது அப்பா கொடுத்த பரிசுப் பொட்டலங்களைக் கையிலெடுத்துக் கொண்டு ஸாண்ட்டகிளாஸ் வண்டியில் ஏறி கிருஸ்மஸ் தாத்தாவாக கற்பிதம் செய்து கொள்ளும் தோமஸின் கண்களில் அவரால் எம்.ஜி.ஆரை தான் பார்க்க முடிந்தது. அப்போது ஈரம் படர்திருக்கும் அவரது கண்களும் ராமச்சந்திரனுக்குரியதுதான்.

சாதிக்கு எதிராகப் பிரச்சாரம் என எதுவும் செய்யாமல், ஒரு வாழ்வை அதன் காத்திரத்துடன் அறிமுகப்படுத்தி அதன் சிக்கலையும் புரியவைக்கும் இக்கதை தனித்துவமானதுதான்.

பேச்சி சிறுகதையும் மலேசிய சிறுகதைகளில் ஒரு புது தடத்தையே உருவாக்கி வைக்கிறது. கதையின் இயல்புத் தன்மைக்காக வரும் காட்சிகள் கூட நம் மனதை அசைத்துப் பார்ப்பவை. அது ஆர்ப்பாட்டமோ அதீத உணர்ச்சியோ இல்லாமல் சிறு ஊசி முனையால் நம் மனதைத் தைப்பவை.

ஒருவேளை அதுதான் அவளுக்குக் கடைசி மாலையாக இருக்கலாம். செல்வம் என் படத்தைப் பொன்னிக்குப் பக்கத்தில் மாட்டி வைத்தாலே பெரிய கொடுப்பினைதான். நினைவு வந்தால் கைப்பேசியில் பார்த்துக்கொள்ள படங்களைக் கைப்பேசியில் சேமிக்கும் தலைமுறை அவன். நான் நினைவுகள் உருவாக்க படங்களைச் சுவர்களில் மாட்டி வைப்பவன்.” போன்ற வரிகளின் மூலம் அந்தக் கதைக்குள் இயங்கிக்கொண்டிருக்கும் ஒவ்வொரு ஜீவனின் துடிப்பையும் நம் கைகளால் தொட்டுணர வைக்கிறார். உண்மையைச் சொல்ல வேண்டுமெனில் இப்படிப்பட்ட வரிகளுக்காகவே நான் நவீனின் படைப்புகளை அதிகம் விரும்புகிறேன்.

நிகழ்காலத்திலிருந்து கடந்த காலத்தை நோக்கிச் செல்கிறது கதை. தனக்கு நடந்ததை மகனிடம் கூறி அதை கதையாக பதிவு செய்யும் தகப்பனின் குரலில் இக்கதை எழுதட்டுள்ளது. மீண்டும் நவீன் தன்னையே தகப்பனாக உருவகித்துள்ளார். காலம் காலமாக நாம் பெண்மைக்கென சூட்டி வைத்திருக்கும் அச்சம், மடம், நாணம் ஆகிய அடையாளங்களிலிருந்து அவள் வெளிப்படும் தருணம் அவளது ஆங்காரமான ஆவேசமான முகங்கள் ஓர் ஆணின் அகவெளியில் உண்டாக்கும் படிமங்களை நவீன் இக்கதையில் முன்வைக்கிறார். காலம் காலமாகப் பார்த்து வளர்ந்த அல்லது பார்க்க விரும்பும் ஒரு பெண்மையின் முன்தான் ஆண்மையின் கம்பீரம் அழகுபெறுவதை  கதை முன்வைக்கிறது. பொறுமையின் உச்சமாகவும் அரவணைப்பின் அடையாளமாகவும் பணிவிடைகளை செய்யும் அவளின் ஆவேசங்களை அவன் வழிய தூண்டுகிறான். அப்போது மட்டும் அவன் பார்க்கும் அவள் முகம் அவனை அச்சுறுத்துபவை. அதற்குப் பிறகு அவன் அவளை நெருங்கிச் செல்லும் ஒவ்வொரு முறையும் அந்த முகமே அவனை அச்சுறுத்துகிறது. அவள் கண்களில் ஒரேயொரு முறை பயத்தைப் பார்த்துவிடத்துடிக்கிறான். கண்ணீரை வரவழைக்க முயற்சித்து தோற்கிறான்.  ஓர் ஆண் தன்னை வீரனாகவே உணர்ந்துகொள்ள பெண்ணிடம் பெண்மையின் பங்கு எத்தனைப் பெரியது என ஓர் ஆணின் குரலைப் பதிவு செய்கிறது.

