போயாக் சிறுகதைகள் – கிறிஸ்டி

கிறிஸ்டிஅன்பு நவீன் அவர்களுக்கு,

தங்களின் ‘போயாக்’ சிறுகதைத் தொகுப்பை வாசித்தேன். அதில் இடம்பெற்றுள்ள கதாமாந்தர்களின் வாழ்க்கை அனுபவம் இதுவரை என்னிடம் ஏற்படுத்தாத சலனத்தை ஏற்படுத்தியிருந்ததன் விளைவு, இரண்டு வாரங்களாக என்னால் வேறு எந்த படைப்பையும் வாசிக்க இயலவில்லை. கதைகளின் பேசுபடுபொருளை உள்வாங்கி செரித்துக்கொள்ள சிறிது காலஅவகாசம் தேவைப்பட்டது. தங்கள் எழுத்தைப் பற்றி முன்னுரை வழங்கியுள்ள திரு. சு.வேணுகோபால் அவர்கள் மற்றும் யாக்கை, போயாக் பற்றி கூறியுள்ள திரு. ஜெயமோகன் அவர்கள் இருவரின் எழுத்துகளையும் படித்தபிறகே என்னால் குறுஞ்சித்தரிப்புப்பாணி கொண்ட தங்கள் கதைகளை உள்வாங்கிக்கொள்ளவும் விரித்தெடுக்கவும் முடிந்தது.

ஒவ்வொரு கதையையும் வாசிக்கும்போது உடனடியாக நான் அனுபவித்த உணர்வுகளையும் பிறகு ஒவ்வொன்றையும் பற்றி நான் சிந்தித்து எனக்குள் வகுத்துக்கொண்டதையும் தங்களிடம் பகிர்ந்துகொள்ளவே இக்கடிதம்.

மசாஜ், போயாக், யாக்கை மற்றும் பேச்சி இவற்றை வாசிக்கையில் நான் அடைந்த அதிர்ச்சிகளை என்னால் மறுக்கமுடியாது. அதேபோல ஜமால், வண்டி, வெள்ளைப் பாப்பாத்தி இவற்றை வாசித்து மயங்கியதையும் நான் சொல்லியாகவேண்டும். அதேசமயத்தில் நாகம் சிறுகதையில் ஆசிரியர் நேரடியாக இல்லாமல் மறைமுகமாக மனிதர்களின் தவறுகளுக்கு குட்டுகள் வைத்திருப்பதைக் கண்டு  புன்னகைத்துக்கொண்டதையும் கூறிக்கொள்கிறேன்.

பிறகு ஒவ்வொரு கதையிலும் வரும் ஆண்களை, பெண்களை மற்ற கதைமாந்தர்களோடு ஒப்பிட்டுப் பார்த்தேன். தனித்தனிக்கதையில் ஒவ்வொருவரும் அடையும் வாழ்க்கைத் தரிசனத்தை மற்றொரு கதையில் அதேபோன்று வரும் மாந்தர்கள் கண்டடைந்திருப்பதையும் நான் காண்கையில் என்னுள் ஒரு உவகை எழுந்தது. அது என் தனிப்பட்ட அவதானிப்பாகவும் இருக்கலாம். எடுத்துக்காட்டாக மசாஜ் கதையையும் யாக்கை கதையையும் அவ்வாறு என்னால் ஒப்பிடமுடிந்தது. மசாஜ் ஷாஷாவையும்  யாக்கை கேத்ரீனாவையும் பார்க்கையில் இருவரும் ஒருவரோ எனத் தோன்றியது. இருவரும் சூழ்நிலை காரணமாக மசாஜ் சென்டருக்கு வந்துசேர்ந்தவர்கள். இருவரும் தங்கள் வாழ்க்கை போகும் பாதையை முற்றிலும் அறிந்தவர்களாக சிறிதும் சலனமின்றி தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியினைச் செய்துகொண்டிருக்கின்றனர்.

இவ்வாறான இப்பெண்களின் வாழ்க்கைமுறை அவர்களைச் சுற்றியுள்ள ஆண்களை பல்வேறுவிதங்களில் பாதிக்கிறது.

