18.11.2018 (ஞாயிறு) பவா செல்லதுரை மற்றும் சு.வேணுகோபால் வல்லினம் கலை இலக்கிய விழாவிற்கு சிறப்பு வருகை புரிகின்றனர். அவர்களது புனைவுகளை மலேசிய வாசகர்களுக்கு எளிமையான முறையில் அறிமுகப்படுத்தும் நோக்கில் இக்கட்டுரைத்தொடர் எழுதப்படுகிறது. வலி சிறுகதை வாசிக்க : வலி – பவா செல்லதுரை
ஒரு புனைவை மிகச்சிறந்தது எனச் சொல்லும்போது ஏன் அது அவ்வாறானது என நண்பர்கள் கேட்பதுண்டு. அப்புனைவு அவர்களுக்கு எந்த அனுபவத்தையும் கொடுத்திருக்காத பட்சத்தில் இந்தக் கேள்வியின் தொணி கொஞ்சம் மிரட்டலாகவே இருக்கும். உண்மையில் ஒரு கலை வடிவம் நம்மை ஈர்த்த தருணத்தை அந்தரங்கமாக நாம் அதனுடன் உரையாடிய கணத்தை இன்னொரு வாசகரிடம் அவ்வளவு எளிதாகச் சொல்லிவிட முடியுமா என நான் கேட்டுக்கொண்டதுண்டு. முடியாது. அவ்வாறு முடியுமென்றால் அவ்வுணர்வை ஒரு படைப்பாளி கட்டுரை வடிவில்கூட விளக்கமாக விளாவரியாக எழுதிவிடுவார்.
பெரும்பாலும் கருதான் கதை என நினைக்கும் படைப்பாளிகளிடம் அதை நல்ல கட்டுரையாக எழுதும்படி வேண்டுகோள் வைத்து, அவரை மிகச்சிறந்த கட்டுரையாளராக்குவதே ஒரு விமர்சகன் படைப்புலகத்துக்குச் செய்யும் பெரும் கொடை. கருதான் கதையென்றால் அதைச் சொல்ல சிறுகதைபோன்ற நுணுக்கமான கலை வடிவம் அவசியமே இல்லை.
உண்மையில் ஒரு கதை நல்ல கதையா இல்லையா என்பது முதல் வாசிப்பிலேயே தரமான வாசகன் அறிந்துவிடுவான். பின்னர் அதை நல்ல கதையாக நிறுவ சிலவற்றை அறிவால் சேகரித்துத் தொகுத்து அதை இன்னொருவருக்குச் சொல்ல முயல்வான். ஆனால் ரசனைக்குள் அறிவு தலையிடும் கணம் ஒரு கலை வடிவம் தனது சூட்சுமத்திலிருந்து விலகத்தொடங்குகிறது. ஒரு தொட்டாச்சிணுங்கியின் இலையை அறிய முனையும் கணமே நம் சுவாசம் பட்டு இலை சுருண்டு கொள்வதுபோல அது தன்னை சுருட்டிக்கொள்கிறது. பின்னர் நாம் அதன் முட்கள், வண்ணம், வேர், அதன் இளஞ்சிவப்பு பூ என அனைத்தையும் பேசுகிறோம். கடைசிவரை ஒரு இலை மலர்ந்து விரிந்திருந்த அழகை நம்மால் பேசவே முடியாது.