பின்னர் சாமி குத்தமோ என தாத்தா கூறவே அவன் பேச்சியம்மனைத் தேடி காட்டுக்குள் செல்லும்போது அங்கே காட்டுபன்றியிடமிருந்து தன்னைக் காப்பாற்றும் ஒரு பெண் உருவத்தைப் பேச்சி என நம்புகிறார்.  அவன் பேச்சி என நம்பும் அந்த உருவத்தின் பாதங்களும் ஆங்காரமென வெகுண்டெழும் சமயங்களில் பார்த்த தன் மனைவியின் பாதங்களும் ஒன்று போல இருக்கின்றன. அது பேச்சியின் பாதமென தனக்குள் கூறிக்கொள்கிறான். ஒரு பெண்ணுக்குள்ளிருந்து முயங்கி எழும் ஆங்காரத்தையும் அன்பையும் படிமமாக்குகிறது கதை. மனைவின் ஆக்ரோஷங்கள் ஒரு கணவனுக்கு ஏற்படுத்தும் மனத்தடைகளை இப்படி படிமங்களோடும் காட்சிகளோடும் நான் வாசிக்கின்ற முதல் கதை இதுவாகவே இருக்கிறது.

நாகம் சிறுகதையும் மாறுபட்ட கோணத்திலிருந்தே பின்னப்பட்டிருக்கிறது. இப்படி ஒரு புனைவை எழுதுவதற்கான உந்துதல் இவருக்கு எங்கிருந்து வந்திருக்குமென நம்மை சிந்திக்க வைக்கக்கூடியது. மிக மேலோட்டமாக நாம் பார்த்துவிட்டுப் போகும் வாழ்க்கையை மிக பக்கத்தில் கொண்டு வந்து அதன் ரகசியங்களை ரகசியமாகவே காட்டிச் செல்கிறார் நவீன்.

இக்கதையில் வரும் நாகம் கதையின் பக்திகளுக்கிடையில் ஊர்ந்து போகிறது என்றாலும் நவீன் சொல்ல வருவது நாகத்தைப் பற்றி மட்டுமல்ல.

நாகத்தின் ஆசி பெற்றவர் என ஊரே நம்பும் சாமியைத் தீண்டிய கருநாகத்தைக் கொன்று விட்டக் குற்ற உணர்ச்சியில் இருக்கும் பக்கிரியிடம் சாமி சொல்லும் கதையாக சிறுகதை மலர்கிறது.

வாழ்வுக்கும் சாவுக்குமான எல்லைக்கோட்டில் நின்று கொண்டிருக்கும் ஒருவனின் உள்ளத்தில் புதைந்து கிடக்கும் உண்மைகள் அவனை எவ்வளவு பயமுறுத்துபவை என்பதை சாமியின் கதாபாத்திரம் வழி அறியலாம். ஊர் மக்களை அச்சுறுத்திய மஞ்சள் நாகத்தைக் கொல்ல துடிக்கும் மாடு மேய்க்கும் காசியாகவே சாமி கதையின் தொடக்கத்தில் அறிமுகமாகிறார். ஊரெல்லாம் தேடி அழைந்து பிடிக்க முடியாத அந்த நாகத்தை முத்தம்மாவின் வீட்டில் பார்க்கும்போது அதன் முன் தன்னை ஓர் அடிமைப்போல பாவித்து வணங்கி நின்ற காசி இன்று ஊர் மக்களிடம் பெறும் நம்பிக்கைப் பெற்று சாமியாக இருக்கிறார். அந்த நாகம் அன்றே அந்த ஊரிலிருந்து சென்று விட்ட ரகசியத்தை சாமி பக்கிரியிடம் சொல்லும்போது அவன் தான் கொன்றது சாமி நாகமல்ல என ஆறுதலடைகிறான். தான் இறந்து விட்டால் இந்த ரகசியத்தை மக்களிடம் சொல்லிவிடும்படியும் சன்மானமாகக் கிடைத்த பணத்தில் வாங்கிய நகைகளை மக்களிடம் சேர்த்துவிடும்படியும் சொல்லும் சாமி இன்னும் சொல்ல முடியாத இரகசியமொன்று நெஞ்சுக்குள் அடைத்துக் கொண்டிருப்பதைக் கூறுகிறார். அது தெய்வப்பெண்ணாகப் பார்க்கப்பட்ட முத்தம்மாவுக்கும் அவருக்குமான உறவு என நாம் அனுமானிப்பதற்கான கூறுகளை கதை வழங்குகிறது.