எப்படி என ஒவ்வொரு கதையாகச் சொல்கிறேன். முதலில் மசாஜ் கதையை எடுத்துக்கொண்டால், ஷாஷாவிடம் வந்து சேர்பவன் ஏற்கெனவே ஒரு மனஅழுத்தத்தில் இருப்பவன். தன் தந்தை இறந்ததன் காரணம் அறிந்து அதை ஜீரணித்துக்கொள்ள இயலாமல் உலக வாழ்க்கைக்கும் மனசாட்சி வாழ்க்கைக்குமிடையேயான போராட்டத்துடன் வாழ்நாட்களை செலவழித்துக்கொண்டிருப்பவன். அவனுக்கென ஒரு மனசாட்சி இருந்தாலும் தனக்கு உலக வாழ்க்கைக்கு ஒரு கொடிக்கொம்பு தந்தவன் என்ற ஒரே காரணத்துக்காக நண்பன்  சொல்வதையெல்லாம் கசப்புடன் ஏற்றுக்கொள்கிறவன். இப்படிப்பட்டவன் தன் தந்தையைப் போன்று துயரை அனுபவிப்பவளாக ஷாஷாவை மசாஜ் சென்டரில்  கண்டுகொள்கிறான். அந்த இடம் காமம் வழியும் இடமாக இருந்தாலும் அதையும் மீறி தந்தையின் துயர் நினைவுக்கு எழுகையில் அங்கு காமமானது தந்தையின் கனிவால் வெல்லப்படுகிறது.

யாக்கை கதையை எடுத்துக்கொண்டால் கோபி, கேத்ரீன் அப்பா ஈத்தனுக்கு வியாபார விஷயத்தில் போட்டியாக இருக்கிறான். அவனுடைய பணத்தாசை கேத்ரீனை பாலியல் சீண்டல் செய்வதுவரை கொண்டுசெல்கிறது. தாயில்லா கேத்ரீனுக்கு கடலன்னையையே காவலாக்கி கடலின் படகுத்தொழிலின் மீன்பிடித்தலின் அனைத்து நுட்பங்களையும் கற்றுத்தருவதன்மூலம் ஈத்தன் அவள் வாழ்க்கையை முழுமையாக்குகிறார். இம்முழுமை எங்கே வெளிப்பட்டு பாதிப்பை உண்டாக்குகிறது என்றால் அவள் வேலை செய்யும் மசாஜ் சென்டருக்கு மசாஜ் செய்துகொள்ள வரும் ஒருவனிடம்.  அங்கு அவளிடம் கண்டுகொண்ட தாய்மையின் தரிசனம் அவனிடம் ஒருவித குற்றஉணர்வை உருவாக்குகிறது. இங்கும் காமமானது தாய்மையின் கனிவால் வெல்லப்படுகிறது.
அதேசமயத்தில் தன்மகள் கேத்ரீனாவிடம் அந்த தாய்மையையும் முழுமையையும் ஈத்தன் கண்டுகொள்ளும்போது அவர் வாழ்வு நிறைவடைகிறது. தன்மகளை இனி கடலன்னையே காத்துக்கொள்வாள் தன் இருப்பு இனி அவளுக்குத் தேவையில்லை என நன்றிசொல்லும்விதமாய் நடுக்கடலில், எங்கே  தவறிவிழுந்து இரண்டு நாட்களுக்குப்பிறகு காப்பாற்றப்பட்டாரோ அங்கேயே விழுந்து உயிர்துறக்கிறார். தன் இருப்பு முக்கியமில்லாமல் போய்விட்டதோ என்ற சுயவிரக்கம்கூட அவர் இறப்புக்குக் காரணமாக இருக்கலாம். அல்லது இரண்டு மாதங்களாக தான் கோமா நிலையில் இருந்தபோது அன்னை அல்லது மனைவி ஸ்தானத்தில் இருந்து தன்மகள் பணிவிடை செய்திருக்கிறாளே என்ற எண்ணத்தை ஜீரணிக்கமுடியாமல்கூட அவர் உயிரை விட்டிருக்கலாம். ஆசிரியர் இங்கே குறுஞ்சித்தரிப்புபாணியில் எழுதியுள்ளது வாசகனை அவன்போக்கில் பலவிதமாக சிந்திக்க வைக்கிறது. நான் என்ன நினைக்கிறேனென்றால், ஒருவன் முழுநிறைவடைகையிலும் அதிக குற்றஉணர்வுக்கு ஆளாகும்போதும் முழுஇழப்பு நேரும்போதும் தன் உயிரைத் துச்சமென நினைக்கிறான். முழுநிறைவடைந்தவர்கள் ஜீவசமாதியடைகிறார்கள். குற்றஉணர்வடைபவர்கள் தற்கொலைசெய்துகொள்கிறார்கள். முழுஇழப்பேற்பட்டவர்கள் மனத்திரிபடைந்து நடைபிணமாகி நோயுற்று உயிரை இழக்கிறார்கள். இவ்வாறு தன்தந்தையை கேத்ரீனா தன் முழுமையால் இழக்கிறாள். இவ்வாறு தன்னைத் தேடிவரும் ஒவ்வொரு ஆண்மகனுக்கும் ஒரு தொந்தரவாக இருக்கிறாள். ஒரு உலகியல் வாழ்க்கையை அனுசரிப்பவன் இ்வ்வாறான ஒரு முழுமையை ஒரு பெருங்கருணையை எதிர்கொள்ளும்போது திகைத்து விலகுகிறான். வெறுக்கிறான். எரிச்சலடைகிறான். இதுவே யாக்கை கதாநாயகனுக்கு நிகழ்கிறது என எனக்குத் தோன்றுகிறது.