பவா செல்லதுரையின் ‘வலி’ கதையை வாசித்த உடனேயே எனக்கு அது மிகச்சிறந்த கதையாக தோன்றியது. அடுத்த நிமிடமே அது பலருக்கும் நல்ல கதையாகத் தோன்றும் எனப் புரிந்துகொண்டேன். அவ்வாறு தோன்ற பல சாத்தியங்களைக் கொண்டுள்ள கதைதான் அது. திருட்டை தொழிலாகக் கொண்ட மனிதர்கள், மனிதன் ஆழ்ந்து உறங்கும் சாமத்தை அறிய கற்களை உருட்டி தங்களை மறந்து தூக்கம் நெருங்கும் நிமிடங்களை கணக்கிடும் திருட்டுத்தொழிலின் நுட்பங்கள், திருடிய பாவத்திற்குப் பிராயச்சித்தமாக திருடும் வீட்டில் தின்றுவிட்டு அப்பாவத்தைக் காட்டில் மலம் கழித்து தீர்க்கும் தொழில் சடங்கு என பவா செல்லதுரை காட்டும் வாழ்வு புதியது, சுவாரசியமானது. இந்தச் சுவாரசியம் ஒரு வாசகனை வெகு எளிதில் கவரும். இந்தக் கவர்ச்சி அவனை அதை நல்ல கதையாக உணரவைக்கும்.
இன்னும் கொஞ்சம் கூர்மையான வாசகனுக்கு பவா காட்டும் புற உலகத்தின் நுட்பம் கவரும். ஒரு காட்டுப்பன்றி குட்டிகளின் கூட்டத்தைப் பார்த்த கணம் தங்கள் வாழ்வை நினைத்துக்கொள்ளும் திருடங்களின் அடியாளத்தில் இருக்கும் மெல்லிய அச்சமும் அதை வெளிக்காட்டாத புற அநாயசங்களும், நடக்கும்போது இருக்கும் குளிருக்கும் அமர்ந்தபின் உடலை அப்பும் குளிருக்குமான பேதங்களும், காட்டைக் கடல்போல காட்ட இருட்டு உருவாக்கும் வேறொரு உலகமும் என கதை முழுவதும் வியாபித்துள்ள துல்லியம் சிலருக்குக் கதையை நெருக்கமாக உணரவைக்கும்.
ஆனால் இவையெல்லாம் வேறொரு எழுத்தாளன் அல்லது கட்டுரையாளன் அல்லது திரைப்பட இயக்குநர் காட்ட முடிகின்ற காட்சிகள்தான். ‘வலி’ சிறுகதையின் வெற்றி என்பது பவா மானுட ஆழத்தில் இருக்கும் தீண்டப்படாத ஒளியை ஒரு கை மொண்டு வந்து வெளியே சிந்த வைத்திருப்பதில் உள்ள வெற்றி.
தன்னை மிரட்டி வீட்டில் உள்ள நகைகளையும் பணத்தையும் திருடிவிட்டு வெளியே போகும் திருடனை மாட்டிவிட நினைக்கும் ரகோத்மனின் (வீட்டுக்காரர்) விரல்கள் கதவிடுக்கில் திருடனால் நசுக்கப்படுகின்றன. திருடர்களின் வாசம் அறிந்த போலிஸ்காரர் மோப்பம் பிடித்து நால்வரில் இருவரை கைது செய்கிறார். கைது செய்யப்பட்ட திருடனை அடையாளம் காட்ட ரகோத்மன் அழைக்கப்படுகிறார். தனது நசுக்கப்பட்ட விரலை திருடன் பார்க்க வேண்டும் என்றே வீட்டுக்காரர் திருடனின் பார்வையில் படும்படி காட்ட, சட்டென திருடன் பார்வையைத் திருப்பிக்கொள்கிறான். அவ்விடம் பவா சொல்லும் வரி முக்கியமானது. ‘திருடன் காட்டில் காட்டுப்பன்றி குட்டிகளைப் பார்த்தபோது தலையைத் திருப்பிக்கொண்டதுபோல திருப்பிக்கொள்கிறான்.’ அந்தத் தவிர்ப்பு தனக்குள் தன்னைக் காண மறுக்கும் தவிர்ப்பு. தான் அவனைப்போல இன்னொரு மனிதன்தான் என தோன்றும் கணம் தொழிலைத் தொடர முடியாமல் போகக்கூடும் என்பதால் உருவாகும் மறுப்பு. தன் மேல் தோன்றும் சுய இரக்கத்தையும் கோபத்தையும் துடைத்தெரியும் தவிர்ப்பு. அவன் தன்னை மிக உறுதியான திருடனாக நிறுவிக்கொள்ள இவையனைத்தும் தடைகள். ஆனால் கதையின் உச்சம் இதுவல்ல.