இறுதி நாட்களுக்காகக் காத்திருக்கும் பக்கிரியும் சாமியைப் போலவே ஊர்மக்களிடம் பெரும் நம்பிக்கைக்குரியவனாக இருக்கிறான். அவனும் தனக்குள் புதைந்து கிடக்கும் இரகசிய சுமையை இறக்கி வைக்க நம்பகமான ஒருவனைத் தேடிக்கொண்டிருக்கிறான். இல்லாத நாகத்தைப் பற்றி சொல்லக் காத்திருக்கும் அவன் சாமியின் கழுத்தை நெறித்து கொன்றதை மட்டும் எப்போதும் சொல்லப்போவதில்லை எனவே அது தனக்குள் சுமையாகவே தங்கிவிடுமென நினைத்துக்கொள்கிறான்.

மனித வாழ்க்கையின் சுழற்சியை மிக சின்ன வட்டத்துக்குள் அடக்கி பெரும் அலட்சியத்திலிருந்து பெரும் துணிச்சலிலிருந்து பெரும் குற்றத்திலிருந்து ஒருவன் நழுவி தீராத அச்சத்துக்குள் சிக்கிக்கொள்ளும் மாய எல்லைக் கோடுகளைக் காட்டுகின்றது கதை. வாழ்வில் சொல்ல முடியாத ஒரு ரகசியத்தை ஒவ்வொருவரும் வெவ்வேறானவற்றைச் சொல்லிச் சொல்லி கடத்த முயல்வதும் அந்தச் சொல்ல முடியாத ஒன்று எப்போதும் ரகசியமாக நிலைப்பதும் கதையை வாசித்து முடித்தபின் உணர முடியும். இதை ஒருவகையில் அறிவார்த்தமான கதை எனலாம். காட்சிகளை கோர்த்துள்ள விதத்திலும் அதை வடிவாக சமர்ப்பிக்கும் நேர்த்தியிலும் உணர்வுகளைக் காட்டிலும் உத்தியே ஆச்சரியப்படுத்துகிறது.

ஓர் இளைஞனின் காமப் பார்வையாக மட்டுமே தன்னை நிறுவிக்கொண்ட போயாக் கதை எனது அடுத்த பல வாசிப்புக்கு அதன் புதிய புதிய சிந்தனைகளைத் திறந்து காட்டியது. நவீன் மீண்டும் தன்னையே பாத்திரமாக்கி அதற்குள் இயங்கும் இளைஞனுக்கு ஒரு சராசரியர்களின் சாயத்தைப் பூசி நிஜத்தை நிஜமாகவே நிறுவுகிறார். நான் என்ற சொல்லைத் தவிர வேரெங்கும் அவர் தன்னை அதில் தவறியும் சிதறவிடவில்லை. அவர் கதையின் ஓர் ஓரத்தில் நின்று கொண்டு ‘நான்’ என்ற அவனை அவன் போக்கிலேயே விட்டிருக்கிறார்.

சரவாக் மாநிலத்தில் உள்ள பள்ளிக்கு ஆங்கில ஆசிரியராக அரசாங்கதால் அனுப்பப்படும் ஓர் இளைஞனுக்கான அந்த புதிய மாநிலம் புதிய மனிதர்கள் புதிய பண்பாடுகள் என ஒவ்வொன்றையும் நவீன் நம் கண்முன்னே நமக்குமானதாக்கியுள்ளார். புறநகர் சார்ந்த இடத்தில் அவர் காணும் அனைத்திலும் இருக்கும் வெறுமையை அவர் போக்கிக்கொள்ளக்கூடிய இடமாகவே ஈபானிய பெண் ஒருத்தி வருகிறாள். கவர்ச்சிமிக்க அவளது தோற்றம் மீண்டும் மீண்டும் அவரையே கவனிக்கும் அவளது பார்வை அந்த ஆசிரியருக்கு கிளர்ச்சியை மூட்டுகிறது.

