சு.வேணுகோபாலின் புனைவுலகம்: இன்னொரு பசியின் – 4

venugopal118.11.2018 (ஞாயிறு) பவா செல்லதுரை மற்றும் சு.வேணுகோபால் வல்லினம் கலை இலக்கிய விழாவிற்கு சிறப்பு வருகை புரிகின்றனர். அவர்களது புனைவுகளை மலேசிய வாசகர்களுக்கு எளிமையான முறையில் அறிமுகப்படுத்தும் நோக்கில் இக்கட்டுரைத்தொடர் எழுதப்படுகிறது.

சு.வேணுகோபாலின் புனைவை உள்வாங்க கவனம் சிதறாத வாசிப்பு தேவை. பின்னர்  அதற்கு முன் இருந்த வாழ்வு குறித்தான நம்பிக்கைகளையும் ஒழுக்க மதிப்பீடுகளையும்  மறுபரிசீலனைக்கு உட்படுத்தும் துணிவு வேண்டும். இல்லாத பட்சத்தில் அவை வெறும்  குழப்பத்தையும் ஒழுக்க அதிச்சியையும் மட்டுமே ஏற்படுத்தும். பொழுது போக்கு வாசகர்களுக்கு சு.வேணுகோபாலின் கதைகளின் நுட்பம் அகப்படுவதே இல்லை.


‘உள்ளிருந்து உடற்றும் பசி’ அவரது பிரபலமான கதைகளில் ஒன்று. நானே ஒருசில அரங்குகளில் இக்கதையைக் கூறியுள்ளேன். தியாகம், அன்பு போன்றவை ‘பசி’யின்முன்  என்னவாக மாறிவிடுகின்றன என யோசிக்கவைக்கும் கதை இது.

பெற்றோர் இல்லாத குடும்பத்தில் தங்கைகளுக்காகச் சொந்த வாழ்க்கையை துறந்து ஒவ்வொருவராகக் கரையேற்றும் அண்ணனின் கதை இது. மூன்று தங்கைகளையும் கரையேற்ற மாடாய் உழைக்கும் அவன் இரண்டாவது தங்கைக்கும் திருமணம் செய்து அனுப்பிவைக்கிறான். ஒரு தங்கை திருமணமாகிச் சென்றவுடன் அடுத்தத் தங்கை குடும்பப்பொறுப்பை ஏற்க வேண்டும் என்பது கடமையாக உள்ளது. துணிக்கடையில் வேலை செய்யும் இறுதி தங்கை தன் அண்ணனை நினைக்கும்போதெல்லாம் ‘எங்கண்ணன் எனக்கு தெய்வம்டீ’ என தன்னுடன் வேலை செய்பவளிடம் சொல்கிறாள்.  அவ்வகையில் இறுதித் தங்கைக்குக் குடும்பப்பொறுப்பு வந்துசேர்கிறது. குடும்பத்துக்கு உழைக்கும் அண்ணனுக்காக அவளைச் சுற்றி சுற்றி வரும் ஜெயகுமாரை மறுக்கவும் தயாராகிறாள். அக்காள்கள் கடமைகள் அனைத்தையும் சொல்லிக்கொடுத்துச் சென்றுள்ளதாகவே மூன்றாவது தங்கையும் சொல்கிறாள். அன்று இரவு அண்ணனுக்கு சமைத்தும் போட்டு உறங்கச் செல்கிறாள். இரவில் அண்ணனின் கை மூன்றாவது தங்கையின் மேல் ஊர்கிறது. ஜெயகுமாரை கனவு கண்டு மிரண்டு எழுபவளிடம் அண்ணன்,  “அக்கா அவுங்க ஒங்கிட்ட வேற ஒண்ணும் சொல்லலையா…”

கதையில் அண்ணனின் உருவத்தை ஆசிரியர் சித்தரிக்கிறார். ‘முன்வழுக்கையுடன் நரை இருளில் பளிச்சென தெரிவதாக’ அவர் சொல்லும்போது தங்கைகளுக்காக அவன் இழந்துவிட்ட இளமைகுறித்த வலி வாசகனைத் தொற்றுகிறது.  ‘பசி’ வேறெதையும் விட சக்தி வாய்ந்தது. பசி வாழ்க்கையில் உள்ள பரிதாபகரமான யதார்த்ததை கண்முன் கொண்டுவரும் வன்மம் கொண்டது. ஆனால், ‘பசி’ வயிற்றுடன் மட்டும் சம்பத்தப்பட்டதில்லை என வாசகன் உணரவும் வேண்டியுள்ளது.

அதற்கு முன் இருந்த அக்காள்களிடம் அண்ணன் மீது எந்தப்புகாரும் இல்லை. அவர்கள் அவனால் கட்டாயப்படுத்தப்படவில்லை. இன்னும் சொல்லப்போனால் அண்ணனை நன்றாக கவனிக்கவே சொல்கின்றனர். அவை ஒருவகையான கொடுக்கல் வாங்கல். Life of Pi இல் புலி உயிர்வாழ இளைஞனை உயிருடன் வைத்திருப்பதுபோல.

ஒரு வனத்தில் வாழ்ந்தே தீர வேண்டிய விலங்குகள் சகித்தும், கொன்றும், விலகியும் வாழ்வதுபோலவே மனிதனும் வாழ்கிறான். அவன் ஒரு கட்டுப்படுத்தப்பட்ட விலங்குதான். அந்த விலங்குகள் வாழ்வதற்காக புதிய புதிய எதார்த்தத்தை உருவாக்கிக்கொள்கிறார்கள். அவை பல சமயங்களில் மனதை உலுக்குவதாக உள்ளது. அப்படி ஒரு எதார்த்தத்தை சு. வேணுகோபால் இக்கதையில் காட்டிச்செல்கிறார்.

(Visited 294 times, 1 visits today)