இந்த நாயகனைப் பற்றி இவ்வாறு நான் கூறுகையில் ‘போயாக்’ நாயகனைப் பற்றியும் கூறியாகவேண்டும். உலகியல் காரியங்களில் அவனும் இவனைப்போலவே. ஆனால் அவன் ஜெமோ சொல்லும் இரண்டாம் வகைப்பாட்டைச் சேர்ந்தவன். அதாவது நேரடியாக பாலியல் தொல்லை கொடுக்காமல் உத்தமபுத்திரன்போன்ற தோற்றத்தில் இருந்துகொண்டு மறைமுகமாகவும் அல்லது சந்தர்ப்பம் கிடைத்தால் ஆள்விழுங்கியாகவும் இருப்பவன். அதற்கென நுட்பமாக வலைகளை விரிக்கத் தெரிந்தவன். இவனைப் போன்றவர்கள் அந்த காலத்திலிருந்து இன்றைய காலம்வரை இருந்துகொண்டுதானே இருக்கிறார்கள்.

முக்கியமாக இந்த போயாக் நாயகன் மிகவும் நாகரிகமானவன் படித்தவன். ஆனால் நாகரிகம் இன்னும் வளர்ந்திருக்காத பழங்குடியினத்து பெண்ணை மயக்க பலவித வகைகளில் முயல்கிறான். தன் ஆசிரியப்பணிக்கென அவன் தன்னை அர்ப்பணிக்கவில்லை. நல்லாசிரியனுக்கான எந்த ஒரு உன்னத குணத்தையும் அவன் பெற்றிருக்கவில்லை. ஓர் ஆசிரியனுக்கு தன் மாணவர்களிடத்து வரக்கூடாத தீயஎண்ணம் அவனுக்கு வருகிறது. நாகரிகமடைந்த நகரங்களில் பெண்களைக் காத்துக்கொள்ள கல்வியறிவு உள்ளதுபோல அந்த ஈபான்  பழங்குடியினிடத்து மக்களிடமும் ஒரு சமூக அறிவு அல்லது பாதுகாப்புத் திட்டம் உள்ளது. அது தெரியவரும்போது அவன் அதிர்ச்சிக்குள்ளாகிறான். கடைசியில் பயத்தால் அம்மலையைவிட்டே ஓட எத்தனிக்கிறானே தவிர மன உறுத்தலடையவோ தன் செயலை எண்ணி வெட்கமுறவோ இல்லை. இன்றைய உலகில் இப்படிப்பட்ட நூதனமான சுயநலக்காரர்கள் இருப்பதை “போயாக்” கதாநாயகன் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது.

