18.11.2018 (ஞாயிறு) பவா செல்லதுரை மற்றும் சு.வேணுகோபால் வல்லினம் கலை இலக்கிய விழாவிற்கு சிறப்பு வருகை புரிகின்றனர். அவர்களது புனைவுகளை மலேசிய வாசகர்களுக்கு எளிமையான முறையில் அறிமுகப்படுத்தும் நோக்கில் இக்கட்டுரைத்தொடர் எழுதப்படுகிறது. ‘சத்ரு’ சிறுகதை வாசிக்க : சத்ரு – பவா செல்லதுரை
கதைகளின் வழியே கதாசிரியனை அறிய முயற்சிப்பது சுவாரசியமானது. பவா செல்லதுரையின் கதைகளை வாசிக்கும்போது கைகளை அகல விரித்து பேரன்களைக் கொஞ்ச அழைக்கும் ஒரு தாத்தாவின் சித்திரமே மறுபடி மறுபடி தோன்றுகிறது. தாத்தாக்கள் பேரன்களை எப்போதும் வெறுப்பதில்லை. வாஞ்சையை அவர்கள் மேல் தடவி தடவி ஈரமாக்குவதைவிட வேறெதுவும் தெரியாத தாத்தாக்களின் வசைகளைக்கூட பேரன்கள் விளையாட்டுகளாக மாற்றுகின்றனர். பவா சக மனிதனை நம்பி வாழ்பவர். அவனுக்குள் இருக்கும் மனிதத்தை நம்பி வாழ்பவர். அதுவே அவரைச் சுற்றி மனிதர்களை மொய்க்க வைக்கிறது. அவர் பிறரிடம் எதிர்ப்பார்ப்பதை கொடுக்கவும் செய்கிறார்.
‘சத்ரு’ வழக்கமான சிறுகதையின் முடிவை நோக்கி எழுதப்பட்டதல்ல. தொடங்கியது முதலே அது தனக்கான அந்தரங்க தரிசனத்தை பதுக்கி ஊர்ந்தபடி செல்கிறது. திருப்பம், திடுக்கிடல் எதுவும் இல்லாமல் காட்சிகள் வெகு இயல்பாய் தாவித்தாவி செல்லும் கதை.
கடும் பஞ்சம். பஞ்சத்தை பவா காட்சிப்படுத்தும் விதத்தையே விரிவாகப்பேசலாம்தான். வாசிப்பவரின் உச்சந்தலை உரோமத்தை உஷ்ணத்தால் கருக வைக்கும் விவரணை. வற்றிய கிணற்றில் ஒட்டியுள்ள நண்டுகளின் ஓடு சிறு கல் விழுந்தால் மக்கிச்சிதறும் சத்தம் வரை அந்த வர்ணனை நுட்பமாக விரிகிறது. நுகர, தொட்டுணர, கேட்க, பார்க்க, சுவைக்க என பவா பஞ்சத்தின் இம்சைகளை வாசகனின் புலனுணர்ச்சிகளில் இட்டு நிரப்புகிறார். மாரியம்மன் கண்களில் இன்னும் ஈரம் இருப்பதாக நம்பும் ஊர் பஞ்சம் தீர மாரியம்மனுக்குக் கூழ் ஊற்றி மழை வேண்ட ஊர் தயாராகிறது. அவள் கண்களின் ஈரம் மழையாகப் பொழியும் என நம்புகிறது. கூழ் ஊற்ற கொஞ்சம் கொஞ்சமாக ஊரார் சேர்த்த அரிசி, கேவுறு, கம்பை இருளன் திருட முயல பிடிபடுகிறான். அவனை எப்படி கொல்லலாம் என ஊரார் கூடி முடிவெடுக்கும் காட்சியில்தான் கதை தொடங்குகிறது.
பஞ்சம் தலைவிரித்து ஆடும், மரணம் சகஜமாகிவிட்ட மண் அது. ஆனால் தவறு செய்த ஒருவனை கொல்வதில் உள்ள தயக்கத்தில் இருந்து தொடங்கும் கதையில் தோய்ந்துள்ள ஈரம்தான் ‘சத்ரு’ முழுவதும் சொட்டுகிறது. வெய்யிலின் உக்கிரத்தால் அரேபியனைச் சுட்ட காம்யூவின் மெர்சோ அல்ல அவர்கள். வெய்யிலின் உக்கிரம் அவர்களின் மனிதத்தன்மையை முழுவதுமாக சுண்ட வைக்கவில்லை. தினம் ஒரு மரணத்தைப் பார்த்தும் மனமரப்புக்கட்டாத மனிதர்களை பவா காட்டுகிறார். கருவை கலைக்கும் கிழவியிடம் திருடனை கொல்லும் பொறுப்பு ஒப்படைக்கப்பட அவளும் நடுங்குகிறாள். மருந்து கொடுத்து உடலை விரைக்க வைக்க முடியும் என்றும் அப்போதும் அவன் துடிப்பதைப் பார்க்க முடியாது என்றும் சொல்கிறாள். ஒருவழியாக அனுக்குமலை காட்டுக்கு விஷ மூலிகை பறிக்க சின்னாப்பூ என்பவனின் துணையுடன் கிழவி செல்கிறாள்.
