பவா செல்லதுரையின் புனைவுலகம்: கலையின் இறுதியாத்திரை – 3

index18.11.2018 (ஞாயிறு) பவா செல்லதுரை மற்றும் சு.வேணுகோபால் வல்லினம் கலை இலக்கிய விழாவிற்கு சிறப்பு வருகை புரிகின்றனர். அவர்களது புனைவுகளை மலேசிய வாசகர்களுக்கு எளிமையான முறையில் அறிமுகப்படுத்தும் நோக்கில் இக்கட்டுரைத்தொடர் எழுதப்படுகிறது.  ‘ஏழுமலை ஜமா’ சிறுகதை வாசிக்க : ஏழுமலை ஜமா

ரசனை மாற்றம், தொழில்நுட்ப வளர்ச்சி, கலைகளின் புதியப்போக்குகள் காரணமாக அதுவரை ஒரு நிலத்தில் தன் மரபான கலைத்திறனால் வேரூன்றியவர்கள்  அடையாளமற்றுப்போவதை சொல்லும் சினிமாக்களையும் புனைவிலக்கியங்களையும் சட்டென ஒரு டசன் அடுக்கிவிடலாம். இவ்வாறு பலமுறை புனைவாக்கப்பட்ட ஒரு நிகழ்வை மறுபடியும் புனைவாக்குதல் என்பது பெரிய சவால். பவா செல்லதுரையின் ‘ஏழுமலை ஜமா’ அவ்வாறான சவாலை ஏற்றுக்கொண்ட கதை.

திருவிழா இரவுகளைக் கூத்து ஆக்கிரமித்திருந்த காலகட்டத்தின் கலைஞன் ஏழுமலை. ஒருவகையில் அவர் அப்போதைய சூப்பர் ஸ்டார். சென்ற ஊர்களிலெல்லாம் நட்சத்திர அந்தஸ்துடன் மரியாதை கிடைக்கிறது. அவ்வருடம் அவர் கூத்துக்குப் பதிலாக திரை கட்டி சினிமா போடத்தொடங்கியதிலிருந்து அவர் அந்தஸ்து சரிகிறது. பெங்களூரின் சிட்டி ரவுண்ட் மார்க்கெட்டில் மூட்டை சுமப்பவனாக எல்லா அவமானங்களும் படுகிறார். வயது வித்தியாசமின்றி ‘வாடா போடா’ வசவுகளுக்கு நடுவில் ஒருவகையில் வன்பகடிக்கு உட்படுத்தப்பட்டதாகவே பவா காட்சியைச் சித்தரித்திருப்பார். அங்கிருந்து விலகி ஏழுமலை மீண்டும் ஊருக்குத் திரும்புவதில் கதை தொடங்குகிறது.

பயணத்தினூடே பெங்களூரில் தனக்கு நடந்த அவமானங்களையும் வலிகளையும் நினைத்தவராகச் செல்கிறார். கூடவே தன்னுடன் கூத்துக்கட்டியவர்களின் இன்றைய நிலையும் நினைவுக்கு வந்து வருத்துகிறது.

பவா செல்லதுரையின் சிறுகதைகளைத் தொடர்ந்து வாசிப்பவர்கள் கதையின் முடிவை எளிதாகவே அனுமானம் செய்ய முடியும். அவரால் ஒரு மரபான கலைஞனை மக்கிப்போக வைக்க முடியாது. ரணத்தில் துடிக்கும் ஒருவனுக்கு ஒரு கரம், ஒரு வார்த்தை, ஒரு கண்ணீர் சக மனிதன் மூலமாக எங்கிருந்தாவது வந்து சேரவே செய்யும். இங்கும் அது நடக்கிறது. ஒரு நம்பிக்கையுடன் முடியும் எளிய கதைதான் இது.  ஆனால் இக்கதையின் உயிர் அதன் முடிவில் அல்ல.

கால மாற்றத்தால் ஒரு கலை மறக்கப்படுவதற்கும் புறக்கணிக்கப்படுவதற்கும் அதுவே இன்னொரு தரப்பால் பரிகசிக்கப்படுவதற்கும் உள்ள நுண்ணிய பேதத்தில்தான் ‘ஏழுமலை ஜமா’ முக்கியத்துவம் பெறுகிறது. கரும்பு வெட்ட தர்மரையும், சூளை போட பீமனையும் அனுப்பிய வாழ்க்கை ஏழுமலையை மார்க்கெட்டில் கூடை சுமக்க அனுப்புகிறது. மற்றவர்கள் உள்ளூரில் பணியாற்ற ஏழுமலை வெளியூரில் கூடை சுமக்கிறான். உள்ளூரில் கூலி வேலை செய்பவர்கள் கலையை மறந்து வாழ்கிறார்கள். ஆனால் வெளியூரில் அவன் கலை கேளிக்கை பொருளாகிறது. கற்ற கலையை மறப்பது உள்ளூரில் வேலை செய்பவர்களுக்கு தண்டனை என்றால் அதன் மகத்துவம் அறியாதவர்கள் சபையில் வற்புறுத்தலால் நிகழ்த்திக்காட்டப்படுவது கலைக்கான தண்டனை.

சக தொழிலாளர்களின் வன்மத்தால் சலங்கை ஒலிக்குப் பதிலாக மார்க்கெட் கொய்யா இலையும், சப்போட்டா இலையும் காலில் மிதிபட ஆடும் ஏழுமலையைப் பைத்தியமாகப் பார்க்கும் கூட்டத்தின் மத்தியில் அவர் விடுபட முடியாமல் தவிக்கிறார். தன் கலையை தினம் தினம் கேலிப்பொருளாக மாற தானே காரணமாக இருக்கும் வலி அவரை ஊருக்கே துரத்துகிறது. வயிற்றை நிரப்பும் மார்க்கெட் தொழிலைவிட்டு இறந்துபோக இருக்கும் தன் கலையின் இறுதி மரியாதை நிலைக்கவாவது ஊர் திரும்புகிறார்.

முற்றிலும் ஞான சூன்யங்கள் சூழ்ந்துள்ள அரங்கில் ஒரு மேதை ஒரு சொல் பேசாமல் இருப்பதும், நுகர்பொருளில் மயங்கியிருக்கும் கூட்டத்துக்கு முன் ஒரு கவிஞன் எப்போதும் தன் கவிதையை மறைத்து வைப்பதும் எத்தனை உன்னதமானதோ அத்தனை உன்னதமானது ஏழுமலை தன் கலையை அதற்கான நிலத்தில் வந்து அடக்கம் செய்தது.

‘ஏழுமலை ஜமா’ கூத்துகள் விழுங்கப்பட்ட நிலத்து கலைஞர்களின் கண்ணீரைப் பேசவில்லை. அதன் இறுதி ஊர்வலத்தையாவது மரியாதையுடன் நடத்த முயலும் கடைசி கலைஞனைக் காட்ட முயல்கிறது.

 

(Visited 193 times, 1 visits today)