இந்த சமயத்தில் எனக்கு “பேச்சி” கதாநாயகன் நினைவிலெழுகிறான்.  அவனை அவன் தாத்தா ஆணாதிக்கமிக்கவனாக பெண்களை மதிக்கத் தெரியாதவனாக வளர்க்கிறார். ஆனால் தன் குலதெய்வமான பேச்சியம்மனின் பக்தராக இருக்கிறார். தன்னால்தான் தன் பேரனின் வாழ்க்கை வீணாகிவிட்டதென குற்றவுணர்வு கொண்டு பேச்சியம்மனிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டு உயிர்விடுகிறார். இதை அனுபவப் பாடமாகக் கற்றுக்கொள்ளும் நாயகன் தான் இதுவரை தன் ஆணாதிக்க உணர்வால் தன் மனைவியை மதிக்காமல் அவளை இழிவுபடுத்திவந்தமைக்கு அதே பேச்சியம்மனிடம் மன்னிப்பு கேட்க வருகிறான். அவன் மனதார வருந்தியதிலேயே பேச்சியம்மனும் மன்னித்து அவனுக்கு தரிசனமளிக்கிறாள். இங்கு நாயகனின் மகன் தெய்வ நம்பிக்கை பற்றி கேள்விகள் எழுப்புவதும்  இல்லாமலில்லை. இங்கு தெய்வம் என்பது தன்னொழுக்க நெறியே என்பது எப்போதும் என் கருத்தாகும். ஒவ்வொருவரையும் மதிக்கையில் பிறர்க்கு இடர்ப்பாடு தராவண்ணம் நடந்துகொள்கையில் பணிகையில் தாழ்ச்சியுள்ளம் கொண்டிருக்கையில் நான் செய்வது சரியே என என்  ஆழ்மனம் முழுமையாக நிறைவடைகையில் நான் கடவுளின் பிரசன்னத்திற்குள் இருக்கிறேன் என நினைத்துக்கொள்வேன். அதனால் பேச்சியம்மனைத் தரிசித்ததாக நாயகன் தன் மகனிடம் திரும்பத் திரும்பக் கூறுவதை என்னால் புரிந்துகொள்ளமுடிகிறது. அவன் அத்தனை இழிவாக அவன் மனைவியிடம் நடந்துகொண்டதையும் என்னால் மன்னிக்க முடிகிறது. ஏனெனில் அவன் ஒரு கிறிஸ்தவனைப்போல பாவசங்கீர்த்தனம் செய்கிறான். இது யாராலும் முடியாத ஒன்று. தாத்தா தன் மகனிடம் தன் பாவங்களுக்காக மனம் வருந்துகிறார். மகன் அவன் பையனிடம் தன்வரலாற்றை அப்படியே ஒளிவுமறைவில்லாமல் தன் குற்றங்களோடே ஒப்புவிக்கிறான். ஒருவன் தன் பாலியல் குற்றங்களை தன் மகனிடம் சொல்லி மன்னிப்பு கோருவது என்பது அவ்வளவு சாதாரணமான விஷயமன்று.  ஆனால் தாத்தாவிலிருந்து பேரன் வரை நிகழும் இயல்பான சம்பாஷணைகளில் இந்த திகைக்கவைக்கும் நிகழ்வை ஆசிரியர் நிகழ்த்துகிறார். இது இதுவரை நான் கேட்டிராத கண்டிராத புதிய நிகழ்வு.

இந்த முற்போக்கான பாத்திரப்படைப்பால் “பேச்சி” கதாநாயகனின் கதாபாத்திரம்போயாக்  அடுத்தகட்டத்திற்கு முன்னேறுகிறது. இதைப்போன்று தன் குணவியல்பில் மாறுதலடையும் பாத்திரம் “வண்டி”  சிறுகதையில் உள்ளது. அது சிறுவன் தாமஸின் தந்தையான மரியதாஸ் கதாபாத்திரம். தான் ஒரு தாழ்ந்த சாதியில் பிறந்துவிட்டோம் என்ற அவமான உணர்வோடேயே வளர்கிறார். தன் பிள்ளை அத்தகைய உணர்வடையக்கூடாது என பொத்திப்பொத்தி வளர்க்கிறார். தாத்தா பாட்டி வீட்டிற்கு அனுப்புவதில்லை. பள்ளி நண்பர்களிடம்கூட அவர்களைப்பற்றிப் பேசக்கூடாதென உத்தரவு. ஆனால் எவ்வளவுதான் அணைபோட்டாலும் “ அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ்” என தாமஸ் தன் பாட்டியைத் தேடி ஓடோடுவதை அவரால் தடுக்க முடியவில்லை. இங்கு பாட்டிக்கும் பேரனுக்குமிடையேயான பாசப்பரிமாற்றம் சாதியை வெல்கிறது. மரியதாஸின் வெறுப்பு அகன்று அவமான உணர்வு மறைந்து கிறிஸ்மஸுக்கு தன் பையனை பாட்டி வீட்டுக்கு தானே அழைத்துச்செல்வதாக உறுதி தரும்வரை செல்கிறது. இந்த உன்னத தரிசனத்தை இப்படைப்பு வாசகனுக்கு அளிக்கிறது. இச்சிறுகதைத் தொகுப்பில் நான் முன்பே குறிப்பிட்டுள்ளபடி காமமானது சாதிசமயமானது ஒருபாற்பட்ட ஆதிக்கமானது தாய்மையினால் குழந்தைமையினால் கருணையினால் வெல்லப்படுவதாக வாசகன் உணரும்போது அத்தருணத்தில் அப்படைப்பு ஒரு  கலைப்படைப்பாகத் திகழ்கின்றது.