பவித்திரா

அந்தப் பெண்ணின் அப்பா காட்டில் தவம் புரிபவர். மாந்திரீக சக்தி பெற்றவர். தன் ஊர் பெண்களோடு உறவு வைத்துக்கொண்ட பின் இங்கிருந்து வெளியேற முடியாது. அப்படி ஒரு வேளை ஏமாற்ற நினைத்தால் அவளது அப்பா அவர்களின் நெற்றியில் ஆண்குறியை வளர வைப்பார் என கதைச்சொல்லி அறிவது அவரை மட்டுமல்ல வாசகனையும் திடுக்கிடவே வைக்கிறது. அது நவீனின் அபாரமான கற்பனை மேல் ஏற்படும் பிரமிப்பு. அந்தப் பெண்ணே அவரை நெருங்கி வந்த ஒரு நாள் சபலத்தின் நுழைவாயிலில் வைத்த முதல் அடியைச் சட்டென பின்னெடுக்கிறார். பொதுவாக அறிவைக் காட்டிலும் மனமே வலிமையானது. இங்கு அந்த மனதை வெல்லக்கூடிய இளைஞனாகத்தன் அவர் இருக்கிறார். சிக்கலிலில் மாட்டிக் கொள்ள விரும்பாத அறிவின் எச்சரிக்கைகள் அவரின் காமத்தை வென்றுவிடுகின்றன. ஆனாலும் அதன் இச்சையில் தான் எடுத்து வைத்த முதல் அடி அவரை தொடர்ந்து அச்சமுறுத்துகிறது.

கதையின் மையம் அவ்வூர் மக்கள் முதலைகளுடன் வைத்திருக்கும் ஒப்பந்தம். இக்கதையில் மிக முக்கியமான பகுதியது.

‘ஆற்றில் குளித்தபோது என் மகனை முதலை பிடித்துக் கொண்டு சென்றது. நான் அழவில்லை. ஒப்பந்தம் அப்படி. இங்கு ஒவ்வொருவர் வீட்டிலும் யாராவது முதலையால் திண்ணப்பட்டிருப்பர். நான் இதுவரை சாப்பிட்ட முதலைகளில் ஏதாவதொன்று என் மகனைத் தின்றதாகக் கூட இருக்கலாம். என்ன செய்வது தரைக்கு வந்தால் அது மனிதனுக்கு இரைதானே. அந்த கணம்தானே அதை முடிவு செய்கிறது’ என தலைமையாசிரியர் ஜேத்தா கூறுகிறார்.

கதையின் முடிவில் அந்த ஒப்பந்தம் புதிய குரலில் புதிய அர்த்தத்தில் ஒலிக்கிறது.

உடல் நமலற்ற தன் அப்பாவைக் காணச் செல்லும் கதைச்சொல்லி அதையே காரணம் காட்டி நிரந்தமான அந்த ஊரை விட்டு வெளியேறிவிடும் எண்ணத்தில் இருக்கிறார்.  அங்கிருந்து புறப்படும் கணம் சிம்பாவின் அப்பா ஒரு பெண்ணைத் தேடிச் சென்று உறவு வைத்துக் கொள்பவனுக்கு மட்டும்தானே நெற்றியில் ஆண்குறி வளர வைப்பார் எனும் குழப்பம் எழுந்து அதிலிருந்து தப்ப வேறு ஒரு நிவாரணத்தைச் சொல்கிறது. அவன் புறப்பட்டுச் செல்லும்போது காட்டுப்பன்றியின் கண்களைக் காட்டும் படிமம் வழி அவன் வீட்டில் தங்கியிருந்த சிம்பாவின் தங்கையைப் புணர்ந்துவிட்டதற்கான நுண்ணிய தருணங்கள் வெளிபடுகின்றன. அது அவனை தண்டிக்காது என உணர்கிறான்.