கிழவி, மலையில் இருந்து திரும்பும் முன்பே ஊரில் ஒரு சம்பவம் நடக்கிறது. பல உறவினர்களிடம் கேட்டுப்பெற்ற கம்பை இடித்து மாவாக்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் வேற்று நிலத்துப்பெண் ஒருத்தி மாவு கேட்கிறாள். உடன் மூன்று பெண் குழந்தைகள். மறுநாள் கொடுத்துவிடுவதாகச் சொல்கிறாள். மாவு இடிக்கும் பெண்ணுக்குச் சிரிப்பு. அது நடக்கும் காரியமே அல்ல என அவள் நன்கறிவாள். மழையற்ற சூழலைச் சொல்கிறாள். திரும்பக் கொடுப்பதெல்லாம் சாத்தியமில்லை என்கிறாள். மாவு கேட்டப்பெண் நாளை கொடுப்பேன் என்பதை மட்டும் மீண்டும் மீண்டும் சொல்கிறாள். எதற்கோ கட்டுப்பட்டவளாக இவள் மாவை அள்ளிப்போட மழை தூரத்தொடங்கி பெருமழையாய் ஊரை குளிரவைக்கிறது.
மூலிகை பறிக்கச்சென்ற கிழவி விஷச்செடி பாய்ந்து உடல் பெருத்து மிதக்கிறாள். உடன் சென்ற சின்னாப்பூவும் இறக்கிறான். விடிந்தபின்பே மழை தன் கோர ஆட்டத்தை முடிக்கிறது.
இச்சிறுகதையின் கதை என்ன என்று தேடுபவர்கள் மிக எளிதாக இக்கதையை உள்ள முற்போக்கு அழகியலை உள்வாங்கிக்கொள்வர். ‘பசிக்கும் மனிதனுக்கு உணவு கொடுப்பது கடவுளுக்குக் கொடுப்பது போல’ என அதை எளிமைப்படுத்திவிடலாம். பவா காட்டும் உலகம் அதுவல்ல. கி.ராவின் ‘மின்னல்’ சிறுகதையில் கசகசத்த பேருந்தில் நுழைந்த குழந்தை அப்பேருந்தை உயிர்ப்புள்ளதாக மாற்றுவதுபோல வரண்ட நிலத்தில் நுழையும் மழை பெரியவர்களை குழந்தையாக்குகிறது.
குழந்தைகள்தான்.
பஞ்சத்தில் இறந்தவர்களைப் பற்றியும் மழையில் மூழ்கியவர்கள் பற்றியும் கவலையில்லாத குழந்தைகள். அவர்களால் இயற்கையாக நிகழும் மரணங்களை அவ்வளவு எளிதாக ஏற்க முடிகிறது. ஒரு குற்றவாளியைக் கொல்வதும் உணவு வேண்டிய ஒருத்தியை மறுப்பதுமே அவர்களுக்குச் சிக்கலானது. முன்தினம் தன்னை கொல்ல நினைத்தவர்கள் மழைக்குப் பின் குழந்தைகளாகி நிற்பதைதான் மாவைத்திருடியவனும் தரிசிக்கிறான். கதையில் அது அற்புதமான தருணம். பஞ்சத்தில் செத்தவர்கள் ஒரே இரவில் பெய்த மழையில் குழந்தையாவதை அவர்களால் சாக இருந்த இருளனும் தரிசிக்கிறான். முதல் நாள் அவர்கள் பெரியவர்களாக இருந்தார்கள். பெரியவர்களாக இருந்ததால் அவர்களிடம் சட்டதிட்டங்கள் இருந்தன. இன்று அவர்கள் குழந்தைகளாகிவிட்டார்கள். குழந்தைகளிடம் எந்தச் சட்டமும் இல்லை. அது குற்றவாளியை விடுதலை செய்கிறது. மன்னிக்கிறது. ‘சத்ரு’ சிறுகதையின் மனிதர்கள், மாரியம்மன் கண்களின் ஓரம் ஈரம் ஒட்டியுள்ளதாக நம்பினர். அந்த ஈரம் பல்கிப்பெருகி அவர்களை குழந்தைகள் ஆக்கியது.
இருளனும் அந்த ஈரத்தை சக மனிதர்களின் தரிசித்திருக்கக் கூடும்.