இதுவரை நேரடியான கூற்றுகளால் உரையாடிக்கொண்டிருந்த ஆசிரியர் திடீரென உருவகப்பாணியில் கதைசொல்வதுபோல் “ நாகம்” சிறுகதையை வாசிக்கையில் தோன்றியது. இக்கதையில் முத்தம்மா வளர்க்கும் நாகம், நாகப்பாம்பு இல்லையென்றும் அது அவளுடைய கட்டுக்கடங்கா காமம் என்றும் தோன்றியது. ஒரு காம உணர்வு உருவாக்கும் விளைவினை ஒரு உண்மையான நாகப்பாம்பு விளைவிப்பதாக கற்பனை செய்தால் எந்த அளவு பரவசமாக இருக்குமோ அந்த அளவு பரவசப்படுத்தியது அவரது முகமூடி எழுத்து. மிகவும் அனுபவித்து வாசித்தேன் நாகத்தை. இக்கதையில் ஒரு ஊரின் மக்களையே ஏமாளிகளாக அறிவற்றவர்களாக ஆக்குவதற்கு ஒரு பெண்ணின் காமம் எந்த வகையில் பயன்படக்கூடும் என்ற சிந்தனையை அளித்தபோது மனதில் ஓர் அதிர்வலை உருவாகியது. இங்குதான் ஆசிரியர் எளிய மாந்தர்களின் அறிவற்றத்தனத்திற்கும் மூடநம்பிக்கைக்கும் சரியாகக் குட்டு வைக்கிறார்.

இறுதியாக என்னை மிக இயல்பாக வானத்தில் பறக்கவைத்த, மிதக்கவைத்த கதை “வெள்ளைப் பாப்பாத்தி”. அது ஒரு குழந்தைத் தேவதைக் கதை. இதன் முந்தைய காத்திரமான கதைகளை எழுதிய ஆசிரியர் இவர்தானா என வியக்க வைக்கும் அன்புக்கதை. அவர் எழுத்தில் கறார்த்தன்மையும் உண்டு நெகிழ்வுத்தன்மையும் உண்டு என இந்த இறுதிக்கதை சான்றுபகன்றுவிடுகிறது.

இதுவரை நான் கூறியது அவரின் கதாமாந்தர்களின் பாத்திரப்படைப்பு மட்டுமே. ஒவ்வொரு கதையிலும் அந்தக் கதாமாந்தர்களைச் சுற்றியுள்ள சூழல்களை அவர் வர்ணித்திருக்கும் அல்லது விவரித்திருக்கும் விதத்தை நான் விவரிக்க முயன்றால் இக்கடிதம் இன்னும் நீண்டுவிடும். ஆனால் அதற்காக நான் சொல்லாமல் இருக்கமுடியாது. என் விழிகளை விரியவைத்த ஒருசிலவற்றை மட்டும் கூறவிழைகிறேன். முதன்முதலில் நினைவுக்கு வருவது, யாக்கையில் ஈத்தன் நடுக்கடலிலிருந்து காப்பாற்றப்பட்டு மருத்துவமனையில் படுக்கையில் கிடத்தப்படும்போது ஈத்தன் உடல்வயமாக உணர்வதை மிக அற்புதமாக எழுத்தில் வடித்திருப்பது.

அடுத்து மசாஜில் கண்களைக் காட்டாமல் ரதிவேடம் பூண்டு கதாநாயகனின் தந்தை ஓலமிடும் தருணத்தை விவரித்திருப்பது.

இன்னொன்று, போயாக்கில் படகோட்டியின் உதவியாளராக உராங் உட்டானை சித்தரித்திருக்கும்விதம் எப்பொழுது நினைத்தாலும்  நான் என்னை எவ்வளவு கட்டுப்படுத்தினாலும் என் உள்ளம் பொங்கி என் முகத்தில் சிரிப்பை வரவழைத்துவிடுகிறது.