அறிவு எவ்வளவு வன்முறையைச் செய்யும் எனும் சொல்லும் கதையாகவே இதைக் காண்கிறேன். பழங்குடிகள் மேல் நிகழ்த்தப்படும் வன்முறைகள் பெரிய நிறுவனங்களால், அரசுகளால் மட்டும் நடப்பவையல்ல. அது அறிவுள்ள எளிய மனிதனாலும் நடக்கும். கதை முழுவதும் கதைச்சொல்லி கற்றவன் என்றே தொடர்ந்து காட்டப்படுகிறது. அவன் ஆங்கில இலக்கியமெல்லாம் பயில்கிறான். அதுதான் ஒரு விழுமியத்தில் தனக்கான சுதந்திரம் தேட வைக்கிறது. முதலைக்கும் அவர்களுக்குமான ஒப்பந்தத்தை தனக்கானதாக மாற்றிக்கொண்டு எந்தக் குற்ற உணர்ச்சியுமின்றி கடக்க வைக்கிறது.

இத்தொகுப்பின் இறுதிக் கதையான வெள்ளைப் பாப்பாத்தி முன்பு பேசிய எல்லா கதைகளின் உஷ்ணத்தையும் தனிப்பவையாக இருக்கிறது. ஒரு சின்னக்குழந்தையின் கைகளைப் பற்றிக் கொண்டு அதன் போக்கில் இந்த வாழ்க்கையை இரசிக்கக் கற்றுக்கொடுக்கிறது இந்தக் கதை. மாசு படியாத வெள்ளை பாப்பாத்தியின் சிறகுகசைப்புகளில் எல்லா துக்கங்களையும் மறந்துவிடும் அந்த சிறுமியைப் போலவே இந்தக் கதையின் முடிவில் அதுவரை பற்றிக்கொண்டிருந்த எல்லா துயரங்களும் நம்மை விட்டு அகலகின்றன. சோதனையில் முதல் இடத்தைத் தாவிப்பிடித்துவிட்ட மகிழ்ச்சியில் வண்ணத்தியாகவே பறந்துகொண்டிருந்தவள் பக்கத்தில் முதல் இடத்தை தவற விட்ட கவலையில் அழும் கணபதிக்கு சொல்லும் ஆறுதல்கள் வியப்பானவை அழகானவையும்கூட.

“‘நான் ஏஞ்சல். சின்ரலாவ இளவரசியா மாத்துனிச்சே அந்த ஏஞ்சல். நான் எல்லாத்தையும் சந்தோஷமாதான் வச்சுக்குவேன். உன்னை வெடைக்க மாட்டேன்.” என்ற கொடிமலரின் கைகளை அவன் தட்டி விடுகிறான். அவன் அழுதால் தன்னால் தேவதையாக முடியாது என்கிறாள்.” இந்த ஒற்றை வரி ஒரு சிறுமியின் மன வெளிகளில் ததும்பி வழியும் தன்னலமற்ற அன்பை அவளின் இயல்பிலிருந்துக் காட்டக்கூடியவை. குழந்தைகளின் உலகை நவீன் துள்ளியமாகவே அறிந்திருக்கிறார்.

அவளை எப்போது தேவதையாகவே மீட்கும் வெள்ளை வண்ணத்திகளை அதிகம் விரும்பும் அவள் ஓவியப் பரிட்சையில் தான் வரைந்த வெள்ளை வண்ணத்தியை வண்ணங்களற்று வெள்ளையாகவே விட்டதால் முதல் இடத்தை நழுவ விடுகிறாள். கொடிமலருக்கான அந்த ஏமாற்றம் நம்மையும் தாக்குகிறது. அந்த ஏமாற்றத்தை மறக்கடிக்கக்கூடியதாகவும் அதே வண்ணத்தி இருப்பதை நவீன் உணர்த்துகிறார்.

கொடிமலருக்கான துக்கம் சந்தோஷம் என எல்லாம் ஒரு சின்ன வண்ணத்தியில் தொடங்கி அங்கேயே முடிந்துவிடுகிறது.  இந்தக் கதையெங்கிலும் வண்ணத்திகள் அதிகம் சுற்றிக் கொண்டே இருக்கின்றன. வாசகனையும் அவை தன் மெலிதினும் மெல்லிய சிறகுகளால் கூசச்செய்கின்றன. அதன் சிறகசைப்பால் உண்டாக்கும் காற்று நம்மையும் உரசிச் செல்கின்றன.