கதை முடிவில் போலிஸ்காரரிடம் அடையாளம் காட்டச்செல்லும் ரகோத்மன் முற்றிலும் முரணாக திருடனின் கண்களை எதிர்க்கொள்ள தயங்குகிறார். திருடன் எவ்வித பொய்யுமற்ற பார்வையுடன் வீட்டுக்காரரை ஏறிடுகிறான். திருடன் தன் வீட்டில் திருட வந்தபோது அவனை முழுமையாகப் பார்த்த அவரால் இப்போது அவன் கண்களைச் சந்திக்க முடியவில்லை. இதுதான் கதையின் உச்சம். பவா, ரகோத்மன் திருடனை நேராகப் பார்க்க முடியாமல் இருக்கும் தத்தளிப்புக்கான காரணத்தை விளக்கவில்லை. அதை விளக்க முடியாது. கதையின் ஒரு இடத்தில் மட்டும் திருடன் எவ்வளவு மென்மையாக நடந்து கொண்டான் என ரகோத்மன் யோசிக்கிறார். கதையின் அவசியமே இல்லாத பகுதி அதுதான். ஆனால் ரகோத்மன் இப்போது பார்வையைத் தவிர்க்க இந்தக் குற்றஉணர்ச்சியும் காரணமில்லை. பின்னர் எது?
சில ஆண்டுகளுக்கு முன் ஒரு சர்ச்சை இங்கு பூதாகரமாக்கப்பட்டது. அது தனிநபர் தாக்குதலாக உருவெடுத்துக்கொண்டிருந்தது. அதில் எதிர்தரப்புக்குத் துணைநின்ற ஒருவருக்கு வெகு விரைவில் திருமணம். அந்தச் சர்ச்சையில் தாக்கப்பட்டுக் கொண்டிருந்த நண்பர் கூறினார் “என்னைத் தாக்கும் அவ்விளைஞன் திருமணம் செய்யப்போகும் பெண் ஒரு தற்கொலைக்கு முயன்று என்னால் காப்பாற்றப்பட்டவள். அவள் தற்கொலை செய்துக்கொள்ள காரணம்…” என விவரித்தார். எனக்குப் பகீர் என்றது.
“இதை நான் தனிப்பட்ட முறையில் தாக்கப்பட்டுக்கொண்டிருக்கும் இந்தக் கணத்தில் சொல்லப்போவதில்லை. எப்போதும் எவ்விடத்திலுமே சொல்லப்போவதில்லை. சொல்வதன்மூலம் நான் அவனை எளிதில் மௌனப்படுத்த முடியும். அவன் அதோடு அடங்கி விடுவான். அவன் திருமணம் நிற்கலாம். அவனுக்கு அப்பெண் வழியாகத் தெரிந்தது பாதி உண்மையாகக்கூட இருக்கலாம். ஆனால் நான் அதை எப்போதும் சொல்ல மாட்டேன்,” என்றான்.
“ஏன்” என்றேன்.
“பின்னர் என்னால் இந்த உலகத்தின் முன் நடமாட முடியாது. நான் என்னை மிக அருவருப்பாக உணர்வேன். அந்தப் பெண்ணைக்காட்டிலும் நான் அவமானம் அடைவேன்.”
தன் எதிராளியை வீழ்த்த எல்லா சாத்தியங்கள் இருந்தும் அதை செய்யாமல் ஒருவன் விட்டு விலகும் கணத்தை எந்தத் தத்துவத்தின் மூலமும் விளக்க முடியாது. அது நம்மை எப்போதும் கண்காணிக்கும் அறம்.
அதை மீறும்போதுதான் நாம் உலகத்திடமிருந்து நம் கண்களை விலக்கிக்கொள்கிறோம். ரகோத்மன் திருடர்கள் அவர்களில்லை எனக்கூறி அவர்களை விடுவிக்கிறார். அது திருடர்களுக்கான விடுதலை மட்டுமல்ல.