இவ்வாறு மனிதனின் மகிழ்வுணர்வு, துயருணர்வு, நெகிழ்வுணர்வு, காம உணர்வு, சாதியுணர்வு, ஆதிக்கவுணர்வு, குற்றவுணர்வு என  அனைத்துவகை உணர்வுகளையும் தன்படைப்பில் கொண்டுவந்து ஆசிரியர் வாசிப்பவரையும் நிகர்வாழ்விற்கு  அழைத்துச் சென்றுவிடுகிறார்.

இத்தொகுப்பிலுள்ள சிறுகதைகளில் சிறந்த கதையாக நான் “பேச்சி”யைச் சொல்வேன். ஏனெனில் அதில் நிலப்பிரபுத்துவ வாழ்க்கைமுறையிலிருந்து இன்றைய நவீன காலத்து வாழ்க்கை வரை மூன்று தலைமுறையினரின் வரலாறானது தொகுத்தளிக்கப்பட்டுள்ளது. தாத்தாவின் சடலத்தோடு அவருடைய இணைபிரியாத்தோழன் துப்பாக்கியும் புதைக்கப்பட்டது என்ற குறியீடு மூலம் பழைய காலத்திய சிந்தனைமரபிலேயே ஊன்றியிருக்காமல் முற்போக்கான சிந்தனையை வளர்த்தெடுங்கள் என கூறமுற்படுகிறது.

காட்டுப்பன்றிக்குக் கழுத்து கிடையாது என்றும் அதை எப்படி வேட்டையாடுவது என்றும் அது தாக்க வரும்போது எப்படி அதனிடமிருந்து நம்மைத் தற்காத்துக்கொள்வது என்றும் வாசிக்கையில்  விலங்கியலறிவு அனுபவம் கிடைத்தது. சூரிய வெளிச்சம் வருவதற்குகந்த ஓங்கியுயர்ந்த ரப்பர் மரக்காடுகள் கொஞ்சம்கொஞ்சமாக பணம்படைத்தவரின் ஆணவத்தால் உருவான தொழிற்சாலைகளினால் அழிக்கப்பட்டு செம்பனைகள் உருவாக்கத்தால் சூரியக்கதிர்விழாமல் இருள்சூழ்ந்தமையையும் வாசிக்கையில் காடுகள் அழிந்துவருவதை நினைவுறுத்தி மனம் கனக்கவைக்கிறது. இருளின் அறியாமையின் பிற்போக்கின் குறியீடுபோலுள்ள செம்பனைகளின் அபரிமித வளர்ச்சி எவ்வாறு அமைந்தது என விவரிக்கையில் ஆசிரியர் தாவரவியலறிவை ஊட்டுகிறார். மிக முக்கியமாக கடவுள் உண்டா இல்லையா என்று இன்றும் பேசப்படும் பொருளை  வாசகன்முன்வைத்து தாத்தா மகன் பேரன் என முத்தலைமுறையினரின் செயல்பாடுகள் வழியாக ஆராய்கின்றார். சமூக நம்பிக்கைக்கும் தனிமனித உள்ளுணர்வுக்குமிடையே நிகழும் நுட்பமான போராட்டம் “பேச்சி” சிறுகதையில் சிறந்த முறையில் கையாளப்பட்டுள்ளது.

இச்சிறுகதையில் விரித்தெடுக்கத்தக்க பல கருத்துத்தளங்கள் உள்ளன. உதாரணத்திற்கு கணவன் மனைவிக்கிடையே விட்டுக்கொடுத்தல்பற்றி  பாலியலறிவின் முக்கியத்துவம் பற்றி குழந்தை வளர்ப்பு பற்றி நவீனயுகத்தில் தெய்வ தரிசனங்கள் பற்றி சூழலியல் பற்றி… இப்படி பட்டியல் நீளுகின்றது. இக்கதை சிறுகதைபோல ஒரு முடிவுக்கோ திருப்பத்திற்கோ வரவில்லை. “பேச்சி” இன்னும் தொடர்வாள் என்று நானாக எண்ணி பெருமூச்சு விட்டுக்கொண்டேன்.

எழுத்தாளர் இறுதியில் வெள்ளைப் பாப்பாத்தியை பறக்கவிட்டு தன் படைப்பை உருவாக்கிமுடித்த நிறைவை அடைந்ததுபோல  நானும் நான் நினைத்ததை உணர்ந்ததை  எழுத்தில் தங்களிடம் பகிர்ந்துகொண்டதில் நிறைவடைகிறேன்.

அன்புடன்
கிறிஸ்டி.

(Visited 89 times, 1 visits today)