என்னதான் ஒரு சிறுமியின் உலகைப் பேசக்கூடிய கதையாக இது இருந்தாலும் அவளைச் சுற்றி இயங்கிக்கொண்டிருக்கும் சராசரி உலகின் வெப்பக் காற்றை கதையின் இடை இடையே நாம் உணரலாம். கொடிமலரின் அப்பாவின் மரணம் அதற்குப் பின் கொடிமலரின் அம்மா ருக்கு ஒரு பெண்ணாக இந்தச் சமூகத்தில் வாழ எதிர்நோக்கும் சிக்கல்கள் என எல்லாம் வந்து போகின்றன. கொடிமலரை உலகில் வண்ணத்திகள் பறக்கும்வரை அவள் இந்த மாசு படிந்த உலகின் வெப்பத்திலிருந்து பாதுகாக்கப்படலாம். இந்தக் கதையில் வரும் கொடிமலரிடம் நவீனின் கவிதைகளில் வரும் மாயாவிற்குறிய சாயல்களைப் பார்க்கமுடிகிறது.

இந்த போயாக் தொகுப்பிலிருக்கக்கூடிய கதைகளின் முடிவுகள் ஒவ்வொன்றும் மாறுபட்டவை. நாம் யாரும் முன்னமே கணிக்க முடியாத வாழ்வின் நிர்ப்பந்த நிலைகள் அவை. ஓர் ஒட்டுமொத்த கதை எழுதப்பட்டதற்கான அர்த்தத்தை நான் விளங்கிக்கொள்கிற இடமாக இக்கதைகளின் முடிவுகளே பெரும்பாலும் அமைந்துள்ளன. அதே சமயம் கதையின் ஒரு வரியை கவனிக்காமல் விட்டாலும் அது வழங்கும் கவித்துவமான அனுபவத்தை தவற விடலாம்.

அப்பாவின் அழுகையை கேரளப் பெண்ணின் கண்களில் பார்த்ததாக முடியும் மசாஜ் கதையும், அவர் தேடிய அம்மாவின் கண்களை ஜமாலின் முகத்தில் பார்த்ததாக முடியும் ஜமால் கதையும், மரியதாஸின் ஈரம் படிந்த கண்களில் அவன் எம்.ஜி.ஆராக தெரிந்ததைச் சொல்லும் வண்டி சிறுகதையும், தன் மனைவியின் அந்த சிவந்த பாதங்கள் பேச்சியுடையது என முடியும் பேச்சி கதையும், சொல்லமுடியாத ஓர் இரகசியம் கடைசி வரை நெஞ்சை அடைக்கப் போவதைச் சொல்லி முடியும் நாகம் சிறுகதையும் அதனதன் முடிவுகளில் புதிய திறப்புகளை நமக்குள் உருவாக்குகின்றன.

இதைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் இத்தொகுப்பில் இருக்கும் எந்தக் கதைகளும் ஒன்றை ஒன்று சார்ந்தவையல்ல. அவை வெவ்வேறு உணர்வுகளைக் காட்டக்கூடியவை. ஆனால் காமத்தின் மெல்லிய கீற்றொன்று இவை பெரும்பாலான கதைகளுக்குள் நுழைந்து இணைத்துப்பிடிக்கிறது. வாழ்வு குறித்த தனது பார்வையை வாசகனிடம் கொண்டு சேர்க்கும் ஒரு சக்தியாக மட்டுமே காமத்தைக் கையாண்டுள்ளார். அது எளிய வாசகனுக்கு பாலியல் சீண்டலாக மட்டுமே கரையலாம். தேர்ந்த வாசகன் மட்டுமே உட்சென்று பெரும் வாழ்வின் புதிய கோணங்களை கண்டடையும் சாத்தியத்தை( தொக்கி நின்றி வாக்கியத்தில் நான் இணைத்தது) போயாக் தொகுப்பு கொண்டுள்ளது.

பிற இணைப்புகள்:

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...